ஆண்கள் விடுதி: அறை எண் 12

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,017 
 
 

கழிப்பறை

சிதிலமுற்ற குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரில் பிளாஸ்டிக் வாளி நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. மிகுந்த அமைதி நிலவிய அவ்விடத்தில் சீரான அவ்வோசை மூலம் தன்னிருப்பை இயல்பாக்கும் விதமாய் அச் செயலை மாற்றியிருந்தான். மறுபடியும் அப்படங்களைப் பார்த்தான். புகைப்படப் பெண்ணின் நிர்வாணக் கோணங்கள் இவனுக்குள் எவ்வித ரத்தப் பாய்ச்சலையும் நிகழ்த்தவில்லை. மடக்கிவைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகத்தில் வழமையேறியிருக்க, புகைப்பட வர்ணங்கள் மினுமினுப்பற்று உணர்ச்சியிழந்திருந்தன. நீண்டகால ரசித்தலின் விளைவாய்ச் சிரித்துக்கொண்டிருக்கும் அப் பெண்களின் நிர்வாணம் அவர்களின் இயல்பான உடைகளாகி, மர்மங்களற்ற நீள் பாலை வெளியின் சுவாரஸ்யங்களற்ற பரப்பை ஒத்திருந்தன. இவன் ஆயாசமாய் உணர்ந்தான். கதவின் கீழ் இடைவெளியில் ‘ப’ வடிவத்தில் வெயில் விரிந்திருக்க, அதன் மேல் நிழல்களின் பிரதிகள் அசைவுறுகிறதா எனக் கவனித்தான். கதவிற்கு வெளியே இவன் யூகித்திருந்த நடமாட்டமற்ற வெறுமை பத்திரமாயிருந்தது. குழாயிக்கும் சுவருக்குமான இடைவெளியில் புத்தகத்தைச் சொருகினான். உடலெங்கும் நிரம்பியிருந்த வேட்கையில் உறுப்புப் பசிகொண்ட மிருகத்தின் வேட்டைக்கு முன்னான இரையின் மீது கூர் குவிந்த மௌன உன்னிப்புடன் அலைந்தது. மிகச் சிறிய ஒரு பாதையின் திறப்பு அச்சமயத்திற்குப் போதுமானது. காமத்தின் வேட்டைப் பாய்ச்சலில் உடல் அனிச்சையாய்த் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிற அந்தத் தருணங்கள் தேவைப்படுகின்றன. இவன் மலையின் விளிம்பைத் தேடிக்கொண்டிருந்தான்.

இப்பெருநகரத்தில் வாரப் பகல்களெல்லாம் வேலை செய்கின்ற நிறுவனத்தால் செரிக்கப்பட்டிருக்க, சோர்வும் தூக்கமும் நிரம்பிய நடு இரவுகளே இவனுக்கான நேரங்களாகிவிட்டிருந்தன. சிறிய இவ்வறையின் தரையில் நெருக்கமாய்ப் படுத்திருக்கின்ற நண்பர்கள் மத்தியில் இவனுக்கான தனிமை காணாமல் போயிருந்தது. தவிர, வேலையின் பகல்நேர நெருக்கடி தருகின்ற காட்டமான நெடி படர்ந்த மூளைப் படிவுகள் சமனாகிற தருணத்தில் இவன் மெய்மறந்து உறங்கியிருந்தான். இன்று விடுமுறை. முகங்களிலெல்லாம் சூட்டுக் கொப்புளங்கள் பரவி எரிந்தது. உடல் வெப்பத்தை வெளியேற்றுவதற்கான உபாயங்களால் இச்செய்கை தருகின்ற போதையேறிய மெய்மறப்பால் இவன் ஒவ்வொரு விடுமுறை தினத்தன்றும் இதனைத் தவறாத அடிப்படை நிகழ்வாக்கியிருந்தான். அதற்குச் சில புத்தகங்களும் நினைவில் சேகரித்திருந்த சில பெண்களின் சித்திரங்களும் உதவின. இந்த இருப்புகளில் அவ்வப்போது உள்ளீடும் வெளியேற்றமும் நிகழ்ந்தபடியிருக்கும். தோற்றுப்போன புத்தகம் வெற்றுக் காகிதமாயிருக்க, இவன் நினைவிலிருந்த பெண்களை வெற்றுச் சுவரில் உருவகப்படுத்தத் தொடங்கினான். இன்னும் மிகக் குறைந்த தருணங்களே இவனது கழிவறை இருப்பை வெளியிலிருப்பவர்களுக்கு இயல்பான விஷயமாகப் படச்செய்யும். அதிவேக முனைப்புடன் சுவர்ச் சித்திரங்களை ஓடச் செய்தான். சோதனையாகப் புணர்விற்கு பின்னான முகத் தோற்றங்களே பிரதியாகியபடியிருக்க, நரம்புகளிலெல்லாம் பதற்றமேறி வியர்வை பொங்கியது. தான் தவறவிடக்கூடிய இத்தருணத்திற்கான ஒரு வாரக் காத்திருப்பின் பிரம்மாண்ட பயம் உணர்வுகளின் குவிமையத்தைச் சிதைக்கச் தொடங்கியது. வியர்வையூறிய உள்ளங்கையை வாளித் தண்ணீரில் அமிழ்த்தினான். குளிர் பரவியதும் மெலிதான சமநிலை கிடைத்தாற்போல உணர்ந்தான். சற்று நேரம் தலை குனிந்தபடி அமர்ந்திருக்க, ரம்யமிக்க இசை பொங்கும்படி மனத்தை வைத்துக்கொண்டான். வெளிர்மஞ்சள்நிறப் பூக்கள் பரவிய ஒரு சமவெளியும் எடையற்ற சிட்டுக் குருவிகளின் வானமும் தோன்றிய படியிருந்தன. மிக இயல்பாகச் சாயமற்ற புன்னகையுடன் அவளது முகம் பூத்த பொழுதில் மங்கத் தொடங்கிய புலன்களின் கூர்மைகள் விழிப்படைந்தன.

இவன் தன்னில் விரவுகிற அனிச்சைச் செயலை உணர்ந்தான். அம்முகத்திற்குரியவளுடனான தனது உறவின் படிநிலையை யோசித்த பொழுது திடுக்குற்றான். புனிதங்களால் நிரப்பப்பட்டிருக்கும் உறவுகளின் எல்லையைக் கடந்திருந்தது வேட்கை. மிக மோசமான ஒரு பாவத்தைச் செய்தவனாய்த் தன்னை நினைத்துக்கொண்டு, நினைவுகளின் அடுக்குகளை மூடியபடி வெளியேற முனைந்தான். சொற்பக் கணங்களில் தான் தப்பிவிட்டதாகத் தோன்றியது. மிகப் பெரிய தண்டனைக்கான வாசலின் நுனியைத்தான் எவ்வாறு தேர்ந்தெடுத்தோமெனப் பெரு மூச்சுடன் எண்ணியபடி, துடித்த குறியைச் சமனப்படுத்த வேறுவிதமான சூழல்களையும் மனிதர்களையும் அசைபோட்டான். அவளை மிகச் சாதாரணமாகவே இவன் கடந்திருந்த வேளைகளில் அம்முகத்தின் ரம்யமும் கவர்ச்சியும் பெரிதான அம்சங்களாகவேபடாமல் போய்விட்டதாகத் தோன்றியது. ஒருவேளை இவன் அந்தக் கணங்களால் அவளிடமிருந்து இதுபோன்றதொரு தேவை ஏற்படாதெனத் தவறவிட்டிருக்கலாம். கோட்டோ வியத்தின் உயிரற்ற இடைவெளிகளில் வேட்கையின் கிளர்ச்சிமிகு வண்ணங்கள் இளகிப் பரவி அவளது சித்திரத்தை உயிர்ப்பாக்கி மின்னச் செய்தன. மேலும் சில தர்க்கங்கள் வலிமையற்ற கால்களுடன் இவனை வந்தடைந்தன. இவன் குறைந்த பட்ச ஜாக்கிரதையுடன் அவளைப் பார்க்கத் தொடங்கினான். உறவுகளற்ற ஒரு புள்ளியில் அவளது சித்திரம் இவனைத் தின்னத் தொடங்கியது. மழைநீரின் பாய்ச்சலோடு செல்கின்ற இலையைப் போல இவன் மிதந்து சென்றான். இவனது எதிர்பார்ப்பிற்கும் சற்று முன்னதாகவே இரண்டாய் மடங்கிக் குனிந்தான். வேட்டையின் மிச்சங்களைத் துப்பித் தணிந்தது குறி. லேசான கணங்கள் வழிந்துகொண்டிருந்தபொழுதில், சட்டென இறுகி ஸ்திரமான கண்ணாடி நிமிடங்களில் இவன் சிறைப்பட்டிருந்தான். உடலில் வழிந்த வியர்வையை வழித்து உதறினான். பிளாஸ்டிக் வாளி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. சோர்வாய் உணர்ந்தான். அவளது சித்திரத்தை எந்தப் பெட்டியில் வைப்பதென்ற புதுவிதக் குழப்பமெழ, முதன்முதலில் ஏற்பட்ட பாவ உணர்வுகள் புதிய பச்சையம் வீச முளைத்தெழுந்தன. மறுபடியும் அந்தக் காட்சி நினைவில் வந்தது. வெளிர் மஞ்சள் பூக்களடங்கிய சமவெளியில் இறங்கு வெயிலின் மௌனக் கதிர்கள் எதிர்பார்ப்பற்று அழிந்துகொண்டிருந்தன. சிட்டுக் குருவிகளற்ற வானத்தின் ஸ்படிக நீலத்தில் அனுமானிக்கவியலாத பதற்றமிருந்தது. இவன் எளிதில் உடைபடும் விதமாக ஒரு தாவரத்தைப்போல விரிசல் பரவியிருக்கும் கண்ணாடிக் கோப்பையாய்த் தான் மாறிவிட்டதாகத் துயரமாய் உணர்ந்தான். புனிதங்களைச் சிதைத்தெறிந்த மிருகத்தின் மறு வருகை மீதான பயத்துடன் தாழ்ப்பாளை நீக்கினான்.

மைய அறை

மிக நீண்ட நேரமாய் இவன் படுத்தே இருந்தான். உடையற்ற மேலுடம்பில் முதுகுப் பரப்பெங்கும் சிறு மணற்துகள்கள் ஒட்டிக்கிடந்தன. தூக்கமற்றுக் கழிந்த இரவு ரத்தக் கசிவுற்ற கண்களையும் அயர்ச்சியான முகத்தையும் விட்டுச்சென்றிருந்தது. வெயிலின் பாதங்கள் உறவினர் வீட்டுச் சிறுமிகள் திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து எட்டிப் பார்ப்பதைப் போலத் தயக்கமாய் நுழைந்துகொண்டிருக்க, தலையணையில் முகம் பதியுமாறு படுத்தான். நைந்த தலையணையில் வாங்கிய சமயத்தில் நிறமுற்றிருந்த பூக்களனைத்தும் அழிவின் விளிம்பிலிருக்க, கருப்பாய் விரவியிருந்த எண்ணெய்த் தடங்களிலிருந்து வாடை பரவியது. இந்த அறையில் முன்பு தங்கிச் சென்ற யாரோ ஒருவரின் அடையாளமான குண்டு பல்பும் அலமாரித் திட்டிலிருக்கும் முனையற்ற முகக் கண்ணாடியும் இந்த அழுக்குத் தலையணையும் அவ்விடுதியில் இவர்களின் நிரந்தர மற்ற வாழ்வை அவ்வப்போது மெலிதாய் முனகிய படியிருந்தன. இழந்துவிட்டிருந்த நேற்றைய மதிய கணங்கள் வழக்கமான தடயமற்ற உதிர்தலைப் போலன்றித் துக்கமேறிய பெருங்கனவின் விரிதலாய்ப் பரவிக்கொண்டிருந்தது. கழிவறையில் தொடர்ந்து தண்ணீர் சிதறும் ஒலிக்குறிப்புகள் கேட்டபடியிருக்க, மிகக் குறுகிய தனிமையின் கரங்களில் சிக்குண்ட பதற்றத்திலிருந்தான்.

நகரத்தின் சிக்கல் நிறைந்த கட்டுமானங்களால் சிதைந்துபோயிருந்த மதியம் புறநகரின் பரபரப்பற்ற சூழலில் தன்னை முழுமையாய் விரித்திருந்தது. இருவருக்குமிடையேயான மிகச் சரியான தூர விலகலில் இரு நிழல்கள் ஒதுக்குப்புறமான கட்டடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அவ்வப்போது முன் சென்று கொண்டிருந்த அவள் இவனைத் திரும்பிப் பார்த்து, இவனது ஆர்வத்தின் பரப்பை விரிவாக்கம் செய்து கொண்டாள். இதற்கு முன்பு திரையரங்குகளின் வாசலில், தங்கும் விடுதிகளின் சமீபத்தில், நெரிசலான முக்கிய வீதிகளில், புணர்தலின் அழைப்பிற்குரிய மொழி பேசும் கண்களை அவன் தெரிவு செய்திருந்தான். மிகுந்த வியப்புறும் விதமாக அரசாங்க மருத்துவமனையில் நலிவுற்ற நண்பனொருவனைப் பார்க்கச் சென்ற இன்றைய காலையில் மருந்துக் கசப்புகளின் நெடிபடரும் பதற்ற வெளியில் இவனது கவனத்தை இவள் தன்பால் குவித்தாள். குறுகிய பொழுதில் இவனது சம்மதத்தைப் பெற்று இப்புறநகரின் சப்தமற்ற வீதிகளில் இவனை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறாள். இவன் எச்சில் ஒழுகும் மிருகத்தின் சுய கட்டுபாடற்ற வெறி பொங்க, வியர்வையைத் துடைத்தபடி பின்தொடர்ந்தான். சுற்றிலும் புதர் நிறைந்த ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அச்சிறிய வீட்டின் முன்னிருந்தார்கள் இருவரும். சுவரோரமாய்ச் சாயமற்ற சிறிய சைக்கிள் சாய்ந்து கிடக்க, கடைசியாய்ப் பெய்த மழையில் நிறைந்திருந்த ஆட்டுரலின் மேல் காகிதக்கப்பலொன்று முற்றிலும் ஊறி ஒரு தொடுதலில் சிதைந்துவிடுவதற்கான அபாயத்தில் அலைந்தது. ஆளரவமற்ற இச்சூழலில் தன் கிளர்ச்சியை நாசூக்கற்ற செயல்பாடுகளின் வழி இவன் திருப்திப்படுத்த விரும்பினான். அவள் பூட்டைத் திறக்கையில் கருவேல மரமொன்றில் சிறுநீர் கழித்தபடி சிரித்தான். அவளது பதிலுணர்வு என்னவாயிருந்ததென்பதை அனுமானிக்க வியலவில்லை. ஊரிலிருக்கும் சமயங்களில் உறவு முடிந்த நடு இரவுகளில் இவன் தெரு விளிம்பிலும் இவனது மனைவி முற்றத்துத் தென்னைத் தட்டிகளின் மறைவிலும் சிறுநீர் கழித்துவிட்டு மெல்லிய சிரிப்புடன் ஒருவரையொருவர் சீண்டியபடி சந்தோஷத்தின் பரப்பை நீட்டிக்கும் அந்தக் கண உணர்வு இன்று ஏற்பட்டிருந்தது.

திறந்திருந்த ஒரு கதவின் வழியே நுழைந்தான். மூடியிருந்த கதவின் முதுகுப் பரப்பில் வித வித கார்ட்டூன் பொம்மைகள் ஒட்டப்பட்டிருந்தன. மெதுவான ஆரம்பத்தில் மின்விசிறி சுழலத் தொடங்க, இதற்கு முந்தைய கணங்களின் இருப்பின் வழி சிதைந்து கிடந்த அல்லது இயல்பாயிருந்த அறையின் முகத்தைச் சீராக்கியபடி சிறிய மர நாற்காலியில் இவனை அமரச் சொன்னாள். அந்த நாற்காலியில் சிறுவர்களுக்கான ஓவியப் புத்தகமிருக்க, அதைப் புரட்டியபடி அவளைப் பார்த்தான். அடுப்பைப் பற்றவைத்து எதையோ சூடுபடுத்தும் பாத்திரங்கள் ஒலி கேட்டது. பொதுவாக இவன் புணர்தலுக்குண்டான இடங்களில் கையாளப்படும் வலிந்து உருவாக்கப்பட்ட தனிமையின் பீதி, இங்கு தவறுவதைக் கவனித்தான். ஊரில் மனைவியுடனான உறவின் எல்லா இயல்புகளும் இவள் மூலம் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. வலது ஓர கொடிக் கயிற்றில் ஆரஞ்சு வர்ண கவுன் ஒன்று அவசரமாய்க் கழற்றிப் போட்ட நிலையில் கிடந்தது. இதே நிறத்தில் தனது மகளுக்கொரு தடவை கவுன் எடுத்துச்சென்றது நினைவிற்கு வந்தது. அக்கொடிக்கயிற்றுப் பின்சுவரில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் இவளும் இவளது கணவனும் பரந்திருந்தனர். அதிக மையிட்ட கண்களும் முன் நெற்றியோர நெளிநெளியான கூந்தல் முடிகளும் சற்றே செயற்கையான புன்னகையுமாய் இவளது அந்தப் பருவத்தின் மிகச் சிறந்த ஓவியமாய் அப்படம் இருந்தது. மண்ணெண்ணெய் அடுப்பில் சீற்றம் ஒலிக்க, சிரித்தபடிப் பாயை விரித்தாள். அதீதக் கற்பனைகளுடன் வந்திருந்த இவன் இப்பொழுது இயல்பான உடலுடன் தானிருப்பதை அதிசயமாக உணர்ந்தான். கதவைப் பூட்டித் தாளிட்டவள் மிக நெருங்கி வந்து இவனது கேசத்தைக் கலைத்தபடி அணைத்தாள். இவன் கடைசியாய் வியர்வை படிந்திருந்த அவளது அக்குள் பகுதியின் வாசனையுடன் நினைவிழந்தான். இவனது வெறி கூடிய உடலசைவில் அவள் தன்னைச் சிறியதாக்கிக்கொண்டாள். இவனால் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. இதற்கு முன்னான பெண்ணுடல்கள் உறவின் எல்லாச் சூட்சுமங்களையும் மிக நன்றாக அறிந்திருந்தன. இவனது ஆவேசப் பாய்ச்சலை எளிதாக வகைபிரித்து மட்டுப்படுத்திக் கரை சேர்க்கின்ற வல்லமையுற்றிருந்தன. ஆனால், இந்த உடலில் இவனது வெறியனைத்தும் மிகச் சரியாக உள்வாங்கப்பட்டன. உச்ச கணங்களில் அவளது மெல்லிய வலி முனகலும் இவனைத் திருப்தியுறச் செய்தன. தோல்வியின் கசப்புப் படரச் சிதறிச் சரிகின்ற இறுதிக் கணங்களின்றி, சரியான இடைவெளி கூடிய உருகுதலுடன் உடல் கரைந்து கொண்டிருந்தது. இருவரிடமிருந்தும் பிழியப்பட்டிருந்த வியர்வையில் வெம்மை அதிர்ந்துகொண்டிருந்தது. இவன் நிதானமாய்த் தன்னைப் பிரித்தான். மூச்சிரைத்து ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவளது அடிவயிற்றுப் பிரசவத் தழும்புகளைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவன், பின் மெதுவாக அவ்விடத்தில் முத்தமிட்டான். அடிபட்ட சிறுபறவையின் உயிரதிர்வு அவளுள் நிகழ்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அடுப்பில் சூடான தேநீர் பொங்கும் ஓசையும் வாசனையும் வர உரிமையாய் எழுந்து சென்று இரு தம்ளர்களில் தேநீர் நிரப்பினான். சற்று முன்பு இயல்பாயிருந்த அறைப் பொருள்களிலெல்லாம் குற்றவுணர்ச்சி தளும்பியபடியிருக்க, அவற்றின் மௌனம் பல அர்த்தங்களுடன் இவனால் உணரப்பட்டது. மெல்லிய மயக்கத்துடனிருந்த அவள்மீது சேலையை ஒழுங்கற்று விரித்துவிட்டு, சில ரூபாய்த் தாள்களின் மீது தேநீர் தம்ளரை வைத்தான். அவள் சமனாகும்வரை அங்கேயே இருக்க விரும்பினான். அவள் நசிந்த குரலின் வழி பிள்ளைகள் வருகின்ற சமயமாகிவிட்டதென்றாள். அவ்வார்த்தைகள் இவனது எல்லையைத் தெளிவாக வரையறுத்துச் சுய கழிவிரக்கம் பெருகச் செய்தது. கதவை வெறுமனே சாத்திவிட்டு, உடைகளை நேர் செய்தபடி வெளிவரக் குளிர்ந்த காற்று முகம் பரவியது.

ராகமற்ற விசிலோசையுடன் சாலை நோக்கி வந்தான். இறக்கத்தில் அழுக்குச் சீருடையுடன் ஒழுங்கற்ற முடி பொங்கச் ஒரு சிறுவனும் தொடக்க வகுப்பிலிருக்கும் ஒரு சிறுமியும் தங்களுக்குள் சண்டையிட்டபடி வந்தனர். அவ்வப்போது அச்சிறுவன் உரக்கக் கத்தி அச்சிறுமியைச் சீண்டினான். இவனைக் கடக்கும் பொழுதில் அச்சிறுமி பக்கவாட்டுக் குத்துச்செடியில் வண்ணத்துப் பூச்சியொன்றைக் கண்டாள். பிறகு அழுகையை நிறுத்திவிட்டு, மிகுந்த ஜாக்கிரதையுடன் இரு விரல்களை அதன் சிறகை நோக்கி நகர்த்த, முன் சென்ற சிறுவன் இவளைத் திரும்பிப் பார்த்தான். என்னவெனக் கேட்டபடி அருகில் வந்தவனை ஆட்காட்டி விரலால் உதட்டை மறைத்துச் சமிக்ஞை செய்ய அவன் தன் நடையின் அதிர்வைச் சட்டென ஒரு பூனையின் லாவகத்திற்கு மாற்றிக்கொண்டான்.

இவன் பேருந்தில் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பொழுதில், அவ்வண்ணத்துப் பூச்சியும் அச்சிறுமியின் கண்ணீர் வடிந்த கண்களின் விரிந்த பரவசமும் சிறுவனது புழுதி படிந்த பாதங்களும் அவர்களது அம்மாவுடனான தனது மதிய கணங்களும் வேறு வேறு புள்ளிகளில் ஒன்றாய் இணைந்து இனமற்ற அமைதியுடன் வேதனையின் கீற்றை ஒளிரச் செய்தன. நேற்றிரவு மனைவியுடன் தொலைபேசியில் பேசும் பொழுதில் இவனது குரல் அழுகையின் தொனியில் இருப்பதாய்க் கூறினாள். இவன் வேறுவிதமாகக் குரலை மாற்றிக்கொள்ள முயன்றான். எதிர்முனையில் ஏற்றுக்கொண்ட அடையாளங்களில்லை. குழப்பம் மிகுந்த முழு இரவை இவன் கடந்திருந்தான். கழிவறையில் தாழ்ப்பாள் திறக்கும் ஓசை கேட்டது.

ஆண்கள் விடுதி அறை எண் – 12

தூசியின் படலம் விரிந்திருந்த அவ்வறையில் விடுமுறை தினத்தின் முற்பகல் சோம்பலுடனும் உபயோகமற்றும் சிதிலமடைந்திருந்தது. மைய அறையில் குப்புறப் படுத்துக்கிடந்தவனின் துவைக்கப் படாத கைலி வலது காலின் தொடை தெரிய ஏறிக் கிடந்தது. மூலையோர பிளாஸ்டிக் குடத்தின் பாசி படர்ந்த அடிப்பாகத்தில் நேற்றைய தண்ணீர் சூடேறிக் கிடக்கச் சுவர்ப் பல்லியின் பார்வை நெடு நேரமாய் அதன் மேல் உறைந்திருந்தது. கழிவறையிலிருந்து தண்ணீர் தெறிக்கின்ற ஓசை பெரும் போர்வையாய் அறையின் வெளியெங்கும் விரிந்து, சமீபமாகப் படிப்படியாகக் குறைந்து, மௌனத்தை நுழைத்துக் கொண்டிருந்தது. சிறிய கணத்திற்குப் பின் கழிவறைத் தாழ்ப்பாள் திறக்கப்பட, ஈரமான பாதங்களைக் கோணிக்கு உறிஞ்சக் கொடுத்தபடி அவன் நின்றான். படுத்திருந்தவன் ஒருமுறை அவனை ஏறிட்டுப் பார்த்தான். இருவருமே மிக நீண்ட பிரதேசத்தைக் கடந்து வந்திருந்த சோர்வுற்ற முகக்குறிப்புகளுடனும் முதல் வார்த்தைக்கான யோசிப்புடனும் தாமதித்தபடியிருந்தனர். இருவருக்குமிடையேயிருந்த நிழல் வெளியை மௌனமாய்த் தின்றுகொண்டிருந்தது பகல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *