அத்து மீறல்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 9,977 
 
 

சுமார் அஞ்சு வருஷத்துக்கு முந்தியெல்லாம் வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒரு சேர்கிட் கோர்ட்டாக இயங்கி வந்த கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இப்ப அஞ்சு வருஷமா நிரந்தர நீதவான் நீதிமன்றமாக இயங்கிக் கொண்டிரக்கிறது. நிரந்தர நீதவான் நீதிமன்றமாக ஆக்கப்பட முதல்ல கெழமையில் ஒருநாள் மட்டும் கோர்ட் இடம் பெறக்க கேசுன்னா அப்படிக் கேசு… கோர்ட் சனத்தால நெரம்பி வழியும்… பின்னேரம் அஞ்சு மணி மட்டும் கோர்ட் நடக்கும்னா பாருங்களேன்…

அம்புட்டு வழக்கு அன்னிக்கு இருக்கும். அப்பல்லாம் திருகோணமலை கோர்ட்டுல பிராக்டிஸ் பண்ணுற லோயர்மார் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்துக்கு வருவாங்க… இப்பல்லாம் கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நிரந்தர நீதவான் நீதிமன்றமாக ஆக்கப்பட்ட பொறகு திருகோணமலையிலேருந்து லோயர்ஸ் யாருமே இந்தப் பக்கம் வர்ரதில்ல. போதாதற்கு இப்ப கிட்டத்தில இருந்து கந்தளாய் கோர்ட்; ஒரு கம்பைன்ட் கோர்ட்டாக மாற்றப்பட்டிருக்கு. ஆரம்பத்தில கந்தளாய் முள்ளிப் பொத்தான வான்எல போன்ற பிரதேச மக்களின்ட அனைத்து சிவில் வழக்குகளினதும் நியாதிக்கமும் திருகோணமலை நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டு அங்கதான் அவங்க சிவில் வழக்குகளெல்லாம் விசாரிச்சிட்டு இருந்தாங்க.

போன வருஷம் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தோட ஒண்ணா மாவட்ட நீதிமன்றத்தையும் இணைச்சு சிவில் வழக்குகள் எல்லாத்தையும் கந்தளாய் மாவட்ட நீதிமன்றத்தையும் இணைச்சு சிவில் வழக்குகள் விசாரிக்குற ஜூரிஸ்டிக்ஷன கொடுத்து இப்ப அந்தப் பிரதேச சிவில் வழக்குகள் எல்லாத்தையும் கந்தளாய் நீதிமன்ற நீதிமன்றத்துல ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விசாரிக்குறாங்க.

இப்படி குறுகிய கால வரலாற்றைக் கொணடிருந்து படக்குன்னு வளர்ந்த இந்தக் கந்தளாய் நீதிமன்றத்தின் முன்னால் திருகோணமலையில் உள்ள சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அன்றைய தேதியில் வழக்குகளிருந்த சந்தேக நபர்களாக உள்ள கைதிகளை ப்ரிஸன் பஸ்ஸிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம் பஸ்ஸில் கொண்டு வரப்பட்டிருந்த பெரும்பாலான சந்தேக நபர்கள் வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பதினான்கு நாட்கள் நீதவானால் பொலிஸாரின் விண்ணப்பத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள். ஒவ்வொரு பதினான்கு நாட்கள் முடிவிலும் அவர்களை நீதவான் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவின் பிரகாரம் இனறும் கொண்டு வரப்பட்டிருந்தார்கள்.

கந்தளாய் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்குட்பட்ட கந்தளாய்ப் பொலிஸ் வான்எல பொலிஸ் மற்றும் தம்பலகமுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பல சந்தேக நபர்கள் இருந்தனர். ஒட்டு மொத்த சந்தேக நபர்களையும் ஒன்று சேர்த்து அவர்களது கைகளில் நீள்சங்கிலியினைப் போட்டுப் பிணைத்து கோர்ட்டுக்குள் கொண்டு வந்து கோர்ட்டின் கிழக்கு எல்லையில் ‘ஹிரமெதிரிய’ எனத் தூசடித்துக் கிடந்த போர்டு தொங்கிக் கிடந்த ஷெல்லுக்குள் போட்டு ஜெயில் கார்டுகள் பூட்டினர்.

மூத்திர நாற்றமடித்தது ஷெல்

… வ்வ்வ்வ்வே….

ஏற்கனவே மனசுகளில் சித்திரவதை அனுபவித்திருந்த காலையில் எதுவுமில்லாமலே விளக்க மறியலில் கொடுத்த தேநீரையும் துண்டுப்பாணையும் உண்ணாது வெறும் வயிற்றுடன் தண்ணீரால் மட்டும் கொஞ்சம் தொண்டையை நனைத்துக் கொண்டு வநத ராபி சேருக்கு சிறுகுடலும் பெருங்குடலும் ஒரு சேர வயிற்றுக்குள்ளிருந்து வெளிநடப்பு செய்யப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தன.

மூலையில் கிடந்த பழங்காலத்து வாங்கில் சோர்வாக உட்கார்ந்து கொண்ட ராபி ஒரு ஆசிரியர். ஒரு கிராமப்புறப்பாடசாலையில் பிள்ளைகள் கற்க வேண்டும் அவர்கள் எதிர்கால உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார் பண்ணப்பட வேண்டும் என்ற இலக்கோடும் வெறியோடும் படிப்பித்துக் கொண்டிருந்த தூய்மையான ஆசிரியர்களுள் ஒருவர்.

இளம் வயதுக்காரர்

கற்பிக்கும் தொழிலைத் தொழிலாக அன்றி ஒரு சேவையாகக் கருதிக் கொண்டு சதாகாலமும் தான் கற்பிக்கும் பாடசாலைக்காக தன்னை அர்ப்பணித்தவர். மாதாந்தம் தனக்கு வழங்கப்படும் வேதனத்தினைப் பெறுவதற்கு தான் தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கும் அரிதான ஆண்மகளுள் ஒருவர்.

அந்த ராபி செர்தான் இதோ இந்த நீதிமன்ற ஷெல்லில்… தெரிந்த பழைய தேஜூஸூம் பிரகாசமும் அப்ஸலியூட்லி மிஸ்ஸிங்… விளக்க மறியலில் இருந்த கடந்த பதினான்கு நாட்களுக்குள் ஒரு பத்து கிலோ குறைந்த மாதி மெலிந்து நலிந்து… ஒட்டு மொத்தத்தில் தொலைந்து போயிருந்தார்.

அவரால் தாங்கமுடியவில்லை.

செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம்… கனவிலும் கூட நினைக்கவில்லை… பொலிஸார் தன்னைக் கைது செய்வார்கள்;; இப்படிக் கொலை செய்த கொள்ளையடித்த பாலியல் குற்றங்களில் மாட்டுப்பட்ட கிரிமினல்களோடு சமமாக தன்னையும் வைப்பார்கள்… பதினான்கு நாட்கள் தானும் விளக்க மறியலில் வைக்கப்படுவேனென்று.

கற்பனை செய்யாத ஒன்று.

விதியின் வடிவம் விந்தையானது மட்டுமல்ல. வித்தியாசமானதும் கூட.. தலையெழுத்து என்பார்களே… நினைக்க ரொம்பவும் பயங்கரமாக இரந்தது ராபி சேருக்கு.

கோர்ட் தொடங்குவதற்கு இன்னும் பத்து நிமிஷங்களே இருந்தது. இயல்பாகவே கோர்ட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தங்கள் தங்கள் சேம்பர்களின் தமது க்ளைன்ட்ஸ்களோடு வழக்குகளை டிஸ்கஸ் பண்ணியவாறும் தங்களது பீசுகளை கோட் பக்கட்டில் நிரப்பியவாறுமாகவிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாம் வழமையாக உட்காருரும் கதிரைகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.

வழமை போலவே மாறாத புன்னகையோடு அதோ அந்த மூலையில் இதோ இன்னும் கொஞ்ச நாளில் பென்சன் பொகின்றேன் என்பதனைப் பரகடனப் படுத்திக் கொண்டிருக்கும் வயர் பின்னிய கதிரையில் எது நடந்தாலும் ம்ஹூம்…எனது புன்னகை மாறாது என்கின்ற தோரணையில் மதார் புரொக்டர். பக்கத்தில் சானிக்கா மேடம்..அதற்குப் பக்கத்தில் நம்ம ஹஜ்ஜூப் புnhரக்டர்…அப்புறம்….புதுசு புதுசா இந்தக் கொர்ட்டுக்கு வெளிலேருந்தும் புரொக்டருங்க வராங்க…

வழக்குகள் முடியுமட்டும் அவர்களிடம் சிரிப்பும் புன்னகையும் அவர்களைச்சுற்றி டென்ட் அடித்துக் கொள்ளும். பீதி எகிறும். அவ்வப்போது சிலருக்கு இன்ஸூலின் தேவைப்படும்.

கோர்ட் முதலியார் வழக்குகளைச் சமர்ப்பிப்பதற்காக விறைப்பாக அல்லது முறைப்பாக தான் வழமையாக நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

இவை எதுவும் பாதித்ததாகவோ அல்லது கவனத்தை ஈர்த்ததாகவோ தெரியாத முகபாவனையோடு ராபி சேர் தனது இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு…

அழுகிறாரோ…?

ராபி சேரின் உறவினர்கள் இன்றாவது அவருக்கு பிணை கொடுப்பார்களா எள்ற சந்தேகத்தில் பார்வையாளர் கலரியில் ராபி சேரைத் திரும்பிப் பார்ப்பதும் மருளுவதுமாக… டென்ஷனில் கவலையில் ஆயிரம் டெஸிபலில் உள்ளுக்குள் அலறிக் கொண்டிருந்தார்கள்….

நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின் யுத்த சூழலுக்குள் அகப்பட்டுக் கிடந்த தொண்ணூறுகளின் பின்னர் செய்கை பண்ணப்படாதிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளின் சொந்தக்காரர்கள் காணி உத்தரவுப்பத்திரம் வைத்திருப்பவர்கள் மீண்டும் தங்களது காணிகளுக்குச் சென்று துப்பரவு செய்து தமது பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கலாம் னஎ இரண்டாயிரத்துப்பத்தாம் ஆண்டு கிண்ணியா பிரதேச செயலகம் அலுவலக ரீதியான அறிவித்தல் விடுத்திருந்தது.

தொன்னூறுகளின் பின்னர் உண்ணாட்டு யுத்தத்தில் படுபயங்கரமாகப் பாதிக்கப்பட்டு வெறெந்த வழிகளுமற்று மஜீட்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது குரங்கு பாஞ்சான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள விவசாயக் கிராமமான சுண்டியாறு கிராண் வாழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து சதா காலமும் வாழ்வோடு போராடி அலுத்த நிலையில் இரண்டாயிரத்துப்பத்தாம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில்தான் அந்த விவசாயக் கிராமத்தில் சுமார் இருபது வருடங்கள் செய்கை பண்ணப்படாமல் காடும் புதரும் மண்டிப் போய்க்கிடந்த தத்தம் காணிகளை காணி அனுமதிப்பத்திரம் உள்ளோர் சுத்தம் செய்து பயிர் செய்யலாம் என கிண்ணியா செயலகப் பிரதேசம் அறிவித்தல் விடுத்திருந்தது.

ராபி சேரின் தகப்பனாரது மூத்த சகோதரனான சேகுத்தம்பி சாஹிதீன் என்பவருக்கும் குரங்கு பாஞ்சான் அல்லது மஜீத்நகர் கிராம சேவகர் பிரிவில் சுண்டியாறு கிரான் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் வயற் காணியிருக்கின்றது. குறித்த வயற்காணிக்கு கிண்ணியாப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வயற்காணி அனுமதிப்பத்திரம் காணி அனுமதிச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த இப்பிரதேசத்தில் அமைந்துள்ள ராபி செரின் பெரியப்பாவின் வயற்காணியும் தொன்னுஸறுகளின் பின்னர் செய்கை பண்ணப்படாமல் காடு மண்டிக் கிடந்தது. எப்படியோ தனது இரண்டு ஏக்கர் வயல்களின் எல்லைகளை அடையாளம் கண்டு கொண்ட சாஹிதீன் ராபி சேரிடம் யாராவது ஒரு புல்டோசர்காரனைப் பிடித்து தனது காணியைத் துப்புறவாக்கும்படி சொல்லியிருந்தார்.

சாஹூதீன் வயசாளி.

யுத்தத்தால் பறி போன தனது வயல்பூமி மிண்டும் தனக்கு இனிமேல் கிடைக்காதென்று ஏங்கிப் பொயிருந்த சாஹிதீனுக்கு அவரது தள்ளாத வயதிலும் இயலாமை காவிக் கொண்ட பின்னைய காலத்திலும் வயலைப் பார்க்கவாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே. தனது பயிர்ப் பூமியைப் பார்ப்பதற்குப் பதிலாக பெரும் காட்டைப் பார்த்ததில் ரொம்ப வருத்தம் அவருக்கு.

அந்தளவுக்குப் புதர்களென்றாலும் பரவாயில்லை… பெரும் காடு… இருபது வருட காட்டு மரங்களின் இருப்புக்கான உத்தரவாதம்… அந்த இரண்டு ஏக்கரையும் அவரால் தனியே துப்பரவு செய்து மீண்டும் காணியாக்குவதென்பது அசாத்தியமானதாகக் காணப்பட்டதால் ராபி சேருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்து துப்புரவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு சொல்லியிருந்தார்.

அவர் மட்டுமல்ல. பெரும்பாலும் பக்கத்து வயற்காரர்கள் அனைவரும் தமது காணி பூமிகள் மீண்டும் இருபது வருடங்கள் கழிந்த நிலையில் கை விட்டுப் போனதாகக் கருதப்பட்ட காணிகள் மீண்டும் கை சேர்ந்த சந்தோஷத்தில் துப்புரவு செய்து கொண்டிருந்தார்கள்.

புல்டோஷர் வைத்திருந்த பண்டார குணதிலக எனும் சிங்களவரிடம் தனது வயற் காணியை சுத்தம் செய்து தருமாறு கேட்டு விட்டு அதற்கான கூலியையும் கொடுத்து விட்டு சுண்டியாறுப் பகுதியில்; அமைந்திருந்த வயற்காணியை அடையாளம் காட்டிவிட்டு முழுதாக துப்புரவு செய்த பின் தனது பெரியப்பாவான சாஹிதினைத் தொடர்பு கொள்ளுமாறு சொல்லி விட்டு ராபி சேர் விடு வந்து ஒரு கெழமையின் பின்னர்….

அன்று வெள்ளிக் கிழமை…

கொஞ்சம் லேட்….நேர காலத்தோடு பள்ளிவாயலுக்கு போக வேண்டுமென்ற எண்ணத்தோடு பாடசாலையிலிருந்து சிறுபிள்ளைகளோடு கூடுதலாக மெனக் கெட்டதில் அயர்ச்சி உடம்பு பூரா வழிவதனை படம் பிடித்துக் கொண்டிருந்த கண்களோடு வீடு வந்து கொஞ்ச நேரத்தின் பின்…?

டக்குன்னு குளிக்க வேண்டுமே…ச்ச்சே…ரொம்ப நேரம் போயிட்டுது…இன்னேரத்துக்கு ஜூம்மா தொடங்கியிருக்கும்…

வாசலில் சில காக்கி யூனிபோம்களின் பூட்சு உராயும் சத்தம்… ரோட்டில் ஜீப் வண்டியை நிறுத்தி வைத்து வீட்டுக்கு வெளியே நான்கு பொலிஸார் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு ஹோம் கார்டுகள் வேறு..அதென்ன இம்புட்டு வீராப்பு..அங்கு நின்று கொண்டிருந்த எல்லோருக்கும்தான்…

‘இங்கே ஏக்கூப் ராபின்னு சொல்றது யாரு..’ ஒரு பீஸி வெளியிலிருந்து சத்தம் போட்டான்.

‘ நான்தான் ராபி…’

வெளியே வந்த ராபியை நெருங்கிய பொலிஸ் ஒருத்தன்

‘ மஹத்தயா… சுண்டியாற்றுப் பிரதேசத்துல அரசாங்கத்துக்கச் சொந்தமான ஒதுக்கப்பட்ட காட்டுக்குள்ள நொளஞ்சு மரமெல்லாம் வெட்டி நாசப்படுத்தின விஷயமா… ஒரு புல்டோசரையும் அதன் டிரைவர் பண்டார குணதிலக்க என்பவரையும் கைது செய்த வெச்சிருக்கோம்… அவன விசாரிச்சதுல நீங்கதான் அந்தக் காட்ட சுத்தப்படுத்தச் சொல்லி அவனக் கூலிக்கமர்த்தியதாகச் சொல்றான்… அதான் இங்க வந்தோம்…’

‘நீங்க எந்த பொலிஸ்..’

‘வான் எல பொலிஸ்’

‘நீங்க சொல்லற மாதிரி அந்த இடம் ஒண்ணும் அரசாங்கக் காடில்லயே… எங்க பெரியப்பாவுக்குச் சொந்தமான இடம்… பேர்மிட் பத்திரமும் இருக்கு… டி எஸ் அனுமதி தந்ததுக்கப்புறம்தான் நாங்க போய் எங்க காணியில கிடந்த புதர் பத்தையெல்லாம் வெட்டி தப்புரவு செஞ்சோம்…’

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது… எது வேணும்னாலும் பொலிஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க… ஒடனடியா நீங்க இப்ப பொலிஸூக்கு வர வேணும்.. இது ஓஐசி ஓர்டர்’

ராபி செருக்கு வியர்த்தது.

‘வேறொண்ணுமில்ல… ஜஸ்ட்….ஒங்க வாககு மூலத்தை இது தொடர்பா எடுக்கோணும்…. அவ்வளவுதான்…. இதுல நீங்க யோசிக்குறதக்கோ இல்ல கவலைப்படுறத்துக்கோ ஒண்ணுமில்ல. இப்ப பொலிஸூக்கு நீங்க வந்தீங்கண்ணா ரொம்ப சௌகரியமாயிருக்கும்.’ என்பவனது வார்த்தைகளில் ராபி சேருக்கு நம்பிக்கையில்லை.

‘இன்னிக்கு வெள்ளிக் கிழம….நாங்க பள்ளிக்குப் போகணும்…ஜும்மா ஆரம்பிச்சிட்டு…நான் பள்ளிக்குப் போய் தொழுகைய முடிச்சிட்டு அப்புறமா பொலிஸுக்கு வாரன்….நான் பள்ளிக்குப் போக நீங்க என்ன ப்ளீஸ் பண்ணி அனுமதிக்கனும்…’

‘அதெல்லாம் சரி வராது…இப்பவே ஒங்கள பொலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வரச் சொல்லி ஓஐஸி மஙத்தயா எங்களுக்கு ஓடர் போட்டிருக்காரு….பள்ளிக்கு அப்புறமா போகலாம்…இப்ப ஒடனடியா எங்கயுளொட பொலிஸுக்கு பொறப்படுங்க’

சோன்னவன் குரலில் எகத்தாளமும் நக்கலும் முரட்டுத்தனமும் ஒரு சேர கோரஸ் பாடியது.

‘இலலிங்க…இன்னிக்கு வெள்ளிக் கெழம..கட்டாயம் பள்ளிக்குப் போகனும்;….’

ராபி சேர் தவித்தார்.

‘இங்க பாருங்க நீங்க ஒரு டீச்சர்ங்குறதால நாங்க ரொம்ப மரியாதையா ஒங்களோட நடந்திட்டு இருக்கோம்…நீங்க என்னடான்னா நாங்க என்னமோ சொல்ல என்னமோ செஞ்சுட்டு இருக்கீங்க…ஒரு வார்த்த இனீமே நீங்க பேசக் கூடாது….இப்பவே இந்த ஜீப்ல ஏறுங்க…’

முரியாதை தருவதாக அவன் சொல்லிக் கொண்டாலும் அவன் பேசிய விதத்தில் மரியாதை இருந்ததாக அப்படி ஒன்றும் தெரியவில்லை.

முகத்தில் வழிந்த வியர்iவையைத் துடைத்துக் கொண்டு வந்த பொலிஸாரோடு வான்எல பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டார்;. கூட தான் துப்புரவு செய்யும் தனது பெரியப்பாவின் காணிக்குரிய காணி அனுமதிப்பத்திரத்தினையும் எடுத்துச் சென்றார்.

வான் எல பொலிஸ் நிலையம்

ராபி சேருக்குப் பகீரென்றது.

அவர்களது காணிகளுக்குப் பக்கத்துக் காணிகளைத்துப்புரவு செய்து கொண்டிருந்த பலரைக் கைது செய்து பொலிஸ் ஷெல்லில் வைத்திருந்தனர்.

பிடிபட்ட அனைவரிடமம் அவர்களது கலாணிக்கான பேர்மிட் இருந்தது என்ற விடயத்தினைப் பொலிஸார் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

கைது செய்யப்பட்ட அணைவரும் தாம் தமது சொந்தக்காணிகளையே துப்புரவு செய்ததாகவும் தமது காணிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பேர்மிட் பத்திரம் உள்ளதென்றும் வாதிட்டவர்கள் தமது பேர்மிட் பத்திரங்களினைக் காட்டிய போதும் பொலிஸார் அதனைக் கருத்திலெடுக்காதது தம்மைப் பொலிஸ் வேண்டுமென்று ஏதோ பெரும் சதித்திட்டத்துடன்தான் எந்தவொரு அடிப்படையுமில்லாமலும் குற்றமும் இல்லாமலும்; கைது செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெட்டத் தெளிவாகத் தெரிந்தது.

‘சேர்… கிராண்ல இருக்கிறது எங்க பெரியப்பாவுக்குச் சொந்தமான காணி… பெரியப்பா சொல்லித்தான் நான் டோசர்காரனைப்புடிச்சி அவர்ற காணியைத் துப்பரவு செய்ய விட்டேன்…. மற்றப்படி அந்த இடத்துல நான் இருக்கவும் இல்ல… நான் துப்புரவு செய்யவுமில்ல…. அத தவிர அந்தக் காணிக’கு பேர்மிட் பத்திரம் இருக்கு… இந்தா பாருங்க’ எனப் பேசிய ராபி சேரை

அந்த ஸ்டேஷன் ஓஐசி…

‘நீங்கள்ளாம் சேர்ந்து அரச காட்டுக்குள்ள பூந்து அரச காணிய அத்து மீறிப் புடிக்கிறதப் பாத்துட்டு சும்மா இருக்கவா சொல்றீங்க… ஒங்கட காணியில குடியிருங்க… அது ஒங்களுக்குப் போதும்… எல்லாருக்கும் ஒரு பாடம் படிப்பிக்கணும்…’

‘இல்ல சேர் நீங்க நினைக்குற மாதிரி நாங்க ஒண்ணும் அரசாங்கக் காட்டுக்குள்ள போய் துப்புறவு செய்யல…மிச்சம் காலத்துக்கு முந்தியே எங்க காணிகளுக்கு அரசாங்கம் அனுமதிப் பத்திரம் தந்திருக்கு…யுத்தத்துக்கு முந்தி ரொம்பக் காலமா எங்க பெரியப்பா அவங்க முந்திய பரம்பர எல்லாரும்..அந்தக் காணீல விவசாயம் செஞ்சிருக்காங்க..அது எங்க பரம்பரக் காணி சேர்;;;;;;;…..இப்ப டீஎஸ் ஒபீஸால எங்க காணிகளுக்குப் போய் துப்புறவு செஞ்சு விவசாயம் செய்யச் சொல்லி அனுமதி தந்திருக்காங்க..அதனாலதான் இப்ப எங்க காணிகள துப்பறவு செஞ்சோம்..இதான் சேர் நடந்தது..’

‘ஏய்;…நீ ரொம்பப் பேசுற…எங்களுக்குத் தெரியும் எது ஒங்க காணி எது அரசாங்கக் காணின்னு…நீ ஒண்ணும் புதுசா வெளக்கம் சொல்லத் தேவையில்ல…’

கறுவிக் கொண்டதோடு ராபி சேர் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் கடுமையாக அதட்டினான்… விட்டால் அதட்டி விடுவான் போலிருந்தது…. இந்தா அவர்களில் ஒருவரது கன்னத்தில் அவனது வலக் கையின் ஒட்டு மொத்த பலமும்

‘ பளார்’

‘ ஆ.. ஆ… ஆ…’

வெறும் வாக்குமூலம்தான் எடுக்க வேண்டுமெனக் கூட்டி வரப்பட்ட ராபி சேரையும் கைது செய்து கூட்டுக்குள் போட்டார்கள்.

‘என்ன மனாப் மாமா இது’

பக்கத்தில் அரச காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காட்டை அழித்து அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட வயசான மனாப் ஹாஜியாரிடம் கேட்டார்.

‘இல்ல தம்பி… எங்களுக்கு பேர்மிட் இருக்கு… ஆனா… எங்களுக்குப் பக்கத்த ஏரியாவுல எத்தனையோ சிங்களவங்க தொடர்ந்தும் காடு வெட்டி குடும்பம் கடும்பமா வீடு கட்டி குடியிருக்காங்க…இல்ல இல்ல குடியிருக்க வக்கிறாங்க..ஒருத்தனுக்காவது பேர்மிட் இருக்கா… பக்கத்து ஏரியாவ விடுங்க… நம்ம வயல் பூமி இருக்கிற இடத்துல நம்ம காணிகளையே துப்புரவாக்கி குடில் கட்டி குடியே இருக்காங்க. அதுக்கு இந்தா இந்தப் பொலிஸூ ஜீஏ எல்லாருமே சப்போர்ட்டு… இப்ப பாருங்க இப்ப இவங்க புடிச்சிருக்கிற ஆக்கள்ள ஒருத்தனாவது சிங்களவன் இருக்கானா… எல்லாமே சோனி….

‘ஆமா… இவனுக வெச்சிருக்கிற அத்தனை பேரும் நம்ம ஆட்கள்…’

‘வேறொண்ணுமில்ல யுத்தம் முடிஞ்ச கையோடு வடகிழக்குல இருக்கிற பெரும்பாலான காணிகள்ல திட்டமிடடடு சிங்களக் குடியேற்றம் நடக்குதில்ல… அதல ஒரு பகுதிதான் இது. நம்மட சாதி சனமெல்லாம் இப்படி அடாத்தா அரஸ்ட் பண்ணி நம்மட காணிகளுக்குள்ளேயே போக விடாம தடுத்து அந்தக் காணிகள்ல சிங்களவங்களை குடியேத்துறதுதான அவங்க ப்ளான்…’

ராபி சேரின் கண்களில் பெரும் சூழ்ச்சியொன்று தம்மை தமது சாதி சனங்களைச் சுற்றி பின்னப்பட்ட பின்னணி தெளிவாகத் தெரிந்தது.

அனுபவ ரீதியாகப் பேசிய மனாப் ஹாஜியாரின் வார்த்தைகளில் யுத்தத்துக்குப் பிந்திய வடகிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய பூமி தொடர்பான பயங்கரம் தெறித்து வீழ்ந்ததில் ராபி சேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

பொலிஸாரினால் மஜீட் நகர் பிரதேசத்தில் அரசகாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து துப்புரவு செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார்கள் என்ற குற்றத்தின் பேரில் சுமார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தனித்தனியாக வழக்குகள் தயார் செய்யப்பட்டிருந்தது. ராபி சேருக்கு எதிராகவும் தனியாக வழக்குத் தாக்கல் செய்து அனைவரையும் அடுத்த நாளே கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

அங்கேதான் காத்திருந்தது அதிர்ச்சி.

பொலிஸார் கடந்த பதினான்னு நாட்களுக்கு முன் ராபி சேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்களால் தயாரிக்கப்பட்ட பீ அறிக்கையை மன்றில் வாசிக்க வாசிக்க மைனஸ் டிகிரி வெப்பத்துக்குள் மரணித்துப் போனார் ராபி சேர்.

இப்படியும் நடக்குமா…

பொலிஸாரின் பீ அறிக்கையின்படி

‘வான்எல பொலிஸ் நிலைய நியாதிக்கத்துள் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான காட்டினை டோசர் இயந்திரத்தைப் பயன்படுத்தி டோசர் பண்ணியது தொடர்பாக கடந்த இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு ஐந்தாம் மாதம் இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரித்தது தொடர்பாக இந்த மன்றுக்கு மேலதிக அறிக்கை வழங்குவதோடு குறித்த அரசுக்குச் சொந்தமான ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் சுமார் ஏழு ஏக்கர் அளவில் பாதி சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது இரண்டாயிரத்துப்பத்து ஐந்தாம் மாதம் இரண்டாம் திகதியன்று பொலிஸ் அதிகாரிகளைக் கண்டு தப்பிப் பாய்ந்தோடிய குறிஞ்சாக்கேணி இரண்டு கிண்ணியா எனும் விலாசத்தினைச் சேர்ந்த சந்தேக நபராகிய முகம்மது ஏக்கூப் முகம்மது ராபி என்பவரை எனது நிலையத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் கடந்த இரண்டாயிரத்துப் பத்து மே மாதம் ஏழாம் திகதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் நியாதிக்கத்துக்குள்; சென்று கைது செய்ததோடு மேலதிக விசாரணையில் அவர் இந்தக் காட்டினை வெட்டுவது தொடர்பில் பிரதான சந்தேக நபராக உள்ளார் எனத் தெரியவருகின்றது…’

அத்தோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகள் செய்யப்பட வேண்டுமெனவும் இவர் தவிர வேறு எவரேனும் சந்தேக நபர்கள் உள்ளனரா என விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இது தொடர்பில் விசாரணையில் இன்னும் முடிவடையவில்லை எனவும் விசாரணைகள் முடிவடையும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

‘யா அல்லாஹ்…எப்போது என்னை பொலிஜார் சுற்றி வளைத்தார்கள்..எப்போது நான் அவர்களிடமிருந்து தப்பி ஓடினேன்…சும்மா வாக்கு மூலம் எடுக்க வேண்டும் என்று பொலிஸுக்கு கூட்டி வந்து அங்கு வைத்து எதேச்சதிகாரமாக கைது செய்து…வழக்கிட்டு…இன்று என்னடாவென்றால்;…எப்பேர்ப்பட்ட அப்பட்டமான பொய்…..

‘யா அல்லாஹ்….ஏழு ஏக்கர் காணியை அதுவும் ஒரே நாளில் நான் சுத்தம் செய்தேனா…அசாத்தியமானதும் நடைமுறைக்குப் பொருந்தாதுமான ஒரு பொய்யை எவ்வளவு அழகாக பொலிஸார் சோடித்து…அலங்கரித்து…அழகு பார்த்து….சத்தியம் சவமாகிக் கிடந்தது…’

வழமை போலவே பொலிஸாரின் வார்த்தைகள் மட்டும் தெய்வ வாக்குகளாக்கி பொலிஸ் சொல்வதுதான் உண்மை சத்தியம் என நம்பி விடுகின்ற மனப் போக்கில் உள்ள நீதவான் மேலதிக விசாரணைகள் இந்த வழக்கில் தேவை என்பதனாலும் வழக்கு விசாரணைகள் இன்னும் பொலிஸாரால் இன்னும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினாலும் சந்தேக நபரை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடுகின்றேன் என எதிர்வரும் மூன்று தினங்களக்கு ராபி சேரை விளக்க மறியலில் வைக்குமாறு கௌரவ நீதவான் உத்தரவிட்டார்.

தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் திறன்களை இழந்த நிலையில் இடி விழுந்த ராபி சேரின் இதயத்தில் ஸ்ட்ரோக்… சுற்றி உள்ள சூழல் டவுன் ஸின்ட் ரோமாக அவருக்கு காட்சியளித்தது. தன்னைச் சுற்றி பொலிஸாரால் நீதிமன்றத்தில்; பின்னப்பட்ட பொய்களின் நெசவு தனது அத்தனை வேட்டைப் பற்களையும் காட்டி இந்தா உன்னை குதறி எறிந்து விடுகின்றேன் என ராபி சேரை குறி வைத்துக் கொண்டிருந்தது.

‘இரண்டு ஏக்கர் காணி… எப்படி அரசாங்கத்தின காணியாகும்… பேர்மிட் காணி அனுமதிப் பத்திரம் இருக்கு. தவிரவும் டீஎஸ் அலுவலக அனுமதியின் பேரில் அத்தனை பேரும் துப்பரவாக்கினாங்க… பேர்மிட் காணி எப்படி அரசாங்கக் காணியாகும்… ரெண்டு ஏக்கர் காணிய சுத்தப் படுத்தப் போய் இவன் என்னடான்னா ஏழு ஏக்கர் அரச காணிய சுத்தப்படுத்துறதா சொல்லுறான்… எப்பேற்பட்ட பொலிஸ்… சிங்கள பொலிஸ். பொலிஸ் புடிச்ச அத்தனை பேரும் சோனவனுங்க…. இதிலிருந்தே விளங்குது எதற்காக இப்படி அநியாயமா அப்பாவி முஸ்லிம்கள புடிச்சி அடாத்தா பொய்க் கேசு போட்டிருக்காங்கன்னு….’

மனசுக்குள் கொதிநிலை

மனாப் மாமா சொன்னது நூறு வீதம் உண்மை. பொலிஸின் இந்தப் பின்னணியில் எத்தனை கைகள் உள்ளனவோ… இருக்கும்… இல்லாமலிருக்காது.. அந்த பொலிஸ் அம்புகளை ஏவி விட்ட வில்கள் யார்…. என அவருக்குப் பட்டாலும் தெளிவற்ற நிலையில் குழம்பிப் போயிருந்தார்.

படிச்ச மனுஷனாச்சே…

அரசாங்கத்துக்குச் சொந்தமான காட்டுக்குள்ளே பூந்து துப்புரவு செஞ்சோம்னு எடுத்துக்கிட்டாலும் அது என்ன கொலைக் குற்றமா… இல்ல கொள்ளைக் குற்றமா… இல்ல கள்ள நோட்ட அடிச்சி கரன்ஸிகள புழக்கத்துல விட்ட குற்றமா…

சல்லிக் காசு பெறாத குற்றம்.

சட்டப்படி பிணை வழங்கப்படக் கூடிய குற்றம். பொலிஸ் சொன்ன கதையைக் கேட்டு நீதவான் என்னடான்னா இன்னும் மூனு நாளைக்கு மேலதிக விசாரனைக்காக சந்தேக நபரை ரிமாண்ட் பண்ணுகிறார். ஏதோ பெரிய குத்தத்த செஞ்சவன மாதிரி…

மனசுக்குள் ஆயிரம்தான் நினைத்துக் கொண்டாலும் ஒற்றை வார்த்தையேனும் அந்த திறந்த நீதிமன்றத்தில் எப்படி வாய் திறந்து உரைப்பது… பொலிஸ்… கோர்ட்… இவைகளுக்கு மத்தியில் சொல்ல நினைப்பவை எல்லாம் கல்லறை வாசகங்கள்.

ராபி சேர் மட்டுமன்றி அதே குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மனாப் மாமா மற்றும் ஏனையோரையும் நீதவான் பொலிஸாரின் வேண்டு கோளின் பேரில் விளக்க மறியலில் வைத்தார். கடந்த மூன்று நாட்களின்; பின்னர் மீண்டும் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ராபி சேர் மீண்டும் பதினான்னு நாட்கள் ரிமான்ட் பண்ணப்பட்டு இதோ இன்று நீதிமன்றத்துக்கு ஆஜர் பண்ணப்பட்டிருக்கிறார்.இந்தப் பதினான்னு நாட்களுக்கிடையில் ராபி சேர் சார்பில் பல சட்டத்தரணிகள்; ஆஜராகினர். நகர்த்தல் பிரேரணை தாக்கல் செய்து ராபி சேருக்குப் பிணை வழங்குமாறு கோரி விண்ணப்பங்கள் செய்தும் அத்தனை விண்ணப்பங்களும் நீதவானால் இலேசாக மறுக்கப்பட்டு விட்டன என்பது வேறு கதை.

ராபி சேருக்கு இந்த முறை சற்று நம்பிக்கை இருந்தது தனக்குப் பிணை கிடைக்குமென்று. அவர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி காலையிலேயே சந்தித்து தெம்பூட்டியிருந்தார். ஏற்கனவே ஒரு பதினேழு நாட்கள் ரிமான்ட் எனும் நரகில் ரசிச்சாச்சு… நான்கு சுவர்களுக்குள்ளே ஒரு குட்டி நரகம்… கதவுகளேயில்லாத பாத்ரூம்கள்…. அழுக்குப் படிந்த தரையும் சுவர்களும்…. ஏற்கனவே ரிமான்டில் இருந்து பழக்கப்பட்ட கிரிமினல்களின் தொடர் இம்சைகள்.. இத்யாதி… இத்யாதி…

‘ யா அல்லாஹ் என்னைக் காப்பாத்து’

‘ இன்னிக்கப் பிணை கிடைக்குமா’

‘ கிடைக்கும்’

‘நம்பிக்கைதான் வாழ்க்கை’

‘என்ன சொன்னாலும் சில சமயங்களில் தத்துவங்கள் தத்தபித்துவங்களாகி விடுகின்றன…’

‘பொறுமை’

‘அதனால்தான் உசிரு இன்னும் எஞ்சியிருக்கு’ என டைட்டில் ஓடிய ராபி சேரின் வழக்கு காட்சிப்பட்ட போது அவரது இதயத்துள் ரயிலின் சப்தம்… தடக்… தடக்… அப்புறம் தலை வெட்டப்பட்ட புறாவின் சிறகுகள் தடக் தடக்கென்று அடித்துக் கொள்ளும் படக் படக்… அப்புறம் மாமிசப் பருந்தின் கூரிய அலகில் மாட்டுப்பட்டுக் கொண்ட கோழிக்குஞ்சாய் லபக்… லபக்…

ராபி சேர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராபி சேருக்க பிணை கொரி மிக அழகாகவும் சட்டப்பிரகாரமும் விண்ணப்பம் செய்தார். சந்தேக நபரால் துப்பரவு செய்யப்பட்டதாக சொல்லப்படும் காணியானது அரச காணியல்ல என்றும் குறித்த காணிக்கு பிரதேச செயலகத்தினால் பேர்மிட் பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும் எடுத்துக் காட்டி குறித்த குற்றமானது பிணை வழங்கப்படக் கூடிய குற்றம் எனவும் ஏற்கனவே சந்தேக நபர் பதினேழு நாட்கள் விளக்க மறியலில் கழித்திருக்கிறார் என்பதோடு அவர் ஒரு ஆசிரியர் என்பன போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு மதிப்புக்குறிய மன்று சந்தேக நபருக்குப் பிணை வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்த அதேவேளை

நீதவான் பொலிஸாரிடம்

‘தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்’ என வினவினார்.

‘பிணை வழங்குவதற்காக கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்’ எனவும் அதற்கான காரணங்களைக் கடந்த தவணையின் போது அவர்களால் முன்னைக்கப்பட்ட காரணங்களையே மீண்டும் மீளுருவாக்கம் செய்தனர்.

இரதரப்பு வாதங்களையும் விண்ணப்பங்களையும் கேட்ட நீதவான் மளமளவென்று எழுதிய கட்டளையை வாசிக்க ஆரம்பித்தார்.

‘சந்தேக நபருக்கு பிணை கோரி சந்தேக நபர் சார்பாக அவரது சட்டத்தரணி விண்ணப்பம் செய்கின்றார். பிணை வழங்குவதற்குப் பொலிஸார் அட்சேபணை தெரிவிக்கின்றனர். விசாரணைகளை சீக்கிரமாக முடிக்க வேண்டுமென பொலிஸாரை இந்த மன்று எச்சரிக்கின்றது. வழக்கின் தன்மை மற்றும் இயல்பினைக் கருத்திற் கொண்டு மேலதிக விசாரணைக்கு நியாயமான காலம் வழங்கப்பட வேண்டும் என மன்றுக்குத் தோன்றுகிறது.

இதற்கான காரணமாக சந்தேக நபரால் அரச காட்டுக்கு ஏற்படுத்திய சேதமானது ஒரு இலட்சமாக இருக்கும் பட்சத்தில் சந்தேக நபருக்கு எதிராக அரச சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் வழக்கிடப் போவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்படுமானால் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதில் இந்த மன்று சந்தேக நபருக்கு வேறு விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டியிருக்கும். அதன் பிரகாரம் குறித்த இந்த வழக்கின் விசாரணைகள்; இன்னும் முடிவடையாதிருப்பதன காரணமாக சந்தேக நபரை பிணை வழங்காது எதிர்வரும் பதினான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடுகின்றேன’;.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *