வேலைக்காரி அம்மாக்கண்ணு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 3,696 
 
 

(1934 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம் திரும்பித் திரும்பி வருவதனால் கொஞ்சம் தேய்ந்து போனாலும் போயிருக்கும். சூரியன் சதா உருண்டு கொண்டேயிருப்பதனால் (சம்பிரதாயப் பொய்; சூரியன் உருளுவதில்லை என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்) ஒரு பக்கம் மூளியாய்ப் போனாலும் போயிருக்கலாம். ஆனால் இரவு பகலாய், சலிக்காமல், முப்பது வருஷ காலமாக, எங்கள் வீட்டில் வேலை செய்து வரும் அம்மாக்கண்ணுவின் உடம்பு ஏன் தேய்ந்து போகவேயில்லை?

அம்மாக்கண்ணுவின் முன்னித்திப் பற்கள் இரண்டும், உதட்டுக்கு வெளியே வந்து நீட்டிக் கொண்டிருக்கும். முன் உச்சி மயிரிலேதான் இப்பொழுது கொஞ்சம் நரை கண்டிருக்கிறது. தேகத்தில் அதிகமான சதைப் பற்றுக் கிடையாது. தேகம் குச்சி போல, நீண்டிருக்கும். சதைப் பிடிப்பு இல்லாத தேகத்தில், எலும்புகள் பார்ப்பவர்களின் கண்ணில் வந்து குத்துவது போலிருக்கும் என்று சொல்லுவதுண்டு. அம்மாக்கண்ணுவைப் பார்த்தால், அப்படி யொன்றும் ஆபத்து ஏற்படுவதில்லை.

அம்மாக்கண்ணு நடுத்தரமான உயரம்; கறுப்பு நிறம். நாள் ஓய்ந்தாலும் ஓயும்; அவளுக்கு வேலையிலிருந்து ஓய்வே கிடையாது. தினம் தினம் புது மாதிரி வேலையா? அதுவுமில்லை. செய்ததையே திருப்பித் திருப்பிச் செய்கிற ‘கழுத்தறுப்பு’ வேலை. அவளுடைய வேலை மூளை வேலையா? இல்லவேயில்லை. அவள் செய்யும் வேலையை, யோசித்துச் செய்ய வேண்டும் என்ற தேவையே கிடையாது. கடிகாரத்தின் முன் ஓடிக் கொண்டிருக்கிற மாதிரியான வேலை.

அம்மாக்கண்ணு ‘தேடிய ராசா’ (புருஷன்) கலியாணம் செய்த ஐந்து வருஷங்களுக்குப் பிறகு விட்டுவிட்டு, எங்கேயோ, மாயமாய்ப் போனான். ‘ஆத்தா! அம்மாக்கண்ணு! சும்மாக் கிட; உன் பல்லும் பவிசும் இருப்பதற்கு உன்னைக் கட்டிக் காத்திட்டு எமன் கூப்பிடற வரையிலும் இருக்கப் போறேனாங்காட்டியும்! நான் எவளையாச்சும் இளுத்துக்கிட்டு அக்கரைச் சீமை போவப் போறேன்!’ என்று அவள் புருஷன் அடிக்கடி சொல்லுவானாம். அவன் எங்கே, எவ்வாறு போயிருப்பான் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

கலியாணமாகவில்லை என்ற குறை நீங்கிற்றே யல்லாமல், அம்மாக்கண்ணு சொந்தக் குடும்ப சுகம், சொந்தக் குடும்பக் கவலை ஒன்றுமே அறியாதவள். சென்ற முப்பது வருஷங்களாக நாங்கள் தான் அவளுடைய குடும்பம்; நாங்கள்தான் அவளுக்குக் குழந்தைகள். எங்கள் வீடுதான் அவள் வீடு. எங்கள் குடும்பத்தின் சுக துக்கம்தான் அவளுடைய சுகதுக்கமும். கடைசி ஜாமக் கோழி கத்தினால் எழுந்திருந்து விடுவாள். காலையில் முதல் காக்கை கத்தினால் போதும், எங்களை எழுப்பி விடுவாள். எங்கள் தாயாரிடம் இதைப் பற்றிச் சலுகை சொல்லிக் கொள்ளப் போனாலும் பலிக்காது. ‘வளருகிற குழந்தை படுக்கையி லிருக்கலாமோ?’ என்று அம்மாக்கண்ணு சொன்னால், அப்பீல் கிடையாது.

‘வளருகிற குழந்தை படுக்கையி லிருக்கலாமோ?’ வளருகிற, வளர வேண்டிய மனிதர்கள் படுகிடையாக இந்த நாட்டிலிருப்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றுத் தேடுவது போல, அம்மாக்கண்ணு சொன்னாளா? உயிர் மலரும் விடியற்காலத்தில் உறங்கலாகாது என்ற அனுபவத்தைக் கண்டாளா? தூங்கிப் போன நாழிகை மனிதனுடையதன்று என்ற அபூர்வ உண்மையைத் தெரிந்து சொன்னாளா? எதுவாயிருந்தால் என்ன? ‘வளருகிற குழந்தை படுக்கையி லிருக்கலாமோ?’ எதிர்வாதமில்லாத பேச்சு.

கோழியோடு எழுந்திருக்கிற அம்மாக்கண்ணு, இரவில் கோவில் கடைசி மணி அடித்த பிறகுதான் படுத்துக் கொள்ளுவாள். ஓடிப் போன புருஷன், நடுநிசியில் வந்து கதவை இடிப்பான் என்ற ஆசையோ, சந்தேகமோ என்னவோ? கதவு இடிக்கிறாப் போலச் சத்தம் கேட்டால் போதும், ‘யார், யார்?’ என்று பதறிக்கொண்டு எழுத்திருப்பாள். ‘அம்மாக்கண்ணு! எலி ஓடுகிற சத்தம்; தகரத்தைக் கீழே தள்ளிவிட்டது. கதவை ஒருவரும் இடிக்க வில்லை!” என்று நாங்கள் யாராவது தப்பித் தவறிச் சொன்னால் போதும், ‘நீ ஏன் இன்னும் தூங்கவில்லை?’ என்று கூச்சல் போடுவாள்.

அம்மாக்கண்ணு செய்கிற வேலையின் ஜாப்தா தேவையா? ஜாப்தா தயாராய் வைத்திருக்கிறேன். வாசலுக்குச் சாணி தெளிப்பாள்; வீடு கூட்டுவாள்; வீடு மெழுகுவாள்; மாடு கறப்பாள்: மாட்டுக்காரன் வராவிட்டால் மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவாள். பாத்திரங்கள் துலக்குவான்; எங்களுக்கு எண்ணெய் தேய்த்து விடுவாள். எங்கள் துணிமணிகளை அவள்தான் துவைப்பாள். நெல் அறுவடைக் காலத்தில் களத்துக்குக் கங்காணம் செய்ய (மேற் பார்வை பார்க்க) அவள் போவாள். நெல் புழுக்குவாள்; நெல் குத்துவாள்; மருந்து அரைப்பாள்: குழந்தைகளுக்கு மாத்திரை கரைத்துப் போட்டுவாள். எங்கள் பந்துக்கள் வீட்டுக்குச் சேதி கொண்டு போவாள். எங்கள் வீட்டிலே அதிகாரம் செய்வாள்.

எந்த ஸ்திரீயும் தன் புருஷன் இறக்கிற வரையிலும் சுமங்கலி யல்லவா? அம்மாக்கண்ணு தன் புருஷன் இறந்த சேதி கேட்கிற வரையிலும் சுமங்கலி என்று சொல்லிக் கொள்வதை யார் தடுக்க முடியும்? இதைப் பற்றி நாங்கள் அவளிடம் கேலி செய்ததுண்டு. ‘நான் கைம்பொஞ்சாதி (விதவை) மாதிரிதான். ஆனால் அந்த மாதிரி எண்ணிக் கொண்டால், அது அவுங்களுக்கு (ஓடிப்போன புருஷனுக்கு)ப் பாதகம். அவுங்க, என் நினைப்பினால், செத்துப் போய்ட்டாலும் போய்டுவாங்க. அவுங்க மகராசனா, எங்கேயாவது நல்லாயிருக்கட்டும்!’ என்று அவள் பதில் சொல்லுவதைக் கேட்பவர்கள் கண்ணீர் விடாமலிருக்க முடியுமா?

எங்கள் வீட்டிலே எங்கள் தாயாருக்கும் தகப்பனாருக்கும் தகராறு ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைக்கிற பஞ்சாயத்துப் பொறுப்பு அம்மாக்கண்ணுவைச் சேர்ந்தது. ‘அம்மா சேலை யில்லாமல், பழஞ் சேலையைக் கட்டிக்கிட்டு, எத்தனை காலம் வீடு வீடாய் நுழைகிறது? அவுங்க வீட்டிலே கண்ணாலம் வருது. கிழிஞ்ச சேலையோடு அம்மா போக முடியுமா?’ என்று அம்மாக் கண்ணு சொன்னால், அதைத் தகப்பனார் ஏற்காமலிருக்க முடியுமா? ‘நீ மாத்திரம் கிழிந்த சேலை கட்டிக் கொண்டிருக்கிறாயே! உனக்குப் புதுச் சேலை வேண்டாமா?’ என்று நாங்கள் கேட்டால், ‘என் புருஷன் பக்கத்திலிருக்காங்களா, நான் புதுச் சேலை கட்டிக்கிட்டு மினுக்கிக் குலுக்கிக்கிட்டு நடக்க?’ என்பாள் அம்மாக்கண்ணு.

எங்கள் வீட்டுக் கௌரவம், கிழிந்த துணி வழியாகக் கூடப் போகக் கூடாது என்று வைராக்கியத்துடன் பேசும் அம்மாக் கண்ணுவை என்னதான் செய்யப்படாது? குலதெய்வம், கும்பிடு தெய்வம், வீட்டுத் தெய்வம்கூடத் தனது பக்த குடும்பத்தார்களிடம் இவ்வளவு கவலையும் சிரத்தையும் காண்பிப்பதில்லையே! குலதெய்வம் இருக்கிற இடத்திலே அம்மாக்கண்ணுவைப் பிரதிஷ்டை செய்து கும்பிட்டாலெள்ள? பழைய குல தெய்வத்துக்குக் கோபம் வந்தால் இன்னொரு இடத்துக்குப் போகும். அவ்வளவுதானே? அம்மாக்கண்ணுவுக்குச் சாபம் கொடுக்க முடியாது. அவள் சாபம் கொடுத்தாலும் ஒருவேளை பலிக்கலாம்.

அம்மாக்கண்ணு ரொம்ப ‘சூடிகை’. ஒரு தரம் ஒருவரைப் பார்த்தால் போதும். அவர்களைப் பற்றித் தேவையான அளவு தெரிந்து கொள்ளுவாள். ‘நல்லவங்க, பொல்லாதவங்க’ என்று அவள் தீர்ப்புச் சொல்லி விட்டால் போதுமானது. அவளுடைய முடிவிலே தவறே இருக்காது. ‘அவன் பொல்லாப் போக்கிரி: பாக்கையிலேயே தெரியுதே!’ என்றால், அது சரியாகத்தான் இருக்கும். அவனிடம் நாங்கள் பழகும்படி விடவே மாட்டாள்.

அம்மாக்கண்ணுவுக்கு மனிதர்களைப் பற்றிக் கதையே தெரியாது. காக்காய், குருவி, நரி, கழுதை இவைகளின் கதைதான் தெரியும். கதையையும் நன்றாகச் சொல்லத் தெரியாது. கதை நன்றாயில்லையே என்றால், ‘உனக்கு அவசரம்; உனக்குக் கேக்கத் தெரியல்லே!’ என்பாள். சொல்லத் தெரியாத குற்றம், குறை ஒன்று இருப்பதாகவே அவள் எண்ணினதே கிடையாது.

தனக்கு ஒன்றும் இல்லையே என்ற சிந்தனையாவது விசாரமாவது அவளுக்கு இருந்ததில்லை. வெளியூர்களுக்குப் போய், நாங்கள் ஊருக்குத் திரும்பி வந்தால், ‘வீட்டுக்கு என்ன கொணாந்திருக்கே?’ என்று கூசாமல் கேட்பாள். ‘எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ என்று அவள் கேட்டதே கிடையாது. வீட்டுப் பக்தி அபரிமிதமாய்க் கொண்ட அம்மாக்கண்ணுவிடமிருந்து, நம்மவர்கள் தேச பக்தியை ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது? மானம் இன்னதென்று. நாம் எல்லோருமே. அவளிடமிருந்து நன்றாகப் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

– 1934, மணிக்கொடி

வாழ்க்கை வரலாறு பிறப்பு தமிழ் உரைநடை உலகில் தனிச் சிறப்பு உடையவர் வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமி ஐயங்கார் ஆவார். பாரதியாராலே உரைநடைக்கு வ.ரா.' என்று பாராட்டுப் பெற்றவர் அவர். தஞ்சை மாவட்டத்தில் திருப்பழனத்திற்கு அருகில் திங்களூர் என்னும் சிற்றூரில் 1889 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் பதினேழாம் நாள் அவர் பிறந்தார். அவருடைய தந்தையார் வரதராஜ ஐயங்கார்; தாயார் பொன்னம்மாள். அவரோடு உடன் பிறந்தோர் எழுவர்; வ.ரா. மூத்த…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *