அம்மா காத்திருக்கிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 11,624 
 
 

பாட்னா எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் 9வது plotform-ற்குள் நுழைந்தது.

அதிலிருந்து வழக்கம்போல் பீகாரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞர் கூட்டம் இறங்கியது. அவர்கள் அனைவரும் எங்கு செல்வது, யாரை கேட்பது என தெரியாமல் ஸ்டேஷன்க்கு வெளியே வந்தனர்.

அவர்களில் ஒருவன்தான் நம் யாம்பிரசாத்.

பீகாரின் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து வருகிறான். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால்

வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பா பகதூரும் அதிகம் படித்தவர் இல்லை. அம்மா சந்திரகலா மற்றும் 7வயது தங்கச்சி நீத்து.

பீஹாருக்கே உள்ள வறுமை அவர்களது வீட்டிலும் தாண்டவமாடியது. அப்பாவும் ஓரு சிறிய கம்பெனியில் watchman ஆக வேலை பார்த்து வருகிறார். சொற்ப சம்பளம், அம்மாவிற்கு வேற அடிக்கடி உடல் நலம் பாதிப்பு, தனியார் மருத்துவரிடம் காண்பிக்க வசதி இல்லை, எனவே அரசு மருத்துவமனை மருந்துகள் தான்.

குடும்ப வறுமையை போக்கவும், அம்மாவுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தங்கச்சியை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவும், நான் சென்னைக்கு சென்று வேலைதேடி,சம்பாதித்து குடும்ப செலவிற்கு பணம் அனுப்பி வைக்கிறேன் என பெற்றோரிடம் சொல்லிவிட்டு பீஹாரிலிருந்து கிளம்பி வந்துவிட்டான்.

அவன் ஊரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் புரோக்கர் ஒருவர் சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளிலும், மற்றும் பெரிய நிறுவனங்களின் கட்டுமான பணிகளிலும வட இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவித்து இவனையும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

யாம்பிரசாத் ஸ்டேஷன் -ஐ விட்டு வெளியில் வந்து வட இந்திய இளைஞர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்த இடத்தில் தானும் நின்று கொண்டான்.

அப்போது அங்கு வந்த ஒருவர் வட இந்திய இளைஞர்களிடம் இந்தியில் பேசினார். அவர் தன் பெயர் பிரபுராம் என்றும், தாம் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள், பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு labour காண்ட்ராக்டர் ஆக இருப்பதாகவும்

தெரிவித்து , அந்த இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் தின கூலியாக வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் ஒவ்வொரு வரிடமும் அவர்களது பெயர் மற்றும் முகவரிகளை கேட்டு குறித்துக்கொண்டார். பின்னர், அவராகவே யாம்பிரசாத் யார்? என கேட்டார்.

யாம்பிரசாத் உடனே அவர் அருகில் சென்றான். அவனிடம் யார் அனுப்பி வைத்தார்கள் என்ற விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார்.

பின்னர் அந்த இளைஞர்களை இரண்டு குழுக்களாக பிரித்தார். அதில் ஒரு குழுவினை தன்னுடன்வந்த வந்தஉதவியாளருடன் மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். பின்னர் தன்னுடன் யாம்பிரசாத் இருந்த மற்றொரு குழுவை ஒரு வேனில் அழைத்து கொண்டு சென்றார்.

வேன் ECR ரோட்டில் கானாத்தூர் தாண்டிய பிறகு கடற்கரை திசைக்கு எதிர்புறமாக திரும்பி மூன்று கிலோமீட்டர் சென்றபிறகு ஒரு கட்டிட வேலை நடந்து வந்த இடத்தில் சென்று நின்றது.

அனைவரையும் இறங்க செய்த அவர் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக பொறியாளரையும், மேலாளரையும் சந்தித்து பேசினார். வட இந்திய இளைஞர்கள் அனைவரையும் கட்டுமான நிறுவனம் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்த்து கொண்டது.

அது ஒரு 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணியாகும்.

தற்போதுதான் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின்

supervisor ஒருவருடன் வந்த பிரபுராம் அனைவரிடமும் இவர்தான் உங்கள் சூப்பர்வைசர் -இவர் பெயர் சுரேஷ் பாபு.நீங்கள் அனைவரும் இவர் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு நாளைக்கு Rs.350/-சம்பளமாக கொடுப்பார்கள், வாரத்தில் 6 நாள்கள் வேலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என இந்தியில் சொல்லி முடித்தார். உங்களுக்கு தங்குவதற்கு இங்கேயே shed கட்டியுள்ளார்கள் அதில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம், சமைத்துக்கொள்ளலாம் இதர வேலைகளையும் செய்து கொள்ளலாம் என கூறினார்.

யாம்பிராசத்திற்கும் மற்றும் மூன்று நபர்களுக்கும் தகரத்தால் வேயப்பட்ட குடிசை ஒன்று தங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. காலை 7.00 மணியிலிருந்து மாலை 7.00 மணிவரை யாம்பிரசாத் கட்டிட வேலை களில் பணியாற்றி வந்தான்.

காலையிலும்,, மாலையிலும் தொழிலாளர்களுக்கு tea- யுடன்

பிஸ்கட் கம்பெனியால் வழங்கப்பட்டது.

மதியம் முக்கால் மணிநேரம் சாப்பாடு மற்றும் ஓய்விற்காக வழங்கப்பட்டது.

யாம்பிரசாத்க்கு கட்டிட வேளைகளில் அனுபவம் இல்லையாதலால் பணிகள் அவனுக்கு கடினமாக இருந்தது. தினமும் வேலை முடிந்தவுடன் உடல் வலியாகவும் உணர்ந்தான். எனினும்,

குடும்பத்தின் வறுமை நிலையை உத்தேசித்துஅணைத்து சிரமங்களையும் பொறுத்துக்கொண்டான்.

மாதம்தோறும் சம்பளம் வாங்கியவுடன் அப்பாவின் வங்கி கணக்கில் பணம் போட்டான்.

இரண்டு, மூன்று மாதங்கள் கடந்த நிலையில்,அம்மா,அப்பா, தங்கச்சியையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

எனவே,தீபாவளி பண்டிகை வருவதால் அதைஓட்டி ஊருக்கு சென்று வரலாம் என தீர்மானித்தான். சைட் சூப்பர்வைசரிடம் சொல்லி கம்பெனியில் பத்து நாட்கள் விடுப்பு அளிக்குமாறு கேட்டு ஊருக்கு போய் வர அனுமதி வாங்கினான்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமைகளில் அருகில் உள்ள டவுனுக்கு அறை நண்பர்களுடன் சென்று தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவைகளை வாங்கி வருவார்கள்.

இன்று,ஞாயிற்றுகிழமை யாம்பிரசாத், தனது அறை நண்பன் துக்காராமுடன் டவுனுக்கு சென்று ஊருக்கு எடுத்து செல்வதற்காக சில பொருள்களை வாங்கினான். தங்கச்சிக்காக ஆசையாக teddybear பொம்மை ஒன்றையும் வாங்கி தனது ஜோல்னா பையில் வைத்துக்கொண்டான்.

பொருள்களை வாங்கியபின் இருப்பிடத்திற்கு திரும்பி வருவதற்கு பஸ்ஸில் ஏறி தங்களது கிராமத்திற்கு செல்லும் மெயின் ரோட்டின் முனையில் இறங்கி கொண்டார்கள்.

துக்காராம், யாம்ப்ரசாத்திடம் நீ போய்கிட்டு இரு, நான் பக்கத்து ஊரில் இருக்கும் என் நண்பனை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றான்.

யாம்பிரசாத்தும், சரி என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

ஞாயிற்றுகிழமையாதலால் அந்த நடுப்பகல் நேரத்தில் அந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. தனக்கு பிடித்த ஹிந்தி பாட்டு ஒன்றினை ஹம் செய்தவாறு நடந்து சென்றான்.

சுமார் 1.5 km நடந்தபின் யாம்பிரசாத் ஏதோ ஞாபகத்தில் வழக்கமாக செல்லும் வழியிலிருந்து விலகி வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தான்.

சிறிது தூரம் சென்றபின் தான் பாதை மாறி வந்துவிட்டதை உணர்ந்தான். சற்றே அதிர்ச்சி அடைந்த யாம்பிரசாத் பின்னர் சுதாரித்துக்கொண்டு எப்பிடியாவது இருப்பிடத்திற்க்கு போய் சேர்ந்துவிடலாம் என தீர்மானித்துக்கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

சிறிது தொலைவு சென்றதும் அக்கிராமத்தில் சில வீடுகள் தென்பட்டது. தொடர்ந்து நடந்தபோது ஒரு வீட்டின் வாசலில் ஐந்து வயது மதிக்கதக்க குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

அக் குழந்தையை பார்த்தவுடன் யாம்பிரசாத்திற்கு தனது தங்கையின் ஞாபகம் வந்தது. அக் குழந்தையின் அருகில் யாரும் இல்லை.

யாம்பிரசாத் குழந்தையின் அருகே சென்று ஆசையுடன் கொஞ்சினான்.

அது அழ ஆரம்பித்து. அதை சமாதானம் செய்யும் விதமாக குழந்தையை தூக்கிக்கொண்டு தான் வாங்கியிருந்த teddybear பொம்மையை காட்டி விளையாட்டு காட்ட முயன்றான்.

குழந்தை மிரண்டுபோய் கத்த ஆரம்பித்தது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வெளிய வந்த தாய் குழந்தையை வட இந்திய இளைஞன் தூக்கி வைத்திருப்பதை பார்த்து விட்டு குழந்தையை கடத்தி செல்கிறான் என நினைத்து கத்தி கூப்பாடு போட்டாள் .

ஓடிச்சென்று அவனிடமிருந்து குழந்தையை பிடுங்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள். அவள் போகும்போது பிள்ளையை கடத்துறவன் வந்துட்டான் ஓடிவந்து புடிங்க என கூவிக்கொண்டே சென்றாள்.

அவளின் சத்தம் கேட்டு, குழந்தையின் தந்தை வீட்டிற்குள்ளிருந்தும், மற்றும் அருகே இருந்த ஆண்களும் ஓடிவந்து யாம்பிரசாத்தை சரமாரியாக தாக்க தொடங்கினார்கள்.

யாம்பிரசாத் அலறியபடியே “நான் திருட இல்ல, “நான்திருட இல்ல,” என கொச்சை தமிழில் கதறினான்.

கம்பெனியில் கொடுத்த அடையாள அட்டையை எடுத்து காண்பிக்க அவன் முயற்சி செய்தபோது அதை பிடுங்கி ஒருவன் முள் புதரில் எறிந்தான்.

உணர்ச்சி வசப்பட்டு, நிதானத்தை இழந்த கூட்டம், கண் மூடித்தனமாக தாக்கியதில் யாம்பிரசாத் மயங்கி சாய்ந்தான்.

அப்போதும் தனது மார்புடன் ஆசை தங்கச்சிக்கு வாங்கிய teddybear பொம்மையை அணைத்து கொண்டான். கடுமையாக தாக்கப்பட்டதால், தலையில் பெரிய காயம் ஏற்பட்டதாலும், அதிகம் ரத்தம் வெளியேறியதாலும் அவன்

நினைவை இழக்க ஆரம்பித்தான். இறுதியாக தனது அம்மா, அப்பா, தங்கையை நினைத்து கண்ணீர் விட்டபடி உயிர் இழந்தான் யாம்பிரசாத்.

கூட்டத்திலிருந்த ஒருவன் யாம்பிரசாத்-ஐ மூக்கின் அருகே சோதித்து பார்த்துவிட்டு, “டேய் செத்து போய்ட்டாண்டா “என குரல் கொடுத்தான்,

அதை கேட்டவுடன் மொத்த கூட்டமும் சிதறி ஓடியது.

பஞ்சம் பிழைக்க வந்த ஓரு அப்பாவியின் உயிர் ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தால் பறிக்கபட்டுவிட்டது.

அவன் தரப்பு விளக்கத்தை காது கொடுத்து கேட்க பொறுமை இல்லாத மாக்கள் கூட்டம் அவனை கொலை செய்துவிட்டது,

சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு விசாரணை இல்லாமல் ஓரு அப்பாவிக்கு மரண தண்டனை வழங்கிய இக்கூட்டத்திற்கு யார் தண்டனை வழங்குவது?

யாம்ப்ரசாத்தின் வருகையை எதிர்பார்த்து, அன்பு அம்மா காத்திருக்கிறாள் ஆசைமகன் வந்து நல்ல மருத்துவரிடம் அழைத்து செல்வானென்று,

பாசமிகு அப்பா காத்திருக்கிறார் ஆசைமகன் புதிய துணிகளுடன் வருவானென்று அன்பு தங்கச்சி காத்திருக்கிறாள் அன்பு அண்ணன் பொம்மைகள் வாங்கி வருவானென்று,…..

ஆனால்…?

பின்குறிப்பு :

(சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்ற வதந்தீ பரவியதன் காரணமாக ஒரு இடத்தில் அப்பாவி பெண் ஒருவரும், மற்றொரு இடத்தில் அப்பாவி வடஇந்திய இளைஞர்களும் பொது மக்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. அது என் மனதை மிகவும் பாதித்தது. அச்செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *