வெற்றிக்குள் ஒரு தோல்வி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 11,178 
 
 

மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று நிர்சலனமாய் இருந்தது.
காபி டம்ளருடன், மாடிக்கு வந்த வள்ளிக்கண்ணு, மகன் அருகில் பூரிப்பாய் வந்து, ‘என்னய்யா… இங்க வந்து படுத்துக்கிடக்குறே… உங்கப்பா உன்ன காணலன்னு கீழே தேடிட்டு இருக்காரு… நம்ம உறவு முறையில, எத்தனை பேர் போன் செய்து கேட்டாங்க தெரியுமா…’ அவள் சொல்லி முடிக்கும் முன், அழகுநம்பி வாயெல்லாம் பல்லாய் மாடிக்கு வந்தார்.

‘சஞ்சய், இப்பத்தான் உன்னோட ஸ்கூல் பிரின்ஸ்பாலை பாத்துட்டு வர்றேன். நீ பள்ளியில முதல் மதிப்பெண் பெற்றிருந்த மாதிரி, ‘கட்-ஆப்’ மார்க் சேர்த்து, உனக்கு நிச்சயமா மெடிக்கல் சீட் கிடைச்சிடுங்கறார். நீ என்னடானா, இப்படி படுத்துட்டு இருக்கிற…” என்றார்.

“அப்படியாப்பா…” என்றான் சுரத்தில்லாமல் சஞ்சய்.

‘என்ன சஞ்சய், முகத்த இன்னும் ஏன் தூக்கி வச்சுட்டு இருக்குற… இன்னும் நீ சமாதானம் ஆகலயா…’ குரலில் கண்டிப்பை ஏற்றி கேட்டார் அழகுநம்பி.

“நீங்கதான் என்னை புரிஞ்சுக்காம பேசுறீங்க. எனக்கு, ‘லிட்ரேச்சர்’ படிக்கணும்ன்னும், கிரிக்கெட்டுல சாதிக்கணும்ன்னும் ஆசை…’ கண்களில் கனவுகளோடு, கெஞ்சும் தொனியில் கேட்டான்.
‘ப்ச்’ வெறுப்போடு, தலையை ஆட்டிய அழகுநம்பி, ‘இப்ப, உன்னை கிரிக்கெட் விளையாட வேண்டாம்ன்னு யாரு சொன்னது… தாராளமா விளையாடு. அதுக்காக மெடிக்கல் படிக்கக் கூடாதா என்ன?’ என்று கேட்டு, மனைவியை நிமிர்ந்து பார்க்க, அவர் பேச்சுக்கு ஆதரவாய், அவளும் தலை அசைத்தாள்.

“அப்பா… நீங்க நினைக்கிற மாதிரி, நான் பொழுது போக்குக்கு கிரிக்கெட் விளையாட விரும்பலப்பா… ஆல் ரவுண்டரா வரணும்; நிறைய சாதனை செய்யணும்…’ அவனுடைய கண்களில் வெளிச்ச பொட்டாய் நம்பிக்கை பளபளத்தது.

“அடப் போப்பா… கோடிப் பேர் விளையாட வந்தா, ஒரு ஆளு தான் சச்சின் ஆக முடியும். சச்சின் கூட வந்தவங்கள்ல எத்தனை பேரு நிக்குறாங்க சொல்லு பாக்கலாம்… இதப்பாரு சஞ்சய்… உனக்கு இதுக்கு மேல, எப்படி சொல்லி விளங்க வைக்கறதுன்னு தெரியல. என் வாழ்க்கையில கிடைக்காத எல்லாமும், உனக்கு கிடைக்கணும்ன்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல. அந்தக் கனவை நீ உடைச்சிட்டா அப்புறம் நாங்க வாழறதுல, எந்த அர்த்தமும் இல்ல…” அமைதியாய் சொல்லிவிட்டு எழுந்து போனார் அழகுநம்பி.

அவருடைய நடையின் தள்ளாட்டமும், அவர் முகத்தில் தென்பட்ட வெறுமையும், சஞ்சய்யின் ஆசைகளை நொறுக்கிப் போட்டது. இருளில் மெதுவாய் பின்தொடரும் நிழலைப் போல், ஆரவாரம் எதுவுமில்லாமல், அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்ற உறுதி பூண்டான்.

ஐந்தே ஆண்டுகள், கண் இமைக்கும் வேகத்தில் கரைந்தோடி விட்டது.

அப்பாவின் எந்தக் கனவும், துளியும் தப்பிதம் ஆகவில்லை. சுணக்கமும், தொய்வும் ஏற்படாத அவனுடைய அறிவாலும், உழைப்பாலும் மருத்துவர் கனவு வெகு இயல்பாய் கைகூடியது.

நான்கு தங்க பதக்கங்களுடன், எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றான். அழகுநம்பி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உறவு முறைகள் அல்லாமல், ஊரில் உள்ள பெரிய குடும்பத்தில் இருந்தெல்லாம், திருமணத்துக்கு வரன் தேடி வந்து குவிந்தன.

ஆனந்தத்தில் பூரித்து நின்றார் அழகு நம்பி.

“வள்ளிக்கண்ணு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு புரியுதா?” என்றார் ஆனந்தமாக.

“புரியுதுங்க… ஏன்னா, நான் அதை விடவும் மகிழ்ச்சியா இருக்கேன். எங்க போனாலும், நம்ப புள்ளைய பத்தித்தான் கேட்குறாங்க. உறவு முறையில பொண்ணு வச்சிருக்கவங்க எல்லாம், எப்படியாவது நம்ப புள்ளைக்கு கட்டி தந்திரணும்ன்னு கங்கணம் கட்டிட்டு அலையுறாங்க.

“இதெல்லாம் பாக்கும்போது, மனசு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுதுங்களா… நம்ப புள்ளயும், டாக்டர்ங்கிறத என்னால நம்பக்கூட முடியல,” என்று சொன்ன மனைவியை, பூரிப்பாய் பார்த்தார் அழகுநம்பி.

“இதைத் தான் நான் அப்பவே எடுத்துச் சொன்னேன். எப்பவுமே, ‘மூத்தோர் சொல் வார்த்தையும் முதிர்நெல்லியும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும்’ன்னு சொல்வாங்க. அதை புரிஞ்சுக்காம, தமிழ் படிக்கிறேன், கிரிக்கெட் விளையாடுறேன்னு சிறுபிள்ளைத்தனமா பேசினானே…” என்று சொல்லி, ‘கடகட’வென சிரித்தவர், முகத்தில் மெல்லிய வலியும், சந்தோஷமும், ஒருசேர,”வள்ளிக்கண்ணு, என் வாழ்க்கையில நான் ஆசைப்பட்டது எதுவும் நடந்ததில்ல… ஏன் என் பேர்கூட அவ்வளவா எனக்கு பிடிக்கல. நான் நல்லா படிச்சும், எங்கப்பாவால ஐந்து லட்ச ரூபா புரட்ட முடியாததால, என்னுடைய டாக்டர் கனவு முடிஞ்சி போச்சு.

“ஏதோ படிச்சு, சின்னதா தொழில் துவங்கி, என்னை நானே முன்னேத்திக் கிட்டேன். எனக்கு நல்ல வழிகாட்டுதல் இல்ல. அதனால தான், என் புள்ளைக்கு நல்ல வழிகாட்டியா, நல்லது, கெட்டதுகளை இனம் பிரிச்சு காட்டுற அன்னப்பறவையா நின்னு, என்னுடைய பணியை சரியா செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்,” என்றவரின் கண்கள், அனிச்சையாய் கலங்கியது. நெகிழ்வாய் பார்த்தாள் வள்ளிக்கண்ணு.

“என்னப்பா… இந்நேரத்துல இங்க உட்காந்துட்டு இருக்கீங்க,” என்ற சஞ்சய், மருத்துவருக்கே உரித்தான மிடுக்குடன், ‘மொழு மொழு’வென, ஷேவ் செய்த முகமுமாய் அருகில் வந்து அமர்ந்தான். மகனை, இருவரும் பூரிப்புடன் பார்த்தனர்.

“ஒண்ணுமில்லப்பா சும்மா பழைய ஞாபகம். ஆமா… நாளைக்கு எப்போ விழா, நாம எத்தனை மணிக்கு போகணும்?”

“காலையில… 11:00 மணிக்குப்பா.”

“சஞ்சய், உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குப்பா,” நெகிழ்வாய் சொன்ன அம்மாவை பார்த்து, மென்மையாய் புன்னகைத்தான்.

விழா மண்டபம், டாக்டர்களால் நிரம்பி இருந்தது. பார்வையாளர்களாய் அமர்ந்திருந்த பெற்றோர், பரவசத்தில் கண்கள் நிறைய தம் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். தங்கப் பதக்கங்களை வென்ற மருத்துவ மாணவர்களுக்கு, கேடயங்களை வழங்கும்போது, பத்திரிகை நிருபர்களின் புகைப்படக் கேமராக்கள், கண் சிமிட்டின.

விழா நாயகனான சஞ்சய், இறுதியாக அழைக்கப்பட்டான். நான்கு தங்கப் பதக்கங்களை வழங்கும்போது, கல்லூரியே ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பியது. சந்தோஷ மிகுதியால் வள்ளிக்கண்ணு கண்களில் கண்ணீர் கரகரத்தது; எந்த உணர்வை கொட்டுவது என்று அறியாமல் அமர்ந்திருந்தார் அழகுநம்பி.

“அனைவருக்கும் வணக்கம்.”

சஞ்சய் தமிழில் ஆரம்பித்தபோது, கூட்டம் வாய் பிளந்தது.

“இந்த பதக்கங்களையும், விருதுகளையும் என்னுடைய சார்பாய், என்னுடைய அப்பா பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,” என்று அவன் சொன்னபோது, அனைவரும் புருவம் சுருங்கி, அதற்கான காரணத்தை அறிய முற்பட்டனர்.

“டாக்டர் சஞ்சய்… ரொம்ப பெருமையா இருக்கு. எந்தவொரு உயர்ந்த நிலையை அடைஞ்சாலும், பெற்றவர்களை மதிக்கணும்கற, உங்களுடைய உயர்வான சிந்தனையை, இந்த மன்றம் தலைவணங்கி ஏற்குது. ஒவ்வொரு புள்ளையும், உங்கள மாதிரி இருக்கணும்கற விண்ணப்பத்தை, இந்த சபைல கேட்டுக்கறேன்,”என்று விழாத் தலைமை ஏற்றிருந்த, மருத்துவ கவுன்சில் தலைவர் சொன்னபோது, எல்லாரும் நெகிழ்வாய் கைதட்டினர். சஞ்சய் தலைதாழ்த்தி அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டான்.

“என்னுடைய இந்த நிலைக்கு காரணம், என் பெற்றோர்; அதிலும், குறிப்பா எங்கப்பா. அவர், தன்னுடைய கனவுகளை எனக்குள் வளர்த்தார்; அவருடைய அங்கியை எனக்கு அணிவித்து அழகு பார்த்தார். தான் எப்படி ஆகணும்ன்னு ஆசைப்பட்டாரோ அதுவாகவே என்னை ஆக்கினார். இது, அவருடைய கனவுகளின், லட்சியத்தின் வெற்றி. நிச்சயமாய், இந்த வெற்றியில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அவர் கர்த்தா… நான் கருவி.”

மகனின் பேச்சு, திசை மாறுவதை கொஞ்சம் பதற்றமாய் கவனிக்க ஆரம்பித்தார் அழகுநம்பி.

“நம்ம சமூகத்துல, ஒரு தவறான நம்பிக்கை இருக்கு. வெற்றிங்கறது கல்வி, பதவி, வருமானத்தை மையமா வச்சுத்தான் தீர்மானிக்கப்படுது. ஆனா, எனக்கென்னவோ அது வெற்றி இல்லன்னு தோணுது.

“ஊர் இத வெற்றின்னு சொன்னாலும், ஒருவனுடைய தனிப்பட்ட கனவுகள், தோத்துப் போறது எப்படி வெற்றியாகும். நான், என்னுடைய அப்பாவுடைய கனவுகளை சுமந்து போற தேரா மட்டுமே இருந்திருக்கேன். சுமந்து போற பயணத்துல, என்னுடைய கனவுகளை நான் தவற விட்டுட்டேன். எனக்குள்ள உருவாக இருந்த ஒரு மொழி ஆராய்ச்சியாளனும், ஒரு விளையாட்டு வீரனும் முடங்கி போன வலி, என்னுடைய தனிப்பட்ட இழப்பு.

“ஆனா, இந்த நிமிஷம் என்னால் ஒரு உறுதியை தர முடியும். நிச்சயமா இந்த இழப்பை, என்னுடைய குழந்தைகளின் தோளில் ஏத்த மாட்டேன். நான் நானாக முடியாததாகவே இருக்கட்டும்; அவங்களில் என்னை உருவாக்க மாட்டேன்.

“கொஞ்சம் தாமதமாக கிடைச்சிருந்தாலும் இது என் அப்பாவுடைய வெற்றி; அவருடைய கனவுகளின் வெற்றி. படிச்சது நானாகவே இருந்தாலும், நான் இப்படித்தான் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டவர் அவர்… அதனாலே, இந்த பதக்கங்களை, அவர் பெறணும்ன்னு விரும்பறேன்,”என்று சொல்லி முடித்ததும், சபையே மவுனமாய் இருந்தது. எல்லாருக்குள்ளும், ஒரு சஞ்சலமான வலி பரவுவதை உணர முடிந்தது.

அமைதியாய் எழுந்து வந்தார் அழகுநம்பி. எல்லாருடைய பார்வையும், அவர் மீதே படர்ந்திருந்தது. அவர் தன் அருகில் வந்ததும், அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், “மன்னிச்சுருங்கப்பா… இந்த இடத்துலயாவது, என்னை நான் பதிவு செய்யணும் இல்லயா… இனி வரும் காலத்திலாவது, பெத்தவங்க குழந்தைகளின் கனவுகளை புரிஞ்சு வழிவிடணும்ன்னு தான், இப்படி பேசினேன்,” என்று மென்மையாக கூறினான் சஞ்சய்.

அவர் பதில் பேசவில்லை. பதக்கங்களை பெறும்போது, ஒரு இனம் புரியாத வலி உள்ளே படர்ந்து கிடந்தது. மகனை நிமிர்ந்து பார்க்கிற திறனற்று குற்ற உணர்வில் நின்றார் அழகுநம்பி.

– வாரமலர் (Dec 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *