தில்லி மாநகரத்திலே ஒரு இடுகாட்டின் நடுவில் பல சமாதிகள் இருந்தன. பெரியவர் ஒருவர் மிகவும் பயபக்தியுடனே இறந்தவர்களுக்கெல்லாம் அஞ்சலி செய்து கொண்டே சமாதிகளைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.
அங்கே இருபது வயதுடைய இளம்பெண் ஒருத்தி, தன் கணவனின் சமாதி அருகே அமர்ந்து, அழுது கொண்டே சமாதிக்கு விசிறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதுகண்டு மனம் இளகிய பெரியவர், அவள் பதியின்பால் கொண்டுள்ள பக்தியை மெச்சி. “அம்மா, நீ விசிறுகிற காற்று சமாதியின் அடியில் புதைந்துள்ள உன் கணவரின் உடலுக்குப் போய்ச் சேரும் என்றா நினைக்கிறாய்? ஏன் இந்த வீண்வேலை. துக்கத்தை விட்டு ஆறுதல் அடைவாய் மகளே!” என்று அன்போடு புத்திமதி கூறினார்.
அதற்கு அவளோ, “ஐயா! நீங்கள் என் நிலையை உணரவில்லை என்பது நன்கு தெரிகிறது” என்று சொன்னதுமே, பெரியவருக்கு அவள் நிலைகண்டு மிகவும் இரக்கம் ஏற்பட்டதால், அவர் கண்களிலும் கண்ணிர் வழிய ஆரம்பித்தது.
உடனே அவள் பெரியவரைத் தேற்றிவிட்டுச் சொன்னாள், “எனக்குத் திருமணமாகி ஒரு வருடந்தான் ஆகிறது. என் கணவர் மரணத்தின் பிடியில் இருக்கும் போது, என்மேல் இரக்கம்கொண்டு ‘நான் இறந்தபின் நீ கல்யாணம் செய்துகொள்வாயா?’ என்று கேட்டார்.
“நான் செய்துகொள்வேன்” என்று சொன்னேன். ‘அப்படியானால், என் கல்லறையில் ஈரம் காயும் முன்பாகக் கல்யாணம் செய்துகொள்ளாதே?’ என்றார். நானும் ‘சரி’ என்றேன்.
இந்தக் கல்லறை கட்டி இரண்டு நாளாகப் போகிறது. இன்னும் ஈரம் காய்ந்தபாடில்லை. அதற்காகத்தான் சமாதி உலர விசிறிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரியவர், ‘என்ன உலகமடா இது!’ என்று எண்ணி வியந்து, கண்ணீர் விட்டுக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றார்.
இப்போது அவர் சிந்தும் அக்கண்ணிர் சமாதியில் உறங்கும் அவள் கணவனுக்காக!
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை