கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 3,588 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, கிணறு இல்லை. வானம் பார்த்த பூமி. மாரி பொய்த்துவிட்டால் நகரம் நோக்கி நகர வேண்டியது தான். ஊரின் பெரும்பாலான மக்களுக்கு இதே நிலைதான். சென்னை பெருநகரம் இவர்களைப் போன்றவர்களை வாரி அணைத்து கொள்கிறது. கட்டிட வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் புறநகர் பகுதிகள் இவர்களது தொழில் மையம். எங்காவது வாட்ச்மேன் வேலை கிடைக்கும். நெளிவு சுளிவு கற்றுக் கொண்டால், பெரியாள். மேஸ்திரி அன்புக்கு பாத்திரமாகி விட்டால் கொத்தனார்.

மருதனும் அப்படி வந்தவன் தான். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. மழைக் காலம் முன்பாக கட்டிடங்களின் மேல்தளங்களுக்கு கான்கிரீட் போட்டு விடுவார்கள். இருப்பதியொரு நாட்கள் முட்டு நிற்க வேண்டும். அப்புறம் செண்ட்ரிங் பலகைகளைக் கழட்டி கல் தச்சன் கொத்தி பூசு வேலை நடக்க வேண்டும். எப்படியும் நாற்பது நாட்கள் ஓடி விடும். அந்தக் காலத்தில் தான் மருதன் தன் ஊருக்குப் போவான்.

முதல் தூறலுக்கு காத்திருந்து மல்லாட்டையோ, எள்ளோ விதைப்பான். சில சமயம் கரும்பும் உண்டு. செம்மண் பூமி செழிப்பாக இருக்கும். ஒரு வாரம் மழை பெய்தால் கூட போதும். அதிக மழை பயிருக்கு ஆபத்து. விதை வேர் விட்டவுடன் சென்னை வந்து விடுவான். அவன் மனைவி கிளியம்மா பார்த்துக் கொள்வாள். அவன் ஊர் போன நாட்களில் பக்கத்து குடியிருப்பு வாட்ச்மேன் பார்த்துக் கொள்வான். அவன் போகும்போது இவன்.

பொங்கல் தீபாவளி காலங்களில் குடும்பத்தோடு வருவான் மருதன். மாம்பலம் கடைகளில் அலைந்து பண்டிகைத் துணிமணிகளை வாங்குவார்கள். ஒரு வருடத்திற்கு அவைதான் உடுப்பே.

இந்த நான்கு நாட்களாக அவன் தூங்கவேயில்லை. செண்டரிங் அடிப்பதும், கான்கிரிட் போட ஜல்லி, மணல் ஏற்றுவதுமான வேலைகள். கம்பி வந்து இறங்கியிருக்கிறது. சிமெண்ட் மூட்டைகளை த்ரை தளத்தில் முழுவதுமாக அடுக்கியிருந்தார்கள். மீதமான பலகைகளும் கொம்புகளும் ஒருபக்கம். இன்று தான் கொஞ்சம் வேலையும் சத்தமும் குறைந்திருக்கிறது.

படுக்க தோதான இடம் பார்த்தான் மருதன். செண்டரிங் பலகை! இரண்டு அடுக்காக அடுக்கப் பட்டிருந்த பலகைகள் அவனுக்கு ஒரு கட்டிலைப் போலவே காட்சியளித்தன.

‘வா.. வந்து தூங்கு…’

காலை நீட்டி தலையைச் சாய்க்கும்போதுதான் அதைக் கவனித்தான். பலகை இடுக்கிலிருந்தது அது. மினுமினுப்பாக, வரிவரியாக.. நாகசாமி.. அசையாமல் இன்னமும் கூர்ந்து கவனித்தான். வால் இடுக்கில் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறது. உடம்பை அப்படியும் இப்படியும் நெளிக்கிறது. அவனுக்கும் அதற்கும் அரை அடி இடைவெளிகூட இல்லை. அசைந்தால் போட்டு விடும். கட்டை யால் அடித்து விடலாமா? நாகசாமி எங்க குலதெய்வமாச்சே.. உயிருக்கு முன்னால் தெய்வமாவது ஒன்றாவது.. கிளியம்மா, புள்ளைங்க எல்லாம் கண் முன் வந்தார்கள்.

கழற்றிப் போட்ட லுங்கி காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அசையும் போதெல்லாம் நாகம் தலை தூக்கிப் பார்த்தது. லேசாக படம் எடுத்தது. பாதி சாயப்போகும் நிலையில் அவன் உடல் இருந்தது.

ஒரு கையால் லுங்கியை இழுத்து நாகத்தின் தலைமேல் போட்டு கெட்டியாக பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் வால் மாட்டியிருந்த பலகை தூக்கினான். வால் விடுபட்டு விட்டது. பலம் கொண்ட மட்டும் கையை வீசி லுங்கியைத் தூக்கி எறிந்தான்.

நிலவொளியில் நாகம் விடுபட்டு புல்லில் மறைந்தது.

அன்றிரவும் மருதன் தூங்கவில்லை.

– டிசம்பர் 2011

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *