கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 5,934 
 

மாரிமுத்து வாத்தியார் இறந்துவிட்டாராம்.

ஊரிலிருந்து என் நண்பன் சுடலைமுத்து மொபைலில் போன் பண்ணிச் சொன்னான். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, சென்னையிலிருந்து உடனே திம்மராஜபுரத்திற்கு கிளம்பினேன்.

மாரிமுத்து வாத்தியாரிடம்தான் நான் படிக்கும்போது நல்ல பண்புகளையும், சிந்தனைகளையும் கற்றுக்கொண்டேன். அவரால் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அதனால் மாரிமுத்து வாத்தியார் கொஞ்சம் அதிகமாகவே என்னுடைய ஞாபகத்தில் இருந்து கொண்டிருப்பவர்.

அதற்குக் காரணம் வாத்தியாரிடம் இருந்த மிகநல்ல குணம்தான். வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவார். பேதம் இல்லாத அந்த அன்பிற்கு அனைவரும் கட்டுப்படுவர்.

பொதுவாக வாத்தியார்கள் நன்றாகப் படிக்காத, சரியாக படிப்பு வராத மாணவர்களிடம் கோபமாக நடந்து கொள்வார்கள், திட்டுவார்கள் அல்லது பிரம்பால் அடிப்பார்கள். ஆனால் மாரிமுத்து வாத்தியார் நன்றாகப் படிக்காத, ஆற்றல் குறைவான பையன்களிடம்தான் மிகுந்த அன்பையும் பரிவையும் காட்டுவார். அப்படியாவது அந்தப் பையன்களை நன்றாகப் படிக்கவைக்க முயற்சி செய்வார்.

வகுப்பில் மாணவர்கள் ஏதாவது தப்புச்செய்து விட்டால்கூட மாரிமுத்து வாத்தியார் கோபித்துக்கொள்ள மாட்டார். ஒருவித கண்டிப்பான தொனியில் தப்புச்செய்யும் மாணவர்களை உணரவைக்கிற மாதிரி நடந்து கொள்வார். அதனால் பையன்களும் தங்களது தவறை உணர்ந்து வாத்தியாரிடம் பணிவுடன் நடந்துகொள்வார்கள்.

வகுப்பு மாணவர்கள் தனக்கு மரியாதை மட்டும் காட்டினால் போதும்; பயப்படத் தேவையில்லை என்று ரொம்ப அழகாகச் சொல்வார். எந்த வாத்தியார் இப்படியெல்லாம் சொல்வார்கள்?

பள்ளிக்கூடத்தில்தான் அவர் இப்படி என்றில்லை, வீட்டிலும் அவருடைய குடும்பத்தினருடனும் இதே மாதிரிதான் நடந்து கொள்வார். வாத்தியாருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூவரிடமும் காட்டுகிற அன்பு, ஆஸ்ரமம் ஒன்றில் ரிஷி ஒருத்தர் அங்கு வளருகிற மான்களிடம் காட்டுகிற பரிவு போலவே இருக்கும்.

வாத்தியாரைப் போலவே அவரின் குழந்தைகள் மூன்றுபேரும் ரொம்பக் கறுப்பாக இருப்பார்கள். அதனாலேயே அவர்கள் அனைவரும் நன்றாகக் குளிக்காதவர்கள் மாதிரி எப்போதுமே ஒருவித அழுக்குப் பிடித்தாற்போலவே பார்ப்பதற்குத் தெரிவார்கள்.

இந்த மூன்று குழந்தைகள் தவிர அப்போது அவர்வீட்டில், அவரது மனைவி; வயதான அம்மா, அப்பா இருந்தார்கள். வாத்தியார் ஒருத்தரின் சம்பளப் பணத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இதனாலேயே அவர் நிறைய ட்யூஷன்களை எடுத்து சமாளித்துக் கொண்டிருந்தார். அதிலும்கூட ஏழைகளுக்கு இலவசமாகத்தான் சொல்லித்தருவார்.

நான் அவருடைய வீட்டிற்கு தினமும் சாயங்காலம் ‘ட்யூஷன்’ படிப்பதற்காகப் போகும்போதுதான் வாத்தியாரின் வீட்டு ஏழ்மையைக் கண்கூடாகக் காண நேர்ந்தது.

அப்போது என் மனசு ரொம்பக் கஷடப்படும். வாத்தியாரின் மூன்று குழந்தைகளின்மேல் ரொம்ப இரக்கம் வரும்.

ஆனால் ஒன்று; வாத்தியாரின் குடும்பத்தினரின் முகங்களில்தான் வறுமையின் இறுக்கமும், கண்களில் ஒரு சோகம் கவிந்த ஏக்கமும் இருந்ததே தவிர, வாத்தியாரின் முகபாவனை எதிலும் ஒருநாளும் வறுமையான சோகமோ, இறுக்கமோ கடுகளவுகூடத் தென்பட்டதில்லை.

அது மாத்திரம் அல்ல; வாத்தியாரின் முகத்திலும் கண்களிலும் எல்லா நேரமும் ஒரு சிரிப்பு நிரந்தரமான மின்னலைப்போல இருந்துகொண்டே இருக்கும். அவரைப்போல ஓர் உற்சாகமான வேறொரு வாத்தியாரை நிஜமாகவே பார்க்கமுடியாது. அவர் நடையிலேயே ஒரு துள்ளல் இருக்கும்.

எழெட்டு வாத்தியார்கள் நின்று பேசிக்கொண்டிருந்தால் அங்கே மாரிமுத்து வாத்தியாரின் குரல்தான் பெரிதாக ரொம்பக் குதூகலமாக ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஏழ்மை அவரின் ஆன்மாவைக் கொஞ்சம்கூடத் தொடவில்லை. அதனால்தான் சின்ன மனச்சோர்வுகூட இல்லாமல் எல்லா நிமிஷமும் பள்ளியிலும், வீட்டிலும் அவரால் ஒரு ஆனந்த உயிரோட்டத்தோடு இயங்க முடிந்தது.

அவர் தன் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார். ஷேவ் பண்ணாமல் வளர விடப்பட்டிருந்த கறுப்பும் வெள்ளையுமான நீண்டதாடி, வாத்தியாரைக் கொஞ்சம் வயது அதிகமானவராகக் காட்டிக்கொண்டிருந்தது. தலை முடியையும்கூட அவர் ஆறுமாதத்துக்கு ஒருதடவைதான் வெட்டுபவராக இருக்கும். அவை காடாக வளர்ந்திருக்கும். அதைப்பற்றி கவலையே இருக்காது அவருக்கு.

கண்டபடி வளர்ந்திருக்கும் தாடியையும், தலைமுடியையும் பற்றி எந்த அக்கறையும் இல்லாதது போலவே, அவர் போட்டுக் கொண்டிருக்கும் வேட்டி, சட்டையைப் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறை செலுத்தமாட்டார்.

மட்டமான கச்சாத் துணியில் தைக்கப்பட்ட வெள்ளைநிற ஜிப்பாவும், விலை குறைச்சலான கைத்தறியில் நெய்த நான்குமுழ புளியங்குடி வேட்டியும்தான் அவர் எப்போதும் அணிவார். அந்த உடைகளும் ரொம்பப் பழசாகத்தான் இருக்கும். அவற்றையும்கூட சலவைத் தொழிலாளியிடம் கொடுத்து வெள்ளாவி வைத்துச் சலவைசெய்து அணிந்துகொள்ளும் வழக்கம் வாத்தியாருக்கு ஒருநாளும் கிடையாது. அது அவருக்கு கட்டுப்படியாகாத சமாச்சாரம். வீட்டிலேயேதான் அனைத்தையும் துவைத்து உடுத்திக்கொள்வார்.

அந்த உடைகள் நாளடைவில் அதன் வெண்மை குறைந்து ஒருவித அழுக்குப் பிடித்தாற் போன்ற இளம் மஞ்சள் நிறமாக மாறிப்போய் மக்கிப் போய்விடும். அது மாத்திரம் அல்ல, ஒரு ஜிப்பாவையையும் வேட்டியையும் திங்கட்கிழமை எடுத்து அணிந்துகொண்டால், சனிக்கிழமைவரை அவை இரண்டையும் மாற்றமாட்டார்.

அதனால் புதன் அல்லது வியாழக்கிழமையே மாரிமுத்து வாத்தியார் பக்கத்தில் வந்தாலே ஜிப்பாவில் இருந்து வியர்வை நாற்றம் ‘கப்’படிக்கும். உள்ளே பனியன் போடாமல் ஜிப்பாவை அணிந்துகொள்வதால், ஜிப்பாவில் காய்ந்துபோன வியர்வையின் அடையாளம் திட்டுத் திட்டாகத் தெரியும். பார்ப்பதற்கு அது ரொம்ப அசிங்கமாகவும் இருக்கும்.

இவ்வளவையும் தாண்டி எங்கள் எல்லோருக்கும் மாரிமுத்து வாத்தியாரை மிகவும் பிடித்திருந்தது என்றால், அதற்குக் காரணம் அவரது மேன்மையான அன்பும், நற்குணங்களும்தான்.

மறுநாள் காலை பத்துமணிக்கு திம்மராஜபுரம் போய்ச் சேர்ந்தேன்.

மாரிமுத்து வாத்தியாரின் உடல் அவர் வீட்டின் கூடத்தில் தரையில் கிடத்தப் பட்டிருந்தது. மூக்கில் பஞ்சடைத்து, கால் கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டு, நெற்றியில் விபூதி பூசப்பட்டிருந்தது.

அவர் மனைவி என்னைப் பார்த்ததும் பெரிதாக அழ ஆரம்பித்தாள். குழந்தைகள் மிகப் பெரியவர்களாக வளர்ந்திருந்தார்கள். படித்துமுடித்து அனைவரும் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்களாம். நண்பன் சுடலைமுத்து அருகில் அமைதியாக வந்து என் தோளை அமுக்கி தன் துக்கத்தை வெளிப்படுத்தினான்.

அழுது கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில், ஒரு பெண்மணி வித்தியாசமாக காணப்பட்டாள். ‘துமாரி சுலு’ ஹிந்திப்பட கதாநாயகி வித்யாபாலன் மாதிரி தளதளவென்று இருந்தாள். தலையை விரித்துப்போட்டுக்கொண்டு வாத்தியார் முகத்தையே பார்த்தபடி மிகவும் சோகமாகக் காணப்பட்டாள்.

நான் சுடலைமுத்துவிடம், “யார் அவள்? நம் ஊருக்கு புதுசா?” என்று கேட்டேன்.

“எனக்கும் தெரியாது…” என்றான்.

மாலை நான்கு மணிக்கு மாரிமுத்து வாத்தியாரை மயானத்திற்கு எடுத்துச்செல்ல, நானும் உடன்சென்றேன்.

தாமிரபரணியில் குளித்துவிட்டு ஈர வேட்டியுடன் வாத்தியார் வீட்டுக்கு திரும்பி வந்தபோது அந்தப் பெண்மணி குளித்துவிட்டு, தலைமுடிய உலர வைத்துக்கொண்டிருந்தாள்.

நான் அமைதியாக அவளிடம் சென்று, “மேடம், நீங்க இந்த ஊருக்கு புதுசா?” என்றேன்.

“ஆமாம்… எனக்கு பக்கத்து ஊரு திருவண்ணாதபுரம். இப்போது வருமானத்திற்காக நான் பல வீடுகளில் வேலை செய்கிறேன். நாங்க ஐயிரு. மாரிமுத்து சார்தான் எங்களுக்கு கண்கண்ட தெய்வம். என்னோட கணவரும் மாரிமுத்து சாரும் ஒண்ணா ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்தாங்க. என் கணவர் ஒரு விபத்தில் இறந்தபிறகு, என்னோட ரெண்டு பையன்களையும் மாரிமுத்து சார்தான் + 2 வரையும் ஸ்கூல்பீஸ் கட்டி படிக்க வச்சாரு. இலவசமா ட்யூஷனும் எடுத்தாரு..” சோகமாகச் சொன்னாள்.

“பசங்க இப்ப என்ன பண்றாங்க?”

“இப்பதான் ரிசல்ட் வந்தது. நல்ல மார்க் வாங்கியிருக்காங்க… மேற்கொண்டு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை…”

“என்பெயர் நல்லமுத்து. சென்னையில் ஒருபெரிய கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறேன்…”

“ஏய்… ரமேஷ், சுரேஷ் இங்க வாங்க “

பசங்களைக் கூப்பிட்டு எனக்கு அறிமுகம் செய்தாள். அவர்கள் இருவரும் ஒரேமாதிரியாக இருந்தார்கள்.

“ட்வின்ஸ்…” என்றாள்.

இரண்டுபேரும் மிக சூட்டிகையாக இருந்தார்கள்.

“நான் இன்னிக்கி நல்ல நிலைல இருப்பதற்கு மாரிமுத்து சார்தான் அடித்தளம் போட்டாரு. உங்க பசங்க மேற்கொண்டு என்ன படிக்க விரும்பறாங்களோ, அதைப் படிக்கச் சொல்லுங்க. மாரிமுத்து சார் விட்டுவிட்டுப்போன அந்தப் பொறுப்பை நான் தொடர்கிறேன். பையன்களின் படிப்புச் செலவு முழுதையும் இனி நான் ஏற்றுக்கொள்கிறேன். இதுதான் நான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.”

என் விசிட்டிங்கார்டை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

அவள் கண்கள் கலங்கின.

கார்டை வாங்கிக்கொண்டு, “என் பெயர் காயத்ரி” நான் உங்களுக்கு கண்டிப்பாக போன் செய்கிறேன் என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *