அஜீத் – விஜய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 7,441 
 

தலய பத்தி தப்பா பேசுவியாடா” எனக்‍ கொடூரமாக கத்தியவாறு வீடு கட்டுவதற்காக வைத்திருந்த செங்கலை எடுத்து ஓங்கி மண்டையில் அடித்த போது, பழனி விஜய் (பழனியாண்டி விஜய்)யின் தலையில் நாட்டுக்‍கோழி முட்டையைப் போல் வீங்கிக்‍கொண்டு நின்றது. அதை தொட்டு தடவிப் பார்த்து அதன் அளவை யூகித்துப் பார்த்ததில் கடுமையான காயம் என்பதைத் தெரிந்து கொண்ட பழனி விஜய் பதில் தாக்‍குதலுக்‍கு தயாரானபோது, அஜீத் நடேசன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சோழாவரம் பைக்‍ ரேசில் செல்வது போன்று ஓடிவிட்டான். அடித்தது அண்ணன்தான் என்றாலும் பழிவாங்காமல் விடப் போவதில்லை என கேமராவை பார்த்துப் பேசும் கதாநாயகன் போல கண்ணாடி முன் நின்று உணர்ச்சி பொங்க சபதம் எடுத்துக்‍ கொண்டான் தம்பி பழனி விஜய்.

உரிமம்பெறாத அஜீத் ரசிகர் மன்றத்தின் விதிகளின்படி அனைவரும் தங்கள் பெயருக்‍கு பின் அஜீத்தின் பெயரை சேர்த்துக்‍ கொள்ள வேண்டும். அதன்படி அஜீத் போட்டோவின் முன் சத்தியம் எடுத்துக்‍ கொண்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிப் போனது. ஆனால் விதிகளுக்‍கு முரணாக, அஜீத்தின் பெயரை நடேசன் என்ற தன் பெயருக்‍கு முன்னராக சேர்த்துக்‍ கொண்டதற்கு மிக முக்‍கிய காரணம் ஒன்று உண்டு. அப்பா வழியில் வந்த தாத்தாவின் பெயரை தன் பெயரின் இரண்டாவது பாதியாக வைத்திருக்‍கும் அஜீத் நடேசன், ஒருநாள் தாத்தாவிடம்

“தாத்தா நீ செத்துப் போயிட்டன்னு சொல்லி பள்ளிக்‍ கூடத்துல லீவு சொல்லிட்டேன். அதை அந்த அழகுமலை வாத்தியார் நம்பல. அதனால சாய்ங்காலம் வீட்டுப்பக்‍கம் வருவார். நீ அவர் கண்ணுல பட்டுறாத… புரியுதா”

என்று வேண்டுகோள் விடுத்தான். இந்த திமிர்பிடித்த வார்த்தைகளை வேண்டுகோளாக ஏற்றுக்‍ கொள்ள முடியாத தாத்தா அழகுமலை வாத்தியாரிடம் ஒன்றுக்கு‍ இரண்டாக நன்றாக போட்டுக்‍ கொடுத்துவிட்டார். சரியாக ஏர் உழாத மாட்டை அடிப்பதற்கென்று பரணில் சொருகி வைத்திருந்த பிரம்பை எடுத்து அழகுமலை வாத்தியாருக்‍குப் பரிசாக வழங்கினார் நடேசன் தாத்தா. அதை வைத்து தன் பேரனுக்‍கு பாடம் கற்பிக்‍குமாறு எடுத்துக்‍ கூறினார். அடுத்தநாள் அழகுமலை வாத்தியார் துரத்தி துரத்தி வேட்டையாடியதில் அஜீத் நடேசனின் பின்புறத்தில் ஏராளமான ரத்தக்‍ கோடுகள் பதிந்திருந்தன. பொதுவாக பிள்ளைக்‍கு என்னவாயிற்று என்று வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கவனிக்‍கும் நடேசனின் தாய், தந்தையர், அவனுக்‍கு ஏற்பட்ட காயங்களைப் பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நடேசன் என்றொருவன் உயிருடன் இந்த கிராமத்திற்குள் திரிந்து கொண்டிருக்‍கிறான் என்கிற அந்த ஒரு தகவல் அவர்களுக்‍குப் போதுமானதாக இருந்தது.

தன் தாத்தாவை பழிவாங்குவதற்காகவே அவர் பெயரை இரண்டாவதாக தள்ளி விட்டு தன் விருப்பத்திற்குரிய தல…அஜீத்தின் பெயரை முன்னதாக சேர்த்துக்‍ கொண்டான் அஜீத் நடேசன்.

பழனியாண்டி விஜய்

அம்மாவழியில் வந்த தாத்தாவின் பெயர் பழனியாண்டியை, தனது கணவரிடம் ஏராளமாக பெண்ணுரிமை பேசி, தனது கணவனை எதிர்த்துப் பேசி உலக்‍கையால் அடித்து, தனது திருமணத்தின்போது சீராகக் கொடுத்த வெண்கலப் பானை, வெண்கல அண்டா போன்றவற்றால் வெளுத்துக்‍ கட்டி, பழனி விஜயின் தாயார் அவனுக்‍கு பழனியாண்டி என்ற தனது அன்புத் தந்தையின் பெயரை சூட்டினார். ஆனால், சிறுவயதிலிருந்தே பழனியாண்டி என்ற பெயர் அவனுக்‍குப் பிடிக்‍கவில்லை. பல நாட்கள் தன் பெயரை மாற்றும்படி உண்ணாவிரதம் இருந்து பார்த்தான். எத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தான் என்று யாரும் கவனிக்‍க வில்லை. தான் உண்ணாவிரதம் இருக்‍கிறேன் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் பரிதாபமாக சொல்லிப் பார்த்தான். யாரும் கேட்பதாயில்லை. உண்ணாவிரதம் இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என்று விளக்‍கமாக எடுத்துச் சொல்லிப் பார்த்தான். யாருக்‍கும் விலங்கவில்லை. பின்னர்தான் புரிந்தது காந்தியைப் பற்றி ஆசிரியர் கூறியது எல்லாம் எவ்வளவு பெரிய பொய் என்று. தான் உண்ணாவிரதம் இருந்தால் யாரும் கவனிக்‍க மாட்டேன் என்கிறார்கள், காந்தி உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் இந்தியாவே அவரை மதித்ததாகக் கூறுகிறார். எவ்வளவு பெரிய பொய் இது, தான் அனுபவத்தில் இந்த உண்மையைக் கண்ட பின் ஆசிரியர் கூறுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்‍ கொள்ளக் கூடாது என்று உறுதி எடுத்துக்‍‍ கொண்டான்.

பின் தானே ஒரு நல்ல நாளாகப் பார்த்து தன் பெயரை மாற்றி வைத்துக்‍ கொண்டான். சிவகாசி படம் வெளிவந்தபோதுதான் அந்த ஊரில் முதல் முறையாக விஜய் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. சிறுவனான தன்னையும் சேர்த்துக்‍ கொள்ளவில்லை என்றால் தீக்‍குளிப்பேன் என்று அனைவரும் பயம் கொள்ளும்படி கொடூரமாக மிரட்டி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் கார்டை பெற்று விட்டான். அன்றிலிருந்து தன்னை பழனிவிஜய் என்று கூப்பிடாமல் வெறுமனே பழனி என்று கூப்பிடுபவர்களை துரத்தி துரத்தி அடிக்‍க ஆரம்பித்து விட்டான். வன்முறையால்தான் விரைவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன; அஹிம்சையாக நடந்துகொண்டால் மதிக்‍க மாட்டேன் என்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அனுபவப்பாடம் என்று தனக்‍குள் சொல்லிக்‍ கொண்டான். அஹிம்சையை ஒரு மிரட்டலாக, ஓர் ஆயுதமாக பயன்படுத்தியதால்தான் காந்தியை கூட பலர் மதித்தார்கள் என்பதை எப்பொழுதுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ என்று மனதுக்‍குள் வெதும்பினான்.
அஹிம்சையாக இருந்தாலும் அதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தினால் மட்டுமே அஹிம்சை தனக்‍குரிய மரியாதையைப் பெறும் என்பது யாருக்‍குத்தான் புரிகிறது. அப்படியிருக்‍க நான் ஏன் அஹிம்சையை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். என் கைகளையே நான் ஏன் ஆயுதங்களாக பயன்படுத்தக்‍ கூடாது. அஹிம்சையைப் பயன்படுத்தி நெருக்‍கடி கொடுப்பதற்கும், ஒரு கும்மாங்குத்து குத்தி நெருக்‍கடி கொடுப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்‍கிறது என பலவாறாக சிந்தித்த பின்னரே வன்முறையை தன் ​வாழ்க்‍கை முறையாக எடுத்துக்‍ கொண்டான் பழனி விஜய். அப்படிப்பட்ட தன்னையே அஜீத் நடேசன் செங்கலைக்‍ கொண்டு அடித்துவிட்டு ஓடியிருக்‍கிறான் என்றால் அதை எப்படி சும்மா விடுவது? அடி உதை உதவுகிற மாதிரி அண்ணன் கூட உதவ மாட்டான் என்று சொல்லிச் சென்றவனே தன்னுடை குரு, முன்மாதிரி என்று காளி கோயிலில் சூடம் பொருத்தி அதை அணைத்து சத்தியம் எடுத்தபோது, கைசுட்டுக்‍கொண்டதே, அந்த வடு கூட இன்னும் அப்படியே தான் இருக்‍கிறது. இன்று ஒரு முடிவு கண்டாக வேண்டும் என்று முடிவுக்‍கு வந்துவிட்டான் பழனி விஜய்.

அன்று 30 அடி உயர அஜீத் கட்அவுட்டின் உச்சியில் தொற்றிக்‍ கொண்டு கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்‍காமல் ஊற்றிக்‍ கொண்டிருந்தான் அஜீத் நடேசன். அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திக்‍ கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகிவிடும். அவர்கள் 20 ஆயிரம்டெசிபலைத்தாண்டி கதறிக்‍ கொண்டிருந்தார்கள் என்று சொன்னால்தான் அது அவர்களைக்‍ கவுரவப்படுத்தும் கூற்றாக இருக்‍கும். அது ஏன் பேப்பரைக் கிழித்து இப்படி வானத்தை நோக்‍கி தூக்‍கி எறிகிறீர்கள்; அதன் ரகசியம் என்ன, எனக்‍கு சற்று விளக்‍கமாக எடுத்துக்‍ கூற முடியுமா? என்று தெரியாமல் கேள்வி கேட்ட பெரியவர் ஒருவரை ரேக்‍கிங் செய்து கொண்டிருந்தது ஒரு கும்பல். தான் தூங்கியபின், தான் படுத்த பாயைக் கூட சுருட்டி வைக்‍காத இளைஞர் ஒருவர், ஆயிரம்வாலா பட்டாசு ஒன்றை மடிப்பு களையாமல் தெருவின் நடுவில் பாய் விரிப்பது போல் விரித்துக்‍ கொண்டிருந்தார். தான் பிடித்துக்‍ கொண்டிருந்த பீடித்துண்டை எடுத்து ஸ்டைலாகப் பற்ற வைத்தான் மற்றொரு இளைஞன்.

இந்த அமளி துமளிகளுக்‍கு நடுவே விஜய் ரசிகர்களின் 5 ஒற்றர்கள் டூரிங் தியேட்டரின் அருகில் டீக்‍கடைபோல் தோற்றமளித்த ஒரு கடையில் நின்றபடி நோட்டமிட்டுக்‍ கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் மட்டும் தன் வஞ்சத்தை தீர்த்தக்‍ கொள்வதற்கான நேரத்தை எதிர்பார்த்தபடி காத்துக்‍ கொண்டிருந்தான். ஜெமினிபடத்தில் 2 விரல்களுக்‍கு நடுவே தனது டார்கெட்டை குறி பார்க்‍கும் விக்‍ரமைப்போல கட்அவுட்டின் மீது கறந்த பாலை ஊற்றிக்‍ கொண்டிருந்த அஜீத் நடேசனை பார்த்துக்‍ கொண்டிருந்த அந்த சிறுவனின் பெயர் பழனி விஜய். (ஐந்து ஒற்றர்களில் ஒருவன்)

அரசாங்கத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விஜய் ரசிகர்கள், தங்கள் கால் சட்டையின் பின்புறத்தில் சொருகி வைத்திருந்த அந்த ஆயுதத்தை எவரும் கவனிக்‍காத ஒரு தருணத்தல், ஒரு சமுராய் வீரன் தனது சிறப்பு வாய்ந்த வாளை உருவுவது போல், உருவினார்கள். அந்த ஆயுதத்தின் பெயர் கவட்டை. அதை தயாரிப்பது மிக எளிது. தயாரிப்பு செலவும் வெகு குறைவு, ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்வதும் எளிது. துப்பாக்‍கிகளுக்‍கு தோட்டா பயன்படுவதுபோல, இந்த ஆயுதத்துக்‍கான தோட்டாவை தேடிச் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. கவட்டைக்‍கான தோட்டாக்‍கள் புவியெங்கும் சிதறிக்‍ கிடக்‍கின்றன. ஒரு சிறு கல்தான் வேட்டைக்‍கான ஆயுதம். குனிந்து பார்த்தால் நிச்சயமாக ஒரு சிறுகல் கிடைக்‍காமலா போய்விடும்.

பழனி விஜய் ஒரு கரடுமுரடான கல்லை தேடிப்பிடித்து கட்அவுட்டுக்‍கு பால் ஊற்றிக்‍ கொண்டிருந்த அஜீத் நடேசனுக்‍கு பால் ஊற்றுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான். ஒற்றைக்‍ கண்ணை மூடிக்‍கொண்டு பழனி விஜய் குறிபார்த்தது அஜீத் நடேசனின் மூளையில்லாத தலையை அல்ல. கொழுப்பெடுத்துப் போய் பேசும் அவனது வாயைத்தான் குறிவைத்தான். அர்ஜூனன், மரத்தில் உட்கார்ந்திருக்‍கும் கிளியின் கண்ணை குறிபார்த்தது போல் அல்லாமல், அதைவிட ஒருபடி மேலேபோய், அஜீத் நடேசனின் வாயில் உள்ள 36 பற்களில், அந்த ஒற்றை சொத்தைப் பல்லை குறிவைத்தான்.

ஆயிரம் வாலா வெடித்துக்‍ கொண்டிருந்தது. இதுதான் சமயம். ஆயுதத்தை ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் இலக்‍கை நோக்‍கி லான்ச் செய்தான் பழனி. எந்த மருத்துவராலும் செய்ய இயலாத அந்த விஷயம் கண நேரத்தில் நடந்தேறி விட்டது. அஜீத் நடேசனின் சொத்தைப்பல் டிங்ங்ங்ங்………… என்ற சத்தத்துடன் தன் இருப்பிடத்திலிருந்து இடம் பெயர்ந்து வேறொரு இடத்திற்கு துள்ளிக்‍ குதித்து சென்றுவிட்டது. இந்த நல்ல விஷயம் நடந்தேறிவிட்டதை சற்றும் புரிந்து கொள்ளாத அஜீத் நடேசன் 30 அடி உயர கட்அவுட்டிலிருந்து தலைகுப்புற தமிழக முதலமைச்சரை கூப்பிட்டபடியே (அம்மா…….) விழுந்து விட்டான். தங்களது மிஷனை முடித்துக்‍கொண்டு ஆங்கில நடிகர் டாம்க்‍ரூசைப் போல ஓடி மறைந்து விட்டார்கள் விஜய் ரசிகர்கள்.

தான் மண்டையில் அடிபட்டு, அரைலீட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு குத்துயிரும், ​குலையுயிருமாக கிடப்பதில் கூட வருத்தப்படாத அஜீத் நடேசன்…. உயிரை துச்சமென மதித்துப் போரிடும் வீர மறவர் குலக்‍ கொழுந்தான அஜீத் நடேசன்…. ஏனோ கண்ணில் நீர்வர அழுது கொண்டிருந்தான். தலயின் படத்தை முதல்நாளே பார்க்‍க முடியாத துரதிர்ஷ்டசாலியாக போய்விட்டோமே என்ற கழிவிரக்‍கத்தில் உயிரே போய்விடும் போல் இருந்தது அவனுக்‍கு. இந்தக்‍ காட்சியைக்‍ கண்ட பழனி விஜய்யோ மகிழ்ச்சிக்‍ கடலில் கடப்பாறை நீச்சல் அடித்துக்‍ கொண்டிருந்தான்.

கணக்‍கு நேராகிவிட்டது, பழிக்‍குப்பழி வாங்கியாகிவிட்டது, விஜய் ரசிகன் என்ற பெயருக்‍கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்தாகிவிட்டது. நேர்மை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன? தம்பி என்ன? தலைவனுக்‍காக போராடுவதே தலையாய கடமை என்ற தாரக மந்திரத்தை ஜபித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியேறினான் பழனி விஜய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *