கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 4,967 
 

பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு, சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா, அம்மாவின் கனவும் அது தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து

வயதில், நுரையீரலில் பிரச்னை வரவே வேலையிலிருந்து நின்று கொண்டுவிட்டார் அப்பா.

அது நான் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ரப்பர் கம்பெனியொன்றில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்த புதிது. திட்டமிட்டு எல்லாம் ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்னாலஜி படிக்கவில்லை. கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்க்கும் அளவிற்கு வீட்டில் வசதி இருக்கவில்லை. என் மதிப்பெண்ணுக்கு குரோம்பேட்டையிலிருந்த அரசுப் பொறியியல் கல்லூரியில் ரப்பர் பிரிவில் மட்டுமே இடம் கிடைத்தது. அம்மாவின் நகைகள் தான் கல்லூரி கட்டணமாக மாறின. சீராகப் படித்தேன். ஆனால் நான் படிப்பை முடித்த காலத்தில் கேம்பஸில் வேலை கிடைப்பது என்பது சென்னையில் குறைந்த வாடகையில் நல்ல வீடு கிடைப்பதைவிட, சிரமமான ஒரு விஷயமாக மாறிவிட்டிருந்தது. கல்லூரியை முடித்து ஒன்றரை வருடம் கழித்துதான் ஒரு சிறு கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது. அதுவும் புணேவில். அப்போது இருந்த மனநிலையில் சூடானில் வேலை கிடைத்திருந்தால் கூட போய் சேர்ந்திருப்பேன். புணேவில் விடுதி வாடகை, உணவு என செலவான பின் வீட்டிற்கு இரண்டாயிரம் மூன்றாயிரம் ரூபாய் தான் அனுப்ப முடிந்தது. அப்பா தன் பிரச்னைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வந்திருக்கிறார்.

ஐந்தாண்டு காலம் புணேவில் ஓட்டிய பின்தான் ஸ்ரீ பெரும்புதூர் கம்பெனியில் வேகன்சி இருப்பதாக நண்பர் சொன்னார். அதிக சம்பிரதாயங்கள் இல்லாமல் வேலை கிடைத்தது. எதிர்பார்த்த சம்பளம். ஆனால் பெரிதாக எதையும் சேமிக்க முடியவில்லை. அப்பாவிற்கு நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார். பல வருடம் லெதரை சுவாசித்ததன் விளைவு. அப்பாவின் சேமிப்புகள், என்னுடைய பர்சனல் லோன் எல்லாம் அப்பாவைக் குணப்படுத்திவிட்டன. ஆனால் ஆள் தான் சோர்ந்துவிட்டார். வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்வதில்லை. பெரும்பான்மையான நேரத்தை வீட்டின் பால்கனியில், தன்னுடைய பழைய ஈசி சேரிலேயே கழித்தார்.

என்னுடைய பதின்மூன்று வயதிலிருந்து கரைமா நகரில் இருந்த அந்த சிறுவீட்டில் தான் குடியிருந்து வந்தோம். முதல் மாடியில் நீட்டு வாக்கில் அமைந்த வீடு. உள்ளே நுழைந்ததும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட ஒரு பட்டாசாலை. அடுத்து கான்க்ரீட் கூரை கொண்ட பத்துக்கு பத்து அளவு கொண்ட நடு அறை. அதைக் கடந்தால் அதன் பாதி அளவில் ஓர் அடுப்படி. நடு அறையில் தான் டிவி இருந்தது. அதனால் கல்லூரிக் காலத்தில் அது என் அறை ஆகிப் போனது. அப்பாவும் அம்மாவும் ஷீட் அறையில் படுத்துக் கொள்வார்கள்.

வீட்டு உரிமையாளரான பானு அத்தை, அப்பாவையும் அம்மாவையும் தன்னுடன் பிறந்தவர்களாகவே பாவித்து வந்தாள். அதனாலேயே வாடகையைக் கூட்டுவதற்குக் கூட அதிகம் யோசிப்பாள். பானு அத்தையின் கணவர் கூட, அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது, பானு வீட்டுக்காரர் என்றே எல்லாரும் அழைப்பார்கள், அப்பா மீது அதிக மரியாதை வைத்திருந்தார். அவர்கள் வீட்டின் எல்லா முக்கிய முடிவுகளிலும் ஆலோசகராக அப்பா செயல்பட்டு வந்தார். தினமும் கூட்டோ பொரியலோ ஒரு சிறு கிண்ணத்தில் கீழே அத்தை வீட்டிற்குச் சென்றுவிடும். திரும்பிவரும் போது கிண்ணம் காலியாக வராது. அத்தையும் பதிலுக்கு ஏதாவது உணவை அல்லது பழத் துண்டுகளைப் போட்டு அனுப்புவாள். வீடுகள் தான் இரண்டு.

குடும்பம் ஒன்றுதான் என்பது போல் வாழ்ந்தோம். அத்தையின் இரண்டு பெண்களும் என்னோடு பிறக்காத தங்கைகள். தெருவில் பலரும் நாங்கள் உறவினர்கள் என்றே எண்ணினர். இந்த உறவு, அந்த சிறிய வீட்டை எங்களுக்கு மிகவும் பெரிதாக்கிக் காட்டியது. பல வருடம் அந்த வீட்டை விட்டுக் கிளம்பாமல் இருந்ததற்கு வேறு என்ன காரணம் வேண்டும்

ஆனாலும், வேலைக்கு சேர்ந்த பின், அவ்வப்போது சொந்த வீட்டுக் கனவு எங்களுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும். உண்ணும் போதும் உறங்கும் போதும் அதைப் பற்றி பேசிக் கொள்வோம்.

“இடம் வாங்கி வாஸ்து பார்த்து கட்டிக்கிலாம் இல்ல தம்பி” -அம்மா அப்பாவியாக வினவுவாள்.

“ஆவுற கதைய பேசுவியா மெட்ராஸ்ல இடம் வாங்க முடியுமா முதல்ல”அப்பாவும் சலிக்காமல் அம்மாவுக்குப் பதில் கொடுப்பார்.

“உங்ககிட்ட யார் வாயாடுறது”என்றவாறே அம்மா உள்ளறையில் படுத்துக் கொள்வாள். அம்மாவிற்கு கொஞ்சநாட்களாகவே வெரிகோஸ் பிரச்னை தீவிரமாகிவிட்டிருந்தது. அதிகம் நடக்கவோ வேலை செய்ய

வோ முடியவில்லை. அதனால் கட்டிலை நடு அறையில் போட்டு அம்மாவை அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டோம். எனக்கு டிவி பார்ப்பதில் ஏனோ ஆர்வம் குறைந்துவிட்டதால் அது நிரந்தரமாக அம்மாவின் அறையாகிப் போனது.

“கையைக் கடிக்காம ஒரு அபார்ட்மென்ட் வாங்கிக்கலாம் தம்பி. தூரமா இருந்தாலும் பரவால”என்பார் அப்பா.

எனக்கு பழைய வீடாக இருந்தாலும் தனி வீடு வாங்க வேண்டுமென்று ஆசை. நானும் அப்பாவும் பட்டாசாலையில் படுத்துக் கொண்டு எங்கே வீடு வாங்கலாம் என்று நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருப்போம். “வீடு’ தான் நாங்கள் விழித்திருக்கும் போது அதிகம் கண்ட கனவு. ஆனால் நடுத்தர வர்க்கத்தில், கனவுகள் சுங்கச் சாவடி வண்டிகள் போல் வரிசையாக காத்திருக்கின்றன. ஒரு கனவு அடுத்த கனவை ஓரம் கட்டிவிடுகிறது. அந்தந்த காலகட்டத்து தேவைகளே மேலோங்கி நிற்கின்றன. புதுவீடு பற்றிய யோசனைகளுக்கு திருமணப் பேச்சு தற்காலிக ஓய்வு கொடுத்தது.

பானு அத்தையின் இரண்டாவது பெண்ணின் திருமணத்திற்கு வந்த சிநேகிதி ஒருவர் தான் அம்மாவிடம் தன் சொந்தத்தில் ஒரு வரன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அப்படித் தான் அனு என் வாழ்வில் வந்தாள். அனுவின் குடும்பம் மிகச் சிறியது. அக்காவும் மாமாவும் பெங்களூரில் வசித்தனர். வீட்டில் அவளும் அவளுடைய அம்மாவும் மட்டும் தான். பி.காம் படித்திருந்தாள். திருமணச் செலவை அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் எங்கள் ஊர் பக்கம் திருமணத்தை மணமகன் வீட்டில் தான் நடத்துவார்களாம்.

“நம்ம முறைய நாம விட்டுக் கொடுக்க முடியுமா” இதுவும் அம்மாதான். அவசரத் தேவைக்கு கைகொடுக்கவே கோல்ட் லோனை கண்டுபிடித்திருக்கிறார்கள். மீண்டும் அம்மாவின் நகை வங்கிக்குப் போனது. திருமணத் தேதி குறிக்கப்பட்டது.

“தனி பெட் ரூம் வச்ச வீடாப் பாத்துருவோம்”அப்பா தான் முதலில் சொன்னார்.

“நானும் யோசிச்சேன்பா… கல்யாணம் ஆனதும் பாத்துக்கலாம்”

“அதெல்லாம் முடியாது. இந்தகாலத்து புள்ள மாதிரியா பேசுற… முதல்ல வீட்டப் பாரு”அப்பா துரிதப் படுத்தினார். எனக்குக் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லாத குறையை அப்பாதான் போக்கி வைக்கிறார். சுற்றுவட்டாரத்தில் வீடு தேட ஆரம்பித்தேன். பானு அத்தை தான் கண் கலங்கினாள்.

“என் புள்ளைங்க தான் கல்யாணம் ஆகிப் போச்சே… வேணும்னா கீழ் வீட்ட எடுத்துக்கோங்க… ஒன்னுக்கு ரெண்டு ரூம் இருக்கு… நான் மேல வந்திர்றேன்”என்று கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

“அதெல்லாம் சரிப்பட்டு வராது தங்கச்சி”அப்பா பானு அத்தையை தங்கச்சி என்றுதான் அழைப்பார்.

“ஒருவாட்டி மாடி எறுனாலே உனக்கு மூச்சு வாங்குது. மேல குடிவர்றதுலாம் நடக்குற காரியமா?”

அவள் சமாதானமாகவில்லை.

“எங்க போய்டப் போறோம். இங்க தான் பக்கத்துல இருப்போம்”அம்மா அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

கல்யாண தேதி நெருங்கிக் கொண்டிருந்ததால் துரிதமாக வீட்டைத் தேட வேண்டிய சூழல். மூன்று லட்சம் ஒத்திக்கு பொழிச்சலூரில் ஒரு வீடு கிடைத்தது. இதுவும் முதல் மாடிதான். அட்டாச்ட் பாத்ரூம் கொண்ட ஒரு பெட்ரூம் தனியாக இருந்தது. ஒரு வரவேற்பறை, ஒரு நடு அறை மற்றும் ஒரு கிச்சன். ஹவுஸ் ஓனர் ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார். எச்சில் கையில் காக்கா ஓட்டாத ஆசாமி என்று தெருவில் பேரெடுத்து இருந்தார். தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் தன் பெண்ணின் படிப்பிற்கு பீஸ் கட்டவே எங்களுக்கு வீட்டை ஒத்திக்கு கொடுத்திருக்கிறார் என்பது பின்தான் தெரிந்தது. இல்லையேல் வருடா வருடம் வாடகையை ஏற்றும் ஆசாமியாம் அவர். ஆனால் திருமண ஜோரில் அவரைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யவில்லை. மிக எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது.

வாழ்க்கை மிக வேகமாக ஓடும் போது சம்பிரதாயங்களும் வேகமாகின்றன. புதிய வீடு… புதிய வாழ்க்கை. அம்மா எல்லோரிடமும் பாசமாக பழகிய அப்பாவி. அந்த அப்பாவிக்கு மகளாக மாறிவிட்டிருந்தாள் அனு. எந்த ஆடம்பரமுமற்றவளாக இருந்தாள். மீண்டும் சொந்த வீட்டுக் கனவு எட்டிப் பார்ப்பதற்குள் வேறொரு கனவு எட்டிப் பார்த்தது. குழந்தை.

“மூன்று மாதம்”என்றாள் அனு, அதுவும் கிருஷ்ணர் ஜெயந்திக்கு அரிசி மாவில் கால் வரைந்து கொண்டே.

“எழுந்திரி நீ முதல்ல… இந்த வேலைலாம் நீ செய்யாத”என்று அம்மா அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள். அம்மாக்களால் மிக எளிதாக குழந்தையாக மாறிவிட முடிகிறது. அன்றுதான் அனுவின் முகத்தில் வெட்கத்தையும் சந்தோசத்தையும் ஒன்றாகப் பார்த்தேன்.

அம்மாவிற்கு எங்கிருந்துதான் தெம்பு வந்தது என்று தெரியவில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். காலை நான் எழுந்து வரும் போதே டிபன் கட்டி வைத்து விடுவாள். அனு நன்றாக தூங்கவேண்டும் என்று அம்மா உத்தரவு வேறு போட்டிருந்தாள். ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுவிட்டு, ஸ்கேன் எடுக்கச் சென்றோம்.

“ஊங்ற்ஹப் ல்ர்ப்ங் ய்ர்ற் ள்ங்ங்ய்’ என்று ரிப்போர்ட் வந்தது. மீண்டும் அடுத்த வாரம் வரச் சொன்னார்கள்.

மீண்டும் ஸ்கேன். ரிப்போர்ட்டைக் கையில் கொடுக்கும் போது,

“இன்னைக்கே டாக்டரைப் பாத்துருங்க” என்றார் ஸ்கேன் சென்டர் பெண்மணி.

“இது கர்ப்பம் தான். ஆனா ஹார்ட் பீட் இல்ல. இது நிக்காது டி&சி பண்ற மாதிரி இருக்கும்”

அந்தப் பெண் மருத்துவர் பட்டென்று போட்டு உடைத்தார். அனு கதறியவாறே என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் அவள் தலையை என் நெஞ்சில் அழுத்திக் கொண்டேன். ஆண்களால் வெளிப்படையாக அழுதிட முடிவதில்லை.

அனு ஆட்டோவில் அழுது கொண்டே வந்தாள். அம்மாவும் அப்பாவும் இயல்பாக இருக்க முயற்சி செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு மூன்று நாட்கள் யாரும் சரியாக உண்ணவோ உறங்கவோ இல்லை. நானும் விடுப்பெடுத்துக் கொண்டு அனுவுடனே இருந்தேன்.

“வேலைக்குப் போனா அவ மனசு மாறும்” – இந்த முறையும் அப்பாதான் முதலில் பேசினார்.

அடுத்த வாரமே அனு மீனம்பாக்கத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். அப்பா சொன்னது போல ஓரிரு மாதங்களில் அவள் இயல்பாக மாறியிருந்தாள். “டி&சி செய்திருப்பதால், ஒரு வருடத்திற்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காதீர்கள்” என்றார் டாக்டர். எந்த குழப்பமுமின்றி அடுத்த இரண்டு வருடங்கள் ஓடின.

ஏப்ரலில் அலுவலக ஆடிட் நிமித்தமாக அனுவின் மாமாவும், அக்காவும் சென்னை வந்திருந்தனர். எங்களுக்குத் திருமணமான மூன்றரை வருடத்தில் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவது அதுதான் முதல் முறை. காலை வந்ததிலிருந்து அவர் வீட்டைப் பார்வையாலேயே எடைபோட்டபடி இருந்தார். அப்போதே புரிந்துவிட்டது, அவருக்கு இரவில் எங்கே தங்குவது என்பதே கவலை என்று. முன்பெல்லாம் வரவேற்க நம் மனம் பெரிதாக இருந்தால் போதும், வீட்டிற்கு நிறைய விருந்தாளிகள் வந்து போவார்கள். இப்போதெல்லாம் வரவேற்பறை பெரிதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். விருந்தாளிகள் தங்குவதற்கு தனி அறை இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. வீடு பெரிதாக இருந்தால்தான் எல்லோருக்கும் பிடிக்கிறது.

நான் வேலையிலிருந்து திரும்பி வந்த போது, அனுவின் அக்காவும் மாமாவும் எனக்காக காத்துக் கொண்டிருந்தனர். பக்கத்தில் ட்ராவல் பேக் தயார் நிலையில் இருந்தது.

“சரி போய்ட்டு வரோம் ப்ரதர்”என்றார்

“நாளைக்கு தான ட்ரைன்”என்றேன் ஆச்சரியமாக .

“என் காலேஜ் மேட் ஒருத்தன் கூப்ட்டுகிட்டே இருக்கான் பிரதர். நம்மலால தான் சென்னை பக்கமே வர முடியறது இல்லயே… அதான் அவன் வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு அப்டியே ட்ரைன் ஏறிடலாம்னு இருக்கோம்” – என்ன பேசவேண்டும் என ஒத்திகைப் பார்த்தவரைப் போல் பேசினார். நான் அனுவின் முகத்தைப் பார்த்தேன். எந்த சலனமும் இல்லை. அவள் அவர் சொன்னதை எல்லாம் நம்பியிருக்கக் கூடும்.

அல்லது எனக்காக எதுவும் நடக்காதவளைப் போல் இருக்கிறாள்.

புக் செய்த ஆட்டோ வந்தது. ஏறுவதற்கு முன்பு, “எங்க வீட்டுக்கு வரணும். இருந்து தங்கிட்டு போற மாதிரி வரணும்” என்று அழுத்தி சொல்லிவிட்டு கிளம்பினார் மாமா.

அப்பாவும் அம்மாவும் உறங்கிப் போனார்கள். அனு மொபைலில் ஏதோ சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தூங்கலையாப்பா?”என்றேன். புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

நானே தொடர்ந்து பேசினேன்.

“அக்கா இருப்பாங்கன்னு நினச்சேன்”

“அக்காக்கு இருக்கணும்னு ஆசை தான். மாமா தான் பிரெண்டப் பாக்கணும்னு ஓடுறார்”

“நாம ஒரு பெரிய வீட்டுக்கு மாறிட்டா மாமா நமக்கும் பிரெண்ட் ஆகிடுவார்” சொல்லிவிட்டு நான் சிரித்தேன். அனுவும் சிரித்தாள்.

“நமக்கு தான் இப்ப எந்த கமிட்மெண்ட்டும் இல்லையே. பேசாம நாம ஏன் ஒரு வீடு வாங்கக் கூடாது” இருவரின் மனதிலிருந்த எண்ணமும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டது.

பொழிச்சலூர் பகுதியிலேயே ஓர் அபார்ட்மென்ட் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அனு. அப்பாவும் அம்மாவும் அங்கேயே இருந்து பழகிவிட்டதால் அவர்களுக்கு சவுகரியமாக இருக்கும் என்றாள்.

அப்பா, ” எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை, முதலில் பட்ஜெட்டை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார். வாசல்படி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும் என்பதைத் தவிர அம்மாவுக்கு பெரிய அபிப்ராயம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் நான் தனிவீடு தான் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். எட்டு மாத காலங்கள். எல்லா ப்ரோக்கர்களும், ரெண்டு பெர்சென்ட்டிலேயே குறியாக இருந்தனர். அவர்கள் காண்பித்த இடங்களில் பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. சிலர் பல்லாவரம் அருகே என்று சொல்லி, பூந்தமல்லி வரை அழைத்துச் சென்றனர்.

இறுதியாக வந்த ஒரு வயதான ப்ரோக்கர் மட்டும் பாந்துவமாக பேசினார்.

“கமிஷன் மட்டும் முக்கியம் இல்ல சார்… வீடு வாங்குற நீங்களும் சந்தோசமா இருக்கணும்”என்றார்.

“அகரம் தென்ல ஒரு வீடு இருக்கு பாக்குறீங்களா?”

“உனக்கு ஆபீஸ்க்கு தூரமாச்சேப்பா”அனு யோசித்தாள்.

“என்ன தூரம். சேர் ஆட்டோ ஏறுனா தாம்பரம் வந்துரலாம். அங்க இருந்து கம்பெனி பஸ் இருக்கு. இடத்தைப் பாப்போம்”

பார்த்ததும் வீடு பிடித்துப் போனது. பதினைந்து வருட பழைய வீடுதான் என்றாலும் நான் எதிர்ப்பார்த்ததைப் போல 3பிஹெச்கே வீடு. 750 சதுர அடி மனையில், நடுநாயகமாக கீழ் தளம் மட்டுமாக அமைந்த கிழக்குப் பார்த்த அழகான வீடு. அறைகள் மிகப் பெரிதாக இருந்தன என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு போதுமானதாகப் பட்டது. பீரோ மற்றும் இதர சாமான்களை ஓர் அறையில் வைத்துக் கொண்டால், மற்ற இரண்டு அறைகளை பெட்ரூமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“வாழ மரம்லாம் இருக்குடா”அம்மா சந்தோசப்பட்டாள்.

“தெருவும் பெருசா இருக்குல”அப்பாவிற்கும் பிடித்திருந்தது.

“அதான் சார். அம்பத்தி எட்டு சொல்றாங்க. பேசி அம்பத்தி அஞ்சுக்கு முடிக்கலாம்” ப்ரோக்கர் சொன்னார்.

பதிவு செலவு எல்லாவற்றையும் சேர்த்தால் அறுபத்தி இரண்டு லட்சம் வந்து நிற்கும். நாங்கள் திட்டமிட்டதை விட சில லட்சங்கள் அதிகம் ஆகிறது.

“சமாளிக்கலாம் டா. எனக்கு ஆயிரம் ரூபா பாஸ் தான் செலவு. மிச்சம் பதினாலாயிரத்தி ஐநூறை அப்படியே கொடுத்துடுறேன். உன்னால எவ்ளோ ஈ.எம்.ஐ கட்டமுடியும்னு யோசி”

அப்பா அம்மாவின் மருத்துவ காப்பீடு, இதர அத்தியாவசியச் செலவுகள் எல்லாம் போக இருபத்தைந்தாயிரம் வரை கட்டலாம்.

“பத்து பெர்சன்ட் மார்ஜின். 49 லட்சம் வரை லோன் கிடைக்கும். ப்ராபர்ட்டி மதிப்ப வச்சு தான் பைனல் அமெளன்ட் சொல்ல முடியும்” என்று சொன்ன வங்கி மேலாளர், கணினியில் ஏதோ கணக்குப் போட்டவராய்,

“42000 ரூபாய் கிட்ட ஈ. எம். ஐ கட்டுற மாதிரி இருக்கும்” என்றார். யோசித்தேன். மற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சமாளித்துவிடலாம் என்றே தோன்றியது.

“நீங்க ரெண்டுபேருமே பிரைவேட் ஜாப்ங்குறதுனால அதிக பட்சம் 25 இயர்ஸ் ரீபேமண்ட் தரலாம்”

இருபத்தி ஐந்து வருடங்கள் ஈ.எம்.ஐ கட்டிக் கொண்டே இருந்தால் தான் வாங்கிய கடன் அடையுமாம். சொந்த வீடு வாங்கும் கனவு ஒரு தலைமுறையின் உழைப்பை கூலியாகக் கேட்கிறது. இருந்தாலும், கனவு நினைவாகிறதே என்ற சந்தோசத்தில்,

“ஓகே சார்” என்றேன்

“மார்ஜின் ரெடி பண்ணிருங்க” என்றார் மேலாளர்.

அம்மா தன் பதினைந்து சவரத்தை எடுத்துக் கொடுத்தாள்.

“இத வித்திருடா. வச்சிருந்தா உங்களுக்குத்தான் கொடுத்துருப்பேன். அவசரத்துக்கு பயன்படாத நகை என்ன நகை?”என்றாள். கூடுதலாக அனுவின் நகையையும் அடகு வைத்தோம். கைவசம் இருந்த சேமிப்பு, ஒத்திக்கு கொடுத்த காசு வந்ததும் திருப்பி தருகிறேன் என்று சொல்லி அலுவலக நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கிய பணம் என எல்லாம் சேர்ந்து கொண்டது.

வீடு எங்களுக்கே எங்களுக்கானது.

கிரஹபிரேவசத்திற்கு அனுவின் அக்காவும் மாமாவும் பிள்ளைகளோடு வந்தனர். காலாண்டு விடுமுறை என்பதால் ஒருவாரம் தங்கிவிட்டுத் தான் போயினர். பானு அத்தையும், இரண்டு தங்கைகளும் குடும்பத்தோடு வந்திருந்தனர். எல்லாருக்கும் வீடு பிடித்திருந்தது. வீட்டை இன்ஸ்பெக்ஷன் செய்ய வந்த வங்கி மேலாளர் கூட, “அறுபது லட்சத்துக்கு குறைவா இந்த வீட வாங்க முடியாது. யூ ஆர் வெரி வெரி லக்கி” என்றார்.

புது வீடு நிறைய சந்தோசங்களை கொண்டு வந்தது. கூடவே, வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களையும். லோனில் வீட்டை வாங்கிவிட்டால் பார்க்கும் எல்லாமே ஈ.எம்.ஐ-களாகத் தெரியும். அதனால் தேவையில்லாத செலவு ஒவ்வொன்றையும் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் நமக்கென்று ஒரு வீடு இருக்கிறது எனும் போது எதுவும் குறையாகத் தெரியவில்லை. புது வீட்டில் ஆறேழு மாத காலம் கடந்ததும், அடுத்த நல்ல செய்தி தேடி வந்தது.

அனு மறுபடியும் கருவுற்றிருந்தாள்.

“புது வீட்டோட ராசி”என்றாள் அம்மா.

“இந்த முறை வேறொரு டாக்டரிடம் போகலாம்” என்றாள் அனு. தாம்பரத்தில் இருந்த பிரபல பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர் நல்ல செய்தியை உறுதிப்படுத்திவிட்டு, தொடர்ந்து பேசினார்.

“கொஞ்சம் வீக்கா இருக்க. லாஸ்ட் டைம் எதனால ப்ராப்லம் ஆச்சுன்னு தெரில. குழந்தை பொறக்குற வரைக்கும் முடிஞ்சவரை பெட் ரெஸ்ட்ல இரு”என்றார்.

“இன்னும் சர்வீஸ் கன்ஃபார்ம் ஆகலபா. சோ அவ்ளோ நாள்லாம் லீவ் தர மாட்டாங்க”அனு பதட்டமாகப் பேசினாள். இரவு உணவுக்காக ஹோட்டலில் அமர்ந்திருந்தோம்.

“என்ன பண்றதுன்னு தெரியலயே”அவள் தனக்குத் தானே சொல்லிக் கொள்பவளாக பேசினாள். அவள் குழந்தைகளை அதிகம் விரும்புகிறாள் என்பது எனக்குத் தெரியும். தன் அக்காவின் குழந்தைகள் வந்திருந்த போது கூட, “குழந்தைங்க இருந்தா வீடு எவ்ளோ அழகா ஆகிடுது” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவள்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல, வேலைய விட்டுடு”என்றேன். அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“யோசிச்சிதான் சொல்றியாப்பா… இப்ப விட்டா பாப்பாலாம் வளர்ந்ததுக்கு அப்பறம் தான் வேலைக்குப் போக முடியும்”

அதற்கும் தலை அசைத்தேன்.

“ஈ.எம்.ஐ” என்றாள்.

“எல்லாம் நான் சமாளிச்சுக்கிறேன்பா. நீ முதல்ல சாப்புடு”

அவள் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். ஆனால் உண்மையிலேயே என்னால் ஓரிரு மாதங்களுக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. டாக்டர் கடந்த முறைப் போல் எதுவும் துரதிஷ்டவசமாக நடந்துவிடாமல் இருக்க, நாள்தோறும் ஏதோ ஒருவகை சோடியம் ஊசி போட வேண்டுமென்றார்.

“குழந்தையோட ஹார்ட் பீட்டுக்கு இது ரொம்ப முக்கியம். லாஸ்ட் மந்த்வரை கண்டின்யூ பண்ணனும்”

இன்னும் ஏராளமான சப்ளிமெண்ட் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். மாதாந்திர மருத்துவச் செலவே பாதி ஈ.எம்.ஐயை எடுத்துக் கொண்டது. நாட்டின் எதிர்பாராத பொருளாதார மந்தநிலை, எதிர்பார்த்த பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் இல்லாமல் செய்துவிட்டது. அலுவலகத்தில் வேலையை விட்டு அனுப்பாமல் இருந்தால் தேவலாம் என்ற சூழல். வங்கியிலிருந்து தொடர்ந்து போன். கொஞ்சம் பணத்தை மட்டும் மூன்று மாதங்கள் கட்டினேன். மேலாளர் நேரிலேயே வரப்போவதாகச் சொன்னார். நானே வருகிறேன் என்று சொல்லிவிட்டு மாலையில் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

“லோன் வாங்கி ஒன் இயர் கூட ஆகல. அதுக்குள்ள இப்படி இர்ரெகுலரா இருக்கீங்க?”

அவர் கோபமாக நிறைய பேசிக் கொண்டே போனார்.

“உங்க லோன் வாராக்கடன் ஆச்சுன்னா உங்களால எங்கயுமே லோன் வாங்க முடியாது”

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இறுதியாக அவரே ஒரு யோசனை சொன்னார். யோசிக்க அவகாசம் வேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

இருட்டிவிட்டிருந்தது. அப்பா ஈசி சேரில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். எந்த கவலையுமற்ற நிம்மதியான நிலையை அவர் அடைந்திருந்தார். உள்ளே அனு சிரிக்கும் சப்தம் கேட்டது. அம்மா ஏதோ பேசுவதும் கேட்டது. அறையினுள் நுழைந்தேன்.

“உன் புள்ள வேலைய ஆரம்பிச்சிருக்கான்”அம்மா சொன்னாள்.

“வயித்துக்குள்ள கிச்சிகிச்சு மூட்டுற மாதிரி இருக்கு”அனு சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள். அம்மாவும் சிரித்தவாறே அறையை விட்டு வெளியேறினாள். இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அம்மா அதிக சந்தோசமாக இருப்பது போல் தோன்றியது.

அனுவிடம், “டாக்டர் என்ன சொன்னாங்க”என்றேன்.

“இருபத்தியேழாந்தேதி அனாமலி ஸ்கேன் எடுக்க வர சொல்லிருக்காங்க. நீ ஆபீஸ்க்கு லீவ் போட்டுருப்பா”

நான் “சரி’ என்று தலையசைத்தேன். ஆனால் அந்த நாளில் அம்மாவை அவளோடு அனுப்பிவிட்டு நான் வேறோர் இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

சேலையூர் சார் பதிவாளர் அலுவலகம். கடந்த முறையைவிட இப்போது இன்னும் துரிதமாக வந்தவேலை முடிந்தது. பத்திரத்தில் கையெழுத்து இட்டுவிட்டு பார்கிங்கில் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து தான் வங்கி மேலாளர் வெளியே வந்தார்.

“அன்னைக்கு பேசுனத மனசுல வச்சுக்குலையே”

“உங்க வேலைய தான செய்றீங்க. பரவால சார்”

அவர் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மேலும் பேசினார்.

“வாராக்கடன் ஆகியிருந்துச்சுனா எங்க லோன் வந்தா போதும்னு வீட்ட வித்திருப்போம். உங்களுக்கு தேவை இல்லாத நஷ்டம். இப்ப நீங்களே வித்ததுனால நீங்க சொன்ன விலைக்கு விக்க முடிஞ்சிச்சு”என்றார்.

கனவுகளுக்கு ஏது விலை நான் அமைதியாக நின்றேன்.

“உங்களுக்கு லாபம் இல்லனாலும் நிச்சயம் நஷ்டமாகலனு தெரியும்”என்றார். மீண்டும் என்னால் புன்னகை மட்டுமே செய்ய முடிந்தது.

“வீட்ல யாருக்கும் தெரியாது இல்ல?”

நான் “இல்லை’ என்று தலையசைத்தேன். வீடு என் பெயரில் மட்டும் பதிவாகி இருந்ததால் வீட்டில் யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. மற்றதை காலம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டேன்.

“அன்னைக்கு நானும் ராஜேஷ் சாரும் வீட்ட பார்க்க வந்த போது உங்க பாதர் என்ன ஏதுன்னு கேட்டார். நான் ரொட்டின் இன்ஸ்பெக்ஷன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்” எனக்கு ஏதோ பெரிய உதவி செய்துவிட்ட சந்தோசம் அவர் முகத்தில் தெரிந்தது.

“ஒன்னும் வொரி பண்ணாதீங்க. நீங்க நிச்சயம் இதை விட நல்ல வீடு வாங்குவீங்க. அப்ப நம்ம பேங்க்லயே லோன் பண்ணிக்கலாம்” அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே ராஜேஷ் வந்தார். ப்ளூ ஜீன்ஸ், வெள்ளை நிற லினன் சட்டை அணிந்திருந்தார். என்னை விட நான்கைந்து வயது சிறியவர்.

“மேனேஜர் சார் எல்லாம் சொன்னார் ஜி. நோ ப்ராப்ளம். இன்வெஸ்ட்மென்ட் பர்போஸ்க்கு தான் இந்த ப்ராபர்ட்டி வாங்கினேன். எனக்கு சோழிங்கநல்லூர்ல ஒரு பிளாட் இருக்கு. அது தான் ஆபிஸூக்குப் பக்கம். சோ, ஒன் இயர் என்ன, நீங்க எத்தனை வருஷம் வேணாலும் அங்க இருங்க. ரென்ட்ட என் அக்கவுண்ட்ல போட்டா போதும்”என்று சொல்லிவிட்டு தன் காரை நோக்கி நகர்ந்தார்.

“பாப்போம் சார்” மேலாளரும் அவர் பின்னாடியே நடந்தார்.

நான் ஆட்டோ பிடித்து ஸ்கேன் சென்டருக்கு சென்றேன். ஸ்கேன் அறை வாசலில் அம்மாவும் அனுவும் அமர்ந்திருந்தார்கள். அனு சந்தோசமாகப் பேசினாள்.

“இங்க பாருப்பா உன் புள்ள ஸ்கேன்ல அகப்படவே மாட்டேங்குதான். குப்புற படுத்துகிட்டு முகத்த காட்ட மாட்டேங்குதுன்னு டாக்டர் கிண்டல் பண்றாரு. அதான் குழந்தை திரும்புறவரை வெயிட் பண்ண சொல்லிருக்காரு”

கொஞ்ச நேரத்தில் மீண்டும் அனு உள்ளே போனாள். பத்து நிமிடம் கழித்து ஒரு பெண் உள்ளிருந்து வந்து என்னையும் அழைத்தாள். உள்ளே அனு படுத்திருந்தாள். அவள் வயிற்றில் ஒரு கருவியை வைத்து நகர்த்தியவாறே, ஒரு உயரமான ஆண் டாக்டர் கணினியை சுட்டிக் காண்பித்து பேசினார்.

“இது முதுகு. இது டோஸ்”

“இது கை. இது முகம்”

நான் கணினித் திரையைப் பார்த்தேன். எங்களின் குழந்தை திரையில் அசைவதைக் கவனித்தேன். மனதிலிருந்த குழப்பங்கள் அனைத்தும் அந்த நொடியில் மறைந்து போயின.

“க்ரோத் நார்மலா இருக்கு” டாக்டர் சொல்லிவிட்டு, கணினியில் சில பொத்தான்களை அழுத்தினார். திரை ஜூம் ஆகியது.

“இதான் ஹார்ட்” என்று சொல்லியவாறே மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தினார். திரையில் தெரிந்த

இதயம் சிகப்பாக ஹை லைட் ஆகியது.

வாழ்க்கை அழகானது. சிதையும் ஏதோ ஒரு கனவு வாழ்வின் சமநிலையைக் குலைத்தாலும், வேறொரு கனவை சாத்தியப்படுத்துவதன் மூலம், வாழ்க்கை தன்னைத்தானே சமன் செய்து கொள்கிறது. நான் என் அனுவைப் பார்த்தேன். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். நான் மீண்டும் திரையைப் பார்த்தேன்.

ஒரு சிறு இதயம் அமைதியாக துடித்துக் கொண்டு இருந்தது.

– July 2021, தினமணி-சிவசங்கரி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை, தினமணி கதிரில் வெளியாகி இருக்கிறது.

Print Friendly, PDF & Email

1 thought on “3 பி.ஹெச்.கே வீடு

  1. 3 பி.ஹெச்.கே.வீடுயதார்த்தமான கதை, ஒரு சாமானியனின் சொந்த வீடு கனவை வலிகளோடு சொல்லியிருக்கிறார். “நடுத்தர வர்க்கத்தில் கனவுகள் சுங்கச்சாவடிகளில் வண்டிகள் வரிசையாக காத்திருப்பது போல் காத்திருக்கின்றன”ஒரு கனவு அடுத்த கனவை ஓரம் கட்டி விடுகிறது. அந்தந்த கால கட்ட தேவைகளே மேலோங்கி நிற்கிறது…! கதையை படித்து முடித்த பின் மனது பாரமாகி போனது.. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *