அவன்…அவள்…அது ….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 6,468 
 
 

எதிர்பாராதது.!

இப்படி நடக்குமென்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.

சில விநாடிகளுக்கு முன்தான் அழகேசன் கைபேசியில் தொடர்பு கொண்டான்.

இவன் என் நண்பன். பால்ய காலம் முதல் பழக்கம்.

கைபேசியை எடுத்துக் காதில் வைத்து, ” என்ன ? ” என்றேன்.

” உன் பேச்சை நம்பி என் தங்கச்சியைக் கொடுத்ததுக்குச் சரியான செருப்படி. பையன் சரி இல்லே. ” சொன்னான்.

அவன் யாரைச் சொல்கிறான் என்பது புரிந்தது.

” மூனு வருசம். குழந்தை இல்லாம தவமாய் தவமிருந்து பெத்தப் புள்ள.

இன்னைக்குப் பிறந்த நாள். கொண்டாடாம அவன் வீட்டுத் தோப்புல மப்புல கெடக்கான்.”

” அப்படியா ? ” அதிர்ந்தேன்.

” ஆமாம். ”

” கடந்த ஆறு மாசமா ஆளே சரி இல்லே. தினம் குடி. பொழுதுக்கும் பொண்டாட்டியோட சண்டை. வேலைக்கு போற ஆள் வீட்டுக்கு நேரா நேரத்தோடு வர்றதில்லே. இஷ்டத்துக்கு வந்து இஷ்டத்துக்குப் போறான். கட்டினவள் கேட்டா அடி உதை. நல்ல பையன்னு சொல்லி இப்படி என் தங்கச்சி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியே…..? ! ” கமறினான்.

” சரி. இரு நான் கேட்கிறேன். ” ஆளைச் சமாதானப்படுத்தச் சொன்னேன்.

” கேட்கிறதோட விடக்கூடாது. அவனை சரி பண்ணு. இனிமே அவன் இப்படி நடக்கக் கூடாது. குடியைத் தொடக்கூடாது. ஒழுங்கு மரியாதையாய் பொண்டாட்டியோட குடித்தனம் பண்ணனும். என் தங்கச்சிக்கு என்ன குறைச்சல். அழகு பொண்ணு. அம்சமானவள். பையன் உனக்கு எதிரே நல்லவனாய் நடிச்சிருக்கான். நீ ஏமாந்திருக்கே. உன்னை நம்பி நானும்
ஏமாந்துட்டேன். ” என்றான்.

மனக்குமுறல். கொந்தளிப்பு. விட்டால் பேசிக்கொண்டே போவான். ! புரிந்த நான்…

” சரி. விடு. நான் உடனே போய் அவனைக் கண்டிக்கிறேன்.” சொல்லி அவன் அடுத்த வார்த்தை பேசவிடாமல் அணைத்தேன்.

பரிந்துரை செய்ததற்குப் பஞ்சாயத்து ! – உடன் புறப்பட்டேன்.

இரு சக்கர வாகனத்தில் பத்தே நிமிடப் பயணம். ராமு அவன் வீட்டுத் தோட்டதில்தான் இருந்தான். தண்ணி கிண்ணி இல்லை. போர் செட்டருகில் தொபதொபவென்று தண்ணீர் கொட்டும் குழாய்க்கருகில் சர்வ சாதாரணமாக நின்றான்.

என்னைப் பார்த்ததும் முகம் மாறினான்.

அருகில் சென்றேன்.

” ஏன்டா இப்படி…? ” ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உதிர்த்தேன்.

அடுத்த விநாடி……

” வா. உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். நீயே வந்துட்டே. இந்தா வாங்கிக்கோ…” கண்ணிமைக்கும் நேரத்தில் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து என் வயிற்றில் சொருகினான்.
எதிர்பாராத தாக்குதல்.

” ராமூமூமூ… ! ”அலறினேன்.

” என்ன ராமு கோமு. பொண்ணை எனக்குக் கட்டி வைச்சதுமில்லாம அவளுக்குப் புள்ளை வேறு கொடுத்திருக்கே.! எல்லாம் உன்னால் வந்த வினை. என் வாழ்க்கை நாசம். இந்தா
வாங்கிக்க…” – அடுத்த குத்தை ஆழமாகச் சொருகி… திருகி….குடலை சரிய விட்டு கத்தியை வெளியே எடுத்தான்.

‘ ராமுவை உடன் வந்து சந்திக்காமல் அவன் மனைவியைத் தொட்டு வந்திருந்தால்…இதை தவிர்த்திருக்கலாம்.! ‘ – நினைத்துக் கொண்டே சரியும் குடலைக் கையில் பிடித்தவாறு சரிந்தேன்.

என்னருகில் திடீரென்று தோன்றிய எமன், ” இதெல்லாம் அடுத்தவன் பெண்டாட்டியைத் தொடும் போது யோசிச்சிருக்கனும். இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?. கிளம்பு.! ” – சொல்லி சட்டென்று என் மீது பாசக் கயிற்றை வீசி கொத்தாகத் தூக்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *