அடக்கி ஆளும் அன்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 7,520 
 
 

“குருவே, என் பாச மகள் என் பேச்சை கேட்க மறுக்கிறாள். அவள் மீது அத்தனை அன்பாய் இருக்கிறேன் ஆனால் அவள் விலகிப் போகிறாள்” என்று வருத்ததோடு சொன்னான் ஒருவன்.

“அப்படியா, என்னாச்சு” என்று அமைதியாக வினவினார் குரு.

“என்னால் அவளைப் பிரி்ந்து சிறிது நேரம் கூட இருக்க இயலாது. கல்லூரிக்கு கூட நானே கொண்டு போய் விட்டு கூட்டி வருகிறேன். அவளை கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்கிறேன் ஆனால் ஏனோ இப்போதெல்லாம் என் மேல் அவள் பாசத்தைக் காட்டுவதில்லை”

வந்தவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

ஒரு இளம் பெண் அழகான கூண்டில் இரண்டு சிட்டுக் குருவிகளை வளர்த்து வந்தாள். அந்தக் குருவிகள் மீது அவளுக்கு ரொம்பப் பிரியம். எப்போதும் அவற்றுக்கு தீனி போட்டுக் கொண்டு, அவற்றோடு பேசிக் கொண்டு இருப்பாள். அவைதான் அவளது பொழுதுபோக்கு.

ஒரு நாள் குருவிகளுக்கு நீர் வைப்பதற்காக கூண்டுக் கதவைத் திறந்தபோது ஒரு குருவி பறந்து விட்டது. அந்த இளம் பெண் உடனே பதட்டமாகிவிட்டாள். குருவி வெளியே பறந்து போய்விடக் கூடாதே என்ற அதீத ஆர்வத்தில் குருவியை பிடிக்க ஒடினாள். இவளைப் பார்த்ததும் குருவியும் பறந்தது. அப்போது வேகமாய் கையை நீட்டி குருவியைப் பிடித்து விட்டாள் அந்தப் பெண்.

ஆனால் அங்கே ஒரு சோகம் நிகழ்ந்து விட்டது. பறந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் குருவியை மிகவும் அழுத்தமாக பிடித்துவிட்டாள் அந்த இளம் பெண். அந்த அழுத்ததை குருவியால் தாங்க இயலாமல் உடனே இறந்துவிட்டது. இளம் பெண் அழுதாள். ஒரே ஒரு குருவியை கூட்டில அடைத்து வைக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அதை திறந்து விட்டாள். அந்தக் குருவி புதிதாய் கிடைத்த சுதந்திரத்தில் அங்கும் இங்கும் வட்டமிட்டது. ஆனால் பறந்து போய்விடவில்லை. அந்தப் பெண்ணிடமே வந்து அமர்ந்தது. அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது, முதல் குருவியையும் இப்படி விட்டிருந்தால் தன்னிடமே வந்திருக்கும் என்று. அன்பினால் இறுக்கியதால் குருவியை இழந்து விட்டாள்.

இளம்பெண்ணுக்கு மட்டுமல்ல வந்தவனுக்கும் தன்னுடைய குறை தெரிந்தது. அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அடக்கி ஆளும் அன்பு ஆனந்தம் தராது.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *