விவாக ஸம்ஸ்காரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 1,933 
 
 

(1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம்

சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள்
நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம்
நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக
தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே
.

இவை

பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம சத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சந்தம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ. மாதவையர் இயற்றியன

சென்னை
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் – புஸ்தகசாலை,
எட்வர்டு எலியட் ரோடு–மயிலாப்பூர்
1924

விவாக ஸம்ஸ்காரம்

தன் ஒரே மகன் சேஷுவுக்கு ஜானகி அம்மாள் தலைவாரிக்கொண்டிருந்தாள். தை மாதம் 12-ம் தேதி முகூர்த்தத்தில் புத்தூர் மகாதேவையர் பெண்ணை அவனுக்கு விவாகம் செய்வதாக ஏற்பாடாகி, அதைப்பற்றி நிச்சயம் செய்வதற்காகவே அவன் தகப்பனார் அவனைப் பட்டணத்தி லிருந்தும் வரவழைத்திருந்தார். அவன் அன்று காலை தான் வந்தான். 

ஜானகி:- உனக்குப் புத்திகெட்டுப்போயிருக்கிறதா ? உன் அப்பாவைவிட நீ அதிகம் தெரிந்தவனா? இந்தப் பாழான நீசபாஷையைக் கற்றுக் கொண்டு, கலியுகத்தில், எல்லாரும் தலைகீழாய்த் தான் நடக்கிறார்கள். 

சேஷு:- (வருந்திய குரலில்) நீயும் இப்படிச் சொன்னால் நான் என்ன செய்வேன், அம்மா. எனக்கு வயது பதினெட்டுத் தானே ஆகிறது; அதற்குள் எனக்கு இப்பொழுது கலியாணத்துக்கு என்ன அவசரம்? பரீக்ஷைகளெல்லாம் தவறாமல் ஒப்பேறினாலும் கூட, என் படிப்பு முடிவதற்கே இன்னும் நாலைந்து வருஷங்களாமே. 

ஜானகி:-நான் உன் அப்பாவுக்கு வாழ்க்கைப்படும் போது, அவருக்கு வயது பன்னிரண்டே தான்; எனக்கு ஏழுவயது. ஆனால் உனக்கு, ஐயோ, நம் தாயாருக்கு வயதாய் விட்டதே, எத்தனை நாள் தான் குடமெடுத்துத் தீர்த்த மெடுத்து, ஒண்டியாய்ச் சமைத்துச் சாதம்போட அவளால் தள்ளும், என்கிற இரக்கம் துளிகூட இல்லை. அவள் கண் மூடுமட்டும் அவளே எல்லாப் பாட்டையும் படட்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். நாலு வருஷமாவது, எனக்கு ஒரு நாட்டுப் பெண் வந்து, நான் சற்று சுகப்பட வேண்டுமென்பது உனக்கு இல்லவேயில்லை. தெய்வ சங்கல்பத்தினால், எனக்கு இந்த ஜன்மத்தில் பெண் இல்லை யென்று போய் விட்டது. என் ஒரே பிள்ளையாகிய நீயும், எனக்கு நாட்டுப் பெண்ணும் வேண்டாமென்று சொல்கிறாய். 

சேஷு:-எதற்காக அம்மா, அதற்குள்ளேயே ‘சாகப் போகிறேன், சாகப் போகிறேன்’ என்று சொல்கிறாய்? உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லையே? நீ இன்னும் சில வருஷங்களுக்குச் சுகமாயிரு; உனக்குப் பெண்ணைவிட அதிகமாக, உன் மனத்துக்கேற்ற நாட்டுப் பெண்ணாக, நான் அப்புறம் பார்த்துக் கலியாணம் பண்ணிக்கொள்கிறேன். 

ஜானகி:- இருபது, முப்பது வயதாகி, உனக்கு நாலு குழந்தைகளிருக்க வேண்டிய வயதிலா, நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்? இதென்ன பேச்சு இது! நீ என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்! 

சேஷு:- அம்மா! நம் முன்னோர்க ளெல்லாம் நாள் கழித்து தான் கலியாணம் செய்து கொண்டார்கள். அநே கர் முப்பது நாற்பது வயதுவரை பிரமசாரிகளாய்த் தான் இருந்தார்களென்று நீ கேட்டிருப்பதில்லையா? அந்தக் காலத்துப் பெண்களுக்கும், இப்பொழுதுபோல, பச்சைக் குழந்தைகளா யிருக்கும்பொழுதே விவாகம் நடக்கவில்லை; குடித்தனம் செய்வதின் அருமையும் பெருமையும் தெரிந்து தக்கவயது வந்த பின்னரே, கலியாணம் நடந்தது.

ஜானகி:- உனக்குக் கொஞ்சம் இளகி யிருக்கிறது; அதுதான் நீ இப்படியெல்லாம் பேசுகிறாய். நம்ம சாஸ்திரங்களை விடக்கூட நீ அதிக மேதாவியா? 

சேஷு:- இப்பொழுது குழந்தைகளுக்குக் கலியா ணம் செய்பவர்கள் தான் சாஸ்திரங்களைவிட நாம் தான் மேதாவிகளென்று நினைத்துக்கொண் டிருக்கிறார்கள்; நானில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை யாராவது கவனித்துப் பார்த்தால், விவாக ஸம்ஸ்காரப்படி, வதூவராக ளிருவரும் தக்க வயதுள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டு மென்பது அவர்களுக்குத் தானே தெரியும். பாலிய விவாகம் செய்பவர்கள் தான் சாஸ்திரத்திற்கு விரோதமாய் நடக்கிறார்கள்; இந்தக்காலத்தில், நம் சௌகரியத்துக்கும், சௌக்கியத்துக்கும், மனச்சாக்ஷிக்கும் ஒப்ப, நம் பழைய நாளை வழக்கங்களையே நாம் அனுசரிக்க வேண்டுமென்று நான் சொல்வது சாஸ்திர விரோதமில்லை. 

ஜானகி :- எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் வாழ்க்கைப்படும்போது எனக்கு ஏழுவயது தான்; உன் பாட்டிக்கு ஐந்து வயதிலேயே கலியாண மாய்விட்டதாம். நீ சொல்கிறபடி இன்னும் ஐந்தாறு வருஷங்களுக்கு உனக்குக் கலியாணம் செய்யாம லிருந்தால், எல்லாரும் அதற்கு என்னவோ காரண மிருக்கிறதென்று பயந்து, அப்புறம் உனக்குப் பெண் கொடுக்கவே மாட்டார்கள். அது மாத்திரமில்லை: எனக்கு வயதாச்சு; ஆத்துக்காரிய மெல்லாம் நானே செய்ய என்னால் முடியவில்லை. உங்களப்பாவும், சீக்கிரம் உனக்கு நல்ல இடத்தில் கலியாணம் செய்துபார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்; இந்தச் சம்பந்தமும் அதிர்ஷ்டவசத்தால் தான் நமக்குக்கிடைக்கிறது. என்னவோ விசித்திரமாய், எவனோ வெள்ளைக்காரனைப் போல், பேசுவதை விட்டுவிட்டு, நம்தேசத்துப் பிள்ளைகளைப் போல, உன் தாயார் தகப்பனார் சொல்லுகிற படி, தட்டாமல் நட. 

சேஷு :- நீங்கள் கட்டாயமாய்ச் சொன்னவுடன், நான் தான் உங்கள் இஷ்டப்படி ஒப்புக் கொண்டேனே; முதலில் தின்னூர்ப் பெண்ணை நிச்சயம் செய்திருந்த போது, நான் உடன்பட்டுத் தான் இருந்தேன். நான் போய் அந்தப்பெண்ணைப் பார்த்தபோது, அவள் லட்சணமாய், புத்திசாலியாய் இருப்பாள் போலிருந்ததால், எனக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எட்டுவயதுதானாகிறது; இப்போதைக்கு என்படிப்புக்குத் தடையுமாகாது. அதை விட்டுவிட்டு, நானும் பாராத இந்தப் பன்னிரண்டு வயதான புத்தூர்ப்பெண்ணை என் நிச்சயம் செய்திருக்கிறீர்கள்? திடீரென்று இப்படி மாறுவதேன்? 

ஜானகி:- உங்க அப்பா அந்தப்பெண்ணை இரண்டு மூன்று தரம் பார்த்திருக்கிறார்; அவள் சீக்கிரம் பெரியவளாகி விடுவாளென்று சொல்கிறார். அவள் ஆறு மாதத்தில் ஆத்துக்கு வந்துவிட்டால், அவளிடம் குடித்தனத்தை ஒப்புவித்துவிட்டு நான் சாவதற்கு முன் கொஞ்ச நாளாவது, அம்மாடி! என்று, சற்றுக் காலை நீட்டி உட் காரலாமோ என்று தான் பார்க்கிறேன். 

சேஷு:- எதற்காக, அம்மா சாவதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எனக்கு நீ இப்படிச் சொல்வதைக் கேட்கப் பொறுக்கவே முடியவில்லை. 

ஜானகி:- தீர்மானமாய் எனக்கு ஐம்பத்து மூன்று வயது நிறைந்து நான் காணப்போகிறதில்லை. நான் இது வரை உன்னிடம் சொல்லவில்லை; எனக்கு இது பத்து வருஷமாய்த் தெரியும். கன்னூர் ஜோஸியனை விடக் கெட்டிக்காரன் இந்தப் பிரபஞ்சத்திலே யில்லை. அவன் சொன்னது பலித்தே தீரும். 

சேஷு:- (இதைக் கேட்டவுடன் முதலில் அடைந்த திகில் மாறி) இதெல்லாம் பைத்தியக்காரத்தனம், அம்மா. ஜோஸியர்கள் தெய்வமில்லை; இந்த நாளில், ஜோஸியம் என்று சொல்வதெல்லாம் வெறும் புரளிதான். 

ஜானகி:- நீ இதையெல்லாம் என்ன கண்டாய்? வினை கெட்டுப்போய் இந்த இங்கிலீஷ் வாசிப்பதின் பயன், இந்த அகம்பாவமும் அதிகப் பிரசங்கித் தனமுந்தான். 

சேஷு :- போகிறது அம்மா, இப்பொழுது ஏன் புத்தூரில் நிச்சயம் செய்திருக்கிறாய்? நான் கலியாணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமென்றிருந்தால், தின் னூர்ப் பெண்ணே யிருக்கட்டும். அப்படித்தான் நிச்சயம் செய்து தாம்பூலம் கூட வாங்கிக் கொண்ட பிறகு, இப்பொழுது அவர்களை வேண்டாமென்று சொல்வது சரியில்லை: யோக்கியமே யில்லை. 

ஜானகி:- அந்தத் தின்னூர்ப் பிராமணன் ஒரு ஏழை குமாஸ்தா, ரூபா 500-க்குமேல் அவரால் கொடுக்க முடியாது; அதுவும், எங்கேயோ கடன் வாங்கப் போகிறாராம். அப்படிப்பட்டவர் என்ன சீர் செய்யப்போகிறார்? அவர் சம்சாரி, கலியாணத்திற்கு இன்னும் மூன்று பெண்களிருக்கிறார்கள். புத்தூர் மகாதேவையரோ-இந்தப் பக்கங்களுக்காக அவர் தான் அதிகப் பணக்காரரான மிராசுதார். அவர், கையில் ரூபா 2500-கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்; சீர் ஆயிர ரூபாய்க்குக் குறையாது. கலியாணமும் வெகு சிறப்பாய்ச் செய்து கொடுப்பர். இப்படிப்பட்ட சம்பந்தம் கிடைப்பது நம் அதிர்ஷ்டம் தான். இதையெல்லாம் உத்தேசித்தே, உங்கப்பா, சீக்கிரம் கலியாணத்தை முடித்துவிட வேண்டுமென்று ஆத்திரப்படுகிறார். என் இஷ்டமோ, அந்தப் பெண்ணுக்கு வயது பன்னிரண்டாகிறது; அடுத்த வருஷம் ஆத்துக்கு வந்து விடுவாள்; என் மட்டில் அது ஒன்றே போதுமான காரணம். 

சேஷு:- அப்பா என்ன ஏழையா, அம்மா? இந்தப் பணத்துக்காக, ஒரு ஏழைப் பிராமணரிடம் சொன்ன வாக்கைத் தவறுவரா? நம்ம சொத்து ரூபா 5000 ஆவது பெறும்; நான் ஒரு பிள்ளை தானே, நானும் இனிமேல் சம்பாதிக்கமாட்டேனா? அந்தத் தின்னூர் குமாஸ்தா ஏழையாகவும், சம்சாரியாகவும் இருக்கிறதை உத்தேசித்தே, நாம் அவர் பெண்ணையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று, எனக்குத் தோன்றுகிறது. அவரிடம் சீரொன்றும் வேண்டாமென்று சொல்லி விடலாம்; அல்லது அவராகச் செய்ததைக்கொண்டுத் திருப்தி அடைய வேண்டுமே யொழிய, இன்னொருவர் அதிகப் பணம் தருகிறாரென்று, அவரிடம் நாம் சொன்ன சொல் தவறி, வாக்குமீறி நடப்பது அழகல்ல. 

ஜானகி:- புத்தூர் மகாதேவையரிடமும் தாம்பூலம் வாங்கி எல்லாம் நிச்சயம் செய்தாய்விட்டது. அவர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டாலும், நீ சொல்லுகிறபடி வாக்கு மீறி நடப்பதாகும். நாம் கலியாணத்துக்கு ஒரு பைசாகூட செலவழிக்க வேண்டாம். அவர் கிராமத்துக்கு நாம் போவதற்கு வண்டிகள் கூட அவரே அனுப்புவதாகச் சொல்லி யிருக்கிறார். உன் அப்பாவுக்கும் இந்தச் சம்பந்தம்தான் மனப்பூர்வமான இஷ்டம்: ஒரே பிடிவாதமாய் நிற்கிறார்; எனக்கும் பெரிய பெண்ணா யிருப்பதால் சிலாக்கியமென்றே தோன்றுகிறது. உனக்கு இதுகளெல்லாம் என்ன தெரியும்? நீ குழந்தை; பெரியவர்களாகப் பார்த்து, நீ மகராஜனாய் ஆயிரங்காலம்.

சேஷு:- இதற்குமேல் ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், தன் ஆக்ஷேபணைகளைப் பற்றித் தன் தகப்பனாரிடம் சொல்லும்படி, அவளைக் கேட்டுக் கொண்டான். அவள், அவர் அதிகக் கோபப்படுவார் என்று சொல்லி மறுத்துவிட்டாள். சேஷ, என்றுமே தன் தகப்பனா ரிடம் தாராளமாயிருந்த தில்லை; இவ்விஷயத்தைப்பற்றி அவரிடம் நேரிற்பேச, அவனுக்கு மனம் துணியவில்லை. அவருக்குத் தன் மாமன் மூலமாக ஒரு தூதனுப்பிப் பார்த்தான்; ஒன்றும் பயன்பட வில்லை. கடைசியில், தன் தகப்பனாருக்குப் பயந்து கலியாணத்துக்கு ஒத்துக் கொண்டு, கிறிஸ்ட்மஸ் கழிந்தவுடன், அவன் சென்னைக்குத் திரும்பிப் போய்விட்டான். 

புத்தூர் மகாதேவையர் பெரிய பணக்காரர்; அவர் போட்டிருந்த கலியாணட்பந்தல் தெரு முழுவதையும் அடைத்து, ஆடம்பரமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலியாணம் சிறப்பாய் நடத்துவதற்கு வேண்டிய பல ஏற்பாடுகளும் செய்வதற்காக, காரியஸ்தர்களையும் வேலையாட்களையும் ஏவலிடுவதிலேயே, முகூர்த்தத்துக்குப் பத்து நாட்களுக்கு முன்பே, அவர் தொண்டை கம்மிப்போய்விட்டது. 

தைமாதம் மூன்றாம் தேதியன்று, இங்கிலீஷில் விலாசம் எழுதப்பட்டு, சென்னப்பட்டணத்து முத்திரை போட்டிருந்த ஒரு கடிதத்தை, தபால்காரன் அவர் கையில் கொடுத்தான். மகாதேவையருக்குச் சிறிது இங்கிலீஷ் வாசனை யுண்டு; அதைக்கொண்டே அவர் தாலுக்கா டிஸ்ரிக்ட் போர்டுகளில் மெம்பராகப் பரிமளித்து வந்தார். கடிதத்தின் கூட்டைப் பார்த்தவுடன், மாப்பிள்ளைக்காகச் சென்னப்பட்டணத்திலிருந்து தான் அனுப்பச் சொல்லியிருந்த பைசிகிளுக்கு ரெயில்வே ரசீதாக விருக்குமென்று அவர் நினைத்தார். உள்ளே திறந்து பார்க்கவே, பின்வரும் தமிழ்க்கடிதம், இலக்கணமாயும், பிசகில்லாமலும், கூட்டெழுத்தில்லாமல் தனித்தனியாகப் பிரித்தும், எழுதப் பட்டிருந்ததைக் கண்டார். 

“ம-ஈ-ஈ-ஸ்ரீ புத்தூர் மகாதேவ ஐயரவர்களுக்கு புத்தூர் சங்கரையர் குமாரன் சேஷனுக்குச் சிநேகிதனான ராஜாங்கம் அநேக நமஸ்காரம். தங்களை முன்பின் அறியாத நான், இவ்வாறு எழுதுவது, தங்களுக்கு ஆச்சரியமா யிருக்கலாம்; ஆனால் அதை யெல்லாம் பற்றி யோசிக்க இது சந்தர்ப்பமில்லை. தாங்கள் நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளையும் நானும் காலேஜ் ஹாஸ்டலில் ஒரே அறையில் தான் குடியிருக்கிறோம். நாங்கள் அந்தரங்க சிநேகிதர்கள். நான் தங்களுக்கு எழுதுவதைப் பற்றி அவனுக்குத் தெரியாது; ஆனால் அவனுக்குத் தெரிந்து அவன் இஷ்டத்தை அவன் பகிரங்கமாய்ச் சொல்லப்பட்டவனா யிருந்தால், இந்தக்கடிதத்தை அவன் ஒப்புக் கொள்வானென்றே நினைக்கிறேன். பின்வரும் முகாந்தரங்களால் அவனுக்குத் தங்கள் பெண்ணை விவாகம் செய்து கொள்வதில் இஷ்டமில்லை. (1) தின்னூரில் ஒரு பெண்ணை அவனுக்கு முதலில் நிச்சயம் செய்திருந்ததால், இவ்வாறு அந்த வாக்குத் தவறி நடப்பது பிசகென்று அவன் எண்ணுகிறான். (2) தின்னூர்ப் பெண்ணை அவன் பார்த்து, இஷ்டப்பட்டு, சம்மதித்தான். தங்கள் பெண்ணையோ, அவன் பார்த்ததே யில்லை. (3) தங்கள் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயதாகிறபடியால், அது தன் படிப்புக்குத் தடையாயிருக்குமென்று எண்ணுகிறான். (4) அவன் தாய் தந்தையர்களுக்குக் கூடத் தெரியாத மற்றொரு சங்கதியு முண்டு. அதாவது, ஸர்க்கார் நன்கொடை பெற்று இங்கிலாந்துக்குப் போய் வாசிக்க வேண்டுமென்ற அவன் அபிலாசையே. தங்கள் பெண்ணை விவாகம் செய்துகொண்டால், தாங்கள், அவ்வாறு அவன் அயல் தேசம் செல்லச் சம்மதிக்க மாட்டீர்களென்று அவன் பயப்படுகிறான். எங்கள் கலாசாலையில் அவன் எல்லாராலும் மிகவும் நன்கு மதிக்கப்பட்டவன்; அவன் விரும்புகிறபடி சீமைக்கு மாத்திம் போனால், I.C.S.பரீக்ஷை தேறி, கலெக்டராக வருவது அவனுக்கு எளிதில் சித்திக்கக் கூடியதே. ஆகவே, இந்த விவாக விஷயத்தில் அவனுக்குப் பிரியமேயில்லை; தனக்கும் தங்கள் பெண்ணுக்கும் இது நெடுநாளையத் துன்பத்தையே விளக்குமென்று நினைத்துக் கசந்து கொள்கிறான். அவன் எண்ணங்களை நான் அறிந்திருக்கிற படியால், அவற்றைத் தங்களுக்குத் தெரியப் படுத்துவதே சரி யென்று நினைத்து எழுதுகிறேன். இதைப்பற்றித் தாங்கள் என்னை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அநேக நமஸ்காரம். 
ராஜாங்கம்.” 

இதை வாசித்தவுடன், மகாதேவையருக்கு இடி விழுந்தாற் போலிருந்தது; அவர் சிறிதுநேரம் ஒன்றும் தோன்றாமல் திகைத்து விட்டார். அவர் பெண்ணின் லக்ஷணக்குறைவு அவருக்குத் தெரியும். அதன் பொருட்டே, சேஷு முதலில் வந்து தன் பெண்ணைப் பார்க்க அவர் இடங்கொடுக்க வில்லை. சேஷு ஏகதேசம் சம்பத்துள்ள வீட்டில் ஒரே பிள்ளையாய்ப் பிறந்தவன்; பாலிய மாயும் கண்ணுக்கு லக்ஷணமாயு மிருப்பவன்; படித்தவன் ; எல்லாராலும் நன்கு மதிக்கப்பட்டவன்; இந்தக் கடிதமே அவனைப் புகழ்ந்து, அவன் சிறந்த வரனென்பதை நன்கு விளக்கிற்று; எத்தனையோ வரன்களினின்றும் அவனைப் பொறுக்கி யெடுத்துத், தம் காசின் வன்மையால் தின்னூர் குமாஸ்தாவின் சம்பந்தத்தைக் கலைத்து விட்டதைப்பற்றி, மகாதேவையர் பெருமை கொண்டிருந்தார். இங்கிலாந்து சென்றால், சேஷுவுக்குக் கலெக்டர் வேலை கிடைக்கு மென்றால் அவ்வாறு கப்பலேறி அயல் தேசம் போகாமலே, தம் செல்வாக்கினாலும் பொருளுதவியினாலும், ஜில்லா கலெக்டர் உத்தியோகம் அவனுக்கு எளிதில் கைகூடக் கூடியதே. ஆகவே எப்படியாவது அவனைத் தன் மாப்பிள்ளை யாக்கிக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். சிறிதுநேரம் ஆலோசித்துப் பின்பு புத்தூர் சங்கரையருக்கு ஒரு ஆளனுப்பவே, அவ ரும் காலதாமஸமின்றி மறுநாள் காலையில் வந்துசேர்ந்தார். மகாதேவையர் கடிதத்தைக் காட்டவே, அவர்களிரு வரும் அதைப்பற்றி யோசிக்கலானார்கள். தம்மகன் சீமைக் குப்போக விரும்புவதாக அறிந்தவுடன், சங்கரையர் உள்ளூர திகிலடைந்து, மகாதேவையர் பெண்ணுக்கே அவனை விவாகம் செய்ய வேண்டுமென்று முன்னிலும் அதிக மாக ஆத்திரப்பட்டார். சேஷ முதலில் ஏதோ சிறிது ஆக்ஷேபித்ததாக அவர் ஒத்துக்கொண்ட போதிலும், தான் அவனுக்குத் தக்கபடி புத்தி சொன்ன பின்பு, அவன் கடைசியில் கலியாணத்துக்குச் சம்மதித்து விட் டானென்றும் சொன்னார். மகாதேவையர் கடிதத்தைப் பார்த்துப் படும்கவலையையும் சந்தேகத்தையும் அவர் வீணென்று சொல்லிப் பரிகசித்தார். நல்ல வேளையாய், அவர் மனதில் ஒரு புது எண்ணம் உதித்தது. ‘ இவ்வளவும் மாப்பிள்ளை வேட்டையில் அபஜெயம் அடைந்த அந்த ஏழைப்பிராமணன், தின்னூர் குமஸ்தா செய்த மோசமா யிருக்கலாம்’ என்று, அவர் கூறினார். அவர்களிருவருக்கும் நினைக்க நினைக்க, இந்த அனுமானம் அதிகப் பொருத்த மானதாயும், நியாயமான தாயும் தோன்ற, வெகு சீக்கிரத்தில் உறுதியடைந்துவிட்டது. ஆயினும், ஏதாவது அற்ப சொற்ப சந்தேகத்தையும் நீக்கி, மகாதேவையரை முழு தும் திருப்தி செய்யும் பொருட்டு, சங்கரையர் அன்று மாலையே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். தன் தகப்பனார் எந்தப் பெண்ணை நிச்சயம் செய்தாலும் தனக்கு விவாகம் செய்து கொள்ளச் சம்மதந்தானென்று சேஷு விடமிருந்து ஒரு எழுத்து வாங்கிக்கொண்டு, அவர் இரண்டு நாளில் திரும்பிவந்தார். கலியாணப் பிரயத்தனங்கள், முன்னிலும் அதிகமாய் முறுகின; நிச்சயித் திருந்த நாளில் முகூர்த்தமும் நடந்தது. மாப்பிள்ளை, மனங் குளிர்ந்து, பூர்ண சம்மதத்துடன் தம்மகளை மணம் புரியவேண்டுமென்று கருதி, மகாதேவையர், தாம் இது வரை கொடுப்பதாயிருந்த அநேக வரிசைகள் தவிர, ஒரு விலையுயர்ந்த தங்கக் கடியாரமும் சங்கிலியும் வாங்கிக் கொடுத்தார். 

கலியாணம் வெகு சிறப்பாயும் ஆடம்பரமாயும். நடந்தது. புத்தூரைச்சூழப் பத்து மைலுக் குள்ளிருந்து சகல ஜனங்களும் வந்திருந்தார்கள். தாசில்தாரும் இன் னும் அநேக உத்தியோகஸ்தர்களும், நாலு நாளும் புத் தூரில்தான் தங்கி யிருந்தார்கள்; கலெக்டர் கூட ஒரு நாள் மாலை தாம்பூலத்துக்கு வந்தார். கலியாண ஏற்பாடுகளில் ஒன்றை மட்டும் விவரித்துக் கூறி, அதைப் போ ன்ற விமரிசையுடனேயே மற்றவைகளும் நடந்தன வென்று சுருக்கிக் கூறுவோம். கலியாணத்தில் சங்கீத சம்பரமம்: திருவாடியிலிருந்து ஒரு நாகசுரக்காரன், தஞ்சாவூரிலிருந்து ஒரு தவல்காரன், திருக்கோடிக் காவலி லிருந்து ஒரு பிடில் வித்வான், மைசூரிலிருந்து ஒரு வீணை வித்வான், இராமநாதபுரத்திலிருந்தும் பாலக்காட்டி லிருந்துமாக இரண்டு வாய்ப்பாட்டு பாகவதர்கள், திருவா லூரிலிருந்து ஒரு தேவடியாளும் பங்களூரிலிருந்து ஒரு தேவடியாளும் சின்ன மேளம், ஒவ்வொருவரும் மிகப் பேர் போனவர்களாகவே மகாதேவையர் பொறுக்கி யெடுத்திருந்தார். இவை தவிர, சென்னையிலிருந்து பாண்டு வாத்தியக்காரர்களை ஊர்கோலத்திற்காகத் தருவித்திருந் தார் . நாலு நாளும், இரவும் பகலும், விருந்தும் வேடிக்கை களும், காலக்ஷேபமும் பாட்டுக்கச்சேரியுமாக மூச்சுவிட நேரமில்லை. முக்கியமாய் அந்த இரண்டு தாஸிகளின் ஆட்டத்தையும் பாட்டையும் கண்டு கேட்டவர்கள் அதிச யித்து ஆனந்த பரவசமானார்கள். 

நாலாநாளிரவு பட்டணப் பிரவேசம் நேர்ந்தது. வாத் திய கோஷங்கள் முழங்க, அநேக தீவர்த்திகள் இரவைப் பகலாக்கி ஒளி வீச, பலவர்ண வாணங்கள் பூமாரி பொழிய, இரவு 9-மணி சுமாருக்குப் பல்லக்கு பந்தலை விட்டுப் புறப்பட்டது. முதலில் வாத்தியக்காரர்கள் பாண்டு வாசித்துக்கொண்டு சென்றார்கள். அவர்களைச் சுற்றித் தான் சூத்திரக் கூட்டம் அதிகம். அதற்குப் பின், வாணவேடிக்கையும் அதைப் பார்த்துக்கொண்டு செல்லும் கூட்டமும்; அடுத்தாற்போல் பெரிய மேளமும், அதைக்கேட்டு அடிக்கடி தங்கள் தலையை ஆட்டி மெச்சும் சங்கீத சிகாமணிகள் கோஷ்டியும்; பின்பு சின்ன மேளம்; இங்கே தான் ஜன நெருக்கம் அதிகம். முதல் இரண்டு மூன்று வரிசைகளுக்குப் பின் இருப்பவர்களுக்கு சதுர் கண்ணுக்குத் தெரியாதென்றாலும் கூட, நாலுபுறமும் ஐம்பது வரிசைகளுக்கு ஜனங்கள் சூழ்ந்துகொண்டு, ஒரு வர்மேலொருவர் விழுந்து இடித்துத்தள்ளி எட்டிப்பார்த் துக்கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்துக்குப்பின், விசித்திரமாய் அலங்கரிக்கப்பட்ட பூம் பல்லக்கை, பதி னாறு போகிகள் மெதுவாய்த் தூக்கிக்கொண்டு வந்தார்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவர்க்கொருவர் எதி ராக இரண்டு நாற்காலிகளின் மேல் பல்லக்கில் வீற்றிருந்தார்கள். மாப்பிள்ளையின் சௌகரியத்தை உத்தேசித்து, மகாதேவையர், வேண்டுமென்றே நாற்காலிகள் போட்டிருந்தார். சேஷு, வெல்வெட் பட்டில் சரிகை வைத்துத் தைத்த கால்சட்டையும் கோட்டும் தரித்து, சரிகையினால் பூவேலை செய்யப்பட்ட ஒரு குல்லா அணிந்து, அது போலவே விலையுயர்ந்த பட்டு ஜோடுகளையும் போட்டுக் கொண்டு, மணமகனாக விளங்கினான். பல்லக்குக்குப்பின், பல வர்ணப் பட்டாடைகள் உடுத்து, இரவலும் சொந்தமு மான எத்தனையோ நகைகளை அணிந்துகொண்டு, ஸ்திரீகள் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றார்கள். கடைசியில் மூன்று கூடில்லாத வண்டிகளின் மேல் மூவர் நின்று, இப் பெரு முழக்கத்தையும் ஊடுருவிச் சென்று தொனிக்கும் படி நகரா அடித்துக்கொண்டிருந்தார்கள். தீவர்த்திகள் இத்தனைதான் என்று கணக்கிட முடியவில்லை ; நாலு தீவர்த்திகளுக்கு ஒருத்தன் எண்ணெய் விடுபவன். தேர்க் கூட்டம் திருநாள் கூட்டம் போன்ற இந்த ஜனத்திரளில், ஒவ்வொருவரும் மூன்று நான்கு முறை சந்தனம் பூசிக் சொண்டிருந்தார்கள். வெற்றிலை மெல்லாத வாய் கிடையாது. 

மகாதேவையர், பல்லக்கில் நாற்காலிகள் போட்ட தால், மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அதிக செளகரிய மாயிருந்ததும் தவிர, வழக்கமாய்க் கூட ஏறும் இரண்டொரு குழந்தைகளுக்கும் அதில் இடமில்லாமற் போயிற்று. ஆகவே, தம்பதிகள் பல்லக்கில் தனித்து வீற்றிருந்தார்கள்; சுற்றிலுமுள்ள பெருங் கூட்டத்தில் யாரும் அவர்களை ஒரு சிறிதுங் கவனிக்கவில்லை. கூச்சத் தினாலும், அநேகமாய் எப்பொழுதும். அவள் தன் பக்கத்தி லேயே யிருந்ததினாலும், சேஷு, இதுவரை, தன் மனைவியின் அழகை நேரெதிராக உற்று நோக்கவில்லை. தான் எண்ணியிருந்ததைவிட, அவள், கறுப்பாயும் சற்று இரட்டை நாடியாயிருப்பதாயுமட்டும், அவன் பார்த்திருந்தான்; ஆனால் அவன், அவளை நன்றாய்க் கவனித்துநோக்க வில்லை. இப்பொழுதோ, அவள் அவனெதிரில் நாற்காலி யில் நிமிர்ந்து உட்சார்ந்துகொண்டு, சற்று நேரத்திற்கொரு முறை அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நகைகளும், புடைவையும், அவள் சரீரத்தை முழுதும் மறைத்த போதிலும், கிட்டவிருந்து, அவளை நன்றாய், சாவகாசமாய்ப் பார்க்க, இப்பொழுது தான் அவனுக்குச் சமயம் கிடைத்தது. எல்லோரும், மேளத்தையும் வாண வேடிக்கைகளையும் வாத்திய கோஷத்தையும் சதுரையும் கவனித்துக்கொண்டிருந்தார்களே யொழிய, பல்லக்கி விருக்கும் தம்பதிகளை யாரும் அணுகவில்லை; ஆகவே, தன் வாழ்க்கைத் துணைவியின் சாயலையும், ரூபலாவண்யத் தையும், சேஷு உற்றுப்பார்த்தான். அவள் வயதுக்கு அவள் அதிகம் தடித்தவள்; அவள் அணிந்திருந்த நகை களும், வைரங்களும், பல்லக்கைச் சுற்றிலும் தொங்க விட்டிருந்த மெழுகுவர்த்தி விளக்குகளுமாகச் சேர்ந்து அவள் நிறத்தை, மைக்கறுப்பாய்க் காட்டின. அவளுக்கு நெற்றி மிகவும் சுருங்கி யிருந்தது. தடித்த மோவாயும், அகலமான வாயும், அப்பக் கன்னங்களும் உடையவள் அவள் கீழுதடு அதிகப் பருமனாயும், வாயைச் சரியாக மூடாமல் அவளது பெரிய பல்வரிசைகளைக்காட்டிச் சிறிது கீழே தொங்கிக்கொண்டு மிருந்தது. சில நிமிஷங்கள் வரை சேஷு அவளை உற்றுநோக்கவே, அவனைச்சுற்றிலு முள்ள குழப்பத்திலும் அவன் மனக்குழப்பம் அதிக மாயிற்று; அவனுக்கு வெறுப்பும் மனக்கசப்பும் பொறுக்க முடியவில்லை. அவன் ஒருநாளும் தன் மனைவி இவ்வளவு விகாரமா யிருப்பாளென்று நினைத்ததே யில்லை. சிவப்பாயும் மெல்லியவளாயு மிருந்த தின்னூர்ப்பெண், கட்டழகி யில்லாவிட்டாலும், இப்பொழுது அவனெதிரி லிருந்த திலோத்தமையை யுத்தேசித்து, தெய்வப்பெண் என்றே சொல்லவேண்டும்; அவள் முகத்தில் விளங்கிய விவேக களை இப்பொழுது தன் நாயகியின் முகத்தில் காணும் ஜடத்தன்மைக்கு நேர் விரோதமாயிருந்தது. எல்லாரும் தன்னை வேண்டுமென்றே இவ்வாறு மோசம் செய்து விட்டதாக அவன் எண்ணி, அதிகக் கோபம் கொண்டான். அவன் மாமனார் போட்ட தங்கக்காப்பு, வழக்க மில்லாததால் அவனுக்குக் கை கனத்ததை, தன் வாழ் நாள் முழுதும் இப்படிப்பட்ட துணைவியுடன் பயனிலதாய்க் கழிக்கும்படித் தான் அடிமைபோல் விற்கப்பட் டதற்கு அறிகுறியான விலங்குகள் என்று நினைத்துக் கசந்துகொண்டான். தவிரவும், கலியாண முதல் நாளிரவு தொட்டு, அவனைச் சஞ்சலப்படுத்த, மற்றொரு விஷயமும் சேர்ந்துகொண்டது. அவனுக்கு அப்பொழுது தான், முதல் முதல் காதலை அறிந்து, தன்னை மறந்து அதன் வயப்பட்டொழுகக் கூடிய தேர்ச்சியில்லா இளம் பிராயம். அந்த இரண்டு தாஸிகளி லொருத்தி, பெங்களூரிலிருந்து வந்தவள், அதிக ரூபலாவண்ய முடையவள்; அவள் தன் அழகிய கண் வலைகளை வீசும் பொழுதெல்லாம், சே”, மெய்மறந்து, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள், ஆசை நோக்குடன், ஆடிக்கொண்டும், பாடி கொண்டும், அவனை அடிக்கடி நெருங்கி வருவாள். அவள் நாட்டியம் ஒன்றும் அவனுக்கு அர்த்தமாகா விட்டாலும் அவள் குரலைக்கேட்கும் பொழுதெல்லாம் அவன் சொல்ல முடியாத சந்தோஷத்தையும், சஞ்சலத்தையும் அடைந் தான்; முகூர்த்தத்தன்று இரவு இரண்டு தாசிகளும் ஒரு மணி நேரம் ஆடியான பின்னர், அவன் மாமனார், அவ னிடம் ஒரு பவுனும், அவன் மனைவியிடம் ஒரு பவுனும் கொடுத்து, அதை அவர்களுக்கு இனாம் கொடுக்கும்படி சொன்னார். விதிவசத்தால் தானோ, பங்களூர்த் தேவடியாள் சேஷுவிடமும், திருவாலூராள் அவன் மனைவியிட மும் பரிசுபெற வந்தார்கள். அவனிடமிருந்து பவுனை வாங்கிக் கொள்ளும் பொழுது, அந்த தாஸியின் வலதுகை, அவன் கையில், அநாவசியமாகவே சிறிது பட்டது. அந்த ஸ்பரிசம் பட்டதும், அதுவரையும் அறியாத ஒரு புள காங்கித உணர்ச்சி, அவன் மெய்முழுதும் பரவியது; அவளோ, புன்னகையுடன் விநயமாய் வந்தனஞ் செய்து, திரும்பிப் போய்விட்டாள். போகும்பொழுதே, அவன் உள்ளத்தையும் கொள்ளைகொண்டு போய்விட்டாள். மற்ற நாளிரவுகளில், அவளைப் பார்க்கப் பார்க்க, அவனுடைய மோகம் அதிகமாயிற்று. இப்பொழுதோ, தன் வாழ்க் கைத் துணைவியின் விகார சொரூபத்தை, அவன் முதல் முதல் நன்றாய்க் கண்டவுடன், அவனுக்குப் பொறுக்க முடியாத எரிச்சல் உண்டாயிற்று. அவனுக்கு ஏதோ பித்துப் பிடித்ததுபோலும், ஆவேசம் கொண்டது போலும், இருந்தது. திடீரென்று, அவன் தன் மனைவி யைப் பார்த்து, “உங்கப்பா ஏன் நம்மைக் கலியாணம் செய்துவைத்தார்?” என்று கேட்டான். 

அவன் தன்னிடம் பேசுவானென்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவன் குரலைக் கேட்டுச் சுற்றிப்பார்த்த வுடன் தான், அவர்கள் தனியாயிருப்பதும், அவர்களை யாரும் கவனியாமலிருப்பதும், அவர்கள் தாராளமாய்ப் பேசிக் கொள்ளலாமென்றும் அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அவன் சொன்னது அவளுக்குச் சரியாய்க் காது கேட்கவில்லை; அவள் பதில், “என்ன?” என்று கேட்டாள். 

“உங்கப்பா ஏன் இந்தக் கலியாணஞ் செய்தார்?”

“ஏன், உங்களுக்குப் பிடிக்க வில்லையா?” 

“பிடிக்கவா? எனக்கு இது பொறுக்க முடியவில்லை, பொறுக்கவே முடியவில்லை. இதைச் செய்துகொள்வதினும் நான் முன்பே செத்திருந்தால் நல்லதாயிருக்கும்.” 

“ஆனால், நீங்கள் ஏன் சம்மதித்தீர்கள்?” 

“நான் சம்மதிக்கவேயில்லை. என்னைப் பலாத்காரப்படுத்தி விற்றுவிட்டார்கள். என் சரீரமும் புத்தியும் என்னுடைய தல்ல” 

அவள் பயந்து நடுநடுங்கி, சிறிதுநேரம் ஒன்றும் பேசாமல் இருந்தாள். பின்பு அவள், “உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையா, அல்லது சீர் போதாது என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டாள். 

சேஷு, கோபக்குரலுடன், “சீர் நாசமாய்ப் போகட்டும்! என் சுயேச்சையையும் சந்தோஷத்தையும் விற்ற பின்பு, இந்தப்பாழான சீர் யாருக்கு வேண்டியிருக்கிறது? எனக்கு உன்னைப் பிடிக்கவேயில்லை ; அதோ ஆடுகிறாளே, அந்தத் தேவடியாளைக் கலியாணஞ் செய்துகொண்டால், எனக்குப் பிடித்திருக்கும் ” என்று சொன்னான். 

பாவம்! அந்த மணமகள் கண்களில் நீர் தளும்பிச் சில துளிகள் அவள் கன்னங்களின்மேல் விழுந்தன. அவளுடைய சகல சுகதுக்கங்களுக்கும் உரிய எஜமானனான அவள் கணவன், அவள் அழுவதைக் கூட கவனியாமல், தூரத்தில் ஆடும் தாஸியையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவள் குழந்தை மனது பயந்து திடுக்கிட்டது. சிறிது நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்; அவளுக்குத் துக்கம் அடக்க முடிய வில்லை. நெஞ்சடைத்த குரலில், “இப்படிப் பேசாதேயுங்கள், அவளைப் பாராதேயுங்கள், என்னைத் திரும்பிப் பாருங்கள்,” என்று, அவள் சொன்னாள். 

சொப்பனத்திலிருந்து விழிப்பவன்போல், சேஷ, அவளைத் திரும்பிப் பார்த்தான். சில நிமிஷங்களுக்கப் புறந்தான், தான் இவ்வாறு அவளிடம் பேசியது எவ்வளவு முட்டாள் தனமென்று அவனுக்குத் தெரியவந்தது. 

அவன், வருத்தத்துடன், “உன்மேல் குற்றமில்லை; என்னைப்போலவே உன்னையும் பலியிட் டிருக்கிறார்கள். எ ன்னைவிட நல்லவர்கள் எத்தனையோ பெயர்கள், இவ்ளவு சீருடனும் விமரிசையுடனும் உன்னைக் கலியாணஞ் செய்து கொள்வதில் ஆசைப்பட்டுச் சந்தோஷப் படக் கூடியவர்கள், இருக்கவே இருக்கிறார்கள் ; ஆனால், இப்படிச் செய்வது பிசகு, இனித் திருத்த முடியாத பிசகு; துளி கூட யோசனை யில்லாமல், சிறு வயதிலேயே, இரண்டு பெயர்களுக்கும் இனி ஆயுள் முழுவதும் சந்தோஷமே இல்லாம லிருக்கும்படிச் செய்வது, மஹா பாபந்தான்,” என்றான். 

அவளுக்கு அவன் சொன்னது அர்த்தமாக வில்லை. தனக்கு விளங்கச் சொல்லும்படி, அவள் அவனை வேண்டிக்கொண்டாள். அதற்கு அவன் ஒன்றும் பதிற்சொல்ல வில்லை. பட்டணப் பிரவேசம் முடிந்து விடியற்காலம் வீட்டுக்கு வரும் வரை, அவன் தன் விதிவசத்தை நொந்துகொண்டும், தாஸியிடம் தனக்குண்டான மோகத்தை நினைத்து மதிமயங்கியும், மௌனமாய் மனங்கசந்து வீற்றிருந்தான்.

– குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம், 1924, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, மயிலாப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *