‘எவன் எவனுக்கோ பேரும் புகழும் கிடைக்குது!’ கையிலிருந்த தொலைபேசியை சோபாவின் பக்கத்தில் எறிந்தார் பழனியப்பன். அவருக்கு எழுந்த எரிச்சலில் தூர வீசியிருக்கலாம்தான். ஆனால் நஷ்டம் தனக்குத்தானே என்ற விவேகம் அவருக்கு இருந்தது.
யாரோ நடிகனாம். அதுவும் ஆரம்ப கால நடிகன். ஆனால் பிழைக்கத் தெரிந்தவன். இல்லாவிட்டால், அவனுடைய அற்ப சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை தருமத்திற்குக் கொடுத்திருப்பானா! அதையும் நான்கு பதிவுகளில் – பெரிய போட்டோவுடன் – முகநூலில் போடச் செய்திருப்பானா?
எல்லாம் அரசியலில் நுழையச் செய்கிற சதித்திட்டம்!
தானும்தான் நாற்பது வருடங்களாக இதே துறையில் இருக்கிறோம். இந்த யுக்தி தோன்றாமல் போய்விட்டதே!
பழனியப்பன் உடனே காரியத்தில் இறங்கினார். ஏதாவது ஓர் அனாதை ஆசிரமத்துக்குப் போய், அங்குள்ள குழந்தைகளுக்கு ஐந்தோ, பத்தோ கொடுப்பது என்று தீர்மானித்தார். என்ன, ஆயிரம் வெள்ளி செலவாகுமா?
அது போதாது. பத்தாயிரமாவது கொடுத்தால்தான் பெயர் வரும். சற்று யோசித்து, பாலஸ்தீனத்தில் போரினால் அவதிப்படுகிறவர்களுக்கு எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் போதாது. தன் தர்ம குணத்தைப் பறைசாற்ற நல்ல வழி அதுதான் என்று பலவகையாக யோசித்து, காசோலையில் எழுத ஆரம்பித்தார்.
அவர் தோள்வழியே எட்டிப்பார்த்த மனைவி, “எதுக்குங்க இவ்வளவு காசு?” என்று வாயைப் பிளந்தாள்.
கோயிலில் தட்சணையாக ஒரு வெள்ளி போடுவதே அதிகம் என்று அவளைக் கண்டித்திருக்கிறார். “சாமிதான் நமக்குக் குடுக்குது. அது கடனா, நாம்ப திருப்பிக்குடுக்கறதுக்கு?” என்று அவர் சொல்லியதும் அவளுக்கு நியாயமாகத்தான் பட்டது.
இப்போது தன் காசு எங்கே போகிறது என்பதை விளக்கிவிட்டு, “அவங்க நம்ப இனம் இல்லே. இப்படியெல்லாம் ஏதாச்சும் செஞ்சாத்தான் முன்னுக்கு வரமுடியும். நாளைக்கே, ‘மந்திரி பொண்டாட்டி!’ அப்படின்னு நாலு பேர் வாயைப் பிளந்து, ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுவாங்க, பாரு!”
தான் என்ன, பிற ஆண்களைப்போல் ஊருக்கு ஒரு சின்ன வீடு வைத்திருக்கிறோமா? மனைவியே அழகாக, மக்காகத்தானே இருக்கிறாள் என்ற பெருமை கலந்த திருப்தி அவருக்கு. தன் நல்ல குணத்துக்கு கண்டிப்பாக அரசியலில் முன்னுக்கு வந்துவிடலாம்.
தன் காரியதரிசியை அழைத்தார். “புத்தாண்டு வருதில்ல? அதுக்கு ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு நான் போய் நன்கொடை குடுக்க ஏற்பாடு பண்ணு”.
“அதுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்குங்களே! நாலே நாள்லே கிறிஸ்துமஸ் வருது!”
“அப்போ சரி. அப்படியே இதையும் அனுப்பிடு!” என்று, காசோலையை அவன் கையில் கொடுத்தார். உள்ளூர் முகவரிதான். போரினால் பொருளையும் நாட்டையும் இழந்து திண்டாடுகிறவர்களுக்கு அளிக்க யாரோ புண்ணியவான் நிதி திரட்டுகிறான்.
அனாதைக் குழந்தைகள் ஒவ்வொருவராக வரிசையில் வர, பழனியப்பன் போலிப்புன்னகையுடன் அவர்கள் கையில் பத்து வெள்ளியைக் கொடுக்க, காமராக்கள் இயங்கின.
அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கென நியமிக்கப்பட்டிருந்த ஆயா உடனே அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொள்வாள் என்று.
“என்னோடது!” என்று ஒரு சிறுவன் தப்பித்து ஓடப்பார்த்தான். அவளும் விடாது துரத்தினாள்.
கிரீச்!
திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏதோ விபத்து, ஸார்,” என்று கூடவே இருந்த காரியதரிசி கூறினார்.
“இதெல்லாம் போலீஸ் விவகாரம். நாம்ப மாட்டிக்கப்படாது! வந்த வேலை முடிஞ்சுடுச்சில்ல!”
அப்போது அவருக்குத் தெரியவில்லை அவர் கொடுத்திருந்த பத்து வெள்ளியைப் பத்திரப்படுத்துவதற்காக நடுத்தெருவில் ஓடி, விரைந்து வந்த வாகனச் சக்கரத்தில் மாட்டி உயிரை இழந்தான் ஒரு சிறுவன் என்று.
மேலும் இரு தினங்கள் கழிந்தன. தினசரியைப் புரட்டியவருக்கு அதிர்ச்சி.
‘போரினால் பொருளையும் நாட்டையும் இழந்து திண்டாடுகிறவர்களுக்கு அளிக்க நிதி அளியுங்கள்!’ என்று லட்சக்கணக்கில் பணம் சேர்த்து, அதைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்ட பத்து நபர்களின் புகைப்படம்!
குற்றம் செய்யும்போது அவமானம் இல்லை, பிடிபட்டால்தான் கேவலம் என்ற உண்மையை வெளிக்காட்டுவதுபோல், எல்லாரும் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தார்கள்.
தன்னிரக்கத்துடன், ‘இது நல்லவனுக்குக் காலமில்லே!’ என்று உரக்கவே கூறினார் பழனியப்பன்.
கூடவே, ‘கொஞ்ச நாளிலேயே லட்சக்கணக்கா சம்பாதிக்க இப்படியும் ஒரு வழி இருக்குன்னு நமக்கு தோணாம போச்சே!’ என்ற சிறு வருத்தமும் எழுந்தது.