கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 6,670 
 
 

சரவணன் இனி அடுத்த பல மாதங்களுக்கு மாமியார் வீட்டில் தங்கிவிட முடிவு செய்தான். அவன் மனைவி கல்யாணிக்கு இது ஏழாவது மாதம். இரண்டாவது பிரசவம். அவளுக்கு பிரசவம் ஆனதும் அவளுடன் சில மாதங்கள் இருந்து குழந்தையை கொஞ்சலாம் என்று நினைத்தான்.

சரவணன் ஒரு பெரிய ஏமாற்றுப் பேர்வழி. எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர் ஒருத்தருக்கு நல்ல குடும்பத்தில் மணமகள் தேவை என்று தன்னைப்பற்றி மாட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்ததான். நிறைய பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். தெரிந்த இரண்டு நாடக நடிகர்களை தனக்கு அம்மா அப்பாவாக இரண்டு நாளைக்கு நடிக்கும்படி கேட்டான். அவர்கள் ஒப்புக்கொண்டதும் அவர்களுக்கு ஏராளமாக பணம் கொடுத்து மூன்று நாட்கள் ஒப்பந்தம் செய்தான்.

முதல் நடிப்பு கல்யாணியைப் பெண் பார்த்தபோது. அடுத்தது கல்யாணத்தின் போது. இரண்டு நாட்கள். வாங்கிய பணத்துக்கு அவர்கள் சிறப்பாக நடித்தார்கள். சரவணனின் உண்மையான படிப்புத் தகுதி பத்தாவது பெயில்.

கல்லிடைக்குறிச்சியில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை நன்றாக ஏமாற்றிவிட்டான் சரவணன். மூத்த பெண் கல்யாணிக்கு டாக்டர் மாப்பிளை கிடைத்ததும் அவளுடைய அம்மா கிருஷ்ணவேணி உருகிப்போனாள். ஆண்கள் இல்லாத அந்த வீட்டில் சரவணன் தந்திரமாக தனது நடிப்பைத் தொடர்ந்தான்.

திருமணமான கடந்த இரண்டரை வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் மாமியார் வீட்டில்தான் வாசம். கல்யாணியின் முதல் பிரசவத்தின்போது ஆறு மாதங்கள் தொடர்ந்து மாமியார் வீட்டில் இருந்தான். அவனைப்பற்றி வெகுளியான கல்யாணிக்கு சிறிதுகூட சந்தேகம் வரவில்லை.

அவ்வப்போது சென்னை சென்று அங்கு சில நாட்கள் ஒரு மட்டரகமான லாட்ஜில் தங்கிவிட்டு வருவான். கேட்டால் அவனுக்கு கீழே வேலை செய்யும் மூன்று டாக்டர்களை மேற்பார்வை செய்ய வேண்டும் என்பான். அந்த சமயங்களில் தினமும் குடிப்பான், புகைப்பான். ஆனால் கல்லிடைக்குறிச்சி திரும்பியதும் பரம யோக்கியனாக இருப்பான்.

சரவணனுக்கு மாமியார் வீட்டில் சொகுசான ராஜ வாழ்க்கை. அவன் ஊருக்கு வந்தவுடனே பால் கறக்கும் பெருமாளை காலை ஐந்தரை மணிக்கே பால் கறந்து தந்துவிடச் சொல்வாள் கிருஷ்ணவேணி. பாலைச் சுண்டக் காய்ச்சி சரியாக ஆறு மணிக்கு ஒரு பெரிய டம்ளரில் ஊற்றி அதில் இரண்டு கோழி முட்டைகளை உடைத்துப்போட்டு சரவணனுக்கு குடிக்கக் கொடுப்பாள்.

பிறகு சரியாக எட்டு மணிக்கு காலைப் பலகாரம். கறிக்கடைக்கு கிருஷ்ணவேனியே போய் நல்ல கொத்துக்கறியாகப் பார்த்து வாங்கி வந்து இட்லியும் கொத்துக்கறியும் சுடச்சுட பரிமாறுவாள். எட்டாவது இட்லியிலேயே சரவணன் போதும் போதும் என்பான். ஆனால் கிருஷ்ணவேணி விடமாட்டாள். பத்து இட்லி சாப்பிட்ட பிறகுதான் மாப்பிள்ளையை எழுந்திருக்க விடுவாள். அதன் பிறகு சுடச்சுட ஒரு டம்ளர் நிறைய திக்காக ஹார்லிக்ஸ் ! இட்லி செய்யாத சில நாட்கள் தோசையும் கொத்துக்கறியும். தோசை என்றால் சரவணன் ஏழுக்கு மேல் சாப்பிடமாட்டன்.

பிறகு சிறிது நேரம் சரவணன் ஒரு குட்டித்தூக்கம் போடுவான். மணி பத்தை நெருங்கியதும் அந்த வீட்டில் ஆட்டுக்கால் சூப் வாசனை மூக்கைத் துளைக்கும். கொஞ்சம் மஞ்சள் பொடி, மிளகுப்பொடி விரவி சூப்பை ஆற்றிக்கொண்டே கிருஷ்ணவேணி எடுத்துவந்து கொடுப்பாள். சரவணன் சூப்பை ஒரு நிமிஷம் ஆசையுடன் பார்ப்பான். சூப்பின் மேற்பரப்பில் கொழுப்பு அழகாக எண்ணெய் மாதிரி வட்டம் வட்டமாக மிதந்து கொண்டிருக்கும். சூப்பை உறிஞ்சி உறிஞ்சி நிதானமாக சிறிது சிறிதாக ரசித்துக் குடிப்பான். குடிக்கக் குடிக்க பேரானந்தமாக இருக்கும் அவனுக்கு…!

சூப்பைக் குடித்து முடிந்ததும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடிசெய்த பொரிகடலை மாவுடன் நாட்டுச் சர்க்கரை கலந்த கலவை இரண்டு கைப்பிடி சாப்பிடுவான். சில சமயங்களில் அதில் நெய் விட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொடுப்பாள் கல்யாணி.

அதன்பின் சரியாக ஒரு மணிக்கு மதியச்சாப்பாடு. வெள்ளாட்டின் நெஞ்சுக்கறி தினமும் வேண்டும் என்று கறிக்கடை காளியிடம் கிருஷ்ணவேணி சொல்லிவைத்து விடுவாள். தாராளமாக கறிக் குழம்பை ஊற்றி ஊற்றி சரவணன் ஒரு பிடி பிடிப்பான். அவன் சாப்பிடும்போது மின்சாரம் நின்று விட்டால், கல்யாணி அருகில் நின்று பத்தமடை பனை ஓலை விசிறியால் அவனுக்கு நன்றாக விசிறி விடுவாள்.
.
அவன் ரசம் சோறு சாப்பிடும்போது இரண்டு பெரிய நாட்டுக்கோழி முட்டைகளை முட்டை அடிக்கிற மிஷினில் கொடுத்து நுரை வருகிற அளவிற்கு அடித்து எடுத்து ருசியாக ஆம்லெட் செய்து கொடுப்பாள் கிருஷ்ணவேணி. அந்த ஆம்லெட் ரோஜாப்பூ மாதிரி மெத்து மெத்தென்று இருக்கும். பாசுமதி அரிசியும் அந்த ஆம்லெட்டும் செம காம்பினேஷன்.

அடுத்து தயிர் சோறு! தண்ணீர் விடாமல் காய்ச்சின பாலில் உறை ஊற்றி வைத்த தயிர் எப்படி இருக்கும்? அதுவும் சிறிதும் புளிக்காத தயிர்…! அதுவும் இல்லாமல் மண்பானையில் காய்ச்சி மண் சட்டியில் உறைய வைக்கப்பட்ட தயிர். அந்த தயிர் சாதத்துக்கு கடித்துக்கொள்ள நல்ல மீன் ரோஸ்ட் ! ஒவ்வொரு மீன் ரோஸ்ட்டும் சரவணனை ‘இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று கேட்கும். சரவணின் வயிறுதான் போதும் போதும் என்று சொல்லிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு இரண்டரை மணிக்கு ஒரு தட்டு நிறைய ஆப்பிள் பழத்துண்டுகள். அதை சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் நிறைய ஐஸ் போட்டு சாத்துக்குடி ஜூஸ்.

மூன்று மணிக்குமேல் சரவணன் மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் போடுவான். தூக்கம் வராவிடில் கதவைச் சாத்திவிட்டு கல்யாணியுடன் கொஞ்சிப் புரளுவான். கல்யாணியின் வளையல் அலுங்கும் சத்தம் அடுத்த அறையில் இருக்கும் அவள் தங்கை மேனகாவுக்கு கேட்கும்

நான்கரை மணிக்கு சுடச்சுட காப்பியும், முந்திரி ரோஸ்ட்டும். அதன் பிறகு சற்று நேரம் தோட்டத்தில் வாக்கிங். சில சமயம் மச்சினி மேனகாவுடன் தோட்டத்தில் பூப்பந்து விளையாடுவான்.

ஆறரை மணிவாக்கில் விளையாடி களைத்து வரும் சரவணனுக்கு சூடாக நான்கு பரோட்டாவும் சால்னாவும் இருக்கும். சில சமயங்களில் சால்னாவிற்கு பதிலாக கோழி சாப்ஸ்….அதை சாப்பிட்டு அதிக நேரமாகியும் கோழி சாப்ஸ் வாசனை வாயில் அடித்துக் கொண்டிருக்கும்.
அதற்காக கிருஷ்ணவேணி சிறிது பெருஞ்சீரகத்தை லேசாக வறுத்து சரவணனை வாயில் போட்டு மெல்லச் சொல்வாள்.

இனிமேல் நேராக ராத்திரி எட்டரை மணிக்குதான் சாப்பாடு. நடுவில் வேறெதுவும் கண்டிப்பாக இல்லை. அதுவும் சைவச் சாப்பாடுதான். ராத்திரி வேளையில் மட்டன், சிக்கன் சாப்பிட்டால் சில சமயங்களில் சரவணனுக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவனுக்கு மட்டும் ஏதாவது பொரித்த குழம்பு செய்து, இரண்டு மூன்று துவையல்கள், சுட்ட அப்பளம், ரசம் மட்டும். அப்பளத்தில் பிரண்டை வாசனை கம கமக்கும். பசியைத் தூண்டும். கல்லிடைக்குறிச்சி அப்பளம் ஆயிற்றே.

அப்புறம் தயிர் சாதம். கடைசியாக வீட்டில் செய்யப்பட்ட ஐஸ்க்ரீம் இரண்டு அல்லது மூன்று ஸ்கூப்.

அதன் பிறகு மறுநாள்தான். அதுவரை சரவணன் பட்டினிதான்.

இம்மாதிரி ராஜவாழ்க்கை வாழ்ந்த சரவணனுக்கு வந்தது சோதனை. மேனகாவுக்கு நிறைய ஜாதகங்கள் பார்த்ததில் ஒன்று நன்றாக பொருந்தி வந்தது. அவன் சென்னை ஸ்டான்லியில் மருத்துவம் படித்துவிட்டு நங்கநல்லூரில் அமர்க்களமாக கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருந்தான்.

சரவணனுக்கு எங்கே தன் மோசடி வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயம் வந்தது. “மறுபடியும் எதற்கு டாக்டர் மாப்பிள்ளை? ஒரு இஞ்சினியர் அல்லது ஐடி படித்து அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளையை தேடலாம்” என்றான்.

அதற்கு கிருஷ்ணவேணி, “இந்த ஜாதகத்தில் பத்து பொருத்தங்களும் நல்லா இருக்கு மாப்ள, நான் கண்ணை மூடுவதற்குள் மேனகாவுக்கும் திருமணம் செய்யவேண்டியது என் உடனடிக் கடமை” என்று அடித்துக் கூறிவிட்டாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் முடிந்து மேனகாவை அந்த டாக்டர் பெண் பார்க்க வந்தான். பெயர் செந்தில்நாதன். சிவப்பாக உயரமாக சிரித்த முகத்துடன் இருந்தான். அவனைப் பார்த்தவுடன் மேனகாவுக்குப் பிடித்து விட்டது. மொட்டை மாடிக்குச் சென்று அவளுடன் தனிமையில் சிறிது நேரம் பேசினான். .

பிறகு மூத்த மாப்பிள்ளைக்குண்டான மரியாதையுடன் சரவணனிடம் “எந்த மெடிகல் காலேஜ்? எப்ப பாஸ் பண்ணீங்க? ஏன் மேற்கொண்டு எம்.எஸ் பண்ணல? ஏதாவது மெடிகல் மிராக்கிள் பண்ணதுண்டா?” என்று குடைந்தான்.

சரவணன் “தஞ்சாவூர் மெடிகல் காலேஜ்” என்று சொல்லிவிட்டு மற்ற கேள்விகளுக்கு வாய்க்கு வந்தபடி நழுவலாக பதில் சொன்னான்.

கல்யாண தேதி குறித்துவிட்டு அவர்கள் சென்றதும், ஆளாளுக்கு செந்தில்நாதனை புகழ்ந்து பேசினார்கள். சரவணனுக்கு உள்ளூர பயம் தொற்றிக்கொண்டது. ஒரே ஒரு நிம்மதியான விஷயம் திருமணத்திற்கு பிறகு அவர்கள் சென்னையில் தனிக்குடித்தம் போவார்கள் என்பதுதான்.

இரவு பெட்ரூமில் கல்யாணி அப்பாவியாக “நீங்களும் ஸ்டாலின்லதான படிச்சீங்க?” என்றாள்.

“அது ஸ்டாலின் இல்ல…..ஸ்டான்லி. எனக்கு ஸ்டான்லியில் அட்மிஷன் கிடைத்தது, ஆனால் நான் படித்தது தஞ்சாவூர் மெடிகல் காலேஜ்” என்று எளிதாக அவளிடம் டூப் விட்டான்.

அடுத்தமாதம் மேனகா திருமணம் மிகச்சிறப்பாக கல்லிடைகுறிச்சியில் நடந்தது.

செந்தில்நாதன் சரவணனிடம் இயல்பாகத்தான் பழகினான். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

தலை தீபாவளிக்கு மேனகாவும், செந்தில்நாதனும் கல்லிடைகுறிச்சி வருவதாக இருந்தது. அவர்கள் வரும்போது சரவணனுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் சென்னையில் ஒரு பிரச்சினை என்று கிளம்பிச் சென்று அதே மட்டமான லாட்ஜில் தங்கினான்.

அவன் சென்ற இரண்டாவது நாள் யாரோ அவன் அறைக் கதவை தட்ட, சென்று திறந்தான்.

அங்கு செந்தில்நாதன் நின்றுகொண்டிருந்தான். ஓ காட்… ஷட்டகன்.

“வாங்க..வாங்க என்ன திடீர்ன்னு” – வேண்டா வெறுப்புடன் வரவேற்றான்.

“கல்லிடைக்கு போன் பண்ணேன்….நீங்க சென்னை போயிருப்பதா சொன்னாங்க..”

“அதெப்படி நான் தங்குற இந்த லாட்ஜ் உங்களுக்குத் தெரியும்?”

“எனக்கு உங்களைப்பற்றி எல்லாமே தெரியும்.” அந்த எல்லாமில் ஒரு அழுத்தம் இருந்ததை உணர்ந்த சரவணன் முகம் பேஸ்தடித்தது.

“……………..”

“மேனகாவை நான் பெண் பார்ப்பதற்கு முன்னாலயே எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறா நோண்டிட்டேன் ஷட்டகரே.”

அவன் முகத்தில் ஒரு கிண்டலான புன்னகை.

“ஏமாத்தறத சமத்து சாமர்த்தியமா செய்யணும்…சில மெடிகல் டெர்மினாலஜிகளையாவது கற்று வச்சுக்கணும். உங்களுக்கு சுத்தமா ஒண்ணும் தெரியல.”

சரவணனுக்கு உடம்பு வியர்த்தது.

“பயப்படாதீங்க….நான் எதைப்பற்றியும் வெளிய சொல்ல மாட்டேன். கிளம்புங்க உடனே நம்ம வீட்டுக்கு. இன்னிக்கி ராத்திரி நீங்க, மேனகா, நான் எல்லோரும் கல்லிடைக்குறிச்சி போகிறோம். அங்க என் தலைதீபாவளியை ஜாம் ஜாம்னு வெடி போட்டு கொண்டாடறோம்.”

“உங்களுக்கு எப்படி என்னைப்பற்றி அவ்வளவு உண்மைகளும்…..”

“பாம்பின் கால் பாம்பறியும்.” என்றான் சிரித்துக்கொண்டே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *