அனுபவத்தின் பயன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 5,877 
 
 

நள்ளிரவு தாண்டியிருக்கும், இரயில் வரும் பாதையில் ஒரு உருவம் கையில் பையுடன் சத்தமில்லாமல் குனிந்து தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து நடந்து கொண்டிருந்த்து. குறிப்பிட்ட இடத்தை பார்த்தவுடன் அந்த உருவம் நின்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்த இடத்தில் குத்து காலிட்டு உட்கார்ந்து கையில் வைத்திருந்த பையை விரித்து பேப்பர் சுற்றப்பட்ட பொருளை எடுத்து தண்டவாள பாதையில் சிறிது குழி எடுத்து அதனுள் வைக்கும்போது முதுகில் உலோகமுனை ஒன்று அழுத்தியதை உணர்ந்தது “அப்படியே எழுந்திரு”ஏதாவது செய்ய நினைச்ச இங்கேயே சுட்டு பொசுக்கிட்டு போயிடுவேன்.குரல் அந்த நிசப்தத்தில் கர்ண கடூரமாய் இருந்தது.

சந்திரன் அவன் கொண்டு வந்த எல்லாத்தையும் அப்படியே “பேக்” பண்ணி ஸ்டேசனுக்கு கொண்டு போயிடுங்க. நடடா ! அவன் கையை பின்னுக்கு முறுக்கி இழுத்துச்சென்றது.கொஞ்சம் பொட்டல் வெளியாக இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து அவனை நிறுத்தி உண்மையை சொல்லுடா இங்க நீ மட்டும் வந்தியா இல்ல உங்கூட வேற யாராவது வந்திருக்கறாங்களா? இழுத்து வரப்பட்ட உருவம் எதுவும் பேசாமல் கேட்டவரை நிமிர்ந்து பார்த்தது. எதிரில் நின்றது “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்” என அழைக்கப்படும் இன்ஸ்பெக்டர் ஜெகனாதன்.மனதில் மெல்லிய அதிர்வு உண்டானது, உன்னை சுட்டு கூட பிடிக்கலாம்னு சொல்லியிருக்கறாங்க, அந்த அளவுக்கு உன்னால பல பேர் இறந்திருக்கறாங்க உனக்கு இப்ப ஒரு வாய்ப்பு தர்றேன் உயிர் போறதுன்னா எப்படி இருக்கும்னு இப்ப பார்த்துக்க என்று நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டினார்.

அரசாங்க மருத்துவமனை’ “அவசர சிகிச்சை பிரிவு”

மருத்துவ உதவியாளன் ரஹீம் புதியதாய் சேர்ந்திருக்கும் இளைஞனிடம் பாரு “பாபு” இங்க வேலை செய்யனும்னா முதல்ல இரத்தத்தை பார்த்து பயப்படாமல் இருக்கனும், பதட்டமாகக்கூடாது, நோயாளிகள சுத்தி இருக்கற சொந்தக்காரங்க நம்மளை ஏசுவாங்க, எதையும் காது கொடுத்து கேட்காம நோயாளிய எப்படியாவது காப்பத்தறதுதான் நம்ம டியூட்டி சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே “ஐயோ கடவுளே” என் மகன் விஷம் குடிச்சுட்டானே அவனை எப்படியாச்சும் காப்பத்துங்களேன் !என்று ஒரு பெண் கூக்குரலுடன் ஓடி வர, எதிரே விரைந்த ரஹீம் “ஒத்தும்மா’ ஒத்து” அவர்களை தள்ளி ஒதுக்கிவிட்டு விஷம் குடித்தவனை அப்படியே ஒரு தள்ளு வண்டியில் படுக்க வைத்து உள் அறைக்கு கொண்டு சென்று பாபு அந்த ட்யூபை எடு என்று சொல்லி அவனுடய உடைகளை தளர்த்தினான்.பின பாபு கொண்டு வந்த ட்யூபை விஷம் குடித்தவனின் வாயினுள் சொருகினான். அதற்குள் டாகடரும் வர மேற்கொண்டு அவனை பிழைக்க வைக்க அங்குள்ள அனைவரும் போராட ஆரம்பித்தனர். வெளியில் அந்த பெண்ணின் அலறல் தொந்தரவாய் இருந்ததால் வெளியே வந்த ரஹீம் ஏம்மா உனக்கு உம்பையன் வேணுமா வேண்டாமா? கேட்டவுடன் அந்த பெண் ஐயா எப்படியாச்சும் காப்பாத்திக்கொடுத்துடுங்கய்யா, அப்படின்னா கொஞ்சம் சத்தம் போடாம உட்காரு டாக்டரு பார்த்துக்கிட்டுருக்கறாரு, கண்டிப்பா பிழைச்சுக்குவான்,சொல்லிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து டாக்டருக்கு உதவியாக நின்றான்.பிரமிப்புடன் இவர்கள் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த பாபு விஷம் குடித்தவனை பார்க்க அவனுக்கு வயது சுமார் பதினெட்டுக்குள்தான் இருக்கும், அதற்குள் விஷம் குடிக்கும் அளவுக்கு அவனுக்கு வாழ்க்கையில் என்ன விரக்தி ஏற்பட்டிருக்கும்?

ஒரு மணி நேரத்தில் பையன் கண்ணை திறந்து பார்க்க அந்த பெண் சுற்றி நின்றவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு காலில் விழப்போனாள், ரஹீம் அதைத்தடுத்து உங்க பையனை இப்ப பெட்டுக்கு கொண்டு போய்டுவாங்க கூட போங்க, என்று வழியனுப்பி வைத்தான்.

பசி உயிர் போனது ரஹீமுக்கும் பாபுவுக்கும், அவசர அவசரமாக எதிரில் உள்ள காண்டீனுக்கு சென்று இருவரும் டீ வாங்கி குடிக்கலாம் என் வாய் வைத்தனர். அதற்குள் திடீரென்று ஒரு கூட்டம் திமு திமுவென உள்ளே வந்தது, நானகைந்து ஆம்புலன்சுகள் குற்றுயிரும் குலையுருமாக பத்து பதினைந்து பேர்களை கொண்டு வந்து இறக்கியது.
ஏதோ பஸ் கவிழ்ந்து விட்டதாம், நான்கு பேர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாம், மற்றவர்களை அள்ளி போட்டுக்கொண்டு வந்துள்ளார்கள். உயிருக்கு யாரும் உத்தரவாதம் தரமுடியாதாம்.கூட்டத்தில் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். சட்டென டீ கிளாசை வைத்துவிட்டு ரஹீம் ஓடினான், அவன் பின்னாலேயே பாபுவும் ஓடினான் அங்கே அவன் கண்ட காட்சி.. ரத்த குழம்புக்குள் மனித உடல்கள் கிடந்ததை பார்த்த பாபுவுக்கு தலை சுற்றியது, சமாளித்துக்கொண்டான். ரஹீம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு உருவங்களாக துணைக்கு பாபுவையும், மற்றவர்களையும் வைத்துக்கொண்டு சுத்தம் செய்து காயம் பட்ட இடத்தை டாக்டர்களுக்கு காண்பித்து மேற்கொண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான்.ஏறக்குறைய இந்த வேலைகள் முடிந்து நோயாளிகளை படுக்கைக்கு அனுப்பும்போது இரவு ஆகிவிட்டது. அதுவரை அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் பசியை மறந்து பணி செய்து முடித்திருந்தனர்.

பாபு ரஹீமுடன் பணிபுரிய வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.இந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு நாளும் இவர்கள் செய்த வேலைகளை பார்த்த பாபுவுக்கு ஒரு உயிரை காப்பாற்ற எத்தகைய போராட்டங்களை சந்திக்கிறார்கள் இந்த மருத்துமனை ஊழியர்கள் என்பது புரிந்தது.அது போலவே ஏதேனும் ஒரு உயிர் தவறிவிட்டால் பொது மக்களிடம் இவர்கள் சிக்கிக்கொள்வதயும் பார்த்தான்.

அதைவிட இந்த மருத்துவ பணியில் இருக்கும் ஒரு சிலர் பணம் பணம் என்று நோயாளிகளிடம் பிடுங்குவதையும் பார்த்தான், அதைப்பற்றி ரஹீமிடம் மனம் நொந்து கேட்டான். ஏன் இப்படி இருக்கிறார்கள் பாய்? அதற்கு ரஹீம் இவன் தோளைத்தட்டி இறைவன் யாருக்கும் வேறுபாடு பார்ப்பதில்லை, மனிதனே அவனுக்குள் பணம் பணம் என்று பறந்து தன்னை வசதியுள்ளவனாக ஆக்கிக்கொள்ள நினைத்து சிக்கல் என்னும் புதைகுழிக்குள் சிக்கிக்கொள்கிறான்.இதை கேட்ட பாபுவுக்கு மனது கனத்தது. இன்றுடன் ஒப்பந்தப்படி ரஹீமை விட்டு பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது.

ரஹீமின கையை பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டான் பாபு, இனி நான் உங்களை எங்கு பார்ப்பேன்? ஏக்கத்துடன் கேட்டான். கவலைப்படாதே என்னை பார்க்கவேண்டும் என்று சொல்லி அனுப்பினால் கண்டிப்பாக உன்னை வந்து பார்க்கிறேன்.இப்பொழுது உன்னை அழைத்துப்போக இன்ஸ்பெக்டர் ஜெகனாதன் வந்துவிடுவார் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் எதிரில் வந்து நின்றார்.

ரொம்ப நன்றி ரஹீம், இந்த சின்ன வயசுல இவ்வளவு ரிஸ்க்கான பொறுப்பை எடுத்து எனக்கு உதவி பண்ணியிருக்கிறீங்க, சார் நான் மனசாட்சிப்படி வாழறவன், நீங்க எனக்கு கொடுத்த வேலைய நான் நல்லபடியா முடிச்சுகொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். நிச்சயமா ரொம்ப நன்றி ரஹீம், கை குலுக்கி பாபுவுடன் விடைபெற்றார்.

பாபு நெகிழ்ந்து நின்று கொண்டு தன் இரு கைகளையும் அவர் முன் நீட்டி நான் சரண்டர் ஆகிறேன் சார், நான் செய்த செயல்கள்னால எத்தனை உயிர்கள் கூட விளையாண்டிருக்கறேன்னும், ஒரு உயிர காப்பாத்த எந்த அளவுக்கு அவங்கள பெத்தவங்களும், மத்தவங்களும் கஷ்டப்படறாங்கன்னு இந்த அனுபவத்துல எனக்கு புரிய வச்சுட்டீங்க.தீவிரவாதியா இருந்து ரயில கவுத்தறது,பஸ்ஸை எரிக்கிறது அப்படீன்னு திரிஞ்சுகிட்டிருந்த என்ன நீங்க அன்னைக்கே என்கவுண்டர்ல போட்டு தள்ளியிருந்தீங்கண்ணா இன்னேரம் நான் மண்ணோடு மண்ணா போயிருப்பேன், ஆனா மனித உயிர் எவ்வளவு முக்கியங்கறத எனக்கு புரிய வைக்கணும்ங்கறதுக்காக உங்க வேலையே போற இந்த மாதிரி ரிஸ்க் எடுத்திருக்கிறீங்க சார்.

பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார் “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்” இன்ஸ்பெக்டர் ஜெகனாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *