ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 3,598 
 

அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

‘அரை மைல் தூரத்தில் புதியதாக மால் திறந்திருக்கிறார்கள் கூட்டிக் கொண்டு போய் வா’ என்றாள் பாட்டி கோமதி.

மும்பையிலிருந்து கோடை விடுமுறைக்காக வந்திருக்கும் ஸ்ருதிக்கு மால் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லையெனினும் தான் பிறந்து வளர்ந்த இந்த சின்ன ஊரில் மால் என்பது வானதிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. நல்ல முன்னேற்றம் தான். நாங்கள் படிக்கும் காலத்தில் பள்ளிக் கூடம் கூட இல்லாததால் வெளியூர் சென்று படித்தோம். இப்போது பார்த்தாயா?. எங்கள் ஊர் எவ்வளவு முன்னேறிவிட்டது. இனிமேல் பாட்டி வீட்டிற்கு வருவதற்கு முகத்தைத் தூக்கமாட்டாயே. சொல்லிக்கொண்டே கிளம்பினர் இருவரும்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுப் பெண் போல் காட்சியளித்தது பார்சுனேட் மால். வாசலில் அழகான பூக்கோலங்கள். சுவர்களனைத்திலும் விதவிதமான சித்திரங்கள். நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக. அலங்கரிக்கப்பட்ட பெரிய பெரிய விளக்குகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது. மும்பைக்கு இணையாக இங்கும் தரத்திற்கு பெயர் போன துணிக்கடைகள், காய்கறி மற்றும் பழக் கடைகள். வீட்டிற்குத் தேவையான அனைத்துப்பொருட்களும் வசீகரிக்கும் விதத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உள் நுழைந்தவுடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஐந்து வயது ஸ்ருதி ஓடத்தொடங்கினாள். ஆங்காங்கு இளைஙர்கள் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர்.

‘வா தாயி கோமதியம்மா மவளா நீ?. இது எங்க கட தான். ஒரு கப் சோளம் வாங்கிக் கொடு உன் பிள்ளைக்கு.’

கூப்பிட்ட ஆச்சியை எங்கோ பார்த்த ஞாபகம். ஆச்சி தொடர்ந்தாள். நீ சின்ன புள்ளையா இருக்கும்போது நான் தான் தாயி தினமும் கீர கொண்டு கொடுப்பேன்.

ஆம். “அரைக் கீர, தண்டுக் கீர, முளக் கீர ”

கீரைக் காரியின் கணீர்க் குரல் ஞாபகத்திற்கு வந்தது. ஆச்சி தொடர்ந்தாள். நாலு வருசத்துக்கு முன்ன செல்வாக்குள்ள ஒரு பெரிய மனுசன் எங்க எல்லார் மென்னியும் (கழுத்தையும்) நெறிச்சி இடத்த வாங்கி இத்தன பெரிய கடைகளைக் கட்டிப் போட்டார். கீர வித்துப் பொழச்ச எனக்கு சோளம் விக்கற கட. அதோ அங்க பூச்செண்டு கடயில பாரு, அவரு தான் நிலக் கடலை விளைவிச்சு வித்த சண்முகம் தாத்தா. வாழைத்தோட்டம் மாயாண்டி மூணாவது மாடியில சினிமா டிக்கட் கொடுக்கறான்.

வயலும் வரப்பாடுமா உழச்சி விளைந்தத வித்து முதலாளியா வாழ்ந்துட்டிருந்த எங்ககிட்டேயிருந்து நிலத்தைக் கட்டாய முறையில் அபகரிச்சி பொழப்புக்கு ஆளுக்கு ஒரு கூலிவேல கொடுத்திருக்காரு பெரிய மனுசன். இதெல்லாம் சீமையிலேருந்து வந்த உங்களுக்கு எங்கேயிருந்து புரியப் போகுது என அங்கலாய்த்தாள்.

மனம் ஒட்டாமல் சிறிது நேரத்தைக் கழித்தபின் வீடு திரும்பிக் கொண்டிருந்த வானதிக்கு வரும் வழியில் வானுயர முளைத்திருக்கும் அடுக்குமாடிக்கட்டடங்களும் , தன் பெயரில் மட்டுமே அதிர்ஷ்டத்தை வைத்திருக்கும் அந்த பார்சுனேட் மாலும் பழைய பசுமையான மரங்களையும் , வயல் வெளிகளையும் , வாழைத் தோட்டங்களையும் விழுங்கி முளைத்திருக்கும் ராட்சதர்களாகத் தோன்றின.

இனி இந்த இராட்சதர்களும் தம் பங்குக்கு பூமித் தாயின் ஓசோன் ஆடையில் ஓட்டையிடத் துவங்குவார்களோ. இந்த முன்னேற்றம் தேவைதானா என யோசித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் வானதி.

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)