இரயில்வே கேட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 7,375 
 

இரயில்வே கேட் காலப்போக்கில் எங்கள் ஊருக்கு பெரிய சாபக்கேடாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்ட தொல்லைகள் சொல்லிமாளாது. மனிதர்களும், கால்நடைகளும் ரயிலில் மோதி சாவதை அது தடுத்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால், ஆளில்லாத லெவல்கிராஸிங்கை மாற்றி, ரயில்விபத்தை தடுக்க இங்கே கேட் போடப்படவேண்டும் என்று எழுபது ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக போராட்டம் நடத்தப்பட்டதின் பின்ணணியில்தான் இந்த கேட்டே போடப்பட்டது. எங்கள் காலத்திலோ அதுவே அன்றாட வாழ்வை பாதிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அந்த வழியாக மோட்டார்சைக்கிள், பேருந்து, மாட்டுவண்டி போன்ற வாகனாதிகளில் வருவோர், போவோரில் வெளியூர்காரர்கள் மட்டுமல்ல, உள்ளூர்காரர்களும் அடங்குவர். அனைவரும் பாரபட்சமின்றி கேட்டில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தையாவது, சில சமயங்களில் இரண்டு மணி நேரத்தையாவது தியாகம் செய்தால்தான் அந்தபக்கமோ இந்த பக்கமோ செல்லமுடியும். அவசரத்துக்கு எங்களூர் வழி நூறுசதமானம் உதவாது. அதனால்தான் எங்களூர் சாலை சுருக்கு வழியாக இருந்தபோதிலும் தனியாரோ, அரசோ போதுமான பேருந்துகளை இயக்கத் தயாராக இல்லை. போனால் போகிறதென்று பெரிய மனது வைத்து ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சாவுகிராக்கி ரூட் என்ற புலம்பலோடுதான் பணியாற்றுவார்கள். எங்களூரில் பெண் கொடுக்கவும், எடுக்கவும் வெளியூர்காரர்கள் ரொம்பவும் யோசிப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் இந்த கேட்டின் மகிமையால்தான். அதனால்தான் படிப்பு முடிந்த கையோடு, ஒரு வேலையை தேடிக்கொண்டு நகரங்களின் ஓரத்திலாவது தஞ்சம் புகுந்துவிடுவது எனது தலைமுறையிலேயே துவங்கிவிட்டது. நல்லது, கெட்டதுக்கு மட்டும் ஊர் பக்கம் தலைகாட்டுவதோடு சரி.

ஆரம்பத்தில் இரண்டு கம்பங்களைக் கொண்டு கேட் போடப்பட்டது.கம்பத்தின் ஒரு முனையில் ஒரு சிமெண்ட் சிலாபை இணைத்து, இன்னொரு முனையில் கயிற்றைக்கட்டி ரயில் வரும்போது தூக்கிவிட்டும், பின் இழுத்துக்கட்டுவதும் கேட்மேனின் வேலை. பின்னால் உண்மையான கேட் அமைக்கப்பட்டது. அடுத்த சில வருடங்களில் அது ஆட்டோமேட்டிக் கேட்டாக பரிணமித்தது.
எங்களது வாழ்வின் அங்கமாகவே கேட் மாறியிருந்தது. ஊரின்பெயருடன் கேட் தவிர்க்கமுடியாமல் வாலாக ஒட்டிக்கொண்டது. பணியிடங்களில், கல்லூரிகளில் எங்களது பெயருக்கு முன்னால் தவிர்க்கமுடியாதவண்ணம், கேட் அடைமொழியானது. – கேட் ராஜேந்திரனா, அதோ அங்கே இருக்காரு, மொட்டையா சந்திரன்னா யாருக்கய்யா தெரியும், கேட் சந்திரன்னு விளக்கமா கேளு. – கேட் தன்னை ஊரின் அடையாளமாக, முகவரியாக படிப்படியாக நிலைப்படுத்திக்கொண்டது.

கேட்மேனாக எத்தனையோ பேர் பணியாற்றியிருந்தாலும், எங்களூரில் பெண் கட்டியிருந்த முத்து கேட் மேனாக வந்தபிறகு தான் கேட்டுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. தனது கேபினுக்கு முன்னால் ஒரு சிறு தோட்டத்தை அமைத்து, கேட்டுக்கு புது வர்ணம் பூசி தனது சொந்தசொத்து போல பராமரித்தான். கேட் திறப்பை எதிர்பார்த்து இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் நிற்பவர்கள் முத்துவின் நடவடிக்கைகளையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பர். வண்டி கடக்கும் வரை பச்சைக்கொடியை நீட்டிக்கொண்டிருப்பான். தனது தலைமையின் கட்டளை கிடைத்தப்பிறகே தனது செங்கோலான லீவரை இழுத்து, காத்திருப்பவர்களுக்கு சொர்க்கவாசல் திறப்பு அனுபவத்தை நல்குவான். இந்த பரமானுபவத்தின் விதிகளை அறியா பாமரர் மட்டுமே முத்துவை சபிப்பர். சீக்கிரமாக திறக்கச்சொல்லி கூச்சல் போடுவர். பெரும் யோகிகளும் பொறாமைப்படும் அளவுக்கு முத்து பக்குவப்பட்டிருந்தான். தூற்றலும், போற்றலும் சேரட்டும் பரமனுக்கே என தனது கடமையில் கறாராக இருந்தான். கேட் திறப்புக்காக காத்திருக்கும் தருணங்களில், தத்துவ விசாரணைகள் நடத்தி அஞ்ஞானம் தொலைத்தோர் எண்ணற்றோர்.

காட்பாடி வழியாக செல்லவேண்டிய எண்ணற்ற பயணிகள் வண்டிகளுக்காக, சரக்கு வண்டிகளுக்காக கிட்டதட்ட கேட் எப்போதும் மூடியே இருக்கும். பெரும் மலைக்கழுகொன்று இறக்கைகளை இருபக்கமும் நன்கு விரித்து சிறகுகளை வெயிலில் காயவைப்பது போல கேட் எப்போதாவது அபூர்வமாக திறந்திருக்கும். அப்படி திறந்திருந்தால் கேட்டை கடக்கவரும் வாகனங்கள் அன்று நரிமுகத்தில் விழித்த அதிர்ஷ்டமாக எண்ணி, நிம்மதி பெருமூச்சு விட்டபடியே கடக்கும்.

கேட்டின் இருபக்கமும் இயல்பாகவே பேருந்து நிறுத்தமாக மாறிவிட்டிருந்தன. ஆனால் கேட்டின் கிழக்குத்திசையில் அமைந்திருந்த திரெளபதியம்மன் கோயிலை ஒட்டி பக்கத்து ஊர்களுக்குச் செல்லும் பாதை பிரியும் இடத்தில்தான் சில கடைகள் இருந்தன. கேட் திறப்புக்காக காத்திருக்கும் நேரத்தில்தான் இங்கு வியாபாரம் சூடுபிடிக்கும். உள்ளூர்வாசிகள் இந்த கடைகளுக்கு அபூர்வமாகத்தான் வருகை தருவர். கேட் அரிதாக திறப்பதுகூட கடைக்காரர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை கொண்டுவரும் நடவடிக்கையாகவே மாறிவிட்டது.

உள்ளூர்காரரான சுந்தரம், சுந்தரவிலாஸ் என்ற டிபன் கடையை நடத்திவருகின்றார். அவருக்கு எல்லாமே அந்த கடைதான். ஆளில்லாத லெவல்கிராஸிங்காக இருந்ததை மாற்றி கேட் போடவேண்டுமென ஊரார் நடத்திய போராட்டத்திற்கு சுந்தரத்தின் தந்தைதான் தலைமை. எதிர்காலத்தில் இந்த கேட் தான் தனது மகனின் தொழிலுக்கு அஸ்திவாரமாக இருக்கப்போகிறதென்பதை நிச்சயம் அவரால் யூகித்திருக்கக்கூட முடியாது.

வெகுகாலமாக தனது கடையில் ஒரு கண்ணாடி டம்ளரை பத்திரமாக அலமாரியில் வைத்திருந்தார்.. யார் டீ குடிக்க வந்தாலும் அவரிடம் அந்த டம்ளரின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்துவிடுவார். 1962-ல் காட்பாடியில் நடக்க இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக அறிஞர் அண்ணா இந்த வழியாக காரில் வந்தபோது, கேட் மூடியிருந்ததால் காத்திருக்க நேர்ந்தது. சுந்தரம் தான் முதலில் அவரை அடையாளம் கண்டுகொண்டு ஓடிப்போய் வணக்கம் சொல்லி, சூடாக டீ போட்டு கொடுத்துள்ளார். அவரும் மறுக்காமல் புன்னகையுடன் வாங்கிக்கொண்டு, சுந்தரத்தைப் பற்றி விசாரித்ததுடன் தேநீருக்காக நன்றி கூறினார்.அறிஞர் அண்ணாவின் கரம்பட்டதால் அந்த டம்ளர் வரலாற்றுச்சின்னமாகிவிட்டது. கடந்த அரைநூற்றாண்டாக அதைப்போற்றிப் பாதுகாப்பதுடன், அனைவருக்கும் அதன் முக்கியத்துவத்தை ஒரு கைடைப்போல ஈடுபாட்டுடன் சலிக்காமல் விளக்குவார்.

சுந்தரத்தின் மகன் கதிரேசனுக்கு படிப்பின் மீது கவனம் போகாததால், தனக்குதவியாக வைத்துக்கொண்டார். தன்னைப்போலவே அவனும் இந்த உணவகத்தை தொடர்ந்து நடத்திவரவேண்டுமென்பது அவரது அவா. தந்தையின் வற்புறுத்தலுக்கு செவிசாய்ப்பதைத் தவிர கதிரேசனுக்கு வேறு மார்க்கமுமில்லை. அவனுக்கும் திருமணமாகி, அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, பக்கத்து ஊரிலிருந்த உயர்நிலைப்பள்ளியில் பத்தாம், ஒன்பதாம் வகுப்புகளில் படித்து வந்தனர். இவை எல்லாமே இந்தக்கடையின் வருமானத்திலிருந்துதான் சாத்தியமாகியிருந்தது.

இந்தநிலையில்தான், கேட்டின் இம்சையிலிருந்து விடுபட மேம்பாலம் கட்டித்தரவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது. ஏனெனில்,பத்துகிலோமீட்டர் தூரத்திலிருந்த சிறு நகரத்தில் சிறிய, பெரிய தொழிலகங்கள் பல ஆரம்பிக்கப்பட்ட பிறகு மேம்பாலத்தின் அவசியம் அதிகமாக உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அனைத்துக்கட்சிக் கூட்டங்களும் நடக்க ஆரம்பித்தன. மனு கொடுப்பதிலிருந்து துவங்கி படிப்படியாக மந்திரியைப் பார்ப்பது, மறியலுக்குத் தயாராவது என மேம்பாலத்துக்கான கோரிக்கை முன்னேறலாயிற்று.

மேம்பாலத்துக்கான போராட்டம் உச்சநிலையை எட்டியபோது, முதல்கட்ட நடவடிக்கையாக, மேம்பாலத்துக்கான கோரிக்கையை பரிசீலிக்க அரசாங்கப் பொறியாளர்கள் அனுப்பப்பட்டார்கள். அதையொட்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது வரையில் சுந்தரம் எல்லோரையும் போலத்தான் மேம்பாலத்தை ஆதரித்து வந்தார்.தங்களது ஆய்வுக்கிடையில் தேனீர் அருந்த வந்த பொறியாளர்களிடம் பேச்சு கொடுத்ததில் மேம்பாலம் வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது தெரிந்தது. வெளிப்படையான அறிவிப்பு அமைச்சர் மூலமாக வரும் என சொன்னார்கள். பாலம் எங்கிருந்து ஆரம்பித்து எங்கே முடியப்போகிறது என்பதை அவர்களுடைய நடவடிக்கைகளிலிருந்து ஓரளவு யூகித்த சுந்தரத்திற்கு அந்தக் கணத்தில் தலையில் இடி இறங்கியதைப் போல உணர்ந்தார். தனது கல்லறைதான் மேம்பால வடிவில் கட்டப்பட இருப்பதாக பட்டது.

தனது கடையின் எதிர்காலத்தை தெரிந்துகொண்டவுடன், பாலத்தின் இருமுனைகளில் எங்காவது கடை வைக்கமுடியுமா என முன்கூட்டியே ரகசியமாக திட்டமிட்டார். ஆனால் ஒருமுனை, ஊருக்கு வெளியிலிருந்து ஆரம்பித்தது. நிச்சயம் பேருந்து நிறுத்தம் அங்கு வர வாய்ப்பில்லை. மறுமுனையில்தான் பேருந்து நிற்க முடியும். ஆனால் அந்த இடம் மின்சார வாரியத்துக்கு சொந்தமானது. கடைவைக்க அனுமதி தர மாட்டார்கள். எதிர்ப்பக்கமோ ரயில்வே லைன் உள்ளது. அதைஒட்டியுள்ள இடம் ரயில்வேக்கு சொந்தம். ஆக ஊருக்குள் வைக்கலாம் என்றால் பொதுவாக கிராமத்து மக்களுக்கு டவுன்காரர்களைப்போல வெளியே சாப்பிடும்பழக்கமோ, அதற்கான பொருளாதார வசதியோ கிடையாது. மேலும் இப்போதெல்லாம் கிராமங்கள் காலிகூடாரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பதையும் அவர் அறிவார். நடக்கும் வியாபாரமும் வெளியூர் ஆட்களால்தான். வெளியில் கடை வைக்கும் அளவுக்கு மூலதனமோ, வயதோ இல்லை. கதிரேசனுக்கோ தந்தையில்லாவிட்டால் இந்தக் கடையையே தொடர்ந்து நடத்தும் உத்தேசமோ, விருப்பமோ எப்போதும் இருந்ததில்லை.

நல்லநாளாகப் பார்த்து மேம்பால வேளைகள் தொடங்கிவிட்டன. முடிய இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் ஆகலாமென்பதால் கேட்டின் அவசியம் தொடர்ந்தது. சுந்தரத்தின் கடை வழக்கம்போல நடந்துகொண்டிருந்தது. ஆனால் சுந்தரம் தான் பழைய சுந்தரமாக இல்லை. தனது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை இயலாமையிலுள்ள மனிதன் அறிந்துகொண்டால் எப்படியிருப்பான் என்பதற்கு சுந்தரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வெட்டவெளியை இலக்கின்றி பார்த்துக்கொண்டு, அடர்த்தியான மெளனத்தை தன் சிந்தனையின் ஆழம் வரை வழியவிட்டபடி, நிதானமாக ஆனால் கருணையின்றி நகரும் நிகழ்காலத்தை ஒரு பார்வையாளன் போல அவதானித்துக் கொண்டிருந்தார்.

எனது உறவினரைக்காண, பல வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்ற போது, பாலம் பொது பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கியதும், எனது கண்கள் இயல்பாக தேடியது ரயில்வே கேட்டைத்தான். கேட் அங்கேயேதான் இருந்தது. ஆனால் பழைய பொலிவின் சுவடுகூட மிச்சமில்லை. இப்போது அதன் திறப்புக்கு காத்திருப்போர் யாருமில்லை. கேட் திறக்கப்படுவதுமில்லை. பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல உள்ளூர் மக்களுக்காக ஒருமூலையில் சிறிய வழி விட்டு இருபக்கமும் அகழி போல பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. சுந்தரத்தின் உணவுக்கடை இருந்த இடத்தில்தான் பாலத்தின் தூண் எழும்பியிருந்தது. பேருந்துகள், பலவண்ணப்பறவைகள் போல பாலத்தின்மீது பறந்துகொண்டிருந்தன. உள்ளூர் மக்கள் இறங்குவதற்காகவும், ஏறுவதற்காகவும் ஒரு நிமிடம் நின்று மறுநிமிடம் சட்டென்று வேகமெடுத்து, வீணான அந்த ஒரு நிமிடத்தை ஈடுகட்ட பறக்கலாயின.

மாறாமல் இருந்தது, திரெளபதியம்மன் கோயில் மட்டும்தான். அங்குதான் வருடம்தோறும் சித்திரை மாதத்தில் கத்தரி தொடங்குவதற்கு முன், பாரதம் பதினெட்டு நாட்கள் படிக்கப்படும். அதன் எட்டாம் நாளிலிருந்து மகாபாரத கூத்து அதற்கடுத்த பத்து நாட்களுக்கு நடைபெறும். கார்த்திகை,மார்கழி மாதங்களில் அய்யப்பனுக்கு மாலைபோட்ட ஆண்கள் இரவில் படுக்க வருவார்கள். மற்றபடி எப்போதும் அமைதியாக இருக்கும் அந்தக் கோயில் மேடையில் பெரியவர் சுந்தரம் மெளனமாக அமர்ந்து இருப்பதை பார்க்க நேரிட்டது. உருவம் மிகவும் தளர்ந்திருந்தது. இதற்கு வயது மட்டும் காரணமில்லை. பார்வையோ பாலத்தின் பிரமாண்டமான தூணில் நிலை கொண்டிருந்தது. பகல்பொழுது முழுக்க சுந்தரம் இப்படித்தான் அமர்ந்திருப்பாராம், பேச்சும் குறைந்து விட்டது. அவரது மகன் கதிரேசன், சர்க்கரை ஆலையில் கூலிவேலைக்கு செல்வதாகவும், அவனது பிள்ளைகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

மேம்பாலத்திற்காக சுந்தர விலாஸ் அகற்றப்பட்டபோது அதிலிருந்து, அறிஞர் அண்ணாவின் கரம் பட்ட அந்தக் கண்ணாடி டம்ளரை மட்டும் சுந்தரம் கவனமுடன் எடுத்துச்சென்று வீட்டில் பத்திரப்படுத்தினார். அது இப்போது அவருக்கும் இரயில்வே கேட்டுக்கும் இடையிலிருந்த நெடிய உறவை மெச்சி காலம் தந்த நினைவுப் பரிசாக மாறிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *