அழிக்கமுடியாதவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 10,418 
 

இரவு எட்டு மணி, கூட்ட நெரிசல்மிக்க மதுரை போத்திஸ் கடையில் இருந்து வெளியே வருகிறான் கார்த்திக்(இவன் ஹீரோ இல்லீங்க). மூத்த மகள் ரம்யாவுக்கு கார் வடிவில் ஆன உண்டியலை இலவசமாக வாங்குவதற்காகவே ரெண்டாயிரம் ரூபாய்க்கு சுடிதார் எடுத்திருந்தான். அந்த உண்டியலை வெளியே தனியாக வாங்கிருந்தால் கூட ஐம்பது ரூபாயில் முடிந்திருக்கும். இலவசம் என்ற சொல்லை கேட்டாலே இங்கு சிலர் மனதில் சந்தோஷம் வந்துவிடும். இளைய மகள் நித்யாவுக்கு தனக்கு உண்டியல் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், புது சுடிதார் வாங்கிய சந்தோஷத்தில் அமைதியாக வந்தாள். அவள் கையில் கடைக்காரன் உண்டியலையும், சுடிதாரையும் தன் கடையின் பாரம்பரிய பச்சை நிற போத்திஸ் முத்திரை பதிக்கபட்ட ககவரில் வைத்து தந்திருந்தான். அந்த கவர் தாங்க நான்!!!(இந்த கதையோட ஹீரோ)…..

நாங்க நால்வரும் கார்த்திக் வண்டியில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றோம். அது ஒரு குறுகிய முட்டுச்சந்து, அதன் கடைசியில் இடது புறமாக அமைந்திருந்தது கார்த்திக்கின் வீடு. உள்ளேயும் வெளியேயும் சந்தன நிறத்தில் வண்ணம் தீட்ட பட்டிருந்தன. நுழைந்தவுடன் முதல் அறையில் செருப்பு அடுக்கி வைக்க ஸ்டாண்டும், அதன் அருகே நாற்காலியும், மேஜையும் இருந்தன. சில செய்திதாள்கள் கீழே சிதறி கிடந்தன. அடுத்ததாக ஹாலில்
டிவியும், பூஜை அலமாரியும் இருந்தன. மீதமுள்ள இரு அறைகள் சமையல் அறையும், பெட் ரூமும் ஆக இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன். நித்யாவிடம் இருந்த என்னை வாங்கி பூஜை அலமாரியை திறந்து ஒரு புகைப்படத்தின் அருகில் படுக்க வைத்தான். அப்போது டிவியின் மேல் உள்ள சுவர் கடிகாரத்தில் மணி சரியாக ஒன்பதை தொட்டது. அதன்பின் அலமாரி கதவை சாத்தி விட்டார்கள்.

“என்னடா இது, வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படி இருட்டு அறையில் தனியாக வைத்து பூட்டிவிட்டார்கள்” என்று பயத்துடன் தூங்கினேன்.

மறுநாள் காலை நித்யா தான் அலமாரி கதவை திறந்தாள். அப்போது மணி ஏழரையை தாண்டியது. நித்யா என்னை நோக்கி கையை கும்பிட்டு பேச ஆரம்பித்தாள்.

“அம்மா… இன்னைக்கு என்னோட பிறந்தநாள். ஸ்கூலுக்கு கலர் டிரஸ் போட்டுட்டு போக போறேனே” என்று வாய் நிறைய பற்கள் தெரிய சிரித்து கொண்டே சொன்னாள்.

“நீ போட்டு இருக்குற அதே கலர்ல தான் நா டிரஸ் எடுத்திருக்கேன்!!!” என்றாள்.

“Same pinch, சாக்லேட் தா” என்று கைகளை நீட்டி ஏக்கத்துடன் பார்த்தாள்.

கண்களில் நீர் கசிந்து இருந்தன.

பின் குளிக்க சென்று விட்டாள். அதன் பின்தான், நான் அந்த பெண்ணின் புகைப்படத்தை கவனித்தேன். மிக சாந்தமான முகம். நேற்று வைத்த பூ காய்ந்து தொங்கி கொண்டிருந்தது. எனக்கும் நித்யாவை போல் ஒரு தாய் இல்லையே என்று வருந்தினேன். அப்போது தான் எனக்கு அது தோன்றியது, சரியாக பத்து மணி நேரம்
இந்த தாயின் மடியில், ஒரு கருவில் இருப்பது போல இருந்து பிறந்த குழந்தையாக என்னை நான் எண்ணி கொண்டேன்.

“ஆம்! இன்று முதல் இவள் தான் என் அம்மா, இது தான் என் குடும்பம்” என்று உறுதி செய்து கொண்டேன்.

குளித்து விட்டு வந்த நித்யா, நேராக என்னை தூக்கி என்னுள் இருக்கும் சுடிதாரை எடுத்து சென்றாள். பின் ரம்யா வந்தாள், என்னுள் இருக்கும் உண்டியலை எடுத்து கொண்டு, என்னை சுவற்றில் இருக்கும் கொக்கியில் மாட்டி
விட்டாள். ரம்யா அம்மாவிடம் எதோ வேண்டிக்கொண்டு அந்த உண்டியலில் ஒன்னே கால் ரூபாய் காணிக்கையாக போட்டாள். அம்மா அருகில் நிரந்தரமாக இடம் பிடித்து கொண்ட அந்த உண்டியலை பொறாமையாக பார்த்தேன்.

சமயலறையில் இருந்து மூன்று டிபன் பாக்ஸ் உடன் வந்தார் கார்த்திக். நித்யா அம்மாவின் புகைப்படத்துக்கு புது பூ வைத்தாள். மூவரும் அமைதியாக அம்மாவை வணங்கினார்கள். பின் அனைத்து ஸ்விட்சயும் அணைத்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு சென்றார்கள்.

சிறிது நேரம் கழித்து தான் நான் கவனித்தேன். தூரத்தில் கடிகாரம் மாட்டி இருக்கும் சுவர் அருகில் வயதான மஞ்சள் பை அய்யா ஒருவர் தொங்கி கொண்டிருந்தார்.

“அய்யா… நான் தான் இந்த வீட்டுக்கு புதிதாய் வந்தவன்” என்று அவருக்கு காது கேட்காது என்று எண்ணி கத்தி சொன்னேன்.

“வா தம்பி!!!” என்று முதியவரிடம் இருந்து பதில் வந்தது.

“நான் போத்திஸ் பரம்பரையை சேர்ந்தவன்” என்றேன்.

“ஓ அப்படியா!!, நீ பார்பதற்கு விசித்திரமாக இருகிறாய்” என்று என் மேனியின் பொழிவை பார்த்து ஆச்சிரியமாக கேட்டார்.

“ஆம் அய்யா, நான் பிளாஸ்டிக் பொருளால் உருவாக்க பட்டவன். என்னை யாராலும் அழிக்க முடியாது” என மிக கர்வமாக கூறினேன்.

“நீங்க தப்பா எடுத்துக்கமாடீங்கனா, உங்க வயசு என்னனு சொல்ல முடியுமா?” என்றேன்.

“எனக்கு பத்து வயசு ஆகுது. அந்த காலத்துல மாதிரி இப்ப எல்லாம் எந்த வேலையும் செய்ய முடியுறது இல்ல” என்று புலம்ப ஆரம்பித்தார்.

எங்கள் வாதத்தை அதோடு முடித்து கொண்டோம். நேரம் மாலை ஐந்து மணி ஆனபோது ரம்யாவும் நித்யாவும் பள்ளி முடிந்து வீடு திரும்பினார்கள். ஓய்வு எடுத்து கொண்டிருக்கும்போது கார்த்திக்கும் வந்து சேர்ந்தார்.

“நித்யா.. உனக்கு டியூஷன்க்கு டைம் ஆயிடுச்சு. சீக்கரம் கிளம்பு” என்றான் கார்த்திக்.

அன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள். நித்யா என்னை டியூஷன் அழைத்து செல்ல முடிவு செய்தாள். அவளின் புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவற்றால் என்னை நிரப்பினாள். சில நேரங்களில் அவள் என்னை தூக்கியபடி நடனமாடி செல்வாள். முன்னும் பின்னும் என்னை வீசி நடப்பாள். தினமும் அவளுடன் செல்ல ஆரம்பித்தேன். அவை என் வாழ்வின் சந்தோஷமான நாட்கள். ஒரு சில நாட்கள் என்னை ஒரு குழந்தை போல நெஞ்சோடு அனைத்து தூக்கி கொண்டு ஓடுவாள். எனக்கு அவள் ஒரு நல்ல தோழியாக மாறினாள்.

வார இறுதி நாட்களில் தான் எனக்கு ஒய்வு கிடைக்கும். ஒரு சனிக்கிழமை இரவு மீண்டும் மஞ்ச பை அய்யா என்னை ஆச்சிரியமாக பார்ப்பது தெரிந்தது.

“என்ன அய்யா? அப்படி ஆச்சிரியமாக பார்குறீர்கள்” என்றேன்.

“ஒன்னுமில்ல பா தம்பி!, உன்ன முதல் நாள் எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறாய்!!” என்று கூறினார்.

“அய்யா, அது என்னை உருவாக்கியவன் கொடுத்த வரம்!!” என்று பெருமிதமாக சொன்னேன்.

சிறிது அவகாசம் விட்டு நான் அவரிடம் பேச்சை மாற்றுவதற்காக இதை கூறினேன்.

“அய்யா, இன்றுமுதல் என் பெயர் நித்!!” என்றேன்

“என்னப்பா சொல்ற? யார் உனக்கு பெயர் எல்லாம் வச்சது” என்று வினவினார்.

“இன்று நித்யா அவள் தன் பெயரை என் மேல் எழுத முயற்சித்தாள். பாதி எழுதியதும் நிறுத்தி விட்டாள் எனவே நித் என்பது என் பெயர் ஆகிவிட்டது” என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி எழுதியதை காட்டினேன்.

“தம்பி நித்!!, ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லி பலமாக சிரித்தார்.

அவர் சிரித்து முடிக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு பின் கேட்டேன்.

“உங்களுக்கு இந்த வீட்டில் என்ன வேலை? உங்களுக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறீர்கள்” என்று கொஞ்சம் ஏளனமாக கேட்டேன்.

“தம்பி நித்!, நான் உன் அம்மா உயிருடன் இருக்கும் போதே வந்தவன்”

அம்மாவை பற்றி இவர் இன்று தான் பேசுகிறார் என்று அமைதியாக கவனிக்க ஆரம்பித்தேன்.

“உன் அம்மா மிக பொறுமைசாலி. அவள் என்னுள் ரேஷன் கார்டு, கரண்ட் அட்டை, மாத செலவு வரவு புத்தகம் என அனைத்தையும் வைத்திருப்பாள். அவள் ஞாபகமாக எனக்கு அதே பொறுப்பை தந்து விட்டனர்” என்றார்.

அன்று உண்டியலை போல இன்று அவரை கண்டும் பொறமை கொண்டேன். வழக்கமாக இரவு தூங்கும் முன் அம்மாவை கண்ணாடி வழியாக பார்ப்பேன். இன்று கொஞ்ச நேரம் அதிகமாகவே பார்த்து கொண்டேன்.

பல மாதங்கள் சென்றன. அந்த குடும்பத்தில் நானும் ஒருவனாக மாறினேன். சில நாட்கள் மாலையில் ரம்யா காய்கறி வாங்கிவர என்னை எடுத்து செல்வாள். அதிகாலை பொழுதில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கார்த்திக்கும் நானும் சேர்ந்து சென்று வீட்டுக்கு பால் வாங்கி வருவோம்.

ஒரு நாள் நித்யாவுடன் வீடு திரும்பி வரும் வழியில் திடீர் என்று மழை பெய்ய ஆரம்பித்தது. அன்று அவள் என்னை தலைக்கு மேல் வைத்து கொண்டு வீடு வரை ஓடி வந்தாள். நித்யாவின் தலை நனையாமல் இருப்பதை பார்த்து எதோ உலக சாதனை நிகழ்த்தியது போல எனக்கு தோன்றியது.

அன்று இரவே மஞ்ச பை அய்யாவிடம் இதை பற்றி பெருமையாக சொன்னேன்.

அவரோ “நீ இருந்த இடத்தில் நான் இருந்திருந்தால் நனைந்தே வீணாகி இருப்பேன்” என்று புலம்பினார்.

அதை கேட்டதும் நான் மனதில் சிரித்து கொண்டேன்.

பின் வழக்கம்போல அவர் தனது சொந்த கதையை புலம்ப ஆரம்பித்து விடுவார். அந்த வீட்டில் அவருக்கு இருக்குற ஒரே ஆறுதல் நான் மட்டுமே. எந்த ஒரு வீட்டில் வசிக்கும் முதியவர்களுக்கும் தன் பேச்சை கவனிக்க ஆள் இல்லை என்று வருந்துவார்கள் என அன்று எண்ணி கொண்டேன்.

இப்படி ஆனந்தாமாக சென்றன என் நாட்கள். திடீரென ஒரு நாள் மாலை, கார்த்திக் கடைக்கு செல்லும் அவசரத்தில் என்னை எடுக்கும் போது கொக்கியில் எனது ஒரு கைபிடி மாட்டி அறுந்தது. வலியால் துடித்த என்னை ஒரு முப்பது வினாடி அமைதியாய் பார்த்தார்.

“பாவம் அவர் என்ன செய்ய முடியும்?” என்றேன்.

பின் நித்யாவை அழைத்து என்னை அவளிடம் கொடுத்து அரை கிலோ வெங்காயம் வாங்க அனுப்பினார். கடையில் இருந்து என் மறு கைபிடியை மட்டும் பிடித்து கொண்டு வந்தாள் நித்யா. என்னால் வலி பொறுக்க முடியவில்லை. வீடு வரும் வரை முழு சக்தியுடன் தாங்கி பிடித்தேன். ஹாலில் நுழைந்தவுடன் எனது மற்றொரு
கைபிடியும் அறுந்து அம்மாவின் அலமாரி கட்டில் காலில் விழுந்தேன். வலியை தாங்கி கொள்ள கற்றேன். இனி இந்த வீட்டில் நான் இருக்க போவதில்லை என்று தெளிவாக தெரிந்தது. வீட்டையும் அம்மாவையும் ஒரு முறை ஆசை தீர பார்த்துக்கொண்டேன்.

வெங்காயத்துக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற மகிழ்ச்சியில் என்னை தூக்கினான் கார்த்திக். என்னை பார்த்து கொஞ்சம் யோசிச்சான். பின் தான் தெரிந்தது எனக்கு இன்னும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கு என்று. அந்த வீட்டின் குப்பை தொட்டியாக மாறினேன். செப்பல் வைக்கும் இடத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது. அன்று சனிக்கிழமை என்றதால் நித்யா என்னை மாலையில் தேடவில்லை. அவ்வபோது எட்டி நின்று அம்மாவின் படத்தை பார்த்து ஏங்குவேன்.

இரு தினங்களில் குப்பைகளால் நிரம்பி வழிந்தேன். அன்று திங்கட்கிழமை காலை, வெளியே தெருவில் குப்பை வண்டியின் மணி ஓசை கேட்டவுடன் என் கண்ணில் கண்ணீர் வர தொடங்கின. கண்ணீர் நம் உடலின் அசுத்தமான நீர். நாளை ரம்யா பிறந்தநாள் அதனால் இன்று போத்திஸ் செல்ல போவதாக கார்த்திக் நித்யாவிடம்
கூறினான். இதை கேட்டவுடன் என் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. என் இடத்தை வேறொரு தோழன் நிரப்ப போறான் என்று சந்தோஷமாக இருந்தது. மற்றொரு பக்கம் வயதான மஞ்ச பை அய்யாவிடம் சொல்லாமல் கிளம்புவதை நினைத்தால் வருத்தமாக இருந்தது.

“நித்யா அந்த குப்பையை வண்டியில் போய் போட்டு வா” என்று கார்த்திக் சமயலறையில் இருந்து கத்தினான்.

நித்யா என்னுள் இருக்கும் குப்பை சிந்திவிட கூடாது என்று கவனமாக தூக்கினாள். அவளுடன் நான் செல்லும் கடைசி பயணம் அது. வீட்டு வாசலை தாண்டும்போது கண்ணை மூடி கொண்டேன். சில நிமிட நடை தான், நித்யா என்னை தூக்கி வீசி எறிந்தாள். அநேகமாக திரும்பி பார்க்காமல் தான் நடந்து சென்று
கொண்டிருப்பாள்.

குப்பை வண்டி எனது பாடை ஆனது, எப்போதும் கேட்கும் மணியோசை இப்போது சாவு மணியாக கேட்டது, குப்பை வண்டியில் இருந்து ரோட்டில் சிதறும் காகித குப்பை மலர்களாக தோன்றின. என்னை யாராலும் அழிக்க முடியாது என்று எண்ணிய எனக்கு அந்த குடும்பத்தில் இருந்து பிரிவது ஒரு சாவை தந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *