கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 8,643 
 
 

நெளிந்து நெளிந்து வளைந்து நீண்டிருந்தது பொதுஜன வரிசை. ஆதார் புகைப்பட மையம் திறப்பதற்கு முன்னாலேயே காலங்காத்தாலே வந்து வரிசையிலே கடைசி ஆளா நின்றிருந்த லட்சுமியம்மாள் மெல்ல மெல்ல நகந்து இப்போது தான் புகைப்பட மைய வாசலைத் தொட்டிருந்தாள்!

லட்சுமியம்மாளுக்கு முன்னாடி இன்னும் பத்து பேர்கள் தான் இருப்பார்கள். ” அம்மாடி! பெரிய மலையைத் தாண்டி வந்தாப்புல இருக்கு. கூட்டமா இது? அகூரமான கூட்டமப்பா! ” லட்சுமியம்மாள் தனக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டாள்.

பெய்யாத மழை சென்னை நகரம் முழுதும் பெய்து முடிஞ்சு, வெள்ளம் வடிஞ்சதிலேயிருந்து, ஒரு மாத காலமா வரிசை வரிசைன்னு வரிசையிலே நிண்டு நிண்டு காலும் தொடையும் ஏற்கெனவே ரணமாகியிருந்தது. பத்தாத குறைக்கு கட்டு போட்டிருந்த வலது கையும் விண்ணென்று வலிக்க ஆரம்பித்ததும், ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. லட்சுமியம்மாளுக்கு. .

வெள்ளத்துல பாதிச்சவங்களுக்கு புடவை தரதா கேள்விப்பட்டு டோக்கன் வாங்கி முடித்து, புடவை வாங்குவதற்காக வரிசையில் நின்றாள்.

” எங்கள் ஆருயிர் அண்ணன் அஞ்சா சிங்கம் அண்ணன் மாவட்டச் செயலாளர் அண்ணன் இளமுருகு அவர்கள் வந்துவிட்டார். இதோ வந்துவிட்டார் ” விழா மேடையில் ஒருவா் மைக்கில் கூச்சிலிட்டதும் வெயிலில் வாடி வதங்கியிருந்த ஜனக்கூட்டம் திடீர் ஆவேசமாகி. தள்ளுமுள்ளானது.

மழை வெள்ளத்தில் தப்பித்துக் கொண்ட லட்சுமியம்மாள் புடவை வாங்க வந்த மக்கள் வெள்ளத்தில் வசமாக சிக்கிக்கொண்டாள். ”ஐயோ…ஐயோ..என் .கையி கையி ஐயோ ” பெருங்குரலெடுத்து கத்தியது ஜனக்கூட்டத்தில் ஒருவரின் காதுகளுக்கும் எட்டவில்லை.

நெரிசலில் தன் வலது கை ஒடிந்தது தான் மிச்சம்!. தன் சேலை முந்தானையின் ஒரு பகுதியை கிழித்து பக்கத்து டீக்கடையில் தண்ணி வாங்கி கிழித்த துணியை நனைத்து ஒடிந்த கையில் கட்டு கட்டிக்கொண்டு தாங்கமுடியாத வலியோடு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள்,

லட்சுமியம்மாளுக்கு மனசு பதறியது!

‘இங்கேயும் வரிசையா? இவ்வளவு பேருக்குமா கை ஒடிஞ்சுபோச்சு? இத்தன பேருக்கும் என் நெலமையா?’ விசாரித்தாள்.

வெள்ளத்துல விழுந்தது பாதி, சோத்து பொட்டலத்துக்கும் பிஸ்கெட் பாக்கெட்டுக்கும் நிண்டதுலயும், பாய்க்கும் போர்வைக்கும் அரிசிக்கும் நிண்டதுலயும் மீதி என்றும் தெரிந்து கொண்டாள்.

ஒருத்தன் அடிக்கொருதரம் ரெண்டுபேரு மூணுபேருன்னு ஆளுங்கள கூப்பிட்டு வந்து நிண்டிருக்கிற புற நோயாளிகள் வரிசையில முன்னாடி நிக்கவெக்கிறான்.

” ஏப்பா, நீ யாரு? நீபாட்டுக்கு ஆளுங்கள கொண்டு வந்து முன்னாடி நிக்க வெச்சுட்டு போறியே…வரிசையில நிக்கிற நாங்களெல்லாம் மனுசரா தெரியலையா?” லட்சுமியம்மாள் கேட்டுவிட்டாள்.

” என்ன கிழவி, என்ன ஒரேதா வாயி நீளுது? கம்முன்னு லைனுல்ல நின்னமா…நோவ பாத்தோமான்னு போகணும்.தெரியுதா? இங்க நான்தே வார்டுபாயி. டாக்டரே எவனும் என்ன கேள்வி கேட்கமாட்டானுங்க, புரியுதா? ”

பதிலுக்கு வாய் திறக்கவில்லை லட்சுமியம்மாள்.

டாக்டா், பக்கத்து சேரில் உட்கார்ந்து துண்டுச் சீட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த வேறு ஒரு டாக்டரிடம் லட்சுமியம்மாளுக்கு புரியாத பாஷையில் எதையோ சொன்னார்.

திரைச்சீலை போல் வெள்ளைநிற காடாத்துணியால் மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் போடப்பட்டிருந்த தகரப்பெட்டில் படுக்கவைக்கப்பட்டாள், லட்சுமியம்மாள்.

‘ ஐயோ…அம்மா…வலி தாங்க முடியலையே… ‘ வலி வேதனைக் குரலாக வெடித்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய லட்சுமியம்மாள், வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக பக்கத்து குடித்தனக்காரி எதிரே ஓடிவந்தாள்.

” ஆயா. வெள்ள நிவாரண பணத்துக்கு எழுத வந்தவங்கக் கிட்ட, நீங்க என் செல் நம்பரு கொடுத்திருந்தீங்கில்ல, உங்களோட பேங்க அக்கவுண்ட் நம்பா் அனுப்பச் சொல்லி என் செல்லுக்கு மெஸ்சேஜ் வந்திருக்கு”

பிடனி வலி போயி திருகு வலி வந்தது லட்சுமியம்மாளுக்கு.

வங்கிக் கணக்கு தொடங்க அரக்கப் பறக்க ஓடினாள்.

‘மனுஷியா புறந்து. குடிகாரன கட்டிக்கிட்டு அஞ்சும் ஆணா பெத்து, என்னெத்த அனுபவிச்சே?, இதையாவதும் அனுப்பவின்னு தலையெழுத்து எழுதிருக்கோ’ தனக்குள் சந்தேகப் பட்டுக் கொண்டாள்..

”பெரியம்மா, அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முதியோர் பணம் வாங்குற பாஸ் மட்டும் போதாது. ஆதார் அட்டை வாங்கிட்டு வா”

”இப்படி ஒண்ணொண்ணா அலைய விடுறான்னுகளே… எடுபட்ட பயக இவனுகளுக்கு ஒண்ணும் வரமாட்டேங்குதே. இந்த எடுபட்ட சிருக்கிக்கும் ஒரு சாவு வந்து தொலைய மாட்டேங்குதே” தனது ஆத்தாமையை புலம்பினாள்.

உயிர் போயி உயிர் வந்தது லட்சுமியம்மாளுக்கு!

அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்திருந்த அவஸ்தை. ஒடிந்த கையில் ஏற்பட் ரணவலி லட்சுமியம்மாளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது!.

மீண்டும் ஒருமுறை வரிசையை தனக்கு பின்னாடி முன்னாடி பார்த்துக் கொண்டாள். இன்னும் கொஞ்சம் தான். நாலஞ்சு பேருங்க தான் இருப்பாங்க. பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

”ஏம்மா உனக்கு எத்தனவாட்டி சொல்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சிலிப்பு கொண்டுவா. இல்லையின்னா ஓட்டர் ஐ.டி. கொண்டுவா, எதுவுமே இல்லாம வந்தா எப்படி போட்டோ எடுக்க முடியும்?” என்று ஒரு பெண்ணுக்கு பதில் சொல்லிக் கொண்டே, கம்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமராவுக்கு முன்னாடி அமர்ந்திருந்த சிருமியின் முகத்தை மானிட்டரில் தெரியும் பிரேமுக்குள் கொண்டு வந்தார். பிரேமுக்குள் அந்த முகம் கண்ணும் வாயும் பெருசாக அவரை பயமுறுத்தியது.

மீண்டும் அந்த பெண் ”சார்…சார்…” அவரை நச்சரித்தாள்.

”இந்தா பாரு,உனக்கு அவ்வளவு தான் மரியாதை. ஒழுங்கா இங்கிருந்து போயிரு.கோபத்தை கிளறாத”

”ச்சீ!…போ…புறம்போக்கு” திரும்பிப் பார்க்காமல் அந்தப் பெண் வெளியேறிப் போனாள்.

”யாரு புறம்போக்கு? கிட்ட வா யாரு புறம்போக்குன்னு பாத்திருலாம்”கூச்சலிட்டார்.

”சார், இவர நம்ம வட்டம் அனுப்பி வெச்சிருக்கார். பிரஸ்காரர் வேற. கொஞ்சம் வேலையை முடிச்சு அனுப்பிருங்க” வெள்ளையும் சொள்ளையுமா ஒருத்தர் சிபாரிசு செய்தார்.

”சரி சரி நீங்க போங்க”

”வராணுங்க பாரு. போட்டிருக்கிற சட்டையும் வேஸ்டியும் தான் வெள்ளை. செய்யுறது அத்தனையும் அழுக்கு!” தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டார்.

சிபாரிசோடு வந்திருந்த பிரஸ்காரர் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து முடித்து எண்ரால்மெண்ட் சிலிப்பை பார்த்ததும் கொதித்துப் போனார்.

”யோவ்…நீ என்ன வேலை பாத்து கிழிச்ச? என் பேர் ‘கனி’-க்கு பதிலா ‘சனி’-ன்னு போட்டிருக்கே?”

”ஹலோ மரியாதையா பேசுன்னா மரியாதை கிடைக்கும். இல்லைன்னா நானும் பேசுவேன்”

” யோவ் உனக்கென்ன மரியாதை வேண்டிக்கிடக்கு? உன்னெ போயிட்டு வந்து வெச்சுக்குறேன்”

”போ போ, நீ யார வேணும்ணாலும் கூட்டிட்டு வா.” பதிலுக்கு ஆதார் போட்டோ எடுப்பவரும் சவால்விட்டார்.

”அடுத்து யாரு? உட்காருங்க !”

எதிரே அமர்ந்திருந்தவரின் முகத்தை பிரேமுக்குள் கச்சிதமாக கொண்டுவந்தார்.

”பேரு என்னம்மா?”

”லட்சுமியம்மாள்”

”வீட்டுக்காரர் பேரென்ன?”

”பழனிச்சாமி”

“அட்ரஸ் சொல்லு”

லட்சுமியம்மாள் சொல்லச் சொல்ல டைப் செய்து கொண்டார்.

”ரேகை பதியணும் கையக் காட்டுங்க”

கையைக் கண்டதும் கோபம் தலைக்கேறியது.

”ஏம்மா, என்னெ பாத்தா பைத்தியக்காரனா தெரியுதா?”

லட்சுமியம்மாள் புரியாது முழித்தாள்.

”கட்டுப்போட்ட கைய வெச்சுகிட்டு வந்திருக்கையே உனக்கு அறிவிருக்கா? கை விரலெல்லாம் பெருச்சாளிக் கெணக்கா வீங்கிப் போயிருக்கே…நான் எப்படி கை ரேகைய பதியுறது. போட்டோ எடுத்து எல்லா கருமாந்தரமும் பண்ணியாச்சு. இதை முதயே சொல்லி தொலைஞ்சிருக்கலாமுல. வெளியே போயி தொல சனியனே…சனியனே ”

”அப்படி சொல்லாதப்பா.விடியக் காலையிலேயிருந்து கஞ்சி தண்ணி குடிக்காம வங்கொலையா பட்டினி கிடந்து நிண்டிருந்தேன். ஆதார் அட்ட கொடுத்தாத்தான் எனக்கு வெள்ள நிவாரணப் பணம் கிடைக்கும்.கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா”

சொல்லி முடித்ததும் அது நடந்தே விட்டது!

கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போயி ஆதார் புகைப்பட மையத்திற்கு வெளியே தள்ளி விட்டார், குப்புற விழுந்ததில் ஒடிந்த கை மாட்டிக் கொண்டது. கழுத்தறுப்பட்ட கோழியாய் அங்கிட்டும் இங்கிட்டும்மாக புரண்டு துடித்தாள், லட்சுமியம்மாள்.

ஒரு சலனமும்மின்றி நெளிந்து வளைந்து நீண்டிருந்தது பொதுஜன வரிசை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *