அவர் தமிழகத்தில் ஒரு பிரபலமான சாமியார்.
அவருடைய பெயர் ஸ்ரீ ஸ்ரீ பாபா சங்கர். வயது அறுபது.
தக்காளிப்பழ நிறத்தில் நீண்ட தாடியுடன்; கோல்ட் ப்ரேம் கண்ணாடியில் தள தளவென இருப்பார்.
அவர் சென்னையில் நேற்று ஒரு ஆன்மீக சத்சங்கத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மார்பு வலி ஏற்பட்டு அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டார்.
செய்தியை கேள்விப் பட்டவுடன் தமிழகமே பதறியது.
அவருக்கு உடனே ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு இதயத்தில் 80% அடைப்பு இருப்பதைக் கண்டுபிடித்து, உடனே பை-பாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என்றார்.
பை-பாஸ் சர்ஜரி இல்லாமல் தனக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மட்டும் செய்யும்படி சாமியார் டாக்டரிடம் கெஞ்சினார். டாக்டர் அது அவருக்கு பலனளிக்காது என்பதை விளக்கிச் சொன்னபிறகு; கடைசியில் சர்ஜரி செய்து கொள்வதற்கு சாமியாரும் ஒப்புக் கொண்டார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட அவருடைய பக்தர்கள் மிகக் கவலையடைந்தனர். பை-பாஸ் சர்ஜரி நல்லபடியாக நடக்க வேண்டுமே என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டனர்.
சர்ஜரிக்கு முந்தைய நாள் சாமியாருக்கு உடம்பிலுள்ள மயிர அனைத்தும் மழிக்கப்பட்டு அவரை சிகிச்சைக்குத் தயார் செய்தனர். . நீண்ட தாடியை இழக்க நேரிட்ட சாமியார் மொழுக்கென மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். இரவு தூங்கும்முன் அவருக்கு எனிமா கொடுக்கப்பட்டு வயிற்றை காலியாக்கினர்.
சர்ஜரிக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் ஆகும் என்று டாக்டர்களால் எஸ்டிமேட் தரப் பட்டது. சாமியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
எனினும் பை-பாஸ் சர்ஜரி என்பதால், அவருக்கு உள்ளூர மரண பயம் . தொற்றிக்கொண்டது. மிகவும் பயந்தபடியேதான் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சக்கர நாற்காலியில் நுழைந்தார்.
ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்தது.
சாமியார் மிகுந்த சந்தோஷமடைந்தார்.
இரண்டு நாட்கள் சாமியார் ஐசியூவில் பாதுகாக்கப் பட்டார்.
அவரை டிஸ்சார்ஜ் செய்யும் முன், சாமியாரிடம் மருத்துவ மனையின் பொறுப்பான அதிகாரி ஒருவர் எட்டு லட்ச ரூபாய்க்கான டோட்டல் பில்லைக் கொடுத்தார்.
அந்த பில்லை வாங்கிப் பார்த்த சாமியார் அழ ஆரபித்துவிட்டார். அவரின் அழுகையை மருத்துவ அதிகாரியினால் எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை.
“சாமி… அழாதீர்கள். நான்கு லட்சத்திற்கு எஸ்டிமேட் கொடுத்தோம் என்பது உண்மைதான். ஆனால் தற்போது எட்டு லட்சம் வரை ஆகிவிட்டது. நான் எங்களின் சிஈஓவிடம் பேசிப் பார்க்கிறேன். அவர் கண்டிப்பாக மொத்தத் தொகையைக் குறைப்பார்…”
“அட போய்யா… எட்டு லட்சம் என்ன… இந்த உலகிற்கு என்னை மறுபடியும் மீட்டுத் தந்த இந்த ஹாஸ்பிடலுக்கு எண்பது லட்சமே என்னால் இப்போது தரமுடியும்…. ஆனால் அறுபது வருடங்களாக என் இதயத்தைப் பாதுகாத்த இறைவன் இதுவரை ஒரு ரூபாய்க்குகூட என்னிடம் பில்லை நீட்டவில்லையே… இத்தனை வருடங்களாக நான் இதை உணரக்கூட இல்லை. இப்போது அதை உணர்ந்துகொண்டதும் என்னால் என் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை…”
“………………………………”
“நான்கு மணிநேரங்கள் மட்டும் என் இதயத்தை கிழித்துப் பார்த்து தையல் போட்டுத் தைத்துவிட்ட உங்களுக்கு எட்டு லட்ச ரூபாய். ஆனால் அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னை இதுகாறும் 525,600 மணி நேரங்களுக்கும் மேல் பாதுகாத்திருக்கிறான். பதிலுக்கு அவனுக்கு நான் என்ன செய்தேன்? அவனின் கருணையையும்; அன்பையும் நினைத்துப் பார்க்கையில் எனக்கு பரவசம்தான் ஏற்படுகிறது…”
“ஆமாம் சாமி தாங்கள் கூறுவது உண்மைதான். நம் எல்லோருக்கும் இது பொருந்தும்…”
“இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே… நாம்தான் நன்றி கெட்டவர்களாக இப்பூவுககில் வாழ்கிறோம்…நம்மிடம் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்; நம்மை எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக பத்திரமாகப் பாதுகாப்பவர், அன்பே உருவான இறைவன் மட்டுமே.”
“நன்றாகச் சொன்னீர்கள் சாமி…”
“நமக்கு கிடைத்த இந்த நல்ல வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தால், நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே தினமும் கோவிலுக்குச் செல்லுவோம்…”
சாமியார் அன்றே மொத்தத் தொகையான எட்டு லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு சந்தோஷத்துடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினார்.
உயிருடன் முழுதாக மீண்டு வந்த சாமியார் மிகவும் மாறிப்போனார். அதன்பிறகு சாமியாரே வாழ்வின் தாத்பரியங்களைப் பற்றிய பல உண்மைகளை தனக்குள் உணர்ந்துகொண்டார். ஏழைகளின் நல் வாழ்விற்காக பல நல்ல காரியங்களுக்கு நிறையப் பணம் கொடுத்து உதவினார். அது தவிர, பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அதில் முன்னுரிமை கொடுத்து அவர்களை முன்னேறச் செய்தார். கல்வி ஒன்றுதான் மக்களை முன்னேறச் செய்ய ஒரேவழி என்பதை உலகிற்குப் புரிய வைத்தார்.
சேவை மனப்பான்மையை மட்டுமே தன் மனதில் குவித்து, அதைத் திறம்பட செயலில் காட்டி, மக்களிடம் மேலும் நிறைய மரியாதையை சம்பாதித்துக் கொண்டார்.
Super story..