தூங்கும் நாகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,253 
 

கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்க்க, பார்க்க, எனக்கு வெறுப்பு தட்டியது. இயலாமை, இறுக்கத்தை கூட்டியது. உள்ளுக்குள் அப்பியிருந்த சோகம், மெல்லிய வார்த்தைகளாய் கேவலுடன் வெளிப்பட்டது.
“டேய்! என்னை ஏன்டா ஒருத்தி கூட லவ்பண்ண மாட்டேங்கிறா?’
நான் சொன்னதை, அவன் அப்படியே வழிமொழிந்தான். சத்தமில்லாமல் அழுதேன்; அவனும், என்னுடன் சேர்ந்து அழுதான்.
“நல்லா படிச்சும், பாட்டு பாடினால் மட்டும் போதாது மாமு… லவ்வுக்கான மேட்டர் உங்கிட்டே எதுவும் இல்லையே, என்ன பண்ணறது?’
மனசு சொன்னது; அது உண்மை தான்.
தூங்கும் நாகம்பட்டத்தின் குறுக்கு குச்சி மாதிரி வளைந்து, குறுகி, வலுவிழந்து தொங்கும் தோள்கள். முகம் முழுக்கவே வியாபித்திருக்கும் அகண்டு, விரிந்த போண்டா மூக்கு; அப்பா எனக்கு கொடுத்தது. தேங்காய் உறுமட்டை மாதிரி, படிய வாரிய தலை முடி. கறுப்பிலும், சிவப்பிலும் சேர்க்க முடியாத ஒரு நிறம். போனசாக ஒரு கண்ணாடி வேறு. சரி, உயரமாவது உண்டா என்றால், அதுவும் இல்லை. சராசரிக்கும் குறைவாக, ஐந்தடி, இரண்டு அங்குலம்.
கண்ணாடியை ஓங்கி ஒரு உதைவிட்டேன்.
“”சேகர் கண்ணா… உள்ள என்னடா சத்தம்?”
பாசமுள்ள டிபிகல் அம்மா. கட்டை, குட்டை, அம்மா. எங்கே வெளியே கிளம்பினாலும், என் விருப்பத்தை துளி கூட கண்டு கொள்ளாமல், நெற்றியில் விபூதியை கோணலாக இட்டுவிடும் மண்டு அம்மா.
“சேகரு! உன்னோட ரூட்டு எங்கயோ போறாப் பல கேள்விப்பட்டேன்… என்ன உண்மையா?’
கார்த்திக் அப்படித்தான் அன்று கண் சிமிட்டி ஆரம்பித்தான். கார்த்திக் முரடன்; அவனை ஒண்ணும் சொல்ல முடியாது.
“ஆமாம் கார்த்திக்! நான் ஸ்வேதாவை லவ் பண்றேன். நீங்கெல்லாம்…’
“மாம்ஸ்! என்ன கொடு மைடா? நம்ம ஸ்வேதா, சேகர் ஆளான்டா! ஏன்டா டேய்… உனக்கே அடுக்குமாடா… அவ என்னா கலரு…’
கார்த்திக் கொடுத்த தைரியத்தில் என் மீது கிண்டலை தொடர்ந்த ஒல்லிப்பிச்சான் ஸ்ரீநிவாஸ், அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அடுத்து வந்தவை தான் என்னை உசுப்பிவிட்டது.
“சப்பை சேகரு… நீ பேசாம, அந்த பக் டீத் ஈஸ்வரியையே லவ்விக்கடா… நீயும் மழைல நனைஞ்ச காக்கா மாதிரி தான் இருக்கே. ஒர்க்கவுட் ஆகும்ன்னு தான் நெனைக்கிறேன்…’
– சோடா புட்டியை திறந்த மாதிரி, ஸ்ரீநிவாஸ் கெக்கலித்தான். மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். மாறி, மாறி கலாய்த்தனர். என் பொறுமை எல்லை மீறி யது. அதுவரை என்னுள் சுருண்டு படுத்திருந்த கருநாகம் சீறியெழுந்தது. ஆத்திரம் முழுவதையும்; வலது கை நுனிக்கு கொண்டு வந்து, ஸ்ரீநிவாஸ் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டேன்.
யாரும் எதிர்பார்க்க வில்லை. சில்லி மூக்கு உடைந்து, ரத்தம் கொட் டியது. பதிலுக்கு அவன் என் தொடையில் ஷூ காலால் உதைக்க, நான் நிலை குலைந்து விழுந் ததில், முன் மண்டையில் கல் குத்தி ரத்தம் வந்தது. கட்டிப்புரண்டு சண்டை போட்டோம்; கஷ்டப் பட்டு பிரித்துவிட்டனர். அப்போதே எனக்குள் ஒரு வன்மம் குடி கொண்டது.
“பாருங்கடா! இன்னும் ஆறே மாசத்துல, இந்த ஸ்வேதா என்னை லவ் பண்ணல, நான் சேகர் இல்லைடா!’
– முன் பின் யோசிக்காமல், தன் நிலையறி யாமல், உணர்ச்சி பூர்வமாக எடுத்த முடிவு அது என்று இப்போது புரிகிறது.
செமஸ்டர், கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லா வற்றையும் ஏற கட்டினேன். ஸ்வேதாவை இம்ப்ரஸ் செய்ய, நாயாய் பேயாய் சுற்றினேன். ஒரு மாசத்தில், லேசாக பிடி கிடைத்தது. ஸ்வேதா, சென்னை வருவதற்கு முன், புதுடில்லியில் இருந்திருக்கிறாள். அதனால், அவளுக்கு
இந்தி பாடல்கள் அதிகம் பிடிக்கும்; அதுவும், குலாம் அலியின் கஜல் என்றால், அவளுக்கு உயிர் என்ற தகவல் கிடைத்தது.
மிக ரகசியமாக வைத்திருந்து, எங்கள் காலேஜ் நிகழ்ச்சியில், “சுப்கே சுப்கே ராத் தின்…’ என்ற குலாம் அலியின் பழைய கஜலை திடீரென பாடினேன். பாடுவதற்கு முன்னால், அந்த கஜல் வரிகளை தமிழ் கவிதையாக படித்தேன்.
“செம பிளேடு மச்சி! பாஸ்ட் பீட்ல ஒண்ணை எடுத்து விடாம இப்படி கவுத்திட்டியே… ஆனா ஒண்ணு… நீ ஸ்வேதாவுக்கு ப்ராக்கெட் போடறதுக்காக பாடினது மாதிரி இருந்துச்சி…’ என்றான் கார்த்திக்.
எதிர்பார்த்த மாதிரியே நடந்தது. அறுபது நாட்களின் அயராத உழைப்புக்கு, அன்று கை மேல் பலன். ஸ்வேதா என்னிடம் கை குலுக்கியதோடு மட்டுமில்லாமல், என் முன்னால் ஒளிர்ந்ததை, கண் கொள்ளாமல் ரசித்தேன். அங்கேயே, பூபேந்திரனின் ஒரு கஜலின் தமிழாக்க கவிதையை சொல்லி, என் அதிமேதாவித்தனத்தை காட்டிக் கொண்டேன்.
பிறகு நிறைய பேசினோம். முகமது ரபியின் ஒரே ஒரு பாடலுக்காக, மியூசிக் வேர்ல்டு, ரிச்சி ஸ்ட்ரீட் என்று அலையாய் அலைந்தேன். ஏதோ பேச்சு வாக்கில், “÷ஷாபா முட்கல்’ என்று அவள் ஒருமுறை சொல்லி வைக்க, அந்த பாடகியை பற்றிய தகவல்களை, விரல் நுனிக்கு கொண்டு வந்தேன்.
அவளுக்கு எந்தெந்த பாடங்களில் சந்தேகம் வந்ததோ, அதை மட்டுமே படித்தேன்.
“சேகர்… நீ க்வாண்டம் தியரிக்கு கொடுத்த எக்ஸ்ப்ளனேஷன் மாதிரி, நம்ம புரொபசர் கூட கொடுக்கலை தெரியுமா! ஸ்கூல்ல கூட, ஏனோதானோன்னு க்யூ தியரியை படிச்சிருக் கேன். எப்படி சேகர் இவ்வளவு டெப்தோட படிச்சு வைச்சிருக்கே? எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. யு ஆர் கிரேட்!’ என்றாள்.
இந்த மாதிரி நிறைய சொல்லியிருக்கிறாள். இதையெல்லாம் வைத்து, அவள் என்னை காதலிப்பாள் என்று நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
வேகமாக ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது, புயல் மாதிரி, ஸ்வேதாவை கொத்திக் கொண்டு போனான் பிரபாகர் எனும் ஒரு அயோக்கியன். அவனும் எங்க காலேஜ் தான். எங்களை விட இரண்டு வருடம் சீனியர். இந்த வருடம் கேம்பஸ் இன்டர்வியூவில், அவனுக்கு விப்ரோவில் வேலை கிடைத்திருக்கிறது.
என்னிடம் எதெல்லாம் மைனசோ, அதெல்லாம் அவனிடம் ப்ள்ஸ்சோ ப்ளஸ். படிப்பாவது, பாட்டாவது? நான் மிக எளிதாக தோற்றுப் போனேன். அதன் பின், எல்லாமே என் விருப்பத்துக்கு நேர் மாறாக நடந்தது. பிரபாகருக்கு, தமிழே வராது. இந்த அழகில், அவனுக்கு கவிதை எழுத வேண்டுமாம். என்னிடமே வந்து கேட்டான். நெஞ்செல்லாம் எரிந்தது. அவனை அந்த நொடியிலேயே குத்தி கொன்று விடலாமா என்ற எண்ணம், என் இயலாமையில் புதைந்து போயிற்று.
“பத்து வரி கவிதைக்கு ஐநூறு ரூபா… ஓ.கே.,வா?’ என்றேன்.
எனக்கும் சில பணத்தேவைகள் இருந்தன. சரியென்றான். நிறைய சம்பாதித்து, அதில் திருப்திபட்டுக் கொண்டேன்.
“நீ காதலிக்கும் ஆளில்லை; ஆனால், காதல் வியாபாரி…’ என்று மனசு சொன்னது. எனக்கே, என் நடவடிக்கைகள் விசித்தரமாக பட்டன.
ஒருமுறை ஸ்வேதாவும், கண்ணீர் மல்க தன் காதல் கதையைச் சொன்னாள். மறுபடியும் நெஞ்சுக்குள் நெருப்பு; உள்ளுக்குள்ளே வெந்து போனேன். ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்படியே அவளை கீழே தள்ளி… வேண்டாம்… உடலுக்குள் சரசரவென ஊர்ந்த கருநாகம், மீண்டும் சுருண்டு கொண்டது. போலியான புன்னகையுடன், அவளுக்கும் சில ஐடியாக்கள் சொன்னேன், பீஸ் வாங்காமல்.
நேற்று, ரெண்டு பேரும் சேர்ந்து வந்து, ஒரு குண்டை தூக்கி போட்டனர். இருவரும் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டனராம். என் கையை பிடித்து கெஞ்சி என்னிடம் உதவி கேட்டாள் ஸ்வேதா.
“நீங்க ரெண்டு பேரும் மேஜர் தானே? மொதல்ல ஒரு கோவில்ல கல்யாணம் செஞ்சுக்குங்க… அப்புறம் கல்யாணத்தை ரிஜிஸ்டர் செஞ்சுக்குங்க…’
“அதில்லை சேகர்… எங்க அப்பாவ நெனைச்சாதான் பயமா இருக்கு. அவரை எதிர்த்துகிட்டா, சல்லிக்காசு இல்லாம நடு ரோட்டுல நிக்க வேண்டி வரும். எனக்கு வேலை கிடைச்சு, கைல காசு பார்க்கறதுக்கு, குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும். ஸ்வேதாவோ, இப்பவே கல்யாணம்கிறா!’
“சரியான பயந்தாங்கொள்ளிடா நீ… உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு? ஸ்வேதா… பார்த்தியா உன் லைப் பார்ட்னரை?’
எனக்குள் உற்சாகம் பொங்கியது.
“டேய், டேய்… என்னடா நம்மளேயே போட்டுக் கொடுக்கற… ஐடியா சொல்லு டான்னா…’
“அப்ப ஒண்ணு செய்யுங்க… கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரிஜிஸ்ட்ரேஷனும் செஞ்சுடுங்க. அலைபாயுதே சினிமா ஸ்டைல்ல, வீட்டுல சொல்லாதீங்க. வேலை கிடைச்சி செட்டில் ஆனதும், வீட்டில சொல்லுங்க. சம்மதம் கிடைச்சதும், ரெண்டாவது தடவையா கல்யாணம் செஞ்சுக்குங்களேன்!’
“இதுக்குதான்… இதுக்குதான் சேகர் கிட்டே ஐடியா கேக்கணும்கிறது…’ ரெண்டு பேரும் என்னை பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்தி, கை குலுக்கி மகிழ்ந்தனர்.
இன்னும் இரண்டு மணி நேரத்தில், இருவருக்கும் திருமணம். சட்டை, பேன்ட் போட்டு, ரூமை விட்டு வெளியே வந்தேன். ஷூ லேசை கட்டிக் கொண்டிருக்கும் போது, அம்மா வழக்கம் போல் விபூதி பூசிவிட்டாள்.
வெளியே வந்து, பஸ் பிடித்து, கோடம்பாக்கத்தில் இறங்கிக் கொண்டேன். பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலேயே ஒரு டெலிபோன் பூத்.
முதலில், ஸ்வேதா அப்பாவுக்கு ஒரு போன்…
“”சார்… உங்க பொண்ணுக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல, வடபழனி கோவில்ல திருட்டு கல்யாணமாமே… தெரியாதா?”
கட். அடுத்த போன் பிரபாகர் வீட்டுக்கு…
“”சார்… உடனே கார் எடுத்துக்கிட்டு, வடபழனிக்கு வெரசா போனா, உங்க மகன் கல்யாணத்தை கண் குளிர பார்க்கலாம். சவுகர்யப்படுமா?”
என்னை காயப்படுத்தியவர்களை, என்றுமே நான் மன்னித்ததில்லை. அதுவரை என் மனசுப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த கருநாகம், சிலிர்ந்தெழுந்து படமெடுத்து ஆடத் துவங்கியது.

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *