தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை.
சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை யுவதி, உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்துகொண்டாள்.
எதிர்பாராத அதிர்ச்சியில் நிலைகுலைந்த அந்த இளைஞன் சேரிலேயே உட்கார்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா என ஒரு கணம் யோசித்து, பின் எழுந்து நின்றான். அவனுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சிதான் எனக்கும். திறந்த கதவை மூடிவிட்டு வெளியே போவதா அல்லது கடைக்குள் நுழைவதா எனத் துணுக்குற்று, பின் கடைக்குள் நுழைந்தேன்.
முதலில் சுதாரித்துக்கொண்டவள் அந்தப் பெண்தான். பதற்றத்தை மறைத்துக்கொண்டு, ”என்ன சார் வேணும்?” என்று கேட்டாள்.
”டி.வி.டி. வாங்க வந்தேன்!”
”என்ன படம் சார்?”
சொன்னேன். தேட ஆரம்பித்தாள்.
சின்னக் கடைதான். ஒரே ஒரு அறை மட்டுமே. அதற்குள் ஷோ கேஸ்களில் அடுக்கிவைக்கப்பட்டு இருந்த சி.டி-க்கள், டி.வி.டி-க்கள் இன்னபிற எலெக்ட்ரானிக் வஸ்துகள். கடை உரிமையாளர் சாப்பிடப் போயிருக்க வேண்டும். எனக்கும் இது லஞ்ச் டைம்தான். பேசாமல் ஆபீஸ் பியூனை அனுப்பி வாங்கச் சொல்லியிருக்கலாம். நாமே போய் வாங்கி வரலாமே என்று காலாற நடந்து வந்து கடைக்குள் நுழைந்தால்… இப்படி ஒரு கண்றாவி!
அடர் கறுப்பு கூலிங் பேப்பர் ஒட்டப்பட்ட கண்ணாடி என்பதால், ‘மே ஐ கமின்’ என்று அநாவசிய அனுமதி எதுவும் கேளாமல் ‘தள்ளு’ ஸ்டிக்கரைப் படித்து, கதவைத் தள்ளி உள்ளே வந்தேன். வெளியே இருப்பவர்களால் உள்ளே பார்க்க முடியாது என்றாலும், உள்ளே இருப்பவர்களால் வெளியே பார்க்க முடியும். தனிமையின் தைரியமும் கிளுகிளுப்பின் போதையும் கடை ஊழியர்களான அவர்களுக்கு எனது வருகையை கவனிக்கச் செய்யாமல் கண்களை மறைத்திருக்கலாம். ஒரு சில விநாடிகளில் நடந்துவிட்ட நிகழ்வல்லவா இது. அவர்களைப் பார்த்தவுடனேயே தெரிந்தது… இருவரும் சம வயதினர். பெண் கல்யாணமானவள். பையன் ஆகாதவன்!
”இந்தாங்க சார்!” மேலும் மேலும் என்னை யோசிக்க விடாமல் இரண்டே நிமிடத்தில் நான் கேட்ட டி.வி.டி-யை எடுத்துக் கொடுத்தாள் அந்தப் பெண். பணத்தைக் கொடுத்துவிட்டு, படபடப்பு மாறாமலேயே கடையை விட்டு வெளியே வந்தேன்.
ரோகிணியிடம் இதை உடனே சொல்ல வேண்டும். அவளுக்கு ‘உண்மைக் கதைகள்’ மிகவும் பிடிக்கும்.
கதவைத் திறந்த அவனும், சேரில் உட்கார்ந்திருந்த நானும் திகைத்துப் போயிருக்க… நல்ல வேளை, என் பி.ஏ. ரோகிணி சட்டெனச் சுதாரித்து என் மடியிலிருந்து எழுந்து விலகி நின்றாள். தப்பு எங்கள் மீதா… அல்லது அவன்மீதா என்று தெரிய வில்லை!
– ஜூலை, 2009