கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 4,170 
 
 

பாதர் பீட்டர் திடுக்கிட்டு விழித்தெழும்பினார்.மிக அருகில் எங்கோ கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் அவர் தூக்கம் கலைந்திருந்தது. மறுநாள் பிரசாங்கத்துக்கான உரையை ஆயத்தப் படுத்தி விட்டு அவர் படுக்கைக்குச் சென்று அதிக நேரமாகி இருக்காது. ரோச் லைட்டை அடித்து நேரத்தைப் பார்த்தார். – 11:30

மாறி மாறிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. திருகோண மலைப் பேராலய பங்குத் தந்தையாக அவர் பொறுப்பேற்று வந்த பின், இந்த நாலைந்து ஆண்டுகளில் அடிக்கடி இப்படியான சத்தங்களைக் கேட்கத் தான் செய்கிறார்.

துப்பாக்கிகளின் வேட்டுச் சத்தங்கள் அவருக்கு என்றும் உவப்பானதாக இருப்பதில்லை. அன்பினால் தான் உலகாளப் பட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு, இந்த வேட்டுச் சத்தங்கள் வேதனையைத்தான் கொடுத்தன.

‘கடவுளே, இந்த மக்களின் அறியாமை அகல ஒரு நல் வழி காட்ட மாட் டீரா? தங்களுக்குள் போரிட்டு மடியும் இந்த மக்கள் வாழ்வில் விடிவு பிறக்க ஒரு வழி காட்ட மாட்டீரா?’ – இதுதான் அவரின் அன்றாடப் பிரார்த்தனை.

அருகிலுள்ள தெருவூடாக யாரோ ஓடும் காலடி ஓசைகள் துல்லிய மாகக் கேட்டன. அதைத் தொடர்ந்து அருகாமையிலேயே வேட்டுச் சத்தங்கள் செவிப்பறையை வந்து சாடின.

பொலீஸ் ‘குவாட்டர்ஸு’ம் அதனோடொட்டிய ஜெயிலும் அருகில் கால் மைல் தூரத்துக்குள் தான் இருக்கின்றன. ‘அங்கு தான் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதோ?’ தனது ஊகத்தை அவரால் இப்போதைக்கு ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியாது. இந்த வேளையில் வெளியே தலை காட்டுவது ஆபத்தானது. காலையில்தான் எதுவும் தெரிய வரும். பாவம் எத்தனை உயிர்கள் பலியாகி னவோ!

‘துப்பாக்கிச் சனியனைக் கண்டு பிடித்த அந்தப் பாவி இப்போது நரகத்தில் தான் கிடந்து உழலுவான்’- மனதுக்குள் அவனைச் சபித்துக் கொண்டார். ஏதோ அரவம் மிகச் சமீபமாக, கதவுக்கு வெளியே கேட்பது போல- பிரமையாக இருக்குமோ? இல்லை. யாரோ மூச்சிரைப்பை அடக்கப் பிரயத் தனப்பட்டு முடியாமல் திணறுவது தெளிவாகவே கேட்டது.

இப்போது என்ன செய்வது? கதவைத் திறப்பதா வேண்டாமா? பாதர் பீட்டர் சங்கடமாக உணர்ந்தார். வெளியில் நிற்பவன் அல்லது நிற்பவள் கையில் ஏதும் ஆயுதத்தோடு நின்று தன்னைத் தாக்கிவிட்டால்?

‘கடவுளே, இது என்ன சோதனை?’ அவன் கதவை ஒட்டியபடி சாய்ந்து நின்றிருக்க வேண்டும். கதவு திறந்ததும் தன்னைச் சுதாகரித்துக் கொள்ள முடியாது விழப்போனான். பாதர் பீட்டர் மிக அருகில் நின்றதால் அவர் மீது சரிய, அவர் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

உள்ளேயும் வெளியேயும் கப்பியிருந்த இருளில் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. தன்னிச்சையாக பாதர் கையில் இருந்த ‘ரோச் லைட்’டின் ஆளியை அழுத்த இருளை விழுங்கிய ஒளி அவனைச் சுற்றிப் படர்ந்தது.

உள்ளே நுழைந்ததும் மூச்சிரைத்த படி அவசரமாகத் பின்னங் காலால் கதவைத் தள்ளிச் சாத்தினான். பாதரின் முகத்தில் சந்தேக ரேகைகள் கோடிட்டன. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனை நோட்டமிட் டார்.

அவன் நடுங்கிக் கொண்டிருந்தான்; அவன் உதடுகள் துடித்துக் கொண் டிருந்தன. அப்போதுதான் அவன் மீசையரும்பும் பருவத்தில் இருந்தான். ஆகக் கூடினால் அவனுக்குப் பதினைந்து வயது தானிருக்கும்.

அவன் தோள் பட்டையில் இருந்து இரத்தம் வழிந்து கொண் டிருப்பதை அப்போதுதான் அவர் அவதானித்தார். அது தந்த வலியினாலும், ஓடிய களைப்பி னாலும் பயத்தினாலும் கண்கள் செருக, துவண்டு விழுப வன் போல அவன் நின்று கொண்டிருந்தான்.

அவன் மயங்கி விழு முன் அவனுக்கு அவசரமாக ஏதாவது முதலுதவி செய்தாக வேண்டும். அறை ‘லைட் சுவிச்’சைப் போடக் கையுன்னியவர் பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.

கதிரையொன்றில் அவனைச் சாய்ந்திருக்கச் செய்து விட்டு மெழு குவத்தி ஒன்றைப் பற்ற வைத்து மேசையில் ஊன்றினார். அவசரசிகிச்சைப் பெட்டியில் ‘பாண்டேஜ்’ துணி, பஞ்சு, அயடீன், கத்தரிக்கோல் எனத் தேடி எடுத்து வந்து அவனருகில் அமர்ந்து கொண்டார்.

நல்ல வேளை, அவர் பயந்த அளவுக்கு காயம் பெரிதாக இருக்கவில்லை. ஓடி வரும்போது எங்கோ முட்கம்பி கீறியிருக்க வேண்டும். கண்களில் நன்றியுணர்வு மின்ன, அவர் மருந்திட்டுக் கட்டுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவன் இளைப்பு அடங்கிக் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந் தான். பாதர் கேட்பதற்கு முன்னதாகவே அவன் தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினான். அன்பளிபுரத்தைச் சேர்ந்த அவன் பெயர் முருகதாஸ், சுருக்க மாக முருகன். வன்செயலால் பாதிக்கப் பட்டுச் சிதறுண்டு போன அவன் குடும்பத்தில் இப்போது எஞ்சியிருப்போர் அவனும் அவனது தமக்கை ஆனந்தியும் மட்டுமே.

தமிழகத்துக்கு ஓடி அகதிகளாகிப் பின் 92 இல் மீண்டு வந்து, வாழ்க் கையே போராட்டமாகி விட்ட நிலையில், வறுமையோடு துவந்த யுத்தம் நடத்த, ஒரு மேசனுக்கு எடுபிடியாகக் கூலி வேலை செய்து – எப்படியோ வயிற்றைக் கழுவி வாழ்ந்து வந்த அவர்கள் வாழ்வில் வீசிய புயலோ ஓயவில்லை.

ஊர்க்காவல் படை வீரன் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு அருகாமை யில் யாராலோ சுடப்பட்டு இறக்க, பலிக் கடாவாக அவன் பிடிபட்டு அடைக் கப்பட்டான்.

தனிமரமாகி விட்ட தமக்கை யாரிடம் ஓடுவாள்? யாரை என்று கெஞ்சு வாள்? செல்வாக்கில்லாத சாதாரணப் பெண் அவள். ஆனந்தம் அவள் பெயரில் மட்டும் தான். மற்றப்படி அவள் வாழ்வில் கண்டது எல்லாமே அவலம் தான். ஆறேழு மாதங்களின் பின் அதிர்ஷ்டவசமாக அவன் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அவன் மீதான குற்றச் சாட்டுகள் ஆதார மற்றவை என்றும் நிரூபணமாகிவிட்டது.

ஆனாலும் அவன் விடுதலைக்கான நாளோ இன்னும் வந்தபாடில்லை. இந்த இடைக்காலத்துள் அவன் பட்ட அடிகளும் சித்திரவதைகளும் இளகியிருந்த அவன் மனதை இரும்பாக இறுக வைத்து விட்டன.

எந்த ஒரு காரணமுமின்றி ஒரு பயங்கரவாதியாக முத்திரை குத்தப் பட்டு விட்ட அவன் எப்போ விடுதலையாகி வெளியே போவோமென நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். ஒரு போராளி இயக்கக் குழுவில் போய் இணைந்து கொள்வதற்காக!

சிறையில் உறவான இயக்கக்காரர்கள் சிலரின் அறிமுகம் அவன் வாழ்வுத் தடத்தை மாற்றக் காலயிருந்தது. சிறையில் அவனோடு அடை பட்டிருந்த அந்த இயக்கக்காரர்கள் தப்பி ஓடுவதற்குத் தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள். அன்று அவர்களுக்குச் சாதகமாகச் சந்தர்ப்பம் அமைந்தது.

மது போதை மயக்கத்துடன் தொலைக் காட்சியின் காமக் களியாட்டத் தில் ஒன்றிப் போயிருந்த சிறைக்காவலர்களை மடக்குவது அவர்களுக்குச் சிரமமாக இருக்கவில்லை. அவர்களை மடக்கி, அவர்களிடமிருந்த துப்பாக்கி களாலேயே அவர்களைச் சுட்டு விட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள்.

ஓடும்போது இவனையும் கொஞ்சத் தூரம் தம்மோடு இழுத்துக் கொண்டு தான் ஓடி வந்தார்கள். எதிலோ தடக்கித் தடுமாறி விழுந்த இவன் எழுவதற்கு முன்பாக அவர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டார்கள்.

இருட்டில் தட்டுத் தடுமாறி எழுந்தவன் பின்னால் வேட்டோசை கேட்க வும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கால் போன திசையில் ஓடி இங்கு வந்திருக்கிறான்.

பறங்கி[Burger] இனத்தைச்சேர்ந்த பாதர் பீட்டருக்கு இந்தச் சிறுவனைப் பார்க்கும்போது தனது தங்கையின் மகனது ஞாபகம் தான் வந்தது, பாதர் பீட்டரின் கடைசித் தங்கை ஒரு சிங்கள இளைஞனைக் காதலித்து மணமுடித் திருந்தாள். பாலையூற்றில் தங்கியிருந்த அவர்களும் கூட கடந்த கலவரத்தின் போது ஊராருடன் சேர்ந்து ஓடி ஒளியத்தான் வேண்டியிருந்தது.

‘பூட்ஸ்’ காலடி ஓசைகள் வெளியே அண்மித்து வருவது போல் கேட்க வும் சிறுவனின் முகத்தில் மிரட்சி தோன்றவாரம்பித்தது. ‘இப்போது நான் என்ன செய்வது? இந்தச் சிறுவனைக் காட்டிக் கொடுப்பதா? கொலை செய்து விட்டுப் பாவசங்கீர்தனம் செய்ய வருபவனையே மன்னித்து அவன் கூறும்இரகசியத்தை வெளியில் எவரிடமும் கூறாது பாதுகாக்க வேண்டிய கடப்பாடுடைய – அவ்வாறு காப்பேன் எனச் சர்வேஸ்வரனிடத்து வாக்குத் தத்தம் செய்து – வெள்ளுடை பூண்டுள்ள – ஓர் உத்தம குருவானவன் நான்.

இந்தச் சிறுவன் என்னிடம் பாவசங்கீர்தனம் செய்ய வரவில்லைத் தான். அவ்வாறு செய்வதற்கான குற்றமெதையும் அவன் செய்யவு மில்லை. இவனைக் காட்டிக் கொடுப்பதால் நான் எதைச் சாதிக்கப் போகிறேன்?

இவன் தப்பி வந்த ஒரு கைதி என அறிந்தும் இவனை நான் மறைத்து வைப்பது இந்நாட்டுச் சட்டப்படி குற்றம் தான். ஆனால் கடவுளின் சந்நிதா னத்தில்….? ‘உன்னைப்போல் உன் பிறனையும் நேசி’ எனப் போதித்த. பகை வனுக்கும் அருளும் உள்ளம் வேண்டும் என வாழ்ந்து காட்டிய அந்த இரக்கத்தின் தேவனின் முன்னிலையில் எனது மனிதாபிமானம் தவறாகுமா? அந்த நேச குமாரனைக் காட்டிக் கொடுத்த யூதாஸைப் போல நானும் பழி சுமக்க வேண்டுமா? இல்லை..இல்லவே இல்லை..’

பயத்துடன், எங்கே ஒளியலாம் எனத் தேடுவன போல் அவன் விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. ‘டப்.. டப்…டப்..’ கதவில் யாரோ பலமாகத் தட்டி னார்கள். அவசர அவசரமாக அவனை இழுத்துச் சென்று கட்டிலில் தள்ளாத குறையாகப் படுக்க வைத்துப் போர்வையால் இழுத்து மூடித் திரும்ப மீண்டும் கதவில் தட்டப்படும் ஓசை வலுத்தது.

மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு, வெளிப்புற லைற் சுவிச் சைப் போட்டபடி கதவுப் பிடியை முறுக்கினார் பாதர்.

வெளியே சீருடையில் மூன்று இராணுவ வீரர்கள் முகத்தில் கடுகடுப் புடன் ‘கதவைத் திறப்பதற்கு ஏன் இவ்வளவு நேரம்?’ என்ற மாதிரி உறுத்துப் பார்த்தபடி நின்றார்கள். அவர்களில் ஒருவன் கொச்சைத் தமிழில் அவரிடம், ”டிரஸ்ரவாதி அங்க ஜெயில் பிரேக் பண்ணி இன்த பக்கங் ஓடி வன்தாங்… …நாங் உள்ள. .பாக்கிராங்…” என்றபடி அவரை ஒதுக்கி விட்டு உள் நுழைந்த வர்களின் வாயிலிருந்து புறப்பட்டுக் ‘கப்’பென நாசியைத் தாக்கிய மதுவின் வாடை அவருக்குக் குமட்டலை ஏற்படுத்தியது. அவர்கள் பார்வை அறை முற்றும் துழாவி நோட்டமிட்டது.

‘கட்டிலில் படுத்திருப்பவனைப் பற்றி என்ன கேட்பார்களோ? புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் சொல்லலாம்தான். என்ன பொய் சொல்லி அவனைக் காப்பாற்றுவது? அவனை எனது மருமகன் எனக் கூறினால் நம்பு வார்களா? இவ்வளவு காலமும் சிறையில் அடை பட்டிருந்த ஒருவனை அடையாளம் காண்பதில் அவர்களுக்குச் சிரமம் ஒன்றுமிராது. அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.

பிடிபட்டால் அவனை அவர்கள் சும்மா விடப் போவதில்லை. பாவம் இந்த இளம் வயதில் அவன் வாழ்க்கை கருகிப் போகப் போகிறது’. கசப்பான அந்த உண்மையை ஜீரணிக்க அவருக்குக் கஷ்டமாக இருந்தது.

தான் கட்டில் பக்கம் திரும்பிப் பார்ப்பது அவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால் அதுவரை அதைத் தவிர்த்த அவர் எதேச்சையாகப் பார்ப்பது போலத் திரும்பிப் பார்த்தார். அங்கே – கட்டில் காலியாகக் கிடந்தது. அவன் சாமர்த்தியமாக உருண்டு விழுந்து கட்டிலுக்கும் சுவருக்குமிடையில தன்னைமறைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சந்தேகத்துக்குரிய மற்றைய இடங்களில் தேடிப் பார்க்க வேண்டிய அவசரம் அவர்களுக்கு. மேலதிகாரி போல இருந்தவன் சம்பிரதாயமாக, தொந்தரவு செய்தமைக்காக ஒரு ‘சொறி’யை உதிர்த்து விட்டு ‘’அப்பி என்னங்’’ என்றவாறு மற்றிருவருக்கும் ஏதோ ஆணையிட, அவநம்பிக்கை தொற்றிய முகங்களுடன் அவர்களும் அவனுடன் விரைந்து வெளியேறினர்.

சந்தேகம் ஏற்படாதவாறு கதவை மெதுவாகத் தாழிட்ட போது அவரின் வாய் கடவுளுக்கு நன்றி கூறி ஸ்தோத்தரித்தது. மூலையோடு சுருண்டு கிடந்த முருகனை ஆதரவாக அணைத்து எழுப்பினார். கூப்பிய கரங்களும், நடுங்கிய உதடுகளும், மருண்ட பார்வையுமாக அவனைப் பார்க்கப் பரிதாப மாக இருந்தது. பாயொன்றில் அவனைப் படுக்க வைத்து விட்டுக் கட்டிலில் பாதர் பீட்டர் சாய்ந்தபோது நேரம் பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது.

‘நாளை விடிந்ததும் என்ன செய்வது?’ என்ற மனப் போராட்டத்தில் மூழ் காமல் – ‘எல்லாம் அவர் சித்தப்படி ஆகட்டும்’ என்று பாரத்தைக் கடவுளிடத்தில் சுமத்தி விட்டு அவர் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்து போனார்..

காலையில் கண் விழித்து எழுந்த போது முருகனைக் காணவில்லை. வாசற் கதவு சாடையாகத் திறந்திருந்தது. அவர் அவசர தேவைக்கென வைத்திருந்த சைக்கிள் – அதையும் காணவில்லை! பையன் தப்பிவிட்டான்! பரவாயில்லை. அவர் முகத்தில் நிம்மதிப் புன்முறுவல் விகசித்தது.

அன்று காலை ஆராதனையை நாட்டு மக்களின் சமாதானத்திற்கான பிராத்தனை யுடன் நிறைவு செய்து அவர் வெளியேற, அவருக்காகக் காத்திருந்த இராணு வத்தினர் அவரைக் கைது செய்தார்கள்.

[2000 இல் போர்க்காலச் சூழலில் எழுதப்பட்டு ‘மறைமுதல்வன் சிறுகதைகள்’ [2020 ] நூலில் இடம்பெற்ற சிறுகதை.]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *