இதோ தேவன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,626 
 
 

“ப்ரதர் லூக், உன்னுடைய கஷ்டங்கள் இன்றோடு தீரப்போகின்றன. உன் ஜெபத்துக்கு கர்த்தர் செவி கொடுத்தார். இதோ, இன்றோடு உன் தரித்திரம் தொலைந்தது. உன் கஷ்டங்கள் முடிவுக்கு வந்தன. யோபுவை ரெட்டத்தனையாய் ஆசீர்வதித்த கர்த்தர் உனக்கு ஐஸ்வரியத்தை அள்ளித்தரப்போகிறார். சிஸ்டர் எஸ்தர், உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. இதோ, இன்றைக்கே, இப்பொழுதே கர்த்தர் உன்னுடைய கர்ப்பத்தின் வாசலை திறக்கப்போகிறார். கர்ப்பத்தின் கனியை உனக்கு கர்த்தர் கட்டளையிடப்பண்ணுகிறார். சிஸ்டர் மேரி, உன்னுடைய சத்தம் கர்த்தருடைய சந்நிதானத்துக்கு சென்றடைந்தது. உன் நரம்பு வியாதி சொஸ்தமாகும்படி கர்த்தர் இதோ கட்டளையிடுகிறார். உன்னில் இருக்கிற அசுத்த ஆவியை உன்னிடமிருந்து நீங்கப்பண்ணினேன் என்று கர்த்தர் இதோ, என் காதில் பேசுகிறார்.”

முப்பதாயிரம் பேர் கூடியிருந்த அந்த திடல் முழுக்க எழும்பிய ஆரவார ஒலி அந்த வட்டாரம் முழுக்க எதிரொலித்தது. 500 கிலோ வாட் வெளிச்சம் தரும் எட்டு டஜன் மெர்க்குரி பல்புகள் அந்த மேடை முழுக்க ஓளி வெள்ளத்தைப்பாய்ச்சியபடி, இரவைப்பகலாக்கிக்கொண்டிருக்க, ஒரே நேரத்தில் வேறு வேறு கோணங்களில் இருந்து நவீன வீடியோ காமிராக்கள், ரெவ. தானியேல் வேதநாயகத்தின் பிரசங்கத்தை சுடச்சுட பதிவு செய்து, அதை நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக உலகமெங்கும் அனுப்பி, நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.

மூன்றாம் நாளின் கன்வென்ஷன் நிகழ்ச்சிக்காக எங்கிருந்தோ பட்டி தொட்டி, கிராமங்களிலிருந்து வந்திருந்த கிராமத்து மக்கள் கூட்டம், நாற்பதடி அடி அகல மேடையை நோக்கிப்பார்த்தபடி, கை கூப்பிக்கொண்டிருந்தது. கூட்டம் முழுக்க எழுப்பிய “அல்லே லூயா, அல்லே லூயா!” சத்தம், அருகில் இருந்த கட்டிடங்களின் மீது மோதி எதிரொலித்தது. கூட்டத்தினரைப்பார்த்து தானியேல் வேதநாயகம் சத்தமிட்டார். இதோ, தேவன் என்னருகே நின்று கொண்டிருக்கிறார். என்னோடு பேசுகிறார். இதோ அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன். இந்த ஆண்டிற்கான கர்த்தரின் வாக்குத்தத்தம். “என் தேசத்தில் நோய் நொடியில்லாமல் உன்னை ரட்சிப்பேன். வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது!’ என்று சேனைகளின் கர்த்தர் என் காதருகே உரைக்கிறார்.

இப்பொழுது, கன்வென்ஷன் மேடைக்கு எதிரே இருந்த பெருங்கூட்டம் இன்னமும் ஆரவாரித்தது. தானியேல் வேதநாயகம், தனக்கு எதிரே இருந்த கூட்டத்தை கண் திறந்து ஒரு தடவை பார்த்தார். அவருக்கு நேர் எதிர் கோட்டில், அறுபதடி தொலைவில், அவரது பிரம்மாண்ட, விஸ்வரூப கட்-அவுட் உருவம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே ” பதிமூன்றாம் அப்போஸ்தலரே !!” என்ற வாசகங்கள், வண்ணக்கலவையால் எழுதப்பட்டிருந்தது.

இன்றோடு மூன்று நாள் கன்வென்ஷன் கூட்டம் முடிவுக்கு வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் ஏற்கனவே பேசிய தொகைக்கு ஒரு ரூபாய் கூட குறைத்துக்கொள்ள மாட்டேன் என்று தெளிவா சொல்லிட்டேன். காலையில் திருச்சபையின் போதகர் அந்திரேயா நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து விட்டார்.

“ஐயா, உங்க கிட்ட பேசுன தொகைல, நீங்க பாத்து ஒரு லட்சம் குறைச்சுக்க முடியுமா ? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. ஏற்கனவே, எப்படியோ, நாலு லட்சம் சேத்துட்டோம். உங்களுக்கு குறைவில்லாம கொடுத்து அனுப்பணும்னு எங்க திருச்சபைக்காரங்க முடிவு பண்ணினாங்க.” என்று ரொம்ப இறங்கிக்கேட்டார். ஆனால், தானியேல் வேதநாயகம் கண்டிப்பாக மறுத்து விட்டார்.

“இந்த பாருங்க பாஸ்டர், எனக்கு ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும், முக்கியம். இன்னிக்கு, உங்க கிட்ட இங்க பேசிக்கிட்டு இருக்கேன். அடுத்த வாரம், மலேஷியாவுல இருப்பேன். அங்க தொடர்ந்து நாலு நாள் அந்த நாட்டுல. அங்க இருந்து அதுக்கப்புறம் அப்படியே , ஆஸ்திரேலியா போறேன். நீங்க பேசுன தொகையை குறைக்காம குடுக்கறதா இருந்தா குடுங்க. இல்லன்னா, இன்னிக்கு கூட்டத்தை ரத்து பண்ணிட்டு, அப்படியே புறப்பட்டு போய்க்கிட்டே இருக்கேன். நவம்பர் பூராவும், அமெரிக்காவுல தங்கியிருப்பேன். அங்க இருக்கற திருச்சபைகள்ல என்னைய திரும்பிப்போகாதீங்கன்னு அங்கேயே தங்கச்சொல்லிர்ராங்க.அது தெரியுமா ? என் வேலைய குறைச்சு மதிக்காதீங்க.”

‘கன்வென்ஷன் கூட்டம், புத்தாண்டு கூட்டம், கிறிஸ்துமஸ் கூட்டம், என்று எல்லா கூட்ட அமைப்பாளர்களிடமும் கறாராக இருந்தால் தான் பணம் வசூலாகும்.’

வெளிநாட்டு தயாரிப்பான அந்த கண்ணாடி ராஸ்டத்தின் மேல் இருந்த தண்ணீர் குவளையை நாசூக்காக தூக்கி தண்ணீரை குடித்து விட்டு, பிறகு, தன் கையில் இருந்த கருப்பு அட்டை போட்ட வேதாகமத்தை எடுத்து, தோள்களுக்கு மேல் அதை உயர்த்திப்பிடித்தபடி,

“எனக்கு அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் கர்த்தரிடம் விசுவாசமாய் இருந்தால், அவர் அற்புதங்களைச்செய்வார். கர்த்தரை விசுவாசியுங்கள். கர்த்தாவே, உம்மை அறிவதே நித்திய ஜீவன். உம்மை செவிப்பதே மெய் சுவாதீனம் என்று தாசனாகிய தாவீது சொல்லுகிற வண்ணமாகவே, கர்த்தரை அறியுங்கள். தீர்க்கதரிசியாகிய யோசுவா சொல்லுகிறான். நானும், என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம், என்கிறான். இதோ விசுவாசத்தோடு நீங்கள் நம் ஸ்வாமியிடம் ஏக சிந்தையோடு தரித்திருங்கள். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இப்போது, நான் இறுதியான ஸ்தோத்திர ஜெபத்தை ஏறெடுக்கப்போகிறேன். நீங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்,” என்றபடி, தானியேல் வேதநாயகம், கன்வென்ஷன் முடிவு நாளுக்கான ஸ்தோத்திர ஜெபத்தை துவங்கினார்.

அவரது சொல்லுக்கு மந்திரம் போல கட்டுப்பட்ட அந்த பெருங்கூட்டம் கைகளை உயர்த்தி ஒன்று சேர்த்து, கண்களை மூடி, அவரோடு சேர்ந்து ஸ்தோத்திர ஜெபத்தை ஏறெடுத்தது. தானியேல் வேதநாயகம், உணர்ச்சிப்பிழம்பாக அந்த இறுதி ஜெபத்தை சொல்லிக்கொண்டிருந்தார். எதிரே இருந்த கூட்டம் வாய் திறந்து சத்தமிட்டு, ஓலமிட்டு, கண்ணீர் விட்டு, ஆர்ப்பரித்து அழுதது.

“இதோ, பரலோகத்தின் கதவுகள் திறந்து கொண்டன. இதோ, வெண் வஸ்திரம் தரித்த கர்த்தர் உங்களை நோக்கி அழைக்கிறார். நீங்கள் கர்த்தருடன் செல்ல தயாரா ? நீங்கள் ஆயத்தமா ? ” என்று உள்ளம் உருகிக்கொண்டிருந்த சாமுவேல் வேதநாயகம், தன் இடது தோளில் யாரோ தொட்டு ஸ்பரிசிப்பதை உணர்ந்தார். “மிஸ்டர் வேதநாயகம், நீங்க அப்படியே கொஞ்சம் நகர்ந்து என் கூட வாங்க” என்ற குரல் கிசுகிசுப்பாக கேட்டது.

‘யார், நம்மைத்தொடுவது? யாருக்கு அந்த தைரியம்? யார் என் ஜெபத்துக்கு இடைஞ்சல் செய்வது?’ என்றெல்லாம் எண்ணியபடி இடது கண்ணை மட்டும் திறந்து லேசாகப்பார்க்க, அவர் அருகில் வெண் வஸ்திரம் தரித்த அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார். அவரது தோரணையே அவரை ஒரு அரசு அதிகாரி என்று சொல்லியது.

அவர், தன் தலையைக்குனிந்து, மெதுவான குரலில், “சார், அப்படியே என் கூட வாங்க. எதுவும் பேசாதீங்க. நான் சொல்றதைக்கேட்டா உங்களுக்கு நல்லது” என்றார்.

தானியேல் ஏதோ சொல்ல வாயைத்திறப்பதற்கு முன்னால், அவரது, தோள்பட்டைக்கு கீழே தன் முரட்டுக்கையைக்கொடுத்து, அவரை அப்படியே நகர்த்தி, மேடையின் இடது புறமாக கொண்டு சென்று, மேடையின் உலோக படிக்கட்டுகளில் அவரை ஜாக்கிரதையாக இறக்கினார். தானியேல் வேதநாயகத்தின் உடன் ஊழியக்காரர்கள், அந்த வெண் வஸ்திர அதிகாரிகளை தடுக்க முற்பட, அவர்களை நோக்கி ஒரே கோபப்பார்வை வீசிய அந்த தலைமை அதிகாரி,

சட்டைப்பையில் இருந்து தன் அடையாள அட்டையை எடுத்து, அவர்களை நோக்கிக்காட்டியபடி, “நாங்க அமலாக்கப்பிரிவுல இருந்து வர்றோம். யாராவது எங்களை தடுத்தா, எல்லாரையும் மொத்தமா கூட்டிக்கிட்டு போயிருவோம்” என்று அதிகார தோரணையில் சொல்லி, எல்லோரையும் மிரள வைத்தார். தானியேல் வேதநாயகம் ஸ்தாபித்த ” இதோ தேவன்” திருச்சபையின் உடன் ஊழியர்கள், திகைத்தபடி நிற்க, அங்கு தயாராக இருந்த மற்ற வெண் வஸ்திரம் தரித்த அதிகாரிகளும், அவரோடு பக்கவாட்டில் நடந்தபடி, அவரை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு சென்று, அங்கு கன்வென்ஷன் பந்தலுக்கு சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏற்றினர்.

“சார், நான் யாருன்னு தெரியாம நீங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல சென்ட்ரல் மினிஸ்டர் உங்களுக்கு போன் போட்டு பேசுவார் பாருங்க”, என்றார் தானியேல்.

“அப்படியா, அதையும் பார்ப்போம். உங்க மெட்றாஸ் வீடுகள், பங்களாக்கள், நீங்க நடத்துற காலேஜ், யுனிவர்சிட்டி , பள்ளிக்கூடங்கள், நர்சிங் காலேஜ், உங்களோட ஜெப மையம், எல்லா இடங்கள்லயும் எங்க அமலாக்கப்பிரிவு ஒரே நேரத்துல ரெய்டு நடத்திக்கிட்டு இருக்கு. நீங்க வெச்சுருக்கிற அறுபத்தெட்டு பேங்க் கணக்குகள், அதுல இருக்கற பணம், விவரங்கள் எல்லாம் எங்க கைக்கு வந்து மூணு மாசம் ஆச்சு. நாங்க உங்களை நிறுத்தி நிதானமா, கவனிச்சுக்கிட்டு இருந்தோம். அதென்ன சார், ஜெர்மனி பக்கத்துல இருக்கற லீச்டென்ஸ்ட்டின் நாட்டுக்கு போய், கிரெடிட் ஸ்விஸ் பேங்க்ல கொண்டு போய், இருநூறு கோடி ரூபா போட்டு வெச்சுருக்கீங்க? ஏன், நம்ம ஊரு ஸ்டேட் பேங்க் மேல எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ? விட்டா, இருமுடி மாதிரி தலை மேல பணத்தை கட்டிக்கிட்டு நேரா, கொண்டு போய் ஐரோப்பாவுல இருக்கற பேங்க் எல்லாத்துலயும் போய் பணத்தை கொட்டிட்டு வருவீங்க போல. உங்கள மாதிரி ஆட்களால, நம்ம நாட்டு மானம், உலகம் பூரா சந்தி சிரிக்குது. ஒரு உத்தேசமா நாங்க எஸ்டிமேட் போட்டுட்டோம். உங்க சொத்து, உங்க பேரன், பேத்தி பேர்ல நீங்க வாங்கி வெச்சுருக்கற சொத்து, எல்லாத்தையும் சேத்து கணக்குப்போட்டா, ஒரு லட்சம் கோடிய தாண்டும் போல. ”

“சார், என்னோட ஜெபம் வீணாப்போகாது. உங்கள எல்லாம், கர்த்தர் சும்மா விட மாட்டார்”.

“நீங்க சொல்றது சரி தான் மிஸ்டர். எங்க என்போர்ஸ்மென்ட் டெபுடி கமிஷனர் பேரு காரிய கர்த்தர். ஆமா, அது தான் அவரோட பேரு, அவர் பேரே அது தான் சார், காரிய கர்த்தர்!”

“கர்த்தாவே!” என்றபடி, அமலாக்கப்பிரிவுக்கு என்ன பதில் சொல்வது என்று ஆழ்ந்த குழப்பத்தில் தவித்தபடி, பெருநகரம் நோக்கி விரையும் அந்த அரசு வாகனத்தில், இரண்டு புறத்திலும் வெண் வஸ்திரம் தரித்த மத்திய அரசின் அதிகாரிகள் நெருக்கி அமர்ந்து, உராய்ந்தபடி இருக்க, மறுநாள் செய்தித்தாள்களில் வண்ண வண்ண புகைப்படங்களுடன், தன்னைப்பற்றி என்ன செய்தி வருமோ என்று ஆழ்ந்த விசனத்தோடு முகம் உறைந்து போய்க்கிடந்தார், சுவிசேஷகர், போதகர், வல்லமையான தீர்க்க தரிசன வரம் பெற்ற பதிமூன்றாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்ட ரெவ. தானியேல் வேதநாயகம் அவர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *