காலையில் வெகுநேரம் கழித்தே கண் விழித்தேன். தலையின் இரு பக்கமும் கிண்னென்று வலி தெறித்தது. வெளியில் புறாக்கள் ம்உம்… ம்உம்… என அனத்திக் கொண்டிருந்தது. புறாக்களின் அனத்தல் சத்தம் எனது செவிகளில் நாரசமாய் ஒலித்தது. அதற்கும் மேலும் படுத்திருக்க மனமில்லாதவனாய் எழுந்து இரு கைகளாலும் தலையை அழுத்திக் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன்.
“குட் மார்னிங்” தன் இதழ்களில் புன்னகையை ஏந்தி எனக்கு முன்னால் வந்து நின்றான் நண்பன் சுப்பிரமணி. அவன் குளித்து முடித்து உற்சாகமாக நின்று கொண்டிருந்தான்.
“என்ன , தலை வலிக்கிறதா டீ போடட்டுமா” எனக் கேட்டவாறு திரைச்சீலைகளை அகற்ற காலை சூரியனின் உக்கிரம் தெரிந்தது. நான் எழுந்து சாளரத்திலிருந்த கண்ணாடிக் கதவை அகற்றினேன். கண்ணாடி எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடக்கூடிய அளவிற்கு காலை சூரியனின் வெப்பத்தை உள்வாங்கி சூடேறியிருந்தது. என்னால் வானத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. கண்கள் கூசவும் மீண்டும் வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டேன். ஷோபாவின் முன்னால் இருந்த டீபாய் துடைத்து சுத்தமாக இருந்தது. நான் சுப்பிரமணியை ஏறிட்டுப் பார்த்தேன். அவன் அதே புன்னகையோடு “நான் எழுந்து ஒரு மணி நேரமாகிவிட்டது” என்றான். இவன் மட்டும் எப்படி எவ்வளவு குடித்தாலும் சரியான நேரத்திற்கு எழுந்து விடுகிறான் என்ற கேள்வி எழுந்தது. “நேற்று நாலு ரவுண்ட் குடித்தோம், அவனோ ஆறு ரவுண்ட் குடித்தான். ஆனால், ஒன்றுமே குடிக்காதவன் போல் அவன் முகம் அத்தனை தெளிவாக இருக்கிறது’.
“வீட்ல ஊருக்குப் போயிருக்காங்க இங்க வாரீயா’ என்று சுப்பிரமணி கேட்கவும், ‘இங்கேயும் அதேதான் நான் வாரேன்”என நேற்று மாலை கிளம்பி வந்துவிட்டேன்.
இருவருக்கும் பதினைந்து வருட நட்பு. எப்போதாவது இது போல் ஒன்றாக சேர்ந்து குடிப்பது வழக்கம். நேற்று நண்பன் அழைக்கவும் கிளம்பி வந்துவிட்டேன். இருவரும் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் சொல்லிக் கொள்ளும்படியான சம்பளத்துடன் வேலை. இரவெல்லாம் பேசிக் கொண்டே குடித்ததில் நாலு ரவுண்ட் போனதே எனக்குத் தெரியவில்லை. சினிமா, அரசியல், இலக்கியம் என கலந்திருந்தது பேச்சு. எனக்கு இலக்கியத்தில் அவ்வளவு விரிவான பரிச்சயமில்லை. ஆனால், சுப்பிரமணி அப்படியல்ல எதையாவது வாசித்துக் கொண்டே இருப்பான். தமிழில் மட்டுமல்ல ஆங்கில இலக்கியங்களிலும் நல்ல பரிச்சயமுண்டு. நண்பன் சொல்லும் ஆங்கில நாவலாசிரியர்களின் பெயர்கள் கூட எனக்கு நினைவில் நிற்பதில்லை. நண்பனின் பேச்சை என்னை மறந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். வாழ்வின் முடிச்சுகளை மேற்கோளிலில்லாமல் அவன் பேசியதேயில்லை. நண்பனின் பேச்சை கேட்பதற்காகவே அவனோடு சேர்ந்து மது அருந்துவது பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. தொலை பேசியில் பேசினால் கூட மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். நேரம் கடந்து போவதே தெரியாது.
நண்பன் தயாரித்த தேனீரை பருகிக் கொண்டிருக்கும்போது நண்பனின் அலைபேசி சிணுங்கியது. “ஹலோ, மிஸ்டர் பெர்னாண்டஸ் குட்மார்னிங்”, என்றவாறு சற்று விலகிப்போய் பேசிவிட்டு வந்தவன் மிகுதியான உற்சாகத்தில் இருந்தான். “யாரு” என கேட்டதற்கு பதில் சொல்லாமல் “எங்கூட வாரீயா, ஒரு அபூர்வமான மனிதரை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்”, “யாரு அது?”, ” மிஸ்டர் பெர்னாண்டஸ் எல்ஸ்டன் ஆண்டணி, அவர் ஒரு ஆங்கிலோ இண்டியன்; சுவராஸ்யமான மனிதர்” என்றான் சுப்பிரமணி. சரியெனத் தலையாட்டினேன் நான். ஒரு நிமிசம் என்றவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு போய் பேசிவிட்டு வந்தவன் “நீயும் உடன் வருவதாக சொன்னேன், மகிழ்ச்சியோடு அழைத்து வரச் சொன்னார்”. சீக்கிரம் கிளம்பு வருவதாக சொன்ன நேரத்திற்கு நாம் அங்கிருக்க வேண்டும் என்றான் சுப்பிரமணி. ஏன் கொஞ்சம் லேட்டா போனா என்ன ? என்று எனக்கே உரிய சோம்பேறி தனத்துடன் கேட்டேன். “இல்ல, அதை அவர் விரும்ப மாட்டார்” என்றவன் கையைப்பிடித்து எழுப்பி விட்டான். நான், நண்பனின் வீட்டிலேயே குளித்து தயாராக இருவரும் கிளம்பினோம். வழியில் காலை சிற்றுண்டியும் முடித்துக்கொண்டு மிஸ்டர் பெர்ணான்டஸ் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.
வழியில் அவருக்கு எத்தனை மணிக்கு அவர் வீட்டிலிருப்போம் என ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டான். ” அவரைப் பார்க்கப் போகிற உற்சாகமும், பதட்டமும் இருக்கே அது ஏன் ” எனக் கேட்டேன். அவரு ஒரு வித்யாசமானவர் அதனால் தான். இதுவரை அவரைப் பற்றி ஆபூர்வமானவர், சுவராஸ்யமானவர், வித்தியாசமானவர் என மூன்று விதமாக சொல்லிவிட்டான். நான்காவதாக எப்படி சொல்வான் என்ற யோசனை எழுந்தது எனக்கு. சிரிப்பு வரவும் எனக்குள் சிரித்துக் கொண்டதை அடையாளம் கண்டவன் போல் பேசத் துவங்கினான் சுப்பிரமணி. “ஐந்தாண்டுகளுக்கு முன் நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலைக்கு வந்தார். அப்போதிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. பதினைந்து மாதங்கள் வேலை பார்த்தார். அவர் அதிக நாட்கள் வேலை பார்த்தது எங்கள் நிறுவனத்தில் தான். அதற்குப் பிறகு இந்த நான்கு ஆண்டுகளில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு இனி வேலைக்குப் போவதில்லை என்ற முடிவோடு இப்போது வீட்டிலிருக்கிறார்”.
நான்கு வருடத்தில் ஆறு கம்பெனிக்கு மாறியவருக்கு யார் வேலை தருவார் என்ற சந்தேகம் வந்தது எனக்கு. வண்டி சாந்தாகுருஸ் விமானநிலையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. எங்கள் வண்டிக்கு மேலே விமானம் வானத்தை நோக்கிப் பறந்து வலப்பக்கமாக சென்று மறைந்தது. என் சந்தேகத்தையோ? அல்லது அவன் பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைத்தானோ என்னவோ சுப்ரமணி தொடர்ந்து பேசலானான். “அவருடைய முப்பது வருட சர்வீஸில் குறைந்தது இருபத்தைந்து நிறுவனங்களில் வேலை பார்த்திருப்பார். இப்போதுகூட மூன்று, நான்கு நிறுவனங்கள் அவரை வேலைக்கு அழைப்பதாக கூறினார்.” எப்போது வேலையை விட்டுச் செல்வார் என்று தெரியாத ஒருவரை எதற்காக இத்தனை நிறுவனங்கள் வேலைக்கு அழைக்க வேண்டும்” இப்போது எனது சந்தேகத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினேன்.
“அது தான் அவரது சிறப்பு. வேலைக்கு வந்த மூன்று மாதத்திலேயே நிறுவனத்தின் கட்டமைப்பை சீட்டுகட்டுபோல கலைத்துவிட்டு, புதிய கட்டமைப்பை உருவாக்கிவிடுவார். அந்த புதிய கட்டமைப்பு திறம்பட செயல்படும் வரை பணியில் தொடர்வார். அதற்குப் பிறகு அந்த நிறுவனத்திலிருந்து எந்த நிமிடமும் வெளியேறிவிடுவார். ஆனால், அவர் ஏற்படுத்திய கட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு சிதையாது. நிறுவனங்கள் தாங்கள் முன்பிருந்த நிலையை விட அதிக வருமானம் ஈட்டுவதோடு அந்த நிறுவனங்களின் மதிப்புக் குறியீடும் உயர்ந்து விடும்.” எனக்கு அதில் ஆச்சரியம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.
“சரி, அப்படிப்பட்ட ஒருவரை நிறுவனங்கள் ஏன் தக்க வைத்துக் கொள்வதில்லை”
“நிறுவனங்கள் ஒரு போதும் அவரை இழக்கத் துணியாது, அவர் தான் தன்னை ஒரே இடத்தில் பொருத்திக் கொள்வதில்லை” நான் பேசாமல் இருந்தேன். அவனே தொடர்ந்தான்.
“அது பற்றி எனக்கு சரியாக தெரியாது, அதை அவரிடம் எப்போதும் கேட்டதுமில்லை, அவராக சொன்னதுமில்லை, அவர் அதை விரும்பவும் மாட்டார்” என்றான்.
நண்பன் சொன்னதிலிருந்து எனக்கு அவரைப்பற்றிய எந்தவிதமான உயர்வான அபிப்ராயமும் தோன்றவில்லை. ஆனாலும் நண்பன் சாதரணமாக அப்படி சொல்பவனில்லை ஏதோ ஒரு விசை அவரிடம் இருக்கக் கூடும் என்று மட்டும் புரிந்தது. சுப்பிரமணி மீண்டும் தொடர்ந்தான் “ஆனால், எனக்கொரு யூகம் இருக்கிறது அது சரியாகவும் இருக்கலாம் அப்படி இல்லாமலும் இருக்கலாம்” பீடிகைப் போட்டான். நான் என்ன என்பது போல் அவனை சாதாரணமாக பார்த்தேன்.
“அவர் தன் மீது எந்த அத்துமீறலையும் விரும்பாதவராகவும், அத்தகைய அத்துமீறலை தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையாக நினைப்பவராக கூட இருக்கலாம்” என நினைக்கிறேன்.
“எதை வைத்து அப்படி சொல்கிறாய்”
“பொதுவாக நிறுவனங்களின் பேராசை தானே அதன் முதன்மையான முதலீடு. நாம் சகித்துக் கொள்கிறோம், அவர் வெளியேறி விடுகிறார்”
இப்போது அவரைப்பற்றிய ஒரு பிம்பம் எனக்குள் உருவாகத் தொடங்கியது. வண்டி ஒர்லி கடல் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. இந்தப் பாலம் திறந்து சில நாட்கள் இருக்கலாம். பல்லாயிரம் கோடிகளில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மீது ஒருவன் சிறுநீர் கழித்த புகைப்படம் ஒன்று தினசரிகளில் வெளிவந்தது. கடல் தான் தன் மீது அத்துமீறிக் கட்டப்பட்ட பாலத்தில் மனித உருக்கொண்டு வந்து ஒண்ணுக்கடித்தாக நினைத்துக் கொண்டேன். கடல் இப்போது மிஸ்டர் பெர்னாண்டஸ் உரு கொண்டு தெரிந்தது எனக்கு. வண்டி கடல் பாலத்தைத் தாண்டி இடது பக்கம் வளைந்து சிறிது தூரம் சென்று மீண்டும் வலது பக்கம் திரும்பி கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தது. சாலையின் ஒருபுறம் கடற்கரையும் மறுபுறம் மூன்று அடுக்குகள் மட்டுமே கொண்ட ஹரிடேஜ் போன்ற பழைமையான வீடுகளும் இருந்தன. அந்த வீடுகளுக்கு பின்புறம் சற்று தொலைவில் இருபது அடுக்குகளும், அதற்கும் அதிகமான அடுக்குகளும் கொண்ட அப்பார்ட்மெண்ட்கள் காணப்பட்டது. கடற்கரை சாலையில் ஆறு நிமிடங்கள் பயணத்திற்குப் பிறகு சாலையை ஒட்டிய ஒரு பங்களா முன்பு வண்டியை மெதுவாக செலுத்தினான். அந்த பங்களாவின் முன்பிருந்த கிரில் கேட்டை காவலாளி திறக்க வண்டி உள்ளே புகுந்து அமைதியானது.
நாங்கள் வண்டியிலிருந்து இறங்கவும் வீட்டின் கதவை திறந்து கொண்டு “வெல்கம் மை டியர் பிரண்ட்ஸ்” என்று நிலைக் கதவு உயரத்தில் நின்று வரவேற்ற அந்த மனிதரைப் பார்த்து வியப்பில் உறைந்து போனேன். இவ்வளவு வசீகரமான ஒரு ஆணை என் வாழ் நாளில் பார்த்ததேயில்லை. “ப்ளிஸ் கம்” அன்பு ததும்பும் அந்த குரல் மீண்டும் என்னை தன்னுணர்வு பெறச் செய்தது. நான் திரும்பி கடலைப் பார்த்தேன் அலைகள் அவரைப் பார்ப்பதற்காகவே வேகவேகமாக வந்து உயர்ந்தெழுந்து அவரைப் பார்த்துவிட்ட வெட்கத்தில் தனக்குள்ளேயே சுருண்டு மீண்டும் கடலுக்குள் செல்வது போல தெரிந்தது எனக்கு. நான் அவரைப் பார்த்துக் கொண்டே நடந்தேன். எனது இதழ்கள் புன்னகைக்கவும், இமைகள் இமைக்கவும் மறந்து விட்டன. அவர் வெள்ளையர்களைப் போல் வெளுத்த நிறத்திலில்லை தங்க விக்ரகம் போல, காலை நேர சூரியனைப் போல தகதகவென ஜொலிக்கும் நிறத்தில் இருந்தார். ஆயிரமாயிரம் மலர்களின் மலர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அகன்ற நெற்றி, நீண்ட புருவம், பளபளக்கும் கண்கள், சற்றே நீளமான காதுகள், நேரான நாசி, செக்கச் சிவந்த இதழ்கள். விரிந்த மார்பு, குன்றென உயர்ந்த தோள்கள் பார்த்தாலே பரவசமூட்டும் புன்னகை மது அருந்தாமலேயே முழு மயக்கத்தில் வீழ்ந்தேன் நான். அவர் கை குலுக்க தனது கைகளை நீட்டுகிறார் என் கைகள் தானாக நீண்டு அவரது கைகளை பற்றிக் கொண்டன. இவர் செந்தில் நாதன். என்னுடைய உண்மையான நண்பர், நண்பன் அறிமுகப் படுத்தவும்; உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றவாறு எனது கையை தனது இரு கைகளாலும் பற்றி குலுக்கினார். அந்த வார்த்தைகள் உண்மையின் வெளிச்சமாக அந்த அறையெங்கும் நிரம்பியது.
அவ்வளவு பெரிய பங்களாவில் அவர் தனியாக இருந்தார். நான் சுற்று முற்றும் பார்த்தேன். எனது பார்வையின் பொருள் புரிந்தவராக “எனது மகன் யு.எஸ்ஸில் இருக்கிறான். மனைவி அவனோடு சிலகாலம் இருந்துவிட்டு வருவதற்காக சென்றுள்ளார். என்னையும் அழைத்தான் எனக்கு மேலை நாடுகளை அவ்வளவாக பிடிப்பதில்லை. இந்த மண்ணை விட்டு வெளியே செல்ல மனம் விரும்புவதேயில்லை. மட்டுமல்லாது இருபது மணி நேரம் விமானத்தில் பறப்பதை இப்போதெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. எவ்வளவு பறக்க வேண்டுமோ அதற்கு பல மடங்கு அதிகமாக பறந்தாயிற்று. இப்போதெல்லாம் பயணம் என்றாலே அயற்சிதான் உண்டாகிறது”. அவரது ஆங்கிலம் புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தாலும் அதில் வெளிப்பட்ட உணர்வுகளை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவரே எழுந்து சென்று கண்ணாடி தம்ளரும் ஒரு போத்தல் குளிர்ந்த நீரும், ஒரு போத்தல் சாதாரண நீரும் கொண்டு வந்து வைத்து விட்டு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். பிறகு சுப்பிரமணியைப் பார்த்து “உங்கள் நண்பரைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?”, “ஓ, எஸ் தாராளமாக நண்பர் செந்தில் நாதன் தனியார் வங்கியில் சீனியர் மானேஜர். இரண்டு குழந்தைகள். எனது உற்ற நண்பர்.” அவர் இடைமறித்து “மகிழ்ச்சி” என்றவாறு ஒற்றை வார்த்தையில் என்னை அங்கீகரித்துக் கொண்டவர் போல மீண்டும் புன்னகைத்தார்.
அவர்கள் இருவரும் சாதாரணமாக பேசத்துவங்கி வேறொரு எல்லையை நோக்கி பயணிக்கத் துவங்கினர். நான் நாங்கள் அமர்ந்திருந்த அறையில் எனது பார்வையைப் படர விட்டேன். அளவான மேசை . பழைய காலத்து நாற்காலி முழுதும் மரத்தாலானது. நாற்காலியில் சிறிய தலையணை அறையின் வடக்கு பக்கத்தில் கிழக்கு சுவரையொட்டி இருந்தது. மேசையின் மீது வளைந்த விளக்கு. அதன் முனையில் ஒளியை சிதறவிடாது மலர்ந்த மலர் போன்ற வடிவில் விரிந்த இதழ்கள். நாங்கள் நடு அறையில் அமர்ந்திருந்தோம். மூன்று பக்க சுவர்களிலும் சாளரங்கள் இருக்கும் இடம்விட்டு புத்தக அலமாரிகள். அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்கள். நான் எழுந்து புத்தகங்களை பார்வையிட்டேன். வாய்க்குள் நுழையாத நீள, நீளமான பெயர்களை கொண்டவர்களால் எழுதப்பட்ட நூல்கள். கடல் காற்று அறை முழுவதும் தழுவிய வண்ணம் சுழன்று கொண்டிருந்தது.
நான் மீண்டும் வந்து அவர்களுடன் அமரும்போது எதோ ஒரு ஆங்கிலேயேரின் பெயரைக் கூறி இணையத்தில் வந்த அவரது கட்டுரையை வாசித்தாயா? என சுப்பிரமணியைப் பார்த்துக் கேட்டார். அவன் ‘இல்லை’ என தலையசைத்தான். அற்புதமான கட்டுரை அவசியம் வாசிக்க வேண்டும். நான் அக்கட்டுரைக்கான இணைய சுட்டியை அனுப்புகிறேன் என்றவர், சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு நிச்சலனத்தில் ஆழ்ந்தார். அறை சிறிது நேரம் நிசப்தத்தில் ஆழ்ந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு கண்ணைத் திறந்தவர் அறையில் நிலவிய மெளனத்தை உடைக்கும் விதமாக அவரே பேசத் துவங்கினார்.
‘அது ஒரு ஆதிவாசி இனக் குழுவைப் பற்றிய கட்டுரை. மீண்டும் அந்த கட்டுரை ஆசிரியர் பெயரைக் கூறி அவர் அவர்களோடு சிறிது காலம் இருந்த அனுபவத்தையும்; தான் அவர்களை சந்திக்க எடுத்த முயற்சிகளை குறித்தும் எழுதியுள்ளார். அந்த மக்களுக்கு எண்கள் மீது அதீத வெறுப்பு இருப்பதாக தான் படித்த கட்டுரை அவர்களை சந்திக்கத் தூண்டியதாக கூறியுள்ளார் கட்டுரையாளர்” என்றார் மிஸ்டர் பெர்னாண்டஸ். அதுவரை அவர்களுடைய உரையாடலில் கவனம் செலுத்தாமல் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்த என்னை “அவர்களுக்கு எண்கள் மீது அதீத வெறுப்பு ” என்ற சொற்றொடர் என்னை சுண்டியிழுத்து நிறுத்தியது. நான் அவரது வார்த்தைகளின் குவிமையத்தில் சென்று நின்றேன்.
மிஸ்டர் பெர்னாண்டஸ் அந்தக் கட்டுரையாளராவே உருமாறிக் கொண்டிருந்தார் “கட்டுரையாளர் ஆதிவாசிகளை சந்திக்கும் முயற்சியில் இரண்டு முறை தோல்வியுற்று திரும்பியுள்ளார். நண்பர்கள் அது ஆபத்தான பயணம், சென்று மீண்டவர் சொற்பமே என தடுத்தப்பிறகும் அவர்களை சந்திக்கும் ஆவல் அதிகரித்து கொண்டேயிருந்தது அவருக்கு”. இப்போது பெர்னாண்டஸ் முழுமையாக அந்த கட்டுரையாளராகவே மாறியிருப்பது அவரது கண்களில் தெரிந்தது. “நான் சில நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் ரொட்டித் துண்டுகளை சேகரித்துக் கொண்டு கிளம்பினேன். நீண்ட பயணம் இதற்கு மேல் வண்டி பயன்படாதென்ற நிலையில் வண்டியை திருப்பி அனுப்பி விட்டு மலைக்காட்டுக்குள் நடந்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று அமர்ந்து கொண்டேன். நாட்கள் கடந்து கொண்டிருந்தது. ரொட்டித்துண்டுகளும் தீர்ந்து கொண்டிருந்தது. இந்த முறையும் தோல்விதான் என்ற எண்ணம் வலுப்பெறத் துவங்கியபோது அதிர்ஷ்ட தேவதை கண்திறந்தாள். அந்த ஆதிவாசி குழுவின் ஒருவனின் கண்ணில் பட்டேன் நான். அவர்களாக அழைத்துச் சென்றால் தான் உண்டு. இல்லையெனில் அந்த இனக்குழுவை காண்பதென்பது இயலாத காரியமாகும். அந்த கரிய உருவம் என்னை நோக்கி வந்தது. என்ன என்று கேட்டான். நான் அவரது இனக்குழுவோடு சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். அதை என் தலைவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றான். என்னை உன் தலைவனிடம் அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டேன். அவன் கண்களில் சந்தேகம் தெரிந்தது. அவன் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு தானாக சமாதானம் அடைந்தவனாக என்னை அழைத்துச் சென்றான். வெளிச்சமற்ற இருளடைந்த காட்டுக்குள் அவன் என்னை அழைத்துச் சென்றான்.
அந்தப் பாதைகளை எவ்வளவு முயன்றும் என்னால் நினைவில் வைக்க முடியவில்லை. நான் அவன் காலடித்தடம் பற்றியே நடந்து சென்றேன். சில அடி தூரம் அவனை விட்டு பின்தங்கினாலும் நான் தனித்துவிடப்படும் அபாயம் இருந்தது. பிறகு திரும்பவதென்பதே நடக்காத காரியமாகிவிடும் என்பதால் அவன் அடியொட்டியே பயணித்தேன். சில நேரம் அவனை நிற்கச் சொல்லி என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஒரு வழியாக அவன் தலைவன் முன் போய் நின்றோம். அவன் தலைவன் எதற்காக எங்களோடு தங்க வேண்டும் என்று கேட்டான். நான் தங்களுடைய குழுவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவே வந்துள்ளேன் என்ற உண்மையை சொன்னேன். என்னுடைய சொற்கள் தலைவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது போலும் நீண்ட யோசனைக்குப் பிறகு நான் அவர்களோடு தங்கிக் கொள்ள சம்மதித்தான்”. இந்த இடத்தில் நிறுத்திய மிஸ்டர் பெர்னாண்டஸ் நான் சொல்ல வந்தது இதுவல்ல என்றாலும் இந்த சிறிய முன்னுரை அவசியம் என்றார்.
நான் முழுமையாக அவரது பேச்சில் இலயித்திருந்தேன். சுப்பிரமணி அந்த விசயத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தவன் போல தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்திருந்தான். அவர் ஒரு தம்ளரில் குளிர்ந்த நீரை சரித்து குடித்தார். எனக்கு தாகம் தீர்ந்தது போலிருந்தது. அவர் தொடர்ந்தார்.
“சில நாட்கள் கழித்து பிறகு நான் என் நோக்கத்தை தலைவனிடம் தெரியப்படுத்த எத்தனித்து எண்கள் என்றேன் அவ்வளவுதான் அவன் உக்கிரமானான் கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடுவது போல உருண்டு, திரண்டு வெளியே எட்டிப் பார்த்தது. அவன் கண்களில் செவ்வரிகள் வேக, வேகமாக ஓட கண்கள் ரத்தத்தில் மிதந்தது. நான் நடு, நடுங்கிப் போனேன். “எண்களைப் பற்றி எங்களிடம் பேசாதே, எண்கள் தான் மனித குலத்திற்கு ஆகப்பெரும் கேடு” என்றான். நான் பயத்தில் ஒடுங்கிப் போய் நின்றேன். என் கால்சராய் நனைந்து போகுமளவிற்கு அஞ்சி நடுங்கினேன். எனது நடுக்கத்தைக் கண்டு அவன் அமைதியாகத் தொடங்கினான். நான் எதுவும் பேசக் கூடிய மனநிலையில் இல்லை. வெகு நேரம் கழித்து அவனே பேசத்துவங்கினான். இப்போது மிஸ்டர் பெர்னாண்டஸ் அந்த ஆதிவாசி குழுவின் தலைவராக உருமாறினார். “எண்கள் தான் அத்தனை அழிவிற்கும் காரணம். எண்கள் இல்லையென்றால் இந்த பூவுலகில் யுத்தங்களே இருந்திருக்காது. சாம்ராஜ்யங்கள் எழுந்ததும், வீழ்ந்ததும் எண்களின் அடிப்படையில் தான். அதனால் யுத்தங்களில் இழந்தது மக்கள் தானே. சாம்ராஜ்யங்களுக்கு மக்களின் உயிர் பெரிதல்ல; தனது சாம்ராஜ்யம் எவ்வளவு தூரம் பரந்து விரிந்தது, எத்தனை ஆண்டுகாலம் நிலைத்தது; என்பது தானே முக்கியம். அவர்களை வரலாறு பேச வேண்டும். எண்கள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த சாம்ராஜ்ய எல்லை ஏது? வரலாறு ஏது. எண்கள் இல்லாதிருந்திந்தால் இந்த வரலாற்று வெறி வந்திருக்குமா?, வரலாற்று வெறிக்கு இந்த எண்களே மூலவித்து . இந்த எண்களின் அகோரப்பசிக்கு எங்களைச் போன்ற எத்தனை ஆயிரம் இனக்குழு அழிந்து போனதென்று தெரியுமா உனக்கு? எங்களது அழிவும் எப்போதும் நிகழலாம் என்று பயந்து நாங்கள் ஓடிக் கொண்டிருப்பது தெரியுமா? என்று வார்த்தைகளால் சாட்டையை சுழற்றினான்”. மீண்டும் அவர் கட்டுரையாளராக உருமாறினார்.
“என் உடலெங்கும், அவன் வீசிய சொற்களின் விளாசலில் பட்டை,பட்டையாக இரத்தம் கசிந்தது. அந்த இரத்தத்தில் எண்கள் சீழ்பிடித்து வடிந்தது. என்னை நானே அருவருப்பாக உணர்ந்த தருணம் அது. அதற்கும் மேல் என்னால் அங்கு, அந்தக் காட்டில் இருக்க முடியவில்லை. நான் தூக்கி எறியப் பட்ட பிண்டமாக காட்டை விட்டு வெளியே வந்து வீழ்ந்தேன்” மிஸ்டர் பெர்னாண்டஸின் குரல் தழுதழுத்தது. உதடுகள் துடித்துக் கொண்டேயிருந்தது. அவர் கண்களிலிருந்து சில துளிகள் கண்ணீர் கன்னங்களில் வழிந்து தோளைத்தொட்டு நின்றது. வெகு நேரம் அவர் அந்தக் காட்டின் பேரமைதியை தன்னுள்ளே போர்த்திக் கொண்டார். வெகு நேரம் கழித்து போத்தலை எடுத்து குளிர்ந்த நீரை தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார்.
அதற்குமேல் யாரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எவ்வளவு நேரம் அப்படி நாங்கள் அமர்ந்திருந்தோம் என்று தெரியவில்லை. சுப்ரமணியும், மிஸ்டர் பெர்னாண்டஸும் ஒரே நேரத்தில் எழுந்து கை கொடுத்துக் கொண்டனர். “ தட் ஈஸ் மை பிரண்ட்” அவர் சுப்ரமணியை அப்படியே இறுக அணைத்துக் கொண்டார். நாங்கள் மூவரும் வாசலுக்கு வந்தோம். மீண்டும் கைகளை கொடுத்து விடைபெறும் பொழுது “என் உடம்பிலும் அந்த ஆதி மூதாதையரின் ஜீன்கள் தான் இருக்கிறது போலும்” என்று அவராக சொல்லிக்கொண்டார். அந்த மலைக்காட்டுக்குள் அவரை தனியாக விட்டு,விட்டு நானும், சுப்ரமணியும் திரும்பி வந்து கொண்டிருந்தோம். காரில் கனத்த மெளனம் நிலவியது. “என் உடம்பிலும் அந்த ஆதி மூதாதையரின் ஜீன்கள் தான் இருக்கிறது போலும்” அந்த சொற்களே என் உடலெங்கும் எதிரொலித்தது. அந்த சொற்களின் ஊடே அந்த மனிதர் நண்பன் சொன்ன மூன்று சொற்களையும் தாண்டி வேறொன்றாக தெரிந்தார். அந்தேரியில் வண்டியை நிறுத்தச் சொல்லி நான் இறங்கிக் கொண்டேன். என் உடம்பிலும் ஆதி மூதாதையரின் ஜீன்கள் விழிக்கத் தொடங்கியிருந்தது.