வெள்ளச்சோளம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 3,519 
 
 

கிராமங்களில் ஏதுமறியாமல் வெகுளித்தனமாக இருப்பவர்களை வெள்ளச்சோளம் என்பார்கள்.அவ்வாறு பதிமூன்று வயதிலும் மூன்று வயது சிறுவன் போல் மனதில் தோன்றுவதை தோன்றியபடியே பேசிக்கொண்டு,தன்னை விட வயது குறைந்த குழந்தைகளுடன் விளையாட விருப்பத்தோடு இருப்பவன் தான் குணத்துக்கேற்ற பெயர் கொண்ட குழந்தைசாமி!

ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவன், அவ்வப்போது கைசூப்புவதை கைவிடாமல் இருப்பதைப்பார்க்கும் பள்ளியில் உடன் படிக்கும் சம வயதினர் “டேய் கைசூப்பி வந்திட்டான் பாரு”என கேலி செய்வர்.அதற்கும் பற்கள் தெரிய சூதுவாதின்றி சிரித்து வைப்பான்.தாயின் சேலையில் கட்டிய தொட்டிலில் படுத்துக்கொண்டு ஆட்டிவிடச்சொல்லி பிடிவாதம் பிடிப்பான். ‘அம்மா ஊட்டினால் தான் சாப்பிடுவேன்’ என அடம்பிடிப்பான்.

தலையணைக்கு பதிலாக தாய் மடியில் தலை வைத்தே தூங்குவான்!

இப்படியான நிலையில் பத்து வயது இருக்கும் போதிலிருந்து தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் படிப்பை தொடராமல் தாயோடு வீட்டிலேயே இருந்து கொண்டான்.தந்தையும் அவன் பள்ளிக்கு செல்லாததை நினைத்து கவலைப்படவில்லை.தாயாருக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போனது.பாதி நாட்கள் அரசு மருத்துவ மனையிலும்,மீதி நாட்கள் வீட்டிலும் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தந்தைக்கும் தாயாருக்கும் அடிக்கடி சண்டை வருவதும்,சமைத்து வைத்த உணவை பசியிருந்தும் உண்ணாமலேயே கவலையுடன், நோயுடன் உள்ள தாய் உறங்கச்செல்வதும் வாடிக்கையானது.உதவிக்காக தாயின் தாயாரும் வந்து சில நாட்களில் உடனிருந்தாள்.தாயோடு தன்னையும் வெறுத்த தந்தையை வெறுத்தான் குழந்தை சாமி.தந்தையிடமிருந்து முட்ட வரும் காளை மாட்டிடம் பயந்து ஒதுங்குவது போல் ஒதுங்குவான்.ஒரு முறை உள்ளூர் சோதிடரிடம் ஜாதகம் பார்க்க தாய்வழி பாட்டியும் தாயும் சென்ற போது உடன் சென்றவன் சோதிடர் சொல்லுவதை உன்னிப்பாக கவனித்தான்.

“உங்க பையன் ஸ்திர லக்னம்னு சொல்லற விருச்சிகத்துல பொறந்ததால அப்பனுக்கும் மகனுக்கும் ஒத்துப்போகாதுங்கறதோட உங்களோடயும் பகையாத்தான் இருப்பாரு.அதோட ராசியும் விருச்சிகமா போனதுனால,சந்திரனும் நீசமாயி அங்கயே கெட்ட கிரகம் கேது கூட கூடினதோட மட்டுமில்லாம கேட்டை நட்சத்திரத்துல பொறந்ததால முதல்ல புதன் தெச பத்து வருசம் நடந்தது.இப்ப கேது வந்துட்டான். ராசிலயே உள்ள கேதோட கூடி சந்திரங்கிற மனசுக்காரகன் கெட்டதால பையன் மதி பலக்காம வெள்ளச்சோளமாத்தான் இருப்பான்.சந்திரன் தாய் காரகணானதால கிரகண தோசமாயி கூட இருக்கற சந்திரனை பாம்புங்கிற கேது தெசயும் நடத்தறதால தாய முழுங்கப்பாக்குது.ஒம்பதுக்கதிபதி சந்திரன் கேதோட சேரும்போது அப்பனும் பகைதான்.அதுவும் கேது ஏழுவருசம்…அதாவது பையனுக்கு பதினேழு வருசம் முடியறவரைக்கும் ஒரே தெச தான் நடக்கும்.விநாயகரை கும்பிட்டுட்டு பையனை பதனமா தான் பாத்துக்கோனும்”என சற்று தம்மை ஆசுவாசப்படுத்தியவர் தொடர்ந்து பேசினார்.

“படிக்கிறது பிடிக்காது.அம்முச்சி வீட்ல இருந்து ஸ்கூலுக்கு போனா தடை படாது.படிக்கலேன்னா இந்தக்காலத்துல வாழ முடியாது.சொத்த விட படிப்பு தான் முக்கியம்.என்ன பண்ணறது.விதி மதியக்கெடுக்குது.கேதுல ராகு புத்தி நாலுக்கு நாலாமிடமான ஏழுல அம்மாவோட வயித்துப்பகுதில நின்னு இப்ப புத்தி நடக்கறதால உங்களுக்கு வயித்துல ஒரு கட்டி இருக்கும்.அதனால வயித்து வலில கஷ்டப்படுவீங்க‌.உடனே அறுவை சிகிச்சை நடக்கோனும்னு விதி இருக்கு.நல்லா குலதெய்வத்தை வேண்டிக்கங்க…..”வார்த்தை நின்று சோதிடர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்த போது,தாயும் கண்ணீர் சிந்தியதை கண்டு தானும் அழுதான்.

அப்போது குறுக்கிட்ட தாய் கரணி “ஆஸ்பத்திரிக்கு போயிட்டுதானுங்க இங்க வாரேன்.ஆப்பரேசன் பண்ணியே ஆகோனுமுன்னு டாக்டரு சொல்லிப்போட்டாருங்க.அதான் உங்களையும் பாத்து நேரங்காலம் எப்படியிருக்குதுன்னு தெரிஞ்சுக்கலான்னு வந்தனுங்க.எனக்கெப்படியோ ஆகட்டுங்க.இந்தப்பையனுக்கு உசுருக்கு பாதகமில்லாம இருந்தா போதுமுங்க”என்றாள் கவலையுடன்.மீண்டும் தொடர்ந்து பேசிய சோதிடரும் உறவினருமான கந்தசாமி “அதுக்கு காரமடை ரங்கநாத பெருமாளுக்கு ஒரு முறை மூனேமுக்கால் நாழிகை காலம் தத்து கொடுத்து வாங்கினா பாதிப்பு குறையும்.பையனுக்கு லக்னாதிபதி செவ்வாய் உச்சமாயிடுச்சு.உசுருக்கு பாதகமில்லை.”என சொன்னதைக்கேட்டு மன ஆறுதலடைந்தவாறு தட்சணையை வெற்றிலையில் பாக்கோடு வைத்துக்கொடுத்து விட்டு வெளியேறினாள்.

அறுவைச்சிகிச்சை முடிந்து வீடு வந்த ஆறுமாதத்தில் தாயும் இறந்து விட, தாயை புதைத்த சுடுகாட்டுக்கு போய் தேடுவான்.”அம்மா எந்திருச்சு வரமாட்டாளா?” என போவோர் வருவோரிடம் கேட்பான்.அவனது தாய் பாசத்தையும்,வெகுளித்தனத்தையும் கண்டு ஊர்க்காரர்களும்,சொந்தங்களும் கவலைப்படுமளவுக்கு கவலைப்படாத தந்தை தங்கப்பன்,விவசாய கூலி வேலைக்கு தமது தோட்டத்துக்கு வந்துகொண்டிருந்த உறவுக்காரப்பெண்ணை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டார்.

சித்தியின் முகத்தை பார்க்க பிடிக்காதவனாய் சுவற்றுப்பக்கம் திரும்பி அமர்ந்து சுவற்றில் மாட்டி பொட்டு வைத்து,மாலை போடப்பட்டுள்ள தன் தாயின் போட்டோவை பார்த்தபடி சாப்பிடுவான்.”உம்பட ஆத்தா படம் மாட்டிருக்கங்காட்டித்தான எம்பட மொகத்த பாக்கப்புடிக்காம திரும்பி குக்கிக்கிறே…?”என சொன்ன தந்தையின் இரண்டாவது மனைவி சித்தி தன் தாயின் போட்டோவை கழட்டி மாட்டுக்கட்டுத்தரையில் போட்டு உடைத்து,கூட்டி குப்பை மேட்டில் வீசியதைக்கண்டு ஓடிச்சென்று கோபம் தலைக்கேறியவனாய் அருகிலிருந்த கற்களை எடுத்து சித்தி மேல் வீச ,தலையில் காயம் பட்டு ரத்தம் வடிய மயக்கமான சித்தியை ஓடி வந்து எடுத்தணைத்து,தன் வேட்டியைக்கிழித்து கட்டுப்போட்டபடி மருத்துவ மனைக்கு தனது புல்லட் பைக்கில் அழைத்துச்சென்று திரும்பினார் தந்தை.

பயத்தின் சோர்வால் வீட்டிற்குள் வெறுந்தரையில் தூங்கிப்போன மகன் குழந்தை சாமியை தன் மகன் என்பதை மறந்து, வெளியே கொய்யா மரத்தில் கிளை விட்டிருந்த பிரம்பு போன்ற ஒரு குச்சியை முறித்து வந்து கண்கள் சிவந்து கடுமையான கோபத்துடன்,கண்மூடித்தனமாக தூக்கத்தில் இருக்கும் குழந்தை என நினைக்காமல் தன்னிலை மறந்து,வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிப்பது போல் அடித்து விட்டே அமைதியானார்.அதை சித்தி தடுக்காமல் வேடிக்கை பார்த்தாள்.

கடுமையாக அடித்ததாலும்,பயத்தாலும் காய்ச்சல் அதிகமாக‌ ஜன்னி வரும் நிலையானது சிறுவன் குழந்தை சாமிக்கு.அப்போது ஊருக்குச்சென்று விட்டு பேரைனைப்பார்க்க திண் பண்டங்களோடு திரும்பி வந்த தாயின் தாய் பழனியம்மாளைக்கண்ட குழந்தை சாமி படுக்கையிலிருந்தபடி எழுந்தவன் “அம்முச்சீ….” என அருகில் சென்று “ஓ…”என கதறியபடி இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டான்.குடும்ப நிலைமை சரியில்லாததை புரிந்து கொண்டு தன்னுடன் தன் ஊருக்கே ஒரு தாய் போல, அடித்ததில் நடக்க முடியாத நிலையிலிருந்த பேரனை தன் தோளில் தூக்கி சுமந்தவாறு பாட்டி நடந்து சென்ற போது,இறந்து போன தன் தாயே எழுந்து வந்து தன்னை கூட்டிச்செல்வதாக உணர்ந்து,கவலை துறந்து சாந்தமானான் சிறுவன் குழந்தைசாமி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *