”போனா, எம் பொணம்தான் போவும்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சிவமாலை.
”ஏண்டி அப்பிடிச் சொல்றவ? வாசப்படியில குந்திக்கிட்டு அப்பிடிச் சொல்லலாமாடி? மவளுக்குக் கண்ணாலம் கட்டணும். மவனுக்குப் பொண்ணு பாக்கணும். பேரன் பேத்தினு எடுக்க வாணாமா?” என்று மகளைப் பார்த்துக் கேட்டாள் துளசி.
”ஆமாம், பெத்தவ நீயே என்னை எப்பிடியாப்பட்ட பள்ளத்துல தள்ளிவுட்ட. அந்த மாதிரிதான் நான் பெத்ததுங்களும் படுகுழில என்னைத் தள்ளிவுட்டுடும். யாரு வந்தா என்ன, யாரு போனா என்ன? நான் இனிமே அந்த வூட்டுல அடி எடுத்துவைக்க மாட்டேன்.’
‘அப்பறம் எங்கடி போவ?’
‘எங்கியோ போறேன். எனக்குன்னு யாரு இருக்கா? மூளியாயிட்டேன். எனக்காவத்தான், நான் எப்ப வருவேன்னு சுடுகாடு காவக் காத்துக்கிட்டு இருக்கு. அங்க போறேன். அந்த எடத்த யாரும் புடுங்கிக்க மாட்டாங்கள்ல’ என்று சொன்ன சிவமாலை, முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு தேம்பினாள். அவள் அழுததைப் பார்த்ததும் துளசிக்கும் கண்கள் கலங்கின. அவளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த கோகிலாமணியும் அழுதாள். அழுதுகொண்டு இருந்த மூன்று பெண்களையும் பார்த்த கதிரவன், பக்கத்தில் கிடந்த மர உரலில் உட்கார்ந்தான். அவனுடைய முகம் கோபத்தில் வெந்துபோயிருந்தது.
”வளர்ற புள்ள எதுக்குடா தேயுற உரல்ல குந்துற? போயி திண்ணையில குந்து” என்று பேரனைப் பார்த்து துளசி சொன்னதைக் காதில் வாங்காமல் ‘நேரமாவறது தெரியலையா?’ என்று கேட்டான் கதிரவன். மூன்று பெண்களில் ஒருத்தர்கூட வாயைத் திறக்கவில்லை. அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த கண்ணாயிரம் ஒவ்வொருவராகப் பார்த்தார். கடைசியாக அவருடைய பார்வை சிவமாலையின் பக்கம் திரும்பியது. வெறித்துப் பார்த்தார். சலிப்பும் வெறுப்புமாக, ‘இன்னிக்கி அயிது என்னா பண்றது? ஆதிகாலத்துல எம் பேச்ச ரெண்டு பொட் டச்சிவுளும் கேக்கல. ஒறவு கொண்டாடப் போனீங்க. எல்லாத்தையும் பட்டு சீரழிஞ்சி தட்டுக்கெட்டுப் போயி வந்து அயிது என்னா பண்றது? சட்டிப் பானையா அப்பப்ப மாத்திக்கிறதுக்கு?’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் பின்புறம் சென்றார். இரண்டு மாடுகளை அவிழ்த்து ஓட்டிக்கொண்டுவந்து சிவமாலைக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு, ‘என்ன செய்தி’ என்று கேட்பதுபோல நின்றார். கண்ணாயிரம் தன்னுடையபதிலுக் காகத்தான் நிற்கிறார் என்று தெரிந்ததும் சிவமாலை தலையைக் குனிந்துகொண்டு, ‘நான் இனி அந்த வூட்டுக்குப் போவ மாட்டம்பா” என்றாள்.
‘நிசமாவா சொல்ற?’ என்று கண்ணாயிரம் கேட்டார்.
ஆமாம் என்பதுபோல சிவமாலை தலையை ஆட்டினாள்.
‘நீ சாவறதா இருந்தாலும் அந்த வூட்டுல தான் சாவணும். அப்பதான் உன் அப்பனால ஊருல வேட்டி கட்டிக்கிட்டுப் போவ முடியும். அப்பறம் ஒன்னிஷ்டம்’ என்று சொல்லிவிட்டு, சிவமாலை ஓட்டிக்கொண்டு வந்த மாடுகளைக் கூட்டிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் கண்ணாயிரம்.
அப்பன் கண்ணாயிரம் கோபித்துக்கொண்டு போவதைப் பார்த்ததும் சிவமாலைக்கு அழுகை வந்தது. மூக்கை உறிஞ்சி னாள். ‘ஊர்க்காலி மாடு மேய்க்கிறவன்கூடப் போயிருந்தாக்கூட எனக்கு இம்மாம் தீம வந்து நேந்திருக்காது. இது பணக்காரக் கப்பல்னு பாத்துக் கொடுத்தீங்களா? இது பாழடஞ்ச கப்பல்னு பாத்தவங்க சொல்லலியா? தேளடையும் வாசல்னு தெரிஞ்சிருந்தும் கொடுத்தீங்களே’ என்று சொன்னாள்.
‘ஒன்ன சீமானுக்குக் கட்டிக்கொடுக்கிறத நானாடி வேணாமுன்னேன்… நானாடி மறிச் சிக்கிட்டன்’ என்று துளசி மகள் சிவமாலை யைப் பார்த்துக் கேட்டாள்.
‘பத்து வயசுக்கு மேல எவன்கிட்டயாவது தள்ளிவுட்டுடணும்னுதான, தம்பி வேணும்… தம்பி வேணுமுன்னு பாதாளத்துல என்னைத் தள்ளிவுட்ட பழிகாரி நீதான். எங்கப்பன் அப்ப வேணாம்னுதான் சொன்னாரு’ என்று சிவமாலை கோபமாகச் சொன்னாள்.
‘அப்ப, நீயும்தாண்டி சொன்ன, கட்டுனா மாமனத்தான் கட்டுவேன்னு’ என்று துளசி சொன்னதும் அவளை முறைத் துப் பார்த்தாள் சிவமாலை. பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு விரலால் தரையைக் கீறிக்கொண்டே சொன்னாள், ‘ஆமாம் சொன்னேன்… புத்திகெட்டுப் போயி சொன்னேன்.’
‘என் தம்பிக்கு என்னாடி கொறச்ச? இந்த வயசிலயும் புது மாப்ள மாதிரிதாண்டி இருக்கான்.’
‘பன்னியும் தளதளனுதான் இருக்கு. அதனால ஊரு மேயப் போவச் சொல்லு.’
‘சீ… வாயை மூடு. இந்த வயசுல அப்பன் வூடு, ஆத்தா வூடுனு வந்து குந்தி இருக்கலாமா? போயி ஒன்னோட வூட்டப் பாரு, பொழப்பப் பாரு. ஒழுங்குமரியாதியா வாழறதுக்கு உண்டான வழியைப் பாரு.’
‘அது இந்த செம்மத்துல நடக்காது. நான் என்ன அம்மாம் ரோசம் கெட்டவனுக்குப் பொறந்தவனு எண்ணிக்கிட்டியா?’ என்று கேட்டுச் சீறினாள்.
‘நீ இங்க வந்து இன்னியோட பதினஞ்சு நாளு ஆவுது. இத்தனை நாளுல ஒன்னக் கூப்பிட ஒரு நாளாவது வராம இருந்திருக்கானா எந்தம்பி?’
‘அவனால முடியலனுதான் இன்னிக்கி விடிய விடிய எம் புள்ளிவுள அனுப்பிவுட்டிருக்கான்’ என்றாள் சிவமாலை.
‘செத்த நேரம் வாய மூடிக்கிட்டு இருக்க மாட்டீங்களா?’ என்று கதிரவன் கேட்டான். துளசியும் சிவமாலையும் சிறிது நேரம் பேசாமல் இருந்தனர். எழுந்து வீட்டுக்குள் போன கோகிலா மணி தண்ணீர் கொண்டுவந்து சிவமாலைக்குக் கொடுத்தாள்.
‘போடி அந்தாண்ட. இப்பத்தான் நாடகம் காட்டுறா. பெத்தவ போயி இத்தினி நாளா என்னாச்சி ஏதாச்சினு கேக்கறதுக்கு வரல. மனசுல திக்குங்குல. பெத்தவன் துரத்திவுட்டதும் இன்னிக்கி வந்து நாடகம் காட்டுறா’ என்று மகள் கோகிலாமணியைப் பார்த்து சிவமாலை திட்டியதும் அழுதுகொண்டே போய் துளசிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் கோகிலாமணி.
அப்போது சிரித்துக்கொண்டே துளசி சொன்னாள், ‘நீ பெத்ததுதாண்டி.’
‘ஆமாம். நாந்தான் பெத்தேன். கல்லையும் மண்ணையும்’ என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் சிவமாலை. உரலில் உட்கார்ந்திருந்த கதிரவன் எழுந்து வந்து அம்மாவைப் பார்த்து, ‘எழுந்திரும்மா நம்ம வூட்டுக்குப் போவலாம். நான் காலேஜுக்குப் போவணும்’ என்றான்.
‘நான் வரலை. நீ போப்பா.’
‘என்னா பேசுற நீ? நாங்க முக்கியம் இல்லியா?’ என்று கோபமாகக் கேட்டான்.
‘போடா. ஒங் கதை எனக்குத் தெரியும். நாளக்கி ஒனக்குனு ஒருத்தி வந்தா நீயும்தாண்டா இப்பிடிச் செய்வ. நீயும் ஒங்கப்பன மாரிதாண்டா இருப்ப’ என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள். அழுகைக்கு இடையில், ‘நம்பிப் போனேன். நம்பி இருந்தேன். நானா போயி முள்ளு மேல சீலயப் போட்டுட்டன். இந்த வயசுல இப்பிடி இருக்கானே…’ என்று சொல்லி அழுதாள். மூக்கைச் சிந்தி விட்டெறிந்துவிட்டு, ‘மருமவன் வூட்டுக்கு வர்ற நேரத்துல, மவன் கூத்தியா சேக்க அலயுற நேரத்துல, அப்பன் காரன் புதுப் பொண்டாட்டி சேத்துக்கிட்டு நிக்குறான்’ என்று சொல்லி, புருசன் முருகனைத் திட்ட ஆரம்பித்தாள். சலிப்புடன் திரும்பி வந்து உரலில் உட்கார்ந்துகொண்டான் கதிரவன்.
துபாய்க்குப் போகிறேன் என்று ஒரு லட்சம் ரூபாயை ஏஜென்ட்டிடம் கொடுத்து ஏமாந்த இந்த ஆறு வருஷமாக கேரளத்துக் குப் போவதும் வருவதும்தான் முருகனுக்கு வாடிக்கை. கேரளத்தில் செங்கல் சூளையில்தான் வேலை. முதல் வருஷம் நல்லபடியாகத்தான் இருந்தான். அதன் பிறகுதான் அவனிடம் மாற்றங்கள் தெரியத் தொடங்கின. மழைக் காலத்திலும் சூளையில் வேலை என்று போக ஆரம்பித்தான். சந்தேகப்பட்டுக் கேட்டதற்கு, ‘மொதலாளி தொல்ல’ என்று சொன்னான். மூன்றாவது வருஷத்தில்தான் சூளையில் வேலை செய்கிற ரோசம்மா என்ற பெண்ணோடு தொடர்பு என்று செய்தி அடிபட ஆரம்பித்தது. அவனோடு வேலைக்குப் போகும் பக்கத்து ஊர் ஆட்களிடம் விசாரித்தபோது உண்டு என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் மழுப்பினார்கள். கடைசியாக போன மாதம் மேலப்பாளையூர் செல்வராஜ்தான் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை ஆட்டினான். முருகனிடம் கேட்டதற்கு, ‘ஊரான் பேச்ச கேக்காத’ என்று மட்டும்தான் சொன்னான். சிவமாலை அவன் சொன்னதை நம்பினாள். இருபது நாட்களுக்கு முன் அவனுடைய சட்டைப் பையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. கேட்டதற்கு, ”தெரியவில்லை” என்று சொன்னதோடு, ‘அப்பிடியா, இருக்காதே. கீழ கெடந்தது’ என்று சொல்லிவிட்டு போட்டோவை எடுத்து எரிந்துகொண்டு இருந்த அடுப்பில் போட்டுவிட்டான். அப்போது ஆரம்பித்தது சண்டை.
அன்று சாயங்காலம் அப்பன் வூட்டுக்குக் கிளம்பி வந்தவள்தான் சிவமாலை. பதினைந்து நாட்களாகிவிட்டது. பதினைந்து நாட்களாகக் காலையிலும் சாயங்காலமும் நாள் தவறாமல் வந்து கூப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறான் முருகன். சிவமாலை ஒரு நூல்கூட அசைந்துகொடுக்கவில்லை. காலையில் வந்ததில் இருந்து பிள்ளைகள் கோகிலாமணியும் கதிரவனும் மாறிமாறி கூப்பிட்டுப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கெஞ்சலுக்கும் அழுகைக்கும்கூட சிவமாலை அசரவில்லை.
‘பதினெட்டுப் பத்தொம்பது வருஷமாக் கூடப் படுத்து எந்திரிச்சவளுக்குத் தெரியாதா ஒரு ஆம்பளயோட குணாசாரம். நான் அந்த அளவுக்கா குருடி?’ என்று சொல்லிப் புலம்பிக்கொண்டு இருந்தாள். சிவமாலையின் மனதை அறியாமல் உரலில் உட்கார்ந்தபடியே, ‘இன்னும் எத்தினி நாளக்கித்தான் இப்பிடியே அழுதுக்கிட்டு இருக்கப்போற? நான் வேணுமுன்னா வா. இல்லன்னா இங்கியே இரு’ என்று சொன்னான் கதிரவன்.
‘எனக்கு யாரும் வாணாம். நான் செத்துப்போறன். நான் செத்துப்போனாத்தான், கண்ணாயிரம் மவ யாருன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும். ஒங்க அப்பன் செய்யுற கூத்த ஏன்னு ஒரு வார்த்த கேக்க ஒங்களால முடியல. பஞ்சாயத்துக்குப் பெத்தவகிட்டயே வர்றீங்களா’ என்று கதிரவனை எடுத்தெறிந்துப் பேசிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
உடனே ஆரம்பித்தாள் துளசி, ‘கண்ணா லம் கட்டுறாப்ல வூட்டுல ஒரு புள்ள இருக்கான். வயசுக்கு வந்த ஒரு பொட்டப் புள்ளய வூட்டுல வுட்டுட்டு வந்தோமே… ஊருல ஒண்ணு சொல்ல மாட்டாங்களானு மனசுல அக்கறப்படுறாளா பாரு. எந்த ஊருலப் போயி வாயை வளத்துக்கிட்டு வந்தானு தெரியல சிறுக்கி’ என்று துளசி சொன்னதும், அவளிடம் சண்டைக்குப் பாய்வது மாதிரி, ‘ஏன் பெத்தவன் இல்லியா? அவன் புள்ளைங்களைப் பாத்துக்க மாட் டானா? போனா அவன் மானம்தான் போவும். எனக்கென்னா?’ என்று கேட்ட சிவமாலை அழுதுகொண்டே, ‘நான் வந்து எத்தினி நாளாச்சி? இன்னிக்கி வரா இந்த திருட்டுச் சிறுக்கி. கல் நெஞ்சுக்காரனுக்குப் பொறந்தவதான. வேற எப்பிடி இருப்பா? அவ மொகரையைப் பாரேன். அந்தக் கருவாயன் மொகரைய வெச்சிக்கிட்டுப் பொறந்திருக்கிறத’ என்று மகள் கோகிலாமணியைப் பார்த்துத் திட்டினாள்.
அதற்கு அழுதுகொண்டே ‘அங்க யாரு சோறு ஆக்குறதாம்?’ என்று கோகிலாமணி கேட்டாள்.
‘வாய மூடுறி. பெத்தவளாச்சேனுகூடப் பாக்காம வாயாடுற? யாருகிட்ட இருந்து வந்துச்சி இந்தப் பழக்கம்?’ என்று சிவமாலை கேட்டாள்.
‘ஒங்கிட்டயிருந்துதான்’ என்றாள் துளசி பட்டென்று. அப்போது தெருப் பக்கம் பார்த்த கோகிலாமணி, ‘அப்பா வராரு’ என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டுக்குள் போனாள்.
கோகிலாமணி தண்ணீர் கொண்டுவந்து அப்பனுக்குக் கொடுத்தாள். கதிரவன் எழுந்து போய்த் திண்ணையில் உட்கார்ந்ததும், அவன் உட்கார்ந்திருந்த உரலில் உட்கார்ந்தான் முருகன். சிரித்துக்கொண்டே, ‘என்னா சொல்றா ஒங்கம்மா?’ என்று கோகிலாமணியிடம் கேட்டான். அவள் வாயைத் திறக்கவில்லை. அவள் பேசாததால் துளசியின் பக்கம் திரும்பி, ‘ஒம் மவ நடத்துற நாடகத்தப் பாத்தியா? ஊரான் பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆடுறா. ஆடட்டும். அவளோட ஆட்டம் எத்தினி நாளக்கினு நானும் பாக்குறேன்’ என்று சொன்னான்.
‘அவ கேட்டா இல்லனு ருசு பண்ணிட்டுப் போ. எதுக்காக அவளை மாட்டப் போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சே? அதான் சாக்குன்னு அவ சாமியாடுறா’ என்று கோபமாக தம்பியைப் பார்த்துக் கேட்டாள் துளசி.
‘அவ பேசுன பேச்சுக்கு வாயைக் கிழிக்காம வுட்டதே பெருசு’ என்று முருகன்
சொன்னான்.
‘வா, வந்து சாப்புடு’ என்று சொன்ன துளசி, கோகிலாமணி பக்கம் திரும்பி ‘போயி ஒங்கப்பனுக்கு சோத்தப் போடுடி. ஆயாளுக்கு ஏத்த மவளாத்தான் பொறந்திருக்கிற. பொட்டச்சிவோ ஒரு ஓரம்சாரமா குந்த வாணாம்?’ என்று சொல்லி முறைத்தாள். ஒன்றும் சொல்லாமல் எழுந்து வீட்டுக்குள் போனாள் கோகிலாமணி.
‘மவளைக் கொடுத்து என்னெ வாழவெச்சிட்ட. இப்ப சோத்தப் போட்டு வாழவெக்கப்போறியா?’ என்று முறைத்த மாதிரி முருகன் கேட்டான். அதற்குச் சிரித்துக்கொண்டே துளசி ‘அன்னிக்கி ஒண்ணா சேருறதுக்கு போட்டா போட்டி போட்டீங்க. ரெண்டு நாயும் அன்னிக்கி ஒண்ணா குலாவுனீங்க. இப்ப எந்தலையப் போட்டு உருட்டுங்க’ என்று சொன்னாள். அவளை ஏற இறங்கப் பார்த்த சிவமாலை முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள்.
‘சோறு திங்க வாப்பா’ என்று கோகிலாமணி கூப்பிட்டாள். அதற்கு சலித்துக்கொண்டே, ‘ஒண்ணும் வாணாம்மா. கௌம்பு வூட்டுக்குப் போவலாம்’ என்று முருகன் சொன்னான்.
‘ஊரான் பேச்சைக் கேக்காத. வா… வூட்டுக்குப் போவலாம். வூட்டுல போட்டது போட்டபடியே கெடக்கு’ என்று சொன்னதோடு நில்லாமல், சிவமாலையின் இரண்டு கைகளையும் பிடித்துத் தூக்கினான் முருகன்.
‘சீ… என்னைத் தொடாத. மல நாட்டுக்காரியப் போயித் தூக்கு. ரோசம்மாவோ கீசம்மாவோ இருக்கால்ல. அவளப் போயித் தூக்கு. என்னெ எதுக்கு தூக்க வர?’ என்று சொல்லிவிட்டு, முருகனின் கைகளைத் தட்டிவிட்டாள் சிவமாலை.
‘எனக்குக் கோவத்த உண்டாக்காத. சண்டாளமா வருது. வழியில போறவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆடுற. இனிமே நான் கேரளாவுக்குப் போவல. வா வூட்டுக்கு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தூக்கினான். வெறி வந்தது மாதிரி அவனை நெட்டித் தள்ளிவிட்டு, ‘வெக்கம் மானம் இருந்தா என்னெ தொடக் கூடாது’ என்று சொல்லிக் கத்தினாள்.
வெலவெலத்துப்போன முருகன் திகைத்துப் போய் நின்றுகொண்டு இருந்தான். பரிதாபத்துடன் கதிரவன் பக்கம் பார்த்தான். திரும்பி கோகிலாமணியைப் பார்த்தான். துளசியை எரித்துவிடுவது மாதிரி பார்த்தான். சலிப்புடன் பெருமூச்சுவிட்டான். ரொம்பவும் பணிவாக ‘வூட்டுல போயிப் பேசிக்கலாம் வா’ என்று கூப்பிட்டான்.
‘நான் வல்ல… நீ போவலாம்.’
‘என்னிக்குமே வர மாட்டியா?’
‘வர மாட்டன். என் பொணம்கூட வராது.’
‘ஓகோ… கதை அப்பிடிப் போவுதா? நான் செத்தாலும் வர மாட்டியா?’
‘ஆமாம்! கடவுளு மேல சத்தியம்.’
‘அப்பிடின்னா இங்கியே இரு. இன்னம் நாலு நாளையில ஒருத்திய கொண்டாந்து வூட்டுல குடிவைக்கலன்னா, என்னெ மசுருனு கூப்புடு. ஒன்னிய வுட்டா ஒலகத் துல வேற பொம்பளயே கெடையாது பாரு.’
”எதுக்கு புதுசா புடிக்கப்போற? அதுக்குத்தான் ஏற்கெனவே ரோசம்மானு செவப்புத் தோலா மலயாள நாட்டுக்காரிய புடிச்சிருக்கியே… அது போதாதா? போ… போயி அவளைப் புடி, தூக்கு. ஒளக் காட்டுல கெடக்குறவ வேணாமுன்னுதான மல நாட்டுக்காரிய போய்ப் புடிச்சிருக்க. ஒந் தப்புக்கணக்கு இனிமே செல்லாது.’
‘வாய மூடுறி சண்டாளி’ என்று சொல்லிவிட்டு, ஓங்கி சிவமாலையின் கன்னத்தில் அறைந்தான். மறு அடி அடிப் பதற்குள் திண்ணையில் உட்கார்ந்திருந்த கதிரவன் வேகமாக ஓடி வந்து ‘யோவ், போயா எட்ட. இனிமே அடிச்சின்னா மரியாத கெட்டுப்போயிடும். எங்க இப்ப அடி பாக்கலாம், என் முன்னால’ என்று கேட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றான்.
முருகனுக்கு உடம்பு நடுங்கியது. கோபத்தில் உதடுகள் துடித்தன. ஒரு நொடி சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு சீறப்போகும் பாம்பு மாதிரி சிவமாலையைப் பார்த்தான். ‘நான் பெத்த புள்ளயவே எனக்கு எதிரா ஏவி வுடுறியாடி? வா, ஒன்னெ வெச்சிக்கிறேன். புள்ளயா புருசனானு ஒனக்குக் காட்டுறேன்’ என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய் உரலில் உட்கார்ந்து தலையைக் கவிழ்ந்துகொண்டான்.
சிவமாலை முந்தானையை வேகமாக உதறி விட்டுச் செருகினாள். தலைமுடியை உதறி, தட்டி முடிந்துகொண்டு, மூக்கைச் சிந்திவிட்டு முருகனிடம் வந்து நின்றுகொண்டு, ‘இப்ப எம்புள்ளைக்குப் பதில் சொல்லு. கேக்குற துக்கு ஆள் இல்லனு நெனச்சிக்கிட்டியா?’ என்று கேட்டவளுக்குச் சிரிப்பு வந்தது. குழந்தை மாதிரி வாய்விட்டுச் சிரித்தாள். கதிரவனிடம் வந்து ‘போதுண்டா சாமி. ஒரு வருசம் வவுத்துல சொமந்ததுக்கு, எட்டு வருஷம் மாருல சொமந்ததுக்கு, பீ, மூத்திரத்த அள்ளுனதுக்கு இது போதுண்டா. இப்பத்தாண்டா எம் மனசு குளுகுளுனு இருக்கு. அவன் எவ கூடியோ போறான், எவ கூடியோ வரான், எனக்கென்னா? கண்ணாட்டம் ஆணு ஒண்ணு, பொண்ணு ஒண்ணுனு ரெண்டு புள்ள இருக்கு. அது போதாதா எனக்கு? இந்த வயசுலதான் எனக்குப் புருசன் ஆசை கேக்குதா?’ என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள்.
‘வாய மூடுறி’ என்று துளசி சொன்னதைக்கூடக் கேட்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாள்.
‘பாஞ்சு நாளா எம் புள்ளிவோ சரியா சோறு குடிச்சிதுவுளோ இல்லியோ, காலேஜுக்கும் போவல. எம் புள்ளிவோ பொழப்பு கெட்டுப்போச்சே’ என்று சொன்ன சிவமாலை, முருகன் பக்கம் திரும்பி ‘வா, ஒன்ன வச்சிக்கிறேன், பெரியாண்டவர் கோயில்ல ஒனக்குச் சீட்டு கட்டறேன், கை காலு வெளங்காமப் பண்றேன்’ என்று சொன்னாள்.
‘வாப்பா போவலாம்’ என்று கதிரவனிடம் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். பத்துத் தப்படி தூரம் போனதும் நின்று திரும்பிப் பார்த்தாள். சிரிக்கத் துவங்கினாள். அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
– ஜூலை 2012