கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,999 
 

“வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.” – அப்பாவின் கடிதம், கனகாவை உறைய வைத்திருந்தது.

அப்பாவிற்கு, அம்மா ஒரு கண் என்றால், அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்த வாடாமலர் மாத இதழ் மற்றொரு கண்ணாக இருந்தது. நாற்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த வாடாமலர், அம்மா இருந்த வரையில் கொடி கட்டித்தான் பறந்து கொண்டிருந்தது. தடதடவென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்த புற்றுநோய், ஒரு நாள் அம்மாவைக் கொண்டு போன போது, ரொம்பவே நிலை குலைந்து போனார் சந்தானம். அவரது உற்சாகம், கலகலப்பு, ஆரோக்கியம், சுறுசுறுப்பு எல்லாம் ஒவ்வொன்றாக அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தன. பொலிவும், புகழுமாக பவனி வந்து கொண்டிருந்த வாடாமலர் இதழ் வாடத் தொடங்கியதும் அப்போதுதான்…

‘மை குட்னெஸ்! உங்கப்பா ரொம்பவும் டிப்ரஸ்டாக இருக்கார்னு நினைக்கிறேன். நீ உடனே போய் ஆக வேண்டியதைக் கவனி’ என்று கனகாவின் கணவன் குமார் சொன்னதும் அந்தப் பயணத்தின் அவசியத்தை உணர்ந்தவளாகக் கிளம்பினாள் கனகா.

மகளைப் பார்த்ததும் சந்தானத்துக்குச் சற்றுத் தெம்பு கூடினாற் போல் இருந்தது. அதிகம் பேசி அவரது அயர்ச்சியைக் கூட்டாமல், உடனடியாக வாடாமலர் மாதப் பத்திரிகை அலுவலகத்துக்கு விரைந்தாள்.

தேசத் தலைவர்களும், பிரபல எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளும் அடிக்கடி வந்து போய் ஜேஜே என்றிருக்கும் அப்பாவின் அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்தது. கம்பீரமான விவேகானந்தர், மீசை பாரதி, திருவள்ளுவர், அன்னை தெரசா, காந்தியடிகள், போன்றவர்களின் கறுப்பு வெள்ளைப் படங்களோடு, சரிகைத் தலைப்பாகையுடன் கோட்டும் சூட்டுமாக அப்பாவின் புகைப்படமும் அந்த அறையை அலங்கரித்தன. ‘எனக்குத் தொழில் எழுத்து’ என்ற பாரதியின் வாசகங்கள் பொறித்த பலகை, அந்த அறைக்கு இருந்த மரியாதையைக் கட்டியம் கூறியது.

தமிழறிஞர்களும், கவிஞர்களும் வாடாமலர் அலுவலகத்துக்கு வந்துபோன வாடிக்கையான அந்த நாட்கள், கனகாவுக்கு மனக்கண் முன் வந்து போனது. அவர்களது காரசாரமான விவாதங்களும், உரத்த சிரிப்பலைகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உரையாடல்களும் நிழலாகத் தோன்றி மறைந்தன. அதுவும் வருடாவருடம் வரும் ஆயுதபூஜையன்று அத்தனை ஊழியர்களுக்கும் புது உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எல்லாப் பிரிண்டர்களும், இயந்திரங்க்களும் புது மணப்பெண் போல, பூச்சூடிப் பொட்டிட்டுப் பளபளத்துக் கொண்டிருக்கும். அம்மாவின் கை வண்ணத்தில் தயாரான சர்க்கரைப் பொங்கலும், மிளகு வடையும், கடலைச் சுண்டலும் நிவேதனம் செய்யப்பட்டு அனைவருக்கும் தரப்படும். பழுப்புக் கவரில் பணம் வைத்து, ஒவ்வொரு ஊழியருக்கும் அப்பா போனஸ தருவார்.

கனகாவின் மனது, நினைவுகளின் பாரத்தால் கனத்துப் போனது. ஓ! எத்தனை பாரம்பரியமான பத்திரிகை! தான் வளர்ந்து வந்ததைப் போலவேதான் வாடாமலரும் வளர்ந்து வந்திருக்கிறது! நிச்சயம் இதை வாட விடக்கூடாது என்ற எண்ணம் வேரூன்ற அனைவரையும் சந்திக்கத் தயாரானாள்.

பழைய வேலை ஆட்களும், பொறுப்பாசிரியரும் வந்து அவளை வரவேற்று நலம் விசாரித்தனர். பத்திரிகையின் தற்போதைய நிலவரத்தை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டவள், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினாள்.

உடனடியாக ஒரு சுற்றறிக்கை தயாரித்து அனைவருக்கும் அனுப்பி வைத்தாள். வாடாமலரின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை ஒரு வாரத்துக்குள் அனுப்பும் படி கேட்டுக் கொண்டாள்.

வானதி என்ற பெண்ணைத் தவிர, மற்ற அனைவரும் அவரவர் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவித்து எழுதி அனுப்பி இருந்தார்கள். இன்னும் கூடுதலான திரைப்பட சமாச்சாரங்களையும், சமைத்துப்பார் முறையையும், பளபளப்பான புகைப்படத்துடன் கூடிய அழகுக் குறிப்புகளைச் சேர்க்கும் படியும் தெரிவித்திருந்தார்கள். அரைத்த மாவை அரைத்த கதையாகவே எல்லா யோசனைகளும் இருந்த படியால், கனகாவுக்கு ஆயாசமாக இருந்தது.

வாடாமலர் நட்டத்தில் ஓடுவதை அறிந்து, போட்டா போட்டியுடன் வாங்குவதற்கு அனேகம் பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் சரிவராமல் போய் விற்றுவிடும்படி ஆகிவிடுமோ என்ற அச்சம் லேசாகத் துளிர் விட ஆரம்பித்தது கனகாவுக்கு.

இந்தப் பெண் வானதியும் குறிப்புகளைக் கொடுத்து விட்டால், மீட்டிங் போட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று விவாதிக்கலாம்.

‘மேடம்…’
–தள்ளு கதவைத் திறந்து கொண்டு வந்தது வானதி தான்.

‘வானதி… ஸ்வீட் நேம்!’

‘ஆமாம் மேடம். என் தாத்தா வைத்த பேர்’

‘ஓ! வெரி இன்ட்ரஸ்ட்டிங்க்…சரித்திரப் பேர் இல்லையா?’

‘ஆம். கல்கியின் மீது என் தாத்தாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு. பொன்னியின் செல்வனில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் எனக்கும்…அத்தோடு, வானதி என்றால் வான்+நதி, அதாவது வானில் இருந்து வந்த நதியான கங்கையையும் குறிக்கும் மேடம்’.

மின்னல் போன்ற உணர்வு நரம்புகளில் பாய்ந்தவளாக கனகா சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

வானதியின் பேச்சு தொடர்ந்தது.

‘மேடம், எனது ஆலோசனைக் குறிப்புகள் பற்றிப் பேசுவதற்கு முன் உங்களிடம் ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்…

பொதுவாக நம் எல்லோருக்கும் கழுகு ஒரு கம்பீரமான பறவை என்று தெரியும். ஆனால், அது எவ்வளவு விடாமுயற்சியுடன் செயலாற்றுகிறது என்பது மிகவும் ஆச்சரியப்படத் தக்க விஷயம். கழுகுகள் சுமாராக எழுபது ஆண்டுகள் வாழக் கூடியவை. ஆனால், அவற்றுக்குச் சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகும்போது உடலில் பலவித மாற்றங்க்கள் நிகழ்கின்றன. நீண்ட கூரிய நகங்கள் பலமிழந்து போய், இரையைப் பிடித்துக் கொள்ள இயலாமல் போய்விடும். பலம் பொருந்திய அலகு, இரையைக் கிழித்து உண்ணும் திறனை இழந்து விடும். அதற்கும் மேலாகப், பரந்து விரிந்திருக்கும் இறக்கைகள் மிகவும் தடித்துப் போய், உடம்போடு ஒட்டிக்கொண்டு, எங்கும் பறந்து போய் இரை தேட முடியாமல் போய்விடும்.

இப்போது கழுகிற்கு இருப்பது இரண்டு வழிகள்—ஒன்று, இந்த அவஸ்தைகள் பொறுக்க முடியாமல் இறந்து போவது; மற்றது, முடிந்த வரையில் முயன்று பார்த்து, உடம்பின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, வாழ்வதற்காகப் போராடுவது!

வாழ வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டதும், என்ன செய்யும் தெரியுமா? உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று பாறையின் மீது தனது அலகை மோதி மோதி அதை மெதுவாக வெளியே இழுத்துப் போட்டுவிடும். பொறுமையுடன், புது அலகு வரும் வரையில் அங்கேயே காத்திருக்கும். பலம் பொருந்திய, புதிய அலகு வந்ததும் அதன் உதவி கொண்டு, தனது கால் நகங்களைப் பிய்த்து எறியும். திரும்பவும் புது நகங்கள் முளைக்கும் வரையில் பொறுமையோடு காத்திருக்கும். அடுத்ததாக, புதிய, கூரிய, வளைந்த நகங்கள் வளர்ந்தவுடன், நகங்களாலும், அலகாலும் உடம்புடன் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறியும். அடர்ந்த, கறுத்த, பெரிய இறக்கைகள் முளைக்கும் வரையில் திரும்பவும் பொறுமையோடு காத்திருக்கும். புது அலகு, புது நகங்கள், புது இறக்கைகள் என்று மறுபிறவி எடுத்த கழுகு வாழும் உத்வேகம் கைகூடிய மகிழ்ச்சியில் உயரே, உயரே பறக்க ஆரம்பிக்கும்…

நமது வாடாமலரும் ஒரு விதத்தில் கழுகு மாதிரித்தான். நாற்பது ஆண்டுகள் அபரிதமாக வளர்ச்சி கண்ட பிறகு வரக்கூடிய தேக்கம் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் நாம் இந்தத் தேக்கத்தை, நிச்சயம் மாற்ற முடியும் மேடம்’….

கனகாவிற்கு வானதியின் மீது அபார நம்பிக்கை வந்திருந்தது…. மேற்கொண்டு பேசுவதைக் கேட்கும் ஆவலில் ..’சொல்லு வானதி! உனக்கு என்ன யோசனை தோன்றுகிறது?’ என்றாள்.

‘மேடம்! கடந்த ஒரு வாரமாக, நான் வாடாமலரின் பழைய பிரதிகளைப் படித்தேன்…. படிக்கப் படிக்கப் பிரமித்துப் போனேன். இணையமும் தொலைக்காட்சியும், எந்தவொரு தொழில் நுட்பச் சாதனமும் இல்லாத கால கட்டத்தில், வாடாமலர் இதழில் வெளி வந்திருந்த தகவல்களும் கருத்துப் பதிவுகளும், கட்டுரைகளும், கதைகளும், கதைகளை ஒட்டிய அருமையான சித்திரங்களும்…. அத்தனையும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அவ்வளவு அருமையாக இருந்தன.

அயல் மொழிக் கதைகளின் தமிழாக்கம், வட்டாரச் சிறுகதைகள், திறம் படைத்தவர்களின் நேர்காணல், அறிவார்ந்த போட்டிகள் என்று அனைத்திலும் தரம் மிளிர்ந்ததாக இருந்தன. …..ஆனால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிச், சில முக்கியமான அங்கங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மாற்றம் தேவை தான், அதனால் ஒரு மறு மலர்ச்சி ஏற்படுமென்றால்….ஆனால் வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்பது தெரிந்தவுடன் சற்றே சுதாரித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்!’

அதுபோல், விற்பனையை எடுத்துக் கொண்டால், விளம்பரமும் முக்கிய இடம் பெறுகிறது. தொலைக்காட்சி சீரியல்களப் பார்க்கத் துடிக்கும் மக்களைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்துக்கு மாற்ற வேண்டும்….வாள் முனையை விடப் பேனாவின் முனை கூர்மையானது அல்லவா?

மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பயணிக்கும் இடங்களான இரயில் நிலையங்கள்/விமானக் கூடங்களில் நமது பத்திரிகையை வாங்கிப் படிக்கும் விதமாகக், கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்வது நிச்சயம் கூடுதல் பலன் அளிக்கும். நமது பத்திரிக்கையில் விளம்பரம் செய்பவர்களுக்கும், அதிகம் பேர் புத்தகத்தைப் படிப்பதால், பெரிய அளவில் அவர்களது விற்பனைப் பொருளுக்கு வரவேற்பு கூடும்!

அதே சமயம், நமது இதழ் எல்லோருக்கும் கிடைக்கும் படியாகப் புத்தக ஸ்டால்களில் இருக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் ஒரு ரோஜா வண்ணப் பஞ்சு மிட்டாய்க்கே விளம்பரம் தேவைப் படும்போது, தரமான நமது பத்திரிக்கைக்கும் விளம்பரம் அவசியமாகிறது…

‘டிஸ்ப்ளே அண்ட் மார்க்கெட்டிங்க் ஈஸ் வெரி இம்ப்பார்ட்டண்ட்’…..

கனகா விக்கித்துப் போயிருந்தாள். இந்த இளம்பெண்ணிடம் இத்தனை ஆழ்ந்த சிந்தனை இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை!

‘ம்…வெரி ட்ரூ வானதி! ப்ளீஸ் கோ அஹெட்’

‘மேடம்! ஓரு பத்திரிகை தொய்வில்லாமல் வளர எழுத்தாளர்களின் படைப்பு மட்டும் போதாது…..மொழிமாற்றுக் கதைகள், கட்டாயமாக ஓவியங்கள், வழவழத்த தாளில் ப்ரிண்ட் செய்தல்,….. எல்லாவற்றுக்கும் மேலாகப் பிற பத்திரிகைகள் தராத சுவாரஸ்யத்தை நாம் தர முன் வர வேண்டும்…..வாசகர்கள் தங்கள் முகத்தை, எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக ஒரு பத்திரிகையின் மனோதர்மம் இருத்தல் வேண்டும்!

புதியன விரும்பு ..அன்று பாரதியார் சொன்னதை இன்றைய நாளில் Innovation என்பார்கள். ஒரு குறிக்கோளுக்காகப் பயணித்து, புதிய பாதையில் சிந்தித்து, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைப்பதுதான் மறுமலர்ச்சி!

‘ஆம்! நம்மால் முடியும்…மாறுதல் வேண்டும்’ என்ற மந்திரத்தைச் சொல்லிச் சொல்லியே பாரக் ஒபாமா அமெரிக்கத்தேர்தலில் வென்றது போல, நாமும் நிச்சயம் தலை நிமிர முடியும் மேடம்!’

தனது முன்னோர்களைக் கடைத்தேற்றக் கடும்தவம் செய்து பகீரதன் வரவழைத்த கங்கையின் மறு பிம்பமாகத் தெரிந்த வானதி, வாடாமலரைக் கட்டாயம் பரிணமிக்கச் செய்வாள் என்ற நம்பிக்கை தோன்ற கனகா எழுந்த போது, அவள் கண்களில் பனித் திரையிட்டிருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *