அப்பேலங்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,057 
 

(1956ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறைச்சாலைக் கதவு திறந்தது. அதிகாலையில் பறவைகள் வீட்டை விட்டு வெளியேறும் மகிழ்வு போல, சிறையிலே அடக்கி யொடுக்கிக் கிடந்த கைதிகள் புறப்பட்டனர். நாளை புத்தஜெனந்தி. ஆகையால் தண்டனை முடியாத கைதிகள் பலர் மன்னிக்கப்பட்டு – தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு – நாட்டிலே நடமாட விடப் பட்டனர். இக்கைதிகளுள் ஒருவன் ஏங்கிய முகத்துடன், சோர்ந்த உள்ளமுடன் வெளியேறினான். உடைகள் மாற்றப்பட்டு, வேறு உடை தரித்துக் கைதிகள் வீட்டை நோக்கிப் புறப்படும் போதும் கூட அவன் தயங்கினான். நாடு போவதிலும் சிறைக்கூடம் சிங்கார மானது என எண்ணினானோ? சிறைக்கூடத்திலும் பார்க்க நாடு பொல்லாதது என நினைந்தானோ? அவன் பெயர் புஞ்சிசிங்கோ. காலிக்கணித்தாயுள்ள கிராமம் அவன் பிறந்து வளர்ந்த சொந்த நாடு.

புஞ்சிசிங்கோ மனம் ஏன் வீடு செல்ல மறுக்கிறது!

ஆறு மாதங்களுக்கு முன்பு;

இரவு கருமிருட்டு உலகத்தை தன்னுள்ளடக்கி உனது விஞ் ஞான வெளிச்சங்கள் கூட என் கப்பிய இருள்களை அகற்ற முடி யாது என மனிதர்களை பார்த்து சவால்விடுவது போலிருந்தது.

அவள் கண்ணிலே நீர், புஞ்சிசிங்கோவின் உள்ளத்திலே புயல். அவள் புஞ்சிசிங்கோவின் மனைவி மெனிக்கே. ‘மெனிக்கே’ என அவளைச் சிங்கோ அழைக்கும் போது மேனியெல்லாம் அன்புக்குரலால் உணர்ச்சிப்பட்டு; உந்தப்பட்டுக் காதல் உலகம் கண்டவள். அவளின் முழுப் பெயர் ‘றன்மெனிக்கே’ ஆனல் சிங்கோ அழைப்பது மெனிக்கே என்று தான்.

‘மெனிக்கே’ அழகிய எழில் கூடும் பாவை வண்ணப் பதுமை, புதுவனப்புச் செறிந்த பூவை, காவிய நாயகி, கண்ணைப் பறிக்கும் மின்வெட்டு, தங்கமொழி தையல் என்று வர்ணிப்பார்களே அப்படிப்பட்டவளல்ல! அவள் அழகிய அமாவாசை இருட்டு. அவளின் உடம்போ அழகாகவமையாத சதைப்பிடிப்பு அளவுக்கதிகமான அவலட்சணம் நிறைந்தது. அவள் வதனத்தில் எவ்விதக் கவர்ச்சியும் கிடையாது. பாலைவனம் போன்று செழுமை காட்டா கறுப்பு முகம் மெனிக்காவினது. அது மட்டு மல்லாது அவளின் கண்ணிற்குக் கீழே ஒரு வடு. அவ்வடு கறுப்பி மெனிக்காவின் முகத்தில் ஒரு தழும்பாக இருந்தது. அத்தழும்பு உணர்த்தும் பாடம் ஏழ்மையைத்தான். 10 வயது சிறுமியாக இருந்த போது ஒரே துணையாக இருந்த தாய் கிழவியுடன் பசி வயிற்றுடன் ஏங்கிய வாழ்வு வாழ்ந்தாள் மெனிக்கா. தாய்கிழவி பிச்சை எடுப்பவள். மெனிக்கா பிச்சையிலே பங்கு பெற்று வாழ் பவள். ஒரு நாள் பசியின் ஆட்சியில் கிழவியும் மெனிக்காவும் ஆட்பட்டனர். ஒருவரும் உதவவில்லை அன்று. ஆகையால் மெனிக்கா பசியால் சுழன்றாள்; அழுதாள். தாங்கமுடியாத பசி. உயர்ந்தவர்கள், பணத்தால் வளர்ந்தவர்கள், பணத்தால் புகழ் பெற்றவர்கள், பணத்தால்….இப்படியே பணத்தால் பல வாழ்வு வசதிகொண்டு வாழும் அக்கிராமத்திலே ஏழ்மையிலே ஆழ்ந்து கிடந்தனர் தாயும் மகளும் தாங்க முடியாத பசியால். அயல் வீட்டு பலாமரம் அழைத்தது. அம்மரத்திலே பல பலாப் பழங்கள் தொங்கின. சொந்தக்காரரை கேட்டால் கொடுப்பார்களா – ஒரு பலாக்காய்ப் பிஞ்சையாவது கொடுப்பார்களா? திருடி யானாள் மெனிக்கா…?

வாழ்வு வசதி ஒரு பக்கம் குவிக்கப்பட்டு வாழ முடியாத மக்கள் தொகையை இன்னோர் பக்கம் வாழவிட்டு கிடக்கும் சமூதாயத்திலே திருடர் “பிட்பொக்கட்” ஆசாமிகள் உருவாக்கப் படுகிறார்கள்.

மெனிக்கா திருடியல்லள், திருடமனங் கொண்டவளல்லள். புத்தன் மொழியை உணர்ந்த பூவை தான். ஆனால் பசி – கோரப் பசி. கம்பி வேலியால் புகுந்தாள். ஒரு தடியால் பலாப்பழத்தைத் தட்டினாள். பழம் விழவில்லை . காய் ஒன்று விழுந்தது. அதுவும் அவள் கண்மேல் விழ வந்தது. கொஞ்சம் தவறிக் கண்ணின் கீழே விழுந்தது. பலாக்காய் முள்கீறிவிட இரத்தம் ஓடியது. பலாக்காய் சொந்தக்காரர் கண்டுவிட்டால் என்ற பயத்தால் இரத்தம் ஓட ஓட ஓடினாள். தாயை நாடினாள். தாய்க் கிழவி இரத்தம் கண்டு துக்கப்பட்டதிலும் பார்க்க பலாக்காயை கண்டு மனம் மகிழ்ந்தாள். காரணம் தாங்க முடியாத பசி. பலாக்காயை உண்டனர். அவ்வூர் தர்மாஸ்பத்திரி மருந்து அவள் காயத்தை நீக்கியது. ஆனால் தழும்பு அப்படியே இருந்தது.

வாழ்வின் வரட்சியின் அந்தம்வரை வாழ்ந்து பழகிய மெனிக்கா, காலவளர்ச்சியால் பருவமங்கையானாள். ஒவ்வொரு தினமும் வேதனைக் குரலொலியிட்டபடியே மெனிக்காவுக்குக் கழிந்தது. இந்த நிலையிலே உறுதுணையாயிருந்த தாய்க்கிழவி மூச்சுவிட மறந்தாள்; அதனால் “வான்வீடு” சென்றாள். பட்டினியால் இறந்த அக்கிழவி மெனிக்காவைத் தனிமையாக்கி விட்டாள். பருவக்குமரி, செங்காய்ப்பருவம். ஆனாலும் அவளிதழ் கொவ்வையல்ல. அவள் கண் மீன் அல்ல, அவள் கன்னம் ரோஜாவல்ல. அவள் மேனி தங்கமல்ல! ஆகவே ஆண்களின் விழியம்பு பாயவில்லை; பாய முடியவில்லை. மெனிக்காவின் அவலட்சணம் அவளைக் காப் பாற்றியது. ஏழை மெனிக்கா எழிலுடனிருந்திருந்தால், ‘மைனர்’ களின் கண்வீச்சு, பணக்காரரின் அன்பளிப்பு, பெரிய மனிதரின் ‘ஒரு நாள் இன்பம்’, காதல் கீதமியற்றும் வாலிபரின் ‘புது உலகம்’ கண்டிருப்பாள். அவள் விரும்பாவிட்டாலும் அந்த உலகுக்கு ஏழ்மை இழுத்திருக்கும் அல்லது இழுக்கப்பட்டிருப்பாள். அது இயல்பு. ஆனால் மெனிக்காவின் உடல் தோற்றமும் உடையழகும் யாரையும் அவள் பக்கம் திரும்பச் செய்யவில்லை.

மெனிக்கா தாய் இறந்தபிறகு தானே பிச்சையெடுத்து உண்ண ஆரம்பித்தாள். காலி புகையிரத ஸ்தாபனத்தை தனது பிச்சை உத்தியோகத்தின் கேந்திர ஸ்தானம் எனக் கண்டாள். ஒரு பக்கத்திலே இருந்து பிச்சை எடுப்பாள். மந்திரிகள் வந்தனர்; சமூக தொண்டர் வந்தனர்; பிக்குகள் வந்தனர். அவர்கள் கண்ணில் ஒரு வினாடி மெனிக்கா படுவாள். ஒரு சதம் வீசப்படும். புண்ணியம் அவர்களுக்கு சேர்க்கப்படும். அவ்வளவே!

புஞ்சிசிங்கோயும் ஏழைகளின் உலகிலே உண்டாக்கப்பட்ட ஒரு திருடன். “பிட்பாக்கட்”. சிலவேளைகளில் கண்களை மூடி குருடனாகி பிச்சை ஏந்தி நடித்து வாழ்பவன். அவனும் மெனிக்கா வின் இனம். காலி ஸ்தானத்திலே இருவரும் இரண்டு முறை சந்தித்ததும் “பருவத்தேவை” ஒன்றாக்கி விட்டது. அவர்களுக்குக் காதல் தெரியாது. ”லவ்” புரியாது. ஆனால் தேவையே தோ ஒன்றாக்கியது. ஒன்றாகினர்.

அவர்கள் வாழ்வு ஓடியது. இவரும் பிச்சையேந்தினர். வயிறு குளிரக் காணவில்லை. சிங்கோவின் திருட்டு வேலையும் ஆரம்பமானது.

மஞ்சளுடையிலே மக்கள் மத்தியிலே புத்தர் நாமம் கூறித் திருடிவாழும் பலரைக் கண்ட சிங்கோ , தான் மட்டும் திருடனாவதை வெறுக்கவில்லை.

பஸ்சுடன் பஸ்ஸாக ஓடுவான், சனத்திரளில் புகுவான். “மனிபர்சு’டன் வெளிவருவான். அப்படியே ஒரு நாள் மின் வெட்டும் நேரத்தில் ஒரு பர்சுடன் வெளிவந்தான். ஆனால் பர்சின் சொந்தக்காரன் கண்டு விட்டான். பொலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டான். ஆறுமாதம் சிறைவாசம் கிடைத்தது. தன் சிறை வாசத்தை நீக்கி விடுமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கூடக் கெஞ்சினான். ஏனெனில் தேர்தல் காலங்களில் அந்த உறுப்பின ருக்கு எவ்வளவோ திருட்டுதவிகள் புரிந்தவன். ஆனால் அவ்வுறுப் பினர் விரும்பினாலும் சட்டம் அவனை ஆறுமாதம் சிறைக்கம்பி எண்ணத்தான் செய்தது.

சிங்கோ சிறையிலிருந்த காலத்திலே இலங்கையில் தேர்தல் முடிவு அரசாங்கத்தை மாற்றிவிட்டது. ஆட்சிபீடம் முழுதான மாற்றம் பெற்றது.

புத்தஜெயந்தியும் வந்தது. ஆறுமாதம் நிறையுமுன்பே விடுதலையும் சிங்கோவுக்குக் கிட்டிவிட்டது. சிறை செல்லும் போது மெனிக்காவுக்குக்கூடச் சொல்லவில்லை; சொல்ல வசதி யுண்டாகவில்லை. மெனிக்காவின் கதி? உழைக்கத் தெரியாத வளா…? இருந்தும் பிச்சையேந்த வேண்டியது தானே!

துயரத்துடன் காலிப்புகையிரத ஸ்தானத்திற்கு வந்தான். மெனிக்கா உட்காருமிடத்தைப் பார்த்தான். அவள் அங்கே இருந்தாள். ஆனால் மெலிந்து – உருமாறி நோய் கொண்டவளா யிருந்தாள். சிங்கோவை இழந்த ஏக்கமும். பசியின் கோரமும் அவளை உருமாற்றின. சிங்கோவைக் கண்டதும் மெனிக்காவின் மனதிலே ஓர் மகிழ்ச்சி, உடலிலே ஓர் குதூகலம்!

நாட்கள் சில ஓடின.

மொழி மனிதனின் நாகரிக வளர்ச்சி காட்டும் உயிரிய பொருள். தாய்மொழியைத் தம் விழியாகக் கொள்ளல் மனிதர் கடன்.

இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆட்சிபீட மேற் வேண்டி யது நீதி, உரிமையும் கூட. ஆனால் ஹிட்லரின் வாரிசுகள். ரஸ்பு டீனின் வழி செல்லும் மஞ்சள் காவிகள் ஆட்சியைத் தன்பக்கம் திருப்பி, சிங்களமே ஆட்சிமொழியாக்க முனைந்தனர். தாய் தடுத்தாலும் நம்மொழி வீழவிடேன் எனத் தமிழர் உரிமை முழக்கமிட்டனர். தோள் நிமிர்த்தி சிங்கமாகி, மனத்திண்மை கொண்டு சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்கத் துணிந்தனர்.

காலிமுக மைதானத்தில் தமிழரின் சாத்வீகப் போராட்டம். தமிழுரிமைகோரி சத்தியாக்கிரகம்! காந்தியின் வழியிலே போர் – அறப்போர் – அது தமிழரின் உரிமைப்போர்.

அறப்போரை அழித்து விட – தடுத்துவிட ஆட்சி பீடமேறிய பிரமுகர்களின் ஆணவப்பார்வை. அதனால் பல திருடருக்கும், ஏழைகளுக்கும் உழைப்பு. புஞ்சிசிங்கோவின் கையிலே நீல ரூபா நோட்டு. சத்தியாக்கிரகிகளுக்குத் துன்பம் கொடுக்கத்தான்; அடி பழகத்தான், காலியிருந்து கொழும்பு நோக்கிப் பிரயாணமானான். அறப்போர் வீரர்களைத் துரத்தும் திருட்டுப்படையில் அங்க மானான். சிங்கோவின் கையிலே ஒரு மணிக்கூடு. பையிலே இரண்டு ‘மணிபர்சு’. ‘பர்சு’ நிறையப் பணம். மகிழ்வுடன் காலி வந்தான்.

“ஒரு நாளுமில்லாத மகிழ்வுடன் உள்ளீர்களே” என்றாள் மெனிக்கா.

“மெனிக்கே, ‘அப்பே லங்கா’….’சிங்கள லங்கா…’ ஜெய வேவா” – புஞ்சிசிங்கோ மகிழ்வுடன் கூறினான். தன் கையிலிருந்த மணிக்கூட்டை எடுத்தான். பணத்தை வெளியே எடுத்து எண்ணினான்.

மெனிக்கா திகைத்தாள். சிங்கோ எங்கேயோ திருடி விட் டானே; திரும்பவும் சிறைக்கூடமல்லவா போகப் போகிறானே யென துயரடைந்தாள்.

சிங்கோ சிரித்தான்.

“இதுவெல்லாம் தமிழாக்களின் பொருட்கள். களவல்ல. பார்க்கப் பார்க்க – சொந்தக்காரர் அறிய, ஆட்சியறிய எடுக்கப்பட்டது.”

ஆச்சரியமுடன் பார்த்தாள் மெனிக்கா.

“திகைக்காதே மெனிக்கா, தமிழுக்கு உரிமை கேட்டுச் சத்தியாக்கிரகமென்று ஏதோ தமிழர் செய்கிறார்கள் தெரியுமோ? அதற்கு நம் ஆட்சியினர் எதிர்ப்பு. தமிழரைக் கலைக்க நமக்குப் பணம், அதுமட்டுமல்லாது, சத்தியாக்கிரகிகளிடம் இருக்கும் பணம் பொருட்கள் யாவும் நமக்கு”

“சிறைக்கு அனுப்பாதா அரசாங்கம்” எனக் கேட்டாள் மெனிக்கா.

“அவர்கள் நம் துணைவர். நாம் சிறு திருடர்…அவர்கள்…பெரும்…”

கைகொட்ட முடிந்தது அவளால். ஏனா? ஏழையின் பசி நீங்க முடிகிறதல்லாவா?

“இனி மேல் நமக்குப் பயமில்லை” எனக் குரலிட்டாள் மெனிக்கா.

“ஆமாம் மெனிக்கா! இது நமது லங்கா (அப்பேலங்கா) சிறைக்கு என்போன்ற கொள்ளைக் கூட்டம் போகாது இனிமேல். வேண்டுமானால் ‘அப்பேலங்கா’ப் பாராளுமன்றத்துக்கு நாம் போவோம்!”

மெனிக்காவின் கன்னம் சிங்கோ கரத்தால் தடவப்பட்டது. அம்முரட்டுக்கை கறுப்புக் கன்னத்தை ஊன்றித் தடவினதால் ஓர் சிறு ஒலி எழுந்தது. அவ்வொலி “அப்பேலங்கா” என்பது போலிருந்தது.

(சுதந்திரன் 24.06.1956)

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *