ஸ்கேன் வேண்டாமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 9,111 
 
 

வழக்கமாகக் ‘காலை நடை’யில் சந்திக்கும் நண்பர் அன்று சிறிது முக வாட்டமாகக் காட்சியளித்தார். என்னவென்று விசாரித்தேன். பிரபல பொதுக்துறை இயக்குநருடன் (ஓய்வு) மூன்றாண்டு ‘காலை’ப் பழக்கமாம். தினம் பார்த்துப் புன்னகைப்பாராம். இரண்டு நாளாகக் கண்டும் காணாமல் போகிறாராம். நண்பர் அதோடு நிறுத்தவில்லை.

”போன ஞாயிற்றுக் கிழமை ஒரு சின்ன ‘ஆர்க்யூமெண்ட்’ ஏதோ சமூக பிரச்சினை. அவருடைய ‘ஸ்டாண்ட்’ சரியில்லேன்னு நாலு பேர் முன்னால் சொல்லிவிட்டேன்! தப்பா நினைத்திருப்பாரோ?”

”சரி விடுங்கள்” என்று சமாதானப்படுத்திப் பார்த்தேன். ஆனால் அவர் மாறுவதாகக் காணோம். சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் மறுநாள் மாலை அவரே என்னைப் பார்த்துச் சந்தோஷமாகச் சொன்னார்.

”அவரோட பேரன் அயுஷ் ஹோமம் இன்விடேஷன் தீர்ந்துவிட்டதாம். மறுபடி பிரிண்ட் பண்ணி எனக்கும் வேறு சில ‘·ப்ரெண்ட்ஸ்களு’க்கும் தந்தார். அதான் என்னைப் பார்க்க ‘என்னவோ போல’ இருந்ததாம். ‘வாக்கிங் பிரெண்ட்’ஸிலே நீங்கள் கொஞ்சம் நெருக்கம்னு சொன்னார் சார்!” மனிதர் முகத்தில் அசாத்தியப் பூரிப்பு!

எப்படி இருக்கிறது விஷயம்? உண்மை என்ன வென்றால், தம்மிடம் சரியாகப் பேசவில்லையே என்பது போன்ற குறுகுறுப்பு நண்பருக்கு. அவருக்கோ நாம் அழைப்பிதழ் தரவில்லையே என்ற குற்றவுணர்வு. ஆக, இரண்டு பேருமே ஒரு விதமான தவிப்பில் இருந்திருக்கிறார்கள். நண்பர் என்னிடம் வெளிப்படுத்தியிருப்பது போல, அவரும் வேறு சில நெருக்கமான சினேகிதர்களிடம் சங்கடத்தைச் சொல்லியிருக்கக் கூடும்.

மேலே சொன்னது மாதிரியான சம்பவங்கள் நம் அன்றாட வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. வழக்கமாகச் சந்திக்கிற கோயில் நிர்வாகி குசலம் விசாரிக்காமல் சிடுசிடுவென்ற இருக்கிற சமயம். (உறுத்தல்: ‘கோயில் அக்கவுண்ட்ஸைப் பற்றி கேட்டிருக்கக் கூடாதோ?) எப்போதும் குடும்ப சமாச்சாரம் பேசும் டாக்டர் மருந்துச் சீட்டு தந்துவிட்டு, கத்தரித்தாற்போல் ‘நெக்ஸ்ட்!’ என்று கூறுகிற வேளை. (நமக்குத் தெரிந்த மருந்துகளை ரொம்பவே சொல்லி விட்டோமோ?)

ஏன், சில சமயம் வாராவாரம் பார்க்கிற கறிகாய்க் கடைக்காரர், ‘ரொம்ப பொறுக்காதீங்க!’ என எரிந்து விழுகிறபோது நாம் மனசைப் போட்டு அலட்டிக் கொள்கிறோம். யாரிடமாவது, உள்ளம் புண்படப் பேசிவிட்டால், வெளிப்பட மன்னிப்புக் கேட்பது போல் சொல்லி விடுவது நல்லது. ”அந்த மாதிரியான அர்த்தத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்!” என்பது போல…

அதைவிட்டுவிட்டு எல்லா மனிதர்களிடம் ஏற்படுகிற மனநிலை மாறுதலை, ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு, மனம் வருந்தி வீட்டிலுள்ளவர்களையும் வருத்தப்பட வைப்பது சரி இல்லை.

உண்மை நிலைமை என்னவென்றால், நம்முடைய மன நிலைக்குச் சமமாகவே, பிறருடைய மனமும் எப்போதும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இது சாத்தியம் அல்ல.

எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்ததுண்டு. ‘Flats Residents’ சங்கத்தில் முக்கியப் பொறுப்பு எனக்கு. குடியிருப்பாளரிடம் வருட சந்தா கேட்கையில், சிலர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போவதையோ, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கேட்பதையோ உணர்ந்த அனுபவம் உண்டு. வேறு பொறுப்பாளரிடம் இது குறித்து ‘புலம்பியும்’ இருக்கிறேன்.

”அந்த ‘உமன்’ கொஞ்சம் ‘ஹாட்டி’ டைப்தான். விடுங்கள் சார்!” என்று காரியதரிசி சொல்லியிருக்கிறார். இப்போது ஓரளவு ஏன் பெருமளவே, நிலைமையை உணர்ந்து மனசைக் குழப்பிக் கொள்ளுவதில்லை.

ஆனால் நெருங்கிய உறவினர்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சம்பந்திகள் இவர்கள் மனமாறுதலுக்கு நாம் பொறுப்பாகாமல் பார்த்துக் கொள்வது உசிதம்.

உறவினர் வீட்டிற்குப் போகும் போது, சில மணி நேரம் முன்னால் அங்கு ஏதாவது ‘வாக்குவாதமோ’ ‘அபிப்பிராய பேதமோ’ ஏற்பட்டிருக்கக்கூடும். அச்சம்பவங்கள் அவர்கள் முகத்தில் பிரதிபலித்திருக்கலாம். ‘நாம் போனது அவர்கள் மனசுக்கு பிடிக்கலையோ’ என்பன போன்ற நினைப்புகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

நம் வீட்டிலேயே பார்க்கிறோமே? நன்கு படித்தும் வேலை கிடைக்காத பெண், அத்தை பெண்ணையோ வேறு சில உறவுப் பெண்ணையோ எண்ணி, அவளுக்கு வேற இடத்தில் மணமானால் வருத்தமாக இருக்கும் பிள்ளை. ஏன் ‘ப்ளஸ்-டு’வில் படிக்கிற பையன்.

இவர்களுக்கும் தனியாக மனசு ஒன்றிருக்கிறது. சுள்ளென்று எரிந்து விழும்போதோ, அற்பவிஷயங்களுக்குக் கோபிக்கும் போதோ அவற்றை மன ஓட்டத்தின் வடிகாலாக எண்ண வேண்டுமே தவிர அதிகம் பொருட் படுத்தக் கூடாது. அவர்களின் ஒவ்வொரு சிறு சிறு அசைவுக்கும் அர்த்தம் கற்பிக்கக் கூடாது.

வேறு சிலர் இருக்கிறார்கள். மன நோயாளிகள் மாதிரியேதான். அல்லது குதர்க்க புத்தியுள்ளவர்கள். ”என் பெண் கல்யாணமாகி பெங்களூரில் செளக்கியமாக இருக்கிறாள். மாசம் 30,000 சம்பளம்!” என்று ஒரு நண்பர் சொன்னால், உடனே தன் மாப்பிள்ளையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ‘ அடடே? நம் மாப்பிள்ளை துபாயிலிருந்து திரும்பி வந்து வேலை கிடைக்காமல் திண்டாடுகிறாரே! அதைக் குத்திக் காட்டுகிறாரோ?’ என்று எண்ணும் ரகத்தினர்.

என்னுடைய ஆபீஸ் நண்பர் இயல்பாகச் சொன்னார்.

”பேத்தி ரொம்ப நன்றாக சுலோகம் சொல்கிறாளென்று ஒருத்தர் சொன்னால் அது ஒரு ஸ்டேட்மென்ட் தாத்தாவான அவருக்குப் பெருமை அடித்துக் கொள்ள உரிமை இல்லையா? அதற்காக உடனே நம் பேத்தியைக் குறை சொல்கிறாரென்று நினைத்தால், அதில் அர்த்தமே இல்லை!”

மருத்துவரிடம் செல்லுகிறோம், தீராத வயிற்று வலி. கீழே விழுந்ததால் நடு மண்டையில் ரத்தம் கசிந்து அடி. இவை போன்றவைகளுக்கு ‘ஸ்கேன்’ எடுத்துப் பார்த்துப் பிறகு சிகிக்சை அளித்தால் பரவாயில்லை, சாதாரண ஜலதோஷ ஜுரம், மழை இருமல்- இவற்றுக்கும் கூட ‘கிளினிக்கில் ஸ்கேன் எடுங்கள்’ என்றால் சினம் வருமா? வராதா? வேண்டாத செலவை, நம் மீது சுமத்துகிறார் என்கிற எண்ணம் தோன்றாதா?

அதே போன்றுதான் அன்றாட வாழ்விலும், சகலருடைய முகபாவத்துக்கும், பேச்சுக்கும் தவறான, வேண்டாக பொருள் கற்பித்து அர்த்தத்தைத் ‘துருவி ஆராய்வது’ மன உளைச்சலைத்தான் உண்டுபண்ணும், இதைத் தவிர்ப்பது நல்லது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *