அடிக்காதீங்க… அவன் என் மகன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,173 
 

விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன.

தில்லியிலிருந்து சென்னை வரும் ஒரு புகைவண்டியின் அன்ரிசர்வ்ட் பெட்டியின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த அவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மனமோ அன்று காலையில் நடந்தவற்றைக் கசப்புடன் நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தது.

அடிக்காதீங்க

“”அய்யா! இந்த விஷயத்தை ஒங்ககிட்ட எப்படிச் சொல்றதுனே தெரியலைங்க. இருந்தாலும் சொல்லியாகணும். என்னை மன்னிச்சிருங்க” என்ற பீடிகையோடு அந்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் கலைவாணன். அவர்தான் விருதுக் குழு ஒருங்கிணைப்பாளர்.

“”இந்த வருசத்திலேருந்து நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களின் மூணு பேரைத் தேர்ந்தெடுதது அவர்களுக்குப் “பன்முக ஆளுமை கொண்ட ஆசிரியர் விருது’னு ஒரு விருதை அறிவிச்சு, பல தகுதிகளையும் அலசி ஆராய்ஞ்சு மூணு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தோம். அந்த மூணு பேர்ல தமிழ்நாட்டிலேருந்து நீங்க வந்திருக்கிறதுல தமிழனா எனக்கு கூடுதல் பெருமை…”

“”அய்யா ! கொஞ்சம் இருங்க. அதெல்லாம் சரிதான். ஆனா கடைசி நேரத்துல விழாவுக்கு ஒரு நாள் முந்தி உங்க தேர்வை நிறுத்தி வெச்சிருக்கோம்னு சொன்ன என்னங்க அர்த்தம்? இந்த விருதை நானா கேக்கலையே ஒங்ககிட்ட? நீங்களாகப் பல விபரங்களையும் கேட்டீங்க. என்னை இந்த விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறதா தகவல் சொன்னீங்க… ஜனாதிபதி கையால விருது வாங்கிக்கிறதுக்காக தில்லிக்கு வாங்கனு அழைப்பும் கொடுத்தீங்க. அதை நம்பி நானும் வந்திட்டேன். இப்பப் பாத்து ஒன்னோட தேர்வு ரத்து. போய்ட்டு வாங்கனு சொல்றீங்களே?” என்று மறுபடியும் உடைந்துபோன குரலில் பலவீனமாக் கேட்டார் ஆசிரியர் பொன்னம்பலம்.

“”அய்யா மன்னிச்சுக்குங்க. ஆசிரியர் சமுதாயத்திலேயே வழங்கக்கூடிய மிக உயரிய விருது இது. நீங்க மாணவர்களுக்குச் சொல்லித் தருகிற விதம், பழகுகிற விதம், கண்டிப்பு இது மட்டுமல்லாமல் மாணவர்களின் இசை, நடனம், நாடகம்னு அவங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற திறமைகளை வெளிக்கொணர்தது, மொழியாற்றல் மிக்க உங்களைப் போலவே மாணவர்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலேயும் பிரகாசிக்கச் செய்தது, ஏறக்குறைய அத்தனை மாணவர்களையும் ஒங்க பாடத்தில் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல மதிப்பெண் வாங்க வெச்சது, நினைவாற்றலுக்கு “நிமோனிக்ஸ்’ எனும் பயிற்சி அளித்தது, பளளி அசெம்பிளி கூட்டத்தில் ஒவ்வொரு மாணவனும் ஜொலிக்க வெச்சது, தனி மனித ஒழுக்கம் இப்படி நூத்துக்கணக்கான காரணிகளை வெச்சுத்தாங்க ஒங்களைத் தேர்ந்தெடுத்தோம்… ஆனா…”

“”அய்யா ! அதெல்லாம் என்னோட இயல்பு. எந்த விதமான அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்க்கலை…”

“”இருங்க” என்ற இடைமறித்தார் கலைவாணன். “”இந்த உயரிய விருதுக்கு உங்களோட பெயரைப் பரிந்துரை செய்யறதுக்கு முன்னாடி ஒரு குழுவே உங்கள் செயல்பாடுகளை ரகசியமா ரெண்டு மாசம் கண்காணிச்சு அறிக்கை அனுப்பினதுக்கு அப்புறம்தான் அதிகாரபூர்வமா உங்களுக்கு அழைப்பும் அனுப்பினோம். இந்த விருது வழங்குறதில ஒரு கண்டிஷனும் இருக்கு. அதாவது விருது வாங்குறவர் மேல விருது பெறுகிற நாள் வரைக்கும் எந்த ஒரு புகாரும் இருக்கக் கூடாதுங்கிறதுதான் அது!”

“” அய்யோ! அப்படினா என் மேல ஏதாவது புகாரா? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அப்படி ஏதும் இல்லையே?”
“”அய்யா! மன்னிச்சிருங்க ! சிவபாலன்னு ஒரு ஸ்டூடண்ட் ஒங்க மேல ஆறு மாசத்துக்கும் முன்னாடி ஒரு புகார் கொடுத்திருக்கிறான். அதன் பேர்ல துறை ரீதியான விசாரணை நடத்தும்படி நேத்துத்தான் உத்தரவு போட்ருக்காங்க. எங்களுக்கும் அதோட நகல் அனுப்பியிருக்காங்க. துறை ரீதியா நடவடிக்கையை எதிர்கொள்ளுகிற ஒருத்தருக்கு விருது வழங்கக் கூடாதுங்கிறது விதிமுறை.”

பொன்னம்பலத்துக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. ஒரு நிமிடம் கண்ணை மூடி ஏதோ யோசித்தார். “” ஓ! அந்த சிவபாலனா?” எனத் தமக்குத்தானே கேட்டுக்கொண்டார்.

“”சரிங்க! அப்ப நான் வர்றேன்” எனக் கைக்கூப்பி விடைபெற ஆயத்தமானார்.

“”அய்யா ! சென்னையிலிருந்து தில்லி வந்துட்டுப் போறதுக்கான முதல் வகுப்பு ரயில் கட்டணம் இதில இருக்கு. வாங்கிக்குங்க” என்று கலைவாணன் ஒரு கவரை நீட்டினார்.

“”வேண்டாங்க!” என்று இலேசாகப் புன்னகை பூத்தவாறு மறுதலித்து விட்டு மெல்ல நடந்தார் பொன்னம்பாலம்.
ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் மனம் அந்தச் சிவபாலனைச் சுற்றியே வட்டமிட்டு வந்தது.

அரசியல் பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்த மாணவன்தான் சிவபாலன். அவனுக்கு வீட்டில் என்ன பிரச்னையோ பள்ளிக்கு ஒழுங்காக வரமாட்டான். வகுப்பிலும் மிகுந்த தொல்லை தருவான் வறுமைச் சூழலில் தவிக்கும் எத்தனையோ ஏழை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகள் செய்து அவர்கள்படிப்புத் தடைபடாமல் பார்த்துக்கொள்ளும் ஆசிரியர் பொன்னம்பலத்தின் எவ்வித முயற்சிகளாலும் சிவபாலனைத் திருத்த முடியவில்லை. வகுப்பு முடிந்து அனைவரும் போன பின்னர் சிவபாலனுக்குக் கனிவுடன் அறிவுரைகள் சொல்வார். சிறப்புத் தனி வகுப்புகள் அவனுக்கு மட்டுமே எடுத்தும் பார்த்துவிட்டார். பலன்தான் இல்லை.
பள்ளி வளாகத்திலேயே புகை பிடிப்பது, மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்து கலாட்டா செய்வது என நாளுக்கு நாள் அவனது அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே போனது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பொன்னம்பலம், ஒரு நாள் சிவபாலனின் அப்பாவை நேரில் பார்த்து சிவபாலனின் ஒழுக்கக்கேடுகளை ஒன்று விடாமல் சொல்லிவிட்டார்.

அரசியல் அரசியல் என்று வீட்டிலேயே தங்காமல் சுற்றி வந்துகொண்டிருக்கும் சிவபாலனின் அப்பாவுக்கு இது பெரும் ஆத்திரத்தை அளித்திருக்கவேண்டும். அன்றிரவு சிவபாலனை அடித்துதுவைத்து விட்டார். சிவபாலனின் மொத்தக் கொடூரமும் பொன்னம்பலத்தின் மீது திரும்பியது. விளைவு… பொய்யான ஒரு புகாரைப் பல இடங்களுக்கும் தட்டி விட்டான்.

தன் தந்தையிடம் சொல்லி அவரை சிறந்த ஆசிரியருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கும்படியும் அவ்வாறு செய்யாவிட்டால் இந்த ஜென்மத்துக்கு அவனை பாஸ் போட மாட்டேன் என்று மிரட்டியதாகவும் அதற்கு தான் பணியாததால் தந்தையாரிடம் பொய்கள் கூறித் தம்மைப் பழிவாங்கிவிட்டதாகவும் அந்தப் புகாரில் அள்ளி விட்டிருந்தான். அதன்பிறகு அவன் பள்ளிக்கு வருவதையும் நிறுத்திவிட்டுத் தம் தகப்பனையே அடித்துவிட்டு வீட்டிலிருந்து கொஞ்சம் நகைகளையும் எடுத்துக்கொண்டு எங்கோ ஓடிவிட்டதாகக் கேள்விப்பட்டார் பொன்னம்பலம்.
அந்தச் சிவபாலனின் பொய்ப்புகாரால் இவ்வளவு அசிங்கப்படுகிறோமே என முதலில் கலங்கிப்போனார் பொன்னம்பலம். “அப்பழுக்கற்ற ஆசிரியப் பணியில் தூய தொண்டாற்றி வரும் தம் மீதா இப்படிப்பட்ட புகார்?’ எனக் கொஞ்சநேரம் கிலேசப்பட்டாலும் விரைவிலேயே தெளிந்துவிட்டார்.

“”ஆண்டவா! இந்த பையனுக்கு நல்ல புத்தி கொடு!” என்று மனமுருகி வேண்டிக்கொண்டு அந்த விஷயத்தை அன்றே மறந்துவிட்டார். ஆனால் நிர்வாக இயந்திரம் மறக்குமா? இதோ தம் வேலையைக் காட்டிவிட்டது.

மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி ஜன்னலோரத்தில் அமர்ந்து தெளிவடைந்த மனத்தோடு வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ரயில் ஏதோ ஒரு வடக்கத்திய ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது.
பிளாட்பாரத்தில் ஒரே களேபரம்! ஏழெட்டுப் பேர் யாரோ ஒருவனைப் போட்டு அடித்து உதைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் பொன்னம்பலம் கவனித்தார்.

அடிபட்டுக்கொண்டிருந்தவன்… அட… “இது சிவபாலன்தானே?’ என்று நினைத்து மறுபடியும் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்.

வேகமாக இறங்கி அடித்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து எதற்காக அடிக்கிறீர்கள் என்று ஹிந்தியில் வினவினார்.
அவரது வேட்டி சட்டைக் கோலத்தைப் பார்த்த ஒருவன்,
“”தமிழ் ஆளா நீங்க? பாருங்க சார் அநியாயத்த! பச்சக் கொழந்த கழுத்திலிருந்து செயின நைசா எடுத்துப் பாக்கெட்ல போட்ருக்கான். புடிச்சிட்டோம். நாலு போடு போட்டு போலிஸ்ல புடிச்சிக் குடுக்க போறோம்!”

ஆசிரியர் பொன்னம்பலம் கூட்டத்தைப் பார்த்து மிக மெல்லிய குரலில் சொன்னார்.

“”அய்யா! எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க. இவன் என்னோட மகன்தான் ! அவன் வேணும்னு அப்படிச் செய்யலை. லேசா மன நலம் பாதிக்கப்பட்ருக்கான். விட்ருங்க. நான் இனிமே கவனமாப் பாத்துக்கிறேன்!” எனத் தொழுது வேண்டிக்கொண்டான்.

கூட்டம் கசமுசவென்று பேசிக்கொண்டு சிவபாலனை விட்டுக் கலைந்து சென்றது. ரயில் புறப்பட விசில் ஊதியது. வேகமாகப் பொன்னம்பலம் வண்டியில் ஏறித் தம் இருக்கையில் அமர்ந்து கொண்டார். சிவபாலன் பிளாட்பார்மில் பொன்னம்பலத்தையே வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் முகத்தில் எப்போதும் தெரியும் குரூரம் சுத்தமாய் மறைந்து போயிலிருந்து.

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *