வெண்டி மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 19,521 
 
 

வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து…பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது.

வெண்டி கடையைவிட்டுப் போனதும் ‘செல்லம் அப்பச்சி… நீங்க உங்க மாப்ளயைப் பார்த்து வெட்கப்படுறதும், மாப்ள உங்களைப் பார்த்து வெட்கப்படுறதும்… போங்க அப்பச்சி. காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சு சாப்பாட்டைப் போடுங்க’ எனச் சவரக்கத்தியை டயர் தோலில் தடவிக்கொடுத்துக்கொண்டே சொன்னார் ஞானம். அதே ஞானம்தான் விடிந்தும் விடியாததுமாக வீடு தேடிவந்து, கதவைத் தட்டி, வெண்டி பூச்சிமருந்தைக் குடித்துவிட்டான் எனத் தகவல் சொன்னது.

‘நிசந்தானா ஞானம்?’ என அவரது காதுக்குப் பக்கத்தில் ஜாடையும் பேச்சுமாகக் கேட்டார் செல்லையா. ஞானத்துக்கு இரண்டு காதுகளும் கேட்காது. ‘எதையோ கேட்டு, எதையோ சொல்லிக்கொண்டிருப்பான்’ என்ற பதற்றம் செல்லையாவுக்கு.

‘உங்ககிட்டே நான் ஏன் அப்பச்சி பொய் பேசப்போறேன்? பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறதா சொல்றாங்க. பயபுள்ள பூச்சிமருந்தைக் குடிச்சிருக்கான். வெண்டி அப்பச்சி சாகிறதுக்காகவா, நான் நேத்து கிராப்பு வெட்டி, சவரம்செஞ்சி அனுப்புனேன்?’ எனப் புலம்பிக்கொண்டே கடையைத் திறக்கப் போனார் ஞானம். வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை செல்லையா. சட்டையைப் போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்தார்.

வெண்டியைத் தூக்கி வளர்த்தவர் செல்லையா ஆசாரிதான். பார்ப்பதற்கு ‘வெள்ளைவெளேர்’ என இருந்ததால், செல்லையாதான் அவனுக்கு ‘வெண்டி’ எனப் பட்டப்பெயர் வைத்தார். போனூர் ஆசாரிமார்களிடம் வெண்டி என்ற பட்டப்பெயர் பிரபல்யம். வெண்டிக்கு ‘சண்முகம்’ எனப் பெயர் வைத்திருந்தார் அவனது அப்பா. செல்லையாவின் தங்கை சுப்பம்மா, தன் மகன் சண்முகத்தைத் தூக்கிக்கொண்டு பெரியரேவூபட்டியில் இருந்து ஒருநாள் ராத்திரி போனூருக்கு வந்தாள். அப்போது சண்முகம் இரண்டு வயது முடிந்து, பால்குடி மறக்காமல் இருந்தான்.

‘அவரு மலையாளத்துக்காரியைச் சேர்த்துக்கிட்டு, மூணாறுலயே இருக்காரு. ஊருக்கு வர மாட்டேங்கிறாரு. செலவுக்கு வாராவாரம் அனுப்புற பணத்தைக்கூட இப்போ அனுப்புறது இல்லைண்ணே. ரெண்டு தடவை கடுதாசி எழுதிக் குடுத்துவிட்டேன். பதிலே வரலை. நேரா ஒரு தடவை போயிட்டு வாங்க. கூட நானும் வர்றேன்’ என செல்லையாவின் முன்பாக அழுதபடி நின்றாள் சுப்பம்மா.

முதலில் தான் மட்டும் மூணாறுக்குப் போய் விசாரித்துவிட்டு வருவதாக, காலைப் பேருந்தில் செல்லையா புறப்பட்டுச் சென்றார். சுப்பம்மாவின் புருஷன் மலையைவிட்டும் மலையாளத்துக்காரியை விட்டும் வருவதாக இல்லை. அந்தப் பெண் வயிற்றைத் தள்ளிக்கொண்டு, கண்ணாடித் தம்ளரில் டீ கொண்டுவந்து தந்தாள்.

‘மாப்ள… சுப்பம்மா யாருக்கு என்ன பாவம் செஞ்சா? கைப்புள்ளயை வெச்சுக்கிட்டு அவ என்னா செய்வா? மலையைவிட்டுக் கீழே வாங்க. ஊர்ல போய்ப் பிழைச்சுக்கிடலாம். இந்த ஊர் உங்களுக்கு வேணாம்’ என்றார் செல்லையா.

‘நான் ஊருக்கு வந்தா இந்தப் புள்ளயோட அண்ணன் – தம்பிங்க என்னை வெட்டிப் போட்டுருவானுங்க. நான் சாகணும்னு நீங்க நினைச்சா வர்றேன்’ என்றார்.

அவருக்கு முன்பாக உமியோட்டு சட்டி புகைந்துகொண்டிருந்தது. ஓலைப் பெட்டியில் இருந்த கப்பங்கிழங்கை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டார். வெந்திருந்த கப்பங்கிழங்கு, பூவாக விரிந்துகிடந்தது. அதில் இருந்து வந்த அவித்த வாசத்தால், செல்லையாவுக்கு நாவில் எச்சில் ஊறியது. உள் அறையில் நின்றிருந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் மாறி மாறிப் பார்த்தார். டீ தம்ளரைக் காட்டி அந்தப் பெண், ‘அண்ணே… டீ சூடு ஆறிடப்போவுது குடிங்க’ என்றாள். அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும், செல்லையாவுக்கு ஆச்சர்யம். மாப்பிள்ளையைப் பார்த்தார்.

‘நம்ம அணைக்கரைப்பட்டிக்காரங்க பாவா. தோட்டத்து வேலைக்கு வந்து இங்கேயே குடியாளு ஆகிட்டாங்க. வெட்டருவாளும் கத்தியும் வெச்சுட்டுத்தான் சுத்திட்டு இருக்காங்க. அங்க வந்து சாகிறதுக்கு இங்கேயே இவகூட இருந்துட்டுப் போறேன்’ என வெறுத்துப்போய் பேசினார். செல்லையாவுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. மலை இறங்கி வந்துவிட்டார். மூணாறில் அப்போது நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. பேருந்து மலைப்பாதையில் நகர்ந்து வந்தபோது, சற்றுத் தொலைவில் அந்தப் பூக்களைப் பார்த்தார். செல்லையா அப்போதுதான் குறிஞ்சிப் பூக்களைப் பார்க்கிறார். வளைந்த பாதையில் பேருந்து இறங்கிக்கொண்டிருந்தது.

ஊரின் வாசமோ, இல்லை பூத்திருந்த பூவின் வாசமோ, பேருந்து முழுக்க கம்மென இருந்தது. ஊர் வந்து சேர்கிறவரை அந்தப் பூக்களோடு, மலையாளத்துப் பெண்ணின் முகமும் மனதில் இருந்து மறையாமல் இருந்தது. போனூரில் விளக்குகள் எரியத் தொடங்கியதை, குனிந்து ஜன்னலின் வழியாகப் பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் சுப்பம்மாவுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அழுதார். அவர் அழுவதைப் பார்த்து வீட்டுப் பெண்களும் அழுதனர். தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வெண்டியைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டார்.

வீட்டுக்கு வெண்டி வந்த யோகத்தில் செல்லையா ஆசாரிக்கு பட்டறையில் வேலைகள் தொடர்ந்து இருந்தன. செல்லையாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதில் இருந்து அவருக்கு வெண்டியின் மேல் பிரியம் ஜாஸ்தி ஆனது. தன் மகள் ஜமுனாவை அவனுக்குக் கல்யாணம் செய்து தரவேண்டும் என நினைத்தார்.

வெண்டி பூச்சிமருந்து குடித்ததை செல்லையாவால் நம்பவே முடியவில்லை. ‘வேறு யாரோ மருந்தைக் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதை, செவிட்டுப்பயல் ஞானம் தவறுதலாக வெண்டி எனச் சொல்கிறான்’ என்று தவிதாயப்பட்டார். இருந்தபோதிலும் சேதியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள சுப்பம்மா வீட்டுக்கு நடந்தார். செல்லையாவால் தெருவில் நடக்க முடியவில்லை. கிறுகிறுப்பும் படபடப்புமாக வியர்த்துக்கொட்டத் தொடங்கியது. கழுதை மார்க்கெட்டைக் கடந்து அன்னகாமு காபி கடைப்பக்கமாக வந்தார். பட்டறைக்காரர்கள் யாரும் இல்லை. இந்நேரத்துக்கு எல்லாம் இரண்டு மூன்று பேராவது நின்று, காபி குடித்துக்கொண்டிருப்பார்கள். இன்று பார்த்து கடையில் யாரும் இல்லை.

நேற்று ராத்திரிகூட வெண்டிப்பயலைப் பார்த்தேனே. என்னைப் பார்த்து புளிச்சச் சிரிப்பு சிரித்து, தலையைக் குனிந்தபடி ஞானம் கடையைவிட்டு இறங்கிப்போனானே. ராத்திரியோட ராத்திரியாக இப்படியா ஆகும்? விஷயம் மட்டும் தப்பிதமாகப் போகட்டும், இந்த ஞானம் மங்கிலியை செவிட்டிலே அறையணும் என முனகிக்கொண்டார். செல்லையாவுக்கு மனம் அலைந்தது. தாங்க முடியவில்லை. தானாகவே கண்ணீர் வடியத் தொடங்கியது.

சண்முகம் போன வருஷம் காமாட்சியம்மன் கோயில் விசேஷத்துக்கு, பால் குடம் எடுத்தான். 10 நாட்கள் விரதம். கையில் காப்பு கட்டி மஞ்சள் வேட்டி கட்டிக்கொண்டு தெருவுக்குள் வரும்போது, செல்லையாவுக்கு உடம்பு புல்லரித்துவிட்டது. செல்லையா வீட்டுக்குள்ளே பட்டறைபோட்டு வேலைசெய்கிறார். ‘தண்டட்டி ஸ்பெஷலிஸ்ட்’. சண்முகம் தனக்கு வரும் வேலைகளுக்கு ஏதாவது தோது கேட்கவும் சாமான்கள் எடுக்கவும் வீட்டுக்கு வருவான். அவன் வருவது ஜமுனாவுக்கு உடனே தெரிந்துவிடும். மோரைக் கலக்கி உப்பு போட்டு ஆற்றிக்கொண்டு, மேஜைப் பெட்டியில் வைத்துவிட்டுப் போவாள். வெறுமனே வைத்துவிட்டுப் போகாமல், ‘டொக்’ என்ற சத்தத்துடன் தம்ளரை வைப்பாள். அது அவனுக்கு, அவள் காட்டும் அடையாளம். அப்படி வைக்கும்போது, தம்ளரில் இருந்து நீர்மோர் அலம்பிச் சிந்த வேண்டுமே… ஒரு பொட்டுக்கூடச் சிந்தாது. தம்ளர் சத்தம் அவர்களுக்கு இடையே ஒரு பரிபாஷை. இதெல்லாம் செல்லையாவுக்குத் தெரியும். வேலையில் மும்முரமாக இருப்பவர்போல பாவலா காட்டிக்கொண்டு எதையாவது தேடுவார். ஜமுனாவை நினைத்தபோது அவருக்கு உயிர் போய்த் திரும்பியது. அவளுக்கு என்ன பதில் சொல்வது?

சுப்பம்மா வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்ததும் அவர் வீட்டைப் பார்த்தார். வீடு பூட்டியிருந்தது. சுப்பம்மா காலையில் எட்டு மணிக்கு எல்லாம் ஏலக்காய் கடை வேலைக்குப் போய்விடுவாள். மதியம் ஒரு மணிக்குப் பிறகுதான் சாப்பாட்டுக்கு வருவாள். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்டார் செல்லையா. அவர்களுக்கு எந்த விஷயமும் தெரியவில்லை.

‘வெண்டி ரெண்டு மூணு நாளா வீட்டுக்கு வரலை நைனா. சுப்பம்மா மட்டும்தான் தனியா இருக்கு. ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருந்துச்சு’ எனப் புகார் சொன்னார்கள். சுப்பம்மா தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே என, பட்டறை வீதிக்கு வேகுவேகுவென நடந்தார் செல்லையா.

பட்டறை வீதியில் கடைகள் திறந்திருக்க வில்லை. யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தார். தெரு முக்கில் இருந்து நாய் ஒன்று ஓடி வந்தது. யாரிடம் கேட்பது? கண்களில் யாரும் தட்டுப்படாதது செல்லையாவுக்கு நெஞ்சு நின்றுவிடும்போல் இருந்தது. வண்ணாத்தியும் அவளது கழுதையும் வழிமறித்து பாதையில் நின்றிருந்தனர்.

”வெண்டி விஷத்தைக் குடிச்சிட்டு ஆஸ்பத்திரியில இருக்கான்’னு சொல்றாங்க. நிசம்தானா?’ என அவளிடம் கேட்டார்.

வண்ணாத்தி பொதிமூட்டையை கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு, ‘வெண்டியை போலீஸ்ல பிடிச்சிட்டுப் போயிட்டதாப் பேசிக்கிட்டாங்க நைனா’ எனப் புதிதாக ஒன்றைச் சொன்னாள்.

‘ஆளாளுக்கு ஒண்ணு சொல்லுதே. யார் பேச்சை நம்புறது?’ என நினைத்து செல்லையா தலையில் அடித்துக்கொண்டு சண்முகத்தின் பட்டறைக்கு முன்பு போய் நின்றார். அவனது பட்டறையின் கதவு இரண்டு பூட்டுகள் போட்டுப் பூட்டியிருந்தது. எதிரே இருந்த செட்டியார் வீட்டை ஒரு நோட்டம்விட்டார். வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. வீட்டுக்குள் யாரும் இல்லை.

பட்டறை வீதியில் இருந்து பாதி தூரம் வரை வந்துவிட்டார். சீனி ஆசாரி பட்டறையைப் பார்த்தார். ராத்திரி வேலைசெய்துவிட்டுக் கதவை ‘பப்பரப்பா’ எனத் திறந்துபோட்டுத் தூங்குகிறவன் சீனி. அவனும் பெரிய பூட்டுப் போட்டு கதவைப் பூட்டியிருந்தான். தெரு முக்கு வரை போய்விட்டு வந்தார் செல்லையா. ‘பெரியாஸ்பத்திரிக்குப் போவதா… இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதா?’- குழப்பத்தில் நடுரோட்டில் நின்றார். கிழக்கு பக்கம் போலீஸ் ஸ்டேஷன்; மேற்கு பக்கம் பெரியாஸ்பத்திரி.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜமுனாவின் ஜாதகத்தையும் சண்முகத்தின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்க்க போ.தர்மத்துப்பட்டி ஜோசியரிடம் காட்டினார். அவர் நல்லவிதமாகத்தான் சொன்னார். ஏதாவது கோட்டம் இருந்தால் உடனே சொல்லிவிட்டு, பரிகாரம் பண்ண அழைத்துப் போய்விடுவார்.

வெண்டிக்கு ஏழு வயதில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சோழி உருட்டி சொன்னது, இப்போது அவருக்கு ஞாபகம் வந்தது. ஏழு வயது கண்டத்தைத் தாண்டிவிட்டால், அப்புறம் 18 வயதில் ஒரு கண்டம். அதையும் தாண்டிவிட்டால் 98 வயசு வரை ஒன்றும் இல்லை எனச் சொல்லியிருந்தார். ‘பரிகாரம் செய்துவிட்டால், அந்தக் கண்டமும் காத்திலே சாம்பலா கரைஞ்சுப்போயிடும்’ என, சுருளித்தீர்த்தத்துக்கு அழைத்துப்போனார். இப்போது வெண்டிக்கு 19 வயது ஆரம்பம். 18 வயது முடிந்ததற்காக சங்கராபுரம் கருப்பசாமிக்கு போன வருஷம் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்தார்கள். அதோடு கஷ்டகாலம் தீர்ந்துவிட்டது என நினைத்தால், துரத்திவருகிறதே என செல்லையா நினைத்துக்கொண்டார்.

ஏழு வயது கண்டம் இது மாதிரிதான். பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே தவறி விழுந்துவிட்டான் வெண்டி. விழுந்தவனுக்கு பேச்சுமூச்சு இல்லை. பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். ரெண்டு நாட்கள் கழித்து கண் விழித்துப் பார்த்த பிறகுதான் செல்லையாவுக்கு மூச்சு வந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டு மூணாறில் இருந்து வெண்டியின் அப்பாவும் மலையாளத்துக்காரியும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளையும் வந்துவிட்டார்கள். மூன்று நாட்கள் வீட்டில் இருந்து விருந்து சாப்பிட்டுவிட்டு, ராத்திரி ஆட்டமும் பகல் ஆட்டமுமாக இரண்டு சினிமா படங்களைப் பார்த்துவிட்டு மலைக்குப் புறப்பட்டார்கள். போகும்போது சுப்பம்மாவிடம், ‘நீ வேணா சண்முகத்தை அனுப்பி வை. என்கூட வேலை பார்த்துக்கிட்டு இருக்கட்டும்’ எனச் சொன்னான் அவள் கணவன். அவள் விடுவதாக இல்லை.

‘உன் பட்டறைக்கு ஆள் வேணும்னா, போனூர் மந்தையிலே வேற ஆளைக் கூட்டிட்டுப் போ. உனக்கும் உன் அவளுக்கும் சேவகம் செய்யத்தான் நான் புள்ளபெத்து வெச்சிருக்கேனா?’ என ஆங்காரமாகக் கேட்டாள்.

சுப்பம்மாவின் ஆங்காரத்தில்தான் வெண்டி வேகவேகமாக வளர்ந்தான். வெண்டியைப்போல ஜமுனாவும் வளர்ந்தாள். ஜமுனா அந்தத் தெருவிலேயே உயரமான பெண். அவள் அம்மா அங்கம்மாவைப்போல நீளமான மூக்கு; நீளநீள விரல்கள். இரட்டை ஜடை போட்டுத் தலையில் பூ வைத்து நடந்துபோனால், அவ்வளவு அழகு.

மதுரைக்குப் போய்த் திரும்பும்போது இரண்டு பொட்டலங்கள் அல்வாவும், இரண்டு டப்பா தாழம்பூ குங்குமமும் வாங்கிவருவான் வெண்டி. செல்லையாவுக்குக் கடவாய்பற்களும், முன்பற்களும் விழுந்து பாதி பொக்கையாகிவிட்டது. மனுஷனுக்குப் பல் போன பிறகும், ருசி போகவில்லை. அல்வாவை அப்படியே ‘குளுக், குளுக்’ என முழுங்குவார். முழுங்கிவிட்டு கண்களை மூடி சப்புக்கொட்டி, ‘வெண்டி மாப்ள நீயும் என் மகளும் நூறு வருஷம் இருந்து, பிள்ளைகளோட சந்தோஷமா வாழணும்’ என வாழ்த்துவார்.

வெண்டி சிரித்துக்கொண்டு ஒரு டப்பாவைக் கொடுத்துவிட்டு, ‘தாழம்பூ குங்குமம்…’ என ஜமுனாவிடம் நக்கலாகச் சொல்வான். அவளும் ‘தெரியும்… தெரியும்…’ எனப் பொய்யாகக் கோபம் காட்டுவாள். இன்னொரு டப்பா குங்குமத்தையும், இன்னொரு பொட்டலத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு பட்டறை பக்கமாக நடந்துபோவான். அவன் தெருவின் முக்கு திரும்புகிற வரை, ஜமுனா வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பாள்.

‘வெண்டி மாப்ள வாங்கிவந்த குங்குமம்கூட இன்னமும் தீரலியே. மாடக்குழியில் டப்பா நிறைஞ்சு இருக்கே. அதுக்குள்ள பாவிப்பய இப்படிப் பண்ணிட்டானே. விஷத்தைக் குடிச்சு சாவுற அளவுக்கு என்ன வந்துச்சு? பூச்சிமருந்தைக் குடிச்சுட்டான்கிறாங்க… போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டுப் போயிருக்கிறாங்கன்னும் சொல்றாங்க. எது நிசம்? இதெல்லாம் சுப்பம்மாவுக்குத் தெரியுமா? அவ ஆஸ்பத்திரியிலதான் இருக்காளா… இல்லை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காளா? ஆஸ்பத்திரியில வேற யார் யார் இருப்பாங்க, இல்லை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்களா? ஒண்ணும் தெரியலியே’ – மனசுக்குள் புலம்பியபடியே கண்களைத் துடைத்துக்கொண்டு நடந்தார் செல்லையா.

வெண்டிமாப்பிள்ளையைப் பார்க்கும்போது செல்லையாவுக்கு வெட்கம் வந்துவிடும். பெண்பிள்ளையைப்போல வெட்கப்பட்டு ஒதுங்கி, முகம் திருப்பிக்கொள்வார். தான் தூக்கி வளர்த்த பிள்ளை என்றபோதிலும் அவருக்கு வெட்கம் வந்துவிடும். ஜமுனாவைப் பார்க்கும்போது அவரது மனதில் வெண்டியோடு அவள் நிற்பது தெரியும். ஜோடிப்பொருத்தத்தை மனதிலேயே கண்டு பூரித்துப்போய்விடுவார். தன் மகளுக்கும் வெண்டிமாப்பிள்ளைக்கும் கல்யாணம் நடந்துவிட்டால், நிம்மதியாக மயானம் போய்சேர்ந்துவிடலாம் என சவரம் செய்யும்போது ஞானத்திடம் புலம்புவார். ஞானமும் அவரைத் தேற்றி, ‘பேரன் – பேத்திகளைப் பார்த்துட்டுத்தான் அப்பச்சி நீங்க போவீங்க. விஜயா லாட்ஜ்ல உளுந்தவடையும் காபியும் உங்க பேரனுக்கும் பேத்திக்கு வாங்கித் தருவீங்க’ எனச் சமாதானப்படுத்துவார். இப்போது யார் தன்னைச் சமாதானப்படுத்துவது என ஏங்கினார். அந்த ஏக்கத்தோடு நடந்தார். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரிப்பது என முடிவுசெய்தார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் நின்றபோது அவருக்கு வியர்த்துக்கொட்டியது. வியர்வையில் முதுகும் வயிறும் சட்டையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. மூச்சு வாங்கியவர், சற்று நேரம் மரத்தின் கீழ் நின்றுகொண்டார். ஸ்டேஷனுக்குள் இருட்டாக இருந்தது. யார் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அசோகமரத்தில் இருந்த இலைகள் உதிர்ந்து தரையில் கிடந்தன. துருப்பிடித்த சைக்கிள்கள் கீழே விழப்போவதுபோல வரிசையாக நின்றிருந்தன. ஒரு மிருகத்தின் எலும்புக்கூடுபோல புல்லட் வண்டி நின்றிருந்தது. செல்லையா தனது முகத்தைத் துடைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். இன்னமும் கூடுதலாக வியர்த்தது. அவர் அறியாமல் வேட்டி முழங்காலில் இருந்து பாதத்துக்கு இறங்கி, தரையைத் தொட்டது. உள்ளே நடக்க நடக்க ஓர் அறை, அந்த அறையில் இருந்து மற்றோர் அறை என ஏதோ குகைபோல நீண்டுகொண்டே சென்றது. அறையில் யாரும் இல்லை. இரண்டு அறைகளைத் தாண்டியதும் வெளிச்சம் தெரிந்தது. சற்றுத் தள்ளியிருந்த வராண்டாவில் ஜனங்கள் நின்றிருந்தனர்.

செல்லையா வராண்டாவை நோக்கி நடந்தார். நின்றிருந்த ஜனங்கள் அனைவரும் பட்டறைவீதிக்காரர்கள். செல்லையாவைப் பார்த்ததும் முகம் திருப்பிக்கொண்டனர்.

கூட்டத்தில் இருந்தவனிடம், ‘வெண்டி எங்கப்பா?’ எனக் கேட்டார் செல்லையா.

‘உள்ளே விசாரிச்சிட்டு இருக்காங்க’ எனச் சொன்னான். எதுக்கு விசாரிக்கிறார்கள். ஏன் இவ்வளவு ஜனங்கள் கும்பலாக கூடியிருக்கிறார்கள் என அவருக்குத் தெரியவில்லை. வீட்டோடு பட்டறைவைத்து வேலை செய்தால் பஜாரில் நடக்கிற விஷயம் எதுவும் காதுகளுக்கு வந்து சேராது. போன மாதம் நடந்த விஷயம் இப்போது காதுக்கு வருகிறது. சுப்பம்மாவாவது தன்னிடம் சொல்லியிருக்கலாம் என நினைத்தார்.

அங்கு நின்றிருந்தவர்கள் யாரும் எதுவும் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. அனைவரும் பயந்துபோயிருந்தனர். கூட்டத்தில் இருந்து மூக்கப்பன் விலகி வந்தான். அவனைப் பார்த்ததும் செல்லையாவுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அவனிடம் விசாரிக்கலாம் என மறித்தார்.

‘மூக்கப்பா… என்னடா பிரச்னை… என்ன விஷயம்?’ எனக் கேட்டார்.

அவன் பதறியவனாக ‘வாயைப் பொத்து’ என்பதுபோல ஜாடை காட்டிவிட்டு, அவரது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான். நடந்தவன் ஓர் இருட்டு அறைக்குள் நின்றான்.

‘வெண்டியைத் திருட்டு கேஸ்ல பிடிச்சுட்டு வந்துட்டாங்க. வெண்டி எதுவும் வாங்கலை. நாங்க சங்கத்தில் இருந்து பேசி வெளியே கொண்டுவரணும்னு வந்து நிக்கிறோம். நீங்க சங்கத்திலே இருக்கிற ஆளுதானே. கூட்டத்துக்கு எதுவும் வர்றது இல்லையா?’ எனக் கேட்டான். ‘சங்கம்’, ‘கூட்டம்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவர் உடம்பு நடுங்கியது. வெண்டிமாப்பிள்ளையை ஒரு தடவை பார்க்க வேண்டும் என தவிப்பாக இருந்தது.

‘நான் ஒரு தடவை வெண்டியைப் பார்த்துக்கிறேன். என்னை அவன் இருக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போப்பா’ எனக் கண்கள் கலங்கினார். மூக்கப்பன் அவரை இழுத்துக்கொண்டு பின்பக்கமாக நடந்தான்.

மூத்திரவாடையும் குப்பையுமாகக் கிடந்த மண்ரோட்டில் அவர்கள் நடந்தார்கள். பழைய காகிதங்களின் மேல் மூக்கப்பன் வேகுவேகுவென நடந்தான். அவனது வேகத்துக்கு செல்லையாவால் நடக்க முடியவில்லை. மூக்கப்பன் நின்ற இடத்தில் ஒரு பெரிய கருங்கல் ஒன்று கிடந்தது. அதன் மேல் ஏறி எட்டிப் பார்த்துவிட்டு, செல்லையாவை ஜாடையில் அழைத்தான். அவர் தனது வயதையும் மீறி தன்னை மறந்தவராக ஓடிவந்தார். தனது மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆவல்.

செல்லையாவும் அந்தக் கருங்கல்லின் மீது ஏறி எட்டிப் பார்த்தார். எக்கி எக்கி பெருவிரலை ஊன்றி எட்டிப் பார்த்தார். ஒரே இருட்டு. வேறு எதுவும் தெரியவில்லை.

‘மூக்கப்பா… ஒண்ணும் தெரியலையேடா’ என்றார்.

‘சத்தம் போடாதீங்க. மண்பானை ஒண்ணு தெரியுதா?’

‘ஆமாம்.’

‘அதுக்குப் பக்கத்திலே புத்தகம் அடுக்கி வெச்சிருக்கிற பீரோ தெரியுதா?’

‘ஆமாம்.’

‘அந்தப் புத்தக இடுக்கு வழியா பாருங்க. வெண்டி உட்கார்ந்திருக்கிறது தெரியும்.’

மூக்கப்பன் சொன்னதுபோல எட்டிப்பார்த்தார். ஓர் ஆள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நன்றாகப் பார்த்தார். அது சண்முகம் இல்லை. வேறு யாரோ. கால் வலி தாங்க முடியாமல், கல்லைவிட்டு கீழே இறங்கி, மூக்கப்பனிடம் வந்தார்.

‘வெண்டிப்பயல் இல்லையேப்பா…’

‘வெண்டிதான் கையைக் கட்டி தரையில் உட்கார்ந்திருக்கான். நீங்க நல்லா பார்க்கலையா?’

‘ஒரு ஆள் தரையிலே உட்கார்ந்திருக்கிறது தெரிஞ்சது. ஆனா, சண்முகம் மாதிரி இல்லையே.’

‘நீங்க எந்த வெண்டியைக் கேட்கிறீங்க நைனா?’ என மூக்கப்பன் குழப்பத்துடன் கேட்டான்.

‘என் தங்கச்சி மகன் சண்முகத்தைக் கேட்கிறேன் மூக்கப்பா…’

‘இவன் காமு மகன் துரைராஜ். அவனையும் பட்டறைவீதியிலே வெண்டினுதான் கூப்பிடுவோம்.’

செல்லையா அந்தக் கருங்கல்லின் மீது உட்கார்ந்தார். தலையில் கை வைத்துக்கொண்டு மூக்கப்பனின் முகத்தைப் பார்த்தார். அவருக்கு வண்ணாத்தியின் முகமும், அவள் ஓட்டிச் சென்ற கழுதையின் முகமும் ஞாபகத்துக்கு வந்தது.

‘சண்முகத்தைப் பார்த்தியா மூக்கப்பா?’ என அவனிடம் கேட்டார்.

‘சண்முகத்தைப் பார்த்து ரெண்டு வாரம் ஆகுது. தியேட்டர்ல ரெண்டு ஐஸ் வாங்கிட்டுப் போனதைப் பார்த்தேன். எப்போனு ஞாபகத்திலே இல்லை. பட்டறைவீதியிலகூட முன்ன மாதிரி அவனைப் பார்க்க முடியலை. எப்போ வர்றான். எப்போ போறான்னு சொல்ல முடியலை. ஒண்ணு சொல்றேன். உங்க மனசிலேயே வெச்சுக்கங்க. அவன் பட்டறைக்கு எதிர்ல இருக்கிற செட்டியார் வீட்டுப் பொண்ணுக்கும் அவனுக்கும் பழக்கம்னு பேசிக்கிறாங்க’ என்றவன், ‘என்ன நைனா… வேற ஏதாவது விஷயமா?’ எனக் கேட்டான்.

‘வெண்டி, பூச்சிமருந்தைக் குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே இருக்கிறதா ஞானம் சொன்னான். பட்டறைவீதிக்கு வந்தா, போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துப்போயிட்டதா வண்ணாத்தி சொன்னா. நான் எங்கே போய்த் தேடுவேன், யார்கிட்டே போய் கேட்பேன்? ஒத்தை பொம்பளைப் புள்ளையை அவனை நம்பி வளர்த்துவெச்சுருக்கேன். படுபாவி கண்கலங்கவைக்கிறான்’ என அழுதார். அவருக்கு வாயில் இருந்து வார்த்தைகள் தெளிவாக வரவில்லை. பதற்றத்தில் அவரது விரல்கள் நடுங்கின.

‘காமு மகனுக்கும் வெண்டினுதான் பேர் நைனா. பஜார்ல அஞ்சாறு பயல்களுக்கு வெண்டினு பட்டப் பேரு. சமயத்திலே யாருக்கு என்னன்னு தெரியாமப்போயிருது. நீங்க கவலைப்படாமப் போங்க. அவன் இங்கனக்குள்ளதான் சுத்திக்கிட்டு இருப்பான்’ என்றான்.

‘மூக்கப்பா அவன் பட்டறைக்கு எதிர்த்த வீட்டுப்புள்ளகூடச் சுத்திக்கிட்டு இருக்கிறது எனக்கும் தெரியும். ஒரு தடவை கண்டிச்சுவெச்சேன். திரும்பவும் பேச ஆரம்பிச்சுட்டானா. அவனைத் திருத்திக் கொண்டுவரணும்.’

மூக்கப்பன் அவரைப் பார்த்து, ‘அய்யோ அதை ஏன் கேட்கிறீங்க. தினமும் பாட்டும் கூத்துமா தெருவே நாறிப்போகுதாம். அந்தப் புள்ள அவனுக்குத் தோசை சுட்டுத் தருதாம். கோழிக்குழம்பு வெச்சுத் தருதாம். நான் எதைப் பார்த்தேன். நான் இருக்கிறது இந்தக் கடைசி; அவன் பட்டறை அந்தக் கடைசி. எல்லாம் பேச்சுவாக்குலயே வந்துட்டு இருக்கு. கேள்விப்பட்டதைச் சொல்றேன்’ என்றான்.

செல்லையா எழுந்து நடக்கத் தொடங்கினார். தான் எவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காமல் இருக்கிறான் என்ற வருத்தம் வெண்டியின் மேல் உண்டானது அவருக்கு. 18 வயது முடிந்துவிட்டது. எந்தக் கண்டமும் இல்லை. இனிமேற்பட்டு நிம்மதியாக இருக்கலாம் என இருந்தபோதுதான் அவனுக்கும் எதிர்த்த வீட்டுப்பிள்ளைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்குப் போய்விட்டு வந்த மறுநாள், பெரிய கொறடு வாங்க வேண்டும் என வெண்டியின் பட்டறைக்குப் போயிருந்தார் செல்லையா. பட்டறை திறந்திருந்தது. அவனைக் காணவில்லை. மதிய சாப்பாட்டு வேளை. பட்டறை வீதியில் யாரும் இல்லை. ஆலமரத்தின் இலைகள்கூட அசையாமல் இருந்தன. வெண்டிமாப்பிள்ளை எங்கேயாவது சென்றிருப்பான் எனப் பட்டறை திண்ணையில் அமர்ந்தார். காத்திருந்தவருக்குப் பொறுமை இல்லை. வேலை அவசரம். பட்டறைக்குள் சென்று பெரியகொறடை எடுத்துக்கொண்டு வந்தார்.

பட்டறைக்கு எதிர்த்த வீட்டு செட்டியாரிடம் சொல்லிவிட்டுப் போய்விடலாம் எனத் திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் யாரும் இல்லை. திரும்பிப் போவதற்கும் மனம் இல்லை. பட்டறைக்காரனுக்குத் தெரியாமல் சாமான் எடுப்பது தவறு. அப்படியே, அவசரத்துக்கு எடுத்தாலும் யாரிடமாவது சொல்லிவிட்டு வர வேண்டும். எட்டிப் பார்த்தார் முன் அறையில் ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. உள் அறையில் சிணுங்கலும் முனகலுமாகச் சத்தம் கேட்டது. உள்ளே சென்றார். படுக்கையில் செட்டியாரின் மகளும் வெண்டியும் இருந்தார்கள். அவரது காலில் செருப்பு இல்லை. இருந்திருந்தால் அப்போதே கழற்றி அடித்திருப்பார். தன் கை வலிக்க வெண்டியை அடித்தார். வலி பொறுக்காதவன் அழுதபடி வீட்டைவிட்டு, வேட்டியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு பட்டறை வீதியைத் தாண்டி ஓடினான். அவனைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு ஒருநாள் கண்ணில் பட்டபோது புத்திமதி சொன்னார்.

‘இதுக்குத்தான் நீ மதுரையில் இருந்து ரெண்டு குங்குமம் டப்பாவும், ரெண்டு அல்வா பொட்டலமும் வாங்கிட்டு வந்தியா? உனக்கு ரெண்டு பொம்பளைங்க வேணுமா. உன் அப்பன் புத்திதான் உனக்குமாடா?’ என நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல நடுரோட்டில் வைத்துத் திட்டினார். போகிறவர்களும் வருகிறவர்களும் விசாரித்தார்கள். அசிங்கமாக இருந்தது. அதற்குப் பிறகு அவனை ஆள்வைத்துக் கவனித்தார். சிறிது நாட்கள் அமைதியாக இருந்தான். சரி திருந்தி நல்லபடியாக இருக்கிறான். பட்டறை இருக்கிற இடத்தை மாற்றிவைத்துவிட்டால் பழக்கம் இருக்காது என, இடத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்படி ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போதுதான் இப்படி பூச்சிமருந்தைக் குடித்துத் தொலைத்திருக்கிறான்.

செல்லையா பெரியாஸ்பத்திரிக்குப் போய் சேர்ந்தபோது மதிய சாப்பாட்டு நேரம். ஆஸ்பத்திரியில் கூட்டம் இல்லை. எந்த வார்டில் படுத்திருக்கிறான் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே இறந்துபோயிருந்தால் ஜனங்கள் காக்கா கூட்டம்போல கூடியிருப்பார்கள் என நினைத்தவர், அங்கு நின்றிருந்த கம்பவுண்டரிடம் விசாரித்தார்.

‘நகைப்பட்டறை வீதில இருந்து யாரையாவது இங்க வந்து சேர்த்திருக்காங்களா ஐயா?’

‘ஒரு செவத்த பயளா. வெள்ளரிப்பழம் பழுத்த மாதிரி கலரு. இளந்தாரி வயசு. விஷம் குடிச்சிட்டு வந்தவன்தானே?’

‘ஆமாப்பா… ஆமாம்.’

‘நேரா போயி, இடது கை பக்கமாத் திரும்பி, அப்புறம் நேராப் போங்க. குளுக்கோஸ் ஏத்திப் படுக்கவெச்சுருக்கோம்’ என்றார்.

‘உசுரைக் காப்பாத்திட்டீங்களா?’

‘காப்பாத்தியாச்சு… காப்பாத்தியாச்சு…’

கம்பவுண்டர் சொல்லியபடி சென்றார். தூரத்தில் ஜனங்கள் கூட்டமாக நின்றிருப்பது தெரிந்தது. ஜனங்களை நோக்கி நடந்தார். பட்டறைவீதிக்காரர்கள் சிலர் நின்றிருந்தார்கள். செல்லையாவைப் பார்த்ததும் அங்குசம் கூட்டத்தில் இருந்து விலகி வந்தார். அங்குசமும் செல்லையாவும் ஒரு வயசுக்காரர்கள். ஒன்றாக பட்டறை வேலை பழகியவர்கள். அங்குசம், செல்லையாவைப் பார்த்தார்.

‘வாப்பா… வா. நீகூட நடக்க முடியாம நடந்துவந்து என் மகனைப் பார்க்க வந்திருக்க. என் மூத்த மகன் இந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கலை. யாருக்கோ வந்த விதினு அவன் பொண்டாட்டி புள்ளைகளோட கறிச்சோறு தின்னுக்கிட்டு இருக்கான். ‘வாடா’னு மூணு தடவை ஆள் விட்டுச் சொல்லிட்டேன். இன்னும் வரலை’ என்றார்.

செல்லையாவுக்கு எதுவும் புரியவில்லை. தலை கிறுகிறுப்பு கூடியது. அங்குசத்தின் மகனை எதுக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் எனக் கேட்டார்.

‘அவன் பூச்சிமருந்தைக் குடிச்சிட்டான் செல்லையா’ எனச் சொன்னார்.

‘அப்போ வெண்டிமாப்ள மருந்தைக் குடிக்கலையா. சண்முகத்தை ஆஸ்பத்திரியில சேர்க்கலையா?’ என அவராகப் பேசினார்.

‘என் மகனுக்கும் வெண்டினுதான் பட்டப்பேரு. வெள்ளைவெளேர்னு இருக்கான்னு அப்படிப் பேரு. எனக்கு மொதத் தாக்கல் வந்தப்போ, உன் தங்கச்சி மகன்தான் பூச்சிமருந்தைக் குடிச்சிட்டான்னு நினைச்சேன். பிறகுதான் கணேசன் குடிச்சிட்டான்னு என் மகன் பெயரைச் சொன்னாங்க.’

‘எதுக்குக் குடிச்சான்?’

‘கந்துவட்டிக்கு பணம் வாங்கிட்டுத் திரும்பத் தரலை. சண்டை வந்துருச்சு. அசிங்கத்துக்குப் பயந்துட்டு இப்படிப் பண்ணிட்டான்.’

‘போன மாசம் முத்துசாமி மகன் கந்துவட்டிக் காரனுக்குப் பயந்து திராவகத்தைச் குடிச்சிட்டு இன்னவரைக்கும் மதுரை ஆஸ்பத்திரியில இழுத்துட்டுக்கெடக்கான்.’

‘அதை ஞாபகப்படுத்தாதே செல்லையா. எனக்கு ரெண்டும் ஆம்பளைப் புள்ளையா பொறந்திருக்குனு கடைசிக் காலத்துக்கு எதுவும் சேர்த்துவைக்கலை. மூத்தவன் அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு வீட்டைவிட்டுப் போயிட்டான். ரெண்டாவது புள்ளையும் இப்படிப் பண்ணிட்டான். பொம்பளைப் புள்ளை ஒண்ணு இருந்தா, திட்டிக்கிட்டாவது சோத்தைப் போடுவா. என் கடைசிக் காலத்துக்கு யார்கிட்டே போய் நிப்பேன்’ எனச் சொன்னவர் ஓவென அழுதார். அங்கு இருந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள்.

அங்குசம் அழுவதைப் பார்க்க முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார் செல்லையா. வழியெல்லாம் வெண்டியைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு வந்தார். அவருக்கு மூச்சுவாங்கியது.

‘அடுத்த முகூர்த்தத்திலேயே என் மகளுக்கும் அவனுக்கும் கல்யாணம் செஞ்சுவெச்சாதான், எனக்கு நிம்மதி. அதுவரைக்கும் நான் சாப்பிடுறது செல்லாது’ என அவராகப் பேசிக்கொண்டு கிறுக்கனைப்போல தெருவில் நடந்தார்.

விஜயா ஹோட்டலைத் தாண்டும்போது சுப்பம்மா ஆங்காரமாக அழுதபடி வருவது தெரிந்தது. அவள் கோலத்தைப் பார்த்ததும் செல்லையாவுக்கு நெஞ்சு அடைத்தது.

செல்லையாவைப் பார்த்து, ‘அப்பனைப்போல மகனும் இருக்கானே. வெண்டி எவளையோ இழுத்துட்டுப் போயி ரெண்டு நாளுக்கு முன்னாடி கல்யாணம் செஞ்சுக்கிட்டானாம்’ என நடுரோட்டில் ஒப்பாரி வைத்தாள்.

செல்லையா அவள் பேசிய பேச்சை ஏற்கெனவே கேட்டவர்போல நடுரோட்டில் அமைதியாக நின்றார். அதற்குப் பிறகு அவருக்கு யார் பேசுவதும் காதில் கேட்காமல்போனது. செல்லையாவுக்கு போனூர் இளந்தாரிகள் ‘செவிட்டு செல்லையா’ எனப் பட்டப்பெயர் வைத்தார்கள். ஆனால் என்றாவது ஒருநாள் ஞானத்திடம் செல்லையா சொல்வார், ‘ஜமுனா அழுறது மட்டும் காதுல கேட்டுட்டே இருக்கு’ என்று. அப்போது அவர் சொல்வது ஞானம் காதில் விழுந்திருக்குமா எனத் தெரியாது. ஆனால், செல்லையா வடிக்கும் கண்ணீருக்கு என்ன அர்த்தம் எனத் தெரிந்திருக்கும். ஏனென்றால், ஞானத்துக்கு இரண்டு பெண்பிள்ளைகள்!

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *