(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானேவந் தெய்தும் பராபரமே”
என்று இனிய குரலெடுத்து ஈடுபாட்டோடு இசைத்துக்கொண்டிருந்தார் கந்தசாமியா பிள்ளை.
சிறு பையனாக இருந்தபோது அவருடைய அன்னையார் சொக்கம்மாள் “காலையில் எழுந்து கடவுளைப் பூசை செய்” என்று சொல்லிக் கொடுத்திருந்தார். விவரந்தெரிந்த நாளாகக் கந்தசாமியா பிள்ளை அந்த அன்புக்கட்டளையை நிறைவேற்றத் தவறியதே கிடையாது.
பள்ளிக்கூடப் படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாம் கடந்து இன்று பெரிய அலுவல் பார்க் கிறார். “நம்ம பிள்ளையாண்டான் சில்லா முனுசு வேலையிலே இருந்தாலும் தங்கக் கம்பி தான்….நான் கீறின கோட்டைத் தாண்டுவ துண்டா? நீயும்தான் இருக்கிறே….என்ன பண்ண? ஒற்றை உப்புக்கல்லுக்கு ஆகுமா என்று சொக்கம்மை தன் வீட்டு வேலைக்காரன் வேலையனிடம் அடிக்கடி தான் பெற்ற ‘தங்கக் கம்பி’யைப்பற்றிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வாள். வேலையனைப் பெற்று வளர்த்த சொக்காயி அவனைப்பற்றிக் குறை சொல்வதற் கென்றே அடிக்கடி ‘முன்சீப்’ வீட்டுக்கு வருவதுண்டு. பெரிய அதிகாரிகள் வீட்டார்க ளெல்லாம் வேலைக்காரர்களைப்பற்றிக் குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள். ‘ ஐயோ என்றால் ஆறுமாதப் பாவம்’ என்பது சேவகர் களைப் பொறுத்தவரை அவர்கள் கையாளும் கொள்கை. சும்மா மெல்லுகிற வாய், அவல் கிடைத்தால் விடுமா? வேலையனைப்பற்றிச் சொக்காயி சொன்ன குறையெல்லாம் எரிகின்ற நெருப்பில் நெய்விட்ட மாதிரியாகத்தான் ஆயிற்று. “வளைந்து குனிந்து வேலை செய்ய இந்த வயசிலேயே இந்தப் பயலுக்கு முடியலையே! இவனை நம்பி ஏதாவது குடித் தனம் உருப்படுமா?” என்றெல்லாம் அவள் ‘ஒப்பாரி’ வைத்துச் செல்லுவாள். அவள் கண்டாளா அதிகாரிகளின் நடைமுறையை ? முனிசீப்பின் அன்னை ஒருநாள் “சொக்காயி, உன் பேரும் என் பேரும் ஒரே மாதிரியாக இருக்கிறதே! எங்கள் குடும்பத்துக்கென்றே ஆண்டவன் உன்னைப் படைத்திருக்கிறான், பார்த்தாயா? ‘ என்று திருவாய் மலர்ந் தருளினாள். இது கேட்ட சொக்காயிக்கு உச்சி யும் உள்ளமும் ஒருங்கே குளிர்ந்துவிட்டன. சொக்காயி கண்டாளா, எதற்காக அந்தத் தெற்கத்தி அம்மா அப்படித் தேனொழு கப் பேசினார்க ளென்று! இப்படியெல்லாம் தேனொழுகப் பேசிக் குழையடித்துக் காரியத் தைச் சாதிப்பதில் அந்த அம்மாளுக்குள்ள திறமை வேறு யாருக்குமே கிடையாது. கம்மாள் பேசிய பேச்சிலே சொக்காயிசொக்கிப் போனாள். பலன் என்ன தெரியுமா ? ‘ முன்சீப்’ வீட்டுக்கு இரண்டு ரூபாய்ச் சம்பளத்தில் ஒரு வேலைக்காரி கிடைத்துவிட்டாள்! “உனக் கென்ன குறைச்சல்! உன் மகன் நம்ம பிள்ளை யாண்டான் ஆபீசிலே இருபத்திரண்டு ரூபாய் வாங்குகிறான்! நீ வேறே சம்பாதிக்கிறாய்….” என்று அடிக்கடி அந்த ஏழைக் குடும்பத்தின் நிரம்பிய’ வரும்படிபற்றிச் சொக்கம்மாள் சொக்காயியிடம் சொல்லுவாள். அதோடு நின்றுவிடுவதும் இல்லை. “ஆமா, இத்தனை சம்பாதிச்சும் என்ன பண்ண? பயலுக்கு ஒரு பெண்ணா குட்டியா பார்த்து ஒரு முடிச்சுப் போடுவதுதானே!” என்றும் சொல்லி வைப்பாள். இதைக் கேட்டவுடனே வேலைக்காரி சொக்காயிக்கு உலகமே தன் காலடியில் கிடப் பது போன்ற ஒரு பெருமிதம் வந்துவிடும். அம்மா உங்கள் தங்க மனசு யாருக்கு வரும் ? அந்தப் பயல்தான் நான் சொன்னதைக் கேட்ப தில்லை. என் தம்பி மகளைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன், ஒன்றும் பலிக்கவில்லையே! நீங்கள் சொன்னா லாவது பயல் பணியமாட்டானா, பார்க்கலாம் என்று பேசி, தன் திட்டத்தையும் வெளியிடு வாள். இப்படியாக இரண்டு சொக்கிகளின் பேச்சை ஒரு நாள் ‘முனிசீப்’பின் செல்ல மகள் அம்மு கேட்டுவிட்டாள். துடுக்குக்காரப் பெண், அது சும்மா இருக்கக்கூடாதோ! ” ஏன் பாட்டி, நம்ம வீட்டுக்கு இன்னொரு வேலைக்காரி வேணுமா?” என்று கேட்டு வைத்தது. ‘அன்பே சிவம்’ என்று தன் அருமை மகனுக்கு உப தேசித்த சொக்கம்மாளின் முகத்தை அப்போது பார்த்திருக்க வேண்டுமே !
கந்தசாமியா பிள்ளையைப் பூசை அறையில் பாராயணம் செய்த கோலத்திலேயே விட்டு . விட்டோமா? சரி, அவரிடமே போகலாம். நன்றாக உற்றுக் கேளுங்கள்! என்ன அருமை யான பாட்டு !
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே!
இனிய ஓசை ! நல்ல பண்முறை ! சரி, அதோ அந்தச் சோபாவில் அமர்ந்து கேட்கலாம், வாருங்கள். நாம் பூசை அறைக்குள் போவது அவ்வளவு நன்றாயிராது. சிவபூசை வேளையில் கரடி விடுவது போல இருக்கும்.
….நல்ல பாட்டு என்று பாராட்டுகிற பான்மையிலேயே தூங்கிவிடாதீர்கள். இன் றைக்கு ஞாயிற்றுக்கிழமை யானதால் பூசை முடியக் கொஞ்சம் நேரமாகும்.
…அடடே, அது என்ன அந்த நாய்க்குட்டி அவ்வளவு உரிமையோடு பூசை அறைக்குள்ளே போகிறது! அடடா, பூசைவேளை யல்லவா? தீட்டுப் பட்டுவிடாதோ !….
“யாரடா அங்கே! ஒரு நாயையும் காணோமே! நாசமாய்ப் போக! எவனடா! மடைப் பயல்களா ! வந்து தொலையேண்டா!….”
திருமந்திரத்தில் இப்படி ஒன்றும் கிடையாது. சிவ வழிபாட்டில் ஈடுபட்டுள்ள கந்தசாமியா பிள்ளையவர்களை ருத்ர அம்சம் பிடித்துக்கொண்டது. வைரவர் வாகனம் பூசையறைக்குள் எழுந்தருளியதுதான் இத்தனை ஊழிக் கூத்துக்கும் காரணம்.
வேலைக்கார வேலையன் கைகாலெல்லாம் நடுங்க, ஒண்டி ஒடுங்கிப் போய்ப் பூசையறைக் குள் நுழைகிறான், பாருங்கள். ஐயோ பாவம், அவன் சாம்பலாய்ப் போகாமல் இருக்க வேண்டுமே!
“ஏண்டா, நாயே! அங்கே என்ன இழ வெடுக்கிறாய்! ரோஸ் உள்ளே வருவதுகூடக் கழுதைக்குத் தெரிய’லையோ! தூங்கு மூஞ்சிக் கோட்டானே! இழுத்துக்கொண்டு போடா, தரித்திரமே!”
-இத்தனை நாமாவளிகளையும் வாங்கிக் கொண்டு வேலையன் அந்தச் செல்லப் பிறவியை இழுத்துக்கொண்டு வந்துவிட்டான்… இப்போது கேளுங்கள், உள்ளே அருச்சனை தொடங்கிவிட்டது சரி, இப்படி எவ்வளவு நேரம் இங்கேயே காத்துக் கிடப்பது என்று கவலைப்படுகிறீர்களா? வேண்டாம். அதோ, பொதுநலக் கழகச் செயலாளரும், தமிழ் வளர்ச்சிச் சபையின் தலைவரும் வருகிறார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண் டிருக் கலாம். அதற்குள் ‘ஐயா ‘வும் வந்துவிடுவார். அவரைப் பார்த்தவுடன் நம் வேலையும் முடிந்து விடும்.
“அடடே, நீங்களும் வந்திருக்கிறீர்களா? ஐயா அவர்களைப் பார்க்கத்தானே !….”
“ஓகோ, உங்களுக்குச் செய்தி தெரியாதா ! இன்று மாலை நம் கழகத்திலே முன்சீப் ஐயா பேசுகிறார்கள்…….”
“அப்படியா சேதி! எனக்குத் தெரியாது. காட்டூர்ச் சிவநெறிக் கழகத்திலே நேற்று ஒரு கூட்டம். அதற்காகப் போயிருந்தேன். இன்று காலையில்தான் வந்தேன் என்ன பொருள் ?”
“நடமாடும் கோயில்கள்”
“அடடா! என்ன அருமையான தலைப்பு! ஐயா அவர்கள் பேசுவதற்கு மிகவும் பொருத்த மானதுதான். அவர்கள் அருளின் வடிவ மல்லவா? மனிதர்களுக்குத் தொண்டு செய்வ தென்றால்……..”
“அதை ஏன் கேட்கிறீர்கள் ? ஐயா பேசினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண் டிருக்கலாமே! என்ன படிப்பு, என்ன அறிவு….!”
“அதைச் சொல்லவில்லை. படித்திருக் கலாம். படித்தவர்க ளெல்லாம் படித்தபடியே நடக்கிறார்களா, என்ன?……..”
“ஆமாம், ஆமாம். நன்றாய்ச் சொன்னீர் கள். கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என்று வள்ளுவர் சொன்னது முன்சீப் ஐயாவுக்குத்தான் மிகவும் பொருத்தம் ..”
“அன்பே சிவம் என்று முன்னே ஒரு தடவை பேசினார்கள். அடடா! என்ன அருமையான பேச்சு….”
“ஆமாம் ஆமாம். வெறும் மேடைப் பேச்சா! செயலிலும் அல்லவா நடத்திக் காட்டு கிறார்கள்? மனித உடல்களில்மட்டுமா சிவனைக் காணுகிறார்கள்! ஒரு நாயை ஐயா வளர்க்கிறார்கள்…. அது தெரியுமோ ? ”
“கூட்டத்துக் கெல்லாம் கூடவே அழைத்து வருகிறார்களே ! நான் பார்த்திருக்கிறேன்………”
“அந்த நாயும் ஐயா என்றால் போதும்…. ”
இந்த அளவுக்கு மேல் பேச்சு நீடிக்க வில்லை. அதோ பூசை அறையிலிருந்து கந்த சாமியா பிள்ளை வந்துவிட்டார்.
“வாருங்கள் வாருங்கள். நெடு நேரமாகக் காத்திருக்கிறீர்கள்போ லிருக்கிறது ! சிவ பூசை முடிய இவ்வளவு நேரமாகி விட்டது. அந்தக் காலத்தி லிருந்தே இந்த நியமம் தவறுவ தில்லை….” இது முனிசீப் ஐயாவின் பேச்சு.
“ஆமாம்…….. அதற்கென்ன தடை! நடக்க வேண்டியதுதானே….”
“இன்றைக்குத்தானே உங்கள் கழகக் கூட்டம்? ”
“ஆமாம்; அதுதான் நினைவுபடுத்தலாம். என்று வந்தேன்…..”
ஐயாவின் குரலைக் கேட்டவுடனே எங்கே இருந்தோ வந்துவிட்டது ரோஸ். யாரோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடனே தன் திருமந்திரத்தை அது பாடத் தொடங்கிவிட்டது.
“ளொள் ளொள்…”
“அடே, ரோஸ்! ஏண்டா உன் குரலை இப்போது காட்டுகிறாய்? பார்த்தீர்களா….. நம்ம நாய் மிகவும் அறிவுள்ள பிராணி……..” – இது ‘பிள்ளைவாள்’ பேச்சு. இதற்குள் ரோஸ் அவருடைய ஆசனத்திலேயே சரிசமான மாக உட்கார்ந்து கொஞ்ச ஆரம்பித்துவிட்டது.
திடீரென்று ‘ளொள் ளொள்’ மந்திரத்தை உரக்க உச்சரித்துக்கொண்டே, வாசலை நோக்கிப் பாய்ந்தது. அங்கே நாய் என்ற பெயரோடு ஒரு எலும்புக் கூடு அசைந்து வந்து கொண்டிருந்தது. தரித்திரம் பிடித்த நாயைக் கண்டவுடனே ரோஸுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது…….. கந்தசாமிப் பிள்ளையும் குரல் காட்டினார்.
“டேய் வேலையா! தெருவிலே போகிற நாயையெல்லாம் உள்ளே விடாதே’டா! இந்த நாய்க்கு அதெல்லாம் கண்டால் பிடிக்க வில்லை…”
“சரிங்க எசமான் ”
யாரோ இரண்டு பேர் வந்திருந்ததால் வேலையனுக்கு வேறு ‘பட்டாபிஷேகம்’ ஒன்றும் நடக்கவில்லை.
வந்திருந்தவர்கள் இருவரும் ஐயா அவர் களும் ஆன்ம உலகம்பற்றியும் ‘அருளென்னும் அன்பு ஈன் குழவி ‘பற்றியும் நெடுநேரம் பேசினார்கள். பிறகு, ஒருவாறு விடைபெற்றுப் பிரிந்தார்கள்.
போகும்போது இருவரும் பேசிக் கொண்டே போனார்கள்.
“ஐயா அவர்கள் பெரிய ஞானிதான். இருந் தாலும் அந்தத் தெரு நாய்பற்றி ஏன் அப்படிச் சொன்னார்கள் ”
“எல்லாப் பிறவியும் ஒன்றுதான். இருந் தாலும், ஐயா அவர்கள் ஏன் இந்த மாதிரி… “
இவர்கள் என்னதான் ஆராய்ந்தாலும் உண்மையை அவர்களால் காணமுடியாது. காரணம் கந்தசாமிப்பிள்ளை என்ற சடலத்தை மனிதனாக அவர்கள் காணவில்லை. ‘முன்சீப் அறிஞர்’ ஆகத்தான் காணுகிறார்கள். ‘அனுபவ ஞானி’ யாகிய வேலையனுக்கு அந்த உண்மை தெரியும்.
“ஒரே பிறவியாய் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? சோபாவில் சாய்கிற நாயும் வாசலில் தூங்கிவிழுகிற நாயும் ஒன்றாகிவிடவா முடியும்?”
– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.