வீராங்கனைகளில் ஒருத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 795 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடல் இன்று செத்துப் போய்க் கிடக்கிறது. அதன் பெருமூச்சுகள் ஓய்ந்து போய்விட்டன. ஆனி மாதமென்றால் இப்படித்தான் கடல் செத்துப் போகிறது.

இருட்டிப் போய்விட்ட பின்பு, இளந்தாரி மீன்கள்துள்ளிக் குதிப்பத் தினால் ஏற்படுமே உப்புக்கரிப்பின் மின்வெட்டு அதைக்கூடக்கடலில் காணவில்லை.

வருடத்தில் ஒரேயொரு மாதம்! இந்த ஒரேயொரு மாதத்திற்குத் தான் கடலை இப்படிச் சாகடித்துவிட வல்லமை இருக்கிறது.

நெருப்பாயெரிந்த பகற்பொழுது, கடலைக் கருக்கிவேகவைத்து விட்டது. ஆனி மாதப்பொழுதென்றால் அது இப்படித்தான். அது உலகத்தையே சுருக்கிவிட வல்லது.

பௌர்ணமிக் கட்டி தலைநீட்டிப் பார்க்கிறது. கடல் பெருகிவர நினைக்கிறது. மெதுவாக நுரைத்துக் கொண்டு கடல் உயிர்த்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் கடல் பிரவாகித்து, திசைமாறி நுரைக்கத் தொடங்கிவிடும்! இந்த நுரைப்புக்கு முந்திக்கொண்டு தூண்டியை வீசியாக வேண்டும்.

என்னைத் தவிர எல்லோருமே தூண்டிகளை வீசி விட்டனர். நான் பெரும் சோம்பேறி, போனால் போகட்டும், நான் என்ன வயிற்றுப் பிழைப்புக்காகவா இப்படித் தூண்டி போட வந்திருக்கிறேன்?

மனசின் சோட்டைக்காக வந்திருக்கிறேன். கடற் காற்றோடு அடிபட்டுக் கிடந்த எனது பேனாவுக்குத் தீனி போடத்தான் வந்திருக்கிறேனா? கடற்கரையைச் சுற்றித்தான் கற்பனை பிரவாகிக்குமாம்! இதை ஒரு பேனா மன்னன் சமீபத்தில் சொல்லி வைத்தான். மாலைவேளை, சின்னஞ்சிறிசுகள் மென்வெயில் பட, கை கோர்த்துக்கொண்டு இந்த நீண்ட பாலத்தின் வீதியில் வாருங்கள்; போங்கள். இந்தச் சின்னஞ்சிறிசுகளின் காதல் பிரவாகச் சேட்டை களைப் பார்த்துப் பார்த்து ஒண்டிக்கட்டையான என்னை நொந்து கொள்ளத்தான்நான் வந்திருக்கிறேனா?

காற்றின் மிருதுவான அலைகளோடு கலந்து வருவது மாதா கோயிலின் மணி நாதக் கூர்கள்தானா? இன்னும் இந்த நாதக்கூர்கள்

இந்தச் சிதை நீண்ட சிறிசுகள் அப்படியே தான் வருகின்றன.

இந்த இரண்டாண்டு கால இடைவேளைக்குப்பின் புலன்கள் இந்த நாதக்கூர்களைச் சரியாகவே இனங்கண்டு கொண்டன.

இந்த நாதக்கூர்கள் வந்துவிட்டபோது, இதனோடு சேர்ந்து வருவது போல குட்டியம்மாளும் வருவாள்.

அவளின் நினைவு வரும்போதெல்லாம், இந்த மாதாகோவில் மணியின் நாதக்கூர்களும் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

குட்டியம்மா, உன் வரவால் இந்த நாதக்கூர்கள் என் புலன்களோடு சேர்ந்து போய் நிற்கின்றன.

குட்டியம்மா, இன்று நீ இல்லை. நாதக்கூர்கள் மட்டும் தனித்து வருகின்றன. உன்னைக் காண முடியவில்லையே.

நீ எங்கே போய்விட்டாய்? செத்துப்போனாயா? அந்த அத்தை மகனென்ற கிழப்பயல் உன்னைச் சாகடித்துவிட்டானா? நீ தூக்குப் போட்டுக்கொண்டு மடிந்து போனாயா? மானத்தை இழந்து விட்டதனால் கடல்தாய் உன்னை விழுங்கி விட்டாளா?

அந்தக் கிழப்பயல் உன்னை ஏமாற்றியே இருப்பான்! குட்டியம்மா நீ சின்னப் பெண்ணாக இருந்தாய்! உனக்குஉலகமே தெரிந்ததாக இல்லை.

முனியப்பசாமி கோவிலுக்கு முன்னாலுள்ள டாக்கீஸ் மண்டபத்துக்கு மட்டுந்தான் போனாயா?

அவன்- அந்தக் கிழப்பயல் உனக்குப் புதுச்சட்டை வாங்கித் தந்ததாகச் சொன்னாயே!

குட்டியம்மா, அவன் உன்னை நன்றாக ஏமாற்றி, உன்னை விழுங்கி இருப்பான். அவனின் காமச் சூட்டின் தகிப்பால் பிஞ்சாகிய நீ கருகிச் செத்திருப்பாய்!

ஊரெல்லாம் இப்படித்தான் ஏமாளியப் பெண்கள் சாகிறார்கள். சாவைத்தான் அணைத்துக்கொண்டு தங்கள் புனிதத்தைக் காப்பாற்றிக் கொள்வதாக நினைக்கிறார்கள்.

நேற்றுக்கூட எனது அடுத்த வீட்டுக்காரப் பெண்ணொருத்தி நஞ்சு குடித்துச் செத்துப் போனாள்.

அவளும் உன்னைப்போலத்தான் சின்னவள். உலகம் அறியாத அவளை ‘யங்கி மைனர்’ ஒருவன் நன்றாக ஏமாற்றிவிட்டான்.

அவளை அவன் சுற்றித் திரிந்தபோது, அவனின் அப்பனுக்குநான் எச்சரித்தேன். அந்தச் சோமாறிப்பயல் என் மீது சீறினான்.

நேற்று அவள் செத்துவிட்டபோது, அவள் வயிற்றுள் சிசு இருப்பதாக டாக்டர் சொன்னார்.

அந்தச் சின்னப் பெண்ணால் டாக்டரை ஏமாற்றிவிட முடியவில்லை.

குட்டியம்மா நீயும் இப்படித்தான் ஆனாயா?

அந்த நாட்களின் – இரண்டொரு அனாதைப் பிணங்கள் கடற் கரையில் கிடந்ததைப் பத்திரிகைகளில் படித்தேனே. அதில் ஒன்று உன்னுடையதாகத்தான் இருக்கவேண்டும்!

‘குட்டியம்மா … நீ… ‘சாமி எனக்கொரு மீன்குடு சாமி’ என்று கைநீட்டிப் பிச்சை கேட்டு வந்தாயே!’

யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து விடுபட்டுப்போய் – கடலுக்கு அப்பால் இருந்த சிறு தீவுகளை இணைத்து விடுவதற்காகப் பாலமமைக்க மண் சாக்குகளைக் கடல் நீளம் பரப்பி, அதன் மேல் காட்டுக் கற்களைப் போட்டிருந்த காலம் – இன்றைக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு…

ஆற்று வாய்க்கால் மறிக்கப்பட்ட போது, மீன்கள் கரைபுரண்டு ஓடின.

மீன் வேட்டைக்காரர்கள் படையெடுத்து வந்தனர். கடலில் தெப்பத் தோடு கிடந்து, மீன் பிடிப்பதைவிட கரையோடு கரையாகச் சாவகாச மாக மீன் பிடிப்பதென்றால் மீன் வேட்டைக்காரர்கள் படையோடு வரவே செய்வர்.

மீன் வேட்டையில் எனக்குக் கொள்ளை ஆசை! தங்கூசிக் கயிற்றில் தூண்டியை இணைத்துக்கொண்டு மிகப் பெரும் நிபுணன் போல் நானும் வந்தேன்.

குட்டியம்மாள் வந்தாள். மைமல் பொழுதில் – செக்கர் வேளையில் அவளைக் கண்டேன். அவள் சின்னப்பெண். சமீபத்தில் எப்படியோ இக்கரைக்கு வந்து சேர்ந்துவிட்ட இந்திய வம்சாவழியினள்.

‘சாமி எனக்கொரு மீனு குடு சாமி!’ என்று தான் அவள் கை நீட்டினாள்.

பிடித்து வைத்திருந்த மீன்களில் ஒன்றை அவளுக்குக் கொடுத்தேன். ஏதாவது நன்றி தெரிவித்தாளா அவள்?

ஒரு கடன்காரனிடம் அலுப்போடு கடனைப் பெற்றுக்கொண்டு போவதைப்போல, அவள் இருட்டோடு போனாள். கல்லடுக்குகளில் அணிவகுத்துக்கொண்டிருந்தவர்களிடமும் அவள் இருட்டோடு போனாள். அவள் கை நீட்டினாள்.

அவள் பெயர் குட்டியம்மாள். நான் மீன் வேட்டைக்குப் போயிருந்த ஓராண்டு காலமும் அவளை இந்தக் கோலத்தில் பார்த்தேன்.

அவள் வேடிக்கையான பிச்சைக்காரி.

மீனாகவே பிச்சை கேட்கிறாள். பிச்சையா அது? கப்பம் போல! ‘ஒருமீனு குடு சாமி!’ பிச்சைக்காரியென்றால் இப்படி மிடுக்காகத்தான் கேட்பாளா? யாராவது ஒருத்தன் ஏதாவது சொல்லிவிட்டால் ‘என்னா சாமி, நீ கடல்லை மீனை வளர்த்து விட்டிட்டா பிடிக்கிறே, ஏதோ ஊருக் கெல்லாம் சொந்தமானதை நீ தூண்டிப் போட்டுப் பிடிக்கிறே? போனாப் போவுது எனக்கு ஒண்ணைக் குடுத்திட்டு நீ இன்னொண்ணைப் பிடிச்சுக் கொண்றன். பிகு பண்ணுறியே!’ இப்படிப் பட்டென்று பேசுவாள்.

‘பிச்சைக்காரக் குட்டிக்கு வாயைப் பார்!’ இப்படி ஒருத்தன் கேட்டதற்கு, அவள் சொன்னாளே ஒரு பதில் அதை வலுவில் மறந்துவிட முடியுமா?

‘நீ என்னைவிடப் பெரிய பிச்சைக்காரன்! கடல் தாயெட்டை நீ கைநீட்டி நாள் முழுதும் தூங்கி வடிஞ்சு பிச்சை கேட்கிறதே. அவ குடுக்க மறுத்தாலும் விடாப்பிடியாகத் தவமிருந்து சாகிறே, போய்யா

அப்பாடா! இப்படிப் பேச அவள் எங்கு கற்றுக்கொண்டாளே! அவள் வளர்ந்திருந்தாள். அவளைச் சுத்தஞ் செய்து, தாவணி அணிவித்துவிட்டால் அவள் முழுப்பெண்ணாகவே காட்சி தருவாள்.

அளவுக்குப் பெரிதான சட்டையையும், சிறு கொய்யகச் சேலை யையும் உடுத்திக்கொண்டு, அழுக்கோடு நாகரிகமற்றிருந்தாள்.

அவளுக்கு வெட்கமோ, பெண்மைக்குரிய நாகரிகமோ இருந்ததாக எனக்கு ஞாபகமில்லை .

வீறாப்புடன் வருவாள்; போவாள். எல்லோரையும் தொட்டுப் பேசுவாள். றாங்கிபண்ணுவாள். எல்லோரும் அவளைச் சின்னப்பெண் என்றுதான் நினைத்தார்கள். நான் எப்போதும் அவள் வரவுக்காகக் காத்திருப்பேன். எனக்கு ஏன் அந்த ஆசை? ‘ஆசை மட்டுமல்ல, ஏக்கமும்கூட’ என்றுதான் சொல்வோமே. இதில் என்ன வெட்கம்!

‘குட்டியம்மா !’ ‘என்னா சாமி!’ ‘நீ இப்பிடி அலைஞ்சு திரியிறியே, இது உனக்கு நல்லாயிருக்கா? ‘ ‘ஏஞ்சாமி அப்படிக்கேட்டிட்டீங்க?’ ‘ஆம்பிளையள் இருக்கிற இடத்துக்கு இருட்டோடு நீ வந்து போகலாமா?’

வந்து போனா என்ன சாமி?’ ‘குட்டியம்மா, விளங்காத மாதிரி! நீ வளைஞ்சு வளைஞ்சு கேக்கிறியே. இப்படி வந்து போக உனக்கு வெக்கம் வர்றதில்லை?’

அவள் சின்னப்பெண்! என் வயசுக்கு அவள் மகள் போல. நான் இதை வெறுமனேதான் கேட்டேனா? அல்லது அவள் மனதை அவளே தொட்டுப் பார்க்கக்கூடிய விதத்தில் ஒரு ஞானத்தைத்தான் ஊட்ட முற்பட்டேனா?

‘குட்டியம்மா. நீ இப்பிடி இரவெல்லாம் அலைஞ்சுத் திரிஞ்சிட்டுப் போனா உன்னை யாரும் திட்டமாட்டாங்களா!’

‘எனக்கு யாரு சாமி இருக்கா? நான் நெனைச்சபடி நடந்திட்டுப் போவேன். என்னை யாரு அதிகாரம் பண்ணப் போறா?’

அவள் என்னிடமும் சட்டென்று பேசினாள் ஒருநாள். ‘நெனைச்சபடி நடந்திட்டுப் போவேன்!’ என்ன துணிச்சலான வார்த்தை! ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடாத நினைப்பு!

அவளைக் குழந்தையென்றா சொல்லலாம்? ‘குட்டியம்மா, நீ யாரோடை தங்கியிருக்கிறாய்?’ ‘என் அத்தை மவன் ஒருத்தன் இருக்காஞ்சாமி கடலை வண்டி இழுத்திக்கிட்டு ஊரெல்லாம் சுத்திட்டுத் திரியிறான்! அவனும் என்னைப் போல அநாதையாஞ்சாமி. முந்தாநாள் பெருமாகோயிலில் அவன் என்னைப் பாத்தாஞ்சாமி. எனக்கு அத்தை மவனெண்ணு, அவன்தாஞ் சொன்னாஞ்சாமி!’

‘நீ அதை நம்பினியா குட்டியம்மா?’ ‘ஏஞ்சாமி நம்பிறதுக்கென்ன? என்னைக் கூட்டியிட்டுப் போனான். எனக்குச் சாப்பாடெல்லாம் வாங்கிக் குடுத்தாஞ்சாமி. அடுத்தாப்போல எங்கையோ ஒரு ஊர்ல தனக்கு ஒரு சம்சாரமும், நாலு குழந்தைகளும் இருக்காஞ் சாமி. பாவம், வயது போன நேரத்திலே அதுகளுக்காக அவன் மாடா உழைச்சுச் சாகிறாஞ்சாமி!’

குட்டியம்மாள் மனங்கசிந்து போனாள். “இந்தப் புதுச் சட்டை அவன் வாங்கிக் குடுத்தது தாஞ்சாமி!’ இப்போதுதான் அவள் அணிந்திருந்த புதுச் சட்டையின் வாசனை என் மூக்கைப் பிடுங்கியது. அதில் கவர்ச்சியான வர்ணங்கள் தீட்டப் பட்டிருந்தன. அவளுக்கு அத்தைமகனாக வந்தானாம் ஒரு நான்கு பிள்ளைக்காரன்! பாவம்! குட்டியம்மா மோசம் போனாளா?

‘சாமி, சாமி, நேரமாச்சுசாமி. நான் மீனை வித்திட்டுப் போகணுஞ் சாமி. அந்த முனியப்பசாமி கோயிலுக்கு முன்னாடி இருக்கிற டாக்கீசுக்கு என்னைக் கூட்டியிட்டுப்போவ, அவன் காத்திருப்பாஞ்சாமி, நாம் போயிடுறஞ்சாமி, நாளைக்கு வந்து பேசிறஞ்சாமி!”

குட்டியம்மாள் போய்விட்டாள்.

அவசர அவசியமாக – காற்றோடு கரைந்துவிட்டது போலப் போய் விட்டாள்.

அன்று பௌர்ணமி நிலவு. அந்த நிலவொளியில் வெகுதூரம்வரை

அவள் ஓடிச் செல்வது தெரிந்தது.

பௌர்ணமிக்கு மறுநாளும், அதற்குப் பின்பும் அவளைத் தேடினேன். நாளை வருவதாகச் சொல்லிப்போனவள் வரவேயில்லை.

அவளுக்காக நான் ஏங்கினேன். எங்கோ எப்படியோ அவள் போய்விட்டாள். அவள் சினிமாப் பார்க்கப் போயிரந்தாளே, அத்தோடு அவள் குழந்தைத்தனமும் போய்விட்டதா?

குட்டியம்மா நீ, ‘நினைச்சபடி நடத்துக்குவேன்’ என்றாயே! பொல்லாத இந்தத் தொடர் என் செவிகளுக்கு இன்னமும் கேட்கின்றது. என் புலன்களெல்லாம் உன் அத்தை மகனாக வந்தவனை நோக்கி ஒருமித்து நிற்கின்றன. குட்டியம்மா, பருவப் பூரிப்புக்குப் பக்குவப் பட்டு நின்ற உன் உடல் வனப்பை அத்தை மகனான அந்தக் கிழப்பயல் நிச்சயமாக விழுங்கிவிட்டான். அவனுடன் டாக்கீசுக்குப் போவதாகச் சொல்லிச் சென்றாயே. அவன் உன்னை முதலாங் ‘கிளாசு’ க்கு அழைத்துப்போயிருப்பான். அங்கே… அல்லது அதற்குப் பின்… கிழப்பயல்! நாலு பிள்ளைக்காரன்.

போயும் போயும் உனக்குப் பதின்மூன்றுவயதிருக்காதே!

***

அடிவானச் சுரிக்குள் சூரியனின் சிறகுகள் தோய்ந்து சுருங்கி அதனை மிகக் கீழாக இழுத்துச்செல்கின்றன.

கடலின் பெருமூச்சு இப்போது பலமாகக் கேட்கிறது. இது உலக முகடுவரை கேட்டுவிடப் போகிறது. காற்று இதனை இப்படித் தட்டி விட்டிருக்கிறது.

மேல் வானத்தின் அசட்டுத்தனமான கருக்கல் ஒளிக்குப் பின்னால் இரவு விரைந்து வந்துவிட்டது.

அடிவானத்திலே ஒளிப்பிழம்பாக நெளிந்தோடுபவை மின்னல் கொடிகள்.

கடலின் அந்தத்திலோ அல்லது நடுப்பகுதியிலோ மழை பெய்து கொண்டிருக்கவேண்டும்.

வெள்ளம் நுரைத்துவரும் வேளை தூண்டில் உயிர்த் துடிப்பிழந்து கிடக்கிறது.

தூண்டிலின் இறால் பருக்கையை அரிப்பான்பூச்சி மீன்கள் சிதம்ப வைத்துத்தின்று தீர்த்துவிட்டனவா? இப்போது மட்டும் உயிராக ஒரு இறால் பூச்சி கிடைத்து விட்டால் ஈயக்கட்டியைக் கழற்றிவிட்டு, நீரோடு தூண்டியை மிதக்கவிட்டால் நிச்சயமாகக் கொடுவா மீன் கிடைக்கும். என்ன விலை கொடுத்தாவது ஒரு இறால் பூச்சி உயிருடன் வாங்கிவிட வேண்டுமே! எந்தப் பயல்தரப்போகிறான்? வெளியே
வேண்டுமானால் ஒருகூடை இறால் தரவும் தயாராக இருப்பவன், தூண்டி போடும் போது ஒரு பூச்சிகூடக் கடன் தரமாட்டானே! ம்… சரி ஒரு தடவை போய்த்தான் பார்ப்போமே!

ஐயோ கற்கூர்கள் கால்களைக் குற்றுகின்றன. அந்த மதவுக் கண் வரை நடக்க வேண்டுமே!

என்னால் வலுவில் நடக்க முடிகிறதா? நிலையாகக் குந்தியிருந்து கால்கள் விறைத்துப்போய்விட்டனவே!

சற்று வேளைக்குமுன் கண்ணுக்குத் தெரிந்த உருவங்கள் இப்போது மறைந்து போய்விட்டன. நாலு சுவடுகள் தாண்டினால் கால் விறைப்பும் போய்விடும்!

வெகுதூரம் வந்துவிட்டேன். ‘அண்ணை , ஒரு உயிர் இறால் பூச்சி தருவியா?’

‘அட இவன் பேசக்கூட மாட்டானாமே!’ ‘அண்ணை , ஒரு இறால் பூச்சி தருவியா?’ ‘இறால் பூச்சி இல்லேத் தம்பி, கணவாய்க் கூந்தலைப் போட்டிட்டிருக்கன்.’

கிழட்டுக் குரல். தூண்டில் முகத்தில் கடன் கொடுக்கக் கூடாதென்ற சம்பிரதாயத்தை நிச்சயமாக நம்புபவனாகத்தான் இருப்பான்! அடுத்தவனைப் பார்ப்போம்.

‘அண்ணை ஒரு இறால் பூச்சி தருவியா?’ ‘எங்கிடை இல்லை சாமி!’ இது யார் குரல்? பெண் ஒருத்தி பேசுகிறாளே! பழகிய குரல்! குட்டியம்மாளின் குரல்போல! ‘யாரது?’ ‘அது நாந்தாஞ்சாமி!’ ‘யாரு குட்டியம்மாளா?’ ‘ஆமா சாமி!’ குழந்தையின் கீச்சுக் குரலொன்றும் தொடர்ந்தாற் போல கேட்கிறது. குட்டியம்மாள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் முதுகுப்புறச் சேலை ஏணைக்குள் குழந்தை ஒன்று முடங்கிக் கிடக்கிறது.

‘குட்டியம்மா, நீயும் தூண்டிலா போடுகிறாய்?’

‘ஏஞ்சாமி நான் போடக்குடாதா?”

‘………..’

‘ஏஞ்சாமி மலைச்சு நிற்கிறீங்க?’

‘குட்டியம்மா, இது யாரு குழந்தை?’

‘ஏஞ்சாமி, எங்குழந்தைதாஞ்சாமி!’

இதைச் சொல்லும்போது நெஞ்சுக்குள் இன்பம் கசிகிறதா அவளுக்கு?

ஆமாம். கசியவே கசிகிறது. வாய் நிறைந்து போக அவள் தன் குழந்தை என்கிறாள்.

‘குட்டியம்மா ?’

‘என்னங்கசாமி?’

‘உன் அத்தை மகன் என்னானான்?’

‘அவன் போயிட்டாஞ்சாமி! என்னை வாயும் வயிறுமா விட்டிட்டு எங்கையோ ஓடிட்டாஞ்சாமி! கிழட்டுப் பய, சோமாறிப்பய ஓடிட்டாஞ்சாமி! பாவம், வயசான நேரத்திலே எங்கைப் போய்த் தொலைஞ்சானோ?’

‘சாமி கொஞ்சம் பொறுங்கசாமி. கொடுவாமீன் பட்டிருக்கு சாமி!’

மிகவும் நுணுக்கமாகத் தங்கூசி நூலை விட்டுக்கொடுத்து அநாயாசமாகப் பெரிய கொடுவா மீன் ஒன்றைத் தூக்கி வெளியே போட்டு விட்டாளே!

அது கொடுவாமீன்தான். குட்டியம்மாள் மீன் பிடித்துறையில் மிகவும் அனுபவசாலியாகி விட்டாள்.

இறால் பூச்சியைக் கௌவி இழுப்பது கொடுவாதான் என்று சரியான கணக்குப் போடுமளவுக்கு அவள் அனுபவம் முதிர்ந்திருக்கிறது.

கடல் பரப்பெல்லாம் மழை சளசளக்கிறது. ஏனைய துண்டியல்காரர்களின் ஆரவாரமும் பரபரப்பும் கேட்கிறது. அள்ளிப்பிடித்துக்கொண்டு எல்லோரும் ஒதுக்கிடம் நோக்கி ஒடு கின்றனர். குட்டியம்மாள் மட்டும் அடுத்த கொடுவா மீனுக்காகத் தூண்டியை அமைதியாக வீசுகிறாளே!

மழையின் சளசளப்பையும் மிஞ்சிக்கொண்டு குழந்தையின் முனகல் கேட்கிறது.

‘எண்டா நல்லக்கண்ணு சத்துப் பொறுத்துக்கடா!’, பிறங்கையால் குழந்தையைத் தட்டிக்கொடுக்கிறாள் குட்டியம்மாள். ஆனாலும், குழந்தை முனகிக்கொண்டே இருக்கிறது.

‘கண்ணா, டேய் குட்டிக் கண்ணா சத்துப் பொறுத்துக்கடா! ராஜா கண்ணா சத்துப் பொறுத்துக்கடா.’

குட்டியம்மாள் அவனை ஆசுவாசப் படுத்துகிறாள் அவள் நெஞ்சத்தின் கனிவு என் நெஞ்சுவரை கேட்கிறது.

அவள் கயிற்றை நிதானப்படுத்திக் கொள்கிறாள். ‘சாமி, இன்னொரு கொடுவா பட்டிருக்கு சாமி, உங்க கயித்தையும் வீசுங்க சாமி. மழைத் தூத்தலுக்குக் கொடுவாதாம் படுஞ்சாமி.’

என்னை நான் நிலைப்படுத்துவதற்குள் அவள் இன்னோர் மீனைப் பிடித்துவிட்டாள்.

காற்று இழகிப்போக மழைத்தூற்றில் மடிந்து வருகிறது.

“இந்தா சாமி றால்பூச்சி, உசிரோடை இருக்கு. குத்தி வீசுசாமி.’

எனக்குக் கட்டளை போட்டுவிட்டு அவள் தொழிலில் இலயித்துப் போகிறாள்.

பௌர்ணமிக் கட்டி மேல்நோக்கி நகர்ந்து வருகிறது. கடலின் பட்டுப்போன்ற மார்புகளில் அதன் ஒளி மின்னி நெளியாட்டம் ஆடுகிறது.

கடலின் துடிப்புகள்யாவும் சாவை நோக்கி ஒடுங்கிவருவது போன்ற நிலை.

‘என்னாசாமி, மீன்பூச்சி ஏதாச்சும் அருட்டுதாசாமி? பேசாம அப்பிடியே கல்லாட்டமா இருக்கிறியே சாமி?’

அவள் என்னைப் பேசவைக்க நினைக்கிறாள். ‘குட்டியம்மா இப்படியெல்லாம் சீவிக்கிறத்துக்கு உன்னாலே முடியுதா?’

‘என்னாசாமி, என்னைச் செத்துப்போகச் சொல்லுறியா? படு ஆள்தானையா நீ.’

நான் பேசி வாய்மூடுமுன் கணீரென்று அவள் பேசிவிட்டாளே! கடலின் முடிவில் எழுந்து மின்னல் கொடி என் கண்களைக் குற்றி விடத் துழாவிப் பாய்கிறது.

கண்களால் கண்டும் ஒப்புக்கொள்ள மறுக்கும் என் நெஞ்சத்தைக் குத்திக் கிழித்துவிடவா அது மறுபடியும் மறுபடியும் துள்ளி எழுகிறது?

‘பொல்லாத மின்னல் சாமி, கண்களை மூடிக்கோ சாமி. இல்லாட்டி கண் பொயிடுஞ்சாமி.’

குட்டியம்மா என்னை எச்சரிக்கிறாள்.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

கே. டானியல் (25 மார்ச் 1926) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *