சங்கரனுக்கு சந்திராயன் நிலவில் இறங்கியது அளவில்லா மகிழ்ச்சியைக்கொடுத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்ததை பெரும் வியப்பாகப்பார்த்த நிலையில் இன்று நம் நாட்டு விஞ்ஞானிகளும் சாதித்தது ஆச்சர்யமாக, அதே சமயம் ஆனந்தமாக இருந்தது.
சிறு வயதில் கிராமத்தில் வாழ்ந்த சிறுவர்களுக்கு ராக்கெட் என்றாலே மரண பயம் தான். ‘ஆகாயத்துக்கு அனுப்பற ராக்கெட் வேலை முடிஞ்சதும் அப்படியே பூமில வந்து விழுந்திரும். எங்க வேணும்னாலும் விழும்’ என பெரியவர்கள் பேசுவதைக்கேட்டு ‘நாம் தூங்கும் போது நம்ம வீட்டு மேல உழுந்திட்டா நாம உயிரோட எழுந்திரிக்க மாட்டமா?’ என நினைத்து பயத்தில் நடு நிசி வரை தூங்காமலேயே பாட்டியிடமும், பெற்றோரிடமும் மாறி, மாறி பல கேள்விகள் கேட்டு, சோர்வால் உறங்கிப்போவது வாடிக்கையாக இருந்தது.
பயத்தை மேலும் அதிகரிக்கும் நிலையாக பக்கத்து வீட்டு பெரியப்பா காளியப்பன் ஒரு நாள் காலையில் வந்து சங்கரனின் அம்மா கொடுத்த காபியைக்குடித்தவர் கண்களில் கண்ணீர் பெருக ” இன்னைக்கோட எனக்கு இது கடைசி காபியா கூட இருக்குமோ , என்னமோ? கைலாப்போ, கைலேப்போ என்னமோ ஒரு கருமம் நம்ம தமிழ்நாட்டு மேல வந்து உழப்போகுதுன்னு மேக்கால ஊட்டு சுப்புரமணியன் வந்து சொல்லிப்போட்டு போறாப்ல. ஊர்ல எல்லாரு ஊட்லியும் இன்னைக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, புறாக்கறின்னு செஞ்சு சாப்பிடறாங்க. என்ற அம்மாளே அதக்கேட்டு பயந்து போட்டு பானைல தானியத்துல வெச்சிருந்த பணத்தக்கொண்டு வந்து என்ற குட்ட குடுத்துட்டு வேணும்கிறத வாங்கி சாகறதுக்குள்ள சாப்புட்டு போடுன்னு சொல்லிப்போட்டா” என கூறிய போது சங்கரனின் அம்மா மட்டும் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் அவரது பேச்சைக்கேட்டுச்சிரித்தாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. பயமில்லாம போய் வேலையப்பாருங்க மச்சான். இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் என்ற கைல காபி வாங்கி குடிக்கத்தான் போறீங்க. கோழ மனசா பயப்படாம துணிச்சலோட தைரியமா போங்க” என தனது அண்ணணிடம் தனது மனைவி பூங்கொடி கூறிய போது அதைக்கேட்ட சங்கரனின் அப்பா சோலிங்கனின் கண்களிலும் பயம் பீடித்துக்கொள்ள, கோழிக்கறி எடுத்து வர தானும் கறிக்கடைக்கு கிளம்பிய போது பதினைந்து வயது சங்கரனும் தந்தையுடன் சென்றான்.
கறி கடையில் பெரிய கூட்டம். பலர் பல விதமாக தங்கள் கற்பனைகளை உலாவிட, நம்பியவர்கள் கண்ணீர் விட்டார்கள், நம்பாதவர்கள் சிரித்தாலும் கண்களில் கலவரம் தெரிந்தது.
அங்கிருந்த ஒருவர் “சீக்கிரமா கொடுங்க சார். வானத்திலிருந்து அமெரிக்காகாரன் அனுப்புன மிசினு வந்து பூமில உழுகறதுக்குள்ள ஒரு வேளை சோறாவது திருப்தியா உண்டு போடறேன்” என சொன்னது அறியாமையின் உச்சமாகத்தெரிந்தது.
கடைக்கூட்டத்தை கலைக்க நினைத்த ஒரு குசும்புக்காரர் “ராக்கெட்டுல வானத்துக்கு அனுப்பியிருந்த மிசினு கடல்ல போயி உழுந்திருச்சாமா. இப்பத்தான் லேடியோவுல ஆகாசவாணி செய்தில கேட்டுட்டு வாரேன்” என்றதும் அங்கே நின்றிருந்த பாதிக்கூட்டத்தைக்காணவில்லை.
வீட்டுக்குச்சென்றபோது தாய் வழி மாமன், தாத்தா பாட்டி அனைவரும் வந்திருந்ததோடு இறந்த வீட்டில் கட்டியழுவது போல ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதனர்.
‘இதெல்லாம் சும்மா புரளி’ என சங்கரனின் அம்மா எடுத்துச்சொல்லியும் யாரும் கேட்டதாக இல்லை.
கிராமத்தில் யாரும் தோட்டம், காடுகளுக்கு வேலைக்குச்செல்லவில்லை. சங்கரனின் தந்தையும் மாடுகளுக்கு தீவனம் போட்டு தண்ணி காட்டவில்லை. “இதெல்லாம் நம்மளோட நாளைக்கு சாகப்போறது தானே? அதுக்காக எதுக்கு நாம போயி கஷ்டப்படோனும்” என கூறியதைக்கேட்ட சங்கரன் ” நீங்க மட்டும் சாகப்போறதுக்குள்ள ருசியா சாப்பிடோனும்னு கறி எடுக்க போனீங்க. மாடுகள பட்டினி போடலாமா?” எனக்கேட்டு தானே வைக்கப்புல் தீவனத்தை எடுத்து மாட்டிற்குப்போட்டான்.
பலரும் உறவுகளின் வீடுகளுக்கு போவதும், உறவுகள் பலர் தங்கள் வீட்டிற்கு வருவதுமென இனம்புரியாத மனநிலையில் ஊரே பரபரப்பான நிலைக்கு ஆட்பட்டிருந்தது. மளிகைக்கடைகளில் வியாபாரம் அதிகரித்திருந்தது. சில கடைகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இருப்பதையெல்லாம் எடுத்து கண்களில் கண்ணீருடன் இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தனர் கடை முதலாளிகள்.
மதிய உணவுக்குப்பின் தாயின் தந்தை அப்புச்சி சொன்ன ஒரு வார்த்தை தான் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
“எப்படியோ ஒலகம் அழிஞ்சு போகுமுங்கறது உறுதியாயிப்போச்சு. நாமெல்லாம் கண்ணாலம் பண்ணி வாழ்ந்து முடிச்சுட்டோம். இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு ஒரு கண்ணாலத்தப்பண்ணி கண்ணுல பாத்துப்போடோனும். சங்கரனுக்கும், அவனோட மாமம்புள்ள சாரங்கிக்கும் நாளைக்கே கண்ணாலத்துக்கு ஏற்பாடு பண்ணிப்போடுங்க” என்றார் அவனது அப்புச்சி.
“ஏய்யா உனக்கு அறிவு மலுங்கிப்போச்சா? பதனஞ்சு வயசுப்பையனுக்கும், பத்து வயசுப்பொண்ணுக்கும் எப்படி?” என கேட்டு அழுதே விட்டாள் சங்கரனின் அம்மா பூங்கொடி. சங்கரனும் வெட்கத்தில் தனது அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.
“அட நீயென்ன கூறு கெட்ட புள்ளையா இருக்கறே? நம்ம கொட்டக்காட்டு ராமப்பம்பையனுக்கும் அவந்தங்கச்சி புள்ளைக்கும் இந்த செகுதிய காதுல கேட்டதுமே காத்தாலயே கண்ணாலத்த மூச்சுப்போட்டாங்க. அதுகளுக்கும் பதனஞ்சுக்குள்ளதா இருக்கும் பாத்துக்க. எனக்கே பதனஞ்சுலதா கண்ணாலம். நாஞ்சொல்லறத சொல்லிப்போட்டேன். அப்பறம் என்னமோ பண்ணி எக்கேடோ கெட்டுப்போங்க. எள வயசுல ஆச தீராம செத்துப்போனா ஆவியா அலையோனும்பாங்க ” என தனது சொல்லைக்கேட்காததற்கு கோபப்பட்டு சலித்துக்கொண்டார் பெரியவர்.
இப்படி தான் வாழ்ந்த கிராமத்தில் அன்று சிறு வயதில் அறியாமையில் வாழ்ந்த மக்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை இன்று நினைவு படுத்தியதோடு, அன்று அம்மாவின் தந்தை சொன்ன போது தனக்குத்திருமணம் நடக்காவிட்டாலும், படிப்பு முடித்து வேலைக்கு சென்றதும் அதே மாமன் மகள் சாரங்கியை தனது இருபத்தைந்தாவது வயதில் தான் திருமணம் செய்து கொண்டு அப்புச்சியின் விருப்பத்தை நிறைவேற்றி அவரிடம் மானசீகமாக அவரது படத்தின் முன் ஆசீர்வாதம் பெற்றதையும் எண்ணி பசுமையான நிகழ்வுகளை அசை போட்டுப்பார்த்தார் சங்கரன்.