சிலிர்க்கும் சிற்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,479 
 
 

அரூபமான அந்த அறையில் நடப்பவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று போலும். பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெளிரிய முகம் முறுக்கிட்ட மீசையின் மழுங்கள் என்று நலன் முகம் பல அமானுஷ்யங்களை கவ்வியிருந்தது. ஆனால் நலனுக்கு இப்போது எந்த பயமும் இல்லை மாறாக பயத்தை தாண்டி ஒரு குழப்பம் அவனுள் கர்ஜித்து கொண்டே இருந்தது பாவம் என் செய்வான் காலச்சக்கரத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கிறான் தற்போது இந்த அறையில் சிக்கி முழி பிதுங்கி நிற்கிறான். நடப்பவை அனைத்திற்கும் தான் தான் விடை என்று ஒருவாறு கணித்து விட்டவன் அந்த விடையின் வினாவுக்காக மூளை நரம்புகள் புடைக்க யோசித்து கொண்டு இருக்கிறான்.

எதற்காக இங்கு வந்தோம் யாருக்காக காத்திருக்கிறோம் என்று முற்றும் மறந்துபோனது. தன் தொல்லியல் வித்தகன் லெனினுக்கு ஆபத்து என்று இங்கு வந்தோம் ஆனால் அக்கம்பக்கத்தினர் அவன் இரண்டு வாரத்திற்கு முன்பே இறந்துவிட்டான் என்கிறார்கள். ஆளில்லாத தனிகாட்டின் நடுவே ஒரு பல இரகசிய அமானுஷ்ய அறைகள் கொண்ட ராஜிய மாளிகையில் தன்னந்தனியே வசித்தவன் இன்று தங்களை தவிக்கவிடுகிறானே. என்னோடு வந்த நாதன் வளவன் முகிலன் ஆகிய மூவர் எங்கே எல்லோரும் தனித்தனியே மாட்டிக்கொண்டார்களா. நான் எந்த அறையில் இருக்கிறேன் லெனின் அந்தரங்க தொல்லியல் ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறோனோ என்னவோ தெரியவில்லையே இங்கு தானே கடந்த மாதம் வந்த போது ஒரு சிலையை உடைத்தோம். லெனினின் கோபத்திற்கு கூட ஆளானோம் மறுபடியும் இந்த அர்த்த ஜாமத்தில் கும்மிருட்டில் இங்கு வந்துவிட்டோம் அவன் நம்மை நன்றாக திட்ட போகிறான். ஒ அவன் தான் இறந்துவிட்டான் என்கிறார்களே என்று கண்கலங்க அவனை நினைத்து கொண்டே மெள்ள நகர்ந்து அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் தொட்டு பார்த்து உணர்ந்தான். இருட்டில் கண் பார்வை தெரியுமளவுக்கு அவனது கண்கள் வவ்வா கண்கள் அல்லவே. சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் பயன்படுத்திய வாள்கள் ஆபரணங்கள் எல்லாம் மின்னியது அது ஒருவகை ௐளியையும் கிளப்பியது. ஏற்கனவே கற்சிலையிடம் சண்டையிட்ட வாள் அவன் கைகளில் தான் இருந்தது. அதை இன்னும் இறுக பிடித்தான்.

அந்த வாள் ஓர் அதி அற்புத வாளென்று அவனுக்கு தெரியாது, எப்படி தெரியும் அதை நாண் பூட்டி வில்லில் அம்பாக எய்யும் சூச்சமத்தை அவன் எப்படி அறிந்திருக்க முடியும்.

காலடி தடங்கள் எங்கே பதிகின்றதென தெரியவில்லை மூச்சின் கூறுகள் எங்கு செல்கின்றன எனவும் அவனுக்கு புரியவில்லை அப்படியே நடக்கலானான் சட்டென கால்கள் எதையோ கண்டுபிடித்தது.

அது ஒரு இரத்தம் தெரித்த ஓலை என்று தொடுவுணர்வில் உணர்ந்தான் நலன். என்ன ஓலை யார் எழுதியது யாரை பற்றி எழுதியது யாருக்காக எழுதியது என மனம் சஞ்சலமடைந்தது, பின்பு இது கூட அடையாத மனம் என்ன மனம்!.

ஒருவேளை நம்மை பற்றி எழுதியிருக்கலாமோ இந்த விடைக்கு வினா கிடைக்குமோ என்று அவனுக்கு தோன்றியது. தவறான யோசனை ஹூம் என்ன செய்வது விதி வலியதல்லவா. வெளிச்சம் எங்கே என்று தேடும்போது சரியாக ஞாபகம் வந்தது வாள்கள் கிடத்தப்பட்ட இடத்தில் மாணிக்க ஹாரத்தின் வெளிச்சம் வழி கொடுக்கலாம் என்று வந்த வழி சென்றான். அதுவரை சிலந்தியின் சினுங்கல்களும் கொசுக்களின் ரீங்காரமும் இட்ட அவ்விடத்தில் அமைதி பரவியது. திடிரென ஒரு நீண்ட நிசப்தம் அவன் வியர்வை துளி மண்ணில் வீழ்ந்து சிதறிய ஒலியை கூட கேட்குமளவுக்கு அப்படி ஒரு அமைதி.

தூரத்து அறையின் கதவு பட்டென்று திறந்து மூடி திறக்க சட்டென்று பலத்த மூச்சு அவன் கழுத்தருகே பாய்ந்தது யாரென்று தெரியவில்லை மூச்சின் சூடு அதிகமாகவே இருந்தது மெதுவாக அவன் கைகளை கழுத்தருகே வைத்தான் சில்லென்று சில்லிட்டது இரத்ததின் சூடு கூட தெரியவில்லை. என்ன நடக்க போகிறது என்று அவன் மனம் பதைபதைத்தது. எச்சிலை முழுங்க விடாமல் தொண்டைகுழி கூட சதி செய்தது.

படார் என அவன் பின்னந்தலையில் ஓர் பலத்த அடி நிலை தடுமாறி கிழே விழுந்தான். எங்கே கிடத்தப்பட்டோம் என்று அவனுக்கு தெரியவில்லை. உடம்பு எதோ ஒன்றால் அழுத்தப்பட்டது கால்கள் அமுக்கப்பட்டது கைகள் இழுக்கப்படடது ஆனால் கண்கள் வெறி கொண்டு விழித்து கொண்டிருந்தது.

கண்களில் படர்ந்த நரம்புகள் தெறித்தன உடலோடு சேர்ந்த தலையும் அவ்விடமே இருந்தது ஆனால் அந்த கண்கள் மட்டும் எதையோ காண துடித்தது இல்லை இல்லை எதையோ காண வைக்க தயாராக்கப்பட்டது.
இரு கண்கள் மட்டும் இருளில் அலைந்தது இமையில்லை இமைதாங்கிய புருவங்களும் இல்லை கண்கள் லேசாக வியர்த்தது.

டக் டக்

டக் டக்

என ஒரு ஒலி யானையின் பிளிறல் கூக்குரல் ஓலம் செண்டை மேளங்களின் முழக்கம் என எந்த இசை வகைப்பாட்டிலும் சேராத ஒரு ஒலி.

கருவிழிகள் அசைந்தன வெள்ளை முழி மறுத்தன. சட்டென ஒரு முகம் இருளில் இருந்து வெளிபட்டு கண்களுக்குள் வந்து நின்றது. நல்லவேளை கண்கள் மட்டும் தான் இதை உணர்கிறது உடலோடு இருந்திருந்தால் பயத்தில் முகிலனின் ஆவி கண் வழியே சென்றிருக்கும்.

முகத்தில் வெட்டு காயங்கள், காயங்களில் இரத்தம், இரத்ததில் சில அரூபங்கள் என முகங்கள் மாறியது அவன் கண்களை சுற்றி வட்டமிட்டது. எதோ ஒன்றை மொழிந்து கொண்டே இருந்தது எல்லாம் அவன் கேட்டது தான் சேவிகள் உடம்பிலே இருந்தாலும் உணர்கிறது அவன் கண்கள் மெள்ள.

வட்டமிட்ட முகங்கள் அவன் பழகிய முகங்கள் தான் முகங்கள் மொழிய தொடங்கின எல்லாம் அவன் கேட்ட அதே வாக்கியங்கள்

“யாமறியான் யாறுமறியா வினா அதற்கு விதியே விடை” லெனின் அலற

“காற்றிலே கரைந்திடும் கலையையும் கற்று மித்திரன்

மனம் கொண்ட
மனம் வென்று
மனம் கொன்ற

கயவனை கொள்” என்று முகிலன் உறுமினான்.

“யாம் என் இரக்கம் தொலைத்தனன்
எவன் எம் உறக்கம் கலைத்தனன்
நரனவன் இரத்தம் பருக காத்திருந்தனன்

தீண்டா கற்சிலை திண்டிய கயவனெவன்
சித்தம் கெட்டதோ
சீண்டப்பின் விதி எழுதினென்
முடிந்தது
இறக்ககிடவாய்” என வளவன் பதற

“பயனற்ற முடிவாம் நும்சிந்தை காட்டுவது
யாமுனக்கு வேண்டியன செய்வோம்
யான் சொல்லும் வாக்கை கேட்டிடு

கேட்க மறுப்பின் உடலாய் நின்னயும்
உயிராய் நட்பையும் இழப்பாய்” என்று நாதன் கதறினான்.

வட்டம் பெரிதானது விசை வேகமெடுத்தது
கண்கள் சரட்டென்று உடம்பில் சென்று ஒட்டியது உடம்பின் அனிச்சைகள் அலறியது. கண்கள் உணர்ந்தததை உடம்பு அறியாததால் கொஞ்சம் தைரியம் வந்தது குருதியில்.

“ஏய் யார் நீ?

உனக்கு என்ன வேனும் ?

சும்மா பூச்சாண்டி காட்டாத?

வா முன்னாடி வா?” என்று நரம்பு வெடிக்க கத்தினான். இருந்தும் இதை மும்முறை கூற நேர்ந்தது மெதுவாக ஒரு உருவம் நடந்து வந்தது ஒரு விதமான சிதிலமடைந்த சிலை அது. உடைந்த சிலை, அவர்கள் உடைத்த சிலை, நடப்பதை கண்டு ஒருவாறு அல்லை கவ்வியது அவனுக்கு.

ஒரு ராஜ சிரிப்பேரொலி ஹா ஹா ஹா ஹா ஹா என்று எதிரொலித்தது.

“கிலி கொண்ட கயவனிடம் யாம் பொழிப்பதில்லை”

“நீ யாரு” வாளை கைகளில் இறுக்கி கொண்டே கேட்டான்.

“ஹா ஹா ஹா ஹா ஹா ஹா” என்று முகத்தை அருகில் கொண்டு வந்தது சிலை.

சிலையின் முகத்தில் அப்படி ஒரு சிற்பக்கலை அடடா போட வைத்தது ஆனால் அதை ரசிப்பதற்கு இது நேரமல்ல முகிலனும் அதற்கு தயாராக இல்லை.

“நான் நான் ஹா ஹா ஹா

கொங்கு நாட்டு மாமன்னன்

கேசரிமார்புடைத்த

‘விற்போரர்ர்ர்ர் களங்கண்டான்ன்ன்ன்ன்’
‘களங்கண்டான்ன்ன்ன்ன்’
‘களங்கண்டான்ன்ன்ன்ன்’

“சரி உனக்கு என்ன வேனும்”

“எனக்கு உயிர்கள் வேண்டும்
என் புகழ் பரந்திட வேண்டும்”

“என்ன உலர்ற”

“ஹா ஹா ஆம் உங்கள் உயிர்களில் தான் இருக்கிறது என் புகழ்”

“சுத்தமா புரில”

“சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தன் பராக்கிரமத்தால் மூவுலகத்தையும் கட்டி ஆண்ட சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின் சைன்யத்தில் இரண்டு சிற்றூர்களை ஆண்ட குறு நில மன்னன் நான்.

செங்குட்டுவனின் படைபலம் போர் பலம் முறுக்கிய திமிர் நிமிர்ந்த செருக்கு வஜ்ர தேகம் என எப்போதும் செங்குட்டுவனின் பேராண்மையை அனு அனுவாக பார்த்து அவனை போன்று ஆட்சி செய்ய வேண்டும் அவன் ஆட்சி செய்தவற்றையெல்லாம் ஆட்சி செய்ய வேண்டும் என தீராத தாகம் கொண்டவன் நான்.

ஒரு முறை இளங்கோ வடித்த காப்பியத்தின் பேரில் பேரன்பு கொண்டு கண்ணகியின் மீது பக்தி கொண்டு அந்த கற்புக்கரசிக்கு சிலையெடுத்து கோயில் கட்ட விரும்பினான் அதற்காக இமயம் சென்று தன்னை இகழ்ந்த வடநாட்டு வேந்தன் கனக விசயனையே அடிமையாக்கி அவன் தலையிலே இமயமலையின் கற்களை சுமக்க செய்து கொங்கு நாட்டின் நில பரப்பில் கோயில் எழுப்ப திட்டமிட்டான்.

இமயகற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அதனில் எதை வடித்தாலும் அழியா புகழ் கொண்டிருக்கும் என கேட்டறிந்தேன். நாட்டின் கைதேர்ந்த சிற்பிகள் ஒன்று கூடி செதுக்க தொடங்கிய வேளையில் இமயகற்களின் ஒரு பகுதியை களவாடி வந்தேன். என் நாட்டு சிற்பிகளை கொண்டு இப்படி….. இப்படி…… இப்போது நீ பார்கிறாயே…… என்னை இப்படிதான்….. அனு அனுவாக செதுக்க செய்தேன்.

செங்குட்டுவனின் புகழ் மழுங்க என் சிலையை பார் போற்ற வடித்த சிலையை நிறுவ செய்த நன்னாளில் என் குல எதிரி செங்குட்டுவனின் காலாள் வில் படை தளபதி நன்னன் நலங்கிள்ளி என்னை சிறைபிடித்தான் தன் மாமன்னன் புகழ் மேலும் வாழிய என்று இமயகற்களை களவாடி சிலை வடித்ததற்காக குற்றம்சாடினான். ஏற்கனவே பல களப்போர்களில் என் மீது கொண்ட பெரும் காழ்புணர்ச்சியில் தன் கூட்டம் கொண்டு தன் ஆசையை தன் ஆசையை நிறைவேற்றினான்ன்ன்ன்ன்ன்ன்…….

கழுவிலேற்றி ஆயிரம் விற்போர் வீரர்களை கொண்டு எனது உடம்பினை துளைத்தான் உயிரற்ற எனது உடலை வில் படுக்கையாக்கி எனது சிலையையும் எனது உடல் மேல் வைத்து ஆழ குழி தோண்டி புதைத்து பெரு மூச்சுவிட்டான் அந்த நலங்கிள்ளிளிளிளிளி.

எனது உயிர் அங்கே சுற்றி திரிந்தது எனது உடல் ஆரூபமானது பின்பு எனது உயிர் எனது சிலையை
ரசித்தது
பிடித்தது
துளைத்து
நின்றது. அன்றிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீள் தூக்கத்தில் இருந்தேன். உனது ஆருயிர் தோழன் எனது துயில் கலைத்தான்.”

குரல் தழுதழுத்தது நலனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது இருந்தும் மொழிந்தான் “சரி அவன் பண்ணத்துக்கு நான் மன்னிப்பு கேக்குறேன் அவன் உயிர தான் எடுத்துகிட்டில அப்புறமென்ன ஏன் எங்கள சித்ரவதை பண்ணுற”

“ஹா ஹா ஹா உறக்கம் கலைந்த எனக்கு பழிக்குபழி வாங்கும் உணர்வு பீறிடுகிறது மேலும் பேராசை தொற்றிக்கொண்டது
எனது சிலையை பார் போற்ற வேண்டும் அல்லவா! அதற்கு முன் எனை பழித்தீர்த்த நலங்கிள்ளியின் வம்சமான உன்னை உன்னை எனக்கு பலி கொடுக்க வேண்டும்

சித்திரை பௌர்னமி நன்னாளில்
உன்னை உன் மூவர் அறுத்து
ரணமெடுத்து எனது
சிலையில் ஊற்றி தீர்த்து எனை குளிர்வித்து என் புகழை உன் மூவர் ஏந்தி பரப்ப வேண்டும்

ஹா ஹா ஹா…….

பரப்ப வேண்டும்”

பேரதிர்ச்சியின் பெரும்துளையில் முகிலன் முகம், உடல் நடுக்கம் வேறு ஆனால் வலக்கை கம்பீரமாக வாளை இறுக பிடிக்க இடக்கை ஓலைச்சுவடிகளில் தெறித்த உதிரத்தை பிழிந்தது.

‘சித்ரா பௌர்ணமி’, ‘விற்போர்’, ‘சிலை’, ‘மூவர்’ என வார்த்தைகள் அனைத்தும் அவன் காதுக்குள் ரீங்காரமிட்டபடி அங்கேயே மயங்கி விழுந்தான்.

விடிவதற்கு சூரியன் தயாரானான் அன்று இரவு சித்திரை மாத நட்சத்திர கூட்டத்தில் முழுநிலவாக மின்னுவதற்கு கொஞ்சம் உறக்கம் தேவை என சந்திரன் விடைப்பெற்றான்.

நண்பகல் சூரியன் சுட்டெரிப்பதை கூட பொருட்படுத்தாது ஒருவர் மேல் ஒருவராக மூவரும் கிடத்தப்பட்டனர்.

ஒவ்வொருவராக கண் விழித்தனர். மூவரும் ஒரு சேர ‘நான் நலன கொல்ல போறேனாம்’ என்றனர். அதை கேட்டதும் முழி பிதுங்கிற்று மூவருக்கும். ‘நலன் எங்க’ ‘நலன் எங்க’ என்று தேட தொடங்கினர். லெனினின் இரகசிய தொல்லியல் மயங்கி கிடந்தவனை மூவரும் கண்டு கொண்டனர். நலனுக்கு மயக்கம் தெளிய வெகு நேரமானது.

மயக்கம் தெளிந்தும் அந்த வாளை அவன் விடுவாதாயில்லை. ஏதோ ஒரு உள்ளுணர்வு அதை இன்னும் இறுக பிடித்து கொண்டான். பதட்டத்துடன் மூவரும் அதே வாக்கியத்தை மறுபடியும் நலனிடன் உச்சரித்தனர். இதை கேட்ட நலனுக்கு பெரிதாக எந்த அதிர்ச்சியும் இல்லை இருந்ததும் சட்டென ‘சித்ரா பௌர்ணமி என்னைக்கு’ என்றான்.

பதறி எழுந்து ஓடினான், அந்த மாளிகையை சுற்றி தேடினான். நாட்காட்டி இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. மாளிகையை விட்டு ஓடினான் அவனை துரத்தி மூவரும் ஓடினர். மணி துளிகள் மெள்ள மாலை பொழுதை நெருங்கியது. அந்த மேற்கு தொடர்ச்சி மலையோர காடுகளில் சுற்றி திரிந்தான். திடிரென்று ஒரு சைவ சித்தர் அவனை நோக்கி வந்தார். “இன்று சித்திரை திங்கள் முழுமதியாம். உன் வாளுக்கு உளி தேவை அந்த உளிக்கு பிநாகம் தேவை இவையனைத்துக்கும் நீ தேவை செல் அங்கே” என்று அடர்ந்த காட்டின் நடுவே உள்ள ஓரு பழமையான பாழடைந்த சிவாலயத்தை சுட்டி காட்டினார் அதை பார்த்து திரும்புகையில் சித்தர் சித்தமானார்.

விரைந்து சுட்டி காட்டிய இடத்தை நோக்கி ஓடினான். எப்படியோ சிவனை தஞ்சமடைந்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. வானத்து நட்சத்திரங்களை சிதறி தள்ளி முகிலின் முகட்டில் முழுநிலவு மிளிர தொடங்கியது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்த நந்தியின் சிலையருகே உட்கார்ந்து சிவனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.

சில காலடி சத்தம் படபடவென அவன் காதில் விழுந்தது வாளை இறுக்கி பிடித்து சத்தம் வந்த திசையை நோக்கினான் மித்ரர் மூவரும் அவனை நோக்கி வந்தார்கள்.
மித்ரர்களை பார்த்தவுடன் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டபடி “இப்ப என்னடா பன்றது” என சித்தர் சொன்ன சிவ வாக்கியத்தை அர்த்தம் மாறாது ஒப்புவித்தான்.

மூவர் முகமும் மாறியது, நலனை வலம் சுற்றலானார்கள். வாய்விட்டு பலமாக சிரித்தனர். நலன் வெகுவாக புரிந்து கொண்டான். வாளை இறுக்கி பிடித்து கொண்டான். சுற்றி வந்தவர்கள் மெள்ள மெள்ள சிலையானார்கள். சிலிர்த்துக் கொண்டே மூன்று சிலையும் அவனை பார்த்து சிரித்தார்கள். டக் டக் கென்று மற்றொரு காலடி சத்தம். மூன்று சிலையும் பேச தொடங்கியது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை கூறியது.

‘ராஜ மார்த்தாண்ட’
‘ராஜ கம்பிர’
‘ராஜ குலதிலக’

“ஹா ஹா விற்போர் களங்கண்டான்

பராக் பராக்” என்று கூறி எக்காள சிரிப்புடன் சிலை வடிவாக நந்தியின் அருகே சென்று அமர்ந்தது விற்போர் களங்கண்டான்.

எச்சிலை முழுங்க கூட முடியாமல் நலனுக்கு தொண்டை அடைத்தது. வியர்வை கட்டுக்கடங்காமல் மண்ணில் சிந்தியது.

“ம்ம் நடக்கட்டும்

ஹா ஹா” என களங்கண்டான் கர்ஜித்த உடனே மூன்று சிலையும் நலனை தாக்க தொடங்கியது.

முட்டி தள்ளினான் ம்ஹூம் சிலையாயிற்றே அசைவுகளே இல்லை. நண்பனை எப்படி தாக்குவது. உயிர் போகும் நிலையில் ஜிவதாரண்யம் முக்கியமா என்று வாளை எடுத்து மூன்று சிலைகள் மீது வீசினான். அந்த வீச்சில் ஆங்காங்கே சில சிலை கற்கள் தெரித்தன.

மீண்டும் ஒரு எக்காளச் சிரிப்பு. “நீ எத்துணை முறை வாளை வீசினாலும்ம்ம் ஹா ஹா

ஒன்றும் நடக்காது

ஏனேன்றால் இது வாள் அல்ல அம்பு இதை வில்லில் வைத்து எய்தால் மட்டுமே

நீ‌ நினைப்பது நடக்கும்

அதுவும் எனை செதுக்கிய உளியை அம்பின் முனையில் வைத்து எய்ய வேண்டும்

ஹா ஹா”

இதை கேட்டவுடன் நம்பிக்கை தளர்ந்தது. சாக போகிறோம் என்ற விரக்தியில் வாளை களங்கண்டானை நோக்கி எறிந்த நலன் மண்டியிட்டு விழுந்து பூமி தாயை ஒஙா

என்ன ஒரு துரதிர்ஷ்டம் வாள் களங்கண்டான் கால் முன்னே குத்தி நின்றது. குத்திய இடத்தில் முன்னொரு காலத்தில் களங்கண்டானை செதுக்கிய சிற்பி விட்டு சென்ற உளியில் குத்தி நின்றது.

என்ன இது சிவனின் திருவிளையாடலா என்ன. அம்பு தயாராகியது வில் எங்கே? என்று அந்த வனாந்தரத்தில் மரமும் காற்றும் அவ்வளவேன் அந்த நந்தியும் கேட்டது.

கண்ணீர் துளிகள் மண்ணில் விழ தன் இரு கைகளாலும் மேலும் ஓங்கி அடித்தான். எந்த வில் தான் கிடைக்கும் அர்ஜூனனின் காண்டீபமா கண்ணனின் சாரங்கமா இராமனின் கோதண்டமா அல்லது அந்த சிவனின் பிநாகமா. ம்ஹூம் எதுவும் சிக்கவில்லை. திடிரென்று ஒரு பலத்த காற்று. ஒரு நீண்ட நிசப்தம். வில்வ மர கிளையின் பகுதி ஒன்று நலன் முன் விழுந்தது.

இதை வைத்து என்ன செய்ய முடியும். இது தான் ஆயுதம் என சிவனே சொன்ன பிறகு ஏது தாமதம் வில் கிளையை எடுத்து சிலை இடுக்கின் நடுவே புகுந்து களங்கண்டானை நோக்கி சென்றான் வாளை எடுத்து களங்கண்டான் சிலையின் மார்பில் எட்டி உதைத்தான். வில்வ கிளையின் நடுவே வாளை பிடித்து ஒங்கினான். வானில் மின்னல் பெருவெட்டாக வெட்டியது. வாளின் பாரம் தாங்காது சிற்பம் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *