கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,873 
 
 

காலை உறக்கம் கலைந்து எழாது அந்தக் கிராமம் உறங்கிக் கொண்டிருந்தது. நேற்று இரவு முழுக்க ஊர்வலம் போய்விட்டு, களைப்பில் முண்டக்கண் அம்மன் சாமியும் நின்று கொண்டிருந்தது. அதன் சிவப்பு வண்ணமும், உருட்டி விழிக்கும் விழிகளும்.. அந்தச் சிலையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. புஜம் இன்னும் மேல் தூக்கி இருக்க வேண்டும்.

வலது உள்கை மேல் நோக்கியிருக்க வேண்டும். தாமரைப் பூ போல் விரல்களிருக்க, முன் மடக்கி, மேலே இழுத்து பின் மெதுவாக ஆனால் உறுதியாக…

“வந்தேனே… ராஜா… நானும்’

கூத்தாடும் போது அரசனாக முதலில் களமிறங்கும் பொழுது மனதிலாடிற்று. அப்போது புஜம் திரண்டு மடங்கி நிற்குமே அதுபோல் முண்டக்கண் அம்மன் சாமிக்கும் புஜமிருக்க வேண்டும்.

ஆடாத கூத்துஊரில் பண்டிகை நடந்து கொண்டிருக்கிறது. இன்று இரண்டாம் நாள். நேற்றிரவு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி முடிந்தது.

இரவு எப்போதும் கூத்து இருக்கும். இப்போதல்ல, முப்பது வருடத்துக்கு முன்பு. அப்போது தகரப் பெட்டியில் கூத்தாடும் பொருட்களை எல்லாரும் எடுத்துச் செல்வார்கள். நான் மட்டும் தோல் பெட்டியில் எடுத்துச் செல்வது வழக்கம். அந்தத் தோல் பெட்டியைப் பார்ப்பதற்கே கூட்டம் கூடும்.

அந்தப் பெட்டியைத் தூக்க ஓர் ஆள். மரிக்கொழுந்து மணக்க அந்தப் பெட்டியைத் தூக்கி வரும் அவள் நினைவுடன் மரிக்கொழுந்தின் மணமும் காற்றிலாடிற்று.

எல்லாம் போயிற்று. ஆடிய, பாடிய காலத்தில் வருமானம் கொட்டிற்று. கூத்தில் கொட்டிய காசெல்லாம் குடிக்கும் கும்மாளத்துக்கும் போய் தோல் பெட்டி மட்டுமே எஞ்சிற்று.

நேற்றிரவு அத்திப்பட்டில் கரகாட்டம் ஆடினார்கள். கொஞ்சம் குண்டாய் கருப்பாய் இருந்த அந்தப் பெண், இடுப்பை வெட்டி, ஒட்டி…

“ஒத்த ரூவா வேண்டாம் ஒணப்ப தட்டும் வேண்டாம்…’ என்று ஆடு ஆடென்று ஆடிற்று. சனம் முழுக்க திரண்டு வேடிக்கை பார்த்து… ஜாக்கெட்டில் ஐம்பது ரூபாய் தைத்து… வயிற்றெரிச்சலாய் இருந்தது.

கல்போன்ற தொடையை தட்டிக் கொண்டு… வரிந்து கட்டிய பட்டு வேஷ்டியுடன்…. அரச கிரீடமணிந்து… “சேனையில் பேரழகி’ என்று பாடிய வாயும், ஆடிய காலும்…

ம்ஹும்… இன்று எதுவும் இல்லை. எல்லாம் மாறிவிட்டது. தோல் பையில் கிடந்துறங்கும் கூத்துப் பொருட்கள் பரணை விட்டு இறங்குவதே இல்லை.

பக்கத்து டவுனில் இருக்கும் பள்ளிகளில் நடக்கும் விழாக்களில் மாறு வேடமணிய எப்போதாவது வாடகைக்குப் போகும். அதுவும் எப்போதாவதுதான். பிழைப்புக்கு என்று இருபது ட்யூப் லைட்டுகளும், மைக் செட்டும், பாட்டுப் போடும், பாட்டுப் பாடும் பெட்டிகளும்….

அதுவும் எப்போதாவதுதான் வரும். ஆனால், அடிக்கடி வருவது….

“”மாரிச்சாமி… ன்னா செஞ்சினு கீற?”

அடிக்கடி வருவது வந்துவிட்டது.

“”நல்லூர் ஊர் தலைவரு சொர்க்கம் போய்ட்டாருன்னு இப்பத்தான் போன் வந்துச்சு… நாலு பாட்டுப் பாடின்னு வந்துட்லன்னான்ற நீ…”

கூத்தும் பாட்டும் இழவு வீட்டுக்கு இறங்கி வந்து ஒப்பாரிப் பாடலாய் மாறிவிட்டதில் மனதெங்கும் வலித்தது. ஆனாலும் வேறு வழியில்லை. ராத்திரி முண்டக்கண் அம்மன் சாமி மெரமணை முடிந்து மழை பின்னியெடுத்தது. இடியும், மின்னலும், காற்றும், ஓட்டு வீடுதான் என்றாலும் சுவரும், ஒடும் சேரும் இடத்தில் விரிசல் ஓடி மழை நீர் ஒழுகிற்று. தூங்கிக் கொண்டிருந்த சோலையம்மாவின் முதுகுவரை தண்ணீர் ஓடிற்று. எனக்குள் பாட்டு ஆடிற்று.

தந்தனா தனாதன்னா தந்தனா தனாதன்னா

பாலுக்கு புள்ளையழ பட்டினியில் தாயும் அழ

வேலைக்கு நானுமழ வீடு முச்சூடும் அழ…

இந்தப் பாட்டு எப்போதோ எங்கோ சிவப்புக் கொடி பறந்த மேடையில் கேட்டது. சோலையம்மாவுக்குக் கோபம் எகிறிற்று.

“”ராச்சாப்பாட்டுக்கு வழியில்ல… ஊர் முச்சூடும் பண்டிகை போட்டுகிறாங்க. காலைலயாவது கருவாடு துன்னலாம்னா துட்டு ஒரு பைசா இல்ல… உனுக்கு இன்னாய்யா கூத்து வருது… கூத்து… காலைல இன்னா செய்வியோ ஏது செய்வியோ ஒரு கால் கிலோ மிஷின் கோழியாவது வாங்கினு வா..”

வெள்ளைக் கோழிக்கு சோலை வைத்த பெயர் மிஷின் கோழி. கால் கிலோ என்ன முழு கோழிக்கே வழி வந்துவிட்டது.

“”ம்… தோப்பா… இப்ப கௌம்பிறலாம்”

வெளியூர்தான் என்றாலும் போய்விட்டு வந்து, குளித்துவிட்டு, மாலை மீண்டும் கோயிலில் லைட் கட்டும் வேலை இருக்கிறது.

காலு விரல் ஒட்டிக்கிட கையிரெண்டும் கட்டிகிட

ஒத்தப் புள்ள செத்து அழுவ கட்டிக்கிட்ட மவராசா

கட்டிலேறி போறியளே.. காட்டுப் பக்கம் போறியளே

சந்திரன காணலியே சூரியன காணலியே என்

இந்திர ராசா உங்களயும் காணலயே…

பாட்டு தடையேதுமின்றி எனக்குள்ளிருந்து வந்து கொண்டே இருந்தது. எனக்குள் இருந்து தொலைந்து போன ராசாவை எண்ணிப் பாட்டாகப் பெருகிற்றா…. இல்லை… இறந்து கிடக்கும் ராசாவை எண்ணி…. பாட்டு வந்ததா?…

மாலை திரும்பும் போது நாலு முழு வேட்டி இரண்டும் எட்டு முழ வேட்டி ஒன்றும், ஒரு கிலோ மிஷின் கோழி வாங்கவும், பொங்கவும், தின்னவும் தேவையான சில்லறை தேறிற்று.

வீட்டுக்குள் நுழைய விடவில்லை சோலை.

“”ன்னா… நீ பாட்டுக்கு வந்துகினே கீற…? சாக்கடையாண்ட நில்லுய்யா….”

“”சட்டைப் பைல காசு க்குதும்மா”

காசைத் தனியாக எடுத்து வைத்து தண்ணீர் தெளித்து எடுத்துப் போனாள்.

கொஞ்ச நேரத்தில் ஒப்பாரிக் காசு மிஷின் கோழியாக மாறி சட்டியில் வெந்து வழிந்தது. வெந்தது வயிற்றில் நிறைய, அடிநாக்கில் எச்சில் ஊறிற்று. கொஞ்சம் ஊற்றினால் அடங்கும் போலிருந்தது.

“”த்தே…. ன்னாது குட்டி போட்ட பூனை கணக்கா நடந்துனு க்கறே… ராப் பொழுதுக்கு லைட் கட்டணும்னு துட்டு வாங்கியிருக்கயே… நெனப்புல க்குதா?”

ராப் பொழுதுக்கு மேடையில் ஓர் ஆட்டம் இருக்கிறது. அதற்கு லைட் கட்டவும் மைக் போடவும் பணம் வாங்கியிருந்தேன்.

ஏனோ சலிப்பாய் இருந்தது. மனம் துவண்டிருந்தது. தொடையிரண்டும் கல்கணக்காய் திரண்டு நின்றது. மீண்டும் அடவு கட்டி ஆட வேண்டும் போல் பாட வேண்டும் போல் கையும், நாக்கும் பரபரத்தது. ஆயினும் எங்கு சென்று என்னவென்று ஆடுவதென்று புரியவில்லை. பரணில் தூங்கும் தோல்பெட்டியை கீழிறக்கி வைத்தேன். கிரீடமும் மார் கச்சையும், புஜகவசமும் அணிந்து முன்னும் பின்னும் நடந்து பார்த்தேன்.

“”வந்தேனே ராஜா நானும்”

வாய்விட்டுப் பாடினேன். தோளும் புஜமும் திரண்டு நிற்க கூச்சலிட்டுப் பாடினேன்.

“”ன்னாய்யா… நெனைச்சிக்கினு கீற… லைட் கட்ட உன்னைத் தேடி ஆள் வந்துனே க்குது… நீ ன்னா ஆடிகினு கீற”

சோலையின் குரலில் எனது ஆட்டம் தடைபடவில்லை. ஆனால் எப்போதும் என்னை விரட்டும் தொனி அவள் குரலில் இருக்கும். இன்று ஏனோ அது இல்லை. சொல்லி முடித்தபடி, எழுந்து ஓரடி நகர்ந்தவளின் அலறல் என்னைத் தாக்கிற்று.

இடுப்பைப் பிடித்தபடி, “”அய்யோ சாமீ” என்றபடி அரற்றித் துடித்தாள்.

“”சோல… ன்னா ஆச்சி?” என்றபடி அவள் கையைத் தூக்கி, முற்றிலுமாய் தூக்க முயன்றேன். முடியவில்லை.

“”விட்ருய்யா… கொஞ்சநேரம் படுத்துனு இருந்தா சரியா பூடும்…”

“”டாக்ரண்ட இட்னு போட்டுமா… சோல… ”

பதிலேதும் இல்லை. “”வேண்டாம்” என்று சைகையிலும் முனகலிலும் பதில் வந்தது. இன்னும் ஆறு கிலோ மீட்டர் மண் சாலையைத் தாண்டினால் தவிர, டாக்டருக்கு வழியில்லை. மதியமோ அல்லது மாலையோ தெரிந்திருந்தால் உள்ளூரில் மாத்திரைக் கடையில் ஊசி போட்டிருக்கலாம். கொஞ்சம் வலியைத் தள்ளிப் போட்டிருக்கலாம்.

சிறுநீர் போகும் பையில் கல் இருப்பதாக டாக்டர் முன்பொரு முறை படம் எடுத்துப் பார்த்து சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போதே இந்த மிஷின் கோழி கறி தின்ன வேண்டாம் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. ஒப்பாரியும், லைட் செட்டும், மைக் செட்டும் தரும் பணத்தில் எங்கிருந்து நாட்டுக் கோழியும், ஆட்டுக் கறியும் வாங்கிச் சமைப்பது?

கொஞ்ச நாட்களாய் சோலையின் நடையில் ஒரு தளர்வு இருப்பது தெரிகிறது. அவள் ஒன்றும் எதற்கெடுத்தாலும், சுணங்கி, சுருண்டு கொள்ளும் ரகமில்லை.

“”சோல… டாக்டராண்ட போயிட்லாம்… வா…”

“”இல்லய்யா… நீ செட்டு வேலய முடிச்சுனு வா… காலைல போய்க்கலாம். எட்டு மணி பஸ் புட்ச்சா மத்தியானம் தின்றதுக்கு திரும்ப வந்துட்லாம்… ன்னா…. ”

அதற்குள் மீண்டும் லைட் கட்ட ஆள் வந்து நிற்க…

நான் புறப்பட்டுப் போவதற்குள் மூன்று முறை வாந்தி எடுத்திருந்தாள் சோலை.

ஆட்டத்துக்கு முன்பாக யாரோ ஒருவரின் பேச்சு இருந்தது. அவருக்கு ஒற்றை மைக்கும் நாலு ட்யூப் லைட்டும் மட்டும் போதுமென்று சொல்லியிருந்தார்கள்.

பேச வந்தவர் நெடுநெடுவென்று உயரமாய் இருந்தார். வெள்ளை வேட்டியும் சட்டையும் தலைமுழுக்க நரைத்தும்…

ராமனைப் பற்றியும் சீதையைப் பற்றியும் காட்டில் அவர்கள் பட்ட துயரம் பற்றியும் தங்கு தடையில்லாமல் பேசினார்.

கூத்தாடிய பொழுதுகளில் ராமர் வேடம் கட்டிய தருணங்கள் நினைவிலாடிற்று. வில்லினை உடைத்துச் சீதையைக் கரம் பிடிக்கும் பொழுதில் ராமன் ஆடும் ஆனந்த ஆட்டம் நுனிப் பாதங்களில் அதிர்ந்தது. வில்லை உடைத்துத் தள்ளிவிட்டு, இருகைகளும் மேல் எழுந்து நிற்க, காற்சலங்கை, கைமணி, மேடையிலிருக்கும் சகல வாத்தியங்களும் முழங்க, சுழன்று, சுழன்று ஆடி…. ஒரு வினாடியில் சட்டென நிறுத்தி, சீதையைப் பார்ப்பது போல் கண்களில் காதல் கூட்டி, கீழிருப்போரை உற்றுப் பார்க்க… கூட்டம் கை தட்டும்.

நினைவு கலைகையில் பேச வந்தவர் தொடந்து பேசிக் கொண்டிருந்தார்.

“”மற்றவர்க்காக… மற்றவர் மகிழ என்றைக்கு வாழ்கிறோமே அன்றே வாழ்வின் வெற்றி துவங்குகிறது, ராமன்….”

கிராமத்திலும் ராமாயணம் கேட்க கொஞ்சம் ஆளிருந்தது. பேச்சாளர் பேசி முடிக்க மணி பதினொன்றரை ஆகியிருந்தது. நேற்றைய மழையின் மிச்சமாய் லேசாய் காற்றில் குளிர் இருந்தது.

அதன் பிறகு ஆட்டம் இருந்தது. ஆட்டம் எப்போதும் மணி பன்னிரண்டுக்கு மேல்தான் துவங்கும். இதுவரை இல்லாத கூட்டம், இப்போது இருந்தது. விசிலும், பாட்டும் காதைப் பிளந்தது. இளவட்டங்களின் உற்சாகம் மைதானம் முழுக்க நிரம்பி வழிந்தது.

ஆட்டம் பார்க்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்க, லைட் இன்னும் அதிகமாய் வேண்டுமாய் இருந்தது. ஆட்டம் ஆடுபவர்கள் சின்னதாய் வேன் ஒன்றில் வந்து இறங்கியிருந்தார்கள். நாலு பெண்களும், ஐந்து ஆண்களுமாக அவர்கள் ஆண் பெண் வித்தியாசம் ஏதுமின்றி இருந்தார்கள். எனக்கு அவர்களைப் பார்த்தாலே எரிச்சலாய் இருந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் கூடுதல் லைட் கட்டி, மைக் ஒன்று மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு மேலும் மேடையில் அவர்கள் கொண்டு வந்திருந்த பெரிய லைட் கட்டுவது சிரமமாயிருந்தது. ஸ்கீரின் துணி கட்டி ஆட்டம் துவங்கிற்று. மைதானம் முழுக்க சனம் நிரம்பியிருந்தார்கள். இளவட்டங்கள் கட்டுப்படுத்த முடியாத உற்சாகத்தில் இருக்க…

“”மியா மியா பூன… மீசையில்லா பூன ”

என்று கட்டியிருந்த எல்லா பெட்டிகளும் அதிர ஆட்டம் உச்சத்தில் இருந்தது. சிவப்பாய், கச்சிதமான உயரத்தில், கச்சிதமான உருவத்தில் ஒரு பெண் அந்தப் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க… எனக்கு எரிச்சல் கூடிற்று. வளைந்தும்… நெளிந்தும்…. குழைந்தும்… கூத்தாடும் பொழுதுகளில் பெண் வேஷமும் கட்டியதுண்டு. அதிலும் பாஞ்சாலியாய் வேடம் கட்டுவது மிகவும் பிடிக்கும்.

“”பாவி தொச்சாதனன் செந்நீ அந்த

பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம்

மேவி ரெண்டுங் கலந்து”

அதற்கு மேல் பாட்டு நினைவுக்கு வராது தத்தளித்தது. ஒட்டுக்கட்டிய தலைமுடியை அவிழ்த்துவிட்டு கையில் கிண்ணத்தோடு வெறிபிடித்த காளிதேவி போல்… காலில் வெறி காட்ட வேண்டும். இவர்கள்போல் மேடையில் ஆடியது குறைவு. சாணி மெழுகிய தரையில் கால்களை அழுத்தி… எடுத்து…. பாஞ்சாலி போல் மேடையில் ஆட வேண்டும் போல் கால்கள் துடித்தன.

மேடை இன்னும் உச்சத்தில் இருந்தது. சிறிதும் கூச்சமற்று விதம் விதமாய் அந்த சிவந்த பெண் ஆடிற்று.

எனக்குச் சோலையின் நினைவு வந்தது. மணி இரவு ஒன்றரையைத் தாண்டியிருந்தது.

“”யாரும் இது மேல கைய வெக்காம பாத்துக்கப்பா… நான் வூட்டாண்ட போனது வந்திர்றேன்…”

மைக் செட்டை விட்டு விட்டு வீடு நோக்கி வந்தேன். தாழ்ப்பாள் இல்லாத கதவில் மெல்லக் கை வைத்துத் திறக்க… சோலை ஒருக்களித்துப் படுத்துத் தூங்குவது தெரிந்தது. மீண்டும் கதவை அப்படியே சாத்திவிட்டு வந்தேன்.

ஆட்டம் ரொம்ப உச்சத்தில் இருந்தது.

“”அத்திரி புத்திரி சித்தினி பொண்ணே

ஆ எந்திரி ஆ எந்திரி…. ”

காதிரண்டும் சப்தத்தில் நிரம்பி வழிய, உறுமாலைத் துணியை இறுகக் கட்டிக் கொண்டு மைக் செட்டுக்கு அருகிலேயே கையைத் தலையணையாய் வைத்துக் கொண்டு தூங்கிப் போனேன்.

“”என்னாப்பா தூக்கம்…. எந்திரிப்பா”

யாரோ என்னை எழுப்பிய போது ஆட்டம் முடிந்துவிட்டிருந்தது. ஆட்டக்காரர்கள் வேனில் அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கட்டியிருந்த லைட், மைக் செட் எல்லாம் அவிழ்த்து அதனதன் பெட்டிக்குள் வைத்து மூடி இறுகக் கட்டினேன். மணி விடிகாலை மூன்றரை இருக்கும்.

பேச்சாளரும் தூங்கி எழுந்து வந்துவிட்டிருந்தார். “”ஆறு கிலோ மீட்டர் மெயின் ரோடு வரும். அதைவிட இதே வேன்ல மெயின் ரோட்லர்ந்து இன்னும் இருபது கிலோ மீட்டர் போனா… அங்கருந்து உங்க ஊருக்கு ஒரே பஸ்ல போயிடலாம் ”

யாரோ அவருக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“”வாழ்க்கைல எங்க ஏறணும் எங்க இறங்கணும்னு நாமளா முடிவு செய்யறோம். நமக்கு ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண்னு ஏன் எல்லாமே ரெண்டு ரெண்டா இருக்கு தெரியுமா? ஒண்ணு நமக்கு… இன்னொன்னு” என்று விடாமல் பேசிக் கொண்டிருந்த அந்த சிவந்த பெண் இப்போது வேறு மாதிரியாய் இருந்தது. காலையும், மாலையும் மினி பஸ்ஸில் ஏறிச் செல்லும் பள்ளிப் பிள்ளைகள் போலிருந்தது. அதே மாதிரியான ஓர் உடையைத்தான் போட்டிருந்தது அந்தப் பெண்.

ஆட்டக்காரர்களும் அவரவர் பொருட்களை வேனில் ஏற்றி முடித்திருக்க… தூரத்தில் பக்கத்து வீட்டு வெள்ளையப்பன் ஓடி வருவது தெரிந்தது.

அருகில் வர வர அவன் தோளில் யாரோ கிடப்பது தெரிய எனக்குள் கலவரம் படர்ந்தது. கிடப்பது சோலைதான் என்பதை உணர, எனக்குக் காலடி நிலம் நழுவிற்று.

“”சோல… சோல… ன்னா ஆச்சு”

“”முடியலய்யா…. வலிக்குதுய்யா…”

“”டவுனுக்கு இட்டுனு போயிறலாம்… கூத்து… வயிறு… கொஞ்சம் வீக்கமா கெடக்குது”

அந்நேரத்துக்கு எப்படி எதில் என்று நான் யோசித்துக் குழம்ப… ஆட்டக்காரர்கள் வந்த வேனிலேயே போகலாம் என்று முடிவாக…

“”இதெல்லாம் வாடகைல பேசலப்பா… போற வழில ஏதாவது ஆயிருச்சுன்னா… ம்ஹூம்…”

என்றபடி வேன் டிரைவர் மறுக்க… எனக்கு அப்போதுதான் சோலையின் உடல் நிலவரம் முழுதாய் உறைத்தது. எனக்குள் கிலியடித்தது. சோலை என் கையிலிருந்து நழுவிக் கொண்டிருப்பதுபோல் தோளிரண்டும் வலித்தது. நான் எதுவும் பேச முடியாது மெüனமாய்க் கிடந்தேன். சோலையிடம் அசைவு இருந்தது.

“”முடியலய்யா… வலிக்குதுய்யா” என்றபடி முனகல் மட்டும் வந்து கொண்டேயிருக்க… ஒரு வழியாய் வேனில், சோலையை ஏற்றிப் படுக்க வைத்து நானும் வெள்ளையப்பனும் ஏறிக் கொண்டோம்.

“”மைக்செட்காரரே… ஒண்ணும் பயப்படாதீங்க. வாழ்க்கைல இந்த மாதிரி சிக்கலான நேரங்களில” என்று பேச்சாளர் பேசத் துவங்க, நான் துவண்டு போயிருந்தேன்.

சில நிமிடங்களில் மெயின் ரோடு வர…

“”இங்கயே எறக்கிறலாம்”

என்றபடி வேன் டிரைவர் நிறுத்த…

அந்தச் சிவந்த பெண் வேகமாக எழுந்து சத்தமிட்டது. எனக்கு எதுவும் புரியவில்லை. தொடர்ந்து அந்தப் பெண் சப்தமிட… வேன் தொடர்ந்து போய் எங்களைப் பெரிய ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்திற்று. பொட்டலமாய்க் கிடந்த சோலையை எல்லாரும் சேர்ந்து இறக்கி வைத்துவிட்டு… நொடியில் அனைவரும் காணாமல் போயினர்.

“”வலிக்குதுய்யா…” இதே முனகல் தொடர்ந்தபடி சோலை நெளிய… மணி நாலு இருக்கும். வெள்ளையப்பன் மீண்டும் சோலையைத் தோளில் சுமந்தபடி நடக்கத் துவங்க…

“”கூத்து… துட்டு கிட்டு வெச்சுனு கீறியா…”

பதில் சொல்ல முடியாத இயலாமையில் நான் ஏதும் பேசாது நடந்தேன்.

“”இருங்க தாத்தா…. நான் போய் வண்டி கொண்டு வரேன்” அந்தச் சிவந்த பெண் எங்களோடு இறங்கியிருந்தது. ஓடிப்போய் சக்கர நாற்காலி கொண்டு வந்து… சிவப்பு கலரில் லைட் எரிந்த பெரிய வாசல் வழியாக உள்ளே அழைத்துப் போயிற்று.

எதிரில் வந்த எல்லாரிடமும் என்னவோ புரியாத மொழியில் பேசியது. என்னிடம் ஒரு பேப்பரில் கைநாட்டு வாங்கி…. சோலையை உள்ளே அழைத்துப் போன பிறகு மெதுவாக…

“”யம்மா… நீ உங்க ஊருக்குப் போகலயா” என்றேன்.

“”போயிக்கலாம் தாத்தா… பக்கந்தான்…. எங்க ஊரு”

“”எங்கிட்ட துட்டு ஏதும் இல்லம்மா… ஊட்டாண்ட போயி எதனா எடுத்துனு வந்தாதான்”

“”ஒண்ணும் அதிகமா தேவையிருக்காது தாத்தா…. இது கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிதான்….”

அதற்குப் பிந்தைய நிமிடங்கள் நகராது நகர்ந்தன. பிறகு ஊசியும் குளுகோஸ் பாட்டிலும், மாத்திரையும், மருந்தும் கொடுத்து, சோலை மீண்டும் என் கைகளுக்கு வந்துவிட்ட தருணத்தில் விடிந்து ஏழரைக்கு மேல் ஆகியிருந்தது.

“”நான் வர்ட்டா தாத்தா… இனிமேல ஒண்ணும் பிரச்னையில்ல… ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு வீட்டுக்குப் போயிருங்க… ”

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“”யாரும்மே நீ… சாமியாட்டம் வந்து என் சோலய காப்பாத்திக்கறயே… யாரும்மே நீ”

என் கண்களில் நீர் தளும்பிற்று.

“”நாம்பல்லாம் ஒரு சாதி தாத்தா… எங்கப்பனும் கூத்தாடிதான்… நா மட்டும் என்னவாம்? ”

அந்தப் பிள்ளையின் குரலில் மனம் நெகிழ்ந்து போயிற்று. கல் கணக்காய் தொடைகள் திரண்டன. புஜங்கள் என்னையும் அறியாது எழும்பின. கைகளின் நடுவிரல்கள் முதலில் மோதி பின்னர் உள்ளங்கைகள் இணைந்து குவிந்தன.

சலங்கையில்லாத வெறும் கால்கள் நிலத்தில் அதிர….

“”தந்தரணத் தந்தரணத் தத்தோம்

தந்தரணத் தந்தரணத் தத்தோம்

தாயே வணக்கம்

எந்தாயே வணக்கம்”

பெருங்குரலில் பாடியபடி காற்றில் தாள வாத்தியங்கள் முழங்க நான் ஆடிய கூத்து இதுவரை எங்கும் என்றும் ஆடாதது.

என் நன்றியை சொல்ல எனக்கு என்ன தெரியும்? கூத்தாடுவதைத் தவிர.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

1 thought on “ஆடாத கூத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *