ஐயோ திரும்பவும் உன் பேங்க் புராணமா என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகிறது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்? நானோ பேங்கில் வேலை செய்பவன். என் வாழ்க்கையில் எதுவும் சுவாரசியமாகவோ இல்லை வேறு விதமாகவோ ஏதாவது நடந்திருக்கிறது என்றால் அது என் பேங்கில்தான். உடன் வேலை செய்யும்/செய்த மனிதர்களுடன் தான். நம்ம ரைட்டர் சேகர் பாஷையில் நான் படிச்ச மனிதப் புத்தகங்கள் அவர்கள்தான். அதனால் மீண்டும் ஒரு பேங்க் கதை. ஆனால் திரும்பவும் லக்னோ கதை வேண்டாம் ; லக்னோவப் படிச்சு போரடிச்சுப் போச்சு என்று சொன்னவர்களுக்காக, இந்த முறை இந்தக் கதைக்களம் தில்லியில். சொல்லப் போனால் இந்த சம்பவம் தில்லி சென்னை என்று இரண்டு இடங்களில் நிகழ்ந்தது. தில்லியில் ஆரம்பித்து சென்னையில் முடிந்தது.
நான் அப்போது எங்கள் வங்கியின் தில்லி ரீஜனல் ஆபீசில் பணியில் இருந்தேன். ஸ்கேல் ஒன் ஆபீசர். அது ஒரு பெரிய கெத்து இல்லை. அங்கு என் வாழ்க்கை தடங்கல் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது. அப்படியே போனால் எப்படி? அதைக் கெடுக்கத் தான் ராஜ்குமார் வந்தான். என் வாழ்க்கையில். எங்கள் ரீஜனல் ஆபீசில்.
ராஜ்குமார் காமத் எங்கள் ரீஜனல் ஆபீசில் ஜாயின் செய்த புதிதில் எனக்கு நல்லவன் போலத்தான் தோன்றினான். எல்லாரிடமும் அன்புடன் பழகினான். காலையில் எல்லாருக்கும் குட் மார்னிங் சொல்லுவான். தான் கொண்டு வரும் மதிய உணவை பகிர்ந்து கொள்ளுவான். மொத்தத்தில் ஓகே. அப்படிப் பட்டவனுடன் எனக்கு என்ன பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி.
அவன் என்னை விட பத்து வயது பெரியவன். ‘என்னடா, வயதில் பெரியவனை அவன் இவன் என்று ஏகவசனத்தில் குறிப்பிடுகின்றானே’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு ஒரு பர்சனல் காரணம் உண்டு. என் வாழ்க்கையைக் கெடுத்த வில்லன் அவன்.
நான்? வெங்கடேஷ். களையும் இல்லை கலரும் இல்லை என்னும் தனுஷ் கோஷ்டி. அவனையாவது பார்க்கப் பார்க்கப் பிடிக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டமும் கிடையாது. பார்க்கவும் சுமார். டிரஸ் சென்ஸ் சுமார். பேச்சு சாமர்த்தியம் சுமார். மொத்தத்தில் அகராதியில் சுமார் என்ற வார்த்தையைத் தேடினீர்களானால் அதற்கு எதிரில் என் படம் போட்டிருப்பதைப் பார்க்கலாம். அதனாலேயே 25 வயதாகியும் கல்யாணம் ஆகாமலேயே இருந்தேன்.
ராஜ்குமார்? பெயருக்கு ஏற்ற ராஜகுமாரன். கொங்கணிகளுக்கு என்றே இருக்கும் imported வெள்ளை நிறம். நல்ல உயரம். இங்கிலீஷ் நன்றாகப் பேசுவான். ஹிந்தியும் பிளந்து கட்டுவான். ( எனக்கு இரண்டு மொழிகளிலும் திண்டாட்டம் தான்). அதனால் அவன் அருகில் இருக்கும் போது நான் ரொம்ப inferiorஆக உணர்வேன். இதெல்லாம் மட்டுமல்ல காரணங்கள் அவன் மீது நான் கோபம் கொள்ள. மெயின் காரணம் ப்ரீத்தி.
ஹீரோ (நான் தான்) வில்லன் (அவன் தான்) இருக்கும் போது கதாநாயகி இல்லாமல் எப்படி? ப்ரீத்தி ஷர்மா. எங்கள் ரீஜனல் ஆபீசின் அழகைக் கூட்டவென்றே வந்த தேவதை. நல்ல நெய் விட்டுப்பிசைந்த சப்பாத்தி மாவில் செய்த உடல். அழுதால் கூட அழகாயிருக்கும் ஜாதி. விருத்தர்கள் கூட கொஞ்சம் ஜொள்ளு விடுவார்கள் அவள் அழகில். அப்படிப் பட்டவள்மேல் எனக்கு ஆசை வராவிட்டால் எப்படி? வந்தது. அதுவும் எப்படி? பிரளயம் போல வந்தது.
என் அதிர்ஷ்டம் நானும் அவளும் பக்கத்துப் பக்கத்து சீட். அவள் அழகை கண் பருகிட அவள் அணியும் சென்ட்டை நாசி முகரும் அளவுக்குப் பக்கத்து சீட். ஆனால் என் கண்கள் பல சமயங்களில் அத்துமீறும். ஆனால் பஞ்சாபி பெண்களுக்கே உரிய ஒரு சாதுர்யத்துடன் ப்ரீத்தி அந்த அத்துமீறல்களை சமாளிப்பாள். சில சமயங்களில் வேலையில் சந்தேகம் என்றால் என்னிடம் வருவாள். ரொம்ப dangerously close ஆக நின்று கேட்டுக் கொள்வாள். அந்த சமயங்களில் என் கண்கள் செருகி வாய் குளறும். பெண்மைக்கு இப்படி ஒரு நறுமணமா? நக்கீரரிடம் தான் கேட்க வேண்டும்.
சந்தேகங்களைத் தெளிவித்தால் ஒரு கொலைகாரப் புன்னைகை புரிந்து ” வெங்கட் ஜி, ஷுக்ரியா”’ என்று சங்கீதம் பாடுவாள்.
அவள் மீது பைத்தியமானேன். இரவு பகல் அவள் நினைவானேன். அவள் ஆபீஸ் உள்ளே நுழையும் பொழுதே, என் நாஸி அவள் மணத்தை அறிவிக்கும். என் உடலின் ஒவ்வொரு செல்லும் ப்ரத்யேகமாக அவளுக்காக உயிர்த்துக் காத்து நிற்கும். “‘வெங்கட் ஜி, அந்தப் பென்சிலைக் கொஞ்சம் கொடுக்கிறீர்களா?” என்று ரொம்பவும் லோகாயதமாகக் கேட்டால் கூட கனவில் காஷ்மீர் சென்று டூயட் பாடுமளவுக்குப் பைத்தியமானேன்.
காதல் சீன் ஆரம்பித்தால் வில்லன் வர வேண்டுமே? வந்தான் ராஜ்குமார். அவனுக்கும் ப்ரீத்தி மீது ஒரு கண் என்று புரிந்து கொண்டேன். ஆனால் என்னால் ஒன்று சொல்லவோ செய்யவோ முடியவில்லை. அவன் என்னை விட சீனியர் பொசிஷன். அதைப் உபயோகப்படுத்தி ப்ரீத்தியை தன் டிபார்ட்மெண்டுக்கு மாற்றினான்.
என்னை வஞ்சம் தீர்ப்பது என்ற முடிவுடன் இருப்பவன் போல செயல்பட்டான். சர்க்கரையைச் சுற்றும் எறும்பு போல ஆனான். அவளை பிளாட்டிங் பேப்பர் இங்கை உறிஞ்சுவது போல என்னிடமிருந்து பிரித்தான். இதெல்லாம் கூட வருத்தமில்லை எனக்கு. ஒவ்வொரு சின்ன வெற்றிக்குப் பின்னும் என்னை பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிப்பான். அது தான் ரொம்பவும் பாதித்தது.
என் மனநிலை ரொம்ப பாதித்தது. அவன் ஏதோ என் மனைவியையே என்னிடமிருந்து பிரித்துவிட்டது போலானேன். எந்த வேலையிலும் மனம் ஒருநிலை கொள்ள மறுத்தது. அவனிடம் என் கோபத்தைக் கொட்டினால்தான் என் உயிர் பிழைக்கும் போல தோன்ற ஆரம்பித்துவிட்டது.
ஒரு நாள் பொறுமை எல்லை கடந்தது. ரிக்கார்ட் ரூமில் ஒரு நாள் அவன் என்னிடம் வசமாகச் சிக்கினான். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அதுதான் தருணம் என்று அங்கேயே வைத்து அவனை கேட்டே விட்டேன். கல்யாணமான உனக்கு இந்த வேலை எதுக்கு என்று கேட்டேன். ஏன் என்னை மாதிரி ஒரு பேச்சிலர் வாழ்க்கையில் புகுந்து நாசமாக்குகிறாய் என்று கேட்டேன். இன்னும் என்னென்னமோ கேட்டேன். ஒரு சில கேட்கக் கூடாதவையும் கேட்டேன். என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முகமெல்லாம் சிவந்து கண்கள் பெரிதாகி மூச்சு திணறலாக வந்தது.
இத்தனை effect கொடுத்து நான் கேட்டும், என் நிலைமை அவனை பாதிக்கவில்லை என்றே தோன்றியது. ராஜ்குமார் என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்தான். ‘என்னை என்ன செய்துவிட முடியும் உன்னால்’ என்று சொல்லாமல் சொன்ன பார்வை. அந்தப் பார்வையில் நான் உடைந்தேன். அவன் எதிரிலேயே அந்த ரிகார்ட் ரூமிலேயே நான் அழுதேன். எதையோ முக்கியமானதைத் தொலைத்து விட்டவன் போல அழுதேன். என் உள்ளே அடைந்து கிடந்த உணர்ச்சிகள் எல்லாம் நீராக உருமாறி என் கண்கள் வழியாக வந்தது போல அழுதேன். ஆனாலும் அவன் ஏளனப் பார்வை மாறவில்லை.
அதற்குப் பிறகு நடந்தவைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன். நான் தில்லியிலிருந்து சென்னை மாற்றல் கேட்டு வந்தேன். சென்னையிலும் ரீஜனல் ஆபீஸ்தான். தில்லியின் அந்தச் சோகப் பக்கங்களை மறக்க முயற்ச்சித்தேன். ப்ரீத்தியை மறக்க வெகு நாட்கள் பிடித்தது. ஆனால் ராஜ்குமார் நெஞ்சின் ஆறாத ரணமானான்.
அப்படிப்பட்ட சோகமயமான நாட்களில் என் சோகத்தை அதிகம் பண்ணவே என்பது போல ஒரு சம்பவம் நடந்தது. எங்கள் சென்னை ஆபீசுக்கு ராஜ்குமார் மாற்றலில் வந்தான். ‘அதே வேகம். அதே ஹீரோயிசம். “ஹாய், வெங்கட்” என்று எனக்குக் கை குடுக்க வந்தான். ஆனால் நான் அவனிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. கையும் கொடுக்கவில்லை. அவன் முகம் கறுத்தது. அதனால் எனக்கென்ன? இவனிடம் எனக்கென்னப் பேச்சு?
அப்புறம் வந்த நாட்களில் என்னால் முடிந்த வரையில் அவனைத் தவிர்த்தேன். நாங்கள் இருவரும் மட்டும் தனித்திருக்கும் வாய்ப்பு வராதபடிக்குப் பார்த்துக் கொண்டேன். அவனுக்கும் அது புரிந்தது. ஒவ்வொரும் முறையும் அவன் முகம் கறுக்கும். கண்களில் ஒருவித சோகம் இழையோடும். ஆனாலும் என்னைச் சீண்டாமல் ஒதுங்கியே இருந்தான்.
இப்படி இருக்கும்போது தான் எனக்கு பெண் பார்த்தார்கள். ப்ரீத்தி சம்பவத்துக்குப் பிறகு பெண்கள் பற்றிய நினைவே வேண்டாம் என்று இருந்த எனக்கு, இது பிடிக்கவேயில்லை. அதற்குக் காரணம் அப்படியென்ன அப்சரஸ் பெண்ணைப் பார்த்துவிடப் போகிறார்கள்? குண்டாக கருப்பாக என்னைப் போலவே ஒரு பெண் இருப்பாள்! சே! இருந்தும் பெற்றோர் கட்டாயத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணைப் பார்க்கபோன எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சுசீலா என்ற பெயரில் ஒரு இன்ப அதிர்ச்சி.
அம்மா! என்ன ஒரு அழகு! என்ன ஒரு களை! என்ன கலர்! திடீரென்று காலண்டரில் இருந்து மகாலட்சுமி இறங்கி வந்தாற்போல இருந்தாள். இவள் எனக்கா? எனக்கே எனக்கா? சந்தேகமாகவும் உள்ளுக்குள் அழுகையாகவும் வந்தது. சுமார் அரை மணி நேரம் கழித்து நாங்கள் கிளம்பினோம். என் வீட்டவர்களுக்கும் நம்பிக்கை இல்லை.
இரண்டு நாள் கழிந்தது. சுசீலா வீட்டிலிருந்து போன். அவர்களுக்கு okவாம்! சொர்க்கத்தில் மிதந்தேன் நான்.
மளமளவென்று வேலைகள் நடந்தேறி எங்கள் திருமணமும் முடிந்தது. உடனேயே ஹனிமூனுக்குக் காஷ்மீர் சென்றோம். நிம்மதியான சந்தோஷமான பத்து நாட்கள்.
அது முடிந்து ஒரு திங்கட்கிழமை ஆபீஸ் சென்றேன். கையில் திருமண ஆல்பம். அது என் ஆபீஸ் நண்பர்களுக்குக் காட்டத் தான் என்று நீங்கள் நினைத்தால் பாவம் அப்பாவி நீங்கள். அது என் எதிரிக்குக் காட்டுவதற்காக. ராஜ்குமாருக்குக் காட்டுவதற்காக.
‘’பாருடா! எவ்வளவு அழகான மனைவி! நான் எப்பவும் தோற்கமாட்டேன்’ ‘ என்று சொல்வதற்காக.
லஞ்ச் டைமில் சாப்பிட்டுகொண்டிருந்த போது ராஜ்குமாரும் வந்தான் தன் லஞ்ச் பாக்ஸுடன். என்னிடம் எதுவும் பேசவில்லை. சற்று சோர்ந்தவன் போலிருந்தான். சரி இன்று எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தேன்.
ஆனாலும் என்னால் என்னை அடக்க முடியவில்லை. அந்த ஆல்பத்தை அவன் பக்கம் நகர்த்தினேன். அட்டையில் இருந்த சுசீலா படத்தைக் காண்பித்து ‘my wife’ என்றேன் வெற்றித்தொனியில். ராஜ்குமார் அந்த ஆல்பத்தையே வெறித்துப் பார்த்தான்.
அப்போதுதான் அது நடந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்த ராஜ்குமாரின் வாய் கோணியது. உடல் விதிர்விதிர்த்தது. ‘என்ன ஆச்சு’ என்று கேட்பதற்குள் பேச்சு மூச்சின்றி மயங்கினான்.
பதறிப்போய் நாங்கள் எல்லாம் அவனை ஆஸ்பிட்டல் எடுத்துச் சென்ற பிறகே தெரிந்தது அவனுக்கு மாஸிவ் அட்டாக் என்று. ஒன்றும் பயனில்லாமல் அவன் அன்று மாலையே மாண்டுபோனான். எல்லாருக்கு பெரிய அதிர்ச்சி!
அன்றிரவு வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆனது. சுசீலா தூங்காமல் காத்திருந்தாள். வெளியில் இருந்தபடியே ‘கால் அலம்ப தண்ணீர் கொண்டு வா’ என்றவனிடம் ‘’என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.
நான் உள்ளே சென்று அவளுக்கு விவரம் சொன்னவுடன் அதிர்ந்தாள். “அங்கிள் போயிட்டாரா?”’ என்று அலறினாள். ‘அங்கிளா?’ என்று குழம்பிய எனக்கு அவள் சொன்னதன் சாரம்.
சென்னையில் அவள் வீட்டுக்கு அருகில் தான் ராஜ்குமார் வீடாம். அவனும் இவள் தந்தையும் மார்னிங் வாக் நண்பர்களாம். அப்போது தான் தரகர் என் ஜாதகம் கொண்டுவந்து தந்தபோது என் பேங்க் பேரைப் பார்த்ததும் இவள் தந்தை அவனிடம் போய் கேட்டாராம்.
‘பையன் ரொம்ப நல்லவன். பார்க்க சுமாராயிருந்தாலும் நல்ல அறிவாளி. நிறைய ப்ரோமோஷன் வாங்கி உயர்ந்த நிலைக்குப் போவான்’ என்று ராஜ்குமார் என்னைப் பற்றி கொடுத்த certificate தான் அவர்கள் என்னைப் பெண் பார்க்கக் கூப்பிட்டதுக்கும் பின்னர் சம்மதம் தெரிவித்ததுக்கும் காரணமாம்.
கல்யாணத்துக்கு அழைத்தபோது தான் அவன் சொன்னானாம் தனக்கும் எனக்கும் சிறிய மனஸ்தாபம். அதனால் தான் வரவில்லை என்றும் ஓரிரு மாதம் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்து பார்ப்பதாகவும் சொன்னானாம்.
எனக்குத் திகைக்கக் கூட நேரம் தராமல் அவன் வீட்டுக்குப் போக வேண்டும் என்றாள் சுசீலா. ஒருவாறு சமாதானப்படுத்தி அவளைத் தூங்கச் செய்தேன். அடுத்த நாள் காலையில் கூட்டிச் சென்றேன்.
ராஜ்குமார் வீட்டில் நிறையக் கூட்டம். அவனது உறவினர்கள் மற்றும் எங்கள் ஆபீஸ் நண்பர்கள் என்று. வீட்டின் ஹாலில் நடுவே அவனைக் கிடத்தியிருந்தது. சுசீலா பெரிதாக அழுதாள். நான் அவன் முகத்தைப் பார்த்தேன். அவர் அப்படியொன்றும் மோசமானவர் இல்லை போலத் தோன்றியது.
எனக்குள்ளும் அழுகைப் பீறிட்டது. நானும் பெரிதாக அழுதேன்.
– ஜூன் 2015