காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி, “உமக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்கள். “நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்” என்று வாமதேவரிஷி சொன்னார். அந்தப்படியே வரம் கொடுத்து விட்டுப் பார்வதி பரமேசுவரர் அந்தர்த்தனமாய் விட்டனர்.
அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வாமதேவ ரிஷி காசி நகரத்தில் கங்காநதி தீரத்தில் ஒரு குடிசை கட்டிக் கொண்டு அங்கே குடியிருந்தார். அவரிடத்தில் காசிராஜன் வந்து தனக்கு ஆத்ம ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டான்.
அப்போது வாமதேவர் சொல்கிறார்: “ராஜனே, எப்போதும் பயப்படாமல் இரு; பயமில்லாத நிலைமையே தெய்வம். பயத்தை விட்டவன் தெய்வத்தைக் காண்பான்” என்றார்.
இது கேட்டுக் காசிராஜன் சொல்லுகிறான்: “முனிவரே, நான் ஏற்கெனவே பூமண்டலாதிபதியாக வாழ்கிறேன், எனக்கு எதிலும் பயமில்லை” என்றான்.
வாமதேவர்: “நீ பூமி முழுவதையும் ஆளவில்லை. உன்னைவிடப் பெரிய மன்னர் பூமியில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் எவராவது உன்மீது படையெடுத்து வந்தால் நீ நடுங்கிப் போவாய். மேலும் இந்த நிலையில் நீ உனது பத்தினிக்குப் பயப்படுகிறாய். மந்திரிகளுக்குப் பயப்படுகிறாய். வேலைக்காரருக்குப் பயப்படுகிறாய். குடிகளுக்கெல்லாம் பயப்படுகிறாய். விஷ ஜந்துகளுக்குப் பயப்படுகிறாய். மரணத்துக்குப் பயப்படுகிறாய். நீ பயமில்லை என்று சொல்வது எனக்கு நகைப்பை உண்டாக்குகிறது” என்றார்.
இதைக் கேட்டு காசிராஜன்: “இவ்விதமான பயங்கள் தீர்வதற்கு வழியுண்டோ?” என்று வினவினான்.
அதற்கு வாமதேவர் சொல்லுகிறார்: “அடே ராஜா, நீ மூடன்” என்றார்.
காசிராஜா அவரைக் கையிலே ஒரு அடி அடித்தான்.
அப்போது வாமதேவர்: “அடே ராஜா, நீ எத்தனை அடி அடித்தபோதிலும் மூடன்தான்” என்று சொன்னார். காசிராஜன் தலை தெரியாமல் கோபப்பட்டு வாமதேவர் கையிலிருந்த வேத புஸ்தகத்தை வாங்கிக் கிழித்துப் போட்டான்.
அப்போது வாமதேவர்: “அடே ராஜா, வேதத்தைக் கிழித்தாய். இதற்குத் தெய்வத்தின் தண்டனை உண்டாகலாம்” என்று சொன்னார்.
அதற்குக் காசிராஜா, “ஏ வேதரிஷீ, தெய்வத்துக்குக் கண் உண்டு. அறியாமல் செய்த குற்றத்துக்குத் தண்டனை இல்லை. நான் வேத நூல் என்பதைப் பார்க்கவில்லை. அடித்தும் பயன்படாத உன்னை என்ன செய்வதென்று தெரியாமல் கோபாக்கிராந்தனாய் அஞ்ஞானத்திலே செய்தேன். என்னைத் தெய்வம் மன்னிக்கும் உனக்கும் மன்னிப்புண்டாகுக” என்றான்.
அப்போது வாமதேவர், “அடே ராஜா, நீ நம்முடைய சிஷ்யனாகத் தகும். கோபம் வருவது க்ஷத்திரியகுணம்; அதே க்ஷத்திரிய தர்மம், அதைக் கைவிடாதே. இதற்கு மேல் மற்றொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். நமக்கு இந்த உலகம் கடுகு மாத்திரம். உலகம் சின்னக்கடுகு. அதற்கு வெளிப்புறத்திலே நாம் நின்று அதனை நாம் பார்வையிடுகிறோம். நாம் நிற்பது பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலே. பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலேயே இருப்பவன் பிராம்மணன். இந்தக் கொள்கையை நீயும் கூடியவரை அனுசரித்தால் உனக்கும் நன்மையுண்டாகும். இந்தச் சமயம் உனக்கு நாம் அபயம் கொடுத்தோம். நமக்குப் பார்வதி-பரமேசுபரர் சாகாதவரம் கொடுத்திருக்கிறார்கள். அதில் உனக்கும் வாகம் கொடுத்தோம். ஏனென்றால் அது வற்றாத அமிர்தம். இனிமேல் பிராம்மணர்களை அவசரப்பட்டு அடிக்காதே; சௌக்கியமாக அமிர்தமுண்டிரு” என்று சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பெரியவர் என்னிடம் ஒரு கதை சொன்னார்.
– கதைக் கொத்து (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1967, பாரதி பிரசுராலயம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org