கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 604 
 
 

‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில் கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம். சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். அந்த அளவிற்கு கூட்டம்.

தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள் கோயிலில் இருக்கும் இரும்பு பாலம் போல் தான் இதுவும். கூட்டம் நம்மை நெரித்து எடுக்கும். என்ன ஒரே வித்தியாசம், திருப்பதியில் படி இறங்கினால் பெருமாள் காட்சித்தருவார். இங்கே பேருந்து நிலையம் காட்சித் தரும். தாமதமாக போனாலும் பெருமாள் அங்கேயே தான் இருப்பார். இங்கே 21g போய்விடும். அதனால் திருப்பதியை விட இங்கே தள்ளுமுள்ளு அதிகமாக இருக்கும்.

சட்டைப்பையில் ஒரு கையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்குள் இந்த ப்ரோட்டோகாலை பின்பற்றியே தீர வேண்டும். இல்லேயேல் மொபைலோ பர்சோ காணாமல் போய்விடும்.

‘பயணிகள் வரிசையாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்பவர்கள், சைதாபேட்டை நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும். உள்ளே வருபவர்கள் சென்ட் தாமஸ் மவுன்ட் நோக்கி இருக்கும் படிகட்டுகளை பயன்படுத்திக் கொள்ளவும்.’

தினமும் ஒருவர் மைக்கில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பெரிதாக யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் எதிரும்புதிருமாக முட்டிக்கொண்டு செல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். அன்று வெகு நேரம் ரயில் இல்லாததால், சானடோரியத்தில் காத்திருந்த கூட்டம் அனைத்தும் ஏறிக்கொண்டுவிட்டது. பெட்டிக்குள் நிற்க முடியவில்லை. எப்போது கிண்டி வரும் என்றாகிவிட்டது. சென்னை ரயிலில் பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் ஏறி-இறங்காதவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கும் படி பின்னிருந்து தள்ளுவார்கள். கீழே இறங்கி விட்டால் போதும், பின்னே தள்ளும் கூட்டமே நம்மை பிளாட் பாரத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிடும். அதுவும் கூட்ட நெரிசலில் மேம்பாலத்தின் படிக்கட்டு ஏறுவது என்பது பெரும் கலை. தரையைப் பார்த்தவாறு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க வேண்டும். முதலில் வலது காலை எடுத்து முதல் படிகட்டில் வைக்க வேண்டும். பின் மீண்டும் இடது காலை எடுத்து அதே படிகட்டில் வைக்க வேண்டும். இரண்டு கால்களும் ஒரே படிகட்டின் மீது வந்தபின், வலது காலை எடுத்து அடுத்த படிகட்டில் வைக்க வேண்டும். இப்படி ஒரு பியானோ இசைக் கருவியில் ஸ்டக்காட்டோ இசையை வாசிக்கும் பொருட்டு அதன் விசைகளை அரை பலத்துடன் மீண்டும்மீண்டும் அழுத்துவதை போல லயத்தோடு படிகட்டுகளில் கால்களை எடுத்து வைக்க வேண்டும். படிகட்டின் உச்சியை அடையும் வரை தலையை நிமிர்த்த முடியாது. மீறினால் தடுமாறிவிட வாய்ப்பிருக்கிறது. அன்று படிகட்டில் ஏறி கொண்டிருக்கும்போது தான் அந்த சத்தம் கேட்டது.

‘டப் டப்’. ‘பளார் பளார்’. முதலில் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று புரிந்து கொள்ளவே சில நொடிகள் ஆயிற்று. சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. படிகட்டை முழுவதுமாக ஏறி பாலத்தின் சமதளத்தை அடைந்த போது தான் சப்தம் பாலத்திற்கு வெளியே இருந்து வருவதை உணர முடிந்தது. அதற்குள், என் பக்கத்தில் இருந்தவர் சப்தத்தின் காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு எட்டிப் பார்த்தார். அவருக்கும் தலைகளின் தரிசனம் தான். அதை உறுதி செய்யும் பொருட்டு என்னை எதுவும் புரியாதவர்போல் பார்த்தார். எனக்கும் எதுவும் புரியவில்லை என்பதை புரிந்து கொண்டவராய் தலையை திருப்பிக் கொண்டார்.

பாலத்தை விட்டு இறங்கியதும், இடது புறத்தில், வழக்கமாக ஆட்களே செல்லாத அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு பெரும் கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது.

‘டப் டப்’ . அந்த கூட்டம், கீழே பார்த்தவாறே கை ஓங்கியது.

கூட்டத்தின் நடுவே ஒருவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் ஒருவர் கையோங்க,

“யோவ், அடிச்சிக்கிட்டே இருப்பீங்களா…! போலிஸ்ட்ட போ” என்றார் ஒரு ஆட்டோ டிரைவர். கூட்டம் நிதானித்தது. அதற்குள் அந்த ஆள் தலையை பிடித்தவாறே எழுந்து நின்று கொண்டான். ஆள் நாகரிகமாகத்தான் இருந்தான். வயது நாற்பத்தைந்துக்குள் தான் இருக்கும். டக்-இன் செய்யப்பட்ட சந்தன நிற பேண்ட். நீல நிற முழு கை சட்டை. வெள்ளை நிறத்தில், ஆபிஸ் உடைக்கு பொருந்தாத, ரன்னிங் ஷூஸ். விமான நிலைய டேக் கலட்டப்படாத ஒரு எக்சிகியூட்டிவ் பையை முதுகில் மாட்டியிருந்தான்.

மூச்சு வாங்கியது அவனுக்கு. ஒருவன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

“போலிஸ்ட்ட போலாம்” என்றான் இன்னொருவனிடம்.

“எதற்காக அடிக்கிறார்கள்?” விடை உணர்வதற்கு முன்பே இன்னொருவன் மீண்டும் அவன் தலையில் அடித்தான். அடிவாங்கவே அவன் பிறந்திருப்பதை போல் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அடி வாங்கிக் கொண்டான்.

“போலிஸ்ட போனா அந்த பொண்ணும் வந்து சொல்லுமா” மற்றொரு ஆட்டோ டிரைவர் கேட்டார்.

“என் தங்கச்சி சார். சொல்லும் சார்” சட்டையை பிடித்திருந்தவன் சொன்னான்.

முதலில் எதற்காக அடி வாங்குகிறான் என்று தெரியாதவர்களும் இப்போது கொஞ்சம் யூகிக்கத் தொடங்கி இருந்தார்கள்

“வயசாளிங்கதான் இப்டி அலையுறானுங்க. கொஞ்சம் கூட்டம் இருந்தா போதுமே!” ஒரு நடுத்தர வயது பெண் பக்கத்தில் இருந்தவளிடம் சொல்லிக்கொண்டே சுரங்கப் பாதை நோக்கி நடந்தாள்.

“கை வச்சிட்டாண்டா…” ஒரு பள்ளி பையன் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

அதற்குள் கிருதா வைத்த வாலிபன் ஒருவன் அடிவாங்குபவனை போட்டோ எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

“டேய் போடா” என்று அந்த ஆட்டோ டிரைவர் அவனை விரட்டினார்.

“மரியாதை இல்லாம பேசாதீங்கனே. பேஸ்புக்ல போட்டா தான் இவனுங்க மாதிரி ஆளுங்க திருந்துவானுங்க” என்றான் கோபமாக.

அந்த ஆட்டோ டிரைவர் விட்டிருந்தால் அவனை அடித்திருப்பார். அங்கே மற்றுமொரு சண்டை தொடங்குவதற்கு முன்பு, மற்றொரு ஆட்டோ டிரைவர்,

“போங்க தம்பி…” என்று போட்டோக்காரனை பாந்துவமாக பேசி அனுப்பி வைத்தார். அவருக்கு ஏனோ அடி வாங்குபவன் மீது கொஞ்சம் இரக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.

இந்த சம்பாசனையில் கிடைத்த மைக்ரோ நொடிகளை தன்னை ஆசுவாசப்படுத்த பயன்படுத்திக் கொண்டவனாக அந்த அடிவாங்கியவன் தன் வெள்ளை நிற கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டான். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது. அவன் தவறு செய்தவன். தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….

“என்ன பாத்துகிட்டு! போங்க சார்” அந்த இரக்க குணமுள்ள ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னான். மேற்கொண்டு அங்கே நிற்பது உசிதம் இல்லை.

சுரங்கப்பாதை அருகே ஒரு பெண் துப்பட்டாவால் முகத்தை மறைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் அழுகிறாள். முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது.

“இந்த அக்கா தான் போல இருக்குடா…” அந்த பள்ளிக்கூட பையன் தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டே சுரங்கப் பாதைக்குள் நுழைந்தான்.

“உன் பொண்ணா இருந்தா இப்டி பண்ணியிருப்பியா?”

அடி களத்திலிருந்து குரல் கேட்டது. கூடவே அடியும்.

“போலிஸ்ட்ட போங்கடா…” ஆட்டோ டிரைவர் பொறுமை இழந்தார்.

சாலையை கடந்தால் போலிஸ் ஸ்டேஷன்.

“இப்டியே க்ராஸ் பண்ணிடுவோம். சப்வேல போனா கூட்டத்துல தப்பிசிருவான்” ஒருவன் அடி வாங்கியவனின் சட்டையிலிருந்து கை எடுக்காமலேயே சொன்னான். நான் அதற்குள் சுரங்கப்பாதையில் இறங்கிவிட்டேன்.

அங்கேயும் நெரிசல் தான். சுரங்கப் பாதையின் இறுதியில், இடது புறம் திரும்பி படி ஏறினால் பேருந்து நிலையம். அந்த படிகளில் ஏறுவதும் பியானோ இசைக் கருவி வாசிக்கும் வேலை தான்.

“இப்டி போலாம் இப்டி போலாம்” சுரங்கத்தின் மூலையில் நின்று கைக்குட்டை விற்பவர் வலது புறத்தில் போகும் படி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கைக்குட்டை விற்கும் வேலையை விட, கூட்டத்தை கட்டுப் படுத்தும் வேலையை தான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ட்ராபிக் போலிஸ் வேலைக்கு முயற்சி செய்து உயரம் போதாமல் திருப்பி அனுப்பப் பட்டவராக இருக்கலாம்.

“என்ன தம்பி மேல ஏதோ பிரச்சனையா?”

என் முன்னே செல்பவனிடம் கேட்டார். காதில் இயர் போனை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே போன அவன் எந்த பதிலையும் சொல்லாமல் அவரை சட்டைக் கூட செய்யாமல் வலது புறமிருந்த படிகெட்டில் ஏறினான். எனக்கு ஒரு கணம் கஷ்டமாக இருந்தது. அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்ன பிரச்சனை என்று என்னை கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை. அவர் எதுவும் நடக்காதது போல் கைக்குட்டை விற்கத் தொடங்கிவிட்டார்.

“பத்து இருக்கு, இருவது இருக்கு… பத்து இருக்கு இருவது இருக்கு”

நானும் அமைதியாக வலது புறம் திரும்பினேன். வலது புறம் உள்ள படிகட்டில் ஏறினால், சுரங்கப்பாதையின் மேல் பகுதியை சுற்றிக் கொண்டு வெளியே வந்தால் தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். வழக்கமாக எல்லோரும் போகும் வழியை விட சற்று கூடுதலாக நடக்க வேண்டும். ஆனால் யாரும் அதிகம் பயன்படுத்தாத வழி என்பதால் மற்றவர்களை விட விரைவாக பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம். நான் சுரங்கப்பாதையை விட்டு வெளியே சாலையில் இறங்கியபோது, சுரங்கத்தை ஒட்டி நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சாலையை நோக்கி ஓடினார்கள். என்ன என்று புரியாமல் பார்த்தேன். சாலையிலும் கூட்டம். நானும் அங்கே ஓடினேன்.

சாலையின் நடுவே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பின்னே வரிசையாக வண்டிகள் ஒவ்வொன்றாக நிற்க தொடங்கின. காரின் அருகே பதட்டமாக நின்று கொண்டிருந்த ஆள் வயதான ட்ராபிக் போலீசிடம் சொன்னான்,

“நான் கரெக்ட்டா தான் சார் வந்தேன், அவன் திடிர்னு டிவைடர் மேல இருந்து குதிச்சிட்டான்…”

வயதான ட்ராபிக் போலிஸ் அவருடன் நின்றுகொண்டிருந்த இளம் ட்ராபிக் போலீசிடம்,

“க்ரவுட கண்ட்ரோல் பண்ணு, 108- க்கு கால் பண்ணு” சொல்லிவிட்டு கார் டிரைவரைப் பார்த்தார். அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

“யோவ் கார ஓரமா நிறுத்து. பேப்பர்ஸ எடுத்துட்டு வா…” சொல்லிவிட்டு கீழே குனிந்துப் பார்த்தார்.

“போயிருச்சு போல… காலைலயே சாவடிக்குறானுங்க….”

நானும் கீழே பார்த்தேன். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்த ஆள் பிணமாக கிடந்தான். கார்காரனிடமிருந்த பதட்டம் என்னைத் தொற்றிக் கொண்டது. சுற்றிமுற்றும் பார்த்தேன். அவனை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்த யாரும் தென்படவில்லை. சாலையின் மறுபுறம் சுரங்கப்பாதை அருகே அந்த பெண் தென்படுகிறாளா என்று பார்த்தேன். எதுவும் சரியாக தெரியவில்லை.

மீண்டும் தரையைப் பார்த்தேன். அவனை பார்ப்பதற்கும் பாவமாக தான் இருந்தது. அவன் மனைவியோ பிள்ளைகளோ இந்நேரம் அவன் அலுவலகம் சென்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க கூடும். ஒரு வேலை அவன் மனைவியோடு வாழாமல் இருக்கலாம். அல்லது திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். காய்ச்சலில் அவன் பிள்ளை இறந்து போயிருக்கலாம். அல்லது அவன் மனைவி யாரோ ஒருவனோடு….

“சார் கிளம்புங்க ப்ளீஸ்.” இளம் ட்ராபிக் போலிஸ் என்னிடம் சொன்னான். கூட்டம் தங்கள் பாதையில் செல்ல ஆரம்பித்தது. சாலையில் கிடந்தவனை பார்த்துக் கொண்டே வாகனங்கள் கடந்து சென்றன. என் அருகே, கீழே கிடந்தவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த வாலிபன் பேருந்து நிலையம் நோக்கி வேகமாக ஓடினான். திரும்பி பார்த்தேன். கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 21g பேருந்து வெளியே திரும்பிக் கொண்டிருந்தது. ஓடியவன் பின் வழியே ஏறிக் கொண்டான். பேருந்து கொஞ்சம் நிதானிக்க, நானும் ஓடிச் சென்று அதே வழியில் ஏறிக்கொண்டேன்.

“எருமைங்க ரன்னிங்ல ஏறுது பாரு” டிரைவர் சம்ப்ரதாயமாக திட்டினான். என்னையில்லை என்பது போல் நான் அந்த வாலிபனை பார்த்தேன். தன்னை சொல்லவில்லை என்பது போல் அவன் என்னைப் பார்த்தான்.

“உள்ள ஏறு. ஏழுமலை டோர க்ளோஸ் பண்ணு” கண்டக்ட்டர் சம்ப்ரதாயமாக கத்தினார். பாதி கதவு மூடிக்கொண்டது. மீதி பாதி இல்லை. யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் கூட்டத்தில் புகுந்து பின்னே பெண்கள் இருக்கை அருகில் நின்று கொண்டேன்.

“காளியப்பா” அந்த வாலிபன் கண்டக்ட்டரிடம் நூறு ரூபாயை நீட்டினான்.

“பதினேழு. சில்லறையா கொடு. எல்லாரும் நூறு ரூபாய நீட்டுன எங்க போறது…?”

நான் பேருந்தின் பின் ஜன்னல் வழியே சாலையை கவனித்தேன். கார் டிரைவர் வயதான ட்ராபிக் போலீசிடம் ஏதோ பவ்யமாக பேசிக் கொண்டிருந்தான். அந்த, சந்தன கலர் பேண்ட், நீல நிற முழுக்கை சட்டை, ரன்னிங் ஷூஸ் அணிந்திருந்தவான் சாலையில் அதே இடத்தில் கிடந்தான். கிருதா வைத்த வாலிபன் கீழே பிணமாக கிடந்தவனை போட்டோ எடுக்கத் தொடங்கிருந்தான்.

– ஏப்ரல் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *