அச்சங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 761 
 
 

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒற்றைப் பலகை திறந்த சில கடைகள்.. 
ஓய்ந்து வெறிச்சோடிய வீதிகள்.. 
இடையில், பள்ளிக்கூட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு
பலியாகுவதை எதிர்த்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் .. 
கடந்த ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலாசார சீர்கேடுகள்…
அது இன்றைய நல்லாட்சியிலும் தொடர்கின்ற அவல நிலை….. 

இவற்றைப் பார்த்துக் கொண்டு கையாலாகாத வர்களாக தமிழ் தலைவர்கள்…. 

இப்படியான சங்கதிகளைக் கோர்த்து ஒரு கவிதை எழுதும் ஆசையுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் விஸ்வம். 

தோதான, பதமான வார்த்தைகள் பற்றிய கற்பனையிலே சஞ்சரித்துக் கொண்டிருந்த அவனை தொலைபேசியின் அலறல் நிச உலகிற்குக் கொண்டு வந்தது. 

‘ஹலோ…’ 

‘ஹலோ… குரல் தெரியுதல்லே?… ஏதும் வைச்சிருக்கிறியா?’ மறுமுனையில் விஸ்வத்தின் நண்பன் குணா பேசுகிறான். 

‘என்ன?’ 

‘உன்ர கற்பனைகள என்னில சொருகாத… நாளைக்கு ஒரு போத்தில் விஸ்கி பிறியா கிடைக்குமெண்டு சொன்ன நீயல்லா?’ 

‘அது கிடைச்சதுதான். அதைச் சனிக்கிழமைக்கு அடிப்பம் …’ 

‘இஞ்ச… தேவல்லாத கதய விட்டிட்டு, அதயும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கு…நான் ஐஞ்சு நிமிஷத்தில வந்து ‘பிக்’அப் பண்ணுறன். ஓ.கே?’ 

‘…’ 

‘என்ன மிரடு முறிக்கிறாய்?’ 

‘ஓ.கே! வந்து துலை…’ 

தொலைபேசியை அதன் தொட்டிலில் வைத்தான் விஸ்வம். 

அவள் விருப்பின்படி 

முருகையில் ஏறி, முறிந்து விழுந்தேன். 

‘அந்தோ! வந்த அருங்கவி 
இந்த அமளிகண் டெங்கோ மறைந்ததே!’ 

என்கிற நீலாவணன் கவிதையின் வரிகளை முணுத்தபடி, குணாவைச் சந்திப்பதற்கான புறப்பாட்டில் ஈடுபட்டான். 

வானம் முழுவதும் இருண்டு விரிந்து…மழை பொடு பொடுத்துக் கொண்டிருந்தது. 

குளிர் காற்றும் சாரலும் காரைத் தோய்த் தெடுத்தன. 

நெடுஞ்சாலையிலே கார் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. 

விஸ்வம்த-ஈமோ இருவருடைய நட்பும் ஒரே சீராக ஓடிக் கொண்டிருப்பதும் விநோதமே… 

ஒரே ஊர்க்காரர். ஒரே பள்ளியில் படித்தார்கள். ஒன்றாகவே வேலை பார்க்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. உத்தியோகம் பார்த்த இடத்தில் தமிழர்களாகப் பிறந்த ஒரேயொரு காரணத்திற்காக ஒரே வகையான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிட்டது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, நிம்மதியான புதுவாழ்வு தேடி வெளிநாடு போகலாம். என்று இருவருமே ஒன்றாக முடிவெடுத்தார்கள். எத்தனையோ எத்தனங்கள், எத்தனையோ தோல்விகள். திடீரென்று விஸ்வத்துக்கு நோர்வே செல்வதற்கான வழி பிறந்தது. வெளிநாடு செல்வதற்கான வழிகளையும் ரூட்டுகளையும் நம்மவர்கள் பரம இரகசியமாக வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், விஸ்வம் அந்த இரகசியம் முழுவதையும் குணா வுக்குச் சொன்னான். ‘மச்சான் நான் முந்திப் போனாலும், நீ எப்பிடியும் வந்து என்னோடை சேர்ந்து கொள்வாய். இது உறுதி’ என்று சொன்னான். விஸ்வத்தின் நம்பிக்கை போலவே, குணாவும் வந்து சேர்ந்தான். இருவருடைய நட்பும் நோர்வே மண்ணிலும் தொடர்ந்தது. குணா தன் குடும்பத்தை நோர்வேக்கு அழைத்துப் பெரிய குடும்பஸ்தனாக வாழ்கிறான். ‘ ஆனால், விஸ்வத்தின் குடும்பம் தமிழ் நாட்டில். இங்கே ஒருவகை ‘பச்சிலர் வாழ்க்கை. 

‘என்ன மச்சான்… நம்மட ஊர் மார்கழி மாசப் ‘பவ்வல்’ மாதிரி விடமாட்டன் எண்ணுது மழை’ என்று மௌனத்தைக் கலைத்தான் குணா. 

‘…அந்த அடை மழையிலயும், எங்கட சனம் வயல்-வரப்பு, தோட்டம்- துரவு எண்டு எப்பவும் ஓடி ஓடிப் பாடுபட்டவங்கதானே? பிறகு கூத்தும் பாட்டும் எண்டு சந்தோஷமா இருந்தவங்கதானே…இப்ப தங்கட காணி பூமிகளை இராணுவத்தினரிடம பறிகொடுத்து விட்டு பரிதவிக்கிறார்கள். வடகிழக்கில் இன்னும் இக்கட்டான நிலைதான் …என்று விஸ்வம் முடிப்பதற்கு முன்னரே — 

‘உனக்கிட்ட ஏதாவது ஒன்றைப் பற்றி பேச்சுக் கொடுத்தாப் போதும், நாட்டோட இணைச்சுப் பேசாம விடமாட்டா…அதெல்லாம் விட்டுப் போட்டு நீ முதல்ல ‘பெல்ட’ப் போடு பாப்பம்… இல்லையெண்டா ஐ நூறு குரோனர் வெச்சிரிக்கியோ ‘பொலித்தி’க்குக் கட்ட?’ என்றான் குணா. 

தான்’பெல்ட்’ போடாமல் இருப்பதை அப்பொழுதுதான் விஸ்வம் உணர்ந்தான். 

அதனைச் சரிசெய்து கொண்டே, 

‘இந்த மழைக்கும் 
ஈனேவாறே கூதலுக்கும் 
சொந்தப் புருஷனென்றால் 
சுணங்குவாரோ வட்டையில்’ 

என்று தன் கிராமத்துக் காற்றிலே தவழ்ந்து வரும் நாட்டார் பாடல் ஒன்றினை மனம் ஒன்றிப் பாடலானான். 

நெடுஞ்சாலையிலோ கார் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது… 

அப்பாவையும் மாமாவையும் கண்டவுடன் குணாவின் பிள்ளைகளுக்கு ஒரே குதூகலம். சின்னவள் சந்தாவுக்குத்தான் அதிகம். அவள் மகா சுட்டி. நடுவிலாள் ரூபா குறும்புக்காரி. ஆனால், முகத்தை மட்டும் சம்மனசுபோல வைத்திருப்பாள். மூத்தவள் சீதா ‘மிரிச்ச இடத்துப் புல்லும் சகா!’ அவ்வளவு அமைதியான சுபாவம். 

குணாவின் மனைவி விஸ்வத்துக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்யத் துவங்கினாள். 

குணா இரண்டு கிளாஸ”களைக் கொண்டு வந்து, விஸ்வம் கொண்டு வந்து வைத்த விஸ்கிப் போத்தலுக்கு அருகில் வைத்தான். பிரிஜிலிருந்து கோலா போத்தலை எடுத்துத் திறந்து கொண்டே, ‘ம்…எடு மச்சான்…இந்தா சண்டிக்கு ‘கோலா’… இப்ப துவங்கினாத்தான் சாப்பாட்டு நேரத்துக்குக் கணகணப்பா இருக்கும்…’ என்றான். 

‘சமா’ துவங்கியது. விஸ்வத்தைத் சாப்பாட்டுக்கு என்று அழைத்தால் அருக்கணியம் பண்ணுவான். இப்படி ஒரு ‘மாட்டு’ப் போட்டாத்தான் நடக்கும். மற்றும்படி இருவரும் குடியின் பரம பக்தர்களல்லர். 

‘மச்சான், மறந்து போனேன். கம்யூட்டரில ஒரு சின்ன பணிவிட, பாத்திட்டு வந்துடுறன்.’ 

குணா கணினியின் முன் அமர்ந்து தன் வேலையை அவசரமாக முடுக்கி, செய்து கொண்டிருந்தான். ‘பிறிண்ட் அவுட்’ எடுக்கும் பொழுது, மூத்தவள் சீதாகுணா வின் காதைக் கடிப்பதுபோல ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுபாவமே அப்படித்தான். 

திடீரென்று, ‘நோ! நீ போக முடியாது’ என்று குணா வெடித்தான். சீதா திகைப்புடன் விழித்தாள். 

எல்லோர் கவனமும் அத்திசையிலே திரும்பிற்று. 

‘நான் கேட்ட ஒரு கேள்விக்காவது நீ ஒழுங்கான பதில் சொன்னயா?” 

‘இல்லை…’ என்று சீதா தலையைக் கவிழ்த்து மெதுவாகச் சொன்னாள். 

‘எல்லாருக்கும் கேட்கட்டும் -விஸ்வம் அங்கிளும் எங்கட ஆள்தான் – 

கேட்கட்டும். நீ பதில் சொல்லு. உன்னோட படிக்கிற எல்லாப் பிள்ளைகளும் போறாங்களா?’ 

‘இல்லை.’ 

‘உன்ர வகுப்பில படிக்கிற பாகிஸ்தான் பிள்ளைகள் போகுதுகளா?’ 

‘இல்லை.’ 

‘எல்லா நேர்வேஜிய பிள்ளைகளும் வர்றாங்களா?’ 

‘தெரியாது.’ 

‘உங்கட பள்ளிக்கூடத்தால ஒழுங்கு செய்யப்பட்டதா?” 

‘என்னெண்டு தெரியாது.’ 

‘ஒன்றுமே தெரியாது. “நான் போகயா அப்பா?” என்று கேட்டால் எப்படி?’ 

அவன் மேஜைக்கு வந்து, தன் பங்குக்கு ஊற்றி வைத்திருந்த கிளாஸைக் காலி செய்தான். 

‘அவளுக்கு ‘பாஸ்கட்பால்’ விளையாட விருப்பமாக இருக்குதாம். உங்ககிட்ட முதலிலயும் கேட்டவளாம். நீங்க ஒன்றும் சொல்லேல்லயாம்…’ சமயலை விட்டு, எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தாய் சமாதானமான குரலிலே சொன்னாள். 

‘நீ ஒன்றும் விளங்காமல் பேசுறாய்… செல்லம் கொடுத்து நீ பிள்ளைகளைப் பழுதாக்கப் போறாய்… நான் கேட்ட ஒரு கேள்விக்கும் அவள் சரியான பதில் சொல்லேல்ல… தெரியுமா உனக்கு? பாஸ்கட்பால்’ விளையாட பள்ளிக்கூடத்தைவிட்டு, தனியான இடத்துக்கு அவள் போவதை நான் அனுமதிக்க மாட்டன்… இங்க பலபேர் பல மாதிரி நடக்கலாம்…ஆனா… என்ர பிள்ளைகள்… மரியாதையாகத்தான் நடக்க வேண்டும்….அப்படி உங்களுக்கு இஷ்டமில்லாமல், உங்கட விருப்பத்திற்கு நடக்கிறதெண்டால்; இங்க ஒருவரையும் வைச்சிருக்கமாட்டன்; உடனே எல்லோரையும் ஊருக்கே அனுப்பிடுவேன்”. குணா வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான். 

‘இது ஏன்? இப்படியெல்லாம் கதைக்கிறீங்க…அவள் விருப்பப்பட்டுக் கேட்டாள்… நமக்குப் பிடிக்கவில்லையென்றால் விடவேண்டியதுதானே?’ என்றாள் தாய். 

ஏதோ ஆவேசமாகக் கதைக்க முயன்று, பின்பு கதைக்காமல் அதே ரென்சனில் திரும்பி, ‘என்னடாப்பா விசு! நீ பேசாமல் இருக்கிறாய்?’ என்று நண்பனை விவகாரத்திற்குள் இழுத்தான். 

‘நான் என்ன பேச இருக்கு? முதல்ல நீ கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம் இரு பாப்பம்…! 

‘இல்ல மச்சான்…இந்த நாட்டுல பிள்ளைகளை வளர்க்கிறது லேசுப்பட்ட காரியமில்லை. கண்ணுல எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கவேண்டும். முதலிலும் நான் ஒரு விசயத்தில் அனுபவப்பட்டு… நல்லாப் பட்டுத் தேர்ந்தவன்; அது உனக்குக்கூடத் தெரியாது. ‘பாஸ்கட்பால்’ விளையாட எல்லாப் பிள்ளைகளும் போகாமல், இவ எப்பிடிப் போகலாம்? பள்ளிக்கூடம் என்றால் பரவாயில்லை. இது, வேறு எங்கேயோ… ஒரு ஹோலில் நடக்குதாம்…இதை யார் ஒழுங்கு செய்தது என்று ஒன்றுமே தெரியாது; ஒரு வயது பிள்ளைய தனியா அனுப்ப நான் விரும்ப இல்ல. பாகிஸ்தான் பிள்ளைகள்… தங்கட கலாசாரத்தின் படி தனியாக வெளியில செல்வதில்ல… நமக்கும் ஒரு கலாசாரம் இருக்குத்தானே. அதை ஏன் நாம கடை பிடிக்க முடியாது? நோர்வேஜியப் பள்ளிக்கூடத்தில் படிச்சாப்போல… நாம அவர்களப்போல மாறிடலாமா? இன்றைக்கு பாஸ்கட்பால் விளையாடப் போனால்; நாளைக்கு டிஸ்கோ தேக்குக்கு வாறியா என்று கூப்பிடுவாங்க. மறுநாள்…மற்ற விசயங்களுக்கும் கூப்பிடுவாங்க…இது நமக்குத் தேவையா?’ 

‘சரி சரி!! விடு. விடு…சீதா நல்ல பிள்ளை…அவள் ஏதோ ஆசைப்பட்டுக் கேட்டுட்டாள்… 

‘அதுதானே! இவருக்கு சாந்தமாகவே பேசத் தெரியாது…பாவம் சீதா அறையில் இருந்துகொண்டு அழுதுகொண்டே இருக்கிறாள்… அப்பா, இப்படி ஆத்திரப்படுவார் என்றால், நான் கேட்டே இருக்க மாட்டன்…’ என்று சொல்லுறாள்…’ என்று சொல்லிய தாய் சமையலைக் கவனிக்கத் திருபினாள். 

‘இஞ்சே! நீ சும்மா இருக்கணும்… நான் பேசும் போது, நீ குறுக்கால– பிள்ளைகளுக்குச் சார்பாகப் பேச வராதே… ஒரு தகப்பனும் பிள்ளைகளைத் தண்டிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கொடு. அப்படி இல்ல, இங்கு இருக்கிற ஒரு சில தாய் தகப்பன் மாதிரி நீயும் பிள்ளைகள் வளர்க்கப் பிரியப்பட்டால், அதுக்கு நான் தயாரில்ல…நீங்க எல்லோரும் நாட்டுக்குத் திரும்புங்க…அங்கே போய் என்ன கஸ்டப்பட்டாலும் மரியாதையா வாழுங்க. இங்க என்னால இதை ஜீரணிக்க முடியாது. விளங்குதா உனக்கு? என்று சீறி முடித்தான் குணா. 

சிறிதுநேர அமைதிக்குப் பின்; விஸ்வம் தன் கருத்தைச் சொன்னான். குணா சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது…நானும், இங்கு ஒரு சில வீடுகளில் நடக்கும் சம்பவங்களை அறிந்திருக்கிறேன்! நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டுமிருக்கிறேன்…சில பிள்ளைகள் தாய்-தகப்பனுக்கே எதிர்த்துப் பேசுதுகள்… தாயும், தகப்பனும் வேலைக்குப் போகும் வீடுகளில், பிள்ளைகள் தங்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி நடக்க முயற்சிக்கிறாங்க…ஐரோப்பிய கலாசாரத்திற்கு அடிமையாகி, எமது பண்பாட்டுக் கோலங்களை அழித்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் சூழல் இப்படியான தவறுகள் நடப்பதற்கு வழிவகுத்தாலும், பெற்றோர்களின் கவனக்குறைவும், அசிரத்தையுமே…இவர்கள் தான்தோன்றித் தனமாக நடப்பதற்கு பாதை அமைத்துக் கொடுக்கின்றது. சில வீடுகளில் பெற்றோரே தறி கெட்டு நடக்கும்போது பிள்ளைகள் எம்மாத்திரம்… பல குடும்பங்கள்; எமது பண்பு, பழக்கங்களிலிருந்து பாதை மாறினாலும், ஒரு சில குடும்பங்கள் மானத்தோடும் மரியாதையோடும் கௌரவமாகவும் வாழ நினைப்பதே எவ்வளவோ மேலான விசயம்… இந்த நாட்டிலே பருவ வயதுப் பிள்ளைகளை படிப்பித்து, ஆளாகும்போது, பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது…’ என்று விஸ்வம் பெரிய நியாய விளக்கம் சொன்னான். 

‘சொல்லு மச்சான்! நல்லாச் சொல்லு…உன்ர பாணியில நல்லா எடுத்துச் சொல்லு’ இடையிலே குறுக்கிட்டான் குணா …ஏற்கனவே அடிச்சிருந்த விஸ்கி அவனுக்கு இறங்கிவிட்டதுபோல இருந்தது குரல் சமநிலைக்கு இறங்கி விட்டது. 

ஆண், பெண் இருபாலாரும் படிக்கும்….’கோ எடிக்கேசன்’ பள்ளிக்கூடம் என்றபடியால் இங்குள்ள நோர்வேஜியப் பெடியன்கள் வெளிநாட்டுப் பெண் பிள்ளைகளிடம் ‘சேட்டையும்’, ‘நக்கலும்’ விடுவதும், வம்புத்தனம் செய்வதும் தவிர்க்க முடியாததொன்றாக இருக்கிறது. இதை நமது பிள்ளைகள் நன்றாக உணர்ந்து, அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும். இந்த நாட்டுச் சட்டம் கொடுத்திருக்கிற சுதந்திரத்தை நமது பிள்ளைகள் துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது கண்டியளோ? இவர்களை நோர்வேஜியக் கலாச்சாரத்தில் வளர்ப்பதா? இல்லை, நமது கலாச்சாரத்தில் வளர்ப்பதா? என்று ஒரு தீர்மானம் எடுக்காமல் பெரிய தர்மசங்கடத்தில் 

மாட்டிக்கொண்டுள்ள ஒரு சில பெற்றோரை நான் அறிவேன். நமது நாட்டில் மட்டுமல்ல, இங்கும்தான். ஒரு தாய்தான் பிள்ளைகளை நெறியாக வளர்க்கமுடியும். அதுவும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில்– ஒரு தாய் தவறு விட்டால்–பிள்ளைகள் தரம் கெட்டுப் போவதை யாரும் தடுக்கமுடியாது…’ என்று விஸ்வம் தனது ஞானத்தையும், உள்ளே சென்றிருக்கும் நீதவானின் நியாயத்தையும் குழைத்துப் பேசினான். 

‘ஐயோ! அப்படி ஒரு நிலை வந்தால், நானே எல்லோருக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு, எல்லோரும் செத்தபிறகு நானும் குடித்துச் செத்திடுவன்’ என்று குணாவின் மனைவி அழத் தொடங்கினாள் 

‘நீங்கள் ஏன் ரென்சன் ஆகிறியள்? கொஞ்சம் சும்மா இருங்கோ…அப்படியெல்லாம் ஏன் நடக்கப் போகிறது? நீங்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனக்கு ஒரு சந்தோஷம் என்ன தெரியுமா?’ என்று கேள்வி கேட்டு நிற்பாட்டிய விஸ்வம், நண்பனும் மனைவியும் தன்னிலே கவனம் குவித்திருப்பதை உணர்ந்து சொன்னான். 

இங்கே எப்படியும் வாழலாம் என்று எண்ணும் ஒரு சிலரின் மத்தியிலே… இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை வகுத்து வாழும் குணாவைப்போல் உள்ளவர்களை நான் பாராட்டுகிறேன்’ என்று சொல்லி, குணாவை அன்புடன் தட்டி, ‘டேய், நீயும் பிள்ளைகளிடம் அன்பாகவும், சாந்தமாகவும் நடந்து கொள்ளப் பழக வேண்டும் மச்சான், கண்டிப்பு என்பது சத்தம் போடுறதில்ல. பிஞ்சு மனம் பாதிக்கப்பட்டால், உளரீதியான தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது… நல்லது கெட்டதுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். என்ன நான் சொல்றது விளங்குதா? கூப்பிடு… சீதாவைக் கூப்பிட்டு அமைதியாச் சொல்லு…அதுக்கு எல்லாம் விளங்கும். இந்தா ஒரு ‘பெக்’ அடி, உன்ர ரென்ஷனில அடிச்சது எல்லாம் நியூற்றலாயிருக்கும்’ என்று சிரித்துக் கொண்டே, இரண்டு கிளாஸ்களிலும் விஸ்கியை ஊற்றினான் விஸ்வம். 

‘சீதா, சீதா!! இங்க வா மகள்…!’ என்று அழைத்தான் குணா, பயத்துடன் அவனிடம் வந்த சீதாவை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். 

அப்பா உங்கட நன்மைக்காத்தான் எதுவும் சொல்லுவன்… நமக்கு வேணாம் மகள். இந்த மண்ணின்ர எடுப்புகள் வேணாம். நமது நாட்டுப் பிரச்சினையளால ஊரில் இருக்க முடியாமல் இந்த நாட்டுக்கு வந்திட்டம். அங்கே கெளரவமாக வாழவிட மாட்டாங்க என்றுதானே உங்களை இங்க கூட்டி வந்தது? இல்லாட்டி இந்தக் குளிரில வந்து செத்துக் கொண்டிருப்பமே? நீ வளர்ந்த பிள்ளை. சரி-பிழையை விளங்கிற அறிவு இருக்கு. இல்லையா? நீ ஒழுங்கா இருந்தாத்தானே உன்ர சகோதரிகளும் ஒழுங்கா வளருவாங்க….’ 

‘எனக்கு விளங்குதப்பா!’ என்று சீதா சிரித்தாள். வாடியதாகத் தோன்றிய மலர், அன்பு நீரும், நியாய வெளிச்சமும் கண்டு என்ன பிரகாசமாக மலர்ந்தது! 

அம்மாவுக்கு உதவும் கடமை உணர்வுடன் சீதா சமையலறை சென்றாள். விஸ்வம் விஸ்கியைக் கையில் எடுத்துக் கொண்டு, ‘மச்சான், எங்களை அச்சங்கள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயங்களினால் விரட்டப்பட்டு, தாங்கள் வாழக் கனவுகள் காணாத நாடுகளிலும் குடியேறி வாழுகிறோம். உயிரைப் பற்றிய பயங்கள் போனதும், தனமு இனத்துவ அடையாளங்களை இழந்துவிடக்கூடாது என்று அச்சங்களுடன் வாழ்கிறோம்… இந்தப் பயங்கள் நீங்கிய விடியல் எங்கட இனத்துக்கு எப்ப வருமோ?…’ என்று தத்துவார்த்தமாக பேசிய விஸ்வம், ‘எங்களைப் போன்றவர்களுக்குப் பயங்களைப் போக்குவதற்கு ஒரு மருந்து இருக்குத் தெரியுமோ?’ என்று கேட்டு நிறுத்தினான். 

‘அது என்ன மச்சான்?’ என்று குணா ஆவலுடன் கேட்டான். 

‘அது விஸ்கிதான்!’ என்று சொல்லி, விஸ்வம் மிக நிதானமாக தன் கிளாஸல் இருந்த விஸ்கியைக் குடிக்கலானான்!

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *