அன்றும் இன்றும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 2,138 
 
 

முன்பெல்லாம் அளவான வருமானமே ஆனந்தமாக இருந்தது. கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்தபோது உணவுத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது தவிர, மீதமாகும் தானியங்களை விற்பதால் வரும் அளவான வருமானமே போதுமானதாக இருந்தது. 

அதற்கு மேல் என்ற நிலை இன்று வந்த பின் தான் நகர வாழ்வில் வலியும், வேதனையும், சோதனையும் அதிகம்.

மஞ்சள் பத்து குவிண்டால் விளைந்து, ஈரோடு சென்று ஐம்பதாயிரத்துக்கு விற்று வரும் சிவராமனின் அப்பா, மகள் திருமண சேமிப்புக்காக பத்தாயிரம், குடும்ப செலவுக்கு பத்தாயிரம் போக முப்பதாயிரம் அடுத்த வருட முதலீட்டுக்காக, இதர செலவினங்களுக்காக அருகில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்து விடுவார்.

விளைந்த பொருட்களை சந்தையில் விற்று வருபவர் மகனுக்கு சீனி மிட்டாயும், மனைவிக்கு சந்தைக்கு எடுத்துப்போக ஒயர் கூடையும், மகளுக்கு சடைக்கு போட குஞ்சமும் நூறு ரூபாயில் வாங்கிக்கொண்டு, பேருந்து செலவு முப்பதுடன் இரண்டு ரூபாயில் இளநீர் வாங்கி தாகம் போக்கி, வீடு வந்து மனைவியிடம் பழைய சோறு வாங்கி சாப்பிட்டு பசி போக்கி வாழ்ந்த நிலை மகிழ்ச்சியாக கழிந்தது.

அரசு பள்ளியில் ஐந்து ரூபாய் கூட செலவில்லாத படிப்பு. சைக்கிளில் ஊரைச்சுற்ற பெட்ரோல் போட பணம் தேவையில்லை.

பொங்கல் பண்டிகைக்கு அம்மாவின் ஊருக்கு போவதும், அம்முச்சி ஆடு விற்ற பணத்தில் புத்தாடை எடுத்துக்கொடுக்க அணிவதும், அருகிலுள்ள கோவிலில் கூடி பெண்கள் கும்மியடிப்பதும், ராட்டன் தூறியில் ஆடி மயக்கம் வருவது போலிருக்கிறதென லெமன் சோடா வாங்கிக்குடிப்பதும், கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு சிவப்பான முறை பெண்களைப்பார்த்து, கண்ணாடிக்குள் அவர்களுக்கு தெரியாமல் கண் சிமிட்டி மகிழ்வதும், இன்று தலை கீழாக மாறி விட்டது.

அப்பாவின் ஒரு வருட சம்பாதனையை ஒரு மாதத்தில் சம்பளமாக தற்போது சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. கடன் தான் ஏறுகிறது.

ஏற்கனவே கடனில் வீடு இருக்கும் நிலையில் அருகில் ஓர் இடம் விலைக்கு வர, “ஏங்க நமக்கு இரண்டு குழந்தைங்க இருக்கிறதை மறந்துட்டீங்களா? இந்த வீடு பையனுக்கு. வாங்கற இடத்துல பொண்ணுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்திடலாம். இருபத்தைந்து லட்சந்தாங்க. நகையை அடமானம் வச்சா ஐந்து தேறும், அலுவலகத்துல ஐந்து லோன் போட்டீங்கன்னா, பதினைஞ்சு பேங்க்ல கடனா தந்திடுவாங்க” மனைவியின் நச்சரிப்பு.

“அப்பா டவுன்ல அந்த சி.பி.எஸ்.ஈ ஸ்கூல்ல படிச்சா நீட்ல நல்ல மார்க் கிடைக்குதாம். கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ்லியே இடம் கிடைச்சிடுமாம். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ இரண்டு வருசத்துக்கும் சேர்த்து பத்து லட்சம் மட்டும் போதும்பா” இது பொண்ணு.‌

“இரண்டு லட்சம் ரூபா லேப்டாப் அமேசான் பெஸ்டிவல் ஆபர்ல ஒன்னரை லட்சத்துக்கு தர்றான். ப்ளாஸ் சேல் ஆர்டர் போட்டுட்டேன். அப்படியே ஐம்பதாயிரம் ஐபோன், பத்தாயிரம் தள்ளுபடி அதுவும் உங்களுக்கு கெத்து வேணுண்ணு போட்டுட்டேன். இந்த வருச பீஸ் இரண்டு லட்சம் பேங்க்ல டி.டி.எடுத்திடுங்க” என மகன் தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள கேட்பதில்லை, கட்டளையிடுவது.

கார் இ.எம்.ஐ., இன்சூரன்ஸ், பெட்ரோல், சர்வீஸ் என கூடுதல் செலவுகள்.

“இன்னும் பாருங்க சார் சர்வீஸ்ல ரஃப்பிங், அன்டர் கோட்டிங் பண்ணனம். சீட் கவர் மாத்திடுங்க. வெயில் காலம். ஏஸி மோட்டார் மாத்திடுங்க. அப்பத்தான் நல்லா கூலிங் கிடைக்கும். டயர் முப்பதாயிரம் ஓடிடுச்சு. அதையும் மாத்திடுங்க” என்று சர்வீஸ் செய்பவர் சொன்ன போது தலை சுற்றியது.

“தம்பி காரை வித்திடலாம்னு நினைக்கிறேன். என்ன விலைக்குப்போகும்?”

“மூணு சார்.”

“என்னப்பா போன வருஷம்தானே உங்க கம்பெனில ஏழுக்கு எடுத்தேன்?”

“அது போன வருசம். இப்ப அப்படித்தான் சார் மார்க்கெட் சொல்லுது”.

“அப்புறம் எதுக்கு சாதாரண ஆயில் சர்வீஸ்னு வந்ததுக்கு ஒரு லட்சம் செலவு வைக்கறே…?”

“அது எங்க கம்பெனி டெவலபுக்காக. இந்த வருசம் மட்டும் இந்தியாவுல எங்க கார் கம்பெனி பத்தாயிரம் கோடி லாபம் காட்டியிருக்கு சார்.”

மன இறுக்கத்துடன் காரை எடுத்துக்கொண்டு கார் கம்பெனியை விட்டு வெளியே வந்தார் சிவராமன். கடந்த ஒரு வாரமா நெஞ்சு வலி. மாஸ்டர் ஹெல்த் செக்கப் வேற பண்ணனம்னு மனைவியின் நச்சரிப்பு. ஐம்பது சதவீத ஆஃபராம். அதுக்கும் கூட இப்பெல்லாம் இ.எம்.ஐ.உண்டுங்கிறாங்க. இப்போ அவங்களைத்தான் கூப்பிடனம்.

அடுத்த நிமிடம் அலுவலகத்திலிருந்து முதலாளி போன் பண்ணினார். “இந்த மாசம் நம்ம கம்பெனில இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பின பொருட்கள்ல நிறைய டேமேஜ் இருக்குதாம். போன கப்பல்லியே சரக்கைத்திருப்பி அனுப்பிட்டாங்கலாம். இந்த மாசம் உனக்கு சம்பளம் கட்” என போன் கட்டாக, சிவராமனுக்கு உசுரே கட்டான மாதிரி இருந்தது.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *