கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 6,273 
 
 

ரமா தன் கதைகளுக்குப் படம் போடுகிறதை விரும்புவதில்லை என்னத்துக்குப் படம்; கண்ணால் படித்துக்கொண்டு போகும்போதே எல்லாம் வந்து நிக்குமே எதிரே.

பத்திரிகைகளிடம் வேண்டாம் என்றே சொன்னாள். என்ன சொல்லி என்ன; அது ஒரு நோய்ப்பழக்கம் ஆகிவிட்டது அதுகளுக்கு.

தான் சிருஷ்டிக்கும் பாத்திரங்களின் முகஜாடை அவளுக்குத்தான் தெரியும். அந்த தகரப் பத்திரிகைகளில் வேலைபார்க்கும் சித்திரக்காரர் களுக்கு அது தெரியக் காரணமில்லை .

தன் கதைகளுக்குப் போடப்பட்டு வெளியாகும் படங்கனை பார்க்கும் போது தொந்துபோவாள். ஒருவகையில் இது சிருஷ்டிய அகவுரப்படுத்தும் செயல் என சினங்கொள்வாள்.

*உங்கள் கதைகளுக்கு நீங்களே படம் வரைந்து அனுப்பலாமே?” என்று ஓர் பத்திரிகை ஆசிரியர் கேட்டிருந்ததைப் பார்த்து ‘கர்மம்’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

நாளாவட்டத்தில் அவளுக்கு இந்தப் பத்திரிகைகளில் கதைகளுக்காகப் போடப்பட்டு வெளிவரும் படங்களே விகடத்துணுக்குகளையும் விட பெரிய சிரிப்பைத் தந்தது. பல தரம் அதைக் கண்டு பலமாகச் சிரித்திருக்கிறாள்.

ஆக, இதை ஒண்ணுமே செய்யமுடியாது, விட்டுவிட வேண்டியது தான் எனத் தீர்மானித்த சமயத்தில்தான் அதிசயம் நடந்தது.

அவளுடைய கதைக்கு வந்த படத்தைப் பார்த்தபோது வியப்பையும் ஆனந்தத்தையும் தாளமுடியவில்லை. மீள ரொம்பநேரம் பிடித்தது.

எப்படி முடிந்தது; இது எப்படி சாதயம்? பல தடவை கேட்டுக் கொண்டாள்.

தனது கிராம், பிரதேச சூழலும் நினைத்து எழுதிய தனது பாத்திரத்தின் ஜாடையும் கிட்டத்தட்ட அப்படியே கொண்டுவர இந்த சித்திரக்காரரால் முடித்தது எப்படி?

காத்திருந்தாள் ரமா.

அடுத்த தரமும் அப்படியே வந்தது!

படத்தின் ஓர் மூலையில் லோகா என்று இருந்தது.

சித்திரத்தை ஆழ்த்து நோக்கினால் தூரிகை புதுசு என நிச்சயமாய் தம்பலாம். தொடர்ந்து வரும் படங்களைக் கவனித்துக்கொண்டு வந்த போது அந்தத் தூரிகையிடம் ஜாடை பலஹீனம் இல்லை.

லோகாவுக்கு பத்திரிகை முகவரிக்குத் தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கடிதம் எழுதினாள்.

பதிலும் வந்தது.

லோகா என்பது லோகதாதன். இவன் கிராமத்தின் பக்கத்துக் காரன். அதோடு இவள் எழுத்தின் அத்யந்த வாசகறும்கூட ஆகவே இவள் பாத்திரங்களையும் சூழலையும் அறிந்ததில் – அநுபவித்துப் படம் வரைந்ததில் – ஒன்றுமில்லை அதிசயம். அவளுடைய கதைகளை ஒன்றுவிடாமல் படித்திருப்பதாயும் ஆனால் அவளைத் தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் எழுதியிருந்தார்.

***

சைத்ரிகர் லோகா முதல் முதலில் ரமாவின் கதைகளைப் படிக்க தேர்த்தபோது ‘ஒரு கிறக்கம்’ ஏற்பட்டது. மனக்கண்ணில் ரமாவின் ஒரு உருவம் பதிந்தது, தாமதியாமல் தூரிகையை எடுத்து வண்ணங்களை குழைத்து அந்த உருவத்தை வரைந்து வைத்தார்.

அவருக்கு பின்னொரு நாள் இதேபோல் ஓர் அறுபவம் ஏற்பட்டது.

ரேடியோவில் இனிமையான ஓர் பெண்குரல் கேட்க நேர்ந்தது. அதுக்கப்புறம் அக்குரலை அவர் அடிக்கடி விரும்பிக் கேட்டார். அந்த நேரம் அவருக்கு மனப்பாடமாகிவிட்டது; இன்னென்ன கிழமைகளில் இந்த நேரத்தில் கேட்கும் எனத் தெரிந்து கொண்டார். அந்தக் குரலைக் கேட்கும்போதெல்லாம் சொக்கிப்போய்விடுவார்.

அக்குரலுக்குரியவளின் முகம் இப்படி இப்படி இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அவளுடைய ஜாடைகூட தெரிய ஆரம்பித்தது. குறிப்பிட்ட ஒரு சொல்லை உச்சரிக்கும் போது அவள் உதடுகள் குவிவதும் புருவங்கள் அசைவதும் தெரிந்தது! மனதில் வாங்கிக்கொண்டு அந்த முகத்தைத் தூரிகையால் கொண்டுவந்தார்.

இப்பொழுது அவருக்குப் புதுசாக ஒரு ஆசை முளைத்தது. தான் வரைந்த படங்களை சரிதானா என்று பார்க்கவேண்டும்!

இந்தச் சமயத்தில்தான் எழுத்தாளர் மாநாடும் கூடியது. அதில் கலத்துகொள்ள ரமாவும் வந்தாள். மகாநாட்டையொட்டி அந்த வாரப்பத்திரிகை சிறப்பு மலரை வெளியிட ஏற்பாடு செய்திருந்தது. அதற்கான புகைப்படங்களை எடுக்க சைத்ரிகர் லோகாவை ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அங்கேதான் ரமாவும் லோகாவும் சந்தித்தது.

லோகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய லட்சிய எழுத்தாளியாக தன் மனசில் கற்பனை செய்து வைத்திருந்த அந்த உருவத்துக்கும் இந்த ரமாவுக்கும்தான் எத்தனை வேறுபாடு!

நேரில் கண்ட ரமாவை ஏற்றுக்கொள்ள அவர் மனசு திணறியது. இதே அனுபவம் லோகா விஷயத்தில் ரமாவுக்கு ஏற்பட்டது உண்மை! எண்ணங்களால் மனசில் தோன்றும் இந்த உருவங்களுக்கு அடிப்படை எது என்று ரமாவும் யோசித்தாள்.

இவ்வளவு குள்ளமாகவும் கருப்பாக சப்பை மூக்கோடு பெருச்சாளி வால் ஜடையோடு ரமா இருப்பாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

கடமை முடிந்து தனது “ஓவியக்குகை”க்குத் திரும்பிய லோகாவுக்கு சாந்தம் இல்லை. தான் வரைந்த ரமாவின் படத்தை எடுத்து ஒருதரம் பார்த்தார். கைப்பையைத் திறந்து அவர் மகாநாட்டில் எடுத்த ரமாவின் புகைப்படத்தையும் அருகில் வைத்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார். எவ்வளவு வேறுபாடு!

இதில் எது ரமாவின் அசல்?

யோசித்தபிறகு, தான் வரைந்த ரமாவின் படத்தையே தனது மேஜைமேல் வைத்துக்கொண்டார்.

– நீலக்குயில், பெப்ருவரி-1977

ஜாடை பலஹீனம் – பெரும்பாலான சித்திரக்காரர்களுக்கு அவர்கள் வரையும் மனுச முகஜாடைகள் ஒன்றுபோல இருக்கம். ஒரு காதல் ஜோடியை வரைந்தால், பார்க்க உடன்பிறந்த அண்ணன் தங்கைபோலவே இருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *