இரசிகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,127 
 
 

(1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழுகிய வெண்காயத்தின் முடை நாற்றம், செத்தல் மிளகாயின் கோரமான நெடி, பதங்கெட்ட காய்கறி களின் துர்க்கந்தம், எண்ணெய்ப் பசையற்ற தள்ளு வண்டிகளின் கிறீச்’ ஓசை, உறுமிப் புகைந்து முன்னும் பின்னும் ஒடித்துத் திருப்பப்படும் சரக்கு லொறிகளின் உபத்திரவம், மூட்டை சுமப்பவர்களின் முக்கல் முனகல், கீழே காற்செருப்பின் அடியில் ‘சதக்’ கென்று மிதிபடும் நீர்த்தேங்கலின் அருவருப்பு, பட்டினத்துச் சாக்கடையின் சகிக்க முடியாத துர்க்கந்தம், இத்தனைக்கும் தாக்குப் பிடித்துக்கொண்டு, நான் புறக்கோட்டை நாலாம் குறுக்குத் தெருவின் குறுகலான சந்து ஒன்றிலே, புகழ் பெற்ற வியாபாரத்தாபனத்தின் முன்னால் நின்று அம் மனிதனையே கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏனென்றால், அது உருவத்தில் மனிதனாக எனக்குப் பட்டாலும், அது ஓர் ‘ இயந்திர மூளை’ என்று என் மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி எதையாவது கவனிக்கும் சோம்பேறித் தொழிலில் எனக்கு ஒரு குஷி!

‘ நான் அந்தக் கடையின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கொண்டு நிற்கிறேன்.

கடையா அது? ஊரிலே, மிளகாய், மல்லி, சீரகம், வெண்காயம், மிளகு என்று வகை வகையாக அழகாகச் சிறுகக் குவித்து வைத்திருக்கும் மரப் பெட்டிகள், மலிபான் பிஸ்கற், ‘லக்ஸ்’ சவர்க்காரங்கள், தேயிலைப் பக்கற்றுகள், பாற்தகரங்கள் என்று ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுமாரிகள்… எதையுமே காணோம்.

கடையா அது?

சுமார் பத்து பதினைந்து அடி நீள் சதுரமான முன் பக்கத்தின் வலது மூலையிலே ஓர் எழுதும் மேசை. அம்மேசையில் இரண்டு தொலைபேசிகள், அதே மேசையிற் சின்னஞ் சிறு கிண்ணங்களில் மிளகாய், மல்லி, சீரகம், வெந்தயம் முதலான மளிகைச் சாமான்கள்….

வலது மூலையில் கள்ளிப் பெட்டியினாலான சாதா ரண மேசை ஒன்று. அதன் அருகில் ஒருவர் உட்கார்ந்து சதா ‘பில்’ எழுதிக்கொண்டே இருக்கிறார். இரண்டு மேசைகட்கும் இடைபட்ட ‘ஒழுங்கையில்’ ஆட்கள் போவதும் வருவதும்… இயந்திரகதிதான்!

தொலைபேசி மணி கணகண என ஒலிக்கிறது.

வெள்ளை வேஷ்டிக்கு மேலே டெரிலின் சேட். அணிந்து, கையில் நாழிகை வட்டம் பூண்டு, குங்கும தாரியாய் இருந்த அவ்விளைஞர் தொலைபேசியை எடுக் கிறார்.

“யாரு செதம்பரமா? ஆமா… கப்பல் வந்திரிச்சு. சாயந்திரமே கொடுத்திடுறம். ஆமா, நீங்க லொறி அனுப்புறீங்களா? சௌகரியமாப் போச்சு. கவலைப் படாம அனுப்புங்க… அப்ப வெக்கட்டுமா?”

யாரோ ஒருவன் மூட்டை தூக்கும் ‘ நாட்டாமை’ யாக இருக்கலாம். அவர் முன்னால் வந்து நிற்கிறான்.

“சரக்கு எல்லாம் பறிச்சிற்றீங்களா? ஆமா, கையில ‘சல்லி எவ்வளவு மிச்சம் இருந்தது. நாலு ரூபாயா? ஐந்து பேர்தானே. தேத்தண்ணி குடிச்சீங்களா? அஞ்சு பேர் தானே. சுத்தப் பேமானியா இருக்கீங்களே. அஞ்சு பிளேன்டீ, ஒரு ஒரு மசாலை வடை; ஐம்பது ,சதந்தானே ஆகி இருக்கும். ஓங்கணக்கிலே தான் அம்பது சதம் எழுது வேன். கணக்கப்பிள்ளை, நம்ம நாட்டாமை கணக்கில அம்பது சதம் எழுதிக்கங்க.”

என்னப்பா பாக்கிறே. மூலைக்குள்ள எட்டாவது அட்டியிலே மூணு பருப்பு மூட-மைசூர் தான்–அத வொ றியிலே தூக்கிப் போட்டிடு. முதலாளி காத்துக் கொண்டு நிக்கிறார். கணக்கப்பிள்ளை, திருக்கிணாமலை முதலாளி பற்றில. அம்பது சதம் எழுதிக்குங்க. ஏப்பா நிக்கிறே. போவியா?…’ பத்திரிகைப் பையன் அன்றைய ‘சன்’ பத்திரிகையை மேசையில் போட்டுவிட்டுச் செல் கிறான். குங்குமதாரி பத்திரிகையின் இரண்டாம் பாகத் தைப் புரட்டிக்கொண்டே , ”அட, இவன் ஒரு வெல போட்டிருக்கானே. ‘டெயிலி’யில அவன் வேறு வெல. போட்டிருக்கான் பாசிப் பயறுக்கு. சானா, மூனாக்குத் தான் டெலிபோன் பண்ணனும்.”

தொலைபேசியில் இலக்கங்களைத் திருப்பிக் கொண்டே … –

“மொதலாளி வாங்க, இப்பத்தான் வர்றீங்களா? ஏன்? வதுன மெயில் லேற்றா? இவனுகள் என்னமா ரெயில் ஓட்டுறானுங்க? டேய், வேலு! ஐயாவுக்கு வென்ன போடுடா! ராத்திரி தூக்கமில்லாம இருப் பாரு…”

வதுளை ‘முதலாளி’ உள்ளே செல்கையில், “சானா மூனாவா? நான் தான் ஏ. எஸ். எம். பேசுறன். ‘சண்’ பாத்தீங்களா?பாசிப்பயறுக்கு ‘கொளச்சிரூபா’ கொறைச்சிப் போட்டிருக்கே. ‘சாத்தங்கா’ ரூபா விட்டி டுமே. உங்களிட்ட ஸ்டாக் தீந்திடுச்சா?… சரிதான். அப்ப நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறம்.” – “கணக்கப்பிள்ளை . பாசிப்பயறுக்கு இனிமே ‘ தங்கா’ ரூபாதைக்கப் போடுங்க. சானா மூனாவில ஸ்டாக் தீந் திடுச்சு?… கவனிச்சுக்கங்க.” – ”வாங்க மொதலாளி. இப்பத்தான் வர்றீங்களா? ஒங்க கணக்கப்பிள்ளை கூட காலையில போனில் பேசிக் கிட்டாரு. இருங்க. எங்களுக்குக் கட்டும் எண்டாப் பாத் துக்கிட்டிருப்பமா?” சிறிய கிண்ணத்திலிருந்த கொத்த மல்லியைப் பிசைந்தபடியே.

“சரக்கு அசலுங்க. அதனாலதான்…” குட்டையை வெளியே எடுத்து அவர் கையையும், தன் கையையும் மணிக்கட்டுவரை மறைத்துக்கொண்டே என்ன இரகசி யமோ? என்ன மொழியோ?

“சரியா? அப்படின்னா ஆறு மூட்டை போட்டி றேன்.”

“என்னமோ செய்யுங்க”

“நீங்க யோசியாதீங்க மொதலாளி. சாயா ரூபாகூட எங்களுக்குத் தக்காது. என்னமோ கஸ்டமர விட்டுறக் கூடாது. அதுக்காகத்தான் பாக்கிறம். கணக்கப்புள்ள, ஆறு மூட்ட மல்லிக்கு பில் போட்டிடுங்க… பில்லைப் பார்த்து மொதலாளிக்கு ரெண்டு ‘கொளச்சி’ ரூபா தூக் காகப் போடுங்க… வண்டியிருக்கா? நாங்களே அனுப் பிறட்டுமா? நாட்டாம, ஆறு மூட மல்லி தள்ளுவண்டிக் குப் போடுங்க” தொலைபேசி மணி அடிக்கிறது. அதைக் கையில் எடுத்துக்கொண்டே,

“டம்புள்ளயாலிருந்து பேசுறீங்களா? சரக்குப் போட் டிற்றமே…” தொலைபேசியின் வாயைக் கையாற் பொத்திக் கெபண்டே,

“ஏய், வேல்சாமி! நாப்பத்திரண்டு எழுபத்திமூணு பொறப்புட்டாச்சா?” மறுபடியும் தொலைபேசியில்,

“லொறி இப்ப குருநாகலைத் தாண்டியிருக்கும். மதியத்துக்குள்ள உங்களுக்குச் சரக்கு மூட வந்திடும், அங்க கேப்ப மூட இருக்கா? லொறியத் தாமதிக்காம அனுப்பிச்சுடுங்க…” தொலைபேசியை வைத்துவிட்டு கணக்கப்பிள்ளை வைத்த சிட்டைகளைச் சரி பிழை பார்க்கத் தொடங்கியது, அந்த இயந்திர மூளை. ஒன்று, இரண்டு, மூன்று… அசுர வேகத்தில் சிவப்புப் பென்சில் சிட்டைகளின் மேல் நர்த்தனமாடுகிறது.

நாலாவது சிட்டையிலும் சிவப்புப் பென்சில் குறுக் காகக் கோடு கிழிக்கிறது. அரைச் சதங்கூடத் தவறே யில்லை .

ஐந்தாவது சிட்டையை நோட்டம் பார்க்கையில், எங்கிருந்தோ அந்த வாரத்து ‘ஆனந்த விகடன்’ மேசை யில் விழுகிறது. சிட்டையின் இலக்கங்களைக் கூட்டு கையிலே இடது கை விரல்கள் விகடனின் பக்கங்களைப் புரட்டுகின்றன. பொருளடக்கத்தை, தலையங்கத்தை, கதைத் தலைப்புகளைப் பார்த்துக் கடைசியாய் முத்திரைக் கதையை, அதன் தலைப்பை, ஆசிரியரைப் படிக்கிறார். “யாருட சார் இந்த வார முத்திரைக் கதை”

” கணக்கப்பிள்ளை ஆவலோடு கேட்கிறார்.

”எவன் எவனோ எழுதறான். ரெண்டு கத கைவந்து மார்க்கட்டைப் புடிச்சிற்றான்னா பின்னாடிப் பணத்துக் காக என்னென்னமோ எழுதிப் பக்கத்த ரொப்புறான். நாப்பத்தைஞ்சு வயது மொகரக்கட்டை மொதலியார முப்பத்தைஞ்சு வயசுப் பொண்ணு எரக்கப்பட்டுக் காதலிச்சாளாம்! ஏய்யா? மனஸ்தத்துவம் தெரியாதவன் எல்லாம் ஏய்யா கதை எழுதறான்?”

“ஒங்களுக்கு அவரைப் புடிக்கல்ல சார்.” ”ஆமய்யா புடிக்கல்லத்தான். தி. ஜா ட. கதையில் வார பூவுக்கு, ஒரு ‘ஆமருவி’க்கு ஒற போடக் காணு மாய்யா இவனுகள்ர பாத்திரமெல்லாம்…”

”நீங்க தஞ்சாவூர்க்காரரு. அப்படித்தான் சொல் வீங்க ”

“ஏன், ஒங்க மெட்ராஸ்காரன் என்னத்தைக் கிழிச் சுடறான்?”-சிட்டையிலே மேலிருந்து கீழோடிய சிவப்புப் பென்சில், ரசித்துச் சாதஞ் சாப்பிடுகையில் கல்லுக் கடிபட்டு ரசனையிழந்ததுபோல டக்கென்று நின்ற து.

“கணக்கப் புள்ள. சன்லைற் சோப்புக்கு ‘சா’ ரூபா கொறைச்சலாயிருக்கே. கவனிச்சீங்களா?”

“சரியாத்தான் போட்டிருக்கேன். கொம்பனிப் புது ‘பில்’ இப்பத்தான் கிடைச்சுது. வெல கொறைச்சிருக் காங்க உள் நாட்டு உற்பத்தி. கொன்றோல்காரன் கண்ணி வெச்சுத் திரியிறான்.”

கணக்கப்பிள்ளை சவர்க்காரக் கொம்பனியின் கடிதத் தையும் பில்லையும் கொண்டு வந்து நீட்டுகிறார். அதைப் பார்த்துக்கெண்டே, எழுதும் மேசையில் விரித்துக் கிடந்த மை ஒற்றுங் கடதாசியில் பென்சிலால் நெடும்பிரித்தற்கணத்திற் செய்து முடித்ததும், ‘சரிதான்’ என்ற திருப்தி யோடு, சிட்டையின் குறுக்காகச் சிவப்புப் பென்சிலாற் கோடு கிழிக்கையில் தொலைபேசி மணி மறுபடியும் அலறுகிறது.

அதனைக் கையில் எடுத்துக் கொண்டே, ” ஹலோ, ஏ. எஸ். எம். தான் பேசுறன் . முதலாளி இல்லியே, இப்பத். தான் புறப்பட்டாரு சச்சச்சா! மதியம் வந்திடுவாரு…. அவசரமா… வந்ததும் சொல்றன்…” –

திரும்பி, ”வாத்தியாரா? வாங்க. வாங்க. ஒங்களுக் கென்ன? வருஷத்தில் அரைவாசி நாளைக்கு லீவு. கையில என்ன தினபதியா? ஒங்கட அமிர்தலிங்கம் அரசாங்க் ஊழியர் சிங்களம் படிக்க வேணும் என்று சொல்லிப் போட்டாராமே. தினபதியிலதான் சார் இருக்கு. டேய் வேலு, வாத்தியாருக்கு சோடா கொண்டு வாடா… மூளையத்த பசங்க. இப்ப சிங்களம் படிக்கச் சொன்னது. ஐம்பத்தாறிலேயே சொல்லியிருக்கலாம். முன்யோசனை யில்லியே. இருங்க வாத்தியார்…”

ஆசிரியர் அவர் அருகில் அமர்ந்து கொண்டதும், “டேய் வேலு! நம்க ஒஸ்டின் முந்தா நாள் யாழ்ப்பாணந் தானே போச்சு. இன்னைக்கு வந்திருக்கணுமே. வந்தாக் கராச்சில போட்டிடாபே. நேரே நாலாம் நம்பர் ஜெற்றிக்கு விடச் சொல்லுடா. ‘நெஸ்பிரே’ வந்திருக்கு. போடா. போய்ச் சொல்லிப்பிட்டு வா… பின்ன என்ன வாத்தியார்? கொஞ்சங்கூடச் சுறுசுறுப்பு இல்ல. சோடா கொண்டு வரச் சொன்னா அப்படியே வாய்பாத்திற்று நிக்கிறான். இன்னைக்கே யாழ்ப்பாணம் புறப்பாடா? டியூசன் பீள் மொதலாளி தந்தாரு, ஒங்ககிட்டக் கொடுக் கச் சொல்லி. வாங்கிக்கிறீங்களா? சுத்தமான வேலூர்ச் சர்க்கரை, காலையிலதான் வந்தது. கொஞ்சந்தான். கால் அந்தர் போட்டி றட்டுமா? காசப்பத்தி என்னங்க? அடுத்த மாதம் கொடுத்தாப் போச்சு. மொதலாளி மகனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிற வாய்க்கு நாங்க தீபாவளிக்குச் சர்க்கரையாவது போட வேணாமா? டேய் பையா! ஐயாவுக்குக் கால் அந்தர் சர்க்கரை கட்டு. கணக்கப் பிள்ளை , ஐயா கணக்கிலே எழுதிக்கிங்க.”

தொலைபேசி மணி மீண்டும் ஒலிக்கிறது. “உப்பு மூட வந்திடிச்சிங்க” நாட்டாமை குரல் தரு கிறான்.

வந்திற்றா? மூணாம் நம்பர் கிட்டங்கில் அடுக்கிறது தானே. எத்தன, இரு நூறு மூடையா?”

‘ அங்கெல்லாம் பயறு மூட்டைங்க”

தொலைபேசி மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கையில் எடுத்துக்கொண்டே, ”ஹலோ! நான் ஏ. எஸ். எம். தான் பேசிறன். சாரா, வணக்கம் சார். மொதலாளி இல்லியே. ஒரு அரைமணி அவருக்குத் தாமதிச்சு வையுங்க. அரைமணி நேரந்தானே சார். மேல் மிச்சமா இல்ல. இப்பவே லொறி அனுப்பிர்றம். இல்ல சார். நிச்சயமா அனுப்புறம். சாயந்திரம் இந்தப் பக்கமா வருவீங்களா? வாங்க சார்; மொதலாளியும் வந்திடுவார். சொல்வி வைக்கிறன்.”

தொலைபேசியை வைத்துக் கொண்டே, “இந்தக் கஸ்ரம்ஸ்; பயல்கள்ர தொல்லை பெரிய தொல்லையாப் போச்சு வாத்தியார்… சோடா சாப்பிட்டீங்களா? நீங்க தான் சிகரட் பத்த மாட்டீங்களே… நாட்டாம, நீ ஏன் நிக்கிறே மூணாம் நம்பர் கிட்டங்கில இப்ப நூத்தி எழு பத்தாறு மூட..–பழைய சிட்டைகளைப் புரட்டிக் கூட்டிக் கொண்ட-ஆமா, சரியா நூத்தி எழுபத்தாறு மூட. எடு பட்டிருக்குமே. ஐம்பது ஐம்பதா நாலு அட்டிபோட்டு உப்பு மூட்டையை அடுக்கிடு.”

சார் அங்க…” “போடா நாட்டாம! அங்க எடம் இருக்குங்குறன்… ஒண்ணுமே தெரியாது வாத்தியார் இவனுகளுக்கு, நேத்து இருந்தா இண்ணைக்கும் அந்த மூடை இருக்கணுமா? நடுத் தெருவில வண்டியை நிறுத்திட்டு உப்பு மூட அடுக்க எடமில்லையாம். ‘டிராபிக்’ பொலிஸ்காரன் வந்தா அது வேற தலைவேதனை. சுத்த அயோக்கியப் பசங்க.”

எதிர்த்த தேநீர்க் கடையிலிருந்து வர்த்தக ஒலிபரப்பு அலறுகிறது. “கன்னம் கன்னம் கன்னம்-சந்தனக் கிண்ணம் கிண்ணம் கிண்ணம்.” வேலு பாட்டை இரசித்துத் தாளம் தட்டுகிறான்.

”பாட்டு ரசிக்கிறாரு தொர. என்னமோ பெரிசாச் சால்வையைப் போத்திட்டுத் தமிழ்ப் பண்பாட்டப் படம் புடிச் சிரிக்கன் என்று பீத்திக்கிறான். பாட்டப் பாருங்களன் பாட்ட. தமிழ்ப் பண்பாடு சொட்டுது! இந்தப் பாட்டுக்குப் படத்தில ஆடுற நாட்டியம்! இந்தப் பயல்களைப் புடிச்சுச் சமணரைக் கழுவேத்தினது போல ஏத்தணும் வாத்தியார். அப்பதான் தமிழ்ப் பண்பாடு தப்பிப் பிழைக்கும்…”

யாரோ புதியவர்- இல்லை இல்லை- எனக்கும் தெரிந்த பழம் பெரும் தமிழ் எழுத்தாளர் கடைக்குள் நுழைகின்றார். “சார் நீங்க…?” எழுத்தாளர் தன் விசிட்டிங் கார்டை’ நீட்டுகிறார்.

“நீங்கதானா சார்! உங்களைத்தான் சார் காத்துக் கொண்டிருக்கிறன்” என்று எழுந்து கொண்டே, “கணக்கப்பிள்ளை மேசையைச் சத்த கவனிச்சிக்குங்க” என்று கூறி விட்டு எழுத்தாளரை முகம் மலர்ந்து தழுவி அணைத்த படியே, ”வாங்க சார். உங்களைக் கண்ணால கண்டது என் பாக்கியம் சார்’ என்றபடியே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அம்மனித யந்திரம் எழுத் தாளரை உள்ளே அழைத்துச் செல்லுகிறது.

நான் அந்த ‘இரசிக’னைக் கண்டு பிரமித்து நிற் கிறேன்.

– இளம்பிறை ’87

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *