(1941ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒன்று | இரண்டு
களகளவென்று சத்தமிட்டு ஓடுகின்ற மகாவலிகங்கை நதியின் தீரத் திலே சிந்தனையே நிறைந்த முகத்தோடு நின்ற சுமண தாசாவை நான் முதல் முதலிற் சந்தித்தேன். வளைந்து முறிந்திருந்த பச்சை மூங்கிலருகேயுள்ள சிறு கருங்கல்லடியில் அவன் அடிக்கடி வந்திருப்பதனை அவதானித் திருந்த நான் அவனைப் பற்றி என் மற்றோர் சிங்கள நண்பனான தர்ம பாலாவிடம் விசாரித்தேன். “எதிலும் தனித்து யோசித்து, தனக்கு மட் டுமே துயரங்கள் உள்ளன என நினைத்து, ஓட்டிற்குள் ஒடுங்கி வாழும் ஆமை போல சுயவாழ்வுச் சிந்தனைக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு வாழ்பவன்” என்று எனக்குச் சுமண தாசாவைப் பற்றி முன்னதாகவே சொல்லி வைத்து விட்டு தர்மபாலா எனக்குச் சுமண தாசாவை அறிமுகம் செய்துவைத்தான். நான் அடிக்கடி சுமணதாசாவைச் சந்திக்கச் சந்தர்ப் பங்கள் இருந்தன. எனவே நான் பல்கலைக் கழகத்திற்குப் படிக்கப்போன ஆறாவது மாதத்துக்குள்ளேயே சுமணதாசாவோடு நெருங்கிய சினேகித னாகி விட்டேன். சுமண தாசாவும் நானும் ஆங்கிலத்தையே எங்கள் இருவருக்குமிடையே இணைப்பு மொழியாகக்கொண்டிருந்தோம்.
மகாவலிகங்கையினருகே தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கும் பசிய மூங்கில் கள் நுனிவளைந்து மகாவலி நதியின் முதுகினைத் தொட்டு விளையாடுகின்ற அழகினைப் பார்த்துப் பொழுதைக் கழிப்பதற்கு வருபவர் களில் ஒருவனாகத்தான் அவன் மகாவலிகங்கைக் கரையோரமாக உலவி வருகின்றான் என ஆரம்ப நாட்களில் நான் நினைத்திருந்தேன்.
பல்கலைக்கழகத்திற் போய்ச் சேர்ந்த புதிதில் பேராதனையின் இயற் கைச் சுற்றாடல் எனக்கு வெறும் கற்பனை மயக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. தென்னை மரங்களும், நீலக்கடலும், கடல் நாரைகளும், மாலையில் தகதகக்கும் தங்கச் சூரியனும், பச்சைப் பூவரசமரங்களுமே இனிமை தந்த என் மனதிற்கு குளுமையான மலைகளும், நதியும், வண்ணமலர்களும் பரவசமேற்படுத்தியதில் வியப்பிருக்கவில்லை. கொழும்புத் துறை என்ற சிற்றூரை விட்டு முதன்முறையாக இப்போதுதான் நான் வெளியே வந்திருக்கின்றமையால் இந்த உணர்வுகள் என்னிலே மிகவும் மிகைப்பட்டு என்னுள்ளேயே என்னை ஒரு கவிஞனாக நான் அசட்டுப்பாவனை செய்து கொண்டேன். மஞ்சளும் நீலமுமாய் சூரிய காந்தியும், காட்டுப் பூக்களும் அலை நுரையெனப் பொங்கி மண்டிக்கிடப்பது பார்வைக்கு மிகவும் அழகு தான். ஆனால் என்னுடைய மன நிலையை சுமண தாசாவில் ஏற்றிப் பார்த்தது எவ்வளவு தவறென்பதைத் தொலைவிலே கருங்கல் உடைத்துக் கேட்கின்ற ‘ணொங்… ணொங்… ணொக்’ என்ற ஒலியின் ஊடே, அவன் தன்னுடைய கதையினை ஓரளவே சொன்ன நிலவு முழுவட்டமாக உதயமாகிப் பால் நிலாச் சொரிய ஆரம்பித்த விசாக நாளொன்றின் போது நான் உணர்ந்து கொண்டேன். அந்த மனோ நிலையோடுதான் அவனோடு அன்றிலிருந்து நட்புக்கொள்ள விரும்பினேன் நான்.
செழுமையாக இதழ் மலர்ந்திருக்கும் சூரிய காந்திப் பூப்போல புன்னகையினால் விளங்கியிருந்த அவனுடைய முகம், அவன் இதயந் திறந்து தன் கதையைச் சொன்ன நிமிஷங்களிலே வதங்கி வாடியதைக் கண்ணுற்ற போதில் எனது மனத்திலும் விசாரம் செறிந்து கனத்ததாய் நான் உணர்ந்தேன்,
நாங்கள் இருவரும் ஒரே விடுதி மண்டபத்திலேயே தங்கிப் படித்து வந்தோம். சுமணதாசா, நான் இருக்கும் அறைக்கு இரண்டு அறைகள் தள்ளியிருந்தவனாதலால் எங்களிருவருக்கும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பங்களிருந்தன. அவனுடைய நடையுடை பாவனை, செயல்கள் யாவையும் நான் நன்கு அவதானித்துக்கொள்ளக்கூடியதாயிருந்தது. நான் அறியத்தக்கதாக என்றைக்கும் அவன் காக்கிக் காற்சட்டைதான் அணிந்திருக்கின்றான். ஒரே விதமாக நான்கு சேர்ட்டுக்களையே அவன் மாற்றிமாற்றிப் போடுவான். அவனுடைய இந்த நிலைமையினை எண்ணிப் பரிதாபப்படத் தோன்றிய என்மனம் ஒரு முறையோடேயே அந்த எண்ணத்தினை விட்டொழித்தது. என் மீதும் எனக்கோர் கசப்பேற்பட்டு, பிறகு நட்பு அளித்த சிந்தனைத் தெளிவினால் அந்த மயக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவன் நான். அனுபவங்கள் தான் நல்ல ஆசான்கள்.
நான் ஒரு பலசரக்குக் கடைக்காரனின் மகன். என் சின்னஞ்சிறிய கிராமத்திலே எனது தகப்பனார் சிறு கடையொன்றை வைத்து நடத்து கின்றார். தினசரி ஐம்பது ரூபா வரையில் கடையில் விற்பனை நடக்கும். அவ்வளவுதான். அத்தோடு வழிவழியாக வந்து, எத்தனையோ பொருளா தாரச் சிக்கல்கள் ஏற்பட்டும் விற்பனையாகாத சிறிய தென்னந்தோப்பு ஒன் றும் எங்களுக்குச் சொந்தமாக இருந்தது. இத்தகைய மட்டமான வரு வாயுள்ள குடும்பத்திலே பிறந்த என் சகோதரர்கள் எல்லோருக்கும் என்னைப் போலப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை என்னுடைய தகப்பனாருக்கு என்னில், என் எதிர்காலத்தில் மிக நம்பிக்கையிருந்ததாலேயே எவ்விதமான குறுக்கீடுமின்றி நான் பள்ளிக்கூடம் போய் வர முடிந்தது. படிப்பொன்றையே தியானமாகவும், நித்திய தவமாகவும் கருதி, சுகம் அனுபவிக்க ஆசைகளிருந்தும் அனுபவிக்க வாய்ப்பில்லாத பிஞ்சுப் பருவத்தையெல்லாம் எதிர்காலம் பற்றிய பூங்கனவுகளிலேயே செலுத்திக் கடும் படிப்பினுள் என்னை ஆழ அழுத்திக் கொண்டமையினால்தான் பல்கலைக் கழகத்திற்குப் படிக்க வரும் வாய்ப்பினைப் பெற்றவன் நான். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசப் படிப்பே நடைபெறுகின்றது என்ற கோஷத்தையும், அதற்கு மாமுன நடைமுறையையும் கண்டு கேட்டு அனுபவித்து இளவயதிலேயே மனங்கசந்து போனவன் நான்.
கடையிலே பொருட்களை வாங்கிப்போட்டு விற்பனை செய்வதற்காக என் தகப்பனார் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணம், பல தடவை என் அழுகை கலந்த பிடிவாதங்களால் தவணைப் பணங்களாயும், பள்ளிக் கூட நிதியென்ற பெயரிலும் பள்ளிக்கூடத்திற்குப் போயிருக்கின்றது. இப்படியான மனதினை நெகிழவைக்கின்ற நிலைமைகளில் எல்லாம் எனது துளிரான இதயம் வெதும்பிச் சாம்பி அமுங்கி மௌனமாக அழுததுண்டு. பள்ளிக்கூடத்திலே என்னோடு சீதாராமன் என்னும் பணக்கார மாணவன் படித்தான். அவனுடைய தகப்பனார் அரசாங்க அலுவலகமொன்றில் உயர் பதவியிலிருந்தார். சீதாராமன் காரிலேயே பள்ளிக்கூடம் வருவான். பள்ளிக்கூடம் முடிவடைந்து அவன் வீட்டிற்குப் போய் பதினைந்து நிமிஷங்களால் அவனுக்கு ரியூஷன் கொடுக்க ஆசிரியர் வந்து விடுவார். இப்படிச் சீதாராமனே கசப்புணர்வு கலந்த கௌரவத்தோடு எல்லா மாணவர்களுக்கும் அடிக்கடி சொல்லுவதுண்டு. நானும் சீதாராமனும் பரீட்சையினை ஒன்றாகத்தான் எழுதினோம்.
ஒன்பது மணிக்குத் தொடங்கும் பரீட்சைக்காக நான் வேர்த்து, வியர்வை பொங்க அவசரமாய் வந்து பள்ளிக்கூடப் படிகளில் ஏறுகின்ற போது, சீதாராமன் மிகக் குளிர்மையாக வந்து பள்ளிக்கூட வாசலில் காரிலிருந்து இறங்குவான். மத்தியான வேளையில் காரிலேயே சொகுசாக அவன் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருகின்றபோது… நான்? நானோ என்னுடைய தாயார் மிகப் பக்குவமாகக் கட்டித்தந்த காய்ந்த பிட்டை வெறுஞ் சம்பலோடு மட்டும் குழைத்து விக்கிவிக்கித் தின்பேன். கானல் தரை நீரை உறுஞ்சுவது போலத் தின்று களிக்கும் என் இளவயிறு என்றும் நிறைவோடு நிரம்பியதை நான் அந்நாட்களில் அறிந்ததில்லை. எனினும் அவையெல்லாம் எனக்குக் குறைகளாயிருந்து மனதினை நெருடாத சம்பவங் களாகும். எனெனில் என்னுடைய தவம் படிப்பாகவே, படிப்ப ஒன்றாகவே இருந்தது. பல்கலைக்கழகத்திற்கான புகுமுகப் பரீட்சை முடிவு கள் வெளியாகின. புகுமுகத்தேர்வில் சீதாராமன் வெற்றி பெறவில்லை. அவனுடைய படிப்பிற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அள்ளிச் சிதறி எறியத்தயாராயிருந்த அவனுடைய தகப்பனார் இலங்கையின் கல்வியமைப்பை வாய்க்கு வந்தவாறு ஆங்கிலத் தூஷணங்களில் திட்டிக் கொண்டே. சீதாராமனை மேற்படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்புவதற்கான திட்டங்களை மேற்கொண்டார். எனது நிலையோ சொல்லவோதேவையில்லை. புகுமுகத்தேர்வில் நான் வெற்றிபெற்ற செய்தியை அறிந்த என் குடும்பத்தினரின் முகத்தில் பிரகாசம் துலங்கி அவர்களின் செய்கைகளில் களிப்புத் துள்ளியது. நான் ஒரு உயர் பதவிக்கு நியமிக்கப்படப் போகிறேன் என்ற பெருமிதம் அவர்களின் புன்னகையிலே ததும்பி நின்றதை அவதானித்த அப்போது எனக்கும் மனம் லேசான கர்வ முற்றுக்களிப் படையவே செய்தது. என் திறமையைப் பாராட்டி நானே என் முதுகில் செல்லமாகத் தட்டிக்கொண்டேன்.
எனது தகப்பனார் பரபரப்பான சம்பவங்களினால் உணர்ச்சி வசப் படாத அழுத்தமான பேர்வழி. கடவுள் நம்பிக்கையுள்ள வை தீகப் போக்கு நிறைந்த யதார்த்தவாதி. ஒரு மணித்தியாலக் கலகலப்புகளின் பிறகு, என் தகப்பனார் அமைதியே வடிவமான என்னுடைய தாயாரைக் கூப்பிட்டு என்னை எப்படியான ஆதாரத்தோடு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப் படிப்பிப்பது என்று கேட்டு விட்டு நீண்ட நேரமாக மௌனமாக இருந்து யோசித்தார். பலசரக்குக்கடை வியாபாரியொருவனுக்கு இது தன்னை மீறிய சுமை என்பதனை, தாங்க முடியாத பொறுப்பே என்பதனை எனது தகப்பனார் அறிந்திருந்த போதும், அவருடைய ஜாதகங்கள் பார்க் கின்ற சோதிட நண்பர் காசிப்பிள்ளை என்னுடைய தகப்பனாரிடம் என்னைத் தொடர்ந்து படிப்பிக்கும்படி ஓயாது தூண்டிக்கொண்டிருந்தார். எனது ஜாதகம் மிகவும் விசேஷமான தாம். அரசாங்கப் பதவி சொல்லி வைத்துக் கிடைக்குமாம். பிரகாசமான இத்தகையதொரு எதிர்காலம் எனக்காகவே காத்திருப்பதாக காசிப்பிள்ளையர் அடிக்கடி என் தகப்பனா ருக்கு என்னைக் காணும்போதெல்லாம் சொல்லக்கேட்டு நானும் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றேன். நான் அரசாங்கத்திலே உயர்பதவி வகித்து, பலரை நிர்வகித்துப் பெருமையோடு திகழ்வேன் என்று சொன்ன சோதிடரின் சொற்களை என்னுடைய தகப்பனார் சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டுவிட்டார். அக்கூற்றினை நம்பி, எங்களுக்கிருந்த நம்பிக்கையின் சிறு நிழலான தென்னந்தோப்பினை என்னுடைய தகப்பனார் ஈட்டிலே வைத்துக் காசைப் பெற்றுக்கொண்டார்.
நான் பல்கலைக்கழகத்திற்கு வரும்போதுதான் என் கால்களின் அளவு கூட எனக்குத் தெரிந்தது. புழுதியிலும், பொங்கும் வெய்யிற் தகிப்பினிடையேயும் தான் பதினெட்டாவது வயது வரை என் வெறும் பாதங்கள் நடந்திருக்கின்றன. எனது பதினெட்டாவது வயதிலேதான் நான் சப்பாத்து வாங்கி அணிந்து கொண்டேன்.
நான் பல்கலைக்கழகத்திலிருந்தபோது என் தகப்பனாரோ, குடும்பமோ எனக்கு எந்தவிதமான குறையையும் வைக்கவில்லை. எட்டு ரூபா பெறு மதியான சேர்ட்டையே அணிந்து வந்த எனக்கு என்னுடைய தகப்பனார் பதினெட்டு ரூபா பெறுமதியான சேர்ட் ஒன்றினை வாங்கித் தந்தபோது என் உடல் சிலிர்த்தது மனம் நெகிழ்ந்து விம்மிற்று! விசேஷ தினங்களில் அதை அணிவதென்று பத்திரப்படுத்தி வைத்தேன், பெறுதற்கரிய பொக் கிஷம் போல.
பல்கலைக்கழகத்திற்கு நான் போய்ச் சேர்ந்த முதல் ஆண்டிலேயே “சோஷல்” வந்தது. மேனாட்டுப் பாட்டுக்கள், துள்ளாட்டக்காரர்களின் வாத்திய இசைகள், கண்டியன் சாச்சா, காமக் கவர்ச்சியூட்டும் சில நடனங்கள், இவற்றையெல்லாம் மறைப்பதாகப் பாவனை பண்ணும் சில தரங்குறைந்த சுதேசிய கீதங்களும், நடனங்களுமே இதன் பிரதான அம்சங்கள். மாணவமாணவிகள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றம் செய்யவும் தான் இச் “சோஷல்” மேனாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக எனக்குச் சொன்னார்கள். “சோஷல்” வர இரண்டொரு தினங்களின் முன்பாகவே மாணவர்கள் பரபரக்கத் தொடங்கினார்கள். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்ந்த நாட்களில் சாய்ந்தால் சாய்கிற பக்கமே சாய்கிற செம்மறியாட்டு மனோபாவனைக்கு நான் ஆட்பட்டிருந்தேன். எனவே எல்லா மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளும் ‘சோஷலி’ லே, கேளிக்கை விழாவிலே தவறாது பங்கு கொள்ளவேண்டுமென்று என் மனம் எனது பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளியது.
– தொடரும் …
– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு