வீடும் வளவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 8,379 
 

சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து ‘எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா’ என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய் வசந்தி அடுப்படியில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மகள் வேலைக்கு போகும் முன் சமைத்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் சமைத்துக்கொண்டிருந்தாள்.

சுமதியும் தாய் வசந்தியும்; என்பத்தியொன்பதாம் ஆண்டு மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இன்று சுன்னாகத்தில் வசித்து வருகின்றனர். இடம்பெயர்ந்த காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையின் போது காணாமல் போன சுமதியின் தந்தை இன்னும் வரவில்லை ஆனால் அப்பா வருவார் என்ற நம்பிக்கையிலேயே இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தெரிந்தவர்கள் எல்லோரிடமும் வீட்டை பற்றி விசாரித்து விட்டு பாடசாலைக்கு வெளிக்கிட்டாள் சுமதி.

‘அம்மா நாள் போட்டுவாரன்’ என விடை பெற்று சென்றாள் சுமதி.

சுமதி வருவதற்கு மாலை மூன்று மணியாகும் அது வரைக்கும் வசந்தி மதிய உணவினை தயார் செய்து விட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை பார்த்துக்கொண்டு மகளின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மல்லாகம் முகாமில் சில காலங்கள்; இருவரும் வாழ்ந்துவந்தனர். வசந்தி தோட்ட வேலைகள் செய்து அதில் வரும் வருமானத்தினை வைத்து தன் மகளைப் படிக்க வைத்தாள். இன்று சுமதி உத்தியோகம் பார்க்க தொடங்கின பிறகு இப்ப கொஞ்சக்காலமா வாடகைக்கு வீடெடுத்து அதில் தான் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இருக்கும் வாடகை வீட்டுக்கான ஒப்பந்த காலம் முடியப்போகுது அதனால்; வேற வீடு பார்க்கும் பெரு முயற்சில் சுமதி இறங்கி இருக்கிறாள்.

பாடசாலை முடிந்து சுமதி வந்தாள.; அவள் வரும் முன்னரே வசந்தி ‘ பிள்ள ஏதும் வீடுகள் கிடைச்ச மாதிரி’ என கேட்டாள்;.

‘ இரண்டு மூன்று இடத்தில கேட்டிருக்கிறன் எல்லோரும் சொல்லுறதா சொல்லி இருக்கின’ என்றாள்.

இவர்கள் இப்படியே கதைத்துக் கொண்டிருக்கும் போதே ‘சுமதி..’ என வாசலில் இருந்து குமாரசாமி கூப்பிட்டார்.

வெளியே வந்த சுமதி ‘குமாரசாமி ஐயா வாங்கோ’ என அழைத்தாள்.

‘பிள்ளை என்னமாதிரி ஏதும் வீடு கிடைச்சுதா எனக்கும் கொஞ்சம் அவசரமாக காசு தேவையாக இருக்கு அதுதான் வீட்ட கொஞ்ச வேலை செய்து போட்டு விற்கப் போறன் நீங்கள் வேண்டுறதென்றாலும் பரவாயில்லை எனக்கு வாற முதலாந்திகதி விடவேண்டும்’ எனக் கூறி முடித்தார்.

‘குமாரசாமி ஐயா எங்களுக்கு ஊருல வீடு இருக்கு அங்க விட்டா நாங்கள் போயிடுவம் எல்லாத்தையும் வேண்டி நாங்கள் என்ன செய்யிறது’ என சமாளித்தாள் சுமதி.

‘சரி பிள்ள அதுதான் ஒருக்க ஞாபகப்படுத்திட்டு போவம் என்டு வந்தன்’ என கூறிக்கொண்டு புறப்பட்டார் குமாரசாமி.

‘அம்மா குமாரசாமி ஐயான்ர நக்கல பாத்திங்களா’ எனக் கூறிக் கொண்டு தாயிடம் சென்றாள் சுமதி.

‘எங்கட நிலமை அவருக்கு நல்ல தெரியும் ஆனாலும் வேகமா ஒழும்பிப் போங்கோ என்று சொல்லாமல் சொல்லிற்று போறார்’ என்றாள் தாய் வசந்தி.

இருவரும் பேசிக்கொண்டிருந்த போது மேசையில் இருந்த தொலைபேசி அடித்தது.

‘கலோ பிள்ள வீடு விசாரிச்சியல் என்று கேள்விப்பட்டன் எங்கட விட்டுக்கு பக்கத்தில ஒரு வீடு இருக்குது அதுதான் சொல்லுவம் என்று எடுத்தான்’ என்றார் மாணிக்கம்.

‘சரி மாணிக்கண்ண நானும் அம்மாவும் உடனேயே வாறம்’ என்று சொல்லிவிட்டு உடனேயே இருவரும் புறப்பட்டனர்.

‘மாணிக்கத்தின் வீட்டுக்கு பக்கத்தில என்றாள் பரவாயில்லை அதேயே பேசி முடிப்பம்.’ என்றாள் வசந்தி.

‘அது சரியம்மா வாடகை எவ்வளவு கேட்கிறாங்களோ, அட்வான்ஸ் எவ்வளவோ தெரியாது. எங்களுக்கு ஏற்றமாதிரி இருந்தாத்தானே நல்லது’ என சொன்னால் சுமதி.

இருவரும் பேசிக் கொண்டே மாணிக்கத்தின் வீட்டை அடைந்தனர்.

‘வங்கோ வாங்கோ உங்களத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறன்’ என்று மாணிக்கம் இருவரையும் அழைத்தார்.

‘மாணிக்கண்ண இருக்கிற வீட்ட முதாலாந்திகதி விட வேண்டும். அதுதான் அவசரமா வீடு பார்த்து திறியிரம்’ என்றாள் சுமதி;.

‘ஓம் பிள்ளை நான் எல்லாம் கேள்விப்பட்டனான் அதுதான் எங்கட வீட்டுக்கு பக்கத்து வீட்ட நான் தான் பார்த்துக்கொண்டு வாரன் நீங்க இரண்டு பேரும் அதில இருக்கலாம் ஒரு பிரச்சினையும் இல்லை’ என்றார்.

‘அட்வான்ஸ் என்னமாதிரி வாடகை என்னமாதிரி என்று சொன்னியல் என்றாள் அண்ணை நாங்கள் என்ன மாதிரி என்று சொல்லுவம்’ என்றாள்

‘அதுவந்து பிள்ள அட்வான்ஸ் ஒன்றும் வேண்டாம். மாதம் ஒரு மூவாயிரம் தந்தால் போதும்’ என்றார்.

இருவருக்கும் நல்ல சந்தோசம் நல்ல நாளாப்பார்த்து பால்காச்சி போட்டு அடுத்த நாளே வருவம், என்றாள் சுமதி.

‘பிள்ளை சுமதி உனக்கு பள்ளிக்கூடாம் முடிந்தபிறகு சும்மா இருக்கேக்கில எங்கட பிள்ளைக்ளுக்கும், இஞ்ச இருக்கிற மற்ற பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக்கொழுத்தாய் என்றாள் அவங்களுக்கும் பிரயோசனமா இருக்கும் உனக்கும் ஏதும் சிலவுக்கு வரும்’ என்றார் மாணிக்கம்.

‘அது பரவாயில்லை மாணிக்கண்ண நான் சொல்லிக் கொடுக்கிறன்’ என்றாள் சுமதி.

மாணிக்கதின் உதவியுடன் வீடும் மாறியாச்சு இனிக் கொஞ்ச நானைக்கு வீட்டுப்பிரச்சினை இருக்காது. இருந்தாலும் சுமதியின் தாய்க்கு ஒரு கவலையிருந்து கொண்டே இருந்தது. அதுதான் பிள்ளைக்கும் வயசும் போய்க்கொண்டிருக்கு ஒரு திருமணப் பொருத்தமும் பொருந்துதில்லை என்ற கவலை தான்.

அன்று சுமதி பாடசாலை சென்றவிட்டாள் வசந்தி தனியாக வீட்டில் இருந்தாள். ஒருக்க மாணிக்கத்திட்ட கேட்டுப்பார்ப்போம் என நினைத்த வசந்தி மாணிக்த்தின் வீட்டுக்கு சென்றாள்.

‘தம்பி இவள் சுமதிக்கு கனஇடத்தில மாப்பிள்ளை பார்த்திட்டம் ஒன்றும் பொருந்துதில்லை ஜாதகத்தில செவ்வாய் குற்றமாம் அதுதான் பெரிய பிரச்சினையா இருக்கு, உங்களுக்கு தெரிந்த புறோக்கர்மார் இருந்தால் ஒருக்க கேட்டு சொல்லுறியலே’ என்றாள் வசந்தி.

‘அக்கா இத வேளைக்கே சொல்லியிக்கலாமே இப்ப எல்லாம் முடிச்சு வைச்சிருப்பன். சரி பரவாயில்லை குறிப்பையும், நல்ல போட்டோவையும் தாங்கோ நான் பார்க்கிறன்’ என்றார் மாணிக்கம்.

‘இதெல்லாம் நான் பார்த்துக்கிறன் நீங்கள் நாளைக்கு ஒருக்க மறக்காமல் இடம்பெயர்ந்த ஆட்களுக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் பதிவேதோ நடக்கபோகுது போய் ஒருக்கா பதியுங்கோ’ என்றார் மாணிக்கம்.

மாணிக்கதிட்ட கொடுத்தாச்சு எல்லாம் முடிந்து விடும் என்ற ஒரு நம்பிக்கையுடன் சென்றாள் வசந்தி.

சுமதி பாடசாலை முடிந்து வந்தவுடன் மாணிக்த்தின் பிள்ளைகளுக்கும் இன்னும் வேறு சில பிள்ளைகளுக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் ‘பிள்ள நாளைக்கு எங்கட கிராம சேவகரிட்ட ஏதோ பதிய வேண்டுமாம் உனக்கு நேரம் இருந்தால் ஒருக்க போயிற்று வா..’ என்றாள் வசந்தி.

‘அம்மா எனக்கு நாளைக்கு நேரமில்லை ஓட்டோக்கார அண்ணைக்கு போன் போட்டு சொல்லிவிடுறன் நீங்களே போட்டு வாங்கோ’ என்றாள் சுமதி.;

‘சரி பிள்ள நான் போட்டு வாறன்’

மயிலிட்டியில் உள்ள காணிபத்திரம் மற்றும் குடும்ப அட்டை எல்லாவற்றையும் கொண்டு வசந்தி கிராமசேவகரின் காரியாலயத்துக்கு சொன்றாள்.

அங்கு உயர் பாதுகாப்ப வலயத்துக்குள் காணிகள் உள்ளவர்களிடம் அவர்களிள் காணி தொடர்பாக பல விடயங்களை கேட்டு பதிவு செய்தனர். எல்ல பாதிவுகளையும் முடித்துக்கொண்டு போன ஓட்டோவிலேயே திரும்பி வந்தாள் வசந்தி.

பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த சுமதி ‘அம்மா என்ன பதிவு நடந்தது’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

‘அது பிள்ள வழமைபோல மயிலிட்டி காணி தொடர்பாக ஏதோ கேட்டு பதிஞ்சாங்கள் பதியிறதப் பார்த்தா இந்த விடுவாங்கள் போல இருக்குது’ என்றாள்.

‘இதத்தானே அம்மா இருபத்திரண்டு வருசமா செய்யிறம்……’ என சலிப்புடன் சொன்னால் சுமதி.

மாணிக்கமும் தனக்கு தெரிந்த புறோக்கர்மாரைப் பிடித்து சுமதியின் ஜாதகத்துக்கு பொருத்தமான ஒரு மாப்பிள்ளை தேடிப்பிடித்து பொருத்திவிட்டார்.

திருமணப்பேச்சில் சீதனமாக ஐந்துலச்சம் காசும், பதினைந்து பவுன் நகையும், வீடும்வளவும் தரளாம் என பேச்சு. நல்ல நாளாப்பர்த்து மாப்பிள்ளை வீட்டுக்காரர் சுமதியினை பெண் பார்க்க வந்தனர். மாப்பிளைக்கும் சுமதியை பிடிச்சுப்போச்சு.

தாய் வசந்திக்கு நல்ல சந்தோசம் மாப்பிள்ளையும் ஆசிரியர் என்றபடியால் இரட்டிப்பு சந்தோசம்.

மாப்பிள்ளை வீட்டாருக்கும் சுமதியை பிடித்துவி;ட்டது. இனி என்ன திருமணம் தான் என்று இருக்கும் போது.

மாணிக்கம் சுமதி வீட்டுக்கு கவளையுடன் வந்தார்.

‘பிள்ள சுமதி சீதனமாக கொடுக்க இருக்கிற வீடும் வளவும் மயிலிட்டியில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள்ள இருப்பதால் மாப்பிள்ளையின் பெற்றோருக்கு விருப்பமில்லையாம். தங்களுக்கு முதலே தெரிந்திருந்தால் இவ்வளவு தூரம் ஒன்றும் நடந்திருக்காதாம்’ என இழுத்தார் மாணிக்கம்.

வசந்திக்கு இடியே விழுந்தது போல் இருந்தது.

‘ஒன்றுக்கும் கவலைப்படாதிங்கோ வேற இடமா நான் பார்க்கிறன்’ என்றார் மாணிக்கம்.

‘அது சரி மாணிக்கண்ண அவனும் வீடுவளவு கேட்டால் நாங்க எங்க போறது ….’ என சோத்துடன் இழுத்தாள் சுமதி.

உயர்பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படுகின்ற ஏராளமான இடங்களில் உள்ள அத்தனை வீடுகளுக்கு பின்னால் ஏராளமான சுமதிகளின் வாழ்க்கை உள்ளது என்பதினை யார் அறிவார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *