“உங்களுக்கு எல்லாம் எங்களோட கஷ்ட நஷ்டம் புரியாது”, படிச்சு, பேனுக்கடியிலே உட்கார்ந்து கிட்டா, எங்க மாதிரி ஏழைங்களோட வருத்தம் எப்படி புரியும்?. நான்கைந்து பெண்களும், ஆண்களும், விசாரிப்பதற்காக வந்திருந்த பெண் கலெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர்.
பெண் கலெக்டருக்கு அவர்கள் சொன்னதை கேட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது. வேண்டாம் இப்பொழுது சிரிக்க்க்கூடாது, அவர்கள் கோபத்தை இப்படி காட்டி ஆற்றிக்கொள்கிறார்கள். இதற்கு பின்னால் சூத்திரதாரிகளாய் இருக்கும் அரசியல்வாதிகளை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை, நம்மிடம்தான் கோபத்தை காட்டமுடியும்? ஏன் நம்மால் கூட அரசியல்வாதிகளை தாண்டி எதுவும் செய்யமுடிவதில்லையே.
கண்டிப்பா உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு கொடுக்க சொல்றேன், சொல்லிவிட்டு கார் ஏறியவள் தனது அலுவலக அறைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்தவளுக்கு அவர்கள் சொன்ன வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்தது.” உங்களுக்கு ஏழைகளோட கஷ்டம் புரியாது”
ஆயாசமாய் கண்ணை மூடியவளின் நினைவுகள் பின்னோக்கி பறந்தது.
ஹை..ஹை..த்தா..த்தா..அழுத்தி உச்சரித்து ஆட்டுக்குட்டிகளை விரட்டினாள் செல்லத்தா. கேட்டால்தானே, அதுகளுக்கு கூட இந்த எட்டு வயசு பெண்ணுக்கெல்லாம் பயப்படவேண்டுமா என்ற எண்ணம் இருக்கலாம். அதுகள் பாட்டுக்கு ஒன்றை மீறி ஒன்று பிரிந்து சென்று கொண்டே இருந்தன. ந்தா…ஹை..என்று விலகி ஓடிய குட்டி ஆட்டை எடுத்து அணைத்து கூட்டத்தோடு நடக்க விட்டாள்..ஊர் எல்லைக்கு வந்துட்டோம் அடுத்து பள்ளிக்கூடம்தான். அதைய தாண்டினா பொட்டல் வெளி. எங்கும் கருவேல மரங்களும் காய்ந்து போன புற்களும் காணப்படும். பரந்து விரிந்த அந்த காட்டுக்குள் ஆட்டு கூட்டத்தை விட்டு விட்டால் அது பாட்டுக்கு மேய ஆரம்பித்து விடும். அரை மணிகொரு சத்தம் இட்டால் போதும், அதற்குள் இவள் மெல்ல நடந்த அந்த பள்ளிக்கூடத்து தாழ்வாரத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளுவாள்.
அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் அப்படி ஒன்றும் ஏராளமான குழந்தைகள் படிப்பதில்லை, பேருதான் ஐந்தாம் வகுப்பு வரைக்கும், இரண்டு வாத்தியார்கள், உண்டு. தனித்தனி வகுப்பு எல்லாம் கிடையாது. மொத்தத்துல பாதி பசங்களை ஒரு வாத்தியார் பாத்துக்குவாரு, மீதி பசங்களை இன்னொருத்தர் பாத்துக்குவாரு. மதியத்துக்கு மேல இவங்க இரண்டு பேரும் மாறி பாத்துக்குவாங்க. மொத்தமே அம்பது குழந்தைகளுக்கு மேல் இருப்பது அதிகம்தான்., அவர்கள் இதுகளுடன் மல்லுக்கட்டி, மூணு மணிக்கு மேல் அவிழ்த்து விட்டு விடுவார்கள்.
ஒரு ஆயா, மதியம் சோறு பொங்கி பள்ளிக்கூடத்து பிள்ளைகளுக்கு போட, பசங்க சாப்பிடுவதற்கு முன் இரண்டு வாத்தியார்களுக்கும் போய் விடும். எல்லாம் முடிந்து ஆயா செல்லத்தாளையும் கூப்பிட்டு கொஞ்சம் போடுவாள்.
செல்லத்தாள் அது வரை காத்திருப்பாள். அவளுக்கு ஆட்டின் மீது ஒரு கண்ணும் சோற்றின் மீது ஒரு கண் இருந்தாலும், அவ்வபொழுது சமையல் செய்யும் ஆயாளுக்கு சுள்ளி விறகுகளை பொறுக்கி கொண்டு வந்து கொடுப்பாள்.
சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் சிரமம்தான்.எப்படியோ அந்த இரு நாட்கள் அங்கிருக்கும் தண்ணியை குடித்து ஒப்பேற்றிக்கொள்வாள். செல்லத்தாளின் ஆத்தாளுக்கு கஷ்ட ஜீவனம், அவளும், காலை எழுந்து காடு கழனி வேலைக்கு ஓடுவதில்தான் இருப்பாள், இராத்திரி ஆக்கும் சோற்றை கரைத்து தாயும் மகளும் பங்கு போட்டு குடித்து விட்டு கிளம்பி விடுவாள்.
செல்லத்தாளுக்கு ஒரு மூப்பன் வீட்டில் வளர்த்து வரும் பத்து ஆட்டு உருப்படிகளை மேய்ச்சலுக்கு கொண்டு போய் விட்டு விட்டு மாலை மங்கி கூட்டி வருவதுதான் வேலை. மாத சம்பளம் எல்லாம் கிடையாது. வருடத்துக்கு ஒரு ஆடு கொடுத்து விடுவான், அது போக காட்டில் விளையும் சோளம்,கம்பு ராகி என்று கொடுத்து விடுவான். அவ்வப்பொழுது மூப்பனின் சம்சாரம் மிச்சம் மீந்த்தை செல்லத்தாளிடம் கொடுப்பாள். ஆட்டை பட்டிகளில் விட்டு விட்டு அவள் கொடுத்த மிச்சம் மீதிகளை குடிசைக்கு கொண்டு வந்தால்,அதை ஆத்தாளும், மகளும் பங்கு போட்டு சாப்பிட்டு படுத்து விடுவார்கள். அப்படி வரும் நாட்களில் காலை கொலை பட்டினிதான். காலையில் அம்மாக்காரி காடு கழனி வேலைக்கு சென்று விடுவதால் வெறும் வயிற்றுடந்தான் மூப்பன் வீட்டுக்கு சென்று ஆட்டை ஓட்டிக்கொண்டு போவாள் செல்லாத்தா. அந்த மாதிரி நேரங்களில் பள்ளிக்கூடத்து ஆயாவை சுற்றி சுற்றி வருவாள் என்னாடி இந்த் புள்ளை இங்கனயே சுத்தி சுத்தி வருது என்று ஆயாக்காரி நினைத்துக்கொண்டாலும், சமைக்க வைத்திருக்கும், எதையாவது ஒன்றை உண்ண கொடுப்பாள்.
செல்லத்தாளுக்கு அந்த பள்ளிக்கூடம் பசியை போக்குதோ இல்லையோ,அங்கே சத்தம் போட்டு படிக்கிற அ,ஆ, விலிருந்து, வாய்ப்பாடு வரைக்கும் மனப்பாடம் ஆகியிருந்தது. பல்ளிக்கூடம் முடிந்து அவர்கள் எல்லாம் சென்று விட்டாலும் இவள் ஆறு மணிக்குத்தான் ஆட்டை ஓட்டிக்கிட்டு போகணும், அதுவரை என்ன செய்வது? அங்கிருக்கும் கரும்பலகையில் கீழே கிடக்கும் துண்டு சாக்பீஸ்களை எடுத்து எழுதுவாள். தனக்கு தோன்றும் எழுத்துக்களை எழுதி பார்ப்பாள். அவ்வபொழுது ஞாபகம் வந்து ஆடு மேய்ந்து கொண்டு இருக்கும் இடத்துக்கு ஓடி சென்று ஆட்டுக்கு குரல் கொடுத்து எண்ணீக்கை சரி பார்த்து வந்து விடுவாள்.
அன்று ஏனோ பள்ளிக்கூட்த்தில் ஆயா இவளிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. இவள் சுற்றி சுற்றி வர ஆயா வள்ளென்று விழுந்தாள். செல்லத்தா இங்க சுத்திகிட்டு இருக்காத. இன்னைக்கு இந்த ஸ்கூலுக்கு செலவு பண்ணி நடத்திகிட்டிருக்கற பெரிய மனுசரு வராங்க. செல்லத்தாளுக்கு ஒன்றும் புரியவில்லை, அது யாரு பெரிய மனுசன்? புரியாவிட்டாலும் ஆயா கோபத்தில் இருக்கிறால், தொல்லை கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தவள் மெல்ல நகர்ந்து அந்த கருவேலங்காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டாள்.
மதியம் வயிறு பசிக்க தொடங்கி விட்டது. பள்ளிக்கூடத்துக்கு போலாமா, வேண்டாமா என்று யோசனை இருந்தாலும் வயிற்றின் பசி அவளை அங்கு செல்ல தூண்டி விட்டது.என்றும் இல்லாமல் பள்ளி அமைதியாக இருந்தது. இவள் ஆயா இருக்கும் இடத்தை நோட்டமிட்டாள். மணி இரண்டு மேல் இருக்கும். பள்ளிக்கூடம் இவ்வளவு அமைதியாய் நடந்து கொண்டிருந்தது இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆயா சொல்லியிருந்த பெரிய மனுசன் வராரு என்ற வார்த்தை ஞாபகம் வந்தது. பசி வேறு அவள் வயிற்றை இம்சை படுத்தியது. ஆயா தென்படுகிறாளா என்று சமையல் செய்யும் அறையின் வாசலில் காத்திருந்தாள்.
அப்பொழுது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மனிதரை பார்த்த செல்லத்தா, ஆச்சர்யமுடன் பார்த்தாள். அவள் இதுவரைக்கும் இவரை பார்த்த்தில்லை அவளுக்கு இரு வாத்தியார்கள், ஆயா மூவரும்தான் அறிமுகமானவர்கள், இவர் வெளுத்த உடையுடன் இருக்கிறார், குழாய் போட்டிருக்கிறார், ஆச்சர்யமுடன் பார்த்தவளை அவரும் வியப்புடன் பார்த்து இங்கே வா என்று சைகையால் அழைத்தார்.
தயங்கி தயங்கி அவள் அவரருகே சென்றாள், உன் பேரென்ன? இங்க என்ன பண்ணறே? படிக்கலையா? இவர் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்கவும், புரிந்து கொள்ள சிரமப்பட்டவள், ஆயா இல்லைங்களா? என்று மட்டும் கேட்டாள். ஆயா எதுக்கு? என்று அவர் திருப்பி கேட்டவுடன் பசிக்கு…ஏதாவது மிச்சம் வச்சிருக்கும், இவள் சொன்ன பதிலாம் அவர் முகம் சலனம் அடைந்தது. ஆயா வந்திடும், இப்படி உட்காரு, நான் வெளியே அனுப்பிச்சிருக்கேன். சொல்லிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கவும், ஆயா வேக வேகமாக அங்கு வரவும் சரியாக இருந்தது. செல்லத்தாளிடம் இவர் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் சற்று பதட்டப்பட்டவளாய், ஐயா, இந்த பொண்ணு என்று இழுத்தாள். பசியோடு இருக்குது ஏதாவது இருந்தா கொடு, ஆயா செல்லத்தாளை உறுத்து பார்த்து விட்டு வா என்று கூட்டி சென்றாள்.
உன் பேரென்ன? அவரின் கேள்விக்கு “செல்லத்தா” என்று நாணி கோணிகொண்டே சொன்னாள்
சாப்பிட்டுட்டயா? அவள் தலையாட்ட, சரி ஏன் படிக்கலை? இவள் எதுவும் பேசாமல் அவர் முகத்தை பார்த்தாள். ஆயா குறுக்கிட்டு, அவங்க அப்பா இல்லைங்க, அம்மா கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருக்கு, இவ ஆடு மேய்ச்சுகிட்டு இருக்கா…மெளனமாய் கேட்டுக்கொண்டு இருந்தவரிடம் இவள் நெருங்கி ஆடு மட்டும் மேய்க்கலீங்க,அ,ஆ, சொல்ல தெரியும், வாய்ப்பாடு சொல்ல தெரியும் கண்களை விரித்து பெருமையுடன் சொன்னாள். அவர் சுவாரசியமாய் உனக்கு வேற என்னென்னவெல்லாம் தெரியும்?
அவ்வளவுதான், தனக்கு தெரிந்த அ, ஆ விலிருந்து எல்லாவற்றையும் மள மளவென ஒப்புவித்தாள்.ஆயா கூட ஆச்சர்யமுடன் இவளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை பொருத்தவரை செல்லத்தா மதியம் சாப்பாட்டுக்கு தேடி வருபவள் அவ்வளவுதான், ஆனால் இவள் என்னமாய் கவனித்திருக்கிறாள்.
உன்னைய படிக்க வச்சா படிப்பியா? அவரின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என திகைத்து நின்றவளிடம் எதுவும் பேசாமல், ஆயாவிடம் இந்த பொண்ணு வீடு எங்கிருக்கு?ஐயா அவங்கம்மா பொழுது சாஞ்சுதான் வீட்டுக்கு வரும்,, அவள் தயங்கி சொல்ல நான் காத்திருக்கேன், என்னைய அங்க கூட்டிட்டு போ, சொல்லிவிட்டு அப்படியே கண்ணை மூடி சாய்ந்தார். வாத்தியார்கள் இருவரும் அன்று பொறுப்பாய் மதியம் வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தனர். இவர் கண்ணை மூடி சாய்ந்திருப்பதை பார்த்தவர்கள் சத்தம் காட்டாமல் அவரவர் வகுப்புக்குள் நுழைந்து கொண்டனர்.
அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அம்பது மாணவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் செல்லத்தாளுக்கு கிடைத்தது என்றால் அது செல்லத்தாளின் அதிர்ஷ்டமா? இல்லை செல்லத்தாள் கலெக்டர் ஆகவேண்டும் என்பது.விதியா?
நல்ல கருத்து நண்பரே ரங்கராஜன் சென்னை அம்பத்தூரில் இருந்து