ஆத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 3,343 
 

இது தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் 1940 களில் நடந்த கதை.

அந்தக் கிராமத்தில் மாரிச்சாமி ஒரு பெரிய பணக்காரன். மச்சுவீடு கட்டி அதில் ஆடம்பரமாகக் குடியிருந்தான். வீட்டின் தாழ்வாரத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு பெரிய ராஜபாளையம் வேட்டை நாய் கட்டி வைத்திருந்தான்.

அது மிகச் சிறந்த வேட்டை நாய். பார்க்கவே மிக உயரமாக, ஒல்லியாக முரட்டுத் தோற்றத்தில் இருக்கும். அது மாரிச்சாமியின் மீது உயிரையே வைத்திருந்தது. அதை மாரிச்சாமி வேட்டைக்காக அடிக்கடி காட்டுக்குள் கூட்டிச்சென்று உபயோகப் படுத்தி வந்தான். தவிர, அதை அவன் வேட்டைக்கு உபயோகப் படுத்தாத நாட்களில் வாடகைக்கு விடுவதும் உண்டு. அதில் மாரிச்சாமிக்கு ரொம்பப் பெருமை.

அதை வாடகைக்கு எடுத்து கூட்டிக்கொண்டு போவோருக்கு வேட்டையில் கட்டாயம் வெற்றி கிட்டும். மானையும் பிடிக்கலாம்; காட்டுப் பன்றியையும் வேட்டையாடலாம். பாய்ந்து பாய்ந்து அது வேட்டையாடும் திறமைகள் மிகவும் சிலாகிக்கக் கூடியவை. அவ்வளவு மூர்க்கமானது.

ஒருமுறை மாரிச்சாமியின் நல்ல நண்பர் அந்த நாயை வேட்டைக்காக ஒருநாள் மட்டும் வாடகைக்கு எடுத்தார். வாடகைப் பணத்தையும், டெபாஸிட் பணத்தையும் எண்ணிக் கொடுத்துவிட்டு நாயை தன்னுடன் அழைத்துச் சென்றார். அன்று காட்டில் அவருக்கு நல்ல வேட்டை. அதனால் மாலையில் நாய்க்கும் நல்ல இறைச்சி விருந்து படைத்தார்.

அன்று இரவு எல்லோரும் தூங்கப் போனார்கள். மறுநாள் காலையில் எழுந்தவுடன், நாயைக் கொண்டுபோய் நண்பனிடம் ஒப்படைப்போம் என்று எண்ணி அவர் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

அன்று நள்ளிரவில் ஓட்டைப் பிரித்து உள்ளே வந்தான் ஒரு பலே திருடன். அந்த வீட்டுப் பெண்மணிகள் கோயில் குளங்களுக்கு போகையில், அதிக நகை நட்டுக்கள் அணிந்து செல்வது அவனுக்கு நன்கு தெரியும். அடிக்கடி அவர்களை நோட்டம் பார்த்து வைத்திருந்தான். ஆகையால் அனைத்து தங்க வைர நகைகளைத் திருடுவதற்காக அந்த வீட்டிற்குள் வந்தான்.

வீட்டின் சொந்தக்காரன் வேட்டைக்காக நாயைக் கூட்டி வந்திருப்பது அந்த திருடனுக்கு சுத்தமாகத் தெரியாது. உள்ளே நுழைந்து அவன் திருடிக் கொண்டிருந்தபோது திடீரென அவன் மீது வேட்டைநாய் பாய்ந்து காட்டு மிருகங்களைக் கடித்துக் குதறுவது போலக் கடித்துக் குதறி திருடனைக் கொன்று விட்டது. பின்னர் நன்றியுடன் வீட்டுக்காராரையும் குரைத்து எழுப்பியது.

தூக்கத்தில் பதறி எழுந்த வீட்டுக்காரருக்கும் நடந்தது எல்லாம் புரிந்தது. திருடன் நகைகளுடன் தப்பிக்க இருந்தபோது இது நடந்தது என்பதை அங்கு காணப்பட்ட அலங்கோலக் காட்சிகள் உரைத்தன. அதைப் பார்த்த வீட்டிலுள்ள பெண்கள் அலறினர். காலையில் பொழுதும் விடிந்தது.

இதை உடனே மாரிச்சாமிக்குத் தெரிவிக்க நண்பனுக்கு ஆசை. ஆனால் அது டெலிபோன், மொபைல் வசதிகள் இல்லாத காலம். ஆகவே உடனே ஒரு அட்டையில் இரவு நடந்த விவரத்தை சுருக்கமாக எழுதி, அந்த அட்டையை நாயின் கழுத்தில் தொங்கவிட்டு நாயிடம், “போ, உன் எஜமானனிடம் உடனே போ” என்று அன்புடன் சொன்னான்.

நாயும் மகிழ்ச்சியுடன் அட்டையை கழுத்தில் சுமந்துகொண்டு வீடுநோக்கி ஓடியது.

நடந்த கொலையை போலீஸ் ஸ்டேஷனில் சொல்ல, போலீஸ் ஸ்டேஷன் நோக்கி நடந்தான். காலையில் ட்யூட்டியில் இருந்த போலீஸ்காரர்கள் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தனர். அங்கு கொலையுண்டு கிடந்த திருடனைப் பார்த்து வாயைப் பிளந்தனர். ஏனென்றால் அவன் பல வருடங்களாக திருட்டு, கொலை, கொள்ளை கேஸ்களில் தேடப்பட்டு வருபவனாம்.

வேட்டை நாயின் பராக்கிரமங்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டு அந்த நாயை தங்கள் டிபார்ட்மென்டில் உடனே சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டனர். மாரிச்சாமியின் வீடு நோக்கி விரைந்தனர்.

வேட்டைநாய் வாயில் ரத்தக் கறையுடன் ஓடி வருவதைக் கண்ட மாரிச்சாமி, ‘அடக் கடவுளே, என் நண்பனை இரவில் கடித்துக் குதறிக் கொன்றுவிட்டு, காலையில் தன்னிடம் ஓடி வந்துவிட்டது’ என்று எண்ணி மிகுந்த ஆத்திரத்துடன் கையில் கிடைத்த இரும்பு உலக்கையை எடுத்து அதன் தலையில் ஓங்கி அடித்தான்.

இதைச் சற்றும் எதிர்பாராத வேட்டைநாய் பெரிதாக மரண ஓலமிட்டு துடி துடித்து பரிதாபமாகச் செத்தது. பின்னர் அதன் கழுத்தில் இருந்த அட்டையின் வாசகத்தைப் படித்துப் பார்த்தபோது, நாயின் வீர தீரச் செயல்கள் அவனுக்குத் தெரிய வந்தன.

தலையில் அடித்துக்கொண்டு மாரிச்சாமி கதறிக் கதறி அழுதான்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த போலீஸார், நாயே இறந்து போய்விட்டது என்று தெரிந்ததும், தங்கள் கடமையில் இறங்கிவிட்டனர். செத்தவன் திருடனாக இருந்தாலும் கொலை நடந்துவிட்டது என்பதாலும்; மாரிச்சாமிதான் நாயின் சொந்தக்காரன் என்பதாலும்; தவிர, ஒரு வேட்டை நாயை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்ட குற்றத்திற்காகவும் மாரிச்சாமியை கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு; பதறிய காரியம் சிதறிப் போகும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்!?

இதேபோல பஞ்ச தந்திரக் கதைகளிலும் ஒரு கீரிக் கதை உண்டு. இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஒருபெண் தினமும் கிணற்றடிக்குச் சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அவள் வளர்த்து வந்த கீரிதான் அந்தமாதிரி நேரத்தில் வீட்டைப் பார்த்துக்கொண்டு அவளின் குழந்தையையும் கவனித்துக் கொள்ளும்.

அவ்விதம் ஒரு நாள் காலையில் குடத்தில் தண்ணீர் கொண்டுவரச் சென்றாள். குழந்தை தரையில் தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்று அவளுடைய கைக்குழந்தைக்கு அருகில் வந்தது. குழந்தையைப் பாம்பு கடித்து விடுமே என்று பயந்து அந்தப் பாம்புடன் வீரமாகச் சண்டை போட்டு அதனைக் கொன்றது கீரி.

வாயில் ரத்தம் சொட்ட எஜமானியை வரவேற்க வாசலில் வந்து காத்து நின்றது கீரி. தண்ணீர்க் குடத்துடன் திரும்பி வந்த நங்கை பதறிப் போனாள். “ஐயையோ, என் குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பித்துப் போக வாசலுக்கு வந்தாயா” என்று கதறியபடி தண்ணீர்க் குடத்தை அதன் தலையில் போட்டாள். கீரியும் அங்கேயே சுருண்டு விழுந்து மாண்டது.

வீட்டுக்குள் போனவுடன் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்த பாம்பைப் பார்த்ததும் நடந்த விஷயம் தெரிய வந்தது. குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது. அவசரப்பட்டு விட்டோமே என்று நினைத்து ஹோவென்று கதறி அழுதாள்.

எந்த ஒரு செயலையும், குறிப்பாக கோபத்தில் உடனே செய்ய நினைக்கும் செயலை, ஆறப்போட வேண்டும். அதன்பிறகு நிதானமாக பல முறைகள் சிந்தித்து செயல்பட வேண்டும். இப்படியும் இருக்கக் கூடும், அப்படியும் இருக்கலாம் என்று தீர ஆராய வேண்டும்.

கோபத்தில் ஒன்றைச் செய்துவிட்டு அதை மாற்ற முடியாது. உடைந்த பானையை ஓட்ட வைத்தாலும், உடைந்து போன விரிசல் எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கும். நாம் சிதறிய வார்த்தைகளும் அப்படித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *