ஆதி சிந்தனை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,865 
 
 

(அக்கால சிந்தனைகள் தற்கால வாசகர்களின் வசதிக்காக இக்கால எழுத்துக்களில் விளக்கப் பட்டிருக்கின்றன..!)

அந்த பெரிய மரத்தின் தடித்த கிளையின் மேல் படுத்திருந்தேன்..! சிலு சிலு வென காற்றில் இலைகளின் அசைவுகள்… வயிறு நிரம்பி இருந்ததால் சுகமான உணர்வு..! இப்போதுதான் ஒரு பெரிய மானை நானும் என் கூட்டத்தினரும் கட்டிப் பிரண்டு சண்டை போட்டு உண்டு முடித்தோம்..!

தூரத்தில் எனது பெட்டைகள் .. குட்டிகளுடன் காரசாரமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை பார்த்தேன் .! அதோ அந்த பாறைக்கு நடுவே தெரிகிறே அதுதான் எங்களின் புதிய குகை..! நானும் எனது நாலஞ்சு பெட்டைகளும் குட்டிகளுமாய்..குடியேறி நாலைந்து நாட்கள் தான் ஆகின்றது…!

அதுவரை என்னைப் பெற்றவர்களுடனும்.. கூட பிறந்தவர்களுடனும் தான் சேர்ந்து இருந்தோம். அருகினில் இருந்த பெரிய மரம்தான் எங்க வீடு..! ஆனால் .. அங்க எனக்குன்னு பெட்டைகள் தனியாக கிடையாது.. எனக்கு விருப்பமான பெட்டைகளுடன் எனது அப்பாவும் .. அண்ணன் தம்பிகளும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும் போது இப்போதெல்லாம் எனக்கு பிடிப்பதில்லை…! எனக்கு என்று பெட்டைகளும் குட்டிகளும் வேண்டும் எனறு அடிக்கடி தோன்ற ஆரம்பித்து விட்டது..! அம்மா கூட” ஏன்டா தனியா போற..?” ன்னு கேட்டாங்க… சொல்லத் தெரியல..ஆனா எனக்குன்னு தனியா சிலது வேணும்னு தோன்ற ஆரம்பிச்சிடுச்சு..!

அப்படியே மரத்துக் காத்து முகத்துல இதமா பட்டுக் கொண்டிருப்பது தூக்கத்தைத்தான் வரவழைக்குது… ராத்திரி சரியா தூங்கல… ஓநாயும் நரியும்.. சிறுத்தைகளும் அப்பப்ப உறுமுற சப்தத்துல நாம எங்க தூங்க முடியும்…? என்னோட கூட்டத்தை பாதுகாப்பா பாத்துக்கணுமே..! இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும் ….கூடிய சீக்கிரம்..!

என்னோட பெட்டைல ஒருந்தி என்ன பாத்து வந்தா..!

குகைய குகைய ..கையால சைகையில காட்டி காட்டி… “ஊ..ஊ..உஉ..ஊ..” ன்னு.. “வா.. இங்க என்ன பண்ர..? வீட்டுக்கு வா.”ன்னு கூப்டா..!

“வர்ரேன் போ… கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வர்ரேன் “னு சொன்னேன்.. அவ ஏன் கூப்பிடரான்னு தெரியும்.. அவ கூட சந்தோஷமா இருந்து கொஞ்ச நாளாச்சாம்… நான் எங்க போறேன்..? இங்க தான இருக்கேன்..? இவள வேற நான் அந்த நெட்டப்பயல் கூட அந்த மரத்துகிட்ட அப்ப அப்ப பாத்துருக்கேன்…! சொல்லி வைக்கணும் அவகிட்ட…!!! இதெல்லாம் வேணாம்னு..!

மரத்துல வேற எறும்புத் தொந்திரவு ரொம்ப அதிகமா இருக்கு…! தின்ன மானோட வாசனைக்கு நெறைய வநதிருதுக..! மேல ஏறி அங்க இங்கன்னு பூரா கடிக்க ஆரம்பிச்சிட்டா அதுகள நசுக்கி போடரதுலயே நேரம் போய்டுது.. இதுல எங்க தூங்கரது..!?

மேல ஒரு கிளை ஒடியர சத்தம்..! நாலஞ்சு இலைகள் வேற உதிர்ந்து மேல விழுந்துச்சி.. டக்குனு உஷாரா எழுந்து பார்த்தேன்.. யாரும் தெரியல..! நல்லா மூச்ச இழுத்து விட்டு காத்த உறிஞ்சி பார்த்தேன்..! அட பூனைதான் இது..! போனா போகட்டும்.. இப்பதான் எனக்கு பசிக்கலையே..!

சடார்னு மேல வந்து விழுந்தான் என் குட்டிகளில் ஒருத்தன்..! “ஆஆ..ஆ..ஊ..உ..ஊ.. ஊ.” னு ஒரே சந்தோஷம்….அதான் வயிறு ரொம்பியாச்சே..! என் மேல வந்து படுத்துகிட்டு காத புடிச்சி இழுக்கரதும்.. முட்டரதுமா என்ன விளையாடக் கூப்பிடரான்…! நான் தனியா யோசிக்கவே விட மாட்டேங்கரானுக இந்த குட்டிங்க…! குறிப்பா இந்தக் குட்டி எங்கள மாதிரி முன்னங்கைய ஊன்றி நடக்க மாட்டேங்கரான்.. அதிகமா ரெண்டு காலாலதான் நடக்கரான்…. ஓடரான்…!! பாக்க கொஞ்சம் வித்யாசமா.. அசிங்கமா இருக்கு.. அவனுக்கு நல்லா முதுக வளைச்சு குனிஞ்சு கம்பீரமா நடக்க கத்துத் தரணும்..!

அது என்னமோ தெரியல ..! எங்க கூட்டத்திலயே நான்தான் நிறைய நேரம் தனியா இருக்கேன்.நெறைய யோசிக்கறேன்….! எப்படி எனக்கு இது மாதிரி யோசனைலாம் வருதுன்னே புரியல… எனக்கு பழக்கம் இல்லாத விஷயம்லாம் யோசிக்க தோணுது..! ஏதாவது செய்யணும்.. என் கூட்டத்த பாதுகாப்பா வெச்சுக்கணும்..! ஒரு சமயம் மத்தவங்கள விட சந்தோஷமா நெறைய பெட்டைகளும் குட்டிகளும் எனக்கு வேணும்னு தோணும்..! வேற சமயம்.. எதுக்கு நெறைய பெட்டைகள்..? எல்லாரையும் சந்தோஷேப் படுத்தரது தேவையா? இதில் என்ன பெருமை..?! எனக்குன்னு ஒரே ஒரு பெட்டை போதும் னு தோணும்..! ஆனா எங்கப்பா அப்டியில்ல.. பாக்கிற எல்லா பெட்டையும் தனக்கேன்னு நெனைப்பார்..! அதான் எனக்கு அவரை வர வர பிடிக்கரதில்ல..!

அப்படியே கண்ணை அசைத்தது தூக்கம்..மெல்லமா கண்ணை மூடினேன்..! இப்பெல்லாம் அடிக்கடி கனவுலாம் வருது.. காட்சிகள் மாதிரி.. எனக்கு பழக்கம் இல்லாத விஷயம்லாம் அதில வருது…!

இப்ப கூட கனவு வர ஆரம்பிச்சிருச்சு.. இருங்க என்ன வருதுன்னு பார்ப்போம்..!

அட… எங்கள மாதிரியே நெறைய பேரு இருக்காங்களே..! எல்லாரும் ஏதோ ஒன்னை உடம்பு பூரா சுத்தியிருக்காங்க..வித விதமா . உடம்பே வெளிய தெரியல..சிலர் போட்ருக்கரது மிருகங்களோட தோல் போலிருக்கே..? பரவால்லயே.?! கொசு கடிக்காம ..எறும்பு கடிக்காம இருக்கர்துக்காகவோ.? நல்லா இருக்கே இது…?!

எல்லாரும் என்ன பண்ராங்க… ? நடந்து போறவங்க நிறைய பேர்னா.. நிறைய பேரு குதிரை மேல.. மாடுங்க மேல ஏறி போறாங்களே.? பரவால்லயே.. நாம கூட இது மாதிரி போலாமே.? ஆனா குதிரைங்க மாடுங்கல்லாம் நாம சொல்லரத கேட்குமா.? எப்படி கேக்க வைக்கிறது.? அடிச்சு உதைச்சா நண்பர்களா இருப்பாங்களா நம்ம கூட..? ம்ம்.. யோசிக்கணும்..!

இவங்கல்லாம் உடம்புல சுத்தியிருக்கிற மாதிரி நம்மளால செய்யமுடியுமா.? எப்படி செய்யரது.? ஆனா இப்பத்திக்கு.. இந்த மரத்து எலையெல்லாம் எடுத்து மேல சுத்திக்கலாம்..! முக்கியமா இடுப்ப சுத்தி கட்டிக்கணும்..! அடிபடாம பாத்துக்கலாம்…!இப்பத்திக்கு அது போதும்..!

இன்னும் கனவு தொடர்ந்தது…!

அட இவங்க நம்மள மாதிரி வெறும் விலங்குகளை மட்டும் கொன்னு சாப்டலயே…? மரத்தில இருந்து காய் பழங்களையும் சாப்டராங்க, தனியா செடி வளர்த்து சாப்பிட ஏதோ தயாரிக்கராங்களே….? இவங்க என்ன காக்கா குருவியா? இல்ல அணில் , எலி மாதிரியா?? புதுசா இருக்கே இதெல்லாம்…? இதெல்லாம் கூட சாப்பிடலாமோ.?

அப்போதுதான் கவனித்தேன்..! இவர்கள் கிட்டத் தட்ட எங்களைப் போல இருந்தாலும் உடம்பு முகத்திலயெல்லாம் இவ்வளவு முடியில்ல..உடம்பு கூட இவ்ளோ முரட்டுத்தனமா இல்ல.. முகம் மண்டை யெல்லாம் நல்லா கவர்ச்சியா அழகா இருக்கே.?! ஒருவேள இதெல்லாம் சாப்பிடரதாலத்தான் இவங்க இப்படி அடையாளம் மாறி இருக்காங்களோ..?!

அப்பதான் கவனிச்சேன்… அதுல ஒருத்தன் இன்னொருத்தன பார்த்து ஏதோ கத்தினான்….கத்தினான் என்பது கூட பொருத்தமான வார்த்தையில்லை.. ஏன்னா அது எங்களைப் போல கன்னா பின்னான்னு கத்துவது போல் இல்லை.. இவன் கத்தியது .. அவனுக்கு புரிந்து அவனும் பதிலுக்கு கை காலை ஆட்டி கத்தினான்..! ஓஓஓ!! ரெண்டு பேரும்.. சத்தத்தின் மூலமா ஏதோ சொல்லிக்கிறாங்க.. இதை இவங்க ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் சத்தங்கள் போல இருக்கு… நாங்ககூட இதை மாதிரி முயற்சிக்கலாமேன்னு முதல் முதலா தோணிச்சு..!

இன்னும் உற்று கவனித்தேன்…!

அட என்ன இது…? இதில் ஒருவன் இரு கால்களால் நடந்து வருகிறான்.. கூடவே கையில் ஒரு கயிறு.. அதில் ஒரு குரங்கு கட்டப் பட்டிருக்கிறதே…! இவன் மறுகையில் இருக்கும் ஒரு குச்சியால் அந்தக் குரங்கை ஏதோ சொல்லி அடிக்க.. அந்தக் குரங்கு கையை காலை ஆட்டுகிறதே..?இவன் சொன்னபடி நடக்கிறதே..?! என்ன ஆச்சர்யம்..?!

இங்கு கூட குரங்குகள் தொந்திரவு ரொம்ப அதிகம்.நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாய் வந்து எங்களை தொந்திரவு செய்யும்…! அம்மா சொல்வாள்.. இவர்கள் எலலாம் நமது முன்னோர்கள் என்று.. ! இவர்களில் இருந்து பிறந்தவர்களே நாம் என்று சொல்வாள் . என் கூட என் அப்பாவிற்கு பிறந்த குட்டிகளில் சிலருக்கு குரங்கு முக ஜாடையே அதிகம்..எங்களை மாதிரி இருக்க மாட்டார்கள் அவர்கள்..!

அப்படியென்றால் நான் கனவில் காணும் இனத்திற்கு நாங்கள்தான் முன்னோர்களா? வரும் காலத்தையா நான் கனவில் காண்கிறேன்..!அப்படியென்றால் குரங்கு குதிரை.. ஆடு..மாடுகள் போல மற்ற மிருகங்களை நாங்கள் கட்டுப்படுத்தி வாழ்வோமா.? நாங்கள் சொன்னால் அவை கேட்குமா.?

நினைக்கவே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது…. “ஆஆஆஆஆ..!! “என்று பலமாய் கத்தினேன் ..! தூரத்தில் இருந்த என் குட்டிகளும்..பெட்டைகளும் திடீரென பயந்து போய் விட்டார்கள்..! அவர்களுககு என் சந்தோஷம் புரிய வாய்ப்பில்லை…!

சரி..நாம கனவைத் தொடர்வோம்..! மீண்டும் தூக்கம்..!

அட..விட்ட இடத்தில் இருந்து கனவு தொடர்கிறதே..? அது எப்படி.? அப்படியென்றால் இது யாராலோ எனக்கு தரப்படும் செய்தியா..? யார் தருகிறார்கள்.? ஏன்.? எதற்காக எனக்குத் தருகிறார்கள்.? ஒன்றும் புரியவில்லை..!

கனவில் ஒரு சிலர் கூட்டமாய் உட்கார்ந்திருக்கிறார்கள்.! நடுவே..ஒரு சில மரக் குச்சிகள்..மெலிது மெலிதாய்.!

குச்சிகளுக்கு மேலே ஏதோ வைத்திருக்கிறார்களே..! என்னது அது.. ஏதோ சிறிய விலங்கின் உடல் மாதிரி இருக்கிறதே .?!

அவர்கள் அனைவரும் அதே போன்ற சத்தங்களுடன் ஒருவருக்கு ஒருவர் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்..!

அதில் ஒருவன் கையில் ரெண்டு சிறு கற்கள் வைத்திருந்தான்… இங்கு கூட அது போன்ற கற்கள் ஏராளமாய் இருக்கின்றன..தரை முழுக்க.. குகை முழுக்க.. மலை முழுக்க…!

அவன் அந்த கற்களை ஒன்றுக் கொன்று தட்டினான்.. டக்..டக்..டக்..!! என்று சின்ன சின்ன சப்தத்தோடு…!!

என்ன ஆச்சர்யம்..?!! திடீரென்று அந்த கற்களுக்கு நடுவே ஒரு வெளிச்சம் வந்தது.. அந்த வெளிச்சம் .. அந்த வெளிச்சம்.. அட மழை பெய்யும்போது நிறைய சத்தத்தோடு வானத்தில் தோன்றுமே அது போன்ற ஒரு வெளிச்சமாய் இருந்தது…!

ஆச்சர்யமாய் இருந்தது..! தொடர்ந்து கவனித்தேன்…!

தொடர்ந்து அந்த கற்களை குச்சிகளுக்கு அருகே வைத்து தட்டி வெளிச்சத்தை உண்டாக்கியவன் அந்த குச்சகளில் அதை .. அதை உண்டாக்கினான்.. அது என்றால்.?! அதுதான் அது…வானத்தில் இருந்து பளீர் பளீரென வெளிச்சம் அடித்து மரங்களின் மீது பட்டால் இதே தான் மரங்களிலும் தோன்றும்…ரத்தச் சிவப்பாய்..பூ போன்று இதழ்களுடன்…காற்றில் ஆடிக்கொண்டு…. திடீர் திடீரென்று வானத்தில் இருந்து இதுபோல வேகமாய் வந்து எங்கள் காட்டில் வந்து விழும்.. அப்போது மரங்களில் இதுதான் தோன்றும்.. அதையே இவனும் செய்கிறானே.? என்ன ஆச்சர்யம்..?!

இது ரொம்ப ஆபத்தானதாயிற்றே..?! இது பட்டால் மரமெல்லாம் கருகி காணாமல் போய்விடுமே.. இது கூட நிற்காமல் அடுத்தடுத்து பக்கத்தில் இருக்கும் மரம் , செடி , ஏன் ஒரு புல்லைக் கூட விடாமல் பாய்ந்து பாய்ந்து சாப்பிடுமே..! கூடவே காற்றடித்தால் படுவேகமாக பறக்குமே இந்த பூ..? ஒவ்வொரு வருடமும் எங்கள் காட்டை அழிக்குமே இது..? ஆனால் வேகமாக வானத்தில் இருந்து மழை பெய்தால் இதை சாகடித்து விடும்..! பூ காணாமல் போய்விடும் அப்போதுதான் நாங்களெல்லாம் குகையை விட்டே வெளியே வருவோம்…!

இதை வைத்து என்ன செய்கிறான் இவன்..? குச்சிகளை அதிகமாய் வைத்தும் எடுத்தும் அந்த பூ வை அதிகப் படு்த்துகிறான் அவன்.. அப்படியென்றால் இவர்களுக்கு இதை உருவாக்கவும்.. கட்டுப்படுத்தவும் தெரிகிறது..! அதை வைத்து என்ன செய்கிறார்கள் ! ஓஓஓ! அப்ப அப்ப அந்த விலங்கின் உடலை தொட்டு தொட்டு பார்க்கிறார்களே..?! அதை இந்த வெளிச்சத்தில் வைத்தால் மரத்தைப் போலவே காணாமல் போய் விடுமே..?!

சிறிது நேரம் காத்திருந்தேன் ..! அவர்களும்..சிறிது நேரத்திற்குப் பின்.. அந்த விலங்கின் உடலை குச்சிகள் மேலிருந்து எடுத்தார்கள்.. ஆளுக்கு கொஞ்சமாய் பிய்த்து வாயில் போட்டு சாப்பிட்டார்கள் .. அட இது என்ன முறை நாங்களெல்லாம் அப்படியே கடித்ததுத்தானே தின்னுவோம்.. ? இது ஏதோ புதிய முறையாக இருக்கிறதே.?

எங்களாலும் இது போல அதை உண்டாக்க முடியுமா..? யோசித்தேன் ! அப்ப முடியும்னா எங்களாலும் விலங்குகளை இதுபோல சாப்பிட முடியுமா.? நல்லா இருக்குமா…?!முயற்சி செய்யணும்னு ஆசையாக இருந்தது..!

அவர்களை மீண்டும் கவனித்தேன்…அட இதென்ன.? ஒவ்வொருவரும் பக்கத்தில் கூர்மையாக ஏதோ கல்லை வைத்திருக்கிறார்கள்.. கை அருகில்…. ! அந்தக் கல் கூட அவர்களால் கூர்மையாக தேய்க்கப் பட்டிருக்கிறது !

ஒருவன் பக்கத்தில் இருந்து ஒரு மரக்கட்டையை எடுத்தான் ! தான் வைத்திருந்த கூர்மையான கல்லால் அதை அடிக்க ஆரம்பித்தான்..அதை அவன் அடிக்க அடிக்க அது உடைய ஆரம்பித்தது.. ஓஓஓ.! அப்படி என்றால் இந்தக் கற்களை தனக்கு வேண்டியவாறு தேய்த்து கூர்மையாக்கி.. நினைத்ததை அடித்து உடைக்க இவர்கள் உபயோகிக்கிறார்கள்…பரவால்லயே.? இது நன்றாக இருக்கிறதே..!?

“போதும் இந்தக் கனவு.. இத்தோடு இப்போதைக்கு நிறுத்துவோம்.!” என்று நினைக்கும் போதே அவர்களுக்குள் அதிக சப்தம் கேட்டது.. ஆளாளுக்கு கை காலை வேகமாக ஆட்டி அதிக சப்தமாக ஏதோ சொல்லிக் கொண்டனர்..!

அப்போது ஒருத்தன் தனது கையில் இருந்த கூர்மையான கல்லால் , இன்னொருத்தன் தலையில் அடித்தான்..ரத்தம் வர ஆரம்பித்தது… குச்சிகளின் மீது இருந்த வெளிச்ச பூவை மற்றொருவன் அவன் மீது வீசினான்…அட..அவன் உடம்பை அது விழுங்க ஆரம்பித்து விட்டதே.. அவன் உடல் முழுவதும் அது பரவ ஆரம்பித்து விட்டதே..?! வெளிச்சப் பூ அவனை விழுஙகி விடுமே.?! அவன் இறந்து விடுவானே.?!

அட …!! எங்களுக்குள்ளும் சண்டைகள் வரும்… கடித்துக் கொள்வோம்.! ஆனால் இது போல மற்றவரை இல்லாமல் செய்யமாட்டோம்..எதிரிகள் எங்கள் இடத்தை ..எங்கள் பெட்டையை.. குட்டியை அபகரிக்க வந்தால் கூட்டமாய் சேர்ந்து அடித்துக் கொள்வோம்..கடித்துக் கொள்வோம்..! ஆனால் இது இவன் செய்தது ரொம்ப தவறு…! தன் கூட்டத்தையே இப்படி ஒருவன் அழிப்பானா.?

போதும் கனவு.! கண்களை திறந்தேன்!

அருகே பக்கத்து கிளையில் பெரிய பெரிய இலைகள்…சில இலைகளைப் பறித்தேன்…! மரத்தின் கொடியை வைத்து இலைகளை இடுப்பில் கட்டினேன்..!

மரத்தில் இருந்து கீழே குதித்தேன்..!

கீழே தரையை குனிந்து பார்த்தேன்..பெரிய பெரிய கற்கள் இருந்தன… கைக்கு சரியான ஒரு கல்லை எடுத்தேன்… மற்ற கல்லின் மீது வைத்து தேய்க்க ஆரம்பித்தேன்…..சரக்..சரக் னு சப்தத்துடன் அது தேய ஆரம்பித்தது…! கொஞ்சம்..கொஞ்சமாக கூர்மையாக மாற ஆரம்பித்தது…! அட..பரவால்லையே..! இன்னும் இன்னும்.. தேய்த்தேன்…!

தயாராகிவிட்டது என் கல் ஆயுதம்…அப்படியே அதை சுழற்றி மரத்தின் மீது ஒரு அடி .. ஒரே அடி…பலமாக அடித்தேன்….மரத்தின் வலி எனக்கும் புரிந்தது..! இனி உணவுக்காக விலங்குகளை அடிக்க மட்டுமல்ல… என்னைத் தாக்க வரும் எதிரியையும் தாக்கி அடிக்க எனக்கு ஒரு பலமான ஆயுதம் கிடைத்து விட்டது…!

தரையில் அமர்ந்தேன்..ரெண்டு சிறு கற்களை கையில் எடுத்தேன் . தட்ட ஆரம்பித்தேன்.. “சடக்..சடக்.!!”.ஒன்றும் தோன்றவில்லை…. திரும்பத் திரும்ப. “சடக்..சடக்…. சடக்.சடக்..சடக்..”. ஒன்றும் தோன்றவில்லை..விடவில்லை நான் ..

என் கனவை நம்பினேன்! திரும்பத் திரும்ப .. திரும்பத் திரும்ப .. .!! சடக்..சடக்..சடக்..சடக்..!!

“பளிச் ….! ”

அட .!! இதென்ன.?! அதே வெளிச்சம்..! நான் கனவில் கண்ட அதே வெளிச்சம்…! இப்போது என் கையில் இருந்த கற்களிலும் தோன்றியது..கூடவே அதே வாசனை…!! மரங்களை அந்த வெளிச்சப் பூ விழுங்கியபின் ஏற்படும் வாசனை..! மெலிதாக..மிக மெலிதாக.. என் மூக்கினில் மோதியது..!

என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை..!

மரங்களின் இலை,தழை, குச்சிகளைக் கூட்டி வைத்தேன்…!!

“சடக்..சடக்… !”

அதற்குள் தூரத்தில் இருந்து என்னைக் கவனித்த என் பெட்டைகளும் குட்டிகளும்.. ஆச்சர்யத்தில் “என்ன செய்கிறான் இவன் ? “என கவனிக்க ஆரம்பித்தன.. மெதுவாக என்னை நோக்கி வர ஆரம்பித்தன…!

நான் விடவில்லை..சடக்..சடக் கென்று பலமாய் தட்ட தட்ட.. மீண்டும் அந்த வெளிச்சம் தோன்றியது .!

பளிச்..!

ஆனால் இந்த முறை காய்ந்த இலைகளின் மீது அது தெரித்து இலைகளில் இது பற்றிக் கொண்டது..! நல்லவேளை இலைகளை மற்ற செடிகளில் இருந்து தள்ளியே வைத்திருந்தேன் ..!

இதைப் பார்த்த என் பெட்டைகளும், குட்டிகளும் கையை கையை ஆட்டி பலமாய் கத்த ஆரம்பித்தன..!

ஊ..ஊ..ஊ.. ஊ.. !!

தூரத்தில் இருந்த என் தாயும், தந்தையும் , கூட இருந்த என் தந்தையின் மற்ற குட்டிகளும்.. என்னவோ.. ஏதோ என்று எங்களைை நோக்கி ஓடி வர ஆரம்பித்தன …!

அருகில் வந்ததும்.. என் இடுப்பில் இலையும்.. கையில் கல் ஆயுதமும் பார்த்து ஒரே ஆச்சர்யம் அவர்களுக்கு..!

அப்போதுதான் தரையில் இருந்த இலையின் மீது பரவிக் கொண்டிருக்கும் அதைப் பார்த்தாள் என் தாய்….! அதைப் பார்த்து கைகளை நீட்டியவாறே பலமாகக் கத்தினாள்..!

“ஊ..ஊ..ஊ..ஊ.. !”

தந்தையும் அதைப் பார்த்தார்.. பார்த்த உடனே கண்களில் ஒரு பயம்..! பயமென்றால் சாதாரண பயமல்ல.. மரண பீதி..! சடாரென்று சில அடிகள் பின்னால் சென்றார்… மிரட்சியாக என்னைப் பார்த்தார்..! ஒரு தலைவனைப் பார்ப்பது போல இருந்தது அவர் பார்வை..!

நான் மெல்ல எழுந்தேன்..!!

தரையில் இரண்டு கால்களை ஊன்றி நேராய் நின்றேன்…!!

இப்போது இதுதான் கம்பீரமாய் இருந்தது…!!

கையில் இருந்த கல் ஆயுதத்தால் தரையில் படார் என பலம் கொண்ட மட்டும் அடித்தேன்..!

கண்களில் கர்வம்..!!

தலையை உயர்த்தி அனைவரையும் பார்த்து அழுத்தமாய் சொன்னேன்..!

“மண்டியிடுங்கள் அனைவரும்..! இனி நானே உங்கள் தலைவன்..!”

அனைவரும் மிரட்சியுடன் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு தரையில் மண்டியிட்டனர்….! பயம்…!!

என் தந்தையும் ….! தலையை தரையோடு வைத்து…! என் முன்னே..!!

தரையில் இருந்த வெளிச்சப் பூவினைப் பார்த்தேன்..! கையில் இருந்த கல் ஆயுதத்தையும் பார்த்தேன்…!! இனி என்னைத் தாக்க வருபவர்களையல்ல…!!! தலைவனாக ஏற்க மறுப்பவர்களையும் இது தாக்கும்..!!

இது ஒரு ஆக்கத்தின் தொடக்கமா…? அல்லது அழிவின் ஆரம்பமா.?

இதைத்தான் எனக்கு கனவினை அனுப்பியவன் விரும்புகிறானா..?!

தெரியவில்லை…!

ஆனால் அடுத்தவர்களை அடக்கி ஆள்வது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது…!

இனி நானே இங்கு அதிக பலம் வாய்ந்தவன்..!!

நானே இங்கு தலைவன்..! !

நானே இவர்களை இனி ஆள்வேன்….!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *